அஸ்வகோஷ்
நண்பன் ஒருத்தன் டாக்ஸி ஓட்டுகிறான். சொந்த ஊர்க்காரன். மெட்ராஸ் போனால் பார்க்காமல் வரமாட்டேன். வண்டியிலேயே உட்கார்ந்து கதை பேசி, அரட்டை அடித்து பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பேன். முன்சீட்டில் உட்கார்ந்து கொள்வேன். எப்போதும் போல அவன் பின்னால் சவாரி ஏற்றிக்கொள்வான். எனக்காகவே ரெண்டு பேர் சவாரியாக கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்து ஏற்றிக்கொள்வான். மூணுபேர் வந்தால் ‘வேண்டாம் சார், வண்டி வராது ‘ என்று சொல்லி விடுவான்.
கொஞ்சம் குஷாலான பேர் வழி அவன். வாய்த்துடுக்கு. முன் பின் தெரியாத சவாரிகளிடமெல்லாம் கூட வாயைக் கொடுத்து வளவளவென்று ஏதாவது பேச ஆரம்பித்து விடுவான். எனக்கேகூட சில சமயம் எரிச்சலாய் இருக்கும். ‘சும்மா இருப்பா ‘ என்பேன் சிரித்துக் கொள்வான்.
கும்பலில் அவன் வண்டி ஓட்டுவது விசித்திரமாய் இருக்கும். அவன் பாட்டுக்கு அனாயசமாக சந்து பொந்தெல்லாம் புகுந்து ஓட்டிக் கொண்டு போவான். இவ்வளவு ஜனத்தில் யார் மேலும் ஏற்றாமல் எப்படித்தான் ஓட்டிக் கொண்டு போக முடிகிறதோ; ரொம்ப சாமர்த்தியம்தான்; ஜனங்களுக்கும் காருக்கும் ஏதோ ஒரு ரகஸ்ய ஒப்பந்தம் இருப்பது மாதிரி, சூட்சும உடன்பாடு இருப்பது போல, வழியே இல்லாத மாதிரி தெரியும்போது அதனுள்ளே ஒரு வழி ஏற்படுத்திக் கொண்டு, நான் வியந்து கொள்வேன்.
சாயங்காலத்துக்கு மேலே பட்டணத்துத் தெருக்கள் வெளிச்சத்தில் ஆழ்ந்து கிடந்தன. கடைகளும், நடை பாதைகளும் ஜனத்திரளால் நிரம்பி வழிந்தது. அன்று பூராவும் அவனுடனே இருந்தேன். வண்டியே சரியாய் ஓடவில்லை. வசூலும் ரொம்ப கம்மிதான். எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. என் அனுபவத்துக்கு எட்டிய வரையில் டாக்ஸிக்காக யாராவது நிற்கிறார்களா என்று கண்களை ஓடவிட்டு பார்த்துக் கொண்டுவந்தேன். ‘எவ்வளவோ நேரமா எம்ப்டி அடிக்குது இன்னும் ஒரு சவாரிகூட கெடைக்கலியே… ‘ என்றேன்.
மெல்ல சிரித்துக் கொண்டான் அவன். ‘இன்னிக்கு வெள்ளிக் கெழமையில்ல அதான். ‘
‘ஏன் வெள்ளிக் கெழமைன்னா என்னா ? ‘
‘வெள்ளிக் கெழமைய்லியும், செவ்வாக் கெழமைய்லியும் வண்டியே ஓடாதே ஒனக்குத் தெரியாதா…எவனும் வெளியே கெளம்ப மாட்டான். ‘
‘ஏன் ? ‘
‘ஏன்னு என்ன கேட்டா; அவனுங்க நெனப்பு அப்பிடி. எந்த காரியத்தையும் செய்யமாட்டானுங்க இந்த நாள்ல. கிராமத்துல கூட சொல்லமாட்டாங்க, செவ்வா, வெள்ளில கொடுக்கல் வாங்கல் வச்சிக்கக் கூடாதுன்னு. அதான். ‘
எனக்கு விநோதமாக இருந்தது. ‘இங்க கூடவா அப்படி ‘ என்றேன். ‘இங்கேதான் அதிகம் ‘ என்றான்.
‘ஆமா ‘ தெருவுல பாத்தா இவ்வளோ கூட்டம் இருக்குது. ‘
சும்மா கோவிலுக்கு போற கூட்டம். கடத்தெருவ சுத்திப் பாத்துட்டுப் போயிடும். டாக்ஸி ஏறாது இதல்லாம் ‘ என்றான்.
வண்டி வளைவு திரும்பி ஜன சந்தடி அதிகம் இல்லாத ஒரு தெருவில் ஊர்ந்தது.
‘பீச்சுக்கு போவலாமா. அங்க போனா எதுனா சவாரி கெடைக்கும். மாசக் கடைசி. இல்லண்ணா அப்படியே ஒக்காந்து காத்து வாங்கிட்டு வந்துடலாம் ‘ என்றான் நண்பன்.
‘எங்கியாவது போ; எப்பிடியாவது சவாரி கெடைச்சா சரிதான் ‘ என்று அசட்டையாகச் சொல்லி விட்டு மந்தமாக தெருவை வேடிக்கை பார்த்தபடி குந்திக்கொண்டு வந்தேன். வண்டி மந்தைவெளி பஸ் டெர்மினஸ் ‘டர்ன் ‘ திரும்பி நேரே ஓடி, இடது பக்கம் ஒஷியானிக் டர்னும் திரும்பி சாந்தோம் சர்ச் வழியாக ஓடியது. நகரத்தின் பரபரப்பும் வேகமும் அடங்கிய அமைதியான தெருக்களில் ஜனங்கள் அதிகம் இல்லை. பெட்டிக் கடைகள் இரண்டொன்று முன்னே நிற்கும் நாலைந்து பேர்களுக்காகத் திறந்திருந்தன. சஞ்சாரமற்ற வீடுகளில் ஜன்னல் வழியே வெளிச்சம் தெரிந்தது. எதையும் உற்சாகமாகப் பார்க்க முடியாதபடி சோர்வோடு குந்திக் கொண்டிருந்தேன்.
அவன் மட்டும் எப்போதும் போலவேயிருந்தான். வண்டி வானொலி காவலர் குடியிருப்புக்கு எதிராக வந்த சமயம் ‘அதோ பார் சாமான் நிக்குது ‘ என்றான்.
இதற்கு முன்பு பல தடவை அவன் இப்படிச் சொல்லியிருக்கிறான். யாராவது தாயும் பெண்ணும், தனியாக எங்காவது நிற்கக் கூடாது. பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக தோன்றக் கூடாது. கொஞ்சம் கன்னா பின்னா என்று ஸ்டைலாக உடுத்திக் கொண்டிருக்கக் கூடாது. உடனே வாய்க்கு வந்ததை உளற ஆரம்பித்து விடுவான்.
பட்டணத்தில் எனக்கு எதுவும் ரொம்ப அநுபவம் கிடையாது. இருந்தாலும் பார்க்கிறதையெல்லாம் இவன் இதே மாதிரி சாமான், சாமான் என்று சொல்லிக் கொண்டு வந்தது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ‘ஏம்பா ஒனக்கு வேற வேல இல்ல; எத்தப் பார்த்தாலும் சாமான்தானா ? ‘
‘நான் சொல்றதெல்லாம் பொய்தான். நீவேணா பாரேன். ‘
அவன் காட்டிய திசையில் இடது பிளாட்பாரம் ஓரம் ஒரு அம்மா நின்றிருந்தாள். நல்ல உருளை மாதிரி கனத்த சரீரம். பக்கத்தில் வயசுப்பெண். மகளாயிருக்கும். கொஞ்சம் ஒல்லியாய் ரோஸ் நிற சேலை கட்டியிருந்தாள்.
வண்டி வேகத்தில் உருவங்களை கிட்டே நெருங்கு முன்பே டாக்ஸிக்காக கைகாட்டினார்கள் அவர்கள். அம்மாதான் காட்டினாள்.
யாரோ குடும்பத்திலிருப்பவர்கள்; டாக்ஸிக்காக தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தபடியே இறங்கினேன். அவர்களுக்காக கதவைத் திறந்து விட்டு மீட்டரைப் போட்டேன்.
இருவரும் பின் சீட்டில் அமர்ந்தார்கள். ‘எங்க போவணும் ‘ என்று கேட்டபடியே வண்டியை அசக்கினான் நண்பன். ‘லஸ்கொண்ணும் போயி உட்டுடுப்பா போதும் ‘ அம்மா தான் சொன்னாள்.
வண்டி வந்த வழியே திரும்பி ஓடியது. சவாரி கிடைத்த நிம்மதியில், என் பக்கம் சிலு சிலுவென்று மோதும் உப்புக் காற்றுக்காக முகத்தை வெளியில் வைத்தபடி கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தேன். கறுத்த அலைகள் மெல்ல சீற்றத்துடன் புரண்டு நெளிந்தன. சிடு சிடுப்புக் கொண்ட மாதிரி கரையை மோதின. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஒரே கருமை மயமாகவேயிருந்தது.
‘என்னமா எதுனா கெடைச்சிதா… ‘ என்றான் நண்பன்.
தூக்கிவாரிப் போட்டது எனக்கு. யார் அந்த அம்மாள். என்ன கேட்கிறான் இவன்.
இதையேதான் அந்த அம்மாளும் கேட்டான். ‘என்னாப்பா கேக்கற நீ ‘ ‘
‘த சும்மா எங்கிட்ட கத உடாதம்மா; டாக்ஸி டிரைவருங்க கிட்ட வந்து காது குத்தறியே; எங்கங்க பாக்கறேன் உன்ன. சும்மா சொல்லு ‘ எங்கிட்ட எதுனா சவாரி கெடைச்சா கூடம் கொண்ணாந்து உடுவேன் அப்பதான். ‘
கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது எனக்கு அடையாளம் தெரியாமல் பேசி ஏதாவது வம்பு தும்பில் போய் முடியப்போகிறது என்று நினைத்துக் கொண்டேன்.
சில விநாடிகள் மெளனமாயிருந்தாள் அந்த அம்மா. முகம் மாறியிருக்க வேண்டும். பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. குரலிலிருந்து கொஞ்சம் ஊகிக்க முடிந்தது.
‘எங்கங்க பார்த்திருக்கற என்ன ‘ சுருதியில்லாமல் கேட்டாள் அவள்.
எனக்கே கூட கொஞ்சம் பரிதாபமாய் இருந்தது. பாவம் என்று நினைத்தேன். அப்படியே கூட இருந்துவிட்டுப் போகட்டுமே அதைப்போய் இவன் நாசுக்கில்லாமல் போட்டு உடைத்துக் கொண்டு.
‘உன்னியா…உன்ன எங்க தனியா பார்த்தேன். உங்க ரெண்டு பேரியும் சேத்துதான் ‘ என்றான் நண்பன்.
‘எங்கங்க பார்த்த…. ‘ ‘ மழுப்பல் சிரிப்பினிடையே வெளி வந்த மாதிரியிருந்தது வார்த்தைகள்.
‘எங்கன்னா…எத்தினியோ எடம். ஒங்கள மாதிரி ஆளுங்க எங்க கண்ணுல இருந்து தப்ப முடியுமா. முந்தா நேத்தா… இல்ல; செவ்வாக் கெழம சாயங்காலம் சாந்தி தியேட்டர் எதுத்தாப்போல பஸ் ஸ்டாப்புல நிக்கல நீங்க ரெண்டுபேரும். ‘
‘இருக்லாம்… ‘ என்றாள் அவள்.
‘என்னா எதுனா கெடைச்சுதா ‘ என்றான் அவன்.
‘ஒண்ணும் புண்ணியமில்லப்பா ‘ கடை விரித்தவன் வியாபாரமில்லாமல் கடையைக் கட்டுகிற தோரணையில் சொன்னாள் அவள்.
எனக்கு அருவருப்பாயிருந்தது. மெளனமாகவே முகத்தைச் சுருக்கிக் கொண்டு கம்மென்று குந்தியிருந்தேன். பின்னால் உட்கார்ந்திருந்த ரோஸ் சேலைக்காரியும் மெளனமாகவேயிருந்தாள்.
‘ஏன்; ஊட்டுலியே வச்சி நடத்தறது. ஏன் இப்படி அங்கேயும் இங்கேயும் கண்டபடி தெருத் தெருவா இழுத்துக்னு லோல்படறே ‘ என்றான் நண்பன்.
‘பாருங்களேன் இந்த புள்ள சொல்றத ‘ வெடுக்கென்று என் தோளைச் சீண்டிச் சொன்னாள் அந்த அம்மாள்.
என் உடம்பு சிலிர்த்தது. தோளைத் தட்டித் துடைத்துக் கொண்டு கொஞ்சம் முன்புறமாக தள்ளி நிலைக் குத்தாக உட்கார்ந்து கொண்டேன்.
‘ஊட்டுல, வயித்துல பொறந்த புள்ளைங்க இருக்கறானுங்க; மருமவளுங்க இருக்கறாளுங்க; அதுக்கு புள்ள குட்டிங்க இருக்குது. அவனுங்க எதுருல இப்படி செய்ய முடியுமா ? தாய்காரியும் தங்கச்சியுமா சேந்துக்னு இப்படி செய்யறம்னு தெரிஞ்சா, பாத்துக்னு பொறுத்துக்னு இருப்பானுங்களா… வெட்டிப் போட்டுட மாட்டானுங்களா. ‘
எனக்கு வியப்பாக இருந்தது. குடும்பத்தில் இருப்பவளா இப்படிச் செய்கிறாள் என்று நினைத்தேன். சும்மா ‘ஹாபி ‘ மாதிரி ஆகி விட்டதா. இல்லை சும்மா சால்ஜாப்பு காட்டுகிறாளா. அந்த சந்தேகத்தை நண்பனே கேட்டுத் தீர்த்தான்.
‘த சும்மா கத உடாதே. செய்யறது இந்தத் தொழிலை. அப்புறம் அதிலே வேற வீறாப்பு காட்டிக்கிறியா. உம் புள்ளைங்களுக்கு மெய்யாலும் தெரியாது. ‘
‘பாருங்களேன் ‘ மீண்டும் அவள் என்னை சப்பைக் கட்ட இழுத்தாள். ‘எந்த அண்ணனாவது தங்கச்சி ஊருமேலே போறத தாங்கிக்னு சும்மா இருப்பானுங்களாங்க ஏங்க…நீங்களே சொல்லுங்க; நான் எதுக்காக இந்த புள்ளகிட்ட பொய் சொல்லனும்…. ‘
நான் பேசாமலே யிருந்தேன்.
‘சரி அவங்க சம்பாரிக்கலியா ‘ நண்பன் கேட்டான்.
‘ஏன் சம்பாரிக்கல; கை நெறையதான் சம்பாரிக்கறானுங்க; அதுல என்னா கொறைச்சலு ‘ அவள் வெறுப்புடன் சொன்னாள்.
‘பின்ன பேசாம, சம்பாரிச்சி குடுக்கிறத வச்சிக்னு ஒழுங்கா ஊட்டோட இருக்கறத்தான…. ‘
‘நல்லா சொன்னப்பா நீ. அந்த மாதிரி யிருந்தா நான் ஏன் இந்தமாதிரி லோல் படறேன் அங்கங்க; அவனுங்க என்னா என்னா தாயாச்சே, தங்கச்சியாச்சேன்னு கவனிக்கிறானுங்கன்றியா. அவனவனும், அவனவன் பொண்டாட்டி என்னுமோ, புள்ள என்னுமோ அதுங்களே இட்டுக்னு சினிமாவுக்கு போறதென்னு மோன்னு எல்லாம் அவங்க, அவங்க காரியத்ததான் கவனிச்சிக்னு போறானுங்க; எங்கள யாரு கவனிக்கிறா ‘ அவள் குறையோடு சொன்னாள்.
‘சோறு போடறாங்க இல்ல…. ‘
‘சோறு போட்டுட்டா போதுமா. வேற ஒண்ணுங் கெடையாதா…. பாருங்களேன் இந்த புள்ள சொல்றத….தோ இருக்குதே இந்த பொண்ண எவ்வளவோ செல்லமா வளர்த்திருப்பேன் தெரியுங்களா…இது ஆறு வயிசு கையோட அவரு உட்டுட்டுப் போயிட்டாரு. அங்க வேலை செய்றேன், இங்க வேலை செய்யறேன்னு அக்கம் பக்கத்திலியும், புள்ளங்ககிட்டியும் பொய் சொல்லி இப்படியேதான் எல்லாத்தியும் வளத்தேன். இத S.S.L.C. வரைக்கும் படிக்க வச்சி டைப் அடிக்க கூடம் அனுப்பனேன். அதுவும் பாஸ் பண்ணிடிச்சி. ஆனா வேல கெடக்கலியே….அவனுங்க வழி ஒரு வழியா ஆயிடுச்சி. இதுக்கு ஒருவேல பாத்து வைங்கடான்னா அத காதுல வாங்க மாட்டேன்றானுங்க. அப்புறம் எங்க தங்கச்சிய கட்டிக் குடுக்கணம்னு ஆச வரப்போவுது…. ‘
கொஞ்சம் நிறுத்தி சலித்துக் கொண்டாள். ‘இவனுங்க ரெண்டு பேரையும் ஆளாக்க எவ்வளவோ பாடு பட்டிருப்பேன். எவ்வளவோ சொல்லு வாங்கியிருப்பேன். எதுவும் காச் மூச்சின்னு வெளியே
தெரியுங்களா…அவனுங்க என்னுமோ எங்கிருந்தோ வெளையுது. அப்பன் சம்பாரிச்சி வச்சிட்டுப் போயிருக்கறான்னு நெனச்சிக்னு ஆடறானுங்க. எம்மா நாளைக்கப்பா பல்ல கடிச்சிக்னு இருக்க முடியும்; அக்கம் பக்கத்துல கெளரவமா ஒரு சேல ரவிக்ககூடம் இல்லாம. பாக்கறவங்க தான் என்ன நினைப்பாங்க சொல்லு…. ‘
பக்க வாட்டில் மக்கிய தெருக் குப்பைகளின் நாற்றம் எங்கிருந்தோ வந்து மூக்கைத் துளைத்தது. வெறிச்சோடிய தெருக்களில் வீடுகள் உள்ளே இருட்டு போட்டுக் கொண்டு தெரு விளக்கில் பிரகாசித்தன. பட்டணத்தில் இந்த மாதிரி கூடம் ஒரு வாழ்க்கையா என்று மூக்கைப் புறங்கையில் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தேன்.
‘பொண்ணுக்கு வேலை கிடைச்சா தொழில் உட்டுப்புட்டு வேலைக்கு அனுப்பிடுவியா… ‘ என்று கேட்டான் நண்பன்.
‘பாருங்களேன் இது கேக்கறதை. வேலைக்கி அனுப்பாததுக்காப்பா டைப்ரேட்டிங் அனுப்பனேன். எனக்கென்னா இந்த மாதிரி செய்யணும்னு ஆசையா. இப்படியே இருந்தா எவங்க வந்து கட்டிம் போவான். எங்கெதிதான் இப்படி ஆச்சே… அவகெதினா நல்லபடியா யிருக்க வேணாமான்னுதான் இவ்வளோ பாடும். இது என்னா காலத்துக்கும் செதமாவுமாபா இந்த தொழிலு. ஒரு நாளைக்கி கெடைச்சா ஒரு நாளைக்கி கெடைக்காது. என்னா மாச சம்பளமா… ‘ அவள் அலுப்புடன் மனப்பூர்வமாகவே வெறுத்துத்தான் சொன்னாள்.
‘நான் எங்கனா கேட்டு பாக்கட்டுமா எனக்குத் தெரிஞ்ச எடத்துல ‘ என்று கேட்டான் நண்பன்.
‘அத செய்ப்பா நீ ‘ மகாராஜனாயிருப்பே. ‘ என்றாள் அவள்.
‘இதுல ருசி கண்டவங்க அப்புறம் இத உடமாட்டாங்களே ‘ என்றான் நண்பன்.
‘உங்கிட்ட யாருப்பா பேசுவா. ஒனக்கென்னமோ இது வெளையாட்டா இருக்குது. ஒவ்வொரு நிமிஷமும் உள்ள திக் திக்குன்னு அடிச்சிக்கிறது எனக்குத்தான தெரியும். எங்க தெரிஞ்சவங்க கண்ணுல பட்டுடுவமோ, ஆரு பாத்துடுவாங்களோன்னு ஜன்மமே குன்னிப் போவுது. அந்த பயம் ஒரு பக்கம்னா, போலீஸ்காரன் கண்டா கொலல்லாம் நடுங்குது. புடிச்சிம்பூட்டா ஒரு கூத்தா பண்ணுய்வாணுங்கன்ற, ஐயோ ‘ ஐயோ ‘ எல்லாத்தியும் பட்டவபா நானு ஒண்ணு பாக்கியில்ல… ‘
தொண்டை கரகரத்தது. கண்களில் நீர் முட்டியிருக்கலாம். குரல் தேய்ந்து கொண்டு வந்தது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அதே குரலில் தொடர்ந்தாள். ‘அப்பிடியே கூடந்தான் இந்த தொழிலு எத்தினி வயிசுவரைக்கும் சொல்லு. வயிசு போயிட்டா அப்புறம் நாய்கூடம் சீண்டாது. சீ மிச்சிப்புட வேண்டியதுதான்…. ‘ நொந்த மனத்துடனேயே வெளி வந்தன வார்த்தைகள். புடவை மொசு மொசுப்புக் கேட்டது. கண்களை ஒற்றிக் கொள்கிறார்களோ என்னவோ. என்னபையன் இவன். கொஞ்சம் கூட பச்சாதாபமில்லாமல் என்று நினைத்தேன். ‘சும்மாஇருப்பா ‘ என்று மெல்ல தோளை இடித்து எச்சரிக்கை செய்தேன். பின்னால் இன்னொருத்தியும் இருக்கிறாள் என்று நினைக்க எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அவன் எதையும் பொருட் படுத்தியதாகத் தெரியவில்லை.
‘உங்க ஊடு எங்க இருக்குது ‘என்றான்.
‘ஏன் எதுக்கு ‘ என்றாள் அவள் கலவரத்துடன்.
‘எதுனா விசேஷம்னா வர்ரதுக்கு…. ‘
‘எப்ப வந்தாலும் அமிஞ்சிக்கர பக்கமா வந்தினா போதும். யாரக்கேட்டாலும் சொல்லுவாங்க. ‘
‘த….அட்ரஸ சொல்லும. ‘
‘வேணாம்பா அதல்லாம்; அட்ரஸெல்லாம் வேணாம். ஒனக்கு பாக்கணும்னு தோணிச்சினா அந்தப் பழக் கடையில் கேளு சொல்லுவாங்க. ‘
‘அப்ப, அட்ரஸ சொல்லமாட்ட… ‘
நண்பன் இழுத்து நிறுத்தினான். வண்டி லஸ் கார்னரைத் தாண்டி சென்மேரிஸ் ரோடில் நின்றது.
அம்மாள் இறங்கினாள். பின்னாலேயே அவள். இப்போதுதான் முழுமையாகப் பார்க்க முடிந்தது. நல்ல சிகப்பு. ஆனால் ஒரு மாதிரியான வெளுப்பு. சுத்தமாய் சப்பி உறிஞ்சிவிட்ட மாதிரி. களையான முகம்தான். கண்களிலே ஒரு அசமந்த உணர்வு தேங்கிக் கிடந்தது. அல்லது எல்லாவற்றையும் உள்ளே போட்டு அழுத்தி பலவந்தமாக மூடிவைத்தாற் போலிருந்தது. சுருக்கங்கள் நிறைந்த தன் உதடுகளைத் திறந்து ‘எவ்வளோங்க ஆச்சி ‘ என்றாள் மென்மையாக.
‘எழுவது பைசாதான். ‘
உள்ளே பரிவா லேசான அருவருப்பா என்பது தெரியவில்லை. அவன் கையிலிருந்த சின்ன மணிப்பர்ஸின் ஜிப்பை நீக்கி ஒரு ஒற்றை ரூபாய் நோட்டை எடுத்து என்னிடம் நீட்டினாள். வாங்கி பக்கத்தில் கொடுத்தேன்.
‘சில்ற இல்லியே; சில்லறையா இல்லையா ‘ தலையைத் தாழ்த்தி அவளைப் பார்த்தபடியே நண்பன் கேட்டான்.
‘பரவால்ல இருக்கட்டும் வசிக்கோங்க ‘ அவள் சாதாரணமாய் சொன்னாள்.
‘இந்தாம்மா; இரு இரு, ஒங்க காசெல்லாம் நமக்கு வேணாம். தோ போய் கடையில் மாத்தி குடுத்துட்ரேன் ‘ சட்டென்று ‘டோரை ‘த் திறந்து கொண்டு கீழே இறங்கினான் நண்பன்.
அவள் முகம் கறுத்து சுருங்கியது. ‘ஒங்க காசெல்லாம் நமக்கு வேணாம் ‘ என்ற வார்த்தைகள் எனக்கேகூட ‘சிவுக் ‘கென்றுதான் இருந்தது. அவளுக்கு எப்படியிருக்கும் என்று நினைத்தேன்.
கதவை படாலென்று சாத்திக் கொண்டு கடைக்குப் போக இருந்த நண்பனைத் தடுத்து நிறுத்தினேன்.
‘பரவால்லபா; அவங்களே பிரியப்பட்டு குடுக்கறாங்க; வாங்கிக்ககூடாதா. வேற யாருன்னா குடுத்தா வாங்கிக்கமாட்ட. ‘
அவன் தயங்கி என்னைப் பார்த்தான்.
அவள் நன்றியுடன் பார்த்தாள்.
‘போயிட்டு வர்ரங்க…. ‘
‘போய் வாங்க ‘ என்றேன்,
மீட்டரைத் தூக்கிட்டு உள்ளே உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தான் நண்பன்.
‘என்னா இருந்தாலும் நீ வெடுக்னு அப்பிடி சொல்லியிருக்கக் கூடாதுப்பா; பாவம் அவ மொகமே சுண்டிப் போச்சி. ‘
‘சே சே நான் அதுக்காகவா சொன்னேன். எந்தக் காசா இருந்தா நமக்கு என்னாபா: பாவம் அவளே ஒண்ணும் வருமான மில்லாம போறா. அவ கிட்ட போய் ஏன் வாங்கணும்னுதான். எத்தினி வசதிப்பட்ட கஞ்சனுங்க அறுவத்தெட்டு பைசா தாங்க இருக்குதுன்னு சில்லறை எண்ணி குடுத்திட்டுப் போறானுங்க. ‘
நான் அவனைப் பார்த்தேன். அவன் ரோடைப் பார்த்து வண்டியை நகர்த்தினான். தள்ளினாற் போல கொஞ்சம் கும்பலாயிருக்கும் ஜனங்களைப் பார்த்து ‘ஏதோ ஆக்ஸ்டெண்ட் போலருக்குது ‘ என்று முணு முணுத்துக் கொண்டான்.
- கைகாட்டி
- பாசிகள்
- ‘தங்களுக்குப் பிறகே நான் ‘
- தமிழ்நாடு – அடையாள அரசியலும் கட்சிகளும் (முதல் பகுதி)
- இந்த வாரம் இப்படி 18 மார்ச் 2001
- வாய்பாயி பதவி இறங்க வேண்டும்.
- மகளிர் தினம்
- முக்கோணத்தின் மூன்று முனைகள்
- ஊரெல்லாம் ஒரு கதை தேடி…
- விருந்து
- எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் வந்த எதிர்காலத்தொழில் நுட்பங்கள் – 10 (இதுவே இறுதி) நுண்நீர்மவியல் (Microfluidics)
- காலா மீட்
- மட்டன் மார்வெல்
- தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு.