பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்


8.

கார் போய் ரொம்ப நேரமாகியும் தேவிகாவுக்கு அந்த இடத்தை விட்டு நகர மனமில்லை. பூட்டியிருந்த வீட்டை திரும்பி பார்த்தாள். சிறு வய்து முதல் அந்த வீடு பூட்டியிருந்து அவள் பார்த்ததேயில்லை. இப்பொழுது தான் பார்க்கிறாள். மனம் பாரமாக இருந்தது. இதோ மல்லிகா அம்மா இங்கே சிரித்து பேசிக் கொண்டு நிற்கிறார்கள். இதோ நடேசன் அப்பா அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கிறார். சின்ன வயது தமிழ்வாணன் ஓடி விளையாடுகிறான். பெரியவனாகி பெட்டியுடன் உள்ளே நுழைகிறான். எல்லாம் அருகில் இருப்பது போல் காட்சி. அந்த காட்சிகளில் கல்ந்தவளை கந்தசாமி கலைத்தார்..”என்னம்மா.. இன்னும் எவ்வளவு நேரத்துக்குத் தான் இங்கே இருக்கப் போறே” என்று கூறி வீட்டுக்கு அழைத்து வந்தார்.

வீட்டுக்கு வந்ததும் கந்தசாமி அவர் படுக்கையில் அமர்ந்தார்.. தேவிகா தமிழ்வாணன் கொடுத்த சாமான்களை எடுத்து பார்த்தாள்.

கந்தசாமி, “நான் போறதுக்குள்ள உன்னை யார் கையிலாவது புடிச்சு கொடுத்துட்டு போவணும். எனக்கு பிறகு நீ என்ன செய்வீயோ ஏது செய்வீயோன்னு கவலை வந்துடுச்சு..” என்று வருந்தினார்.

தேவிகா அவளது அப்பாவின் மனதை புரிந்துக் கொண்டு அவருக்கு ஆதரவாகவே பேசினாள், “நீங்க அத பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க.. எல்லாம் நல்லபடியா தான் நடக்கும்” என்றாள்.

“முத்து” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு முத்து வெளியே வந்தார். வாசலில் அழைத்தவரை பார்த்ததும், “அட என்ன சுந்தரம்.. என்ன சேதி.. “ என்று வராதவர் வந்தவரை பார்த்த மாதிரி கேட்டார். சுந்தரம் ஒரு நேரத்தில் முத்துவின் மகன் கதிரவன் இந்த ஊருக்கு வரக் கூடாது என்று வாதிட்டவர்.

சுந்தரம், “ஒரு முக்கியமான விஷயம்.. ஆனா யார்ட்ட சொல்லனும்னு தெரியலை.. அப்புறமா உங்கிட்டே சொல்லலாம்னு தோணுச்சு.. அதான்” என்றார்.

முத்து, “அப்படி என்ன விஷயம்” என்று ஆச்சர்யமாக கேட்டார்.

சுந்தரம் மெதுவாக சொல்ல ஆரம்பித்தார், “அன்னக்கி ஒரு நாள் எனக்கு உடம்பு சரியில்லாம நம்ம தமிழ் தம்பிட்ட போய் காட்டினேன்” என்றார்.

முத்து குறுக்கிட்டு, “என்னக்கி ?” என்றார்.

சுந்தரம் எரிச்சலுடன், “தேதி நேரம்லாம் சொல்ல முடியாது.. சொல்றதை கேட்டுக்க” என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தார், “போனேனா.. அப்ப தமிழ் தம்பி எனக்கு ஏதோ மருந்து கொடுத்து கொஞ்ச நேரம் படுத்துக்க சொன்னிச்சு.. நான் படுத்திருந்தேன்.. அப்ப நம்ம கந்தசாமி வாத்யார் மக இருக்குள்ள..” என்றதும்-

முத்து, “ஆமா.. நம்ம தேவிகா.. அதுக்கு என்ன ?..” என்று விஷயம் புரியாமல் அவசரப்பட்டார்.

சுந்தரம், “உன் அவசரத்த கொண்டு போய் குப்பைல கொட்ட” என்று கடிந்து கொண்டு, “அந்த பொண்ணு வந்தது தான்யா விஷயமே..” என்று தேவிகா தமிழ்வாணனிடம் நிரோஷாவையே கல்யாணம் செய்ய சொன்னதை அப்படியே ஒரு வரி விடாமல் ஒப்பித்தார்.

முத்து நன்றாக செவி கொடுத்து கூர்ந்து கேட்டு விட்டு, “இப்ப நீ சொல்றத பார்த்தா தமிழ்வாணனும் தேவிகாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனாங்கன்னு தெரியுது.. அந்த விஷயம் மல்லிகாம்மாவுக்கும் தெரியும் போலவும் தெரியுது. என்னங்குறே நீ” என்றார்.

சுந்தரம், “உனக்கே சரியா விளங்குதே” என்று கிண்டலடித்து விட்டு, “அந்த மல்லிகாம்மா சாகும் போது தமிழ் தம்பியோட அண்ணன்கிட்டே நம்ம தேவிகாவ காட்டி கல்யாணம்.. கல்யாணம்னு சொண்ணாங்களாம்மே.. தெரியுமா ?” என்றார்.

முத்து, “அதெல்லாம் சரி தான்.. இந்த விவகாரம் நடேசனுக்கு தெரியுமான்னு தான் நமக்கு தெரியலை” என்றார்.

சுந்தரம், “ நம்ம தமிழ் தம்பி இந்த ஊருக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்கு அதற்கு பிரதியுபகாரமா இந்த ஊர் காரங்க இத தான் செய்யலாம்” என்றான்.

முத்து , “எத தான் செய்யலாம் ?” என்றார்.

சுந்தரம், “சுத்தம்.. நம்ம தமிழ் தம்பியையும் அந்த தேவிகா பொன்னையும் சேர்த்து வைக்கிறத தான் சொன்னேன்” என்றார்.

முத்து உற்சாகத்துடன் “அப்படி ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்துடுச்சுன்னா நடேசன் கூட இங்கேயே வந்துடலாம்” என்று சொல்லி மகிழ்ந்தார்.

தமிழ்வானன் அதிக நேரம் பெரியப்பாவுடன் தான் இருந்தான். கல்யாண நாள் நெருங்க நெருங்க அவனுக்கு கவலை கூடிக் கொண்டே இருந்தது. பெரியம்மாவை நினைத்தும் தேவிகாவை நினைத்தும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு இருந்தான்.

சாருலதா மறுபடியும் ஒரு நிச்சயதார்த்த விழா மாதிரி எடுக்கணும் என்று விரும்பி ஒரு பெரும் பணக்கார கூட்டத்தை கூட்டியிருந்தாள். நிரோஷா அவளது ஆண் பெண் தோழர் தோழியர்களிடம் அரட்டையில் இருந்தாள். தமிழ்வாணன் யார் கூடவும் பேசாமல் நின்றான்.

ரவிக்குமார் சாருலதாவை தனியாக அழைத்து, “இந்த பார் தமிழ்வாணனை யார் கூடவும் ஒட்டாம.. உனக்கு தெரியுமே ? ஏன் இப்படி இருக்கான் ?” என்று என்னவோ சாருலதாவுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு கேட்டான்.

சாருலதா ரொம்ப தெரிந்த மாதிரி, “இட்ஸ் நத்திங்.. இவ்வளவு பெரிய கூட்டம் நிச்சயதார்த்தத்துக்கே வந்திருக்கே கல்யாணத்துக்கு எப்படி சமாளிக்கப் போறோம்னு அவ்வளவு தான்.. ஹி ஆல்வேஸ் ஒரிட் ஃபார் நத்திங்” என்று விட்டு வந்தவர்களை கவனிக்க சென்றாள் கையில் வெளிநாட்டு மதுபானம் நிரம்பிய கோப்பையோடு.

தமிழ்வாணன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். பெரியப்பா அறைக்கு வந்து பார்த்தான். அறையில் தனியாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். சற்று நேரம் பெரியப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது அறைக்கு வந்தான். அவனது அலமாறியை திறந்து சிறு வயதில் தேவிகாவுடன் எடுத்த போட்டோவை பார்த்தான். பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே கண் அசந்து தூங்க ஆரம்பித்தான். இது எல்லாவற்றையும் வாசலில் நின்றபடி கவனித்துக் கொண்டிருந்த ரவிக்குமார் தமிழ்வாணன் உறங்கியதும் மெதுவாக உள்ளே வந்து அந்த போட்டாவை எடுத்து பார்த்தான். அதிர்ந்த அவனுக்கு சரியான நேரத்தில் மல்லிகா சாகும் தருவாயில் தேவிகாவை சுட்டிக் காட்டி ‘கல்யாணம்.. கல்யாணம்’ என்று சொன்னது ஞாபகம் வந்தது. உறங்கிக் கொண்டிருந்த தமிழ்வாணனை பார்த்தான். அழுகை வந்தது. அந்த அறையில் மல்லிகாவின் புகைப்படம் தொங்க விடப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தின் அருகில் வந்து, பெரியம்மா.. நான் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தேன்” என்று வாய்க்குள்ளேயே அழுதான்.

விடிந்தது. தமிழ்வாணன் பெரியப்பாவிடம் ஓடி வந்து, “பெரியப்பா.. ஊர்லேந்து எல்லாரும் உங்கள பார்க்க வந்திருக்காங்க..” என்றான்.

நடேசன் சந்தோஷம் தாங்காமல், “இதோ வர்ரேன்..” என்று மகிழ்ந்து உடனே அவரது அறையிலிருந்து வெளியேறி முத்து மற்றும் யாவரையும் பார்த்ததும், “வந்துட்டாங்களா ?” என்று எல்லோரையும் பார்த்து “இவ்வளவு நாளாச்சா.. என்ன பார்க்க வர்ரதுக்கு” என்றார்.

முத்து சந்தோஷமாக நலம் விசாரித்து விட்டு “ஒரு முக்கியமான விஷயம்” என்று கூறி ஊர் மக்கள் எல்லாம் சேகரித்த செய்திகளை ஒருவர் மாற்றி ஒருவராக சொல்ல ஆரம்பித்தனர்.

நடேசன் எல்லாவற்றையும் கேட்டு விட்டு தமிழ்வாணன் பக்கம் திரும்பி, “நீ ஏன் இத எங்கிட்ட முன்னாடியே சொல்லல” என்றதும்-

தமிழ்வாணன், “தேவிகா தான் பெரியப்பா எங்கிட்ட வந்து அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஏதாவது பிரச்சினை வந்துட போகுது.. நம்ம சேரணும்கறதுக்காக சேர்ந்து இருக்கிறவங்க பிரியணுமான்னு கேட்டா அதான்..” என்று சொன்னான்.

ரவிக்குமார் சாருலதாவிடம், “இப்பவாவது புரிஞ்சுக்க.. கல்யாணம் என்ன வியாபார ஒப்பந்தமா ? அது வாழ்க்கை ஒப்பந்தம்.. தேவிகாவ பார்த்தீயா.. அவ நல்ல மனச பார்த்தீயா.. அவ தான் தமிழ்வாணனுக்கு பொருத்தமான மனைவி.. அவ உன் வாழ்க்கை வீணா போ கூடாதுன்னு தமிழ்வாணன் வாய கட்டி போட்டுட்டா” என்றதும்-

சாருலதா சிந்திக்க ஆரம்பித்தாள்.

ரவிக்குமார், “அவ கிடக்குறா.. பெரியப்பா நீங்க சொல்லுங்க.. என்ன செய்யலாம்” என்று.

நடேசன் சாருலதாவிடம் வந்தார், “இந்த பாரும்மா.. நீயும் சம்மதிச்சு தமிழ்வாணன் தேவிகா கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்படறேன்.. எனக்கு வேற இந்த நகர வாழ்க்கை ஒத்துக்கலை.. என் மண்ணு.. நான் பிறந்த மண்ணு.. என் நண்பர்கள்.. என் வீடு.. என் மனைவி.. அவ தான் இல்லையே..” என்று வார்த்தை தடுமாற சொன்னவுடன்-

சாருலதா, “நீங்க கலங்காதீங்க மாமா நாமளே சிறப்பா தமிழ்வாணன் தேவிகா கல்யாணத்த நடத்தி முடிச்சுடுவோம்” என்று சொல்லிய போது-

ரவிக்குமார் அதிசயமாக பார்த்தான்-

சாருலதா, “என்ன அப்படி பார்க்கறீங்க” என்றாள்.

ரவிக்குமார், “இல்ல மொத தடவயா நீ ஆங்கிலம் கலக்காம தமிழ்ல பேசியிருக்கே.. அதான் பார்க்கறேன்” என்றான்.

ஒரு பெரிய வாகனம் எடுத்து நடேசன், ரவிக்குமார், சாருலதா, முத்து என எல்லோரும் கிராமத்துக்கு இப்பொழுது தான் கிளம்பி சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டு வந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா ?

“தமிழ்வாணன் நீ வேனை விட்டு இறங்காதே, தேவிகாவுக்கு சஸ்பென்ஸா இருக்கட்டும்” என்றும்.

“தேவிகாகிட்ட தமிழ்வாணனுக்கு கல்யாணம் நடந்துடுச்சுன்னு தான் மொதல்ல சொல்லணும்” என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது தான் நடக்காது நான் என்னத்துக்கு இருக்கிறேன், நான் இப்ப எங்கே போறேன்னு நினைக்கறீங்க.. நேரா தேவிகாவிடம் போய் சொல்லிட்டு தான் மறுவேலை. தேவிகா எனக்கு தங்கச்சி மாதிரி. எல்லாம் இருந்தாலும் மல்லிகாம்மா மட்டும் இருந்து இந்த கல்யாணம் நடந்திருந்தா.. இன்னும் நல்லா இருந்திருக்கும். சரி.. தமிழ்வாணன் மாதிரி உங்க அப்பா அம்மா பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்யணும்னு உங்களுக்கு ஏதாவது ஆசையிருக்கா ? அந்த ஆசை நிறைவேறனும்னு அல்லாட்ட துஆ கேக்கிறேன். இன்ஷா அல்லாஹ் சொந்த ஊர்ல சந்திப்போம்..

அஸ்ஸலாமு அலைக்கும்..

அ.முஹம்மது இஸ்மாயில்

(முற்றும்)

Series Navigation

அ.முஹம்மது இஸ்மாயில்

அ.முஹம்மது இஸ்மாயில்