ஏ.ஓ.ஸ்காட்
‘தழுவல் (Adaptation) ‘ என்ற படத்தைப் பார்த்த ஒரு வாரத்துக்குள் இரண்டு முறை நடுராத்திரியில் திடுமென எழுந்து, இருதயம் படபடக்க, திரைப்படத்தில் நுண்ணிய வலைபோல் பின்னப்பட்ட கருத்துக்களை யோசித்துக் கொண்டிருந்தேன். நான் பார்க்கும் படங்களில் இந்த மாதிரியான ஒரு விளைவை என்னில் ஏற்படுத்தக்கூடிய படங்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்பதாலேயே நான் இந்த படத்தை சிபாரிசு செய்ய போதுமானது. ஆனால், என்னுடைய தூக்கமின்மை, பீதியுடன் இணைந்திருந்ததும், அந்தப் பீதி, ‘தழுவல் ‘படத்தின் ஹீரோவான திரைக்கதை ஆசிரியனான சார்லீ காஃப்மான், தன்னுடைய ‘ஆர்சிர்ட் தீஃப் (பூத்திருடன்) ‘ என்ற சூசன் ஆர்லென் எழுதிய கதையை தழுவி திரைக்கதை எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பரபரப்பான பீதிகொண்ட கவலையை ஒத்திருந்தது என்பதும் எனது பீதி அதிகமாவதற்குக் காரணம்.
காலை 3 மணிக்கு என்னுடைய மனப்பிராந்தி நேரத்தில், காஃப்மானின் எழுத ஆரம்பிக்கும்முன் இருக்கும் தடை ஒரு தொத்துவியாதியா என்று யோசித்தேன். இந்த திரைப்பட விமர்சனத்தை எழுதி முடிக்க வேண்டிய நேரம் நெருங்க நெருங்க, என்னை நானே காஃப்மானின் அமைதியற்ற நிலையில் பார்த்துக்கொண்டு, வேர்வை வழிய, கையில் இருக்கும் டேப் ரெக்கார்டரில் உளறிக்கொண்டிருப்பதையும், என்னுடைய பத்திரிக்கை ஆசிரியர்களிடம் ‘ நல்லா வருது… உண்மைதான்., சீக்கிரமே கொடுத்துடறேன்.. பிரச்னை இல்லை ‘ என்று சொல்வதையும் கற்பனை செய்துகொண்டிருந்தேன்.
ஒரு கற்பனை கதாபாத்திரத்திடமிருந்து ‘எழுத ஆரம்பிக்க இருக்கும் மனத்தடை ‘யை தொத்துவியாதியாகப் பெறுவது என்பது பைத்தியக்காரத்தனம்தான். ஆனால், புத்திசாலித்தனத்துடன் பிதற்றப்பட்டிருக்கும் ‘தழுவல் ‘ படத்தில் அது ஏறத்தாழ நடக்கக்கூடியதாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அந்தப் படத்தின் அடிப்படை கருத்தே, நிஜத்துக்கும் அந்த நிஜத்தின் பிம்பங்களுக்கும் இருக்கும் வித்தியாசமும் எல்லைக்கோடும் மிக மிக மெல்லியவை, இன்னும் சொல்லப்போனால் அந்த எல்லையே கற்பனைதான். சில தாவர இனங்களின் மீது இந்த கதாபாத்திரங்கள் வைக்கும் எல்லையற்ற பிரியமே தொத்து நோய் போல, பைத்தியக்கார வேகத்தில் பரவும் காட்டுப்பூக்களைப்போல இனப்பெருக்கம் செய்கின்றன என்பதும்.
பெயர் போடும்போது, சார்லி காஃப்மன் என்ற பெயரில் உண்மையிலேயே ஒருவர் இந்த படத்தின் திரைக்கதையை எழுத உதவி புரிந்திருக்கிறார். அதுவும், இந்தப்படம் ‘தழுவல் ‘ உண்மையிலேயே, ஜான் லாரோஷ் என்ற ஒரு திருட்டு தோட்டக்காரனைப்பற்றிய ‘ ‘The Orchid Thief ‘ பூத்திருடன் என்ற ஒரு கட்டுரையைத்தழுவி எடுக்கப்பட்டதாகத்தான் சொல்கிறது. லாரோஷ்-கும் மிஸ் ஆர்லீனுக்கும் இடையே நடக்கும் சந்திப்புகளில் புத்தகம் பேசும் டார்வினிய கொள்கை, புளோரிடாவின் சுற்றுச்சூழல், ஆர்சிட் பூ சேமிப்பு ஆகிய அனைத்தையும் பேசுகிறது. இவை எல்லாமும் திரைப்படத்திலும் உண்மையாக உருவாக்கப்பட்டுள்ளன. மிஸ் ஆர்லீன் அவர்கள் எழுதிய கட்டுரையின் நுண்ணிய விஷயங்களை தன்னுடைய திரைக்கதையில் சொல்லிவிட வேண்டும் என்று காஃப்மான் செய்யும் தோல்வியடையும் முயற்சிகளும், அதே கதையை அதே படத்தில் திரும்பச்சொல்லுவதும், இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி, ஒன்றின் மீது இன்னொன்று விழுந்து வெடிப்பதில் முடிகிறது. (பார்ப்பவனின் மூளையும் கூடவே வெடித்துவிடுகிறது)
ஆனால், இதுவெல்லாம் ஏகத்துக்கு நேரடியான விஷயம். ஆமாம், ‘தழுவல் ‘ வெளிப்படையாக, தன்னைப்பற்றியே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். தன்னைத்தானே அடிக்கடிக் குறிப்பிட்டுக்கொள்ளும், தன்னைத்தானே உடைத்துப் பார்க்கும் ஒரு சந்தோஷமான முயற்சி. ஆனால், இது, இன்னும் ஆழமான முறையில், தன்னுடைய இருத்தலின்மையைப் பற்றிய ஒரு திரைப்படம். கதை சொல்ல தீவிரமாக முயலும் ஒரு தேவைக்கும், சொல்ல முடியாமைக்குமான முரண்பாடுகளை எதிர்கொள்ளும் கதை. இது நீரோட்டம் போல கதையை எதிர்பார்க்கும் நம் மூளையை ஷார்ட்-சர்க்யூட் செய்து விடுகிறது. நடக்கக்கூடியதற்கும், நடப்பதற்கும் இடையேயான உண்மை நம்மை திருப்தி செய்கிறது. பொது அறிவுப் படி யோசித்தால் அப்படி ஒரு திரைப்படம் இருக்கவே முடியாது. அப்படி இருக்கமுடியுமாயின் எந்த புத்தி சுவாதீனத்தோடும் நம்மால் பார்க்க முடியுமாயின் அது அந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்.
‘ஜான் மால்கோவிச்- ஆக இருத்தல் ‘(Being John Malkovich) என்ற காஃப்மான், ஸ்பைக் ஜோன்ஸ் கூட்டுத்தயாரிப்பு அவர்களது முதல் படம். இரண்டாவதாக வரும் ‘அடாப்டேஷன் ‘ செய்திருக்கும் ரசவாதம், நம் மூளையை விளையாட்டுக்காட்டி, இத்தனை புதுமைக்கும் நடுவில் நம்மை உணர்ச்சிப்பூர்வமாகவும், இனிமையாகவும் கட்டிப்போடுகிறது. ‘தழுவல் ‘ஐப் போலவே இந்தப் படமும், படைப்பாளியின் பாதுகாப்பின்மையையும், தவறான இடத்தில் கொண்ட காதலையும், அடையாள எலிப்பொறிகளையும் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் தங்கள் தோல்களை உதறிவிடும் பொதுவான ஆசையால் இணைகிறார்கள். திரு. மால்கோவிச்சின் மூளைக்கு இவர்கள் கண்டுபிடிக்கும் பாதை மூலம் இவர்களது ஆசைகளை நிறைவேற்றுவது நகைச்சுவையான உண்மையாகிறது.
‘மால்கோவிச் ‘ விட்ட இடத்திலிருந்து ‘தழுவல் ‘ ஆரம்பிக்கிறது. முந்தையப் படத்தில் சார்லி காஃப்மன் புத்திசுவாதீனம் இழந்து மூலையில் கிடந்து புலம்புகிறார். மால்கோவிச் முந்தையப் படத்தில் தானேயாக வந்தார். (அதற்காக சிறந்த துணைநடிகர் விருது அவருக்கு நியூயார்க் விமர்சகர்கள் வட்டம் வழங்கியது) காஃப்மான் இடத்தை இந்தப்படத்தில் நடிப்பவர் நிக்கலஸ் கேஜ். இந்தப் படத்தின் இரண்டாவது திரைக்கதை எழுத்தாளரான, சார்லி காஃப்மானின் இரட்டைச் சகோதரரான டோனால்ட் காஃப்மானின் வேடத்தையும் அவரே நடிக்கிறார்.
கேஜ் அவர்களும், ஜோன்ஸ் அவர்கலும் (இரண்டா மூன்றா) சமீபத்திய திரைப்பட வரலாற்றிலேயே மிகவும் ஆச்சரியப்படத்தக்க தொழில்நுட்ப ஸ்டெண்டை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். கேஜ் இரண்டு கதாபாத்திரங்களாக நடிப்பதும், இரண்டும் படம் முடிவடையும் வரைக்கும் சிக்கலாகிக்கொண்டே போவதும், ஆனால் இருவரையும் வித்தியாசமின்றி ஒரே இடத்தில் ஜோன்ஸ் வைத்துப் பார்ப்பதும் வினோதம். ஒரே நடிகர் தன்னோடு போராடுவது போலக் கதாபாத்திரத்தை நடிப்பது என்பதும், சீராக ஒளி ஒலி அமைப்பும் இந்த ஆச்சரியத்ைதை அதிகப்படுத்துகின்றன.
டோனால்ட் காஃப்மன் உண்மையிலேயே இருக்கிறாரா என்பது இரண்டாம் பட்சம். அவரும் அவரது இரட்டைச் சகோதரரும், ஒவ்வொரு படைப்பாளியையும் இரண்டுதிசைகளில் இழுக்கும் உணர்வுகளுக்கு விவரணமாகி விடுகிறார்கள். சார்லி காஃப்மன் உண்மையைத் தேடுவதும், சொன்னதையே சொல்லுவதற்கு பயந்துகொண்டும் இருப்பதில், அவர் அவரது பெண் சினெகிதியான காரா செய்மோருடனும், தயாரிப்பாளருடனும் கொள்ளும் சங்கடமான உறவுகள் அவருக்கு ஒரு நிஜமான உணர்வாகி விடுகிறது. இப்படிப்பட்ட எந்த விஷயத்தாலும் பாதிக்கப்படாமல் சந்தோஷமாக இருக்கிறார் டோனால்ட்.
டொனால்ட் திரைப்படத்தொழிலின் சங்கேத மொழிகளை உபயோகப்படுத்துவதை சார்லி கிண்டலடித்தாலும் (இண்டஸ்ட்ரி என்று சொல்லாதே என்று கடுப்படிக்கிறார்), டொனால்ட் தானும் திரைக்கதை எழுதப்போவதாகச் சொல்கிறார். சகோதரர் ஆர்சிட் தீஃப் (பூத்திருடன்) கட்டுரையை எடுத்துக்கொண்டு தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும்போது, டோனால்ட் ஒரு தொடர்கொலைக்காரன் திரைக்கதையை எழுதி ( மாகி க்லிஎன்ஹால்-உடன் ஒரு கவர்ச்சியான காதல்கதையோடு) ஆறு இலக்கம் விற்பனைக்கு நிச்சயம் பண்ணிவிடுகிறார்.
திரைக்கதை எழுதச் சொல்லித்தரும் குருவான ராபர்ட் மெக்கீ அவர்கள் நடத்தும் செமினார்களிலும் கலந்துகொள்கிறார். (அமைப்பியல் ரீதியாக திரைக்கதையை எழுதச் சொல்லித்தருவதை வெறுக்கிறார் சார்லி). இறுதியில், வேறு வழியின்றி, சார்லி மெக்கீயைச் சந்திக்கிறார். அங்கு காது நிறைய அறிவுரைகள் ‘கடவுளுக்காக, தயவு செய்து டூஸ் எஸ் மெஷினாவை உபயோகப்படுத்தாதே ‘ தானும் அப்படித்தான் என்று நன்றாக உணர்ந்து கொண்டே மெக்கீ உறுமுகிறார்.
இதற்கிடையில், ப்ளோரிடா சேற்றுப்பரப்பில் இருக்கும் அபூர்வமான பூக்களை திருடியதற்காக கைது செய்யப்பட்ட லாரோஷ் மீது காதல் கொள்கிறார், சூசன் ஆர்லீன் (மெரில் ஸ்ட்ரீப்). ஆர்லீனின் புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட வித்தியாசமான பின்னணிகளோடும், வித்தியாசமான குணாம்சங்களோடும் இவர்கள் இருப்பது காட்டப்படுகிறது. கூப்பரின் நீளமுடியும், பற்களற்ற வாயும், கேஜின் சாத்தியமற்ற காந்தத்தன்மையுடன் வேறுபடுத்திக்காட்டப்படுகிறது.
முன்னும் பின்னும் காலத்தில் செல்லும் நிகழ்ச்சிகள் அங்கங்கு வெடித்து மணம் பரப்பும் மலர்கள் போல தோன்றுகின்றன. இவை அனைத்தையும் கணக்கிடுவது என்பது வீண் வேலை. ஆனால் இந்த விளைவு மன அழுத்தம் கொடுப்பதாகவும் சந்தோஷம் கொடுப்பதாகவும் ஒரே நேரத்தில் இருக்கிறது. (கொஞ்சம் கிறுக்கான தத்துவவியல் பேராசிரியர் நடத்தும் பாடத்தை எம்டிவியின் ரியல் வோர்ல்ட் போல எடிட்டிங் பண்ணி பார்ப்பது போல)
எல்லாம் முடிந்ததும், இவை எல்லாவற்றையும் மீண்டும் விவாதிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது (ஆனால் சொந்த மூளையுன் வசதியான பாதுகாப்பின் கீழ்தான்)
சிலர் இந்தப்படத்தின் முடிவு விரைவிலேயே வந்துவிட்டது என்று சொல்லலாம். ஆனால், இந்தப்படத்தின் முடிவின்மைதான் இந்தப்படத்தின் ஒருமைக்கு அத்தாட்சி.
ஆர்சிட் தீஃபின் ஒரு காட்சியில், மிஸ் ஆர்லீன் ஒரு பார்க் ரேஞ்சரை (டோனி) ஏன் சிலர் இந்தப் பூக்கள் மீது மோகம் கொள்கிறார்கள் என்று கேட்கிறாள். டோனியின் பதில், அமைதியாகவும், ஆழமான சிந்தனைக்குள்ளூம், குறிப்பிடத்தகுந்ததாகவும், சாத்தியமற்றதாகவும் இருக்கும் இந்தப்படத்தைப் பொருந்திச் செல்கிறது ‘ஓ… மர்மம்… அழகு… அறியமுடியாமை.. என்று நினைக்கிறேன்.. மேலும்,வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்பதுதான் உண்மையான காரணம் என்று நினைக்கிறேன்… அதாவது ஒரு வெளிப்படையான காரணம்.. காலையில் எழுகிறீர்கள்.. வேலைக்குப் போகிறீர்கள்.. உங்கள் வேலையைச் செய்கிறீர்கள்… எல்லோரும் தன் வாழ்க்கையில் வித்தியாசமான ஒன்று அவர்களை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளவேண்டும் என்றும் அதன் வழியே பொழுது போக்கவேண்டும் என்றும் தேடுகிறார்கள் என்று நினைக்கிறேன் ‘
சார்லி காஃப்மன் இதைவிட அழகாகச் சொல்லிவிடமுடியாது, ஆனால் அவரது சகோதரரான டோனால்ட் ஒருவேளை சொல்லலாம்.
***
ADAPTATION (தழுவல்)
இயக்கம் ஸ்பைக் ஜோன்ஸ், எழுதியது சார்லி காஃப்மன், டோனால்ட் காஃப்மன், ஆர்சிட் தீஃப் என்ற சூசன் ஆர்லீனின் புத்தகத்த்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஒளிப்பதிவு- லான்ஸ் அகோர்ட், எடிட்டிங்- எரிக் ஜம்புரூன், இசை- கார்டர் புர்வெல், தயாரிப்பு- எட்வர்ட் சாக்ஸன், வின்ஸெண்ட் லாண்டெ, ஜோனதன் டெம்மி, கொலம்பியா பிக்ஸர்ஸ், படம் ஆர் தரம் கொடுக்கப்பட்டது
***
- கண்ணிலென்ன கார்காலம் ?
- அறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)
- விண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)
- விடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)
- மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்
- ஊடறு – ஓர் பார்வை
- பித்தான ஆர்வம் பற்றிய பித்தான ஆர்வம் (ADAPTATION (தழுவல்) திரைப்பட விமர்சனம்)
- கட்டியம் – உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்
- ஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002
- நாற்காலி
- அனகொண்டா
- மீண்டு(ம்) வருவேன்…
- தேடல்…
- எல்லாம் உன் பார்வை
- சுமைகளும் சுகங்கள் ஆகும்
- ஓ-ஹிப்
- உறைந்த இரத்தங்கள்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)
- இரண்டு கவிதைகள்
- பின்னல் பையன்:இரண்டாம் பாகம்
- டெபோனேரும் ப்ளேபாயும்
- மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்
- ஜின்னாவும் இஸ்லாமும்
- வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1
- தமிழ் நாடு உருப்பட வேண்டுமா ? போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு!!!
- மலேசியாவின் இனப் பிரசினை
- Europe Movies Festival
- வினை
- கொடியது வறுமை..
- Lord Siva
- கட்டிய நெறி
- நினைத்துப் பார்க்கிறேன்
- அனைத்தும் ஒன்றே !
- அவிரோதம்
- இரண்டு ஹைக்கூக்கள்