அருணகிரி
முன்குறிப்புகள்:
1). இது அவர் உரை நிகழ்த்தியபோது வெளியிடப்பட்ட தற்காலிக நகலின் மொழிபெயர்ப்பு. செப்டம்பர் 12-இல் அவர் நிகழ்த்திய உரை இதனையொட்டியே இருந்தது என்றாலும், இஸ்லாமிய எதிர்ப்புகள் வலுத்தபிறகு அக்டோபர்-9-இல் வட்டிகன், சில மாற்றங்களைச் செய்து அடிக்குறிப்புகளுடன் இறுதி உரையை வெளியிட்டுள்ளது. பேரரசர் பாலியோலோகஸ், முகம்மது குறித்துக்கூறிய கடுமையான கருத்துகளில் போப்பிற்கு உடன்பாடு இல்லையென்று உரையின் இடையிலும், ஒரு மகத்தான மதத்தின் புனித புத்தகத்திற்கான மதிப்பை குர்ரான்மீது போப் வைத்துள்ளதாக உரையின் அடிக்குறிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க விழைவோர்க்கு உதவும் வண்ணம் பல மேலதிகக்குறிப்புகளும் இந்த அடிக்குறிப்புகளில் உள்ளன. போப் உரையின் இந்த இறுதி வடிவத்தின் இடுகை: http://www.vatican.va/holy_father/benedict_xvi/speeches/2006/september/documents/hf_ben-xvi_spe_20060912_university-regensburg_en.html#_ftnref5
2). சிக்கலான, சுற்றி வளைந்த நடையில் உள்ள இவ்வுரை, கிறித்துவ, கிரேக்க தத்துவங்கள் பலவற்றையும் தொட்டுச்செல்கின்றது. மொழிபெயர்ப்பின் நோக்கத்திலிருந்து விலகாமல் இருக்கும் பொருட்டு, இம்மொழிபெயர்ப்பில் இவ்வகைத் தத்துவங்கள் விளக்கப்படவில்லை, என்றாலும் சில தத்துவார்த்த சொல்லாடல்கள் அவை குறிக்கும் அர்த்தங்களின் அடிப்படையில் தமிழாக்கப்பட்டுள்ளன. உ-ம் வாலன்டியரிஸம்= விருப்பமுதன்மைவாதம்; டிஹெலனைசேஸன்-கிரேக்கத்தாக்கநீக்கம். சில வார்த்தைகள் அப்படியப்படியேகூட பெயர்க்கப்பட்டுள்ளன(உ-ம். பிளேட்டோனிஸம்). இவ்வகையில் லோகோஸ் என்ற வார்த்தை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது. இரு பொருளுள்ள இவ்வார்த்தையைப் பல இடங்களில் போப், வேண்டுமென்றே லோகோஸ் என்றே உரைக்கிறார். அதாவது அவ்வார்த்தை குறிக்கும் இருபொருட்களையும் உள்ளடக்கியவன் இறைவன் என்பதான இவ்வுரையின் ஆதாரக்கருத்தை வலியுறுத்தும் பொருட்டு போப் இவ்வாறு கையாண்டிருக்கிறார். எனவே இவ்வாறான இடங்களில் லோகோஸ் என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜெயமோகனின் முந்தைய கட்டுரை ஒன்றில் கண்டதைப் பின்பற்றி, Reason, Rationality என்பவை முறையே காரண அறிவு, காரணீயம் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமைப்புரீதியான இயக்கமாக சர்ச் கூறப்படும் இடங்களில், (தேவாலயம் என்றில்லாமல்) சர்ச் என்றே குறிக்கப்பட்டுள்ளது. மற்றபடி இறுக்கமாக மொழிபெயர்க்காமல், பல இடங்களில் பொருள் விளங்கும் பொருட்டும், வாக்கிய நீட்சியைக்குறைக்கும் பொருட்டும் ஒரு இளகிய மொழி பெயர்ப்பு அணுகுமுறையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் மூல உரையின் நீட்சியான சிக்கல் நடை, மற்றும் கடினச்சொல்லாடல்களின் பாதிப்பு ஆகியவற்றை மொழிபெயர்ப்பிலும் முழுவதுமாக விலக்க இயலவில்லைதான்.
————————————————————————————————————————————————————————————————
புனிதர் 16-ஆம் பெனடிக்ட் அவர்கள் முன்சன், அல்ட்டோடிங்க் மற்றும் ரிஜன்ஸ்பர்க் நகரங்களில் மேற்கொண்ட
அப்போஸ்தலப் பயணம்
(செப்டம்பர் 9-14, 2006)
அறிவியல் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
புனித தந்தையின் உரை
ரிஜன்ஸ்பர்க் பல்கலைக்கழகப் பெருங்கூடம்
செப்டம்பர் 12, 2006 செவ்வாய்க்கிழமை
இறைநம்பிக்கை, காரண அறிவு மற்றும் பல்கலைக்கழகம்
நினைவுகளும் எண்ணப்பிரதிபலிப்புகளும்
மேன்மையாளரே, பெருந்தகையோரே, மாண்புமிகுந்தோரே,
மேதகு பெண்மக்களே, கனவான்களே,
இப்பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வந்து இந்த மேடையில் சொற்பொழிவு தருவது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது. பிரெய்சிங்கர் ஹோக்ஷுவில் கழித்த மகிழ்ச்சியான காலத்திற்குப் பிறகு, பான் பல்கலைக்கழகத்தில் நான் கற்பிக்கத் தொடங்கிய அந்த வருடங்களை எண்ணிப்பார்க்கிறேன். அது 1959; சாதாரணப் பேராசிரியர்களே பழைய பல்கலைகழகத்தில் இருந்த நாட்கள் அவை. (துறைத்)தலைவர்கள் பலருக்கு உதவியாளர்களோ காரியதரிசிகளோ இல்லையென்றாலும், அதனை ஈடுகட்டும் வகையில் மாணவர்களுடனும், குறிப்பாக பேராசிரியர்களிடையிலும் நேரடித்தொடர்பு மிகுந்திருந்தது. பாடநேரங்களுக்கு முன்னும் பின்னும் ஆசிரியர்கள் அறையில் சந்தித்துக்கொள்வோம். வரலாற்றியலாளர்கள், தத்துவவாதிகள், மொழியியலாளர்கள் ஆகியோரிடையில் மட்டுமன்றி இயல்பாகவே இரு இறையியல் துறையாளர்களிடையிலும் உயிரோட்டம் மிகுந்த கருத்துப்பரிமாற்றங்கள் நடக்கும். அரையாண்டிற்கு ஒருமுறை கல்வி தினம் (dies academicus) என்று இருந்தது, அப்போது ஒவ்வொரு துறைப்பேராசிரியர்களும் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் தோன்றுவர்- இந்த நிகழ்ச்சி, மதிப்பிற்குரிய ரெக்டர் இப்போது குறிப்பிட்டது போல உண்மையாகவே ஒரு முழுமையான (universitas) அனுபவத்தை உருவாக்கக்கூடியதாய் இருந்தது. வேறு வகையில் சொல்லப்போனால், நமது துறைவல்லுனங்களின் காரணமாக சில சமயங்களில் ஒருவருக்கொருவர் கொள்ளும் தொடர்புகள் சற்று கடினமானவையாய் இருப்பினும், ஒற்றைக்காரணியத்தின் பல அம்சங்கள் ஒருங்கிணந்த ஒரு முழுமையாகவும் காரண அறிவின் சரியான பயன்பாட்டின் பொறுப்பினைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு அனுபவமுமாகவே அது இருந்தது. அந்த யதார்த்தமே வாழ் அனுபவமாகவும் ஆனது. இந்தப்பல்கலைக்கழகம் தனது இரு இறையியல்துறைகள் குறித்தும் மிகுந்த பெருமிதமே கொண்டிருந்தது. இறை நம்பிக்கையையும் காரண அறிவினையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய்க்காணும் ஆன்மீகவியலாளர்களின் கண்ணோட்டத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், இறை நம்பிக்கையின் நம்பகத்தன்மையைக் கேள்வி கேட்பதன்மூலம் அவர்களும் முழு அறிவு (universitas scientiarum) என்ற முழுமையின் முக்கியமான ஒரு பகுதிக்கான பங்களிப்பையே செய்து வந்தார்கள். உடன்பணியாற்றும் ஒருவர் இப்பல்கலைக்கழகம் குறித்து சொன்னதாக ஒருமுறை கூறப்பட்டஒரு கருத்து: இப்பல்கலைக்கழகத்தில் வித்தியாசமான ஒரு விஷயம் என்னவென்றால், இல்லாத கடவுளை ஆராய இரண்டு துறைகள் இருக்கின்றன. இந்நிலையிலும் காரண அறிவுலகின் ஆழமான ஒத்திசைவு எவ்வித தொல்லைக்கும் உள்ளாகவில்லைதான். இதுபோன்ற தீவிர சந்தேகங்கள் நிறைந்த சூழலிலும் காரண அறிவினை உபயோகித்து கடவுள் குறித்த கேள்விகளை, கிறித்துவ நம்பிக்கையின் மரபு சார்ந்த பின்னணியில் எழுப்புவது அறிவார்ந்ததும் அவசியமானதும் ஆகும். (காரண அறிவின் மூலம் கடவுள் குறித்து வினாக்கள் எழுப்பப்படும் இம்மரபு) பல்கலைக்கழகம் முழுதிலும் கேள்விகள் ஏதுமின்றி ஒப்புக்கொள்ளப்பட்டது.
கற்றறிவு மிக்க பைசான்டின் பேரரசர் இரண்டாம் மானுவல் பாலியோலோகஸுக்கும் பெர்சியப்பண்டிதன் ஒருவனுக்கும் 1391 அளவில் அங்காரா அருகில் உள்ள குளிர்காலப்பாசறை ஒன்றில் கிறித்துவம், இஸ்லாம், இவையிரண்டின் உண்மை என்பவை குறித்து நடந்த உரையாடல் பற்றி பேராசிரியர் தியோடர் கவ்ரி (முன்ஸ்டர்) எழுதியவற்றைப்படிக்கையில் மேற்சொன்னவை அனைத்தும் நினைவுறுத்தப்பட்டேன். இந்த உரையாடலை 1394க்கும் 1402க்கும் இடையில் கான்ஸ்டான்டிநோபிள் முற்றுகையின்போது பேரரசரே எழுதியதாகக் கொள்ளலாம். பேரரசர்பக்க வாதங்கள் பெர்சியனின் வாதங்களை விட அதிக விளக்கமாகத்தரப்பட்டுள்ளதற்கான காரணத்தையும் இது புரிய வைக்கும். இந்த உரையாடல்கள் பைபிளிலும் குரானிலும் இறைநம்பிக்கை அமைப்புகள் குறித்தும் குறிப்பாக கடவுளின் பிம்பம் மற்றும் மனிதன் குறித்தும் பேசுகின்றன. அதேசமயம், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, குர்ரான் முதலான கோட்பாடுகள் அல்லது மூவகை வாழ்க்கை விதிகள் என்று சொல்லப்படுபவை குறித்தும் இவற்றுக்கிடையேயான தொடர்பினைக் குறித்தும் திரும்பத் திரும்பப் பேசுகின்றன. இது குறித்து இன்றைய உரையில் பேசுவது என் நோக்கமன்று. இங்கே ஒரே ஒரு விஷயத்தையே சொல்ல விழைகிறேன். (பேரரசரின்) உரையாடலில் இது சிறு பகுதியே எனினும், காரண அறிவு மற்றும் நம்பிக்கை குறித்த பிரச்சனையில் இந்த விஷயம் எனக்கு சுவாரசியமானதாத் தெரிகிறது. இதுவே இப்பிரச்சனையைப்பொறுத்தவரை எனது எண்ணங்களின் ஆரம்பப்புள்ளியாகவும் அமைய இயலும்.
பேராசிரியர் கவ்ரியின் ஏழாவது உரையாடலில் (பிரச்சனை) பேரரசர் புனிதப்போர் என்ற பகுதியைப் பேசுகிறார். “மதத்தில் கட்டாயப்படுத்தல் இல்லை” என்று சுரா 2,256 கூறுவது அப்பேரரசருக்குத் தெரிந்தே இருக்க வேண்டும். அறிஞர்களைப் பொறுத்தவரை இந்த சுராவானது முகமது இன்னும் வலுவடையாமல் பலவீனமான நிலையில் இருந்த ஆரம்ப காலகட்டங்களைச் சார்ந்ததாகும். ஆனால் பேரரசருக்கோ புனிதப்போர் குறித்து குர்ரானில் விரிவாகப்பின்னால் எழுதப்பட்ட வரைமுறைகளும் இயல்பாகவே தெரிந்துதான் இருந்தது. “நற்புத்தகம்” கொண்டவர்கள் மற்றும் காபிர்கள் ஆகியோர் நடத்தப்பட்ட விதம் என்பது பற்றிய விவரணகளுக்குல் செல்லாமல், நம்மைத் துணுக்குறச்செய்யும் கடுமையுடன்* அவர் கூறுவதாவது: “முஹம்மது கொண்டு வந்ததில் என்னதான் புதியதாக உள்ளது என்று காட்டுங்கள், அங்கு கொடியதும், இரக்கமற்றதுமான விஷயங்களையே நீங்கள் காண்பீர்கள்- கத்திமுனையில் மத நம்பிக்கையைப் பரப்பச் சொன்ன அவரது கட்டளையைப்போல”. அழுத்தமாக தனது கருத்தை இங்கனம் வெளிப்படுத்திய பேரரசர் மத நம்பிக்கையை வன்முறை மூலம் பரப்புவதென்பது எவ்வாறு காரண அறிவற்ற செயலாகிறது என்பதை மேலும் விவரிக்கிறார். வன்முறையானது கடவுளின் இயற்கை, ஆன்மாவின் இயற்கை என்ற இரண்டிற்கும் ஒத்துவராதது. அவர் சொல்கிறார் “இறைவனானவன் இரத்தத்தால் மகிழ்ச்சியடைவதில்லை. காரண அறிவுடன் செயல்படாமை இறைவனின் இயல்புக்கு எதிரானது. நம்பிக்கை ஆன்மாவிலிருந்து பிறப்பது- உடலிலிருந்தல்ல. மத நம்பிக்கையில் ஒருவனை வழிநடத்திச்செல்பவர் யாராயிருப்பினும், அவருக்கு, வன்முறையோ பயமுறுத்தலோ இல்லாமல் நன்கு உரையாற்றவும், சரியாகக் காரண அறிவுடன் செயல்படவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்… அறிவார்ந்ததொரு ஆன்மாவைச் சம்மதிக்க வைக்க ஒருவனுக்கு வன்மையோ, எந்த விதமான ஆயுதங்களோ அல்லது வேறு எவ்விதத்திலும் மரண பயமூட்டுதலோ தேவையில்லை”.
வலிந்த மத மாற்றத்துக்கெதிரான இவ்விவாதத்தின் முடிவான கூற்று இதுதான்: காரண அறிவுடன் செயல்படாமை இறைவனின் இயல்புக்கு முரணானது. ஆசிரியர் தியோடர் கவ்ரி அவதானிப்பதாவது: கிரேக்கத் தத்துவத்தின் வழி வந்த பைசான்டின் பேரரசனுக்கு இக்கூற்று வெளிப்படையாய் இருப்பினும், முஸ்லீம் பாடங்களைப்பொறுத்தவரை இறைவன் அனைத்தையும் கடந்தவனாவான். அவன் விருப்பம், நமது கட்டமைப்புகள் எவற்றிற்கும் அடங்காதது-காரண அறிவு உட்பட. இவ்விடத்தில் கடவுள் அவரது வார்த்தைகளால் கூடக் கட்டுப்படுத்தப்படுவதில்லை, உண்மையை நமக்கு வெளியாக்கும்படி அவனை அவசியப்படுத்துவது என்பது எதுவுமே இல்லை என இபுன் ஹாசிம் கூறத்தலைப்படுவதை எடுத்துக்காட்டும் பிரெஞ்சு இஸ்லாமியவாதி ஆர்.அர்னால்டெ அவர்களின் எழுத்தை மேற்கோளாக்குகிறார் கவ்ரி. அதாவது கடவுளின் விருப்பம் அதுவென்றால், சிலை வழிபாடு கூடச்செய்ய வேண்டியதுதானாம்.
இந்த வேளையில் இறைவனைப்பற்றிய புரிதல் மற்றும் உறுதியானமத நம்பிக்கை இவற்றைப் பொறுத்தவரை ஒரு இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். காரண அறிவின்றி நடத்தல் கடவுளுக்கு முரணானது என்பது வெறும் கிரேக்கக்கருத்தாக்கமா அல்லது எப்போதும் உள்ளுறை உண்மையான ஒரு விஷயமா? இங்குதான் கிரேக்கம் என்று சொல்லப்படுவதன் சிறப்பான அம்சத்தையும் விவிலியத்தில் கடவுளின் புரிதலுக்கும் இடையே உள்ள ஆழமான இசைவைக் காண்கிறோம். “படைத்தல்” புத்தகத்தின் முதல் வாசகத்தை மாற்றியமைத்து முழு விவிலியத்தின் முதல் வரியாக யோவான் பின்வரும் வார்த்தைகளுடன் தனது நற்செய்தியின் முன்னுரையைத்தொடங்குகிறார்: “முதலில் லோகோஸ் இருந்தது”. பேரரசர் இந்த லோகோஸ் என்ற வார்த்தையையே உபயோகிக்கிறார். லோகோஸ் என்பதற்கு வார்த்தை, காரண அறிவு என இரு பொருளுண்டு- படைப்பதாகவும் மற்றும் மிகத்துல்லியமாகக் காரண அறிவாகவுமே தன்னை வெளிப்படுத்தவல்ல காரண அறிவே அதுவாகும். இதன்மூலமாக இறைவன் குறித்த முடிவான கூற்றை யோவான் விவிலியக்கண்ணோட்டத்தில் மொழிகிறார்; பெரும்பாலும் கடினமானதும் துன்பங்கள் நிறைந்ததுமான விவிலிய நம்பிக்கையின் இழைகள் இவ்வார்த்தையில்தான் அவற்றின் உச்சத்தையும் ஒத்திசைவையும் காண்கின்றன. லோகோஸ் முதலில் இருந்தது; அதுவே இறைவனாகவும் இருந்தது என்று சொல்கிறார் அந்த நற்செய்தி பரப்பாளர். விவிலிய செய்தியும் கிரேக்க சிந்தனையும் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் இந்நிகழ்வு யதேச்சையாக நேர்ந்த ஒன்றல்ல. புனிதனார் பவுல், ஆசியா போகும் சாலைகள் தடைபட்டிருப்பதாக மற்றும் மாசடோனியன் ஒருவன் தன்னிடத்தில் “மாசடோனியா வந்து எங்களுக்கு உதவுங்கள்” (cf. Acts 16:6-10) என்று மன்றாடுவதாகக் கனவில் ஒரு தரிசனத்தைக் காண்கிறார்: இந்தத் தரிசனத்தை விவிலிய நம்பிக்கைக்கும் கிரேக்க தத்துவ விசாரணைக்குமிடையிலான உடன்பாட்டின் உள்ளுறைத் தேவையின் “சாரமாக”க் காணலாம்.
உண்மையில் இந்த உடன்படுதல் சில காலமாகவே நிகழ்ந்து கொண்டிருந்ததுதான். பெயர்கள் பல கொண்ட தெய்வீகங்கள் பலவற்றினின்றும் தன்னை வேறுபடுத்தி, எரியும் புதரிலிருந்து “நான் நான்தான்” என அறிவித்து வெளியாகும் கடவுளின் புதிரான பெயரானது வாய்வழிக்கதையாடல்களுக்கு ஒரு சவாலாகிறது. வாய்வழிக்கதையாடல்களை மீறவும் தோற்கடிக்கவும் சாக்ரடீஸ் செய்த முயற்சிக்கு இணையாக இது உள்ளது. பழைய ஏற்பாட்டில், எரியும் புதரில் தொடங்கிய இந்த மாற்றம், தனது நாட்டையும் வழிபாட்டையும் இழந்த இஸ்ரேலியர்களின் இறைவனானவர் எரியும் புதரில் “நான் நான்தான்” எனக் கூறும் வார்த்தைகளை எதிரொலிக்கும் எளிய விதியின் வாயிலாக சொர்ககத்திற்கும் மண்ணுலகத்திற்குமான இறைவனாக அறிவிக்கப்படுவதில் ஒரு புதிய முதிர்ச்சி நிலையை அடைகிறது. இறைவன் குறித்த இப்புதிய புரிதலானது ஒருவகையான விழிப்புணர்வாக, மனிதக்கரங்களால் ஆக்கப்பட்ட கடவுளர்களைக் கேலியாக்கும் சொல்லாடல்மூலம் கடுமையாக வெளிப்படுகிறது (cf. Ps 115). இப்படியாக, விவிலிய நம்பிக்கையானது, அந்நம்பிக்கைகளை கிரேக்க சிலைவழிபாட்டாளர்களின் பழக்கவழக்கங்களுக்குள் உடன்படுத்த முயன்ற ஹெலினிய ஆட்சியாளர்களுடன் கசப்பான முரண்பாடுகளைக்கண்டது, எனினும், ஹெலினிய காலத்தில் அது கிரேக்கத்தின் மிக நல்ல சிந்தனைகளைத்தனது அடித்தளத்தில் எதிர்கொள்ளவும் செய்தது. இது விளைவித்த பரஸ்பர செழுமையானது பிற்கால விவேக இலக்கியங்களில் வெளிப்படையாகவே தெரிகிறது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாக அலெக்ஸாண்டிரியாவில் உருவான செப்டாஜின்ட், ஹீப்ரூ எழுத்துகளின் எளிய மொழிபெயர்ப்பாக மட்டும் (அவ்வகையில் முழுத்திருப்திகரமானதாகவும்கூட) இருக்கவில்லை என்பதை இன்று நாம் அறிவோம். அது சார்பற்றதொரு எழுத்து சாட்சியாகவும், மறைபொருள் வெளிக்காட்டலின் வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்த முக்கியப் படிக்கல்லாகவும் விளங்கி, இச்சந்திப்பின் மூலம் கிறித்துவத்தின் பிறப்பிற்கும், பரவலிற்கும் குறிப்பிடத்தக்க காரணமாகிறது. மதத்திற்கும், உண்மையான தரிசனத்திற்கும் இடையான எதிர்காணலாக, இறைநம்பிக்கைக்கும் காரண அறிவுக்கும் இடையே ஆழமானதொரு எதிர்காணல் இங்கு நிகழ்கிறது. ஒரே நேரத்தில், கிறித்துவ நம்பிக்கை மற்றும் இறை நம்பிகையில் இணைந்த கிரேக்க சிந்தனை ஆகியவற்றின் மையங்களில் இருந்து கொண்டு இரண்டாம் மானுவல் அரசன், ‘லோகோஸுடன் செயல்படாதது இறைவனின் இயற்கைக்கு மாறானது’ என்று சொல்ல முடிகிறது.
நேர்மையாகச் சொல்வதென்றால், மத்திய காலத்தின் பிற்பகுதியிலேயே கிரேக்க, கிறித்துவ ஆன்மீகங்களின் ஒருங்கிணைப்பை உடைக்கும் போக்குகளையும் நாம் காணலாம் என்பதை அவதானிக்க வேண்டும். அகஸ்டின் மற்றும் தாமஸ் அவர்களின் சிந்தனாவாதமாக சொல்லப்படுவதற்கு மாறாக, டன்ஸ் ஸ்கோட்டஸுடன் சேர்ந்து ஒரு விருப்பமுதன்மைவாதம் தோன்றியது. பின்னர் வளர்ச்சியடைந்த நிலையில் அதுவே ‘நாம் கடவுளின் விருப்பத்துக்குட்பட்ட உண்மைகளை மட்டுமே (voluntas ordinata) அறிய முடியும்” என்ற வாதத்திற்கும் இட்டுச்சென்றது. இதனைத்தாண்டிய நிலை இறைவனின் தளைகளற்ற சுதந்திரப்பிரதேசத்தில் உள்ளதனால், அவன் செய்த ஒவ்வொரு செயலுக்கும் எதிரான செயலையும் கூட அவன் செய்திருக்கக்கூடும்தான். இந்த அணுகுமுறை தெளிவாய் இபுன் ஹசிமின் அணுகுமுறைக்கு இணக்கமாக வருவது மட்டுமன்றி, உண்மைக்கும் நன்மைக்கும் அடங்காத தன் மனம் போல் இயங்கும் ஒரு தத்தாரிக்கடவுள் என்ற பிம்பத்துக்கு நம்மை இட்டுச்சென்று விடலாம். அதாவது, இறைவனின் ஆழ்நிலை சாத்தியங்களெல்லாம் நமக்கு எட்டாதவையாகவும், அவனது தீர்மானங்களின் பின்னே மறை பொருளாகவுமே உள்ளனவாதலால் நாம் உண்மை என்றும் நன்மை என்றும் எவற்றை எண்ணுகிறோமோ அவை கடவுளின் நம்பத்தக்க பிரதிபலிப்பாக இல்லை என்னும் அளவுக்கு இறைவனின் எல்லாம் கடந்த தன்மையும், வேற்றுத்தன்மையும் உயர்த்தப்படுகின்றன. இதற்கு மாறாக, சர்ச் அமைப்பின் நம்பிக்கையானது இறைவனுக்கும் நமக்கும் இடையில்- அவனது முடிவற்ற சிருஷ்டிக்கவல்ல ஆன்மாவிற்கும், நாம் சிருஷ்டித்த காரண அறிவிற்கும் இடையில் -ஒரு ஒப்புவமை உள்ளது என்பதை வலியுறுத்தி வந்துள்ளது. 1215-இல் நான்காவது லேட்டரன் கவுன்சில் கூறியதுபோல், இதில் வேற்றுத்தன்மையானது ஒற்றுத்தன்மையை விட கரைகாணா அளவு அதிகமாய் இருப்பினும், அது இவ்வொப்புவமையை ஒழிக்கும் அளவுக்கு இல்லை. வெறும் முனைமழுங்கிய விருப்பமுதன்மைவாதத்தின் அடிப்படையில் இறைவனை நாம் நம்மிடமிருந்து அன்னியமாக்கித் தள்ளுவதனால் இறைவன் அதிக தெய்வீகத்தன்மையை அடைவது இல்லை. மாறாக, லோகோஸாக தன்னை வெளிப்படுத்தி அந்த லோகோஸாக நம் சார்பில் தொடர்ந்து அன்புடன் செயலாற்றிக் கொண்டு வரும் இறைவனே உண்மையில் தெய்வத்தன்மையுடைய இறைவனாவான். புனித பவுல் கூறியபடி, அன்பு நிச்சயமாக அறிவைக் “கடந்தது”; மேலும் அவ்வாறு கடப்பதன்மூலம், வெறும் எண்ணத்தை விடவும் அதிகமானவற்றை உணர்ந்தறியவல்லது.(cf. Eph 3:19); இருப்பினும் லோகோஸான கடவுளின் அன்பாகவே அது தொடர்கிறது. இதன் காரணமாக, கிறித்துவ வழிபாடானது அனந்தமான வார்த்தையுடனும் நமது காரண அறிவுடனும் பவுல் கூறியபடியாக-“λογικη λατρεία”- ஒத்திசைந்த வழிபாடாகும். (cf. Rom 12:1).
விவிலிய நம்பிக்கைக்கும் கிரேக்கத்தத்துவத்திற்குமான இந்த அகவய உடன்பாடு மதங்களின் வரலாற்றில் மட்டுமன்றி உலக வரலாற்றிலேயே அறுதியானதொரு முக்கிய நிகழ்வாகும்- இன்றும்கூட இந்நிகழ்வு நமக்குத் தொடர்புடையதாகவே உள்ளது. இந்த ஒன்றிணைதலைக்காண்கையில், கிறித்துவம் அதன் தொடக்கத்தையும் சில குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளையும் கிழக்கில் பெற்றிருப்பினும், அது தன் வரலாற்றின் அறுதிப்பாத்திரத்தை இறுதியில் அடைந்தது ஐரோப்பாவில்தான் என்பதில் வியப்படைய ஒன்றும் இல்லை. இதனை மற்றொருவிதமாகவும் காணலாம்: இந்தக் குவிதலானது பிற்பாடு சேர்ந்த ரோமப் பண்பாட்டையும் இணைத்து ஐரோப்பாவை உருவாக்கி, இன்று ஐரோப்பா என சரியாக எதைச் சொல்ல முடியுமோ அதன் அடித்தளமாகவும் உள்ளது.
தர்க்கரீதியாக சுத்திகரிக்கப்பட்ட கிரேக்க பண்பாடனது கிறித்துவ நம்பிக்கையின் பிரிக்கமுடியாத கூறாகும் என்ற கருத்து கிரேக்கத்தாக்க நீக்கம் என்ற அறைகூவல் வாயிலாக எதிர்க்கப்படுகிறது. இந்த அறைகூவலே நவீன காலத்துவக்கம் முதல் மதரீதியான உரையாடல்களை மென்மேலும் ஆக்கிரமித்து இருக்கிறது. உற்றுப்பார்த்தால், கிரேக்கத்தாக்க நீக்கம் என்ற நிகழ்வில் மூன்று நிலைகளைக் காணலாம்; இம்மூன்று நிலைகளும் ஒன்றுடனொன்று பிணைந்திருப்பினும், ஒவ்வொரு நிலையின் நோக்கம், குறிக்கோள் என்ற அளவில் அவை தெளிவாக தனித்தன்மையுடனேயே உள்ளன.
கிரேக்கத்தாக்க நீக்கம் என்பது 16-ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தக் கருத்துக்களுடன் தொடர்புடையதாக முதலில் வெளிப்படுகிறது. இறையியற்கல்வியின் பாரம்பரியத்தைப் பார்க்கையில், முழுதாகத் தத்துவத்தாலே கடினப்படுத்தப்பட்ட மத நம்பிக்கையை எதிர்கொள்வதாகவே- அதாவது வேற்று சிந்தனைகளின் அடிப்படையில் உருவான மத நம்பிக்கையை எடுத்துரைப்பதாக- சீர்திருத்தவாதிகள் நினைத்தனர். இதன் விளைவாக இறை நம்பிக்கையென்பது வரலாற்றுரீதியாக வாழும் வார்த்தையாக அன்றி, பொதுமையான ஒரு தத்துவார்த்தத்தின் ஒரு கூறாகக் காணப்பட்டது. மறு புறம், ஒரே இறைவாக்கு என்ற கோட்பாடோ, இறை நம்பிக்கையென்பதை விவிலிய வாக்கினில் உள்ளபடி, பரிசுத்த ஆதிவடிவமாகக் கண்டது. இறைநம்பிக்கையையை அது மீண்டும் முழுமையாகும் பொருட்டு, வேறோர் அடிப்படையிலிருந்து தோன்றிய இருப்பு குறித்த இயற்பியலில் இருந்து விடுவிக்க வேண்டியிருந்தது.கான்ட் இறைநம்பிக்கைக்கு இடம் கொடுக்க வேண்டுமெனில், சிந்திப்பதை ஒதுக்கி வைக்க வேண்டியிருப்பதாய்க் குறிப்பிட்டபோது, சீர்திருத்தவாதிகள் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு தீவிரத்துடன் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச்சென்றார். இவ்வாறாக இறை நம்பிக்கையை நடைமுறை காரண அறிவிற்குள் மட்டுமே ஆழப்பதித்ததன்மூலம், முழுமையான உண்மையின் அணுக்கத்தை அதற்கு மறுதலித்தார்.
19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் தாராளமயாமாக்கப்பட்ட ஆன்மீகவாதமானது அடால்ஃப் வான் ஹார்நக்கினை அதன் தனிப்பெரும் பிரதிநிதியாக்கி, கிரேக்கத்தாக்க நீக்கத்தின் இரண்டாம் நிலையைக் கொண்டுவந்தது. நான் மாணவனாயிருந்தபோதும், மற்றும் ஆசிரியனாக எனது ஆரம்ப கால வருடங்களிலும் இத்திட்டமானது கத்தோலிக்க ஆன்மீகவாதத்திலும் பெரும் தாக்கம் கொண்டிருந்தது. பாஸ்கல், தத்துவவாதிகளின் இறைவன் மற்றும் ஆபிரஹாம், ஐசக், யாக்கோப் ஆகியோரின் இறைவன் என பிரித்தது, இதன் விலகிப்பிரியும் புள்ளியாக இருந்தது. பான் நகரில் 1959-இல் எனது துவக்க உரையில் நான் இப்பிரச்சனை குறித்துப் பேச முயன்றேன். அந்த நிகழ்ச்சியில் நான் சொன்னதை இங்கு மீண்டும் கூறும் எண்ணம் எனக்கு இல்லை. ஆயினும், சுருக்கமாக, கிரேக்கத் தாக்க நீக்கத்தின் இந்த இரண்டாம் நிலையில் புதியதானவற்றை மட்டுமாவது குறைந்த பட்சம் விளக்க விழைகிறேன். ஹர்னாக்கின் மையக்கருத்து, ஆன்மீகவாதத்திரட்சிகளுக்கும் கிரேக்கத்தாக்கத்திற்கும் கீழுள்ள ஏசு என்ற மனிதரிடத்தும் அவரது எளிய செய்திக்கும் திரும்புவதே ஆகும்: இந்த எளிய செய்தியே மனிதகுல மத வளர்ச்சியின் உச்சகட்டமாகக் காணப்பட்டது. ஏசு நன்னடத்தையை முதன்மையாக்கி வழிபாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தவராகக் கூறப்பட்டு, இறுதியில், மனிதாபிமான நல்லொழுக்கச் செய்தியின் தந்தையாக முன்னிறுத்தப்பட்டார். அடிப்படையில், ஹர்னாக்கின் குறிக்கோள், கிறித்துவத்தை நவீன காரண அறிவுடன் ஒத்திசைவுக்குக் கொண்டு வந்து, அதை கிறித்துவின் தெய்வீகம் மற்றும் மூவொருமை போன்ற ஆன்மீக தத்துவங்களாகத் தென்படும் அம்சங்களிலிருந்து விடுவிப்பதாகவே இருந்தது. இந்த வகையில், அவரது பார்வையில், வரலாறு-ஆராய்ச்சி என்ற அளவில் புதிய ஏற்பாட்டின் விளக்கமானது கல்விக்கூடங்களில் ஆன்மீகவியலிற்கான இடத்தை மீட்டுத்தந்தது. ஹர்னாக்கைப் பொறுத்தவரை ஆன்மீகவியலென்பது அடிப்படையில் வரலாற்றுத் தொடர்புடையது, எனவே கண்டிப்பாக அறிவியல் பார்வைக்குட்பட்டது. ஏசுவைப்பற்றி அது ஆராய்ச்சிபூர்வமாகக் கூறுவதை, நடைமுறைக் காரண அறிவின் வெளிப்பாடாகவே கருதி, அதன் மூலம் கல்விக்கூடத்தில் அது தனக்கான சரியான இடத்தைப் பெறவும் முடியும். இந்த சிந்தனைக்குப்பின்னால்தான், கான்ட்டின் “விமர்சனங்க”ளில் செம்மையாகச் சொல்லப்படுவதும், இடையில் இயற்கை அறிவியலினால் தீவிரமாக்கப்பட்டதுமான நவீன காரண அறிவின் குறைபாடு உள்ளது. காரண அறிவின் இந்த புதிய கருத்தாக்கம், சுருக்கமாகச் சொல்லப்போனால், தொழில் நுட்பத்தின் வெற்றியால் உறுதி செய்யப்பட்ட பிளேட்டோனிஸம் (கார்ட்டேசியனிஸம்) மற்றும் அனுபவ அறிவியல் இவற்றின் கூட்டேயாகும். ஒரு விதத்தில், அது பருப்பொருட்களின் கணிதக்கட்டமைப்பு, அவற்றின் உள்ளுறை காரணவியல், ஆகியவற்றை முன்கூட்டியே உண்மையென்று கொள்வதனால், பருப்பொருட்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை நன்றாக உபயோகப்படுத்த வழிவகுக்கிறது. வேறு விதத்திலோ நம் நோக்கங்களுக்குக்காக உபயோகப்படுத்தக் கூடியதாயுள்ள இயற்கையைப் பொறுத்தவரை, சோதனைகள் மூலம் சரிபார்த்தலோ, தவறென நிரூபித்தலோ மட்டுமே இறுதி முடிவைத்தரும். இவ்விரு துருவங்களுக்கிடையேயான அழுத்தம் சந்தர்ப்பத்தைப்பொறுத்து, ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு நகரக்கூடும். வலுவான புலனறிவியற் சிந்தனையாளரான ஜெ. மொனாட் தன்னை பிளேட்டோனிசம்/ கார்ட்டேசியன் சிந்தனையில் உறுதி கொண்டவராகவே தன்னை அறிவிக்கிறார்.
நாம் எழுப்பிய கேள்விகளுக்கான இரு முக்கிய கொள்கைகளை இது முன்னெழுப்புகிறது. முதலாவது, கணித மற்றும் அனுபவ அம்சங்களின் கூட்டினில் விளையும் உறுதிமட்டுமே அறிவியல்பூர்வமானதாயிருக்க முடியும். அறிவியல் என்று நாம் எதைச்சொன்னாலும் அது இந்தத்தகுதியின் மூலமே கணிக்கப்பட வேண்டும். எனவே வரலாறு, உளவியல், சமூகவியல், தத்துவவியல் என்பவையான மனித அறிவியல் துறைகள் அனைத்தும் இந்த அறிவியற் தகுதியென்ற கட்டளையின்படி தம்மை மாற்றிக்கொள்ள முயல்கின்றன. இரண்டாவதும் நமது எண்ணப்பிரதிபலிப்புகளுக்கு முக்கியமானதுமான விஷயம் என்னவென்றால், இந்தத் தகுதிமுறை அதன் இயல்பாகவே, இறைவன் பற்றிய கேள்வியையே அறிவியல்பூர்வமற்றது அல்லது அறிவியலுக்கு முற்பட்டது என்று காட்டி விலக்கி விடுகிறது. இதன் விளைவாய்க் காணும் அறிவியல், காரண அறிவு என்ற இரண்டின் வட்டமும் சுருங்கிவிடுவது என்பது கேள்விக்குட்படுத்தவேண்டிய ஒன்றாகும்.
இந்தப் பிரச்சனைக்கு பின்னால் வருகிறேன். இடையில் அவதானிக்க வேண்டியது என்னவென்றால், இந்தப்பார்வையில், ஆன்மீகவியல் “அறிவியல்பூர்வமானது” எனச் சொல்லவரும் அனைத்து முயற்சிகளும் கிறித்துவத்தை அதன் முந்தைய நிலையின் சிறியதொரு பகுதிக்குள் குறைப்பதிலேயே முடியும். ஆனால் இன்னமும் சொல்ல வேண்டும்: முழுமையான அறிவியல் என்பது இது, இது மட்டுமேதான் என்றால், மனிதனே குறைபட்டுப்போவதிலேயே அது முடியும். ஏனெனில், மதமும், நன்னடத்தையியலும் எழுப்பும் , குறிப்பாக மனிதத்துடனே தொடர்புடைய கேள்விகளான நமது தொடக்கம், முடிவு பற்றிய கேள்விகளுக்கு “அறிவியல்” என்று வரையறுக்கப்பட்ட மொத்த காரண அறிவும் இடம் தராமல் போவதனால் தனிமனிதத்தொடர்புடையது என்ற இடத்திற்கு அவை தள்ளப்படுகின்றன. பிறகு மத விஷயங்களில் தனிமனிதன் தனது அனுபவங்களை வைத்து எது ஒத்துக்கொள்ளக்கூடியது என தீர்மானிக்கிறான், மேலும் தனி மனித “மனசாட்சி”யே நல்லொழுக்கம் எது என்பதை நிர்ணயிக்கும் ஒரே சக்தியாய் ஆகின்றது. ஆனால் இவ்வழியில் நல்லொழுக்கம், மதம் ஆகியவை சமூகத்தை உருவாக்கும் ஆற்றலை இழந்து முற்றிலும் தனிமனித சம்பந்தப்பட்ட விஷயமாகி விடுகின்றது. இது மனிதகுலத்திற்கு ஒரு ஆபத்தான நிலையாகும். இதனையே மதம், காரண அறிவு ஆகியவை மனக்கிலேசம் தரும் வகையில் பாதைவிலகி சீர்கெட்டதில் நாம் காண்கிறோம். இது, மதம் மற்றும் நல்லொழுக்கம் ஆகியவை பற்றிய கவலையற்றதாகக் காரண அறிவு குறுக்கப்படுவதால் வேறுவழியின்றி பீறிட்டு வெளியாவதேயாகும். பரிணாம விதிகளிலிருந்தோ, உளவியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றில் இருந்தோ அமைக்கப்படும் நல்லொழுக்கம் என்பது வெறும் குறைபட்ட ஒன்றாகவே முடிகிறது.
இவையெல்லாம் எதை நோக்கி இட்டுச்செல்கின்றன என்ற முடிவுக்கு வரும் முன், இப்போது நிகழ்ந்து கொண்டுள்ள கிரேக்கத்தாக்கநீக்கத்தின் மூன்றாவது நிலையினை நான் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டும். கலாசாரப்பன்மை என்பதில் நமது அனுபவத்தைக்கொண்டு, ஆரம்ப சர்ச் அமைப்பு கிரேக்கத்தாக்கத்துடன் நிகழ்த்திய ஒருங்கிணைப்பு தொடக்கநிலை கலாசாரமயமாக்கல் என்றும் அது பிற கலாசாரங்களுக்குப் பொருந்த வேண்டியதில்லை என்றும் அடிக்கடி இப்போதெல்லாம் சொல்லப்படுகிறது. கலாசாரமயமாக்கலுக்கு முந்தைய புதிய ஏற்பாட்டின் எளிய செய்திக்குத்திரும்ப பிற கலாசாரத்தார்களுக்கு உரிமை உண்டெனவும், அவ்ர்களது குறிப்பிட்ட கலாசாரப்பின்னணியில் புதியதாய் இச்செய்தியை உட்படுத்த இது அவசியம் என்றும் கூறப்படுகிறது. இந்த கருத்தாக்கம் பொய்யானது என்பது மட்டுமல்ல, முரட்டுத்தனமானதும் தெளிவற்றதும் ஆகும். புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. அது, பழைய ஏற்பாட்டின் வளர்ச்சியின் முதிர்ச்சியைத் தன்னுள் கொண்ட கிரேக்க ஆன்மாவின் பதிவுகளைத் தாங்கியுள்ளது. ஆரம்ப கால சர்ச்சின் பரிணாம வளர்ச்சியில் உள்ள அம்சங்களை எல்லா கலாசாரங்களும் உள்வாங்கவேண்டியதில்லை என்பது உண்மையாயிருப்பினும், இறைநம்பிக்கைக்கும் காரண அறிவின் பயன்பாட்டிற்கும் இடையேயான உறவு குறித்து எடுக்கப்பட்ட அடிப்படை முடிவுகள் இறைநம்பிக்கையின்பாற்பட்டவை; இறைநம்பிக்கையின் இயல்புடன் ஒத்திசைபவை.
இப்போது நான் என் முடிவுக்கு வருகிறேன். நவீன காரண அறிவு குறித்து, உள்ளிருந்து நான் செய்யும் மிகப் பொதுவான இந்த விமர்சன முயற்சியானது, விழிப்புணர்வு காலத்திற்கு முந்தைய காலத்திற்குத்திரும்புவதாகவோ நவீன கால அறிவுப்பார்வைகளை உதறித்தள்ளுவதாகவோ ஆகாது. நவீனத்தின் நற்கூறுகள் தடையின்றி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்: வியக்கத்தகும் சாத்தியங்களை மனிதகுலத்திற்குத் திறந்து விட்டதற்காகவும், மனித குலம் பெற்ற முன்னேற்றத்திற்காகவும் நவீனத்திற்கு நாம் நன்றியுடையவர்களாவோம். மேலும் மேதகு ரெக்டர் அவர்கள் கூறியபடி, அறிவியலின் விருப்பம் என்பது உண்மைக்கு அடிபணிவதே. அந்த வகையில், அது கிறித்துவ ஞானத்தின் அடிப்படையில் எழுந்த முக்கிய முடிவுகளுக்குள் அடங்கும் நிலையையே கொண்டுள்ளது. குறைத்துச்சொல்வதோ எதிர்மறை விமர்சனமோ அல்ல, காரண அறிவு என்ற கருத்தினையும் அதன் உபயோகத்தையும் விஸ்தரித்தலே இங்கு நோக்கமாகும். மனிதத்திற்குக்கிட்டிய புதிய சாத்தியங்களைப்போற்றும் அதே வேளையில் இந்த சாத்தியங்களிலிருந்தே உருவாகும் ஆபத்துகளையும் நாம் காண்கிறோம். இந்த ஆபத்துகளை எப்படி வெல்வது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். காரண அறிவும் இறைநம்பிக்கையும் புதியதொரு வழியில் ஒன்று சேர்ந்தால் மட்டுமே, காரண அறிவு பரிசோதனை அவதானிப்புகளால் சரிபார்க்கப்படவேண்டும் என நமக்கு நாமே விதித்துக் கொண்ட எல்லையை மீறினால் மட்டுமே, அதன் மாபெரும் எல்லைகளை மீண்டுமொருமுறை திறந்தால் மட்டுமே, நாம் இதில் வெற்றியடைவோம். இப்பார்வையில், வெறும் வரலாற்றுத்துறையாக இல்லாமல், காரணவியலோடுகூடிய இறைநம்பிக்கையை ஆராயும் ஆன்மீகவியல் என்ற துல்லியமான துறை என்ற வகையில், ஆன்மீகவியல் உள்ளபடியே கல்விக்கூடத்தோடும், பலதரப்பட்ட அறிவியல் உரையாடல்களோடும் சேர்ந்ததுதான்.
இன்று கலாசாரம் மற்றும் மதங்களுக்கிடையே உடனடியாகத் தேவைப்படும் உண்மையான உரையாடலை இவ்வகையால் மட்டுமே நம்மால் சாதிக்க இயலும். பரிசோதனை அவதானிப்புகளாலான காரண அறிவு மற்றும் அதன் அடிப்படையிலான தத்துவம்- இவை மட்டுமே சாஸ்வத உண்மையென பரவலாக மேற்கத்திய உலகம் கொள்கிறது. ஆனால் சாஸ்வதமான காரண அறிவிலிருந்து தெய்வீகம் விலக்கப்படுவதை, உலகின் ஆழமான மதக் கலாசாரங்கள் அவற்றின் ஆழ்ந்த நம்பிக்கைகளின்மேல் நடத்தப்படும் தாக்குதலாகவே காண்கின்றன. அதே நேரத்தில், நான் காட்ட முயன்றபடி, நவீன அறிவியல் காரண அறிவு, அதன் உள்ளுறை பிளேட்டோனிய அம்சத்தால், காரண அறிவினை மீறுவதாகவும், அதன் முறைமையின் சாத்தியங்களைக்கடந்ததாகக் காட்டும் ஒரு கேள்வியையும் உள்ளடக்கியிருக்கிறது. நவீன காரண அறிவானது, பருப்பொருளின் காரணீய அமைப்பையும் மற்றும் நமது ஆன்மாவிற்கும் இயற்கையின் காரணீய அமைப்பிற்கும் உள்ள தொடர்பையும் ஒத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் (ஆய்வு) முறைமைகளை அமைத்தே ஆக வேண்டும். ஆனாலும், எதனால் இது இவ்வாறு இருக்க வேண்டும் என்ற கேள்வியும் கேட்கப்படவேண்டிய கேள்விதான். இயற்கை அறிவியல் இக்கேள்வியைப் பிற நிலைகளுக்கும், இறையியல், தத்துவவியல் போன்ற பிற தத்துவத் தளங்களுக்கும் ஒதுக்க வேண்டும். மனிதகுல மதப் பண்பாடுகளின் மாபெரும் அனுபவங்கள் மற்றும் அகழ்வுப்பார்வை ஆகியவற்றுக்கும், குறிப்பாக கிறித்துவ நம்பிக்கைக்கும் செவிமடுப்பது அறிவிற்கு ஆதாரமாகும். அதை உதாசீனப்படுத்துவது என்பது நமது செவிமடுத்தல் மற்றும் வினையாற்றல் ஆகியவற்றின்மீது வைக்கப்படும் ஏற்கவியலாததொரு கட்டுப்பாடாகும். இங்கு சாக்ரடீஸ் ஃபீடோவிடம் சொன்னதொன்று நினைவுக்கு வருகிறது. அவர்களுக்கிடயே நடந்த முந்தைய உரையாடல்களில் பல தவறான தத்துவக் கருத்துகள் எழுப்பப்பட்டது கண்டு, சாக்ரடீஸ் சொல்கிறார்: “இந்தத் தவறான கருத்துகள் கண்டு யாராவது எரிச்சலுற்று தனது ஏனைய வாழ்நாள் முழுவதும் இருத்தல் குறித்த பேச்சிலேயே வெறுப்புற்று அதனை எள்ளத்தலைப்படுவாரானால், அது புரிந்து கொள்ளக்கூடியதுதான்; என்றாலும், அவர் இருத்தலின் உண்மையை அறியாது அதனால் மிகப்பெரும் இழப்புக்கும் உள்ளாவார்”. மேற்குலகம் காரணீயத்தை கேள்விக்குள்ளாக்குவதன் மேலுள்ள இவ்வகை வெறுப்பால் நீண்ட காலமாகவே ஆபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதனால் அதற்கு மிகுந்த துன்பமே விளையும். காரண அறிவின் மகோன்னதத்தை மறுதலிக்காமல், அதன் அனைத்து விரிந்துபட்ட தளங்களையும் எதிர்கொள்ளுதல்- இந்தத்திட்டத்தோடுதான் விவிலிய நம்பிக்கையில் உறுதி கொண்ட இறையியலானது இன்றைய விவாதங்களுக்குள் நுழைகிறது. இரண்டாம் மானுவல் கடவுள் குறித்த அவரது கிறித்துவப்புரிதலின் அடிப்படையில், “காரண அறிவுடன் செயல்படாதது, லோகோஸுடன் செயல்படாதது, இறைவனின் இயல்புக்கு முரணானது” என்று பெர்சிய விவாதிக்கு பதிலுரைக்கிறார். கலாசார உரையாடலில், இந்த மாபெரும் லோகோஸுக்கு, இந்த விரிந்துபட்ட காரண அறிவிற்கு, நமது கூட்டாளிகளை நான் அழைக்கிறேன். இதனைத் தொடர்ந்து மீட்டெடுப்பதே கல்விக்கூடத்தின் மாபெரும் பணியாகும்.
—————
* வட்டிகன் வெளியிட்ட இறுதி உரை வடிவத்தில் இந்த இடத்தில், “நாம் ஒப்புக்கொள்ளாததொரு கடுமையுடன்” (“a brusqueness that we find unacceptable”) என்ற வார்த்தைகள் இணைக்கப்பட்டுள்ளன.
- கீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை!
- மகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா?
- உருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”
- சு.ரா.வுக்கு இறப்பே இல்லை! ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)
- போராளியின் பயணம்
- கடித இலக்கியம் – 26 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
- ‘கவிபாஸ்கரி”ன் தொட்டில் கனவு!
- பெண் மொழி ≠ ஆண் மொழி
- சம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை
- கீதாரிகள் உலகம்
- இதமிழிசைப் பாடல் -. தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே
- தோளைத் தொட்ட கைகள்
- நான் தான் நரகாசூரன் பேசறேன்….
- கணக்கு !
- இராஜேஸ்வரி- பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006
- தொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்
- அறிவிப்பு:
- நேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு:
- பேசும் செய்தி – 3
- சாமிச்சண்ட
- வணக்கம் துயரமே! அத்தியாயம் – 6
- பெண்/பெண்
- மடியில் நெருப்பு – 7
- இரவில் கனவில் வானவில் 6
- திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்…
- வடகொரியாவின் அணுஆயுதச் சோதனையும் கிழக்காசியாவின் ஆயுதப் பரவலும்.
- பிரச்சினைக்குள்ளான, போப்பின் சமீபத்திய உரையின் தமிழாக்கம
- “கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?”
- அப்சல் மரண தண்டனை – ஓர் அலசல்
- திரிசங்கு
- கயிற்றரவு
- தாஜ் கவிதைகள்
- நான் ?
- நன்றி. மீண்டும் வராதீர்கள்.
- பெரியபுராணம் – 107 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி