பழி

This entry is part [part not set] of 5 in the series 20000813_Issue

பாவண்ணன்


பொம்மைக்காரரின் சித்திரத்தை ஞாபகத்தில் இருந்து அழிப்பது சுலபமான காரியமல்ல.

அவர் உருவாக்கிய சிலைகள் ஊர் முழுக்க இருந்தன. சத்திரத்தில் அண்ணா. கொஞ்சம்

தள்ளி காந்தி பூங்காவில் காந்தி. காமராஜர். நேரு. பக்கத்தில் பதினெட்டுப்

படிகளின் உச்சியில் ஐயப்பன். துரோபதை அம்மன் கோயிலின் சுற்றுச் சுவரில் ஏகப்பட்ட

சிறு சிறு சிலைகள். தேவர்கள். தவசிகள். சிவன். பார்வதி. பிரும்மா. அர்ஜூனன்.

தேரோட்டும் கிருஷ்ணன். வாசல் யாளிகள். எல்லாமே அவர் கைவண்ணம். வர்ணம்

பூசப்பட்ட பழைய நூற்றாண்டுச் சிற்பங்களோ என்று பார்க்கிற கண்களைத் தடுமாற வைத்துக்

கணத்தில் ஏமாற்றிவிடும் அவை. கற்சிற்பங்களின் நேர்த்தியையும் நளினத்தையும்

குழைத்த சிமெண்ட் சாந்துவின் முலம் அவர் கைகள் கொண்டு வந்திருந்தன. உடைந்த

கற்களை அடுக்கி அடுக்கிக் கட்டுகிற மாதிரிதான் முதலில் தொடங்கும். பத்துப்

பதினைந்து நாட்களுக்குப் பிறகு பார்த்தால்தான் அது சரஸவதியாகவோ லட்சுமியாகவோ

தெரியும். மனசுக்குள் இருக்கும் உருவத்தை அவர் கைகள் குழைத்துக் குழைத்து

உருவாக்கிவிடும். பாடம் வராத குழந்தைக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி வரவழைத்து

விடுகிற மாதிரி சாந்துவைக் குழைத்துக் குழைத்து உருவத்தை வரவழைத்துவிடுவார் அவர். அது

ஒரு மாயவித்தை போலத் தோன்றும். அந்த மாயத்துக்குக் கட்டுப்பட்டதாலோ, வர்ணங்களின்

மீது எனக்கிருந்த அபரிமிதமான ஈடுபாட்டாலோ, எதிர்காலத்தில் அவரைப் போலவே ஆகிற ஆசை

மறைந்து மறைந்து உருவாகியதாலோ அவரோடு ஒட்டி உறவாட ஆசைப்பட்டு அவரையே சுற்றிச் சுற்றி

வந்தேன் நான். அது ஒரு காலம்.

கண்களை முடிக் கொண்டால் இப்போது கூட மனசுக்குள் தெரிகிறார் பொம்மைக்காரர்.

சாரம் கட்டி உட்காரந்தபடி ஒற்றை விளக்கின் வெளிச்சத்தில் அவர் சிலை வடிப்பதில்

ஆழ்ந்திருப்பது தெரிகிறது. உருவாகிவரும் சிலையைப் பாதி தூரம் தள்ளி வந்து டா பருகியபடி

சரிபார்க்கிறார். கருத்த முகத்தில் அவர் கண்கள் மின்னுகின்றன. தலைமுடியிலும்

ஜிப்பாவிலும் சிமெண்ட் பாலின் புள்ளிகள். எப்பவாவது அவர் வாய் அதிசயமாக தீராத

என் ஜனன வழக்கெல்லாம் தீருமிந்த ஜனனத்தோடே ..என்று ஏதோ ஒரு பாட்டை முணுமுணுக்கிறது.

ஏதோ கொஞ்சம் சுமாரா படம் வரையறான் பையன். ஓய்வு நேரத்துல நீங்கதான்

அவன வழிப்படுத்தணும் என்று அப்பா என்னைக் கொண்டு போய் அவரிடம் சேர்த்தார். தீராத

அவமானத்தால் எல்லாரிடமும் பேச்சு வார்த்தையை விலக்கிவிட்டுத் தனிமையில்

பொம்மைக்காரர் வேதனைப்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. அவருடைய மனைவி பக்கத்து

வீட்டில் இருந்த இளைஞன் ஒருவனோடு ஊரைவிட்டு வெளியேறியிருந்தாள். எல்லாரும் அவரைப்

பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். முன்னால் வணங்கிவிட்டுப் பின்னால் கமுக்கமாகக்

கைகொட்டிக் கிண்டல் செய்தார்கள். துக்கம் கேட்கிற மாதிரி வந்து பேச்சை

ஆரம்பித்துக் குத்திக் காட்டினார்கள். ஈரம் கசியும் கண்களுடன் பொம்மைக் காரர்

அவர்களையே வெறித்துப் பார்த்திருந்தார். எனக்குத் தெரிந்து அவர் அந்த அத்தையோடு

எந்தச் சண்டையும் போட்டுப் பார்த்ததில்லை. அதிர்கிற மாதிரி ஒரு வார்த்தை கூடச்

சொன்னதில்லை. அப்படிப்பட்டவரின் வாழ்வில் இப்படி ஒரு சோதனை வந்திருக்கக் கூடாது

என்று என் பிஞ்சு மனம் நினைத்தது. நான் அந்த அத்தை சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பி

வந்துவிட வேண்டும் என்று மனசாரப் பிரார்த்தனை செய்தேன்.

அந்த அத்த இனமே இங்க வராதுடா என்று குண்டைத் தூக்கிப் போட்டான் எங்கள் தெருப்பையன் குமரசாமி. ஏன்டா அப்படிச் சொல்றே என்று இடிந்து போய்க் கேட்டேன் நான். அத்தை வருவது வராதது ஒருபக்கம்

இருந்தாலும் இத்தனை கறாராக இவனால் எப்படிச் சொல்ல முடிகிறது என்று அதிர்ச்சியில்

உறைந்து போனேன். வராதுன்னா வராதுதான் என்று மீண்டும் உறுதியோடு சொல்லிவிட்டுச்

சிரித்தான் அவன். எங்கள் எட்டாவது ஏ வகுப்பிலேயே யாருக்கும் தெரியாமல் சிகரெட்

குடிக்கிறவன் அவன் ஒருவன்தான். புளிய மரத்தில் சாய்ந்தபடி ஏரியைப் பார்த்தவாறு அவன்

புகை விடுவதை நாங்கள் எல்லாரும் சுற்றி நின்று பார்ப்போம். எங்களுக்குத் தெரியாத பல

விஷயங்களைக் கரைத்துக் குடித்திருந்தான் அவன்.

அவருகிட்ட விஷயமில்ல. அதான் அத்த போய்ட்டாடா..

விஷயமின்னா ?

ஒரு ஆம்பளைக்குரிய முக்கியமான விஷயம் அவருகிட்ட இல்ல..

அந்த விஷயம் எது என்று எனக்குப் புரியவில்லை. என் பார்வைக்கு அவர் முழு

ஆணாகவே தெரிந்தார். வலுவான கை கால்கள். உறுதியான தோள்கள். கலைந்த முடி. கருத்த முகம்.

கூரிய முக்கு. எனக்கு எதுவுமே குறை உடையதாகத் தெரியவில்லை. எந்தப் பாகத்தை அவன்

பிரதானப்படுத்தி ஆண்மையின் அடையாளமாகச் சுட்டிக் காட்டுகிறான் என்று தெரியவில்லை.

இரவுச் சாப்பாட்டுக்கப்புறம் தூங்கத் தொடங்கியபோது கூட என் மனம் அதே

கேள்வியை அசைபோட்டுக் கிடந்தது. அதற்கு விடைகாணாமல் எனக்குத் தூக்கம் வராதுபோல இருந்தது.

இந்த மர்ம முடிச்சைத் தேடித் தேடி என் சிற்றறிவு களைத்தது. நான் கண் மூடிக் கிடந்த

நேரத்தில் அப்பாவுக்குச் சோறு பரிமாறியபடி அம்மா பேசத் தொடங்கியிருந்தாள்.

முதலில் அப்பேச்சு ஏதோ கடன் விவகாரம் தொடர்பானது என அசட்டையாய்

நினைத்திருந்தேன். போகப் போகத்தான் அது பொம்மைக்காரரோடு தொடர்புடையது என்று

புரிந்தது. உடனே கவனம் கூர்மை பெற்றது. கண்களை முடியவண்ணம் அனைத்தையும் ஒன்று

விடாமல் கேட்டேன்.

அந்த அக்காவுக்கு ரொம்பத்தான் அவசரம். இவ்ளோநாளு காத்திருந்துதே, இன்னம்

கொஞ்சம் நாளு பாக்கக் கூடாதா ? ஊரு ஒலகத்துல நாள்கழிச்சி புள்ள பெத்துக்கறதில்லையா

என்ன ? எங்க வில்லியனூரு மாமாவுக்கு நாப்பத்தெட்டு வயசுல தலச்சன் கொழந்த பொறந்தது.

கடவுள் குடுப்பன எப்படியோ அப்படித்தான் எல்லாம் நடக்கும். இந்தக்கா மாதிரியா

எங்க அத்தகாரி அவசரப்பட்டா, கல்யாணமாகி முப்பது வருஷம் காத்திருந்தாங்க தெரியுமா ?

பொம்மக்காரரால முடியவே முடியாதுன்னு எதுக்காக அவசரப்பட்டுச்சோ, பாவம். அந்த மனுஷன்

தலைநிமுந்து நடக்க முடியாம கெடக்குது. நடுரோட்டுல நிக்க வச்சி துணிய அவுத்த மாதிரி

குன்னிப்போய் கெடக்குது. அவரு கையால நூறு கடவுள் செல பொறக்குது. ஒரு கடவுளாச்சிம்

அவருகிட்ட அனுசரணையா இல்ல பாரு.

அப்பாவின் குரல் ரொம்ப நேரமாகக் கேட்கவே இல்லை. அவரது அமைதியே அவரது

வேதனையைக் காட்டியது.

எல்லாருமே ஒங்க மாமா மாதிரி இருந்துட முடியுமா ? சிலருக்கு அவசரம். அந்தப்

பொண்ணு இந்த ரகம்ன்னு நெனச்சிக்க வேண்டியதுதான்.

இப்ப கூட போயிருக்றானே, அவனுக்கு மட்டும் பொறந்துடும்ன்னு எப்படி சொல்ல

முடியும் ? அங்கயும் இதே விஷயம்தான்னா ?

சீச்சீ.. நாம எதுக்கு அப்படி நெனைக்கணும். சும்மா சோறு போடு..

அப்பாவின் குரல் அதட்டலாக விழுந்தது. அம்மா அதற்கப்புறம் பேசவில்லை.

எனக்கு ஆண்மையின் பொருள் முற்றிலுமாகப் புரியவில்லை. எனினும் ஓரளவு புரிந்த மாதிரியும்

இருந்தது. குழந்தைப் பிறப்போடு சம்பந்தப்பட்ட ஒன்றாக அதை விளங்கிக் கொண்டதில்

எனக்கு நிம்மதியாக இருந்தது. குமாரசாமியால் நேரிடையாகச் சொல்லி விளக்க முடியாத

ஒன்றை யார் உதவியும் இல்லாமல் நானே கண்டுபிடித்ததை நினைத்துத் திருப்தியாக இருந்தது.

இரண்டு முன்று வார காலங்களில் பொம்மைக்காரர் சகஜ நிலைக்குத்

திரும்பிவிட்டார். தோட்டத்தின் ஒருபக்கம் அரைகுறையாக நின்றிருந்த சிலைகளை முடிப்பதில் மும்முரமாக

இறங்கிவிட்டார். விக்கிரவாண்டியிலிருந்து ஒரு பெரிய கட்சிக்காரர் வந்து அண்ணா

சிலைக்கு முன்பணம் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். ஏற்கனவே அச்சிலையை ஆரம்பித்துப்

பாதியில் திருப்தியின்றித் தூக்கியெறிந்து விட்டிருந்தார். விக்கிரவாண்டியில் இருந்து

ஆள் வந்து ஞாபகப்படுத்திவிட்டுப் போனது. முன்றாவது முறையாகச் சிலையைத் தொடங்கி

ஒருவாறு திருப்தியோடு முடித்தார்.

வீட்டைப் பெருக்கிச் சுத்தமாக்கும் வேலை என்னுடையது. தண்ணீரும் பிடித்து

வைத்தேன். ஓட்டலில் இருந்த எடுப்பபுச் சாப்பாடு கொண்டு வந்து தரும் வேலையும் என் பொறுப்பானது.

பொம்மைக்காரர் என் படங்களைத் திருத்திக் கொடுத்தார். முகவளைவுகளிலும்

தோள், இடுப்பு இறக்கங்களிலும் தடுமாறிய என் கோடுகளை நேர்ப்படுத்தினார். நெருப்புத்

திருவிழாவுக்காக வெள்ளையடிக்கப்பட்ட துரோபதை அம்மன் கோயில் சுவர்களில்

கடவுள்களின் படங்களை எழுதும் பொறுப்பை அவர் எனக்கு வாங்கித் தந்தார். முதலில்

பென்சிலால் சுவர்களில் வரைந்து முடிப்பேன் நான். பிறகு அவர் வந்து உடலின் சில

பாகங்கைளுத் தட்டி ஒடுக்கு எடப்பார். உடனே அக்கடவுள் படத்துக்கு ஓர் அழகு கூடி விடும்.

உடலின் வடிவில் குறையான பாகத்தை அவர் கண்கள் துல்லியமாய்க் கண்டு சரிப்படுத்தின.

எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது. சரிப்படுத்தப்பட்ட படங்களை வர்ணங்களால் தீட்டியதுமே

என் மனம் பெருமிதத்தால் விம்மியது. நாலு பேர் பார்த்து சபாஷ் சபாஷ் என்று

சந்தோஷமாய்ப் பாராட்டியபோது நான் பொம்மைக்காரரை மனசுக்குள் நன்றியுடன் நினைத்துக்

கொண்டேன். என் கூடப் படிக்கிற பிள்ளைகள் என்னோடு நட்பாய் இருப்பதைப் பெருமையாய்

நினைத்தார்கள். எல்லாரும் தத்தம் நோட்டுகளை நீட்டி விநாயகரையோ, முருகனையோ

போட்டுத் தரச் சொல்லி வற்புறுத்தினார்கள். என் புகழையும் பெருமையும் பார்த்து

குமாரசாமி மட்டும் குமைந்தான். இந்த சாமி படம் வரையற கதையெல்லாம் வேணாம். நா

இப்படியே நிக்கறேன். பாத்து வரஞ்சிடு. அப்ப நீ பெரிய சித்திரக்காரன்னு ஒத்துக்குவன்

என்று சவால் விடுத்தான். எனக்கு அவனோடு பேசவே பிடிக்கவில்லை. விலகிப்போனேன்.

அப்போதும் அவன் என்னைத் துரத்தித் துரத்தி வந்து என் திறமையை நிருபிக்கும்படி

மீண்டும் மீண்டும் சவாலுக்கு இழுத்தான்.

சரி ..என்ன வரைய வேணாம். இன்னொரு சிம்பிள் படம் தரன் வரயறியா ? என்றான். நான் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். அவன் முன்னிலையில் எனது திறமையை ஸ்தாபிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டேன். எல்லாரையும் ஒதுக்கிவிட்டு பள்ளியின் பின்பக்கம் என்னை அழைத்துச் சென்றான் அவன். பேண்ட்

பையில் இருந்து ஒர படத்தை எடுத்து நீட்டினான். ஓர் ஆணும் பெண்ணும் நிர்வாணமாய்

நிற்கிற படம் அது. எனக்குக் கைகால்கள் நடுங்கத் தொடங்கின. மூத்திரம் முட்டியது.

தொண்டை சட்டென்று உலர்ந்தது. மறுகணமே அப்படத்தை அவன் முகத்தில் வீசியெறிந்து

விட்டு ஓடத் தொடங்கினேன். அவனும் அவன் கூட்டாளிகளும் முதுகுக்குப் பின் சிரிப்பது

கேட்டது. ஒன் குருவுக்கும் விஷயமில்ல, ஒனக்கும் விஷயமில்ல டோய் என்ற அவர்களின்

கிண்டல் என் பிடறியைத் தாக்கியது.

பொம்மைக்காரரின் விட்டுக்குள் நான் நுழைந்தபோது ரைஸ்மில் கவுண்டரும் மேலும்

சிலரும் அவரோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்த வட்டாரத்துல ஒங்கள உட்டா சாமி செல செய்ய யாரு இருக்கறா ? நீங்கதான்

இந்த கோயில் வேலய செஞ்சி முடிக்கணும் என்று கவுண்டர் பேசினார்.

அதுக்கில்லீங்க.. கைல இருக்கற வேலயயெல்லாம் முடிச்சிட்டு இதோட உட்டுலாம்ன்னு

இருக்கறேன். இந்த நேரத்துல.. என்று இழுத்தார் பொம்மைக்காரர்.

வித்த உள்ளவங்க நீங்க. ஒங்க வாய்ல இந்த வார்த்த வரலாமா ? கோயில்

கட்டற புண்ணியம் லட்சத்துல ஒருத்தனுக்குக் கூட கெடைக்காதுன்னு சொல்வாங்க. எனக்கு அந்த

புண்ணியம் கெடைக்க நீங்கதான் பெரிய மனச வய்க்கணும். நீங்க என்ன கேட்டாலும்

தருவன்.

காசுக்காக இல்லீங்க.. மனசுதான்

மனசு பாரத்த மாரியாத்தா மேல போட்டுட்டு வேலய ஆரம்பிங்க

வந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தவே பொம்மைக்காரர் ஒத்துக்கொண்டார்.

எனக்கும் சந்தோஷமாக இருந்தது. புதுக்கோயில் வேலை மெல்ல நடந்து கொண்டிருந்தது. கர்ப்பக் கிரகத்துக்கும்

சுற்றுச் சுவருக்கமான படங்களைப் பொம்மைக்காரர் தீட்டிக் காட்டினார். அவர் தீட்டிய வேகமும்

விரல் சுழிப்பும் அதிசயமாக இருந்தது. பள்ளி முடிந்த கோடைகலமாதலால் சதா நேரமும்

நான் அவரோடேயே இருந்தேன். ஒரு நாளும் ஓய்வு இல்லை. ஞாயிற்றுக் கிழமை அன்று கூட

அவர் வேலை செய்தார். கர்ப்பக்கிரகத்து மாரியம்மன் சிலை முதலில் தயாரானது.

சிலையின் முக வேலை நடக்கும்போது மட்டும் அவர் அருகில் சேர்க்கவில்லை. என்னைக் கூட

வெளியேற்றிவிட்டார். என் வருத்தத்தைக் கண்டு எல்லாத்துக்கும் காரணம் இருக்குது.

போவப் போவ ஒனக்குப் புரியும் என்றார். முகவேலை முடிந்ததுமே அப்பெரிய சிலையைத்

துணியைக் கொண்டு மூடிவிட்டார். வர்ண வேலையின் போதுதான் அத்திரை விலக்கப்பட

வேண்டும் எனச் சொல்லிவிட்டார். அவர் சொல்லுக்கு மாற்றுச் சொல் இல்லை.

கவுண்டரும் கூட ஒதுங்கி நின்று பார்த்து விட்டுப் போனர். மெல்ல மெல்ல ஒவ்வொரு சிலையாக

உயிர் பெறத் தொடங்கியது. கோபுர முகப்பில் பெரிய விநாயகர். சுற்றுச் சுவர்

முலைகளில் பார்வதி. பரமசிவன். முருகன். அம்மனைத் தொழும் தேவர்கள். எல்லாச்

சிலைகளின் மீதும் துணி சுற்றப்பட்டிருந்தது. இரவுகளில் ஒற்றை விளக்கின்

வெளிச்சத்தில் சோளக் கொல்லைப் பொம்மைகளாக அச்சிலைகள் நின்றிருந்தன.

மறுநாள் வேலை நடக்கவில்லை. நான் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். வீடு

திறந்து கிடந்தது. கடைத்தெருவுக்கோ, ஏரிக்கோ அவர் சென்றிருக்கக் கூடும் என்று

காத்திருந்தேன். வழக்கம்போல வீட்டைப் பெருக்கித் தண்ணீர் பிடித்து வைத்தேன்.

ஓரமாய் உட்கார்ந்து படம் வரையத் தொடங்கினேன். மதிய நேரம் ஆயிற்று. பசித்தது.

பொம்மைக்காரருக்கு எடுப்புச் சாப்பாடு எடுத்து வர வேண்டிய நேரம். அவர் வந்து பணம்

கொடுத்தால்தான் செல்ல முடியும். அவர் வந்ததும் வாங்கித் தந்துவிட்டு செல்லலாம் என்று

காத்திருந்தேன். வரவே இல்லை. அம்மாதான் தேடி வந்து அழைத்துச் சென்றாள். அன்று

மாலை, மறுநாள், அதற்கடுத்த மறுநாள் எனத் தொடர்ந்து காத்திருந்தும் அவர் வரவே இலலை.

ரைஸ்மில்லில் இருந்து ஆள் தேடிக் கொண்டு வந்தது.

எங்கடா ஒங்க பொம்மைக்காரு

தெரியலிங்க

தேதி நெருங்கிப் போச்சு. இன்னம் நூத்தியெட்டு வெல பாக்கி கெடக்குது. இவுரு

பாட்டுக்கு வாரக்கணக்குல ஆளக் காணமின்னா என்னடா அர்த்தம் ?

ஊருக்குள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

பெண்டாட்டியைத் தேடிக் கொண்டு போய்விட்டார் என்றார்கள். புதுசாக எவளயாவது கட்டிக்

கொள்ளப் போய் இருப்பார் என்று சொன்னார்கள். கூடப்படுத்து எழுந்து பழகுன ஒடம்பு.

திடார்னு இல்லன்னா முடியுமா ? என்று நாக்கு தட்டிக் கள்ளச்சிரிப்பு சிரித்தார்கள்.

தற்கொலை கிற்கொலை பண்ணிக்கிட்டாரோ என்று சந்தேகத்தோடு சொன்னார் ஒருவர்.

ஓடிப்போன அன்னிக்கே தூக்குல தொங்க வேண்டியவன் அவன். இன்னிக்கா ரோஷம் வந்து

செத்துடப்போறான் என்றார் மற்றொருவர்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு பக்கத்து ஜில்லாவில் இருந்து இன்னொரு

பொம்மைக்காரரை வரவாழத்தார் கவுண்டர். வர்ணம் பூசுகிற வேலை பாக்கி இருந்தது.

மீண்டும் ஒரு சுபமுகூர்த்த நாளில் வேலை தொடங்கியது. புதிய பொம்மைக்காரர் சூர்யோதய

வேளையில் அம்மனைத் தொட்டுத் தொழுதுவிட்டுச் சிலையை முடியிருந்த துணியை விலக்கினார்.

பல இடங்களில் துணிப்பிசிறுகள் சிலையோடு ஒட்டியிருந்தன. பதமாக அவ்விடங்களை ஈரத்தில்

ஊறவைத்து விலக்கினார். சிலை வார்ப்பின் லட்சணம் அவருக்குத் திருப்தியாக இருந்தது.

சந்தேகமே இல்லை. ரொம்ப தேர்ந்த கை இது என்று வாய்விட்டுப் பாராட்டியபடி பாதாதிகேசம்

பார்க்கத் தொடங்கினார். அவர் கண் அம்மனின் முகத்தில் நிலைத்தது. உடனே அவர்

திகிலடைந்தார். அதிர்ச்சியில் முகத்திலும் பிடறியிலும் வேர்வை அரும்பியது.

கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தார். ஐயோ என்றார். அவர் நாக்கு

குழறியது. என்ன என்னாச்சி ? என்றார் கவுண்டர். புதிய பொம்மைக்காரரின்

பதற்றத்தைக் கண்டு அவருக்கும் பதற்றம் முண்டது.

உள்ள .. சாமி.. சாமிக்கு..கண்ணில்ல

அவர் வார்த்தைகள் தடுமாறின. அதிர்ச்சியுற்ற கவுண்டரும் அவரது சேனையும்

அவசரமாய் உள்ளே ஓடினார்கள். அழகே உருவான அம்மனின் சிலை. ஆனால் கண் இல்லை. கண் இருக்க வேண்டிய இடத்தில் ஓட்டைகள் இருந்தன. வந்தவர்களைப் பயம் தொற்றிக் கொண்டது.

நிஜமா பொய்யா என இரண்டு முன்று முறை கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார்கள்.

வத்திப் பெட்டியில் இருந்து குச்சியைக் கிழித்து நன்கு வெளிச்சம் உண்டாக்கிக்

காட்டினார். கண்களின் ஓட்டைகள் முகத்தில் அறைந்தன. அவசரம் அவசரமாய்

பொம்மைக்காரர் மற்ற சிலைகளின் முடுதிரைகளை விலக்கினார். கணபதி, முருகன்,

பார்வதி, பரமசிவன், எந்தக் கடவுளுக்கும் கண்கள் இல்லை. ஓட்டைகள். எல்லாரும்

அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள். என்ன செய்வது என்று ஆளாளுக்கு யோசனை

சொன்னார்கள். புதிய பொம்மைக்காரர் நடுங்கிப் போயிருந்தார். கவுண்டரும்

மற்றவர்களும் அவரைக் கண்கள் பொருத்தும்படிக் கேட்டார்கள். அவர் உதறும் கைகளைக்

குவித்துக் கும்பிட்டபடி என்ன உட்டுடுங்க சாமி, நான் கெளம்பறன். இது ஏதோ தெய்வக்

குத்தம் . என்னால ஆவாது சாமி என்று கெஞ்சினார்.

கவுண்டர் வேறு வேறு ஊர்களில் இருந்தும் பல பொம்மைக்காரர்களை வரவழைத்து

வேலையை முடித்துத் தரும்படி கேட்டுக் கொண்டார். எல்லாருமே சிலைகளைப் பார்த்துவிட்டு வந்து

மறுத்துச் சென்றார்கள். கோயிலுக்காகக் குறித்த நாள் கடந்துவிட்டது. மனம் உடைந்து

போன கவுண்டர் தன் முயற்சிகளைக் கைவிட்டு விட்டார். திறக்கப்பட்டாமலேயே

அக்கோயில் பாழடைந்தது. முதலில் அந்தப் பக்கம் செல்லவே பலரும் பயந்தார்கள்.

ஆண்டுகள் கழியக் கழிய பயம் விலகி நடமாட்டம் தொடங்கியது.

அதைத் தாண்டி நடக்கும்போதெல்லாம் பொம்மைக்காரரின் ஞாபகம் மனசில் விழுந்தது.

கோயிலுக்குப் பக்கத்தில் நின்றபடி பாழாகி நிற்கும் கடவுள்களைப் பார்த்துச்

சிரிக்கிற மாதிரியும் இருந்தது.

 

 

  Thinnai 2000 August 13

திண்ணை

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்