பாறைக்குட்டம் அனுப்பக் கவுண்டர் செப்பேடு

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

எஸ். இராமச்சந்திரன்


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாறைக்குட்டம் என்ற ஊரில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் திரு. து. கிருஷ்ணசாமி அவர்களிடம் இச்செப்பேடு உள்ளது. இச்செப்பேட்டின் நீளம் 22 செ.மீ., அகலம் 10 செ.மீ. செப்பேட்டின் இருபுறங்களிலும் தமிழில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேடு முன்புறத்தில் உச்சியில் தோரணம் போன்று செதுக்கப்பட்டுள்ளது.

வாசகங்கள்

பக்கம் 1

1. ஸ்ரீ கணபதியே நமசிவாய உ சாலிவா
2. கன சகாற்றம்1 ???? வரு2 மேல் செல்லா நின்
3. ற கொல்லம் ????? வரு3 குறோதன வரு தைய்
4. மீ ?? உ4 ஆயித்தவாரமும்5 புணர்பூச நட்செத்தி
5. ரமுந் துருவனாம யோகமுஞ் சிங்கலக்கினமுங் கூ
6. டின சுபதினத்தில் சீவல(மார) வெட்டும் பெருமாள்ரா
7. சா அவர்கள் ஒள்ளிக் கவுண்டனுக்கு செக்காலை
8. நாட்டாண்மை எல்கை நிலமைக்குக் கிரையசா
9. தனப் பட்டயமெளுதிக் குடுத்தபடி நாட்டாண்மை
10. எல்கை நிலமைக்குக்கிறைய சாதனமாவது செ
11. க்காலை நான்கு எல்லைக்குள்பட்ட கிறாமம் காடா
12. ம் பிரமாய் யிருந்ததை தம்பி குலசேகர ராசா முன்
13. னிலைக்குத் தான் குடிபத்திவித்து நமக்குத்தான் மனு
14. டனானதாலும் தன்னுடைய குமாரர் கோட்டை
15. க் கெம்பக் கவண்டன் தீத்தாக் கவண்டனும் நூ
16. று சனமும் தம்பி குலசேகரராசா இடத்தில்க்
17. காத்திருப்பதாலும் தன் பேரிலபிமானித்து செக்
18. காலைப் பெருமாள் கோவில்க் கம்பத்துக்கு நான்
19. கு எல்கைக்குள்பட்ட கிறாமத்துக்கு மாலுங்
20. கட்டிக் குடுத்துக் கிறைய சாதனப் பட்டய மெளுதி
21. க் குடுக்கச் சொல்லி மாப்பிள்ளை சிவசங்கரர
22. ¡சா அவர்களையனுப்பி யிருப்பதாலவர் முன்னி
23. லைக்கு நான்கு எல்லைக்குள்பட்ட கிறாம
24. த்துக்கும் கம்பத்துக்கும் கிறையமாயிரம் பொன்னய்ப்
25. பட்டயமெளுதிக்குடுத்து செக்காலை நான்கு எல்லைக்குமா
26. லாவது கிளக்கு எல்கை உமுரிக்காடு பேரூறணி முக் கூ
27. டல் கள்ளன் பரும்பில்த் தென்தலை நேர்கண்ட மே
28. ற்கு உப்புப் பாதை நேராக முப்பதடி குறுக்கம் தன்னடி
29. யிலக்கடியான6 குறுக்கம் ??? -ம்7 மேற்கு நின்றும்
30. தெற்கெல்கை கரிக்காளக் கவண்டன் குடியிரு
31. ப்பு நாகலாபுரம் வடதலைக்கும் காரிசேரி எல்கைக்
32. கும் முப்பதடிக் குறுக்கம் ?ளுக்குத்8 தெற்கு நின்று மேற்
33. கு எல்கை மேலவூர் ராசாக்கள் பட்டி அஞ்சக்காறன்9
34. அங்கணஞ் சேருவைகாறன் குடியிருப்பு வடமேல்
35. தலைக்குஞ் சிங்கத்தா குறிச்சி பூவாணி முக்கூடல் எ
36. ல்கைக்கு முப்பதடிக் கொண்ட குறுக்கம் ??? றால்10
37. மேற்கு நின்றும் வடக்கெல்கை கல்வெட்டுக் குளிக்குமணி
38. யாட்சை சேகர முடவன் ராமன் பட்டி உமுரிக்காடு முக்
39. கூடல் எல்கைக்கும் முப்பதடிக் குறுக்கம் ??? ம்11 வடக்
40. கு நின்றும் இப்படி நான்கு எல்கைக்கும் சத்திரம் நோ
41. ட்ட மாலுங்கட்டி செக்காலை நான்கு எல்கைக் குள்ப்
42. பட்ட கிறா(ம)ம் ஏழுக்கும் நாட்டாண்மை உண்பளம்12 கயறு ?
43. ம் பெரியகுளம் நஞ்சையில் கரையடி வயல் சேகர
44. ம் ? ?ம்13 எல்கை உம்பளம் நான்கு எல்கைக்கு(ள்)
45. கயறு ?ம்14 நஞ்சையில் வாளையடி கிணத்து கீள்வய
46. ல் ? சேகரம் கவு15 மானிபம் விட்டுக் குடுத்து இந்த 47. ப் படிக்கு நான்கு எல்கையு மனு நீதி முறமையாய் நட
48. ந்து கொண்டு உள்ள சுவாத்தியமுங்கையாண்டு வருவா
49. நாகவு மாகையால் கீள் நோக்கிய கிணறும் மேல் §
50. நாக்கிய மரமும் சந்திராதித்தர் உழ்ழ16 வரைக்கும் நா
51. ன்கு எல்கைக் குள்ப்பட்ட நிதி நிட் செயம்17 கிறையசா
52. தன மாகையால் மகன் மகனாய் கையாண்டு வருவா
53. னாகவும் யாதாமொருதர் செக்காலைக்கு வந்த அரம
54. னையார் தாங்கள் எழுதிக்குடுத்ததாகத் தூண்டின
55. விரல்ச் சொக்கம் பெறுகிறதாகவும்18 கையாண்டு
56. வரப் பண்ணித் தருவாராகவும் இதுகளில் யாதா
57. மொருதர் கிறைய சாதனப் பட்டையத்து(க்)கும் சே
58. த்திர சுவாத்தியத்துக்கும் யிந்த அங்கிஷத்துக்கு

பக்கம் 2

1. தீங்கு செயுதால் ராச அபிமான முந் தப்பிக்கா
2. ராம்பசுவைக் கொன்ற தோசத்திலேயும் பிரா
3. மணரையும் சிசு வதையும் செய்தவன் போன
4. தோசத்திலெ போவாராகவும் இந்தப் படிக்கு
5. செக்காலைக்கு எல்கைக்குள்பட்ட கிறாம
6. த்துக்கும் நாட்டாண்மை எல்கை நிலமைக்கும்
7. கிறைய சாதனப் பட்டயமெளுதிக் குடுத்தோம் சீவல
8. மாற வெட்டும் பெருமாள்ராசா அவர்களோம் ஒள்
9. ளிக் கவண்டனுக்கு இந்தக் கிறைய சாதனபட்டய
10. மெளுதினேன் செக்காலை நாட்டுக் கணக்கு சிவஞானம்
11. கை எளுத்து இந்தப் பொன்னாயிரத்துக்கும் சீவல மாற
12. வெட்டும் பெருமாள் ராசா உ யிப்படிக்கு அறிவோம் நி
13. தி நிற்சேயம் கிறைய சாதனமாயிரம் பொன்னுக்குச்
14. சிவசங்கர ராசா மீனாட்சி துணை உ கவண்டர் சொல்ப்ப
15. டிக்குக் கோட்டைக் கெம்பக் கவண்டன் தீத்தாக்கவண்
16. டன் சின்னதம்பிவடையக் கவண்டன் பூசாரி கொ
17. ண்டுக் கவண்டன் யிந்த வளிபாடாய் மானிபம் என்
18. றைக்கும் நாலு பங்காய்ப் பகுந்து கொள்ளவும் செய்
19. து நிலையம் தொட்டராயப் பெருமாள் பூசாரி நம்முடைய
20. குமாரன் செட்டைக்19 கெம்பக் கவண்டனாகையால் ஷெ
21. கோடாங்கி மல்லேசுரன் முன்னிலைக்கும் தொட்ட
22. ராயப் பெருமாள் முன்னிலைக்கு பொதி போட்டு சகல
23. தெய்வமுஞ் சேகரித்துக் குல தம்பிரானுடனே ஒரு
24. கலத்தில் உண்பதாலும் பூசாரி கொண்டுக் கவன்
25. டன் சகல தேவதைக்குங்கை கருமஞ் செய்வதா
26. லும் எட்டுநாளை நோன்புயிருந்து தேவதை சம்மதி
27. ப்படிக்கு நாலு கும்பிடு கண்டதாலு மல்லேசுபரன்
28. வாக்குப்படிக்குப் பெருமாள் பூசாரி கோட்டைக் கெம்
29. பக் கவண்டனும் குலதெய்வம் பூசாரி கொண்டு
30. க் கவண்டனையும் யிருபேரையும் சரிகும்பிடு கண்
31. டு மற்றக்குடிக்கு முன்னவன் ஒள்ளிக் கவண்டன்
32. தீத்தாக் கவண்டன் சின்னத்தம்பிக் கவண்டன்
33. வெள்ளையக் கவண்டன் சவடி தாளப்பக் கவண்டன்
34. மற்றக்குடியர் சகலருங் கும்பிடுங் கண்டு கருஞ்சாதி
35. சவடி சிக்கல் முத்தன் அவன் சம்மந்தம் சுருதிக்
36. கொண்டன் வாணியார் தீத்தன் முதலாகிய சனமுங்
37. கும்பிடுங்கண்டு கோயில்த் தொளிலாளி தலத்தில் (த்
38. தில்) க்காத்திருக்கிறவனுக்கு களக் குறுணியுங்கட்டுங்கு
39. டுக்கவும் தலத்தில் யிராமலிருக்கிற தொளிலாளிக்குச்
40. சனம் -க -க்கு பத்துப் பணம் கோயி(ல்) நாக சுரங்கைய்யில்ப் பிடி
41. த்தவனுக்கு வருடாந்திரம் கருஞ்சாதியில் யினவளி தெ
42. ¡டுத்து வாங்கவும் விழுந்த காணிக்கையும் கருஞ்சாதிப்ப
43. ணமும் முன்னவனான பூசாரி கொண்டு கவண்டன் வள
44. வில் வந்த ருயா சகலரும்20 சாப்பாடும் கோயில் பொ
45. துச் சிலவும் நீக்கி மிஞ்சின ஆதாயம் தெய்வத்துக்கு
46. க்கை கருமஞ் செய்து வருகிற பூசாரி கொண்டுக் க
47. வண்டனுக்கு யிந்த வந்தினைவளிபாடாய் சிறப்புங்
48. குடுக்கவும் பூசாரி கற்மாதிக்கு உடையவன் சின்
49. னத் தம்பிக் கவண்டன் வருடம் ஒன்றுக்கு வரி
50. சை பட்டையத்துக்கு ஒரு பணம் இந்தப் பட்டய
51. த்துக்கு தீங்கு செய்யவென்று நினைத்தவன் போ
52. ன தோசத்திலெ போகாமல்ப் பெரிய தம்பி கோ
53. ட்டைக் கெம்பக் கவண்டன் தங்காரஞ்21 செய்த பே
54. ற்க்குக் குடுத்து வரவும் தொட்டராயப் பெருமாள்கி
55. றுபையுண்டு உ குமரன் துணை.

இச்செப்பேட்டில் கி.பி. 1123ஆம் ஆண்டுக்குச் சமமான சக வருடம் 1045 மற்றும் கொல்லம் 299 ஆகியவை குறிப்பிடப்படுகின்றன சீவலமாறவெட்டும் பெருமாள் ராசா, தமது தம்பியாகிய சீவலமாறக் குலசேகரராசா மூலமாகவும் மாப்பிள்ளை சிவசங்கர ராசா மூலமாகவும், செக்காலைக்குடி நாட்டாண்மை, நிலைமை முதலிய அதிகாரங்களை ஒள்ளிக் கவுண்டனுக்கு வழங்குகிறார். (செக்காலைக்குடி என்ற ஊர் இச்செப்பேட்டுக்குரியவர் வசிக்கின்ற பாறைக்குட்டம் வட்டாரத்தில்தான் உள்ளது. இவ்வூர், சீவலமாறக் குலசேகரராசா முன்னிலையில்தான் முதல் முதலில் குடியேற்றப்பட்டது என்ற விவரம் இச்செப்பேட்டின் முதல் பக்கம் வரி 10-13 ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது.)

கி.பி. 1140ஆம் ஆண்டுக்குச் சமமான சகம் மற்றும் கொல்லம் ஆண்டுகள் குறிப்பிடப்படும் புதுப்பட்டிச் செப்பேடு செக்காலைக்குடி உள்காவல் காணியாட்சியைச் சீவலமாற பராக்ரம பாண்டியன் ஆணைப்படி, மேற்குறிப்பிட்ட ஒள்ளிக்கவுண்டர், மயிலம் பராக்ரம பாண்டிய நாயக்கருக்கு வழங்கிய செய்தியைக் கூறுகிறது. அதாவது, கயத்தாற்றுப் பாண்டிய மன்னர்களிடமிருந்து செக்காலைக்குடி ஊரின் நாட்டாண்மை முதலிய அதிகாரங்களைப் பெற்ற, கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அனுப்பக்கவுண்டர் குலத்தவராகிய ஒள்ளிக்கவுண்டன், செக்காலைக்குடி ஊரின் உள்காவல் காணியாட்சியை (தமது பிரதிநிதியாக இருந்து ஊரின் காவல்பணி புரியும் அதிகாரத்தை)க் கயத்தாற்றுப் பாண்டிய மன்னன் ஆணைப்படியே, கம்பளத்து நாயக்கர் குலத்தைச் சேர்ந்த மயிலம் பராக்கிரம பாண்டிய நாயக்கருக்கு வழங்கிய செய்தியைக் கூறுகிறது.

கி.பி. 1166க்குச் சமமான சகம் மற்றும் கொல்லம் ஆண்டுகள் குறிப்பிடப்படும் சமூக ரெங்கபுரம் செப்பேடு (புதுப்பட்டிச் செப்பேடு பற்றிய எனது கட்டுரையின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள செப்பேடு), செக்காலைக்குடி கிராமத்தின் அருகிலுள்ள பேரூரணி (பேரூரணி என்ற பெயர் பெரிய ஊருணி என்ற அடிப்படையில் தோன்றியதாகலாம். இந்த வட்டாரத்தில் மக்கள் நீரருந்தப் பயன்படுத்தும் ஊருணிக் குளங்கள் உள்ளன.) கிராமம் குறித்த முழுமையான அதிகாரத்தை ஒள்ளிக்கவுண்டன் மகன் கோட்டைக் கெம்பக் கவுண்டனுக்குச் சீவலமாற குலசேகரராசா வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது.

மேற்குறித்த மூன்று பட்டையங்களுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை ஆகும். இவற்றுள் சமூக ரெங்கபுரம் செப்பேடே அளவில் பெரியது. அச்செப்பேட்டை வைத்திருப்போர் பேரூரணி கோட்டைக் கெம்பக் கவுண்டன் வம்சத்தவராவர். அவர்கள் பேரூரணியிலிருந்து இன்றைக்குச் சற்றொப்ப முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1975 அளவில்) சமூக ரெங்கபுரத்திற்குக் குடிபெயர்ந்தனர். சமூக ரெங்கபுரத்தில் அக்குடும்பத்தவர் இருப்பதால் சமூக ரெங்கபுரம் செப்பேடு என்று அச்செப்பேட்டைக் குறிப்பிடுகிறோமே தவிர சமூக ரெங்கபுரத்திற்கும் அச் செப்பேட்டிற்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை. செப்பேட்டை வைத்திருப்போர் தற்போதும் கோட்டைப் பாண்டியக் கவுண்டன் குடும்பம் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர். அக்குடும்பப் பெயரில் இடம்பெற்றுள்ள கோட்டை பேரூரணிக் கோட்டை ஆகும். பேரூரணி கிராமம் தொடர்பாகக் கொம்மட்டிக் கவுண்டனுக்கும் முடித்தானேந்தல் என்ற ஊரைச் சேர்ந்த செழுகை வேளாளர்களுக்கும் இடையே கி.பி. 1645இல் வழக்கு ஏற்பட்டுள்ளது. (இச்செய்தி புதுப்பட்டிச் செப்பேடு பற்றிய எனது கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.) செழுகை வேளாளர் அல்லது நற்குடி வேளாளர் எனப்படுவோர் ஸ்ரீவைகுண்டம் கோட்டைப் பிள்ளைமாரின் தாயாதியர் ஆவர். பேரூரணி, செக்காலைக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகில் அல்லிக்குளம் என்ற ஓர் ஊர் உள்ளது. அவ்வூரில் கி.பி. 14ஆம் நூற்றாண்டிலேயே நற்குடி வேளாளர் குடியேறிவிட்டனர் எனத் தெரிகிறது. அவர்கள் மறவர் சீமையான ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியிலுள்ள செழுவனூர் என்ற ஊரிலிருந்து பாண்டிய மன்னர்களின் முழுமையான அதிகாரத்திலிருந்த நெல்லைச் சீமையில் – இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் – உள்ள அல்லிக்குளம் பகுதிக்கு வந்து குடியேறினர். எனவே, அவர்கள் தங்களைச் செழுகை வேளாளர் எனக் குறிப்பிட்டுக்கொண்டனர்.22 கி.பி. 1450ஆம் ஆண்டளவில், அதாவது அரிகேசரி பராக்கிரம பாண்டியன் தென்காசியைத் தலைநகராகக் கொண்டும், அவனது இளவலான வீரபாண்டியன் மணப்படைவீட்டைத் தலைநகராகக் கொண்டும் ஆட்சி புரிந்து வந்த காலகட்டத்தில் அல்லிக்குளம் ஊரைவிட்டு இவர்களுள் ஒரு பிரிவினர் ஸ்ரீவைகுண்டம் சென்று குடியேறிக் கோட்டைப் பிள்ளைமார் எனப் பெயர் பெற்றனர். அல்லிக்குளத்திலேயே எஞ்சி நின்ற மறுபிரிவினர் பேரூரணி, முடித்தானேந்தல், செவ்விளை (சிவகளை), கொற்கை முதலிய ஊர்களிலும் பரவலாகக் குடியேறினர்.

சமூக ரெங்கபுரம் செப்பேட்டில் கயத்தாற்றுப் பாளையத்தை மதுரைப் பாண்டியராசாவிடமிருந்து காத்ததாகவும், மதுரைப் பாண்டிய ராசாவின் மருமகன் இருங்கோளப் பாண்டியனைக் கொன்றதாகவும் கோட்டைக் கெம்பக்கவுண்டன் குறிப்பிட்டுக் கொள்கிறார். இருங்கோளப் பாண்டியன் என்று அச்செப்பேட்டில் குறிப்பிடப்படுபவர் செழுகை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும்.23 மதுரைப் பாண்டிய ராசாவின் மருமகன் இருங்கோளப் பாண்டியனுக்கும் கயத்தாற்று பாண்டிய ராசாவுக்கும் பூசல் ஏற்பட்ட காலகட்டம் கி.பி. 1540-1550 ஆண்டளவிலாக இருக்க வேண்டும். தென்காசிப் பாண்டியர், கயத்தாற்றுப் பாண்டியர் போன்ற பெயர்களில் நெல்லைச் சீமையை ஆண்ட பாண்டிய வம்சத்தவருள் விஜயநகர அரசர்கள் அச்சுதராயர், விட்டலராயர் ஆகியோர் ஆட்சிக் காலத்தில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. அக்குழப்பத்தைப் பயன்படுத்திச் செழுகை வேளாளர்கள் மதுரை நாயக்க அரசின் புதிய அதிகார மையமாகவும் படைப் பிரிவாகவும் செயல்பட்டுத் தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றிருக்க வேண்டுமென்று முடிவுசெய்யலாம். அதற்குச் சமகாலத்தில் சீவலமாற பராக்கிரம பாண்டியன் எனப்பட்ட திருநெல்வேலிப் பெருமாளுக்கு உதவி செய்கின்ற நோக்கில் அனுப்பக் கவுண்டர்கள் நெல்லைச் சீமையில் குடியேறி இருக்கலாம். கி.பி. 1597 (ஹேவிளம்பி) ஆண்டளவில் தென்காசிப் பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியன் மற்றும் மதுரை அரசர் வீரப்ப நாயக்கர் ஆதரவுடன் சிறுபாலை அச்சராமக் கவுண்டன் என்ற அனுப்பக் கவுண்டர் குல வீரர் மதுரை, விருதுநகர், சிவகாசிப் பகுதிகளில் காணியாட்சி பெற்றாரென்றும், ஆனால் அக்காணியாட்சி உரிமையைச் சிவகாசிப் பகுதியிலிருந்த அனுப்பக் கவுண்டர் குலத் தலைவர் புல்லக்கவுண்டர் ஏற்கவில்லை என்றும், அதனால் சிறுபாலை அச்சராமக் கவுண்டரின் அதிகார வரம்பு சுருங்கிப் போயிற்றென்றும், திருமலை நாயக்கரின் பிரதானிகள் வைத்தியநாத ஐயர், ராமப்ப ஐயர் ஆகியோரின் தலையீட்டால் சற்றொப்பக் கி.பி. 1640-45 அளவில் மதுரைக்கு அருகிலுள்ள சிறுபாலைப்பாளையம் அச்சராமக் கவுண்டர் வம்சத்தவருக்கு வழங்கப்பட்டு ஒருவிதமான சமரசம் ஏற்பட்டது என்றும் வெம்பக்கோட்டைச் செப்பேடு24, சிறுவாலைச் செப்பேடு25 ஆகியவற்றால் தெரியவருகின்றன. அனுப்பக் கவுண்டர்களுடைய குடியேற்றத்தைக் குறிப்பிடும் மற்றொரு செப்பேடு வெள்ளியங்குன்றம் செப்பேடு26 ஆகும். அச்செப்பேடு திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாயினும் மதுரை நாயக்கத்தனத்தை நிறுவிய விசுவநாத நாயக்கரால் வெள்ளியங்குன்றம் பாளையப்பட்டு அனுப்பக் கவுண்டர்களுக்கு வழங்கப்பட்டது என்ற செய்தியைக் குறிப்பிடுகிறது.

கி.பி. 1547ஆம் ஆண்டைச் சேர்ந்த நடுகற்கள் பல இளவேலங்கால் என்ற ஊரில் கண்டறியப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதத்தக்க நடுகல் ஒன்று மேலைச்செக்காலைக்குடியில் என்னால் கண்டறியப்பட்டுள்ளது. அந்நடுகல் சீவலமாற வெட்டும்பெருமாளின் அணியில் போரிட்டு வீழ்ந்த அனுப்பக் கவுண்டருக்கு உரியதாகவே இருக்கவேண்டும். இப்போர்களில் பாண்டிய மன்னனை எதிர்த்து நெல்லைச் சீமையை ஆக்கிரமிக்க முயன்ற படை வடுகப்படை என்றும் வெங்கலராசன் என்ற அரசன் அவ்வடுகப்படையை வழிநடத்தி வந்தான் என்றும் இளவேலங்கால் நடுகற்களில் குறிப்பிடப்படுகின்றன. இக்கால கட்டத்திற்குப் பின்னர் – குறிப்பாக 17ஆம் நூற்றாண்டில் – வடுகப்படை வீரர்களான கம்பளத்து நாயக்கர்கள் அனுப்பக் கவுண்டர்களுடன் சமரசம் செய்து கொண்டனர் என ஊகிப்பதற்கு ஆதாரம் உள்ளது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் முன்னோர்களான, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தோகலவார் பிரிவைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர்கள் எண்ணிக்கையில் அதிகமான அளவில் இருந்ததாலும், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அனுப்பக் கவுண்டர்கள் எண்ணிக்கையில் குறைவான அளவில் இருந்ததாலும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கவரை நாயுடு சமூகத்தவர்கள் மதுரை நாயக்க அரசர்களாக ஆட்சி பீடத்தில் அமர்ந்து விட்டதாலும் இத்தகைய சமரசம் எளிதில் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கம்பளத்து நாயக்கர்கள் கவரை நாயுடு சமூகத்தவர் மட்டுமின்றி, கம்மவார், ரெட்டியார் போன்ற தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் சமூகத்தவர் மிகுந்த அளவில் நெல்லைச் சீமையில் – குறிப்பாக இச்செப்பேடுகள் வழக்கிலிருந்த பகுதிகளில் குடியேற்றப்பட்டதாலும் இத்தகைய சமரசம் எளிதில் நிகழ்ந்திருக்க வேண்டும்.

சமூக ரெங்கபுரம் செப்பேட்டில் கி.பி. 1166ஆம் ஆண்டுக்குச் சமமான சகம் மற்றும் கொல்லம் ஆண்டுகள் குறிப்பிடப்பட்டாலும், எழுத்தமைதி, சொல் வழக்குகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அச்செப்பேடு 17ஆம் நூற்றாண்டில், குறிப்பாகத் திருமலை நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட செப்பேடாகவே தெரிகிறது. திருமலை நாயக்கரின் பிரதானியான வடமலையப்ப பிள்ளை காரைக்காட்டு வேளாளர் வம்சத்தைச் சேர்ந்தவராவார். அவ்வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பேரூரணியில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய தடயங்களையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் வடமலையப்ப பிள்ளையின் ஆதரவுடன் செழுகை வேளாளர்கள் இப்பகுதியின் மீது தாங்கள் கொண்டிருந்த நீண்ட நாளைய (சற்றேறக்குறைய 3 நூற்றாண்டுகள்) உரிமையைக் காத்துக் கொண்டனர் என நாம் முடிவு செய்யலாம்.

கயத்தாற்றுப் பாளையத்தின் அரசனான சீவலமாறக் குலசேகர ராசாவை எதிர்த்து மதுரைப் பாண்டிய அரசனின் மருமகன் இருங்கோளப் பாண்டியன் கயத்தாற்றை முற்றுகையிட்டுப் போர் தொடுத்ததாகவும் அப்போர் 3 ஆண்டுகள் நடைபெற்றது என்றும் சமூக ரெங்கபுரம் செப்பேடு குறிப்பிடுகிறது. அப்போரில் சீவலமாறக் குலசேகர ராசாவுக்குத் துணை நின்று கயத்தாற்றுப் பாளையத்தைக் காத்த அனுப்பக் கவுண்டன் குலத் தலைவர், 17 ஆண்டுகள் சீவலமாறக் குலசேகர ராசாவிடம் காத்துக் கிடந்து பேரூரணியின் நாட்டாண்மை உரிமையைப் பெற்றதாகவும் அச்செப்பேடு குறிப்பிடுகிறது. இந்த ஆண்டுக் கணக்கீடு பற்றிய குறிப்பு சரியானதாயின் புதுப்பட்டிச் செப்பேடு வழங்கப்பட்ட பின்னர் 20 ஆண்டுகள் கழிந்த பின்னரே பேரூரணியின் நாட்டாண்மை உரிமையை அனுப்பக் கவுண்டர் குலத்தவர்கள் பெற்றதாகக் கருதிட இயலும். ஆனால், புதுப்பட்டிச் செப்பேட்டில் வரி 14-16இல் “அய்யா பேரூரணி கோட்டைக் கெம்பக் கவுண்டன்” எனக் குறிப்பிட்டுள்ளது பொருத்தமாக இல்லை. புதுப்பட்டிச் செப்பேடு பற்றிய எனது கட்டுரையில் அடிக்குறிப்பு 6இல் இம்முரண்பாடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இம்முரண்பாட்டிற்கு என்ன காரணம் இருந்திட இயலும் என ஆராய்ந்தால் பின்வருமாறு விளக்கம் கூறலாம்.

திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் (17ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்) அவருடைய பிரதானி வடமலையப்ப பிள்ளையின் ஆதரவுடன் செழுகை வேளாளர்கள் பேரூரணி வட்டாரத்தில் தம்முடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டபோது கயத்தாற்றுப் பாண்டியர்களின் ஆதரவுடன் 16ஆம் நூற்றாண்டிலேயே அப்பகுதியில் குடியேறிவிட்ட அனுப்பக் கவுண்டர் குலத்தவர்கள் தங்களுடைய உரிமை குறித்த நம்பகத்தன்மையை நிலைநாட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். அம்முயற்சியின் ஓர் அங்கமாகவே செக்காலைக்குடி ஒள்ளிக்கவுண்டன் மகன் கோட்டைக் கெம்பக்கவுண்டனுக்குப் பேரூரணி வணிதசேகர கிராமத்தின் நாட்டாண்மை முதலிய அதிகாரங்களை 12ஆம் நூற்றாண்டிலேயே கயத்தாற்றுப் பாண்டிய மன்னர்கள் வழங்கியிருப்பதாக ஒரு செப்பேட்டைப் போலியாகத் தயாரித்திருக்க வேண்டும். அச்செப்பேடே தற்போது சமூக ரெங்கபுரம் கோட்டைப் பாண்டியன் என்பவரிடம் உள்ள செப்பேடாகும். செக்காலைக்குடி ஒள்ளிக் கவுண்டன் என்று அச்செப்பேட்டில் குறிப்பிடப்படுபவர் 16ஆம் நூற்றாண்டில் வெட்டும் பெருமாள் சார்பாக வெங்கலாராசனின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டு இறந்து மேலைச் செக்காலைக்குடியில் நடுகல்லாக நிற்கும் வீரனாக இருக்கலாம். திருமலை நாயக்கர் காலத்தில் செழுகை வேளாளருடன் நடந்த வழக்கில் பேரூரணி கோட்டைக் கெம்பக் கவுண்டன் வம்சத்தைச் சேர்ந்த அனுப்பக் கவுண்டர்களுக்கு இருந்த பூர்விக உரிமைகள் சிலவும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

இந்நிகழ்வுகள் நடந்து முடிந்து ஓரிரு நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் நிர்வாக நடவடிக்கைகளின் விளைவாகச் செக்காலைக்குடி ஒள்ளிக் கவுண்டனின் நேர் வாரிசுகளுக்குத் தங்களுடைய பூர்விக அதிகாரம் குறித்த ஆவண ஆதாரங்களைச் சமர்ப்பித்துத் தங்கள் உரிமையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். அதேபோன்று அனுப்பக் கவுண்டர்களின் ஆதரவுடன் செக்காலைக்குடி வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த கம்பளத்து நாயக்கர் குலத்தவருக்கும் தமது பூர்விக உரிமை குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பித்து தமது நம்பகத்தன்மையை நிறுவ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். இத்தகைய நிர்ப்பந்தங்களின் விளைவாகவே இக்கட்டுரையில் நாம் விவாதிக்கின்ற பாறைக்குட்டம் அனுப்பக் கவுண்டர் செப்பேடு, முன்பு விவாதித்த புதுப்பட்டி கம்பளத்து நாயக்கர் செப்பேடு ஆகியவை பழமைச் சாயல் தோன்றும் வண்ணம் புதியனவாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, இச்செப்பேடுகளை போலியானவை எனக் கருதிப் புறக்கணிப்பது தவறாகும். அதே வேளையில், இவற்றை ஆழமான சமுக வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் கூடிய பரிசீலனைக்கு உட்படுத்தப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அடிக்குறிப்புகள்:

1. சகாத்தம் (சகாப்தம்)
2. 1045ஆம் வருடம்
3. 299ஆம் வருடம்
4. 15ஆம் தேதி
5. ஞாயிற்றுக் கிழமை
6. இலக்கடி என்பது லேகா என்ற சொல்லின் திரிபாகத் தெலுங்கில் வழங்கும் இலக்கம் என்ற சொல்லுடன் தொடர்புடையதாகலாம்.
7. 27
8. 9 1/2 (ஒன்பதரை)
9. அஞ்சல்காரன் என்பது “தகவல் கொண்டு செல்லும் ஓட்டன்” எனப் பொருள்படும்.
10. 39 1/2
11. 45
12. கயறு 4 எனக் குறிப்பிடப்படுவது நில அளவாகும். கஜம் –> கயம் என்ற சொல் வேற்றுமை உருபுடன் சேரும்போது அத்துச் சாரியை பெற்றுக் கயத்து என வழங்கும். அது கயற்று எனத் ‘திருத்தப்பட்டு’ தவறான புரிதலின் அடிப்படையில் கயறு என வழங்கத் தொடங்கியிருக்கலாம்.
13. வேலி 2 ஆகலாம்.
14. கயறு 2
15. வேலி 1 1/4
16. ‘உள்ள’ எனப் படிக்கவும்.
17. நிட்சேபம். புதையல் எனப் பொருள்படும்.
18. “தூண்டின விரல் சொக்கம் பெறுகிறதாகவும்” என்பது, கோயில் விளக்கினை அணையாமலிருக்கத் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலியாகப் பிறந்தது என்ற கதை போன்ற ஒரு குறிப்பாகலாம். சொக்கம் என்பது சொர்க்கம் என்பதன் திரிபாகவோ சொக்கத் தங்கம் என்பதன் மரூவாகவோ இருக்கலாம். சொக்கம் என்பது சொக்கத் தங்கம் என்று பொருள் கொண்டால் தூண்டின விரல் பொன்னாகும் எனப் பொருள்படும்.
19. கோட்டை என்பது தவறாக எழுதப்பட்டிருக்கலாம் அல்லது ‘ஜேஷ்ட’ (மூத்த) என்ற சொல்லின் திரிபான ‘கேட்டை’ ஆகலாம்.
20. “வந்தவரு யா சகலரும்” (வந்த அனைவரும்) எனக் கொள்ளலாம்.
21. “தங்காரியம்” ஆகலாம்.
22. செழுகை வேளாளரின் குடிப் பெயர்வு குறித்து, ‘Boundary Walls – Caste and Women in a Tamil Community’ என்ற நூலில் முனைவர் கமலா கணேஷ் அவர்கள் ஆராய்ந்துள்ளார். (பதிப்பு: Hindustan Publishing Corporation, Delhi, 1993)
23. செழுகை வேளாளர் சமூகத்தின் தலைவர் ‘பட்டத்து இருங்கோள் பிள்ளை’ என அழைக்கப்பட்டதாகவும், அவருடைய தலைமை இடமான முடித்தானேந்தல் என்பது ‘முடிவைத்தான் ஏந்தல்’ என்ற பெயரின் மரூஉ மொழி என்றும் தெரியவருகின்றன. இவர்கள் பாண்டிய அரசனுக்கு முடிசூட்டும் அதிகாரம் பெற்றிருந்ததாக உரிமை கொண்டாடுகின்றனர். அடிக்குறிப்பு 22இல் குறிப்பிடப்படும் ‘Boundary Walls – Caste and Women in a Tamil Community’ என்ற நூலில் இந்த அதிகாரம் குறித்த பல செய்திகள் விவாதிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரம் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் இவர்களுக்குக் கிட்டியிருக்கலாம். கி.பி. 1268ஆம் ஆண்டில் முடிசூடிய மதுரைப் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகரன் தனது மெய்க்கீர்த்தியில் “பழுதறு சிறப்பின் செழுவையர் காவலன் வீரசிங்காதனத்து ஓராங்கிருந்தே ஆரும் வேம்பும் அணியிதழ் புடையாத் தாரும் சூழ்ந்த தடமணி மகுடம் பன்னூறூழி தொன்னிலம் புரந்து வாழ்கெனச் சூட்ட மகிழ்ந்துடன் சூடி” என்று குறிப்பிட்டுக் கொள்கிறான். இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்படும் ‘செழுவையர் காவலன்’ என்பது இருங்கோளப் பிள்ளை வம்சத்து மூதாதையாகவே இருக்க வேண்டும். செழுகை வேளாளர்கள் பெண்வழி வாரிசுரிமை உடையவர்களாவர். சமூக ரெங்கபுரம் செப்பேட்டில் மதுரைப் பாண்டிய ராசாவின் மருமகன் இருங்கோளப் பாண்டியன் எனக் குறிப்பிடப்படுவது இந்தத் தாய்வழி அதிகார உரிமையைச் சுட்டிக்காட்டும் மறைமுகக் குறிப்பே எனலாம். மேற்குறித்த மாறவர்மன் குலசேகரன் மெய்க்கீர்த்தியில் சோழ மன்னர்களின் மாலையாகிய ஆரும் (ஆத்தியும்) குறிப்பிடப்படுவது சோழர் ஆட்சியின் வீழ்ச்சியை அடுத்து சோழ அரசின் அதிகாரத்தையும் பாண்டிய மன்னர்கள் ஏற்ற நிகழ்வை உணர்த்துகிறது. சோழர் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் பிள்ளை இருங்கோளர் என்ற பட்டத்துடன் கூடிய உயர் அதிகாரிகள் இருந்துள்ளனர். (கி.பி. 1236ஆம் ஆண்டுக்குரிய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் அச்சுதமங்கலம் சோமநாத சுவாமி கோயில் கல்வெட்டு, “நன்னிலம் கல்வெட்டுகள்” – இரண்டாம் தொகுதி, தொடர் எண் 267/1978, வரிகள் 19-20, தொகுப்பாசிரியை: முனைவர் ஆ. பத்மாவதி, தமிழ்நாடு தொல்லியல் துறை, 1980) செழுகை வேளாளர் குடித்தலைவர் இருங்கோள் பிள்ளை என்ற பட்டம் புனைவது, பிள்ளை இருங்கோளர் என்ற சோழர் காலப் பட்டத்துக்கும் இக்குலத்தவருக்கும் உள்ள தொடர்பை உணர்த்தக்கூடும். திருக்குறள் உரையாசிரியர்களுள் ஒருவரான பரிப்பெருமாள் (தென்செழுவைத் தெய்வப் பரிப்பெருமாள் – கி.பி. 12ஆம் நூற்றாண்டு) இருங்கோளப் பிள்ளை வம்சத்தவராக இருக்கலாம். இத்தகைய குறிப்புகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தினால்தான் செழுகை வேளாளர் குலத்தலைவர் சூட்டிக்கொள்ளும் இருங்கோள் பிள்ளை என்ற பட்டப்பெயரின் வரலாற்றுப் பின்னணியை உணர இயலும்.
24. “வெம்பக்கோட்டைச் செப்பேடு” – எஸ்.எம். கமால், கல்வெட்டு இதழ்-29, பக்கம் 6-11, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
25. “திருமலை நாயக்கர் செப்பேடுகள்” நூலில் இடம்பெற்றுள்ள “சிறுவாலை ஜமீன் செப்பேடு” – சு. இராசகோபால், வெ. வேதாசலம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1994.
26. “திருமலை நாயக்கர் செப்பேடுகள்” நூலில் இடம்பெற்றுள்ள நான்காவது செப்பேடு – – சு. இராசகோபால், வெ. வேதாசலம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1994.

(இக்கட்டுரையின் சுருக்கமான வடிவம், ‘பழங்காசு’ இதழ் 14இல் வெளிவந்துள்ளது. பழங்காசு – நாணயவியல் வரலாற்றியல் காலாண்டிதழ், நிறுவனர்: ப. சீனிவாசன், 1/385, சீதக்காதி தெரு, காட்டூர் (தெற்கு), திருச்சி-620019, தொலைபேசி: +91-431-2532043, ஓரிதழ் நன்கொடை ரூ. 25/- ஓராண்டு நன்கொடை ரூ. 80/-)

maanilavan@gmail.com

Series Navigation

எஸ். இராமச்சந்திரன்

எஸ். இராமச்சந்திரன்