பார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

வெளி ரெங்கராஜன்.


இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானிய எழுத்தாளரான யசுனாரி கவபட்டாவின் மிகவும் தனித்துவம் வாய்ந்த இலக்கியப் படைப்பு என்று இந்த நாவலை கூற முடியும். மனிதன் தனிமைப்படுத்தலை ஒரு மிகவும் நெகிழ்ச்சியான பின்புலத்தில் வைத்து ஆராயும் இந்த நாவல் ஒரு உயிரோட்டமான வாசிப்பை தருகிறது. பொதுவாக ஜப்பானிய கலாச்சாரம் மனிதனின் தனிமை பற்றியும் அழகியல் நோக்கு பற்றியும் உடல் மொழி பற்றியும் மரணம் பற்றியும் தன்னுடைய அதிர்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. தற்கொலை தேசம் என்று சொல்லுமளவுக்கு வாழ்வின் அர்த்தமின்மையையும் வெறுமையையும் தோல்விகளையும் எதிர்கொள்ள தற்கொலையை ஒரு வடிவமாக பயன்படுத்தி வருகிறது. ஜப்பானிய சிறுவர்களும் சிறுமிகளும் கூட இந்த தற்கொலை விளையாட்டிலிருந்து தப்பியவர்கள் அல்ல. ஜப்பானிய எழுத்து இத்தகைய மனோவியல் மீது தன்னுடைய ஆழ்ந்த அக்கறையையும் கவலையும் தொடர்ந்து செலுத்தி வருகிறது. அதீத உணர்வுகளுக்கு தள்ளிவிடாது மனிதர்களை சமூகத்தின் பிடியில் இருத்திக் கொள்ளவே ஜப்பானிய மரபு விரும்புகிறது. ஜப்பானில் ஜென் செல்வாக்கு பெற்றதற்கான காரணங்களை இந்த பின்புலத்திலேயே நாம் புரிந்துகொள்ள முடியும். ஜப்பானிய நாட்டுப்புற வடிவமான நோ மற்றும் மல்யுத்தம் போன்ற உடற்கலைகள், முதியோருக்கான மசாஜ் மற்றும் குளியல் விடுதிகள், செஸ் விளையாட்டில் அதீத ஈடுபாடு ஆகிய தீவிரங்களை இந்த பின்னணியிலேயே நாம் விளக்க முடியும்.

கவபட்டாவும் ஜென் தத்துவத்தின் வழியிலும் கீழை நாட்டு இலக்கியங்களின் அழகியல் உணர்விலும் தம்மை இணைத்துக் கொள்பவராகவே தோன்றுகிறார். கவபட்டாவை அழகினூடே பயணித்தவர் என்றே கென்ஸாபுரோ ஓயி என்கிற மற்றொரு ஜப்பானிய நோபல் பரிசு எழுத்தாளரும் குறிப்பிடுகிறார். ஆனால் கவபட்டா மேற்குலகின் நிஹிலிஸ கோட்பாட்டுக்கு மாறாக வெறுமை என்பதை ஒருவித கவித்துவத்துடன் இணைத்து மனித இயக்கத்துக்கான சில சாத்தியங்களை முன்வைக்கிறார். கீழை நாட்டு பூடகவாதத்தின் ஒரு அபூர்வத்தன்மையை — இந்த அபூர்வம் என்பது கூட ஒரு ஜென் புத்தமதப் பண்புதான் — இந்த நாவல் வெளிப்படுத்துகிறது. முதியோருக்கான ஒரு பிரத்யேகமான கேளிக்கை இல்லத்தை களனாகக் கொண்டு பின்னப்பட்ட இந்த நாவல் முதுமையில் தோன்றும் பாலியல் விழைவுகளும் இயலாமைகளும் மரணத்தின் அண்மையை நினைவு படுத்துவதை சிறுசிறு இழைகளாக ஆராய்கிறது.

தூக்க மருந்து செலுத்தப்பட்டு நிர்வாணமாக உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கும் இளம் பெண்ணுடன் அவளுக்குத் தெரியாமலேயே இரவைக் கழிக்க வாய்ப்புள்ள ஒரு பிரத்யேகமாக இல்லத்தில் எகுச்சி என்கிற 67 வயது முதியவர் ஐந்து முறை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தன்னுடைய இரவுகளைக் கழிக்கிறார். அந்த ஐந்து இரவுகளில் எகுச்சி சந்திக்கும் பெண்களை வைத்து அவருடைய சிந்தனை ஓட்டத்தை பதிவு செய்கிறது இந்த நாவல். அந்த இளம் பெண்களின் அண்மையில் தன்னுடைய முதல் காதல் பற்றியும் தன்னுடன் உறவு கொண்ட பெண்களைப் பற்றியும் அவருடைய நினைவுகள் பயணம் கொள்கின்றன. வெவ்வேறு பரிமாணங்களில் பெண் உடலின் அண்மையும் , ஸ்பரிசமும் பல்வேறு உணர்வுகளை அவரிடம் கிளர்ந்தெழச் செய்கின்றன. பாலியல்தன்மை மற்றும் இறப்பு பற்றிய இரட்டை தியானங்களில் அவருடைய உணர்வுகள் பயணம் செய்தாலும் அந்தப் பெண்களின் நினைவிழந்த நிலையில் இந்த உணர்வுகள் அவரிடம் ஒருவிதமான தாழ்வுணர்ச்சியை அதிகரிக்கவே செய்கின்றன. அந்த அமைதியை எப்படிக் குலைப்பது என அவர் மனம் ஊசலாடுகிறது. இதைப் போன்ற மனநிலையில் விடுதிக்கு வந்த இன்னொரு முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு இறக்க அந்த மரணத்தின் பின்புலத்தில் சூழல் மேலும் இறுக்கமாகிறது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அதிகமான தூக்கமருந்து செலுத்தப்பட்டு அவருடன் உறக்கத்தில் ஆழ்ந்த ஒரு பெண் மருந்தின் அளவு அதிகமானதால் தூக்கத்திலேயே இறந்துவிட்டிருப்பதை அவர் அறிய நேரிடுகிறது. பதட்டமின்றி அவள் அங்கிருந்து அகற்றப்பட்டு அந்த இரவுகள் வழக்கமான முறையில் தொடர்வதை மிகுந்த மன அழுத்தத்துடன் அவர் பார்த்துக் கொண்டிருக்க நாவல் முடிவடைகிறது.

நாவல் முழுவதும் மிகுந்த ஈர்ப்புத்தன்மையுடனும் விறுவிறுப்புடனும் சொல்லப்பட்டிருக்கிறது மிகவும் நெகிழ்ச்சியான ஒரு சூழலை கவபட்டாவின் எழுத்து விரசத்தின் சாயல் இல்லாமல் அதிகபட்ச துல்லியத்துடனும் இறுக்கத்துடனும் கையாள்கிறது. முற்றிலும் நனவோடை உத்தியில் சொல்லப்படும் இந்த நாவல் மிகவும் கவித்துவமான விவரணைகளைக் கொண்டுள்ளது. எழுச்சியின் மனநிலை இவ்வாறு விவரிக்கப்படுகிறது.

‘அந்த மாயாஜால முகத்தால் வழிதவறி நடத்திச் செல்லப்பட்டவராய் எகுச்சி போகக் கூடாத பாதைக்குள் காலடி எடுத்து வைத்திருந்தார். இந்த இல்லத்தின் விருந்தாளிகளான வயோதிகர்கள் அங்கே வருத்தம் அதிகம் தோய்ந்த மகிழ்வுடனும், அழுத்தம் மிக அதிகம் வாய்ந்த தீரா தாகத்துடனும், அவர் கற்பனை செய்து கொண்டிருந்ததை விட மிக அதிக ஆழமான சோகத்துடனும் இங்கே வந்தார்கள் என்பதை இப்போது அவர் நன்றாக உணர்ந்து கொண்டார். அவர்களுடையது முதுமைப்பருவம் எய்தி விட்டவர்களுக்கான ஒரு சுலபமான சிறுபிள்ளை விளையாட்டுதான் என்றாலும், இளமைக்குத் திரும்ப ஒரு சுலபமான வழியே என்றாலும் அது தனது அடியாழத்தில் அந்த ஒன்றை, அதன் இழப்பு குறித்து எத்தனை வருத்தங்கள் இருந்தாலும், திரும்பி வரவே வராத, எந்த அளவுக்கு கடினமாக பிரயத்தனப்பட்டாலும் ஆறவே ஆறாத அந்த ஒன்றைத் தக்க வைத்திருந்தது. இன்றிரவின் அனுபவமான மாயவித்தைக்காரி இன்னமும் கன்னிப்பெண் என்பது அந்த வயோதிகர்கள் தங்கள் வாக்குறுதிகளுக்கு அளித்த மரியாதையை அடையாளப்படுத்துகிறது என்பதை விட அவர்களுடைய ஆண்மையிழப்பின் அச்சமூட்டும் அடையாளம் என்பதே சரி. அந்தப்பெண்ணின் பரிசுத்தம் அந்த வயோதிகர்களின் அவலம் போன்றிருந்தது ‘.

இது போன்ற விவரணைகள் நாவல் முழுக்க நிரம்பி உள்ளன. இளமை என்பது மூப்படைந்த மனிதனுக்கு ஒரு பயங்கரமாக இருப்பதை நாவல் வெவ்வேறு விதங்களில் சொல்கிறது. ஜப்பானியர்கள் அதீதமான வாழ்வு நிலைகள் குறித்தும் தனிமை உணர்வுகள் குறித்தும் இயலாமைகள் குறித்தும் கொண்டிருக்கும் மனப்புழுக்கத்தை நாவல் முழுவதும் நாம் பார்க்க முடிகிறது. இந்த நாவல் லதா ராமகிருஷ்ணனால் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு பெண் என்கிற முறையிலும் இலக்கியப்படைப்பு என்கிற நிலையிலும் மொழிபெயர்ப்பாளர் என்கிற முறையிலும் பல்வேறு சிக்கல்களை தாம் கடக்க நேர்ந்ததாக லதா ராமகிருஷ்ணன் ஒருமுறை கூறினார். இத்தகைய ஒரு சவாலை எதிர் கொண்ட அவருடைய இலக்கிய பொறுப்புணர்விற்காக தமிழ் வாசக உலகம் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. இதை வெளியிட்ட உன்னதம் இலக்கிய அமைப்பும் பாராட்டுக்குரியது.

***

Series Navigation

வெளி ரெங்கராஜன்

வெளி ரெங்கராஜன்