யாழன் ஆதி
====
(மே காலச்சுவடில் வெளிவந்த க.பஞ்சாங்கத்தின் ‘பிள்ளை கெடுத்தாள் விளையும் சந்தேகங்களைக் கொண்டாடும் எழுத்து முறையும் ‘ என்ற கட்டுரைக்கு எதிர்வினை.)
‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ என்ற சு.ரா.வின் கதைப்பிரதியின் மீதான கொண்டாட்டம் க.பஞ்சாங்கத்தின் உள்ளன்பான கொண்டாட்டமா என்ற சந்தேகத்தை நான் கொண்டாடுகிறேன். பிரதி வெளியானது காலச்சுவடின் 2005 பிப்ரவரி இதழ் எண் 62ல். அது பஞ்சாங்கத்தால் கொண்டாடப்படுவது இதழ் எண் 65ல். (மே 2005) இதழ்கள் 63, 64ல் அப்பிரதிக்கான எந்தக் கொண்டாட்டமும் (சில வாசக கடிதங்கள் தவிர) இல்லாத வெற்று வெளியில் மே இதழில் இப்படி ஒரு விடுமுறைக் கொண்டாட்டத்தை க.பஞ்சாங்கம் நிகழ்த்தியிருப்பதன் காரணம், பிரதிக்கும் கொண்டாட்டத்திற்குமான கால இடைவெளியில் நிகழ்ந்த பிரதிக்கு எதிரான கலகங்கள்தான் என்பதைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது.
நாடு திட்டமிட்டுப் போகிறதா ? திசை மாறிப்போகிறதா ? என்னும் தலைப்பிற்கு திட்டமிட்டு திசைமாறிப் போகிறது என்ற பட்டிமன்ற நடுவரின் தீர்ப்பைப் போல அமைந்திருக்கிறது க.ப.வின் கட்டுரை.
இப்பிரதியை யார் எழுதியது என்று ஒருவேளை தெரியாமல் இருக்குமானால், இது நல்ல பிரதி இல்லை என்ற மெளனத்தின் உறை நிலைக்கு தான் தள்ளப்பட்டிருக்கலாம் என்று ஒத்துக்கொள்கிறார் க.ப. எனவே, இது கொண்டாடப்படுவதற்கான காரணம், இது சு.ரா. எழுதியது என்பதால் மட்டுமே. ‘எழுவாயை மறந்துவிட்டு, எழுத்தை வாசிக்கவே முடியாத ஒரு பேய்ச்சூழலில் ‘ அவர் சிக்கி இருப்பதுதான் காரணம். அதாவது, கடவுள் படைத்தார் என்பதற்காக எல்லாவற்றையும் (சாதி உட்பட) கொண்டாடுகிற, அதே மனோவியல்தான் சு.ரா. எழுதினார் என்பதற்காக இப்பிரதி கொண்டாடப் படுவதற்கான காரணம்.
எழுத்தாளர், வாசகர் என்பவர்கள் உண்மையான மனிதர்களாக இருக்கும்போது இலக்கியச் செயல்பாடுகளுக்கு வெளியே நிற்கின்றனர் என்கிறார் க.ப. எனில், எழுதுவதும் படிப்பதும் இலக்கியச் செயல்பாடுகளுக்கு வெளியே நிற்பதா ? இப்பிரதி தன்னை முன்னிறுத்திக் கொண்டு, ஒரு புகைத்தன்மையுடன் எழுத்தாளரின் சுற்றுப்புறத்தில் அலைந்து எப்படியோ அவருள் சென்று, கழிவைப்போல வெளிவருகிறது. இதற்கு எந்த விதத்திலும் சு.ரா. பொறுப்பாகிவிடமாட்டார். எனவே அவரை எதிர்த்தும், பிரதியை எதிர்த்தும் கலகம் தேவையில்லை என்கிறார். அப்படியெனில் ‘நாச்சார்மட விவகாரங்கள் ‘ மட்டும் காலச்சுவடை கலவரப் படுத்தியது எதனால் ? அதை க.ப. கொண்டாடவேயில்லையே!
இந்தக் கதை பரவுவதற்கான காரணம் அதன் இரக்கம் கசிகிற மர்மக்கூறுகள் என்கிறார். யார் மீது கசிகிற இரக்கம் அது ? அந்த இரக்கத்தின் ரூபம் எத்தகையது ? தலித் பெண்ணான தாயம்மா மீது கசிகிற இரக்கமாக ஒருவேளை அது இருக்குமாயின் அவ்விரக்கத்தின் மோதல் அவள் மேல் சுமத்தப்படுகிற பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு காரணமானோர்கள்மீது நிகழ்ந்திருக்கவேண்டாமா ? மாறாக, நய்யாண்டி என்ற ஆயிரம் ஊசிகள் தாயம்மாமீது குத்துகிற தீவிரத்தின் கொழுந்துகள் எரிகிற தன்மையுடன்தான் பிரதி செயல்படுகிறது.
கதையின் முடிச்சுகள் ஒவ்வொன்றாய் கதைச் சொல்லிகள் அவிழ்க்கிறபோது கதை தனக்கேயான முடிச்சுகளைப் போட்டுக்கொள்கிறது. அதன் விளைவாக, தாயம்மா என்ற படித்த பெண் தன்னிடம் படிக்கும் மாணவனை வன்புணர்வுக்கு உட்படுத்துகிறாள் என்ற முடிச்சும் பின்னப்படுகிறது. அது, சு.ரா. கூறியதல்ல; ஊர்க்காரர்கள் சொன்ன பொய் ; அரசியல்வாதி தன் மகனை விட்டுக் கட்டிய கதை என்கிறார். அப்படியென்றால், ஐம்பது ஆண்டுகள் கழித்து தாயம்மா திரும்ப வருகையில் அவள் வயது ஒத்தவர்கள் அந்தக் குற்றச்சாட்டு பொய் என்று சொல்லவில்லையே!
க.பஞ்சாங்கம்கூட அந்த ஊர்க்காரர்களோடு சேர்ந்து கொள்கிறார். ‘எல்லோரும் பிரம்மாண்டமான இயற்கையின் உற்பத்திப் பொருட்கள். இயற்கை நிகழ்த்தும் வேதியியல் விளையாட்டின் முடிவுகள் ‘ என்கிறார். ‘தாயம்மாவுக்குள் இயற்கை ஆடிய ஆட்டத்தில் அவள் தாகத்தால் அப்படி நடந்திருப்பாளோ ? ‘ என்கிறார். இயற்கை உந்துதல் – உடலின் ஹார்மோன்களின் சுரப்பு, தினமும் மீன் மாமிசம் சாப்பிட்டு சூடேறியிருக்கும் உடல் — இவையெல்லாம் தாயம்மாவின் வன்புணர்வுக்கு சாதகமாகச் சொல்லப்படும் காரணங்கள். ஒருவேளை அவள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் என்பதுதான் சைவப் பஞ்சாங்கக் கூற்று.
அவர் இன்னொரு சந்தேகத்தையும் கொண்டாடுகிறார். படித்துவிட்டு வீட்டில் வெறுமனே இருந்த தாயம்மா, தனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த பாதிரிக்கு புழுக்கைப் பெண்சிலால் கடிதம் எழுதுகிறாள். அதில் என்ன இருக்கும் ? பாதிரியின் உச்சரிப்பை போலச்செய்தாளாமே! அதன் அர்த்தம் என்ன ? ஊகங்கள் பெருகுகின்றன என்று கூறுகிறார். என்னவாக இருக்கப் போகிறது ? பாதிரியும் தன்னிடம் படித்த தாயம்மாவை ஒருவேளை ‘பயன்படுத்தி ‘ இருக்கலாம். அதன் தொடர்ச்சிதான் தாயம்மா இப்படி நடந்து கொண்டது என்று ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மறைந்திருக்கும் ஆதி மிருகம் க.ப.விற்குள்ளிருந்தும் வெளிவரும் அவ்வளவுதான்.
தாயம்மா என்ற தாழ்ந்த சாதிப்பெண்ணை — அது நாடார் பெண் என்று கூறும் தத்துவார்த்த விளக்கத்தை நாடார்கள் கவனிக்க — அவள் படித்து முடித்து வேலைக்குப் போனபின்பும் இப்படித்தான் இருப்பாள் என்று இழிவாகச் சித்தரித்திருக்கும் சு.ரா.வின் தன்மைக்கு க.ப. கட்டும் சப்பைக் கட்டுதான் இக்கட்டுரை.
தலித் பெண்கள்மீது நிகழ்ந்துள்ள இவ்விலக்கிய வன்கொடுமைக்கு க.ப. போன்றவர்கள் எவ்வகையான விளங்கலைக் கொண்டாடினாலும் அது விளக்கு பிடிப்பது போன்றதே.
சுராவின் தவறான சித்தரிப்பை பணித்தலின் பேரில் வலிந்து தூக்கி நிறுத்த முயல்கிறார் க.ப. என்பதுதான் அவருடைய கட்டுரையை தொடர்ந்து மறு வாசிப்புக்கு உட்படுத்தும்போது விளைகிற நுண் உணர்வு.
irama.prabu@gmail.com
- பெரியபுராணம் – 44 ( திருக்குறிப்புத்தொண்டர் புராணம் தொடர்ச்சி )
- அஞ்சலி -பிரபல எழுத்தாளரும் மருத்துவத்துறை பேராசிரியருமான அமரர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் (நந்தி)
- தலைமுறைகள் கடந்த வேஷம்
- பெண்கள் சந்திப்பு மலர் விமர்சனக் கூட்டம் ஜூன் மாதம் 26ம் திகதி ஸ்காபுரோ சிவிக் சென்றர் அறிவித்தல்.
- புலம் பெயர்ந்த கடவுளர்கள்
- மலேசிய இலக்கியங்களின் சுய அடையாளம்.
- பிரதிக்கு எதிரான கலகம்
- தமிழ் சினிமாவில் ‘படித்தவர்கள் ‘
- அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்கள்
- ஜப்பானிய யந்திர மனித உடை மனித சக்தியை அதிகரிக்கிறது
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) வான ஊர்திக்கு முன்னோடிச் சோதனைகள் (பாகம்-3)
- ஊக்கும் பின்னும்
- கீதாஞ்சலி (27) கதவு திறந்திருக்கிறது! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- யாமறிந்த மொழிகளிலே…
- 2 மதியழகன் சுப்பையா கவிதைகள்
- கேட்டாளே ஒரு கேள்வி
- நிழல்களின் எதிர்காலம்
- மனஹரன் கவிதைகள்
- அவுஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள்
- ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி ப.ஜீவானந்தம்
- நூல் அறிமுகம் – தொல்காப்பியத் தமிழர் – சாமி சிதம்பரனார்
- புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-3)
- திருவண்டம் – 4
- ஆண்டச்சி சபதம்
- செருப்பு
- அமானுஷ சாட்சியங்கள்..
- ஒரு சாண் மனிதன்
- குடும்பப் புகைப்படம்
- கண்மணியே! நிலாப்பெண்ணே!