ராகவன் (பேர்லின்)
படம் திரையிடப்பட்டு ஒருமாதத்திற்குப் பின்பே படம் பார்க்க சென்றிருந்தேன். திரையரங்கில் 50பேராவது இருந்தனர். ஓரு மாதத்திற்குப் பின்னரும் ேஐர்மனியில் இவ்வளவு பேர்கள் வந்திருந்தது பெரும் வெற்றியென்றே சொல்ல வேண்டும்.
டெல்கியில் வாழும் உயர்மத்தியதரவர்க்க பஞ்சாபியரான வர்மாகுடும்பத்தினாின் மகள் அதிதிக்கும்(வசந்தராதாஸ்), அமாிக்காவிலிருந்து வருகின்ற இஞ்சினியர் மாப்பிள்ளைக்கும் நடைபெறும் நிச்சயதார்த்தத்திலிருந்து, திருமணம் வரையிலான நான்கு நாட்களே படத்தின் கதை. உலகின் பல பாகங்களிலிருந்தும் உறவினர்கள் வருகின்றனர். குடும்பத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் திருமணத்தை நடத்தி முடிப்பதில் உள்ள மன உளைச்சலகள் , சந்தோசம், கஸ்டங்கள், குடும்ப உறுப்பினாின், வெளியாட்களின் தனிப்பட்ட செயற்பாடுகள் என்பவற்றை வைத்து மிக அழகாக கதைபின்னியுள்ளனர். இப்படத்தில் மிகவும் கவர்ந்த விடயம் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் போதிய இடம்கொடுத்து இயல்பாக உலவவிட்டதைச் சொல்லலாம். கைதேர்ந்த சிறுகதையாசிாியையின் நுண்ணுணர்வோடும் அவதானிப்போடும் இயக்குனர் மீரா நாயர் செயற்பட்டுள்ளார். இதற்கு கதைவசனம் எழுதிய சபாினா தவானின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.
கைத்தொலைபேசியும் கையுமாக கல்யாணவீட்டு சோடனை, பந்தல் வேலைகளைகளைக் கவனிக்கும் துபே கீழ்த்தட்டு மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவன், அவனின் தாய், சாதாரண மனுசி பங்குச்சந்தையில் பங்குகள் வாங்கியுள்ளார். இதன்மூலம் உலகமயமாதலில் இந்தியாவில் ஏற்படும் வேகமான சிலமாற்றங்களை காட்டுகின்றார்.
இந்த சுறுசுறுப்பான, கறாரான துபேக்கும், அந்தவீட்டு வேலைக்காாியான அலிசிற்கும் இடையே உருவாகும் காதலானது அழகாக காட்டப்படுகிறது. கல்யாணம் செய்யும் எண்ணமேயில்லாமல் வேலையென்றே வாழ்ந்து வந்தவனுக்கு அழகி அலிசைக் கண்டபின்பே வாழ்வின் அர்த்தம் புாிகின்றது. துபே தயங்கியபடியே அலிசிடம் தனது விசிட்டிங்கார்ட்டை கொடுத்தபடி அதிலுள்ள மின்னஞ்சல் முகவாி அவளுக்கு புாியாதென்றெண்ணி, கணணிமூலம் இம்முகவாிக்கு கடிதம்அனுப்ப முடியும் என்று விபாிக்கையிலே, அவளோ ம்.. இமெயில் என்கிறபோது துபே அசடுவழிய திரையரங்கமே சிாிக்கின்றது. அவள் பீகாரைச் சேர்ந்த கிறீஸ்தவ பெண்ணென்கிறபோது, பீகாாில் சிலவருடங்களுக்கு முன் இந்துவெறியர்களால் காாில்வைது கொளுத்தி கொல்லப்பட்ட அவுஸ்திரேலிய பாதிாியாரும், மகனும் எனது ஞாபகத்திற்கு வந்தனர்.
இந்த துபே வரும்காட்சிகள் என்னை மட்டுமல்ல ேஐர்மனியரையும் சிாிக்க வைத்தன. பொதுவாக ேஐர்மனியருக்கு நகைச்சுவையுணர்வு(Humour) குறைவாகவேயிருக்கும். இறுக்கமான இராணுவ ஒழுங்குமுறையிலமைந்த வாழ்க்கை முறையும் வரலாறும் இவர்ளிடத்தே எப்போதும் எல்லாப்பொழுதும் ஒரு சீாியசான தன்மையையும், நகைச்சுவைவரட்சியையும், படைப்பாற்றல் தேக்கநிலமையையும் உருவாக்கி வைத்துள்ளன. இதனாலேயே இங்கு நகைச்சுவை படங்கள், தொடர்கள் குறைவாகவும், தரமற்றும் இருக்கின்றன. இங்கிலாந்துக்காரர்கள், ேஐர்மனியாின் சீாியஸ்தன்மையையும், இராணுவத்தன்மையையும் கிண்டல்செய்து தொலைக்காட்சித் தொடர்கள் பல செய்துள்ளனர்.
மீரா நாயர் இப்படத்தை இந்தியர்க்காகவே தயாாித்ததாக கூறியுள்ளார். அவர் கலைப்படங்களை எடுக்கவில்லை. பலரும் பார்த்து ரசிக்கக்கூடிய, வருவாய் ஈட்டக்கூடியவாறே படங்களை இயக்குகின்றார். ஹாலிவூட்டிலிருந்து அழைப்புக்கள் வந்தபோதிலும், அங்கு சுயமாக இயக்க முடியாமல் அழுத்தங்கள் ஏற்படும் என்றுகருதுவதால் மறுத்து வருகிறார். 68 பாத்திரங்களை நடிக்க வைத்து குறைந்த செலவில் 2கிழமைகள் ஒத்திகையும், 4கிழமைகளுக்குள் படப்பிடிப்புமாக நடந்துமுடித்துள்ளதையும் ஒருபோதும் நடித்திராத பலர், வீட்டுப் பெண்கள், உறவினர்களை வைத்தே இயக்கியுள்ளைதுயு அறிகையில் வியப்பு மேலிடுகிறது.
மிசிசிப்பி மசாலா என்ற இவரது மற்றொரு படத்தில், சென்ற நுாற்றாண்டில் எதிர்கால நல்வாழ்விற்காக இந்தியாவைவிட்டு இடம்பெயர்நத குடும்பபொன்றைப் பற்றி கூறுகிறார். உகண்டாவில் குடியேறியிருந்த இவர்கள1 அங்கு குடியேற்றவாசிகளுக்கெதிராக அரசியல்நிலைமை மாறியபோது அமாிக்காவிற்கு சென் குடியேறுகின்றனர். அப்படத்தில் வெளிநாட்டு இடப்பெயர்வுகள், நெருக்கடிகள், மீண்டும் தொடரும் இடப்பெயர்வுகள், புதிய தலைமுறையினாின் சிந்தனைமாற்றங்கள-இடைவெளிகள், பெண்களின் விருப்புகள், அவர்கள் மேலான கண்காணிப்பகள்… என்பவற்றை காட்டியிருந்தார். அமாிக்க, அய்ரோப்பிய நகரங்களில் வாழ்கின்ற புதிய தலைமுறையினாின் பல்கலாச்சாரத் தன்மை,யான வாழ்வானது, ஒரு குறிப்பிட்ட நேர்மறையான வீதத்தில் கலாச்சார,இன,மொழி,சாதிய எல்லைகளை கடக்க வைக்கின்றது. இப்புதிய இந்தியச் சந்ததியினாின் நிலையே மசாலா எனக்குறியிடுகிறார். தமிழில் பொதுவாக எழுதிப் பயன்படுத்தப்படும் எதிர்மறை அர்த்தத்திலல்ல. ஆவலைத் துாண்டும், புதியவற்றை எதிர்கொள்ளும், பாிசோதிக்கும் சந்ததி. ருசிசேர்க்கும் கலப்பு நிலை. இன்று புகலிடத்தில் வாழ்கின்ற எமது சந்ததிக்கும் இது பொருந்தும்.
இவ்வாறான பலபக்க சுவாரசிய நிலை Monsoon Wedding கிலும் காணமுடியும். உலகமயமாதலின் இன்றைய அதிதீவிர வேகமானது, மேல் நடுத்தர வர்க்கத்தினரை மட்டுமல்ல இடை, கீழ் நடுத்தர வர்க்கத்தினாிடையேயும் முக்கியமாக பல்கலாச்சார மசாலா நிலையை உள்ளாக்கி வருகிறது. இச்சிக்கலான முரண்பாடான சுவாரசியமான நிலைமை படைப்பாளருக்கு உதவக்கூடிய சமூக நிலைமையாகும்.
***
இத்திரைப்படத்தில் சிறுசிறு காட்சிகளில் கவர்ந்த பலவற்றை கூறலாம். முக்கியமாக எனக்கு கவர்ந்த காட்சிகள் அல்லது செய்திகள் சில்:
அதிதி, பெற்றோரால் கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட பின்னரும் தனது பழைய காதலருடன் உறவு கொள்கிறார். இவ்முன்னாள் காதலர் ஏற்கனவே திருமணமானவர், அவளை அவர் பாவிப்பது தொிந்தபின் அவளால் தனது உறவை மறைத்துவிட்டு, அமாிக்காவிலிருந்து வந்துள்ளவனை மணப்பது இயலாதிருந்தது. அவனிடம் எல்லாவற்றையும் சொன்னபோது, இந்தியாபற்றிய அவனது பிம்மம் உடைகிறபோது மோசமான வார்த்தைகளால் திட்டினான். பின் நிதானத்திற்கு வந்து அதிதியுடன் புதிய வாழ்வைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்கின்றான். திருமணத்திற்கு முன்னதாக ஒரு பெண் வைத்திருந்த உறவு, குற்றவுணர்வை ஏற்படுத்துவதாக எங்கும் காட்டப்படவில்லை. இயல்பானதொன்றாக காட்டப்பட்ட சூழ்நிலையானது இந்தியாவில் இளம்சந்ததியினாில் ஏற்பட்டு வருகின்ற மனமாற்றமேயாகும்.
இப்படத்தின் திருப்பமாக அமைவது வர்மாகுடும்பத்தில் முக்கியமானவரும் மூத்த மைத்துனருமானவர் குழந்தைகளை பலாத்காரம் செய்யும் ஒரு பெடோபில் (ிpaedophile) என்பது தொியவரும்போது ஏற்படும் அதிர்ச்சி. அமாிக்கா சென்று எழுத்தாளராக படிக்கவிரும்புபவரும் வர்மாவின் இறந்துபோன மூத்ததமையனின் மகளான றியா சிறுவயதில் இவனால் பாதிக்கப்பட்டிருந்தார். இக்கல்யாண நாட்களில் மீண்டும் சிறுமியொருத்தியை தனது இச்சைக்கு உட்படுத்த முயன்றபோது, றியா அவளைக் காப்பாற்றுவதுடன் இத்தனை நாட்களாக தன்னுள் அடக்கிவைத்திருந்த மனஅவஸ்தைகளை கொட்டிவிடுகிறாள். இந்நிகழ்வானது அவ்வீட்டில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி விடுகின்றது. இச்சம்பவம் மூலம் எம்சமூகத்தில் பேசமறுக்கப்படும் முக்கியமான taboo (விலக்கப்பட்டவை) ஒன்று உடைக்கப்பட்டுள்ளது. எமது குடும்பங்கள் பலவற்றில் தொியாமல் நடப்பது, தொியவந்தாலும் பொியவர்களென்ற காரணத்தால் கண்டு கொள்ளப்படாமை, சிறுவர்களின் புாியாத நிலமை, பயம் அத்தடன் சிறுவர்களின் சொற்களுக்கு செவி கொடாமை போன்றவற்றால் இவை தொடர்கின்றன. இவைபற்றி இப்பொழுததான் சிறு அளவில் ஆய்வுகள் தொடங்கியுள்ளன.
இச்சிறுமி ஆரம்பக் காட்சியில் ஒருமுறை புத்தகமொன்றில் உள்ளதை காட்டி பொியவர் ஒருவாிடம் matriarchal (பெண் தலைமையுடைய) என்ற சொல்லிற்கு என்ன அர்த்தமென்று வினவுகின்றாள். அதற்கு அவரோ அது ஒன்றும் கிடையாது, இங்கிருப்பது patriarchalதான்(ஆண் தலைமையுடைய) என்பது சுவாரசியமான, ஆழமான காட்சியாகும்.
அதிதியின் காதலர் வேலை செய்யும் தொலைக்காட்சியில் நடைபெறும் சென்சார் பற்றிய விவாதமொன்றில் தணிக்கையை வலியுறுத்தும் ஒரு மத்தியதர வர்க்க பிரதிநிதியைப் பார்த்து இளைஞர் ஒருவர், நீங்கள் சேலையுடுத்தியிருப்பதினாலேயே சாதாரண இந்தியரென்றோ, இந்தியர்களின் விருப்பை தொிவிப்பதாக கருதமுடியாது என்கின்றபடி மத்தியதரவர்க்கத்தினாின் போலியான கலாச்சார காவலர் வேடத்தையே கேலி செய்கின்றார்.
வர்மா குடும்பத்தின் இளைய மகன் (மீரா நாயாின் மகனே நடித்துள்ளார்) தொலைக்காட்சியில் சமையல்பற்றிய தொடர்களைப் பார்ப்பதுவும், நடனத்தில் ஈடுபாடுகாட்டுவதும் பொறுப்புள்ள தகப்பனான வர்மாவுக்கு கவலையளிக்கிறது. homosexual (சமபால் விருப்பு) தன்மையாக கருதும் தகப்பன், அவனை ஒரு ஆண்மகனாக்க( ?) மாணவர்விடுதிக்கு அனுப்பி வைக்க முயற்சிக்கின்றார். இவ்வாறாக பல்வேறுபட்ட விசயங்களை, உணர்வுகளை, பாத்திரங்களைத் தொட்டுச் சென்றாலும் 110நிமிடங்களில் இறுக்கமின்றி கவித்துவத்தடன் சொல்லியுள்ளார்.
உடல்களின் தொடுகை, உடலுறவு போன்றன, தலைமுறை இடைவெளிகளில் இது வெவ்வேறான ஈடுபாட்டுடன், உணர்வுகளுடன் நடைபெறுவதை இயல்பானதாக, அழகான விசயமாக காட்டப்படுவதானது, மீரா நாயர் சிறந்த படைப்பாளிமட்டுமல்ல, ஒரு பெண்ணாக இருப்பதினாலேயே உணர்வு, பார்வை ாீதியாக இது சாத்தியமாகியுள்ளதுவோ என்று கேட்கத் தோன்றுகின்றது.
மொத்தத்தில் இத்திரைப்படம், பெற்றோாின் பொறுப்புணர்வு, பெண்களின் உணர்வுகள், குடும்பங்களில் நடைபெறுகின்ற குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, தலைமுறை இடைவெளி, கணணி-உலகமயமாதலால் ஏற்படும் பொருளியல், கலாச்சாரமாற்றம், இந்தியாின் முக்கியமாக மத்தியதர வர்க்கத்தினாின் உலகுதழுவிய இடப்பெயர்வுகள் போன்றவற்றைத் தொட்டுச் சென்றுள்ளதாக சொல்லலாம். வழக்கமாக இந்தியபடங்கள், இந்தியாவின் கொடிய வறுமை, சோகங்கள் பற்றிமட்டுமே பேசப்பட வேண்டுமென்ற மேற்குலகின் எதிர்பார்ப்பையும், ஆசையையும் இப்படம் நிராகாித்துள்ளது. இது இந்தியாவின் வேறோரு பக்கத்தையும்- அது பொதுவான மேற்குலகுபோல், சுயநலமான சமூகமாக இருந்த போதிலும் காட்டி நிற்கின்றது.
உயிரைச் சுண்டியிழுக்கும் இசையும் பாடலும் இப்படத்தின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளது. தமிழ்ப்படங்கள் போல செயற்கையான கற்பனை நடனங்கள் இல்லாமல் உண்மையிலேயே பஞ்சாபித் திருமணங்களிலும் கொண்டாட்டங்களிலும் சிறுவர் முதல் வயோதிப மனுசிவரை கலந்து குதுகலித்து மகிழும் நடனமானது இவ்விசயத்தில் தமிழாின் வறுமையைக் காட்டி நிற்கின்றது. ஓளிப்பதிவாளர் டெக்லான் குயின் பல்வேறு பாத்திரங்களின் உணர்வகளைக் காட்டுவதற்கும் மழைக்காட்சிகளிலும் நடனக் காட்சிகள், நகரவீதிகளைக்காட்டுகையிலும் தனது பார்வையைத் திறந்துள்ளார்.
இப்படம் மீரா நாயாின் பாிசோதனை. கோடிக்கணக்கான ரூபாய்களின் சம்பந்தமின்றி, விசேட effects மற்றும் கற்பனையான கதைப்படத்துக்குாிய மேலதிக விசேசங்கள் ஏதுமின்றி ஒரு படம் எடுக்க விரும்பினேன். இது இளையவர்க்கு செலவுகுறைவான படங்களை எடுக்க முடியும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றேன். மக்களின் உலகத்தைப் பற்றிய சிந்தனையில் ஆத்திரமூட்டி பிரக்ஞை கொள்ளச் செய்யவே படங்கள் எடுக்கின்றேன். பார்த்துவிட்டு உடனேயே மறந்துவிடும்படியான அந்த மகிழ்ச்சிதரும் படங்களை என்னால் எடுக்க முடியாது. மேலும் ஏற்கனவே எனக்கு தொிந்த விசயத்தை செய்ய விரும்பவில்லை. துணிந்திறங்குவதற்கும் பிழைவிடுவதற்கும் தயாராக உள்ளேன். இச்சவாலலை¢தான் தான் ஏதாவது புதியதாய் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இவாின் துணிவும் முயற்சியும் வீண் போகவில்லை.
***
Ragavan Nadarajah
- வானோர் உலகம்
- நகர(ரக) வாழ்க்கை
- தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை
- ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை
- பொறுப்பின்மையும் போதையும் (எனக்குப் பிடித்த கதைகள்-17 -பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி ‘)
- மகாராஜாவின் இசை
- பாரதி இலக்கிய சங்கத்தின் மாதந்திர சந்திப்பு
- பருவ மழைக்காலத்து திருமணமும், மீரா நாயரும் – Monsoon Wedding திரைப்படம் பற்றிய ஒரு பார்வை
- கோதுமை தேன் குழல்
- சோயா முட்டை பஜ்ஜி
- அணையாத அணுஉலைத் தீபம் – சூரியன்
- வசந்த மாளிகை
- நிலப்பரப்பு
- இன்னொரு முடிவும் எனக்கு முன்னால்
- கலர் கனவுகள்
- மதிப்பு
- ஊடுருவல்.
- இருத்தல் குறித்த சில கவிதைகள்..
- தெளிந்த நீரோடை
- அமானுஷ்யக் கனவு
- அடையாளம் கடக்கும் வெளி
- கெளரவம் (Respectability)
- பத்திரிகைகளில் வெளிநாட்டு முதலீடு : வரவேற்போம்
- இந்த வாரம் இப்படி – சூன் 30 2002 (முஷாரஃபின் ஜனநாயகம், ஸ்டாலின் பதவி)
- மகாராஜாவின் இசை
- மனுசங்கடா, நாங்க மனுசங்கடா
- தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை