பார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

கோச்சா


பார்த்திபன் மீது நல் அபிமானமுள்ள ஒரு முகமறியா நண்பனின் நல்லெண்ணக் கருத்து இது:

தமிழ் திரையுலைச் சேர்ந்த் திரு.பார்த்திபன், அவரின் அமெரிக்க விநியோகஸ்தரின் குடைக்குள் மழை படம் சார்ந்த வியாபார திரையிடல் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்கா வந்த போனார்.

தமிழ் சினிமாவில் தனது நிலை பற்றிய அவரின் அதீத நம்பிக்கையும் , தமிழ் எழுது முறையில் அவரின் மத்தாப்பு வார்த்தை வித்தைகளும் அவரின் சொந்த விஷயம்.

ஆனால், அவர் அமெரிக்கத் தமிழர்கள் பற்றிய சில தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் வேதனைப்படுத்தக் கூடியது… வருத்தம் தரக்கூடியது.

ஆனந்தவிகடனில் , அவரின் தொடரில் கூறுகிறார், ‘ஒவ்வொரு சொட்டாத வியர்வைக்கும் இந்திய மதிப்பில் 47 மடங்கு சம்பாதிக்கும்…. ‘ என்று.

அது என்ன சொட்டாத வியர்வை… ?

உங்களுக்குத் தெரியுமா… ? ஊர்சுத்துவது, பெண்களை பேருந்து நிலையத்தில் கேலி செய்வது, பேருந்தில் இடிப்பது, என்ற உங்களின் திரைப்பட கதாநாயகன் வாழ்க்கை போன்று அல்லாமல், பத்தாவது தொடங்கிய புத்தகம், படிப்பு, மேல் படிப்பு அப்புறம் ஓயாத வேலை, வேலை என்ற ஒவ்வொரு மிமீ மிமீட்டராகத் தான் இங்கு வாழும் அமெரிக்கர்கள் அந்த 1=47 நிலையை அடைகிறார்கள்.

குப்பை கூட்டுவதில் இருந்து , சமையல் செய்வது வரை வேலையை முடித்து, பின் நித்தம் நித்தம் தனது அறிவு நிலையை சமன் செய்து கொள்ள படிபடிப்பு என.. வாழ்க்கை காணுகின்றனர்.

அதும் போக தமிழகம் போல் அல்ல, சம்பாத்தியத்தில் 33% வருமான வரி பிடிக்கப்பட்ட 1=47 பணம் வைத்துள்ளனர். எனக்குத் தெரிந்து 1 டாலருக்கு 45.30 கிடைப்பதே கஷ்டம். ஒரு வேளை பார்த்திபன் சொல்வது பர்மா பஜார் ஹவாலா ரேட்டோ… ?

—-

அமெரிக்கத் தமிழர்கள் பலருக்கு பொழுதுபோக்கு அம்சமாக திரைப்படம் நிச்சயமாக உண்டு.

அமெரிக்க மக்கள் திரைப்படம் பார்க்கும் முறைபற்றிய உங்களின் கருத்தாக நீங்கள் சொல்லியுள்ள, ‘காசு கொடுத்து வாங்கினாலும் கஞ்சா வாங்குவது குற்றம் என்பது போல் சில டாலர் கொடுத்து திருட்டு வி.சி.டியையும் டவுன்லோட் செய்வதை ஆதரிக்க வேண்டாமென வெளிநாட்டில் வாழும் இந்தியர்களைக் கேட்டுக் கொள்கிறேன் ‘ – என்று தங்களில் வார்த்தைகளுக்கு பதிலை தெளிவாக பார்ப்போம்.

இது,

அ. தமிழுக்காண அயல் நாட்டு திரை உரிமை விற்கப்படும் விதம்

— தமிழ் படத்தின் அயல்நாட்டு உரிமை பொதுவாக, திரு.யாஹியா, திரு.ஆனந்தா சுரேஷ், ஏ.பி இண்டெர்நேஷனல் ஆகியோர் வாங்கி பின் ஐங்கரன் மற்றும் பலருக்கு பிரித்து விற்கப்படுகிறது.

இதில், கமல், மணிரத்னம் நேரிடையாகவும் வியாபாரம் செய்கின்றனர்.

இதில் பொதுவாக மலேசியா பகுதியில் இருந்து திருட்டு வி.சி.டி இந்தியாவிற்கு போய்ச் சேருகிறது. அது இந்திய திரை அரங்கு வியாபாரத்தை மிகப் பெரிய அளவில் பாதிக்கிறது.

ஆனால், அமெரிக்காவில் வரும் பதிப்புகளால் திருட்டு வி.சி.டி உருவாகுவதில்லை. ஏனென்றால் இங்கு பல படங்கள் ஒன்று அல்லது இரண்டு பதிப்புகளும், பெரிய படங்கள் 5 பதிப்புகளும் கொண்டு திரையிடல் நடக்கிறது.

இதில், வளைகுடா மற்றும் நியூஜெர்சி தவிர மற்ற இடங்களில் பொதுவாக படம் வர இரண்டு வாரம் முதல் 5 வாரம் ஆகிறது.

ஆ. அப் படப் பிரதியை அமெரிக்காவிற்கு எப்படி ஏற்றுமதி ( ? ? ? ) பண்ணப்படுகிறது … ?

– 1. அமெரிக்க விநியோகத்திற்காக ROYALTY பனம் நிர்ணயிக்கப்படும். மிகச் சாதாரணப் படத்திற்கு $10,000 ROYALTY தருவார்கள்.

பின் பிரிண்ட் ஒன்றிற்கு $1500 கொடுப்பார்கள். பின் சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு COURIER செலவு ஒரு பிரிண்டிற்கு $400 ஆகும்.

2. அப்படி பிரிண்ட் இந்தியாவிலிருந்து , அமெரிக்கா அனுப்பும் போது அதில் மதிப்பு என்று $100 அல்லது $200 போடுவார்கள்.

தவிர, அதில் கேட்கபடும், ‘எதற்காக.. ? எனும் கேள்விக்கு, ‘ தனிப் பார்வை உபயோகத்திற்கு, வியாபாரா திரையிடலுக்கு அல்ல ‘ என்று விளக்கி எழுதுவார்கள்.

– இதனால், அமெரிக்க அரசாங்கத்திற்கு சுங்க வரி பட்டை நாமம்.

3. சில படங்கள், Baggage- ஆக எடுத்து வரப் படுகிறது. அதனால், COURIER செலவு மிச்சம்.

இ. தமிழ் சினிமாக்கள் பார்க்கபடும் மூலங்கள்:

1. திரையரங்குகளில்.

2. ஐங்கரன் போன்ற உரிமம் பெற்ற டி.வி.டி. வரும் போது

3. பலர் இணையத் தளங்களிலும் பார்க்கிறார்கள்.

ஆனால், இணையத்தளங்களில் படம் பார்த்தாலும், பிரபலர்களின் படங்கள் பார்க்க திரையரங்குகளுக்கு வருகிறார்கள்.

இதில் திரையரங்குகளுக்கு கட்டணம்… ?

பாடாவதி படங்களுக்குக் கூட, $8 தான்.

சாதாரண தெலுங்கு , இந்தி படங்கள் $5க்கு பார்க்க முடியும் போது, தமிழ் படம் $8 தான்.

அதிலும், சமுக சேவை காட்சிகள் என்று $8, $10 என்று வைப்பார்கள். இதில் வேதனை என்னவென்றால், வசுலில் எத்தனை சதவிகிதம் அந்த சேவை மையங்களுக்கு போகின்றது என்ற கணக்கு வழக்கு தரப் பட மாட்டாது.

இது, படங்களை லாப நோக்கில் வியாபாரம் செய்யும் உக்தியாகவே உள்ளது.

சரி, இணைய தளங்களில் டவுன்லோட் செய்யும் முறை…

– www.indiamoviezone.com www.tamilgrounds.com போன்ற இணையத்தளங்களில் நாம் பார்க்க கட்டண வசூல் முறையில் கிடைக்கிறது. அதற்கு சந்தாக்கள் paypal முறைகொண்டு பெறுகிறார்கள்.

அவர்களிடம் இது சட்டபூர்வமானதா என்று கேட்ட போது, ஆம் என்று மின்னஞ்சலில் எழுத்து பூர்வ பதில் தந்தார்கள். உரிமம் பெற்றவர்களாலே தான் இணையத்தில் தரப்படுகின்றது என்று சொன்னார்கள்.

எங்களைவிட அத் தொழிலில் இருக்கும் நீங்கள், உலகம் பூராவும் செல்லும் நீங்கள் அந்த இணையம் பற்றித் தெரியாதவரா.. ? அது யார் எப்படி நடத்துகிறார்கள் என்பது தெரியாதா… ?

சட்ட விரோதமாக அவர்கள் செயல்படுகிறார்கள் எனில், அந்த இணையத் தளங்களின் மேல் என்ன நடவடிக்கை தமிழ் திரையுலகு எடுத்துள்ளது… ?

அதும் போக, அமெரிக்காவில் சட்ட விரோதமாக டவுன்லோட் செய்வது மிகப் பெரிய குற்றம். அப்படியிருக்க டவுன்லோட் குற்றத்தைச் செய்வார்களா… மக்கள்.. ?

அவர்கள் மேல் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் , மக்களைத் திட்டுவது சிரிப்பான விஷயமே.

கமலஹாசனும் இப்படி இணையத்தளங்களில் படம் காட்டுவது பற்றி பேசும் போது, ரசிகர்களைத் திட்டாமல் வியாபார ஒழுங்குமுறைக்காண் யோசனையைத் தான் சொன்னார்.

—-

ஆனால், தமிழகத்தில் உண்ணாவிரதம் தொடராக பற்றியெறிந்து தீர்வு வந்தது போல் சொல்கிறீர்கள். அது இடைக்கால நிலையே அன்றி தீர்வு அல்ல. தீர்வு பற்றித் தெரிய கமலஹாசனிடம் பேசுங்கள்.

—-

நீங்கள் எல்லாம் அலட்சியமாக இருந்த காலத்திலேயே, 2003 இறுதியில் அமெரிக்காவிலிருக்கும் ஒரு தமிழனாகிய நான், இந்தப் பிரச்சனைக்காக செய்த முயற்சி பற்றி கீழே தந்துள்ளேன் —

திருட்டு வி.சி.டி ஒழிக்கும் ஆசையில் தமிழ் திரைப்படத்துறையில் என் பங்காக, தயாரிப்பாளர் சங்கப் பிரதிநிதி திரு.விஜயகுமார், திரு.யாஹியா , திரு.ஆனந்தா சுரேஷ் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசிவிட்டு, மேற்சொன்ன இணையத் தளங்களுக்கு மின்னஞ்சல் செய்தேன்.

அவர்கள், தாங்கள் உரிமை பெற்று இணையம் மூலம் வழங்குவதால் அங்கத்தினர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பதில் கொடுத்தனர்.

மேலும், PAYPAL-டம் நான் தொலைபேசிய போது அவர்கள் ஒரு கடிதத்தை தமிழகத்தில் இருந்து தயாரிப்பாளரிடம் பெற்று ஒரு வழக்குரைஞர் மூலமாகத் தொடர்ப்பு கொள்ளச் சொன்னார்கள்.

இது பற்றி, MPA, மற்றும் MPAA ( motion pictures association of america) போன்ற அமைப்புகளுடன் பேசி விட்டு, வெளிஉலக பட விநியோகம் செய்யும் முன் இவர்களிடம் பதிவு செய்வதின் அவசியம் பற்றி தமிழக பக்கம் சொன்னேன். அவர்களோ, MPA- சார்ந்த ஒரு வக்கீல் வந்து தங்களிடம் பேசியதாகவும் ஆனால் அவர்கள் அதற்கு $100,000 போன்று செலவு சொல்வதாகவும் சொன்னார்கள். அதனால், பணம் இல்லாமல் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார்க ள்.

அவர்களுக்கு அமெரிக்க அமைப்பு முறை பற்றிச் சொல்லி, சட்டபடி செய்யாவிடில் சிக்கல்தான் வரும் என்றேன்.

அதும் போக, இந்த மாதிரி இணையத்தளங்கள் பிரான்சிலிருந்து வருவாதல் அங்கு உள்ளவர்கள் மூலமாக தொடர்பு கொண்டு சரி செய்யச் சொன்னேன்.

ஆனால் பதிலில்லை.

அதாவது 3 கோடியிலிருந்து 12 கோடி செலவு செய்பவர்களுக்கு 50லட்சம் தங்களின் பாதுகாப்பிற்கு செலவு செய்ய மனதில்லை.

ஆனால், கமலஹாசன் போன்றவர்கள், இதை எப்படி சீர் செய்வது என்பதற்கு ஹாலிவுட்டில் உள்ள உலகளாவிய முறையில் வியாபாரம் செய்பவர்களுடனும், MPAயுடனும் கலந்து பேசி தீர்வு காண முயலுகின்றார்.

அதை விடுத்து கடைநிலை உபயோகிப்போரை கேவலமாகப் பேசுசதில்லை.

—-

மேலும் அமெரிக்காவிற்கு தமிழ்பட ஏற்றுமதி நடக்கும் விதம் மேலே படித்தீர்கள்.

இது பார்த்திபனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

இது எந்த விதத்தில் சரி என்று அவர் தான் சொல்லனும்.

உண்மைகள் இவ்வாறு இருக்க , அமெரிக்கத் தமிழர்கள் ஏதோ, திருட்டுத்தனமாக இணையத்தளங்களில் படம் பார்ப்பது போல் எழுதுவது ஏன்… ?

போக, அப்படி அமெரிக்காவில் நடந்தால், அதனால் அவர்கள் சட்டத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் தண்டிக்க முடியும்.

—-

நம்மை விட பார்த்திபனுக்கு நன்றாகத் தெரியும், தமிழகத்தில் மிகப் பெருவாரியான வகையில் கதைகள் எப்படி உருவாக்கப்படுகின்றன் என்று.

மனித மூளையில்லாமல் கூட தமிழில் சினிமாவில் கதை இலாகா இருக்கும் . ஆனால், விடியோ டெக்கும், ஆங்கில, ஐரோப்பிய கேசட்டுகளும் இல்லாமல் கதை கலந்துரையாடல் நடக்காது என்று.

இதற்கு மணிரத்னம் கூட விதிவிலக்கல்ல. அனைவரும் அறிந்தது போல் அவரின் அயுத எழுத்து, ‘அமிரோஸ் பரோஸ் ‘ படத்தின் திரைக்கதை வடிவத்தில் ஒடும் தமிழ் கதை என்று.

அதனால், அக்கறையுள்ள பார்த்திபன் போன்றவர்கள் மக்களைத் திட்டுவது விட்டு, தமிழ் திரை வெளியீட்டு முறையை கமல் போன்றவர்களுடன் கலந்து தீர்வுக்கு வழி வகுக்கு முயற்சிக்கலாம்.

—-

அமெரிக்கத் தமிழர்களைப் பொறுத்தவரை , திரையரங்குகளுக்கு பிரபலஸ்தர்கள் படம் தவிர மத்தபடங்களை யோக்கிய VCD /DVD ஒரிரு மாதத்தில் கடையில் வாங்கி பார்க்கின்றனர்.

முறைப்படுத்தப்பட்ட இம்முறையில் படம் பார்ப்பதற்கு ஏன் குற்ற உணர்வு வேண்டும்…. ?

இணையத் தளங்கள், எங்களின் வினாவிற்கு தாம் உரிமம் பெற்று தருகிறோம் என்று சொன்னவுடன் அதில் பார்க்க ஏன் குற்ற உணர்வு வேண்டும்… ?

ஒரு வருடம் தாண்டி அந்த இணையத தளங்கள் இயங்கி வருவதால் அது உண்மையாகத் தானே இருக்கும். அபபடி உண்மையில்லையெனில் தமிழகத் திரையுலகம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது.

நீங்கள் சென்னை முதல், பிரான்சு வரை நடக்க முடியாது என்று அமைதி காக்கிறீர்களா… ? ஏன் MPAA மூலம் முயற்சிகள் எடுக்கவில்லை.

அமெரிக்கத் தமிழர்கள் வீட்டில் பர்மா பஜாரில் வாங்கிய திருட்டு எலெக்ட்ரானிக் சாதனங்களும், சுங்கவரி செலுத்தாத கேமிராக்களும் கிடையாது.

அதனால் பிறரின் ஒழுங்குமுறையற்ற விற்பனை முறைகளுக்கு அவர்களுக்கு குற்ற உணர்வு தேவையில்லை.

மேலே கூறியது அமெரிக்கத் தமிழர்கள் சார்பில் சப்பைக்காரணம் அல்ல என்பதையும் ஒதுக் கொள்வீர்கள்.

மேலும் அவருக்கு,

1. இணயத்தால் மாறிவரும் உலகளாவிய வியாபார விநியோகஸ்த முறைகள் ( நான் இதற்காக ஒரு நீண்ட செமினார் சென்றுள்ளேன் )

2. நாளைய டிஜிடல் விநியோக முறையும் அதனால் வரும் பாதிப்புகளின் பயங்கரமும்.

3. MPA – MPAA பங்கும் அதனை தவிர்க்க முடியா மூன்றாம் உலக நாடுகளின் நிலையும்.

4. தமிழ்த் திரையினர் மாற்றிக் கொள்ளப்பட வேண்டிய வியாபார ஒப்பந்த முறைகள்

5. நடிகர்களின் அதீத சம்பள எதிர்பார்ப்பும் அதனால் சிரழியும் தமிழ்த் திரையின் தரமும்

6. இணையத் தள சட்டங்களும் அதில் மேற்கண்ட தளங்களை ஒழுங்கு படுத்தும் முறைகளும்

7. தவறான திரையிடல் முறைகளும் அதில் பார்வையாளர்களின் பங்கும்.

9. இணையத்தில் டவுன் லோட் செய்வதன் வரைமுறைகளும் தண்டனை எல்லைகளும்.

போன்ற விஷயங்களில் ஒரு செமினாரை தமிழத்த்தில் அத் துறை வித்தகர்கள் கொண்டு நடத்திட பார்த்திபனுக்கு உதவி செய்யத் தயார்.

அதற்கான் கன்சல்டன்டுகளை அடையாளம் காட்டினால். அவர்களை உபபோகித்துக் கொள்ளத் தயாரா… ?

அன்புடன்

கோச்சா

பி.கு:

1. நான் இணையத்தளங்களில் டவுன் லோட் செய்வதில்லை. காரணம்- தமிழின் அசட்டுப் படங்களைப் பார்ப்பதில்லை. சிறந்த படங்களைத் தியட்டரிலோ அல்லது உரிமம் பெற்ற ஐங்கரன் வீடியோவிலோ தான் பார்க்கிறேன்.

மேலும் இணையதள டவுண்லோட் தரம் சரியில்லை. ஆனால் , பல ஆங்கிலப் படங்கள் சந்தா கட்டி உறுப்பினராகி இணையம் மூலம் பார்க்கிறேன். இணையத்தில் விநியோகம் என்பது விஞ்ஞான வளர்ச்சி. சட்டத்திற்கு உட்பட்டு அதில் தொழில் நடக்கிறது. அதில் வழி வகை காணுங்கள். சீர் செய்யுங்கள்.

உங்களுக்கு விஜய் ஆனந்த சொல்லியிருக்கலாம்: – அமெரிக்காவில் கிரெடிட் கார்ட் கொண்டு PAYPAL மூலம் அந்த இணையத்தளங்களுக்கு சந்தாகட்டும் மக்களை – அது சட்ட விரோதமாக இருப்பின் – சுலபமாக கண்டு தண்டிக்க அமெரிக்காவில் சட்ட வழியுண்டு.

2. Beautiful Mind, Life is beautiful, Ameros Perros போன்ற படங்களை விடியோவில் வாடகைக்கு எடுத்துப் பார்த்தேன் – பல முறை. சட்டப்படித் தான்.

3. திரு.விஜய்ஆனந்த் உங்களின் குடைக்குள் மழைப்படத்திற்கு அமெரிக்க விநியோகஸ்திற்கு உதவி புரிந்த போது, அவரிடம் இணையத்தின் சினிமா வெளியிடல் தொடர்பான சட்டத்திட்டங்களை தெரிந்து கொள்ளாமல் , தவறான முறையில் அமெரிக்கத் தமிழர்களை விமர்சனம் செய்தது மனதிற்கு கஷ்டமாக உள்ளது.

—-

விகடனில் வந்த பார்த்திபனின் கருத்துக்கு பதிலாக திண்ணைக்கு எழுதி அனுப்பிய இருநாளில் குமுதம் ரிப்போர்ட்டரிலும், அமெரிக்கத் தமிழர்கள் பற்றி சில ஒவ்வாத கருத்துக்கள் வந்திருக்கிறது.

1. பார்த்திபன் பிரிமியர் ஷோ தொடர்பாக அமெரிக்கா வரவில்லை.

– அவர் வருவதற்கு முன்பே, குடைக்குள் மழை பல இடங்களில் திரையிடப்பட்டது.

– அந்தப் படம் எதிர்பார்த்த படி ஓடாததால், திரு.விஜயஆனந்த் – விநியோகஸ்தரின் நண்பர் ( அப்படித்தான் விஜய் ஆனந்த் இந்தப் படத்தில் தனக்கு உண்டான ஆர்வம் பற்றிக் கூறுகிறார் ) என்ற முறையில் பார்த்திபனை அழைத்து வந்து ஒரு டின்னரும், கேள்விபதிலும் கொண்ட நிகழ்ச்சி வைத்து பணம் வசூலிக்க முடிவு செய்து பார்த்திபன் அழைக்கப்பட்டார். இதனால் விநியோகஸ்தரின் நஷ்டம் ஈடுகட்டப்படும் என்றார்.

– மத்தபடி எங்கோ இருக்கும் தமிழ் நாட்டில் பார்த்திபன் மீண்டும் மீண்டும் அமெரிக்காவில் பிரிமியர் என்று சொல்லி வந்தார்.

2. இதை சான் ஓசே பகுதியில் நடத்த விஜய் ஆனந்த் என்னிடம் தொடர்பு கொண்டு விசாரித்தார். நான், இங்குள்ள பலரிடம் விசாரித்தப் போது , போதிய வரவேற்பு இல்லை. அதும் போக, அதற்கு முன்பே, குடைக்குள் மழை எங்கள் பகுதியில் திரையிடப்பட்டு மிகக் குறைந்த நபர்களே வந்தனர்.

யாரும் அப்படம் பார்க்க ஆசை காட்டவில்லை.

மத்தபடி, அக்காலகட்டத்தில் எல்லோரும் VCD-ல் கள்ளத்தனமாக பார்த்து விட்டனர் என்பது அறியாமை.

அப்படத்திற்கு வரவேற்பு இல்லை என்பதே உண்மை.

3. தங்கர்பச்சான் இயக்கத்தில், ‘அழகி ‘ டாம் தரும் ‘தென்றல் ‘ என்று ஒட்டிய சுவரொட்டி கண்டே 80 பேர் தான் வந்தனர். நெட்டால் அவருக்கு நெட் லாஸ் எனும் பார்த்திபன் இந்த படத்திற்கு ஏன் கூட்டம் வரவில்லை எனக் கூற வேண்டும்.

அழகி படத்திற்கு வந்தவர்கள் அதை விடக் குறைவு.

நல்ல படங்கள் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இந்தியன் பனோரமாவில் தேர்வு செய்யப்பட்ட, கி.ராஜநாராயணனின் கிடை நாவல் தழுவிய ‘ஒருத்தி ‘ படத்தை என்னால் சான் ஓசேயில் திரையிட ஒரு $500 கூட திரட்ட முடியவில்லை. ( இத்தனைக்கும் கி.ரா அவர்களுக்கு அவரின் ‘கிடை ‘ , ‘கோபல்ல கிராமம் ‘ நாவல் பகுதியை உபயோகித்தற்காக பட்டுவாடா செய்யப்பட்ட பணம் சரியாகப் போகவில்ல என்று , கி.ரா என்னிடம் நொந்து சொன்னதை திரு.பாரதி ராஜாவிடம் எடுத்து சென்ற அனுபவம் உள்ளது. ) கி.ரா-வின் படைப்பை ஆதரிப்பது தமிழ் இலக்கியத்திற்கு தொண்டு செய்வது போல் எனும் நம்பிக்கையுள்ளவன் நான்.

சில படங்களின், சில கதாநாயகர்களின் ரசிகர்களை வியாராக ரீதியாக வணிக சினிமாவில் ஈர்க்கும் சக்தி அவ்வளவு தான் இது வியாபார உண்மை.

இதற்கும் நெட்டிற்கும் என்னய்யா சம்பந்தம்.

4. அந்த குமுதம் ரிப்போர்ட்டரில் தொடர்ந்து, ‘விருமாண்டி ‘ பிரிமியரில் கமல் & கோ கூட்டமாக மேடையேறியும் யாரும் வரவில்லை என்ற தகவல் முற்றிலும் தவறானது.

கமல் அவர்கள், பலரிடம் பேசிவிட்டு, இது வேலைக்காகாது என்று திரையிடல் மட்டும் செய்தார். அவர் மட்டுமே வந்திருந்தார், அமெரிக்காவிற்கு அச்சமயத்தில். அதுவும் சில வியாபார நிர்பந்தங்களால்.

அவர் வராமலே, படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. சான் ஓசே யில் 3000 பேருக்கு மேல் பார்த்தனர்.

அது மாதிரி ஆயுத எழுத்திற்கு 3500 பேர் . மேலும் தென்றல், அழகி , குடைக்குள் மழை படங்களை $10000க்கு கூட கேட்காத, அமெரிக்க விநியோகஸ்தர்கள் ஆயுத எழுத்தை $70,000 ற்கும் , விருமாண்டியை $ 80,000க்கு மேலும் கேட்டு வாங்க பல மாதங்கள் முன்பே போட்டி போட ஆரம்பித்தனர்.

அது மாதிரி, படம் வரும் முன் விருமாண்டி படத்தை இண்டெர்நெட்டிலும் , VCD-யிலும் படத்தை அமெரிக்க தமிழர்கள் பார்த்திருந்தனர் என்பது அண்டப் புளுகு.

படம் வந்து 3மாதம் கழித்து ஐங்கரன் வெளியிட்ட VCDக்கு பெரிய வரவேற்பு.

– VCD பற்றி விசாரித்த கமல், தனது அடுத்த படத்தின் வெளியீட்டின் போது, வியாபார ரீதியாக இணையத்தள வெளீயீடு மற்றும் VCD வியாபரத்தை எப்படி பயன்படுத்துவது என்று விசாரித்தார்.

அது அவரின் தொழில் பற்றிய தெளிவைக் காட்டியது.

5. இண்டெர்நெட்டில் மூலமாக ஒரு பெரும்பகுதி மக்கள் பார்க்கிறார்கள் என்றால், அவர்களை அடைய விற்பனை யுக்திகளைக் காண வேண்டும். அதுவும் நீங்கள் சொல்லும் அமெரிக்க டாக்டர்கள், சந்தாகட்டித் தான் பார்க்கிறார்கள்.

இன்னொன்று அமெரிக்காவில் திருட்டுத்தனமாக அவர்கள் டவுன்லோட் செய்வதால் இலகுவாக IP ADDRESS மூலம் கண்டு பிடிக்க முடியும். அவர்களை SUE செய்தால் அவர்களின் பல வருட சேமிப்பு காலியாகும் . அதனால், இங்கு சட்ட மீறலை யாரும் செய்வதில்லை.

இன்னும் புரியாவிடில், எனக்கு ஒரு ஃபோன் செய்யுங்கள். விலாவாரியாக இதில் நான் திரட்டியுள்ள விஷயத்துடன் உதவத் தயார். ( கன்சல்டன்சியாகத் தான்)

6. அதும் தவிர, ஒவ்வொருபடத்திற்கும் ஒரு வீச்சு உண்டு.

இணையத்தளமும், VCD-யும் முற்றிலுமாக முழு வியாரத்தோல்விக்கு காரணமாகும் என்றால், ‘ஆட்டோகிராப் ‘ , ‘காதல் கொண்டேன் ‘ , ‘திருடா திருடி ‘ விருமாண்டி, வசூல் ராஜா MBBS, போன்றவை வெற்றிப் பெற்றது எப்படி.

7. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் , தனது படத்தைப் பற்றி அதீத ஈடுபாட்டால், அமெரிக்கத் தமிழ் ரசிகர்களை விமர்சிப்பது அழகல்ல.

– அவர் மேல் ஒரு ஈடுபாட்டால் வரும் கூட்டம் ஏன் அந்தப் படத்தை 21/2 மணி நேரம் உட்கார்ந்து பார்க்க மறுக்கிறது என்பதை நடுநிலையோடு பார்த்திபன் யோசித்தால் அவருக்கு நன்று.

– Beautiful Mind மற்றும் Identity படத்தை பல தடவை பார்த்த ரசனையுள்ளவர்கள் தான் அமெரிக்கத் தமிழர்கள்.

8. அதும் போக, கமல் ‘விருமாண்டி ‘-யில் அமெரிக்க விநியோகத்தில் கையைச் சுட்டுக் கொள்ளவில்லை. அந்தப் படத்தை எவ்வளவு பேர் பார்த்தார்கள் என்ற விபரத்தை என்னால் தர முடியும். அமெரிக்கத் தமிழர்கள் சந்தோஷமாக $10 கொடுத்து விருமாண்டியைப் பார்த்தார்கள்.கமலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். அமெரிக்கத் தமிழ் ரசிகர்கள் கமலுக்கு எப்போதுமே குறைவைத்ததில்லை – ஹேராம் முதற்கொண்டு.

அதற்கப்புறமும், www.indiamoviezone.com பொன்ற தளங்களில் சந்தாகட்டி பார்த்தார்கள் – இரண்டாம் மூன்றாம் முறை.

தற்போது நான் ஐங்கரனின் DVDயை பணம் கட்டி வாங்கி மாதம் ஒருமுறை விருமாண்டி பார்க்கிறேன். இதில் கையைச் சுட்டு கொண்டது யார்… ? எப்போது… ?

9. இன்னொன்று அமெரிக்காவில் விருமாண்டி அளவில் 10 சதவிகிதம் கூட வசூல் செய்யாத ‘ஆட்டோகிராப் ‘ படம் தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி கண்டது. சேரன் அமெரிக்கா- கனடா வந்த போது மிகப் பெரிய பாராட்டு கிட்டியது.

10. ஏன், குடைக்குள் மழை தமிழகத்தில் அது போல் ஓடவில்லை.. ? அதற்கும் நெட் தான் காரணமா… ?

அங்கும் அமெரிக்க டாக்டர்களைப் போல் VCDயில் பார்த்து விட்டார்களா.. ?

பார்த்திபன் அவர்களே, கொஞ்சம் அறிவார்ந்து இந்த விஷயத்தை அணுகினால் தமிழ் திரையுலகிற்கு நன்று.

இல்லாவிடில், கண்ணை மூடிக் கொண்டு இருட்டு என்ற பூனை கதை தான்.

கோச்சா

பி.கு:

அ. தியேட்டரில் பணம் கொடுத்த தமிழர்கள் , உங்களின் அமைப்பிற்கு பணம் வாரி கொடுத்தது ஏன் என்று சிந்தியுங்கள்.

மற்றவர்போல் அல்லாமல் , நீங்களாவது எவ்வளவு பணம் வசூலானது, அது எப்படி செலவாகிறது அந்த சேவை மையத்தின் அங்கத்தினர்கள் , மற்றும் அதன் வருங்கால சந்ததி உரிமை யாருக்கு என்பது பற்றி இணையத்தில் ஒரு தளத்தில் வெளியிடுங்கள்.

– உங்களுக்கு அமெரிக்கத் தமிழர்கள் கொடுக்கும் பணம் வரிகட்டிய ‘சொட்டாத ‘ (உங்கள் விகடன் கமெண்ட்) பணம். மேலும் அவர்கள் வருமானத்தில் அது பெரிய சதவிகிதம். அவர்களை விட பல பல மடங்கு பணம் சம்பாதிக்கும் நீங்கள் இப்படி வசூலில் ஈடுபடலாமா… ?

பணம் திரட்டாமல் மிகப் பெரிய நல்ல காரியம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் தயவு செய்து,

http://www.thesmileworld.org என்ற இணையத் தளத்தைப் பாருங்கள்.

இவரும் சினிமாக்காரர் தான். அதுவும் நீக்கமற நிறைந்த தமிழ் சினிமா சரித்திரமான, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், போன்ற படம் தந்த ஏ.பி.நாகராஜனின் குமாரர்.

யாரிடமும் ஒரு நயா பைசா வாங்காமல் மிகப் பெரிய காரியங்கள் ஆற்றி வருகிறார். அமெரிக்கா வந்த போது, எங்களிடம் காசு கேட்காமல் பல நல்ல விஷயங்கள் நடைபெற சாதித்துச் சென்றார்.

அதிலும் விசேஷம் என்னவென்றால், தனது சேவை அமைப்பையும் தனது தனி நல விஷயங்களையும் இவர் ஒன்றாக்குவதில்லை.

இது விஷயமாக உங்களுக்கு நட்புடன் உதவத் தயார்.

—- ஒரு கரிசனம் —-

(திரு. விஜய் ஆனந்த் சமுக நோக்குடன் பலர் பங்குபெறும் பொது நல AIMS INDIA -வையும் தனது தொழிலையும் அந்நியப் படுத்துவது நல்லது. இல்லையெனில், இப்படிப்பட்டவர்களின் கருத்துக்களால் AIMS INDIA பாதிக்கப்படும். )

—-

gocha@HEARTmail.com

Series Navigation

கோச்சா

கோச்சா