பாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

கோவிந்தராஜன்


கடந்த வார இதழில் கோவிந்த் என்பவர் எழுதியுள்ள “தமிழ்-தமிழர்-தேசப்பற்று: சில எண்ணங்கள்” என்ற அறிவிப்புக் கட்டுரையில் கலிஃபோர்னியா வளைகுடாப்பகுதியில் சமீபத்தில் துவங்கப்பட்ட பாரதி தமிழ்ச்சங்கம் குறித்து கூறப்பட்டுள்ள பல கருத்துகளுக்கு விளக்கம் தர பாரதி தமிழ்ச்ச்சங்கத்தின் தலைமையை வகிப்பவன் என்ற முறையில் இந்தக் கடிதம் அவசியமாகிறது.
கோவிந்த் அவர்கள் பாரதி தமிழ்ச்சங்கத்தின் துவக்கத்தை வரவேற்பவராகத் தெரிகிறது. அவருக்கு முதலில் என் நன்றிகள். ஆனாலும் அவரது கடித்தில் உள்ள சில தகவல் பிழைகள் இந்த அமைப்பு குறித்த தவறான புரிதலை உண்டாக்கிவிடலாம் என்பதால் இக்கடிதத்தை எழுத நேர்ந்தது.
பாரதி தமிழ்ச்சங்கம் குறித்து கோவிந்த் எழுதியுள்ள கடிதத்தில் பே ஏரியா தமிழ் மன்றம் உடைந்ததாகவும் அதன் விளைவாக பாரதி தமிழ்ச்சங்கம் தோன்றியதாகவும் குறிப்பிட்டிருப்பது உண்மைக்குப் புறம்பானது. பாரதி தமிழ்ச்சங்கம் இந்து கலாசாரத்தை அடியொற்றி, பண்டிகை, ஆன்மீகம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. எந்த அமைப்பையும் உடைப்பது போன்ற எதிர்மறை நோக்கங்களுக்கு கிஞ்சித்தும் இதில் இடம் இல்லை என்பதை இங்கு தெளிவாக்குகிறேன். பிற அமைப்புகள் குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் எனக்கோ பாரதி தமிழ்ச்சங்கத்திற்கோ எவ்வித கருத்தும் கிடையாது.
பே ஏரியா தமிழ் மன்றத்தின் உறுப்பினர் பலர் பாரதி தமிழ்ச்சங்க நலம் விரும்பிகள்; அவ்வாறே பாரதி தமிழ்ச்சங்க உறுப்பினர் பலர் பே ஏரியா தமிழ் மன்ற நிகழ்வுகளிலும் ஆர்வமாகப் பங்கேற்பவர்கள் என்பதே உண்மை.
” “வலிய வலிய ஓடி உறுப்பினர் ஆக்க சரவணபவன் வாசலில் காத்து நின்ற பழைய தமிழ்ச் சங்கத்து பணியிலிருத்து விலகிய இந்த சம்பவம் -சங்கதி…. சங்கநாதம் போன்றது என, அதன் முக்கிய அமைப்பாளர், கோவிந்தராஜன் வி.எஸ் – சொன்னாராம்” என்று கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல். இவ்வாறு எவரிடத்தும் நான் கூறவில்லை. எந்த அடிப்படையில் இவ்வாறு கோவிந்த் எழுதினார் என்பதும் தெரியவில்லை. எந்த ஒரு அமைப்பையும் உருவாக்கி வளர்த்து நடத்துவது சவால்கள் பல நிறைந்தது என்பதை நான் அறிவேன். அவ்வாறு வளர்த்தெடுக்க மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகள் மீதும் எனக்கு மதிப்பு மட்டுமே இருக்கிறது.
கோவிந்த் அவர்களின் கடிதத்தில் பாரதி தமிழ்ச்சங்கத்தின் முதல் “பொதுக்கூடல்” முருகப்பெருமான் சன்னதியிலே நடந்ததாகக் கூறியிருப்பதும் தவறான தகவல்.
இந்து கலாசாரம், வரலாறு, மரபு இவை குறித்த பெருமிதம் ஆகியவை இந்தியத்தமிழர்களுக்குப் போலவே புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அவசியமானது எனக் கருதும் அமைப்புதான் பாரதி தமிழ்ச்சங்கம். கலிஃபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு. “வையத்தலைமை கொள்” என்ற பாரதியின் கம்பீரமான அழைப்பை விருதுவாக்காகக் கொண்டது.
பாரதி தமிழ்ச்சங்கத்தின் குறிக்கோள், செயல்பாடு, திட்டங்கள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்தும் வகையில் இதன் செயல்திட்ட வரையறையைக் கீழே தருகிறேன்:
– பாரதி தமிழ்ச்சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு.
– பாரதி தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது.
– உலகமயமாகும் இந்நாளில், இளைய தமிழ்ச் சமுதாயம் தமது கலாசாரம், ஆன்மீகம், மற்றும் வரலாறு ஆகியவை குறித்த அறிவையும், தெளிவையும், பெருமிதத்தையும் கொண்டிருத்தலை, அதன் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாக பாரதி தமிழ்ச்சங்கம் காண்கிறது.
– பாரதப்பண்பாட்டின் முக்கிய அங்கமான தமிழரின் கலை, இலக்கியம், இந்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இளைய சந்ததியினரின்- குறிப்பாக தமிழ்க்குழந்தைகளின் – மனதில் பதியவைக்க பாரதி தமிழ்ச்சங்கம் செயல் திட்டங்களை மேற்கொள்ளும்.
– இயல், இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட பல தனித்திறமைகளையும் படைப்புத்திறன்களையும் வெளிச்சம் போட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரதி தமிழ்ச் சங்கம் அரங்கம் ஏற்படுத்தித் தரும்.
– “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்ற பாரதியின் மொழிக்கிணங்க பாரதி தமிழ்ச்சங்கம் தன்னார்வல சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் பங்கெடுக்கும்.
– மேற்சொன்ன அடிப்படைக்கூறுகளை வலுப்படுத்தும் வகையில் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் பாரதி தமிழ்ச்சங்கம் இணைந்து இயங்கும்.
வலைத்தள முகவரி: http://www.batamilsangam.org

இப்படிக்கு
அன்புடன்
கோவிந்தராஜன்.
பாரதி தமிழ் சங்கம்.


bharatitamilsangam@yahoo.com

Series Navigation

கோவிந்த ராஜன்

கோவிந்த ராஜன்