நேச குமார்
சமீபத்தில் வெளியான SINS திரைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஏற்கெனவே வெளியாகி சர்ச்சைக்குள்ளான பாடம் ஒன்னு – ஒரு விலாபம் (Lesson one – A wail) திரைப்படம் மீரா ஜாஸ்மீனுக்கு சிறந்த நடிகை விருதை(தேசிய விருது) வாங்கித் தந்ததன் மூலம் சர்ச்சைகளை மீண்டும் நம்முன்னே கொணர்ந்துள்ளது. இவ்விரு படங்களும் கேரள கிறித்துவ, இஸ்லாமிய சமூகங்கள் சார்ந்த சூழலை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படங்கள். இரண்டிலுமே பெண்கள் எப்படி மதம் சார்ந்த நம்பிக்கைகள், வழக்குகள், நிறுவனங்களினால் பாதிக்கப் படுகின்றனர், எப்படி வன்முறையில் ஈடுபடுவோர்க்கு, மதம் சார்ந்த அமைப்புகளும், வழக்கங்களும் துணை நிற்கின்றன என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.
SINS( பாவங்கள் )
இப்படம் ஒரு பாதிரியார், அவரது வயதில் பாதி வயதேயான ஒரு இளம் பெண், அவர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் உறவு, அதைத் தொடர்ந்து ஏற்படும் வன்முறை ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இயக்குனர் வினோத் பாண்டே,கேரளாவில் தாம் பத்திரிகையில் படித்த ஒரு தீர்ப்பு இப்படத்தை எடுக்க தூண்டுகோலாக அமைந்தது என்கிறார்.ஆனால், படம் அதையும் தாண்டி, மேரிக்குட்டி கொலை வழக்கு, சிஸ்டர் அபயா கொலை, ஜாலி கொலை போன்ற பல சம்பவங்களையும், கேரளாவில் இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரனைகளையும் , வெளிவந்த திடுக்கிடும் தகவல்களையும் பிரதிபலிக்கிறது.
ஆரம்பக் காட்சிகள் என்னவோ ஒட்டவில்லை. இங்கிலிஷ் ஆகஸ்ட், மிஸ்டர் & மிஸஸ் அய்யர் போன்ற படங்களில் பார்த்த நாடகபாணி-செயற்கையான ஆங்கில வசன உச்சரிப்பு, ராகுல் போஸை காப்பியடிக்க முற்படும் ஷைனி அஹுஜாவின் செயற்கை நடிப்பு, சீமா ரஹ்மானியின் முதிர்கன்னித் தோற்றம் போன்றவை கொஞ்சம் உறுத்தலை ஏற்படுத்துகின்றன. ஆனால், போகப் போக சீமா ரஹ்மானியும், ஷைனி அஹுஜாவும் பாத்திரமாகவே மாறிவிடுகின்றனர். வலுவான திரைக்கதை, அற்புதமான காமிராவும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்து விடுகின்றன. கேரள ஆங்கில உச்சரிப்பை கடைசிவரை கேட்கமுடியவில்லை என்றாலும், முற்பகுதியின் செயற்கை ஆங்கில உச்சரிப்பும் பின்பு இயல்பு நடைக்கு மாறிவிடுகிறது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் சீமா ரஹ்மானி. ஆரம்பத்தில் வெகுளித்தனமாக பாதிரியார் வில்லியம்ஸுக்கு மீன்கறி சமைத்துக் கொண்டு வந்து தருவதாகட்டும், ஆசீர்வதிக்கும் பாதிரியார் நெற்றியில் முத்தமிடும்போது மெல்லிய சலனத்துக்குள்ளாவதாகட்டும், ஊருக்குத் தெரியாமல் காரோட்டக் கற்றுக் கொடுங்களேன் என்று அப்பாவியாய் பாதிரியாரிடம் கேட்பதாகட்டும், பின்பு வழுக்குவதும் இயல்பான வெகுளித்தனம் கலந்த காமுறும் பெண்மையை அழகுற கண் முன் கொண்டுவருகிறார்.
படத்தில் கதாநாயகனாய் வருபவரே வில்லனாய் பிற்பாதியில் மாறுகிறார். கதாநாயகனை விட, வில்லன் வேடத்தில் ஷைனி அஹுஜா பரிணமளிக்கின்றார். முதலில் தான் சபலப் பட்டு தவறும் போது, ஒட்டுத் தாடியுடன் ரயிலேறிப் போய் பாவ மன்னிப்பு கேட்பதாகட்டும், மேரிக்குட்டியின் சகோதரன் ஓடிவரும்போது குற்ற உணர்வுடன் கண்டு கொள்ளாமல் போவதாகட்டும், பிறகு மேரிக்குட்டியின் அபார்ஷனுக்கு ஏற்பாடு செய்து விட்டு மீண்டும் பாவமன்ன்னிப்பு கேட்பதாகட்டும் சற்றே ஒட்டும் ஒட்டாமலேயே இருக்கிறது அவரின் பாத்திரம். ஆனால், மேரிக்குட்டியின் நினைவையும், தான் அனுபவித்த உடற்சுகத்தை மறக்க முடியாமல் போய், சீமா ரஹ்மானியை அவரின் பள்ளிக்கே சென்று அழைத்து வந்து ஓட்டல் அறையில், ‘ (உனது அம்மாவுக்கு ஒன்றுமில்லை) நான் தான் நோயுற்றிருக்கிறேன் ‘ என்று கிடுகிடுத்துப் போய் கத்தும் போது, நம்மை சற்றே நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.
சமீபகாலத்தில் வந்த படங்களில் முத்தக் காட்சிகள், உடலுறவுக்காட்சிகள் எல்லாம் தயக்கமே இல்லாமல் காட்டினாலும், இதில் அஹுஜாவும், ரஹ்மானியும் ஆவேசமாக முத்தமிட்டுக் கொள்வது, ஆரம்பத்தில் காட்டப் படும் அறியும் துடிப்புடனான உடலுறவுக் காட்சிகளும், பின்பு காட்டப் படும் சோகம் கலந்த வல்லுறவுக் காட்சிகளும் அப்பட்டமான முறையில் படமாக்கப் பட்டிருந்தாலும், நிலவரத்தின் தீவிரத்தன்மையை உணர்த்த ஏதுவாகின்றன. இருப்பினும், படத்தில் காட்டப் படும் சீமா ரஹ்மானியின் நிர்வானக்காட்சிகள் பார்ப்பவர் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதை தவிர்க்க இயலவில்லை. எப்படி இம்மாதிரியான காட்சிகளையெல்லாம் சென்சார் அனுமதித்தது என்ற ஆச்சர்யம் எழுகிறது. சென்சார் போர்டு அப்பெல்லேட் ட்ரிபியூனல் வரை சென்று இக்காட்சிகளின் அத்தியாவசத்தை நிறுவி கிளியரன்ஸ் வாங்கியிருக்கிறார் வினோத் பாண்டே.
சர்ச் அதிகாரவர்க்கம், இப்படத்தை எதிர்ப்பது இந்த மாதிரி காட்சிகளால் தான் என்கிறார்கள். மார்பில் சிலுவை தொங்க புணர்தலில் ஈடுபடும் பாதிரியாரும், எப்போதும் சிலுவையை அணிந்து கொண்டிருக்கும் பாதிக்கப் பட்ட பெண்ணும், அப்பெண்ணின் சோரம் போதலில் அறிந்தும் அறியாதது போல் துணைபோகும் அவளின் சகோதரனும், தாயும், ஏற்கெனவே கிறித்துவர்களின் மீது வெறுப்பை உருவாக்கிவரும் இந்துத்துவ இயக்கங்களுக்கு துணை புரிந்து விடும் என்பது அவர்களின் வாதம். போராட்டங்கள் இப்படத்தை நிறுத்த முடியாமல் போகவே, மைனாரிட்டி கமிஷன், அரசியல் கட்சிகள் என்று அலைந்து பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு, நீதிமன்றம் இதில் தலையிட மறுத்துவிட்ட நிலையில் சர்ச் அதிகாரவர்க்கம் இப்படத்தைக் கண்டு கொதித்துப் போயிருக்கிறது. பாம்பே கத்தோலிக்க சபையும், படத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்ற கத்தோலிக்க செக்யூலர் ஃபாரமும் போராட்டங்களில் குதித்துள்ளன. கிறித்துவர்களின் உணர்வுகளை நீதிமன்றம் மதிக்கவில்லை என பாம்பே கத்தோலிக்க சபையின் தலைவரும், நீதிமன்றத்தின் முன் தடைகோரியவர்களுள் ஒருவருமான டோல்பி டிசவுசா தெரிவித்திருக்கிறார். வினோத் பாண்டேயின் கொடும்பாவியை இந்த அமைப்புகள் எரித்துள்ளன.
படமும் தன்பங்குக்கு நிறையவே திமிர்ந்து நிற்கிறது. முதல் காட்சியிலேயே, இது உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பட்டிருக்கும் படம் என்ற அறிவிப்பு வருகிறது. இந்திய நேயர்களை விதிர்விதிக்கச் செய்யும் காதற்காட்சிகள் இதற்கு தூபம் போடுகின்றன. துணிச்சலாக நடித்துள்ள சீமா ரஹ்மானி, லாஸ் ஏஞ்சல்ஸ் வாழ் இந்தியவம்சா வளியினராம். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களையும் தைரியமாக எதிர்கொண்டிருக்கிறார் சீமா ரஹ்மானி. இவரை பாராட்டும் அதே நேரத்தில், மலையாள பெண்களை(குறிப்பாக கிறித்துவர்களை, நர்சுகளை) மோசமாக நினைக்கவும் அவர்கள் மீதான பாலியல் மனச்சித்திரத்திற்கான (sex-stereotype) மற்றொரு ஆதாரத்துவப் போக்கினை இச்சித்திரம் வழங்குவதையும் நாம் மறுக்க முடியாது. பாடம் ஒன்னு ஒரு விலாபம் போல், மையக் கருத்தினை மட்டுமே உரைப்பது போன்று எடுத்தால் பாலிவுட்டில் குப்பை கொட்ட முடியாது என்பதும் ஒரு காரணமாயிருக்கலாம். அல்லது செலவிட்ட பணத்தை இப்படி ஈர்த்து எடுத்துவிடலாம் என்பதும் காரணமாயிருக்கலாம். எப்படியோ, அந்த வகையில் படம் பார்க்கும் போது மலையாள கிறித்துவர்கள் குறித்து காண்பவர்கள் மனதில் என்ன மாதிரி பிம்பத்தை இப்படம் ஏற்படுத்தும் என்ற சிறிய ஐயப்பாடு ஏற்படுவதையும் தவிர்க்க இயலவில்லை.
துணிச்சலாக நடித்துள்ள ரஹ்மானிதான் படம் முழுக்க நிறைந்திருக்கிறார். பார்த்து முடித்த பின்னும் நெஞ்சை கணக்க வைப்பது மேரிக்குட்டியாக நடிக்கும் இந்த ரஹ்மானிதான். நர்ஸ் படிப்பில் சேர உதவிபுரியும் பாதிரியாருக்கு குழந்தைத் தனத்துடன் நன்றி சொல்ல தயங்கித் தயங்கி வரும் அவர், நர்ஸ் தேர்வில் வெற்றி பெற்றவுடன் பாதிரியார் முத்து நெக்லஸ் பரிசளித்தவுடன், இதனுடன் உடைகள் சேரவில்லை என்று எள்ளலுடன் பதிலளித்து சர்ச்சிலேயே முத்தமிட்டு உறவு கொள்ளும் போது இளநங்கையாகிறார். பின், கூட பணிபுரியும் பெண்ணின் திருமணத்தில் தனக்கும் பாதிரியாருக்குமான உறவைக் குறித்து பேச்சைக் கேட்கும் போது உடைந்து போய், பாதிரியாரிடம் வந்து இந்த உறவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், முறையாக திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும்போது பொறுப்புள்ள பெண்மணியாக மாறுதல் பெறுகிறார். பின் வெட்டவெளிக் கடற்கரையில் தனியே அமர்ந்து, சிலுவையின் முன்னால் தனது சோகங்களை மெளன மொழியில் சோகமாக பகிர்ந்து கொள்ளும் போது, காண்போரின் மனதில் இடம் பெற்றுவிடுகிறார். அவரது வலியில் நாமும் நம்மை அறியாமலேயே பங்கு பெறுகிறோம், நிறுவனப்படுத்தப் பட்டுள்ள கடவுட் கோட்பாடு அதைச் சுற்றிப் பிண்ணப்பட்டிருக்கும் மத(அ)நியாய வலை ஆகியவற்றின் மீது நம் மனதில் வெறுப்பு எழுவதையும் தவிர்க்க இயலுவதில்லை. எப்போதும் சோகமே தாங்கி நிற்கும் மேரிக்குட்டியின் இயல்பான முகமும், முறையற்ற உறவ ாக மலர்ந்து வல்லுறவில் ஆட்பட்டு தப்பிக்கத் துடிக்கும் ஏக்கம் கலந்த இல்லத்தரசியின் முகமும் பிண்ணிப் பிணைந்து படத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
கடவுளை சுவர்களுக்குள் அடைத்து வைத்து, நிறுவனப்படுத்தி ஏற்படுத்தப் பட்டிருக்கும் மதங்கள், மடங்கள், கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் அவைகளின் மூலம் நிறுவனப்படுத்தப் படும் மனதின்-வாழ்வின் மீதான ஆக்கிரமிப்புகள், நியாயப் படுத்தப் படும் அக்கிரமங்கள் அனைத்தின் மீதும் நமக்கு இந்த ஆதங்கமும் ஆவேசமுமே ஏற்படுகிறது. பாவங்களாக படத்தில் சித்தரிக்கப் படுவது இவைதான். படத்தின் வெற்றி இதில்தான் அடங்கியிருக்கிறது. படத்திற்கு இத்தனை எதிர்ப்பு வருவதற்கும் இதுவே வழிகோலுகிறது. காமம் கண்ணை மறைக்க அடுத்தடுத்து கொலைகளை செய்யும் பாதிரியார் வில்லியம்ஸ், அனைத்து மதங்களிலும் நிலவிவரும் பொய்யான மதவாதிகள், மதத்தை மையமாக வைத்து கிளம்பும் அதிகார நாற்காலிகள், அவற்றின் கீழ் நசுக்கப் படும் நெஞ்சங்கள் ஆகியவற்றை அவலத்தன்மையுடன் நம்முன்னே வைத்துவிட்டு நகர்கிறார். ஷைனி அஹுஜாவின் நடிப்புக்கு மெருகூட்டுவது இந்த பாத்திர அமைப்புதான்.
கள்ளக் காதலியை வேவுபார்க்க அடியாட்களை அனுப்புவது, அவள் கணவனைப் பார்த்ததைச் சொல்லியவுடன் சந்தேகித்து கையில் சிலுவையால் சூடு போடுவது, திருமணம் ஆனாலும் எனக்குத்தான் நீ சொந்தம், உனது கணவனுக்கும் இது தெரியட்டும் என்றே முதலிரவன்று உன்னை படுக்க அழைத்தேன் என்று வெறித்தனமாக கத்தி உடைகளை கிழித்து, இங்கு எல்லோர்க்கும் தெரியட்டும் யார் உன்னை ஆள்வது என்று வல்லுறவு கொள்வது, மேரிக்குட்டி தனது கணவனுடன் தப்பித்து ஓடிய பின்னர் ஏமாற்றம் அடைவது, அவள் தனது கணவன் மூலம் கர்ப்பினியானாள் என்பதை அவளது தாயார் மூலம் அறிந்தவுடன், கணக்குப் போட்டுப் பார்த்து, தனது வேவுக்கண்களையும் மீறி தமது கண்காணிப்பில் மண்ணைத் தூவிவிட்டு தனது கணவனுடன் உடலைப்பகிர்ந்து கொண்டிருக்கிறாள் மேரிக்குட்டி , அதற்கு அவளது தாயாரின் துணையிருந்திருக்கிறது என்ற யூகித்து வெறிபிடித்து வெட்ட வெளியில் நிற்கும் சிலுவையின் முன்னே அவரை கொலைசெய்வது, மேரிக்குட்டி தாம் கர்ப்பமாயிருப்பதாகவும், விட்டு விடும்படியும் காலில் விழுந்து கதறும் போது வெறுப்புடன் வெளியே போகச் சொல்வது, தனக்கு எதிராக புகார் கொடுத்துள்ளாள் என்றறிந்தவுடன் கொலைசெய்ய ஆட்களை ஏவுவது, பின் தூக்குதண்டனை கிடைத்தவுடன் தன் செயலுக்காக மனம் வருந்துவது என்று பயிற்றுவிக்கப் பட்ட மதஒழுக்கங்கள் குறித்த உணர்வுகளும், நிறுவனப்படுத்தப்ப்பட்ட மதம் தரும் அதிகார போதையில் திளைப்பதும், ஏமாற்றமும், காதலும்,காமமும், நிராசயையும், வெறுப்பும், குற்றவுணர்வும், குரூ ரமும் மாறி மாறி பிண்ணிப் பிணைய வெளிப்படும் பாத்திரமாக மாறியிருக்கும் ஷைனி அஹுஜாவுக்கு சபாஷ் போடத் தோன்றுகிறது.
இரட்டை சபாஷ் போடவேண்டியது இயக்குனர் வினோத் பாண்டேவுக்குத்தான். ஏகப்பட்ட நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் சற்றும் வளைந்து கொடுக்காமல், நீதிமன்றம், சென்சார் போர்டு, அப்பெல்லேட் ட்ரிப்யூனல், அரசியல் தொந்தரவுகள் என்று பலவித சிரமங்களைப் பொருட்படுத்தாமல் இப்படத்தை மிகக் குறைந்த சமரசங்களுடன் வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஏற்கெனவே இந்து மத அமைப்புகளில் நிலவும் இம்மாதிரியான விஷயங்களைப் பற்றி தூர்தர்ஷனில் ஒரு தொடர் வெளியிட்டவர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது. படத்தின் கரு சர்ச்சைக்குள்ளானது என்னும் போதிலும், தரமான தொழில் நுட்பத்துடன் அதை அளித்து ஒரு கோடி ரூபாய் செலவழித்து எடுத்துள்ளதும் துணிச்சலான முடிவே.
பாடம் ஒன்னு – ஒரு விலாபம்
படம் மலபார் பகுதிகளில் ஒரு காலத்தில் உரத்து பேசப்பட்ட மைசூர் திருமணங்கள் எனப்படும் இஸ்லாமிய வரதட்சினைத் திருமணங்கள் பற்றியது.பள்ளிக்குச் செல்லும், செல்ல விரும்பும் பதினைந்து வயது ஷஹீனாவாக மீரா ஜாஸ்மின் மின்னியிருக்கிறார். தேசிய விருதையும் அவருக்கு வாங்கித் தந்திருக்கிறது இப்படம்.
இளவயதுத் திருமணம், வலுக்கட்டாயத் திருமணம், திருமணத்துக்குப் பின் நடைபெறும் மண-வல்லுறவு(Marital Rape), மலபார் பகுதிகளில் நிலவும் பலதார மணம், அவற்றை ஷரீஅத் கொண்டு நியாயப் படுத்தும் மதவாதிகள், உடல் உறவு முடிந்தவுடன் ஷரீயத்தின் அங்கீகாரத்துடன் தலாக் செய்யப் படும் இளம் பெண்கள், கையில் குழந்தையுடன் வரிசையாக செல்லும் ஒற்றைப் பெண்களின் அணிவரிசை என மிகவும் சர்ச்சைக் குரிய கருத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ள இப்படம் சமூக அவலங்களை நேர்மையுடன் பிரதிபலிக்கும் மலையாளப் படவுலகின் துணிச்சலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இத்தணைக்கும் படத்தயாரிப்பாளர் ஆரியாடன் சவுக்கத் ஒரு முஸ்லீம், அவரது தந்தை கேரள மந்திரிசபையில் அமைச்சராகவும் இருந்தவர். படத்தை எடுக்க தூண்டுகோலாக இருந்தது, ஷஹீனா என்னும் அவரது சிறுகதைதான்.
படத்துக்கு எதிர்ப்பும், அடிப்படைவாத முஸ்லீம் அமைப்புகளிருந்துதான் வந்ததே தவிர, கேரளாவின் பொதுவான முஸ்லீம் அமைப்புகள் அமைதியாகவே இருந்தன. படத்தின் இயக்குனர் டி.வி.சந்திரன் மட்டும் சில அமைப்புகளால் வசைபாடப் பட்டார். மற்றபடி, படத்தில் வரும் முஸ்லீம் ஆசிரியர், திருக்குரானின் (சம்பந்தா சம்பந்தமில்லாத) வரிகளை உணர்ச்சிமயமாக அரபியில் ஒப்பித்து, இஸ்லாம் பெண்களுக்கு கல்வி கற்பித்துக் கொடுக்கச் சொல்கிறது என்று ஆணித்தரமாக எடுத்துரைப்பதும் எதிர்ப்பை மழுங்க அடித்திருக்கலாம். அம்மட்டில், ‘பொய்மையும் வாய்மையிடத்த ‘ வென்று இக்குறைபாட்டினை அம்மட்டில் பின் தள்ளிவிடவும் தகுந்த நியாயம் இருக்கிறது.
டி.வி.சந்திரன் ஏற்கெனவே பல விருதுகளை வாங்கியுள்ள, அனைவராலும் மதிக்கப் படுகின்ற இயக்குனர். சில இடங்களில் பழைய பாணி குறியேட்டங்களை அவர் முன்வைத்திருந்தாலும், படத்தின் மையக் கருவை தொட்டு தொட்டு பின்னப் பட்டிருக்கும் திரைக்கதையும், சம்பவங்களும், பன்ச் டையலாக்குகளும் படத்தை ரசிக்க வைக்கின்றது. புகுந்தகத்தில், மீரா ஜாஸ்மின் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் விஷயங்களாக காண்பிக்கப் பட்டிருக்கும் பஷீரின் பாத்தும்மாட ஆடும்(Fathima ‘s Goat), தாகூரின் கீதாஞ்சலியும் துடிப்புள்ள ஒரு சிறுமியின் இயல்பான குதூகலத்தையும், அது கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் படுவதையும் அழகுற எடுத்தாளுகின்றது.
முன்னேற்றச் சிந்தனையுடைய முஸ்லீமாக சித்தரிக்கப் படும் வாத்தியார், கையாலாகதவராக இருக்கிறார். தம் சமூகத்தின் பிற்போக்குத்தனம் கோபத்தை ஏற்படுத்தினாலும், வலுவான சமூகக் கட்டமைப்பு அவரது கைகளைக் கட்டிப் போட்டுவிடுகிறது. படம் முழுக்க ‘முற்போக்கு ‘ பேசும் புரோகமன ஹாஜியார், சவுதியின் ஷரீயத் இங்கு இல்லையே என்ற ஆதங்கததை மறைமுகமாக தமது முற்போக்கு முகத்துக்குப் பின்னே மறைத்துக் கொள்கிறார். ஷஹீனா கன்னி கழியாதவள் என்று நினைத்து அவளை அடைந்து, அதன் மூலம் ,ஹதீதுகள் உறுதியளிக்கும் சுவனத்துக்கு போக விரும்புவதாயிருக்கட்டும், ‘எனது தந்தை வயதுள்ள இப்பாவிக்கு என் மகளைத்தரமாட்டேன் ‘ என்று மறுக்கும் ஷஹீனாவின் தாயாரின் இறப்புக்குப் பின், சவுதி அரேபியா மாதிரி இஸ்லாமிய சட்டங்கள் இங்கில்லை, இருந்திருந்தால் உன்னை கல்லால் அடித்துக் கொன்றிருப்போம் என்று ஆடாமல், அசையாமல் ஷாயினாவிடம் சொல்லுவதாயிருக்கட்டும், மத போர்வையுடுத்தி தலாக்குக்கு துணை போவதாயிருக்கட்டும், வில்லன் வேடத்தின் கருத்தாடல்களை மட்டுமே முன்வைத்து பாத்திரத்தின் தனித்தன்மையை பின்னிறுத்தும் ஹாஜியார் இயக்குனரின் திறமைக்குச் சான்று.
வடக்கு கேரளத்தின்(மலபார்) முஸ்லீம் பெண்ணாகவே ஆகியிருக்கும் மீரா ஜாஸ்மின், நிச்சயமாக மிகவும் பாராட்டப் பட வேண்டியவர். படத்தில் பயன்படுத்தப் படும் மலபார் முஸ்லீம்களின் மலையாளத்திலிருந்து, நிற்கும், நடக்கும் விதம் வரை ஒவ்வொன்றிலும் மிளிர்கிறார் அவர். அவருக்கும் அவரது ரசாக்கின்(கணவன்) குழந்தைக்கும் இடையே மலரும் நட்பு, அதன் சுதந்திரக் காற்று, வல்லுறவுக்குள்ளானவுடன் வெளிப்படும் இயல்பான கோபம், ஆவேசம், தான் ஏமாற்றப் பட்டோம், வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டோம் என்பது நினைவுக்கு வரும்போதெல்லாம் அதை ஒதுக்கித்தள்ளும் குழந்தை மனம், முறிந்து போகும் குழந்தை மனத்தை மெளனமாய் வெளிப்படுத்துவது என ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின். சற்றே மிகைப்படுத்தப் பட்ட நடிப்பை பார்த்துப் பழகிய நமக்கு இயல்பான நடிப்பின் தீவிரம் சற்று மந்தமாகவே புலனாகிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப் பட்டிருக்கும் இப் படம், என்பதுகளின் தமிழ் சினிமாவின் தொழில்நுட்பத்தரத்துடன் இருந்தாலும், கதையின் தீவிரம், எடுத்தாளப் பட்டிருக்கும் கதாபாத்திரங்களின் நிஜத்தன்மை, ஆழ்ந்த வட்டார வழக்குகள், சித்தரிப்பு ஆகியவற்றின் விளைவாக நெஞ்சில் தைக்கும் நிஜத்தன்மையுடன் விளங்க வைக்கிறது இப்படத்தை.
படத்தில் ரசாக்கின் தாயார், அவ்வப்போது இடித்துரைத்துரைக்கிறார், ‘உனது தந்தை , பாட்டன்களைப் போலத்தான நீயும், அவர்கள் செய்யாதவற்றையா நீ செய்கிறாய் ‘ என்று குத்தலாகச் சொல்வது, ஷாயினா பிறாண்டிய காயத்துக்கு மருந்திடும் முதல் மனைவியைப் பார்த்து , ‘முஸ்லீம்களைத் தவிர வேறு யாருக்கு இந்த பாக்கியம் கிட்டும், ஒரு மனைவி ஏற்படுத்திய காயத்துக்கு இன்னொரு மனைவி மருந்திடுவது ‘ என்று நக்கலாகப் பேசுவது, இரவில் கேட்கும் ஷாயினாவின், கத்தல்களையும், கதறல்களையும் ஒரு பெண்ணாக அதிர்ந்து போய் ஒரு கையாலாகத தாயாராக முதல் மருமகளுடன் சேர்ந்து சோகத்துடன் எதிர்கொள்வது , தலாக் செய்துவிட்டு கொண்டு போகப் படும் மகனின் செயல் ஏற்படுத்தும் வருத்தத்துடன் தனது இயலாமை, தனக்கு விதிக்கப் பட்டிருக்கும் எல்லைகளுக்குள் நின்று புலம்புவது என்று இப்பாத்திரத்தையும் சிறப்பாக சித்தரித்திருக்கும் இயக்குனர் பாராட்டப் பட வேண்டியவரே.
பாடம் கல்லாத பாவியர்
இவ்விரு படங்களின் மூலம் நமக்கு விளங்குவது என்னவென்றால், குழந்தைகளுக்கும், குழந்தை மனம் கொண்டவருக்கும், மதம் கண்ணை மறைக்காதவர்களுக்கும் தெளிவாக தெரியவரும் நியாயங்கள், மதவாதிகளுக்கு விளங்காமல் போவதன் முரண்பாடுதான். இது, இப்படங்களின் பாத்திரங்களின் மூலம் மட்டுமல்ல, படத்தைத் தொடரும் சர்ச்சைகளினூடேயும், அவற்றுக்கு எதிர்வினை புரியும் மதவாதிகளின் வாதங்களின் மூலமும் கூட பார்வையாளருக்கு தெளிவை ஏற்படுத்துகின்றது. பாடம் கல்லாத பாவியர், இந்த அபலைப் பெண்களோ தவறிழைக்கும் ஏனையோர்களோ அல்ல, மதவாதிகளும் அவர்களை எப்பாடுபட்டாகிலும் ஆதரித்தே ஆகவேண்டும் என நினைக்கும் நமது சமூகங்களும் தாம் என்பதையும் இவ்விரு படங்களும் புலப் படுத்துகின்றன. அம்மட்டில், இரு படங்களும் இந்திய திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க படங்கள் எனலாம்.
nesa_kumar2003@yahoo.com
http://nesakumar.blogspot.com
http://islaamicinfo.blogspot.com
- நேர்காணல் : வசந்த்
- பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும்!கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும்!(Ice Age, Sea-Floor Rise & Fall) [3]
- இறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்
- மூன்றாம் பக்கம் ( 3)
- நேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-1
- பாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்
- ஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை
- ஹிப்பாங்… ஜிப்பாங்
- பெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்
- ‘சே ‘
- உலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்
- உலகத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்
- ‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்
- அருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்
- வெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்
- ஸ்த்ரீ கானம்
- குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன ?
- தமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்
- ஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே
- கண்ணாடிக் கண்கள்
- சிறகுகள் முளைத்து..
- து ணை – குறுநாவல் -பகுதி 5
- விலங்கு நடத்தைகள்..
- சிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]
- சிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…
- அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)
- ஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்
- கடலை வசக்குதல்
- சிலுவையில் மலருமா ரோஜா ? மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்
- பருந்துகள்
- வாய்திறந்தான்
- ஒரு மரத்தின் இறப்பு!
- வன்முறை