பால்

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

கே வி ராஜா


லட்சுமிக்கு காலை சூரியோதய நேரத்தின் போது அவள் படுத்திருந்த மண்தரை சூடு உறைத்து மடியில் பால் சுரந்துக்கொண்டது. தூரத்தில் கட்டிக்கிடக்கும் தன் மகன் செல்லாவிற்கு பசிக்குமே என்ற ஆதங்கம் வேறு அவளை பாடாய்படுத்தியது. வீட்டினுள் படுத்திருக்கும் அவளது எஜமானி வந்தால் தான் பால் கறப்பாள். என்றும் சூரியன் தலைக்காட்டும் முன்பே பால் கறக்க வருபவளை இன்று காணவில்லை. தூங்கிவிட்டாளோ. மீண்டும் தன் மகன் பசியோடு இருப்பான் என்ற நினைவு வர ‘அம்மாஆஆஆஆஆஆஆஆ ‘ என்று அடிவயிற்றிலிருந்து கத்தினாள்.

லட்சுமியின் குரல் கேட்டு வீட்டினுள் படுத்திருந்த கனேசன் தான் முதலில் விழித்துக்கொண்டான். பக்கத்தில் படுத்திருந்த மனைவி மஞ்சுளாவைப் பார்க்க, அவளோ நேற்றைய இரவு இரண். qடாம் ஆட்டம் பார்த்த சோர்வில் உறங்கிக்கொண்டு இருந்தாள். இவனுக்கும் கண்கள் எரியத்தான் செய்தது, ஆனால் பால் கறக்க வேண்டும். சரியான நேரத்தில் கறக்கவில்லையெனில் பால்சுரப்பு குறையும். பால் சொசைட்டிக்காரன் கத்துவான் என்ற பயம் வேறு நெஞ்சில் நின்றது. பக்கத்தில் படுத்திருந்த மஞ்சுவை உசுப்பினான்.

‘ஏய் மஞ்சு, மாடு பால் கறக்க கத்துது பாரு, எழுந்திரு ‘

s

அவள் அடித்துப்பிடித்து எழுந்தாள். ‘அய்யோ மாமா, மணி ஆறு ஆய்டுச்சு. சரி, நீயும் கொஞ்சம் கூடமாட ஒத்தாசை செய். வந்து மாட்ட புடிச்சி வெளில கட்டு, நான் கொட்டாய சுத்தம் பண்ணிடுறேன். ‘

கனேசன் முதலில் செல்லாவை பிடித்து தூரத்தில் கட்டினான். கட்டும்போதே செல்லா பசியினாலும் தாயிடம் பால் குடிக்கவுள்ள ஆர்வத்தாலும் கயிற்றைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தான். செல்லாவை கட்டிவிட்டு வேறொரு முளைக்குச்சியில் லட்சுமியை பிடித்துக்கட்டினான். மஞ்சுளா சுத்தம் செய்யும்போதே செல்லாவிற்கு பசி அதிகமாக அவன் கத்த ஆரம்பித்தான்.

‘மஞ்சு, கண்ணுக்குட்டி கத்து பாரு, சீக்கிரம் கூட்டிட்டு தீவனம் வச்சு பாலை கறக்கிற வழிய பாரு ‘

மஞ்சுளா கொட்டகையை சுத்தம் செய்துவிட்டு, லட்சுமியை கொண்டுவந்து கட்டி தீவனம் வைத்தாள். லட்சுமி தீவனம் சாப்பிடும்போதே மஞ்சுளா கிண்ணத்தில் எண்ணை, ஒரு செம்பில் தண்ணீர், பால் கறக்க பாத்திரம் எல்லாம் கொண்டுவந்தாள். பாதி தீவனம் தீரும்போது கனேசன் செல்லாவை அவிழ்த்துவிட அவனுக்கு ஆனந்தம் தாளாமல் துள்ளிக்குதித்து ஓடிவந்தான். தாயின் மடியை நெருங்கி, முட்டி முட்டி பால் சுரக்க வைத்தான். பால் சுரப்பு எடுக்க, லட்சுமிக்கு சிறுநீர் கழிக்கும் எண்ணம் மேலோங்க, வயிற்றை எக்கினாள். மாடு மடியை எக்குவதைப் பார்த்த கனேசன் உள்ளே ஒடிப்போய் ஒரு செம்பை எடுத்துவந்தான்.

‘மஞ்சு, மூனாவது வீட்டுல ஒரு பிள்ளம்மாரு குடும்பம் இன்னைக்கு வீடு குடி வர்றாங்க. நேத்தே வந்து, புது வீட்ல கோமியம் தெளிக்கனும்ன்னு சொல்லி ரெண்டு ரூபா காசும் ஒரு சொம்பும் கொடுத்துட்டு போனாங்க ‘

லட்சுமி நீர் கழிக்கும்போதே மஞ்சுளா செம்பில் பிடித்துக்கொண்டாள்.

‘அட மனிதா, நான் கழிக்கும் சிறுநீரைக் கூட விற்றுக் காசாக்குகிறாயே ‘ லட்சுமியின் மனதில் சிரிப்பதா அழுவதா என்று தெரியாத எண்ணம் உண்டானது.

‘மாமா, முக்கா சொம்பு தான் கோமியம் இருக்கு, நெறையல, என்ன பண்றது ‘

‘நெறையலையா ? ? அய்யோ, அந்த ஊட்டுகாரரு வேற நேத்தே சொம்பு நெறையா வேணும், ஊடு முழுக்க தெளிக்கணும்னு கேட்டாரு. சரி, ஒண்ணு பண்ணு, கொஞ்சம் தண்ணிய அதுகூட கலந்துடு. பால்ல தண்ணி கலந்த கண்டுபுடிக்க மீட்டரு வச்சிருக்கானுங்க, இதுக்கு எந்த மீட்டரு இருக்கு ‘

பாலில் மட்டுமல்ல கோமியத்தில் கூட தண்ணீரை கலக்கும் மனிதனின் அறிவை நினைத்து ‘நேர்வழியில் உன் அறிவை பயன்படுத்தவே மாட்டாயா மனிதா ‘ என்று வேதனைப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை லட்சுமிக்கு.

பால்காம்புகள் விடைத்துக்கொண்டு அப்போது தான் செல்லா கொஞ்சம் நுரைத்தள்ள பாலை குடிக்க ஆரம்பித்தான்.

‘மாமா மாமா, கண்ணுக்குட்டி பாலைக் குடிக்கிது பாரு, சீக்கிரம் இழுத்துக்கட்டு ‘

கனேசன், செல்லாவை கழுத்துக்கயிறை பிடித்து இழுத்து கொட்டகையின் மூலைக்கு கொண்டு சென்றான். செல்லா திமிறிப்பார்த்தாலும் முடியவில்லை. இது தினமும் நடக்கும் சங்கதி, செல்லா பாலைக் குடிக்க ஆரம்பிக்கும்போதே இழுத்துக்கொண்டு போய்விடுவான் கனேசன். தினமும் நடந்தாலும் என்றேனும் ஒரு நாளாவது நம்மால் குடித்துவிட முடியாதா என செல்லாவும் திமிறிக்கொண்டு ஓடப்பார்ப்பான்.

லட்சுமிக்கு செல்லாவைப் பார்க்க பாவமாக இருந்தது. வேதனையோடு தன் மகனைப் பார்த்தாள்.

‘அம்மா, என்னம்மா. பசிக்குது. பசி தீர்றதுகுள்ள என்னை பிடிச்சு கட்டிட்டாங்க ‘

‘வேற வழி இல்லடா. அவங்க என் பால்காம்பில பால் சுரக்கத்தான் உனக்கு பால் குடிக்க விடுறாங்க. அவங்களுக்கு தேவைக்கும் அதிகமா பாலை கறந்த பிறகு தான் உனக்கு குடிக்கவிடுவாங்க. நீ குடிச்சது போக மிச்சம் மனுஷனுக்கும் கிடைக்கட்டுமேன்னு தான் இறைவன் என்னை மனுஷனோட வீட்டுவிலங்கா படைச்சான். ஆனா, மனுஷனுக்கு நம்மைவிட ஒரு அறிவு அதிகமா படைச்சதால நம்மை கட்டிப்போட்டு தனக்கு தேவைக்கு அதிகமாவும் பாலைக் கறந்துக்கிட்டு மிச்சத்தை உனக்கு கொடுக்குறாங்க. ‘

பால் கறந்து முடிக்கப்போகும் நேரத்தில் கனேசன் பால்குடத்தைப் பார்த்துவிட்டு ‘மஞ்சு, இன்னைக்கு பால் எத்தன லிட்டரு வரும் ‘

‘ஒரு மூன்றர லிட்டரு தான் வரும்ன்னு தோனுது மாமா. கறக்க கொஞ்சம் நேரமாய்ட்டதால பாலு சொரக்க மாட்டேங்குது ‘

‘எப்டியாவது நாலு கறக்கக் பாருடி. இல்லைன்னா பால் சொசைட்டிக்காரன் கத்துவான் ‘

‘ஏன், அதுலையும் தண்ணிய ஊத்தி கொஞ்சம் சீனிய கலந்துக் கொடுக்கவேண்டியது தானே. மீட்டரு காட்டாதுல்ல ‘

‘அடி போடி, போன வாட்டி அப்டி செய்து தான் அவன்கிட்ட நல்ல வாங்கி கட்டிகிட்டேன். அவன் அப்பன் ஆத்தாளையெல்லாம் இழுத்து திட்டுறான் ‘

‘நாலு லிட்டரு கறந்தா கண்ணுக்குட்டிக்கு பால் இல்லாம போய்டும் மாமா, அதுக்கு தான் சொல்றேன் ‘

‘ஆமா, காளைக்கண்ணு தானே, கொடம் கொடமாவா குடிக்கணும். கொஞ்சமா குடிச்சா போது. அதிகமா குடிச்சு என்ன நாளைக்கு இது ஒரு கண்ணு போட்டு பால் கொடுக்கவா போவுது. பால் மறப்படியானதும் எங்கியாவது நூறு இரநூறுக்கு அடிமாட்டுக்கு விக்க போறேன். இதுக்கு என்ன ஒரு நாளைக்கு ஒரு லிட்டரு பாலா குடிக்கணும் ‘

லட்சுமியின் மனதிற்குள் வலி. ‘அடப்பாவி, போன மாதம் உனக்கு ஆறு வருடத்திற்கு பிறகு மகளுக்கு பின் மகன் பிறந்தான் என்று ஊரெல்லாம் அழைத்து விருந்து வைத்தாயே, எனக்கு மட்டும் மகன் பிறந்தால் ஏன் உன் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. கண்ணில் காணும் எல்லாவற்றிற்கும் கணக்கு பார்க்கத் தொடங்கிவிட்டாயே ‘ என்று மனதிற்குள் குமுறியது.

மஞ்சுளா பாலைக் கறந்து முடித்தாள்.

‘மஞ்சு, சாயந்திரம் நாலு மணிக்கு கறக்கப் பாரு. அப்பவும் நேராமாயிட்டா அப்றம் சொரப்பு கொறஞ்சிடும் ‘ கனேசன் மஞ்சுவிடம் சொல்லிக்கொண்டே செல்லாவை பால் குடிக்க அவிழ்த்துவிட்டான். செல்லாவிற்கு பால் கறக்கும் முன்பு கொஞ்சம் பால் குடித்ததில் பசி அதிகமாகியிருந்தது. கயிற்றை முழுவதும் அவிழ்க்கும் முன்பே இழுத்துக்கொண்டு ஓடினான். லட்சுமிக்கோ மகனுக்கு பசியாற கொடுக்க தன் மடியில் அவ்வளவு பால் இல்லையே என்ற கவலை. செல்லா ஓடிவந்த வேகத்தில் மடியில் கொஞ்சநஞ்சமிருந்த பாலைக் குடிக்க ஆரம்பித்தான்.

‘அம்மாஆஆ ‘

‘என்னப்பா ? ? ‘ லட்சுமிக்கு மகனின் பசி தன்னிடமிருந்த பாலினால் தீரவில்லை என்று நன்றாக புரிந்தது.

‘அம்மா, பாலே இல்லம்மா பசிக்கிது ‘

‘நம்ம வீட்டுக்காரம்மா கறந்துட்டு போய்ட்டாங்கடா ‘

‘நம்ம வீட்டுக்காரர் என்னை அடிமாட்டுக்கு அனுப்பப்போறதா சொன்னாரே, என்னம்மா அது ‘

‘தெரியலையேப்பா, போன வாரம் பக்கத்து வீட்டு கருப்பி மகனை 2 பேரு வந்து அடிமாட்டுக்குன்னு கூட்டிப் போனாங்கலாம். அதுக்கு பிறகு அவ தன்னோட மகனைப் பார்க்கவே இல்லைன்னு நேத்து என்கிட்ட அழுதா ‘

‘விட்டா அடுத்த ஈடு பால் கறக்குறதுக்கே இல்லாம பாலை குடிச்சுடுவ நீ ‘ என்று கனேசன் செல்லாவைப் பார்த்துக் கூறிக்கொண்டே கொட்டகையின் மூலையில் இழுத்துக் கொண்டுபோய் கட்டினான்.

லட்சுமிக்கு மகனை பார்க்கவே பாவமாக இருந்தது. செல்லா லட்சுமியை ஏக்கமாகப் பார்த்து ‘அம்மா, பசி அடங்கலைம்மா. திரும்ப எப்பம்மா பால் குடிக்க விடுவாங்க ? ? ‘ என்று கேட்டான்.

‘வீட்டுக்காரர் அம்மாகிட்ட நாலு மணிக்கு பால் கறக்கணும்னு சொன்னார் டா. உனக்கு அப்போ தான் பால் கிடைக்கும். அதுவரை எப்படியாவது பொறுத்துக்கோடா கண்ணா ‘ லட்சுமி தனது மகனின் வேதனையைப் பார்க்க சகிக்காமல் கண்ணை மூடிக்கொண்டாள்.

வீட்டினுள்ளே கனேசனின் மகள் தனது தமிழ்ப்பாடத்தை சத்தமாக படித்துக்கொண்டிருந்தாள், ‘பசு நமது வீட்டு விலங்கு. பசு நமக்கு பால் கொடுக்கிறது. பசிவின் பால் மனிதனுக்கு மிகவும் சத்தான உணவு. பசுவை இந்துக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர் ‘

***

kvraja@awalnet.net.sa

Series Navigation

கே வி ராஜா

கே வி ராஜா