K.ரவி ஸ்ரீநிவாஸ்
ஜெயமோகன் தன் நூற்கள் வெளியீட்டு விழாவில் பேசிய உரையை முன்வைத்து எழுந்த சர்ச்சை குறித்த என் கருத்துக்களை இணையத்தில் (திண்ணை,பதிவுகள் விவாதக்களம்) பதிவு செய்திருந்தேன். வேதசாகய குமார் எழுதிய பத்துகேள்விகளும் சில பதில்களும் http://www.thinnai.com/ar1113033.html என்ற கட்டுரை குறிட்த்த என கருத்துகள் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.
1. இந்த சர்ச்சையில் ஜெயமோகனுக்கு ஆதரவாகவும்,எதிராகவும், இரண்டு தரப்பையும் விமர்சித்தும் கருத்துகள் வெளியாகியுள்ளன.இளைய பாரதி, மாலன் எழுதிய கட்டுரைகளும் கடுமையாக விமர்சிக்கப்படுள்ளன.அவை இரண்டும் சரியான எதிர்வினைகள் அல்ல,கண்டிக்கததன என்பதே என் கருத்து.
கருணாநிதி எழுதியதும், அவருக்கு ஆதரவாக எழுதப்படுள்ளவையும் விமரசிக்கப்பட்டுள்ளன. எனவே அனைவரும் ஜெயமோகனுக்கு ஆதரவாகவே எழுதவேண்டும் என்று அவர் எப்படி எதிர்பார்க்கமுடியும். ஜெயமோகன் பேச்சும், அதற்கான எதிர்வினைகளும் இலக்கியம் என்ற பெயரில் கேவலமான அரசியல் நடத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணம்.
2,சிறுபத்திரிகைகள் சார்பில் பல்வேறு கருத்துகள் பல்வேறு காலகட்டங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே ஒரு சிலர்/சில பத்திரிகைகள் முன்வைத்தவையே சிறுபத்திரிகை கருத்துகள் என்று பிரதிநிதிபடுத்துவது சரியல்ல. சிறு பத்திரிகை இயக்கம் ஒன்று உள்ளது,அதற்கு தலைமை இன்னார் என்றெல்லாம் யாரையும் கருத இயலாது. வேதசகாய குமாரும்,ஜெயமோகனும் தங்கள் கருத்துக்களை, ஒரு சில பத்திரிகைகளின் கருத்துக்களை முன் வைக்கலாம்.அதேதான் சிறுபத்திரிகைகளின் கருத்து என்று எழுதுவது நேர்மையின்மை.அதை தொடர்ந்து செய்வதன் மூலம் ஒரு கருத்தினை சிறுபத்திரிகைகளின் கருத்து என்று நிலை நாட்ட முடியாது.கருத்தொற்றுமை இல்லாத போது அப்படி ஒன்று இருப்பது போன்ற பிரமையை ஏன் உருவாக்க முயல்கிறீர்கள் என்று ஜெயமோகன் தரப்பினை நாம் கேட்க வேண்டியுள்ளது.
நிறப்பிரிகையும் சிறுபத்திரிகைதான், சொல் புதிதுதும் சிறுபத்திரிகைதான்,பிரக்ஞையும் சிறுபத்திரிகைதான், கசடதபறவும் சிறுபத்திரிகைதான். இந்தக் கருத்துப் பன்வகைத்தன்மைதான் சிறுபத்திரிககைகளின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக அன்றும்,இன்றும் விளங்குகிறது.நோக்கங்களில் கருத்தொற்றுமை இருந்தாலும் கருத்துக்களில்,பார்வைகளில் கருத்தொற்றுமை இருக்க வேண்டிய அவசியம் இல்லை.பெரியார் குறித்து அ.மார்க்ஸ்,எஸ்.வி.ராஜதுரை, ஜெயமோகன் முன்வைக்கும் மதிப்பீடுகளில் உள்ள வேறுபாடுகள் நமக்குத் தெரியும்.அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை இருவரும் கருத்து ரீதியாக வேறுபடும் புள்ளிகளும் உண்டு,இணையும் புள்ளிகளும் உண்டு.இதை மறைத்துவிட்டு பெரியார் குறித்து சிறுபத்திரிகைகள் ஒரே கருத்தை முன் வைத்தன என்பது எழுதினால் அது நேர்மையின்மை.கருணாநிதி/ திராவிட இயக்க இலக்கியம் குறித்து ஒரு விரிவான விவாதம் சிறு பத்திரிகைகளில் நடந்துள்ளதா ? சுந்தர ராமசாமியோ அல்லது ஜெயமோகனோ அது குறித்து விரிவாக எழுதியுள்ளார்களா. அப்படி இருந்தால் அது குறித்த தகவல்களை வேதசகாய குமார் தரட்டும்.அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஒரு கருத்து ஒரு சிலரால் சொல்லப்பட்டு வந்துள்ளது,
அது சிறுபத்திரிகைகள் முன்வைக்கும் கருத்தும் கூட என்பதுதான் உண்மை.அப்படியிருக்கும் போது ஜெயமோகன் ‘இந்தமேடையில் நின்று அந்த 3 சதவீத முணுமுணுப்பின் பிரதிநிதியாகச் சொல்கிறேன் , திரு மு கருணாநிதி அவர்கள் எழுதும் எழுத்துக்கள் தீவிர இலக்கியத்தின் எப்பிரிவிலும் பொருட்படுத்தக் கூடியவை அல்ல. ‘
என்று கூறுவது சரிதானா ? யார் அவரை அந்த் 3%த்தின் கருத்துத் தொடர்பாளராக/செய்தி தொடர்பாளராக (spokesman) நியமித்தது. கருணாநிதி கூறும் கருத்தை தி.மு.கவின் கருத்தாக ஏற்க முடியும். ஏனெனில்
அவர் அக்கட்சியின் தலைவர், தேர்ந்தெடுக்கப்பட்டவர், கருத்துக்களை கூற கட்சியால் அதிகாரம் வழங்கப்பட்டவர். ஜெயமோகன் யார் நான் 3% த்தின் சார்பாகக் கூறுகிறேன் என்பதற்கு. அது அவருடைய சொந்தக் கருத்து என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். அதுதானே முறையும் கூட.(இந்த 3%,97% கண்ணோட்டத்தை நான் ஏற்கவில்லை).
3,கல்கி குறித்து வேதசகாயகுமார் முன்வைத்துள்ள கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை ஜெயமோகன் எழுதியதிலிருந்து காட்டமுடியும்.கல்கி நூற்றாண்டு விழாவில் ஜெயமோகன் கலந்துகொண்டதாகப் படித்திருக்கிறேன்.இது தகவல் பிழை என்றால் சுட்டிக்காட்டுங்கள்.கல்கியை ஜெயமோகன் நிராகரிக்கலாம் அல்லது ஏற்கலாம். ஆனால் சிறுபத்திரிகைகள் கல்கியை நிராகரித்துவிட்டன, க.நா.சு நிராகரித்துவிட்டார், எனவே நீங்கள் நிராகரிக்காவிட்டால் நீங்கள் சிறுபத்திரிகைக்காரரே இல்லை என்றா நிலைப்பாடு எடுக்கமுடியும். இந்தக் கட்டுரையில் எழுதியுள்ளதன் அடிப்படையில் பார்த்தால் தர்க்க ரீதியாக வேதசகாய குமார் அத்தகைய நிலைப்பாட்டிற்கே வரவேண்டும்.இதை வெளிப்படையாக எழுத அவர் முன்வருவாரா ?
ஜெயமோகன் எழுதியுள்ளது
எளிய முறையில் கேளிக்கையாளர் முத்திரை குத்தி ஒதுக்கப்பட்ட கல்கி சுஜாதா போன்றவர்களை மறுபரிசீலனை செய்து கறாராக மதிப்பிடுவதும் அவசியமாகிறது. அதேபோல தேவநேயப் பாவாணர் போன்ற தமிழறிஞர்களும் நவீனத்துவத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களே .இன்று புதிய வாசிப்பின் வழியாக இவர்களை மதிப்பிட்டு இவர்களுடைய இலக்கிய இடங்களை வகுக்கவேண்டிய தேவை உள்ளது. இதுசார்ந்து விவாதங்களும் தேவை. http://www.thinnai.com/ar0413031.html
இது குறித்து வேதசகாய குமார் என்ன கருதுகிறார் ?
4,பிற எழுத்தாளர்கள், விமர்சகர்கள் குறித்து ஜெயமோகன் எப்படியெல்லாம் எழுதியுள்ளார் என்பதற்கு ஏராளமான சான்றுகளை காட்டமுடியும்.இவையெல்லாம் இலக்கிய விமர்சனம் என்ற பெயரில் அவர் நடத்தும் கீழ்த்தரமான அரசியல் என்பது வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தெரியும். எனவேதான் பலர் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தர விரும்பவில்லை என்று தோன்றுகிறது.புத்தக வெளியிட்டு விழாவில் அவர் பேசியதும் அந்த அரசியலின் பகுதியாகப் பார்க்கப்பட அவர் எழுதியவையும், பேட்டிகளில் சொன்ன கருத்துகளும் துணை போகின்றன. ஜெயமோகனுக்கு ஆதரவாக பலர் கருத்துக் கூற மறுப்பதற்கு இதுதான் காரணம் என்று தோன்றுகிறது.
5, அகிலன் ஞான பீடம் பரிசு பெற்ற போது சுந்தர ராமசாமி குறிப்பிட்ட அந்த கருத்தை ஏற்றே வேத சகாய குமார் எழுதியுள்ளார்.சுந்தர ராமசாமி அகிலன் மீது வைத்த விமர்சனத்தின் பின்ணனி என்ன என்பது
ஒருபுறமிருக்கட்டும், ரிகார்ட் டான்ஸ்காரி தொடையில் சங்கராச்சாரி படம் என்ற உவமையைக் கூறிய சுந்தர ராமசாமி,அதை ஏற்று இன்றும் முன்மொழிகிற வேத சகாய குமார் கொண்டுள்ள மதிப்பீடுகளை இந்த உவமை மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.பெண்கள் வீட்டிற்கு வெளியே வேலைக்கு செல்வதையே ஏற்க முடியாத சங்கராச்சாரியின் படம் ரிகார்ட்டான்ஸ்காரியின் தொடையில் இருப்பது ஒரு subversive act என்றுதான் நான் கருதுகிறேன்.மற்றப்படி ரிகார்ட் டான்ஸ்காரி தொடையில் சங்கராச்சாரி படம் என்ற உவமையே ஒரு கட்டுரைக்குரிய விஷயம்.சுந்தர ராமசாமி அகிலன் ஞானபீட விருது பெற்ற போது எழுதிய அந்தக்கட்டுரையை படித்துவிட்டு அதை எழுதலாம் என நினைக்கிறேன்.அக்கட்டுரை கைவசம் இல்லை.எனவே இதை உடனடியாக எழுதப்போவதில்லை.
6, ஐம்பதாண்டு காலம் ஒரு கருத்து ஒரு சிலரால் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதால் மட்டும் அதை எல்லோரும் ஏற்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்.இன்று அது சர்சிக்கப்படலாம், நாளை சிறுபத்திரிகைகள் சில முன்பு முன்வைத்தவை விமர்சிக்கப்பட்டு அவை பொருத்தமற்றவை என்ற வாதம் முன்வைக்கப்படலாம்.அன்று சொன்னவை என்பதாலேயே அவை கேள்விக்குட்படுத்தப்படாமல் என்றும் ஏற்கப்படவேண்டும் என்று குமார் எதிர்பார்ப்பது வேடிக்கை, இல்லை மூடநம்பிக்கை.
7,திராவிட இயக்கம் குறித்து கடந்த 15 ஆண்டுகள் விரிவான நூல்கள்,கட்டுரைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன.இவற்றின் விளைவாக திராவிட இயக்கம், பெரியார் குறித்த புரிதலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.சிறு பத்திரிகைகளிலும் இதன் தாக்கம் உள்ளது.ஜெயமோகன் தெரிவித்த கருத்து குறித்து தினமணியில் கடிதம் எழுதிய அறிவுமதி சிவத்தம்பி முன்வைத்த ஒரு கருத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.மதுரையில் 1997ல் திராவிட இயக்கம்-கருத்தியலும், போக்கும் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.இது போல் வேறு சில முயற்சிகளும் நடந்திருக்கக் கூடும். எனவே ஐம்பதாண்டு காலம் சில சிறுபத்திரிகைகள் முன்வைத்த கருத்துதான் ஒரே கருத்து என்ற ஒற்றைப்பரிமாணப் பார்வையை இன்று முன்னிறுத்த இயலாது.மேலும் இலக்கியம் குறித்தும் பல புதிய கருத்துகள், கோட்பாடுகள் கடந்த 20 ஆண்டுகளில் முன்வைக்கப்பட்டுள்ளன. சிறுபத்திரிகைகளில் இவை வெளியாகியுள்ளன.இந்தப் பின்ணணியில் பார்க்கும் போது ஜெயமோகன் கருத்து குறித்து பலர் கருத்து தெரிவிப்பதும், அதில் சிலர் அதை நிராகரிப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.
8, சிறுபத்திரிகைகள் சில நிராகரித்த வெகுஜனத்திரைப்படம் குறித்து கடந்த 10/15 ஆண்டுகளில் முக்கியமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஹே ராம், ரோஜா, பராசக்தி போன்ற திரைப்படங்கள் குறித்தும் கட்டுரைகள் உள்ளன.1970 களின் பிற்பகுதியில் உருவான NEO NATIVITY GENRE படங்கள் குறித்தும் எழுதப்பட்டுள்ளது.இவையெல்லாம் திரைப்படம் குறித்த ஒரு புரிதலுக்கு உதவியுள்ளன. ரசிகர் மன்றங்கள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. காலச்சுவட்டில் சில மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.நிழல் இதில் காட்டும் அக்கறை குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆய்வுகளின் தாக்கத்தை சிறுபத்திரிகைகளில் காண முடிகிறது.இவையெல்லாம் வரவேற்கத்தக்க மாற்றங்கள். முன்பு .சிறுபத்திரிகைகள் சில நிராகரித்தவை என்பதற்காக எப்படி வெகுஜனத்திரைப்படங்களை குறித்த இந்த ஆய்வுகளை, விவாதங்களை புறக்கணிக்க முடியுமா ?அது போல்தான் சிறுபத்திரிகைகள் சிலவும், வேறு சிலரும் திராவிட இயக்க இலக்கியங்களை நிராகரிக்கலாம்.வேறு சிலர் அதை விரிவான ஆய்விற்கும், விவாததிற்கும் உட்படுத்தி புதிய பார்வைகளை முன்வைக்கலாம். அந்தப் பார்வைகள் ஒட்டுமொத்த நிராகரிப்பு, வானளாவிய புகழ்ச்சி ஆகிய இரு நிலைப்படுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டலாம். எனவே ஜெயமோகன் கூறியதோ அல்லது சிறுபத்திரிகைகள் சில முன்வைத்த கருத்துக்களே இதில் இறுதியான கருத்துக்கள் என்று கொள்ள முடியாது.
9, ஜெயமோகன் ஆயிரம் பக்கங்கள் இலக்கிய விமர்சனம் எழுதியிருக்கலாம்.அதில் உள்ள கருத்துகள் குறித்துதான் விவாதிக்க வேண்டும்.திண்ணையில் அவை எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் குறித்து திண்ணையில் விவாதம் நடைபெற்றுள்ளது.படித்து கருத்து சொல்லப்பட்ட போது அதை ஜெயமோகனும், வேதசகாய குமாரும் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதும் திண்ணையில் பதிவாகியுள்ளது.அவரது அளவுகோல்கள் குறித்தும் விரிவாகவே எழுதப்பட்டுள்ளது.
10, ‘புதுமைப்பித்தன் ராஜாஜியை கடுமையாக விமரிசித்து நிராகரித்து எழுதினார். ‘இவருக்கு இப்படி எழுத யார் அதிகாரம் கொடுத்தது ? ‘ என்று ராஜாஜி கேட்டார். ‘ வேதசகாய குமார் ஜெயமோகன் கருத்துக்களை நான் விமர்சித்து எழுதிய போது எழுதியதும் இதைப் போன்ற ஒன்றுதான். அதுவும் திண்ணையில் பதிவாகியுள்ளது. ராஜாஜி கூறியது தவறு, நான் கூறியது சரி என்று வேத சகாய குமார் கூறுகிறாரா ?. ஜெயமோகன் எழுதியதை விமர்சிக்கும் போது சான்றுகளை முன்வைத்து, கேள்விகளை கேட்டதற்கு வேதசகாய குமார் எழுதினார்:
ஒரு கருத்துக்கு பின்னால் உள்ள ஆளுமை, அவ்வாளுமையை உருவாக்கிய பின்னணி எப்போதுமே முக்கியமானதேயாகும். க.நா.சுப்ரமணியம் பெரும்பாலும் நூல்களைப்பற்றிய அவரது வெறும் இறுதியபிராயங்களையே தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளாரெனினும் தமிழில் வலிமையான ஒரு விமரிசன அடிப்படையை அவரால் உருவாக்க முடிந்தது. வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, மு.தளையசிங்கம் ஆகியோர் எழுதிய விமரிசனங்களும் அவர்களின் பின்னணி ஆளுமையால் முக்கியமானவையே ஆகும். அவர்கள் அபிப்பிராயங்களை மட்டிலும் சொன்னார்களேயொழிய முறைமைசார்ந்த ஆய்வையோ மெய்ப்பித்தல்களையோ செய்யவில்லை என்பதை நாமறிவோம். அவர்களுக்கு இலக்கியப் படைப்பில் உள்ள அனுபவமும் விரிவான இலக்கிய வாசிப்பின் பின்புலமும் உள்ளன என்பதனையே அக்கட்டுரைகள் வெளுப்படுத்துகின்றன.ஜெயமோகன் இவர்களின் வரிசையில் வருபவரே. அவருக்கு தமிழ் ,மலையாள நவீன இலக்கியத்திலும் , பண்டைய இலக்கிய மரபுகளிலும் , இந்தியமொழி இலக்கியங்களிலும் செவ்விலக்கியங்களிலும்லுள்ல விரிவான வாசிப்புக்கும் , இலக்கியவாசிப்புக்கு துணைபோகக் கூடிய வரலாறு, தத்துவம், நாட்டாரியல் போன்ற துறைகளில் உள்ள அடிப்படை அறிதலுக்குமுரிய சான்றாதரங்கள் அவரது கட்டுரைகளினில் உள்ளன. அவரது படைப்பிலக்கிய அனுபவமும் நாமறிந்ததேயாகும் . தன் துறையில் கடுமையான உழைப்பு ஆழ்ந்த சிரத்தை ஆகியவற்றின் விளைவாக உருவானவை அவ்வெழுத்துக்கள்
முறைப்படி இலக்கியம் கற்றவன் என்று என்னை கருதும் நான் இவர்கள் கருத்துக்களை என் முறைசார்ந்த ஆய்வுகளில் தீவிரமாக விவாதிப்பதுடன் மாணவர்களுக்கும் பரிந்துரை செய்யவும் செய்கிறேன். ஆனால் இந்த தகுதிகள் ஏதுமில்லாத ரவி சீனிவாஸ் அவர் வாசித்த ஓரிரு புதிய நூல்களின் பலத்தில் இவர்களை மட்டம்தட்டி நிராகரிக்கலாம் என்றும், இவர்களுக்கு இலக்கியம் பற்றி தான் பாடம் நடத்தலாம் என்றும் எண்ணுகிறார். உண்மையில் முறைசார்ந்தகல்வி உடையவன் என்ற நிலையில் இம்மாதிரி அமெச்சூர் முயற்சிகளை நான் கடுமையாக அதட்டி விலக்கவேண்டும். ஆனால் நம் சூழலில் எழுதுபவர்களே குறைவு என்பதனால் எல்லையை உணர்ந்து பேசுங்கள் என்று மட்டும் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.
இங்கு முன்னிறுத்த்படும் ஆளுமை என்ற விஷயத்தை கவனியுங்கள்.யார் எழுதலாம், எவ்வளவு எழுதலாம் என்ற தலைப்பில் ஒருவர் எழுதுவதே அவர் கருத்து சுதந்திரம் குறித்து என்ன கருதுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.
இன்று ஜெயமோகன் விவகாரத்தில் கருணாநிதியின் ஆளுமை முன்னிறுத்தப்படுகிறது.கருத்துகளை விமர்சிப்பதை வேதசகாயகுமார் கருதிய விதம் என்ன ? ஜெயமோகன் யார் கலைஞரை விமர்சிக்க என்று கேள்வி கேட்பவர்களை விமர்சிக்கும் வேத சகாய குமார் ரவி ஸ்ரீநிவாஸ் யார் ஜெயமோகனை விமர்சிக்க என்ற ரீதியில்தானே எழுதினார். அன்று அப்படி பல்கலைககழகப் பேராசிரியர் என்ற தோரணையில் எழுதிய வேதசகாயக் குமார் இன்று வடிப்பதுப் போலிக்கண்ணீர்.உண்மையில் ஒரு பேராசிரியர் கருத்துக்களை வரவேற்கவேண்டும், விவாதங்களை செழுமைப்படுத்த வேண்டும், ஆளுமைகளை விட கருத்துக்களே முக்கியம் என்று எழுதியிருக்க வேண்டும்.
சர்வதேச அளவில் அறியப்பட்ட, பல ஆண்டு கால அனுபவம் உள்ள ஒரு பேராசிரியர் முன்வைத்த கருத்துக்களை நான் அச்சில் சர்சித்திருக்கிறேன்.அதற்காக அவர் என்னை அமெச்சூர் என்று விமர்சிக்கவில்லை.உன் துறை என்ன, நான் யார் தெரியுமா என்று எழுதவில்லை.எத்தனையோ நூலாசிரியர்களின் கருத்துக்களை கேள்விக்குட்படுத்தியிருக்கிறேன்/விமர்சித்திருக்கிறேன்.மார்க் போஸ்டரின் இரண்டு நூற்களைப் பற்றி நான் எழுதியிருந்த
மதிப்புரைக்கட்டுரையில் சிலவற்றை சுட்டிக்காட்டியிருந்தேன்.இணையத்தில் வெளியான வேறு சில விமர்சனங்களில் வேறு சில கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதற்காக மார்க் போஸ்டர் நீங்கள் எனக்கு பாடம் கற்பிக்க முயற்சிகிக்கிறீர்கள் என்ற ரீதியில் எழுதவில்லை. அதாவது வேதசகாயகுமார் போல் அவர் பேராசிரியா பந்தாவைக்காட்டவில்லை, கருத்துக்களை முன்வைத்தவர்களை மிரட்டவில்லை.
ஏனெனில் கருத்துக்களை விமர்சிக்கும் சுதந்திரம் என்பது சலுகையல்ல, உரிமை என்று கருதுபவர்கள் விவாதம் செய்பவரின் ஆளுமையை விட அவர் முன்வைக்கும் கருத்துக்களே முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள்.கலைஞரின் ஆதரவாளர்கள் கலைஞர் யார் தெரியுமா, நீ யார் அவரை விமர்சிக்க அல்லது அவர் எழுதியது குறித்து கருத்து சொல்ல என்று எழுதியதும், வேத சகாய குமார் எழுதியதும் தர்க்க ரீதியாக ஒன்றுதானே ?.முன்னது மட்டும் எப்படி தவறு என்று எப்படி அவர் வாதிட முடியும்.
11,ஜெயமோகன் எழுதி சமீபத்தில் வெளியிடப்பட்ட இலக்கிய விமர்சன நூல்களைக் குறித்து ஒரு நூல் எழுதி அவரை ஒரு இலக்கிய விமர்சகராக கருதமுடியுமா என்ற கேள்வியை எழுப்ப முடியும்.அப்படி ஒரு விவாதம் எழுந்தால் அதை நேர்மையாக எதிர் கொள்ள ஜெயமோகன், வேதசகாயக் குமாரால் முடியுமா என்பதே கேள்வி.
12, கவிதாசரண் இதழ் இணையத்தில் உள்ளது.வாசகர்கள் வேதசகாய குமார் எழுதியுள்ளதையும், அதில் உள்ள கட்டுரையையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் .http://www.geocities.com/kavithaasaran/kavi_feb2003.pdf 13, மேடையில் அப்படிப் பேசும் முன் ஜெயமோகன் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள்தரப்பு நியாயத்தை கேட்டறிய முயற்சித்தாரா ? இது குறித்து பிறருடன் கலந்து ஆலோசித்து ஒரு கூட்டறிகை வெளியிடலாம் என்று முடிவு செய்தாரா ?இல்லையே, மாறாக தான் நீதிபதி , சிலர் குற்றவாளிகள் என்ற தொனியில்தானே பேசினார்.
கருணாநிதியின் எழுத்திற்கும், இவருடைய நூல் வெளியீட்டு விழாவிற்கும் என்ன தொடர்பு.அதைப்பற்றி அங்கு அதுவும் அந்த்ப்பின்ணணியில் பேச வேண்டிய தேவை என்ன. இளையபாரதி ஏற்பாடு செய்த கூட்டம், அதில் நடந்தவை குறித்தும், தன் கருத்துகளையும் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கலாம்.அல்லது அந்த எழுத்தாள்ர்கள் கருத்தை அறிந்து கொண்டு தன் நிலைப்பாட்ட்டை எழுதியிருக்கலாம். இது சர்ச்சையான உடன் சம்பந்தப்பட்ட எழுத்தளர்கள் மனதை புண்படுத்தும் நோக்கம் தனக்கில்லை, இந்த சர்ச்சையை மேலும் வளர்க்க விரும்பவில்லை என்றாவது கூறியிருக்கலாம்.ஆனால் ஊடகங்களில் பேட்டி கொடுத்து இதை இன்னும் பெரிய சர்ச்சையாக்க உதவியது அவர்தானே ? ஊடகங்கள் ஒரு சிறு சர்ச்சையைக் கூட் ஊதிப் பெருக்குபவை, எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதோ, அதுவும் இது இலக்கியவாதிகள் குறித்த சர்ச்சை மட்டுமல்ல, தமிழக்த்தின் ஒரு முக்கியமான அரசியல்வாதி குறித்த சர்ச்சை என்பதால் பலதரப்பட்ட கருத்துகள் வரும் என்பதும் அவருக்குத் தெரியாதா ? ஊடகங்கள் தரும் ’15 நிமிடப் புகழின் ‘ விளைவுகள் என்ன என்பதை அறியாதவரா அவர். ஊடகங்களுக்குத் தேவை பரபரப்பும், சுவாரஸ்யமும். ஊடகங்களால் ஒரு சர்ச்சையை முன்வைத்து சில வாரங்களுக்கு பரபரப்பான செய்திகள் தரமுடிந்தது.அவற்றின் அக்கறை அவ்வளவுதான். இதன் மூலம் ஒரு ஆழமான இலக்கிய விவாதம் நடைபெற அவை இடம் தரும் என்றா எதிர்பார்க்க முடியும்.
14, ஒரு ஆளுமையை இலக்கியம் என்ற ஒற்றை அளவுகோலைக் கொண்டு மட்டும் மதிப்பிடமுடியாது.ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் வேதசகாய குமாருக்கு வெறும் வரலாற்றுப் பெயராகத் தெரியலாம்.அவர்கள் ஆற்றிய பணியை குறைத்து மதிப்பிட முடியாது. ராஜாஜி லைசென்ஸ், பெர்மிட் முறையை தீவிரமாக எதிர்த்தார். அவரது கட்சி 1971 தேர்தலில் வெற்றி பெறவில்லை.சுதந்திரா கட்சி அவருடன் மறைந்து விட்டது.ஆனால் 1991 ல் பதவிக்கு வந்த நரசிம்மராவ் அரசு லைசென்ஸ், பெர்மிட் முறையை நிராகரித்து தாரளமயமாக்கலை முன்வைத்தது.இது ராஜாஜி முன்வைத்த கருத்துகளுக்கு கிடைத்த வெற்றி, அவர் கட்சி இல்லாத போதும்.ராஜாஜியின் பங்களிப்பை ஒட்டுமொத்தமாக மதிப்பிட வேண்டும்.புதுமைப்பித்தன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்-அவ்வளவுதான்.அதை அங்கீகரிப்பதில் பிரச்சினை இல்லை.அதற்கு மேல் அவருக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது அல்லது இருக்க முடியும்.இலக்கியம், அதிகபட்சம் பத்திரிகைத்துறை- இவற்றுக்கு அப்பால் அவருடைய
பங்களிப்பு என்ன ?.அவர் பெயரை ஒரு கட்டிடத்திற்கோ அல்லது சாலைக்கோ வைக்கலாம்.இங்கு பாரதி பரம்பரை, புதுமைப்பித்தன் பரம்பரை என்ற ‘வம்சாவழி ‘ சண்டையல்லவா நடைபெறுகிறது.இதற்கு யார் காரணம் ?.இலக்கிய மடங்கள் குறித்த சண்டை இது, இதற்கும் இலக்கியம் என்பதற்கும் என்ன சம்பந்தம் ?.
15,ஓரு பொருளை அல்லது ஒரு சிக்கலை இலக்கியம் தவிர பிற துறைகளும்/கலைகளும் பேசும்.இலக்கியம் ஒரு வெளிப்பாடு, அவ்வளவுதான்,அனைத்தையும் அளக்கும் அளவு கோல் அல்ல. என்னிடம் மண்வெட்டி இருப்பதால் அதுதான் அதி முக்கியமான கருவி,வேறு எந்தக் கருவியையும் விட அதே மிகவும் பயனுள்ளது என்று ஒருவர் வாதிடலாம். அதை நாம் ஏற்போமா ?. இலக்கியம் மூலமே அனைத்தையும் புரிந்து கொள்ளமுடியாது, இலக்கியத்தின் வரையரைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் இலக்கியத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்த சில சிறுபத்திரிகையாளர்கள் இலக்கியம் குறித்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்றத்தை முன்வைத்தனர்.இலக்கியவாதி என்றால் அவர் எதைப்பற்றி சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்ற பிரமையை ஏற்படுத்தினர்.உண்மையில் உலக சிந்தனைக்கு தமிழ் இலக்கியவாதிகளின், இலக்கியம்சாராப் பங்களிப்பு என்ன ? .க.நா.சு முதல் ஜெயமோகன் வரை இங்கு இலக்கிய விமர்சனம் என்று சிறுபத்திரிகையாளர்களால் எழுதப்பட்டுள்ளவற்றில் எத்தனை ஒரு தரம் வாய்ந்த journal லில் வெளியிடப்படுமள்விற்கு தரமானவை.அல்லது இலக்கிய விமர்சனத்திற்கு சிறப்பான பங்களிப்பு அல்லது புதிய கோட்பாட்டை முன்வைத்தவை என்று கருதத்தக்கவை.
16,வேதசகாய குமாருக்கும், ஜெயமோகனுக்கும் தேவை ஒரு நேர்மையான சுய விமர்சனம். யார் எழுதலாம், எவ்வளவு எழுதலாம் என்ற கட்டுரையை எழுதிய வேத சகாய குமாருக்கு உண்மையிலேயே கருத்து சுதந்திரம் குறித்து அக்கறையும், நம்பிக்கையும் இருந்தால் அக்கட்டுரையில் முன்வைத்த வாதங்கள் தவறு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.இல்லையெனில் ஒரு சிலரின் கருத்து சுதந்திரம் வேறு சிலரின் கருத்து சுதந்திரத்தை விட முக்கியமானது என்று அவர் கருதினால் அதையும் தெரிவித்துவிட்டு, ஜெயமோகனின் கருத்து சுதந்திரம்,பிறரின் கருத்து சுதந்திரத்தை விட முக்கியமானது என்று வெளிப்படையாக அறிவித்துவிடலாம்.
17,ஜெயமோகன் முன்வைக்கும் மறுப்பை பத்திரிகைகள் பிரசுரிக்க மறுப்பது சரியல்ல.அவை அவர் தரப்புக் கருத்திற்கும் இடம் தர வேண்டும்.ஒரு கட்டத்தில் இந்த சர்ச்சைக்குரை இனி இடம் அளிப்பதில்லை என்று அவை முடிவு செய்யலாம். ஆனால் அதற்கு முன் அவர் தரப்பு கருத்துக்களை ஒரு முறையாவது வெளியிடுவதுதான் பொருத்தமான முடிவாக இருக்கும்.மறுப்பை வெளியிட மறுக்கும் பத்திரிகைகள் மீது Press Council of India வில் புகார் தருவது குறித்து அவர் யோசிக்கலாம்.ஆனால் இதன் சாதக,பாதகங்களை தீர ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.
18 ,அப்படியானால் எப்படி பேரிலக்கியம் ,நல்ல இலக்கியம் , தீய இலக்கியம் என்ற பிரிவினை சாத்தியம் ? அதை விவாதித்து, நிரூபித்து நிறுவுவது சாத்தியமே அல்ல. ஆனால் தொடர்ந்து அப்பிரிவினை நடைமுறையில் நிகழ்ந்து கொண்டும் வருகிறது. படைப்பின் மீதான தொடர்ந்த பலதரப்பட்ட பார்வைகள் மூலம் , ஒரு முரணியக்க விளைவாக , மதிப்பீடுகள் உருவாகி வருகின்றன. ஒரு காலகட்டத்தில் யாருமே மதிக்காத, அறியாத படைப்புகூட பேரிலக்கியமாக மெல்லமெல்ல வடிவம் கொள்ளலாம். ஆகவேதான் காலமே சிறந்த விமரிசகன் எனப்படுகிறது.http://www.thinnai.com/ar0710032.html
இதை எழுதியது ஜெயமோகன். இந்தக் கருத்தையும், அவர் ஆற்றிய உரையில் கூறியுள்ளதையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.
- ஆசியப் புலம் பெயர்ந்தோர் பற்றிய சர்வே
- வைரமுத்துக்களின் வானம் -9
- ராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள் (கூட்டுக்கவிதை )
- வருவான், குதிரை ஏறி வருவான்(கூட்டுக்கவிதை)
- மொழியெனும் சிவதனுசு
- தனக்குத் தானே பேசிக்கொள்ளும்
- க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம்-2: ஸ்க்ராட்டிஞ்சரின் பூனையும், பெரிலியம் ஐயனியும்
- ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்(1954-2004)
- கடிதங்கள் – நவம்பர்-20, 2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – நவம்பர் 20, 2003
- இந்த வாரம் இப்படி (xenophobic நான், பாபி ஜிண்டால், ஈராக்கில் இத்தாலி வீரர்கள், அறம்)
- உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2
- காசி யாத்திரை
- கலக்கம்
- ஜிம் ஜோன்ஸின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை
- குறிப்புகள் சில- நவம்பர் 20,2003
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 4
- மூளைச் சலவையின் ஆற்றல்: 900 சாவுகள் கற்றுத் தரும் ஒரு கொடிய பாடம்
- நாச்சியார் திருமொழி
- ஆதி – ஒரு புதிய தமிழ் மாத ஏடு
- எனக்குப் பிடித்த கதைகள் – 86-புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம்: திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து ‘
- வீணாகப் போகாத மாலை
- பிரமைகளும், பிரகடனங்களும்-2
- பொறியில் சிக்காத பிதாமகன்.
- தொடரும் உல்டா.. தமிழ் சினிமாவில்…
- எங்கே நமக்குள் சாதிவந்தது ?
- நலங்கெடப் புழுதியில்…
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து மூன்று
- நூருன்னிசா
- அந்த நாலுமணிநேரம்
- நந்தகுமாரா நந்தகுமாரா
- காத்திருந்து… காத்திருந்து….
- கனவின் கால்கள்
- அலுவலகம் போகும் கடவுள்
- குழந்தைகள் தினம் ( 14 நவம்பர் 2003 )
- எது மரபு
- கலியுகம்
- அன்றைக்கு அப்படியே போயிருந்தால்
- விடியும்!- (23)
- உனைப் பெற்ற நிறைவுக்கு ஈடு இல்லை
- முரண்பாடுகளில்…
- விடாத வீடு
- குனிந்த மலை
- குளம்
- நான் நானில்லை
- புரியாமல் கொஞ்சம்…
- ஒன்று நமது சிந்தனை
- தமிழ்
- காதல் லட்சம்
- மெளனம்…