பண்பாட்டை அணுகும் புதிய பார்வை – தொ.பரமசிவன் எழுதிய “தெய்வம் என்பதோர்…..” (கட்டுரைத்தொகுதி அறிமுகம்)

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

பாவண்ணன்


வெவ்வேறு ஆய்வரங்குகளிலும் பல்கலைக்கழகக் கூடங்களிலும் வாசிக்கப்பட்ட இக்கட்டுரைகளின் மையப்புள்ளி மிகவும் முக்கியமானதும் தனித்துவம் மிகுந்ததுமாக உள்ளது. இந்த நாட்டின் எளிய மக்கள் சார்பாக நின்று இந்த மையப்புள்ளியை தொ.பரமசிவன் தொட்டுக் காட்டுகிறார். தெய்வம், தெய்வ நம்பிக்கை என்னும் சொற்களுக்கு எளிய குடிமக்களிடையே நிலவும் பொருளும் உயர்குடிமக்களிடையே நிலவும் பொருளும் வேறுவேறு என்பதை எளிய எடுத்துக்காட்டுகள்வழியாக புரிந்துகொள்ளவைக்கிறார். எளிய குடிமக்களிடையே மனிதர்களுக்கும் தெய்வங்களுக்கும் இடையேயான உறவு கிட்டத்தட்ட மானுட உறவுக்கு இணையான ஒன்றாகும். இரக்கமும் தோழைமையும் பொறுப்புணர்வும் கொண்டவையாக தெய்வங்கள் உள்ளன. குடிமக்களுடைய சார்பாளர்களாக தெய்வங்கள் நிற்கின்றன. தோளோடு தோள்நின்று தம் மக்களுக்காகப் போராடுகின்றன. கண்விழித்து எல்லையைப் பாதுகாக்கின்றன. கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகிற தருணங்களில் சீற்றத்தையும் வெளிப்படுத்துகின்றன. மக்கள் பக்தியுடன் வழங்கும் பலிகளையும் பூசைகளையும் ஏற்றுக்கொள்கின்றன. வெள்ளம், மழை, பகை, வெப்பம் என எதன் வழியாலகவும் தீய விளைவுகள் உருவாகாதபடி நின்று காக்கின்றன. இந்தத் தெய்வ நம்பிக்கைக்கும் மதநம்பிக்கைக்கும் எந்தத் தொடர்புமில்லை. இன்னொரு புறத்தில் உயர்குடி மக்களிடையே தெய்வ உறவு என்பது மதத்துடன் தொடர்புகொண்டதாக உள்ளது. அதிகாரத்துடன் தொடர்புகொண்டதாகவும் உள்ளது. அத்தெய்வங்களையும் மதங்களையும் காக்கிற பொறுப்பு தமக்கிருப்பதாக உயர்குடி மக்கள் நினைத்துக்கொள்கிறார்கள். பூசல்களுக்கான விதைகளை அவர்களே விதைக்கிறார்கள். மதம் என்னும் வரையறையை அவ்வளவு எளிதாக எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவான ஒன்றாக உருவாக்கிவிட முடியாது. அதை வரையறைத்து அறிவிக்க வேண்டிய பொறுப்புணர்வு இன்று அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் உள்ளது. வரலாற்றில் காலந்தோறும் நிகழ்ந்திருக்கக்கூடிய பண்பாட்டு அசைவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து அறிவித்துவரும் தொ.பரமசிவனுடைய சமீபத்திய ஆய்வுக்கட்டுரைகள் இந்தத் திசையில் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளன.

தொகுப்பில் காணப்படும் மூன்று கட்டுரைகள் தாய்த்தெய்வம் பற்றியவை. தாய்த்தெய்வ வழிபாட்டின் பல பரிமாணங்களை அவர் கண்டறிந்து சொல்லும் விதம் இயல்பாகவும் நெருக்கமாகவும் உள்ளது. தாய்த் தெய்வக் கோயில்களில் சடங்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெருஞ்சமய எல்லைக்குள் சிக்காமல் தாய்த்தெய்வங்கள் தனித்து நிற்பதற்கு இதுவே வலிமையான காரணம். தமிழ்நாட்டில் பரவலாக வழிபடப்படும் தாய்த் தெய்வங்களை ஏழெட்டு வகைகளுக்குள் அடக்கிவிடலாம். முதலாம் வகை, ஊர்ப்பொதுத் தெய்வங்களாக அமைந்தவை. நான்கு அல்லது எட்டுக் கைகளோடு அமர்ந்து எல்லாக் கைகளிலும் ஆயுதங்களை ஏந்தி எருமைத்தலை அரக்கனைக் கொன்று பாதுகாப்பை வழங்குபவை. இக்கோயில்கள் விதிவிலக்காக அன்றி பெரும்பாலும் வடக்குநோக்கியே அமைந்திருக்கும். ஊரின் நடுவிடம் அல்லது எல்லையில் உள்ள மந்தையை இருப்பிடமாகக் கொண்டவை.

பழையனு¡ர் நீலியின் நாட்டுப்புறக் கதையை முன்வைத்து அவர் நிகழ்த்தும் ஆய்வு வணிகர், வேளாளர் பிரிவினரின் பக்தி எழுச்சி வரைக்கும் அகழ்ந்து செல்வதாக உள்ளது. நீலி கதை அடிப்படையில் வஞ்சகமாக தன்னைக் கொன்று இன்னொருத்தியை மணம்செய்துகொண்ட தன் கணவனை, அதே வஞ்சனையை வழிமுறையாகக் கொண்டு பழிவாங்கும் ஒரு பெண்ணின் கதையாகும். பழி வாங்குவதற்காகவே பேயாக காட்டில் அலைந்து சினத்தைத் தணித்துக்கொள்கிறாள் அவள். கதைக்கு இதுவே மையப்புள்ளி. வஞ்சிக்கப்பட்டவன் அதே விதத்தில் வஞ்சிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கவே முடியாது. முற்பகல் செய்யும் இன்னா பிற்பகல் தானாகவே விளையும் என சமூக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கு வலிமை சேர்க்கும் விதமாக இக்கதை உள்ளது என்று வேண்டுமானாலும் கருதலாம். சபதமுரைத்து பழிவாங்குகிற ஆண்களின் கதைகளைக் கெளரவமாகக் கருதுகிற சமூக ஆண் மனம் வஞ்சிப்பவள் ஒரு பெண் என்பதையும் அவளால் வஞ்சிக்கப்படுகிறவன் ஓர் ஆண் என்பதையும் ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை இல்லாத நிலையில் கதையில் இரண்டாம் மையத்தை தந்திரமாக உருவாக்குகிறது. அடைக்கலம் கேட்டுவந்த வணிகனைக் காப்பாற்ற இயலாத நிலையில் கும்பலாகத் தீக்குளித்துமாண்ட வேளாளர்கள் கதையை நோக்கி மையத்தைக் கட்டியெழுப்புகிறது. வளர்ந்துவந்த வேளாளச் சமூகம் தன்னை முன்னிறுத்திக்கொள்வதற்காக இந்த மைய மாற்றத்தை நிகழ்த்துகிறது. பழிவாங்கத் துடிக்கும் ஆண் தமிழ்ச்சமூகத்தில் வீரனாகவும் தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறான். ஆனால் கொலைகாரக் கணவனைப் பழிவாங்கிய நீலி தெய்வமாக்கப்படவில்லை. அவள் மறக்கப்படவில்லை என்பதொன்றே ஆறுதலான அம்சமாக உள்ளது.

வள்ளிக்கும் முருகனுக்கும் இடையே மலர்ந்த காதலை புகழ்பெற்ற இலட்சியக் காதல் இணையாகக் காணும் நாட்டார் பாடல்களை வேறொரு கட்டுரையில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் தொ.ப. நாட்டார் மரபில் வள்ளி இளமைக்கும் துடிப்புக்கும் அடையாளமாகச் சித்தரிக்கப்படுகிறாள். குமரகுருபரர், பாரதியார் என இரு பெருங்கவிஞர்களின் கவிதைகளில் கூட இப்படிப்பட்ட சித்தரிப்புகள் உண்டு. பிற்காலத்தில் மேலோர் பூசைக்கு உட்பட்ட முருகனுக்கு ஆட்டுக்கறியும் தேன், தினையரிசி, கிழங்கு படைப்பதும் தவிர்க்கப்பட்டு விட்டன. கார்த்திகேயனாகவும் சண்முகனாகவும் சுப்பிரமணியனாகவும் முருகன் மாற்றப்பட்டுவிட்டான்.

“தமிழக ஆன்மிக வரலாற்றில் வள்ளலார்” கட்டுரையும் புதிய கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. வள்ளலாரைச் சைவ மரபுக்குள் நிறுத்திப் பார்ப்பதே சரியாக இருக்குமென்றாலும் சமண சமயத்தின் தொல்லறமாகவும் சைவத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான புலால் உண்ணாமை அறத்தினை அவர் உயிர் இரக்க ஒழுக்கமாக முன்னிறுத்தினார். மனித உயிர்களைத் தாண்டிய மற்ற உயிர்கள்மீதும் படிந்த அவரது இரக்கப்பார்வை மனிதர்கள்மீது திரும்பியபோது இயற்கையாகவே அது சாதி மறுப்புக்கொள்கையாக விளங்கியது. அவர் பசிப்பிணியை நீக்கும் செயலுக்கு அளித்த முக்கியத்துவம் ஆன்மிக வரலாற்றில் ஒரு புதுமையாகும். பசிக்கொடுமையை மனித குலத்தின் முதல் எதிரியாகக் கண்டு வள்ளலார் அஞ்சியதற்கு அவர் வாழ்ந்த காலச் சூழலும் அரசும் ஒரு காரணமாகும். கருணையில்லாத ஆட்சி கடுகி ஒழிக என்ற அறச்சீற்றத்துக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கவேண்டும்.

பாரதியாரின் கண்ணன் பாட்டுகளை முன்வைத்து தொ.ப. நிகழ்த்தும் ஆய்வு பாரதியிடம் குடிகொண்டிருந்த சனநாயக உணர்வை அக்கறையோடு வெளிப்படுத்துகிறது. கண்ணனைக் குழந்தையாகவும் நாயகனாகவும் தெய்வமாகவும்மட்டுமே ஆழ்வார்கள் பார்க்க, பாரதியோ தாயாகவும் தோழனாகவும் சற்குருவாகவும் ஆண்டாளாகவும் காதலனாகவும் காதலியாகவும் வேலைக்காரனாகவும் பார்க்கிறார். விளிம்புநிலை மனிதர்கள் என்ற சொல் புழக்கத்திலேயே இல்லாத காலத்தில் அத்தகு மனிதர்களாக அவர்களை மாற்றிப் பார்ப்பதும் பாடுவதும் மிகப்பெரிய புதுமை என்றே சொல்லவேண்டும். இவரிடம் செயல்பட்ட இந்த சனநாயக உணர்வுதான் இதற்குக் காரணம். இதனாலேயே “கோத்த பொய் வேதங்களும் மதக் கொலைகளும் அரசாங்கக் கூத்துகளும் மூத்தவர் பொய்நடையும் சில மூடர் தம் கவலையும்” கொண்டதாக வரலாற்றைப் பார்க்கும் ஒரு தாயாக கண்ணனை முன்வைக்கிறார் பாரதியார். இந்த சனநாயக உணர்வுக்கு அதிகார வலைக்கு உட்படாத பாகவதக் கண்ணன் கதைகள் உணர்வுரீதியாகத் துணைசெய்கின்றன. வைணவம் என்ற சமய அதிகார மையம் உருவாவதற்கு மாறாக, கண்ணன் பாட்டில் மையமழித்தல் என்ற வகையில் சனநாயக உணர்வுகள் பரவலாக்கப்படுகின்றன.

தொகுப்பின் முக்கியமான கட்டுரை “பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும்” மிகச்சிறிய அளவுள்ளதாக இருப்பினும் பெரியாரைப்பற்றிய புரிதலுக்குத் துணைசெய்வதாக உள்ளது இக்கட்டுரை. பெரியாரின் இறைமறுப்புக்கொள்கையையும் நாட்டார் தெய்வ வழிபாட்டையும் சமூகப் பின்னணியில் மதிப்பிட முயற்சி செய்கிறார் தொ.ப. காலனிய மரபை எதிர்த்து எழுந்த எதிர்வினைகள் பாரதியாரின் தோற்றத்துக்குக் காரணமாக அமைந்ததைப்போல இந்து தேசியத்தின் எதிர்வினைகள் பெரியாரின் தோற்றத்துக்குக் காரணமாக அமைந்தன. அவரது பேச்சும் செயல்பாடுகளும் இந்து தேசியம், இந்தியத் தேசியம் என்ற இரண்டு எல்லைகளையும் கடந்து மனிதகுல விடுதலைக்கான பயணமாக விளங்கியது என்று தொ.ப. குறிப்பிடுகிறார். பண்பாட்டளவில் நாட்டார் தெய்வங்கள் எனப்படும் தெய்வங்களுக்கும் சிவன், பார்வதி, திருமால், பிரும்மா, சுப்பிரமணியன் என அறியப்பட்ட மேலோர் தெய்வங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை சற்றே விலகி நின்று கவனிக்கவேண்டும் என்பது அவர் வேண்டுகோள். அதிகாரத்தை நிலைப்படுத்த விரும்பும் நிறுவனச் சமயங்களுக்கு ஒரு புனித நு¡ல், ஒரு புனித வழிபாட்டுத்தலம், விதிகளின் அடிப்படையில் நிகழும் பூசைமுறை என்பவை உண்டு என்னும் கருத்தைக் கண்டடைந்து அவர் முன்வைக்கிறார். நிறுவனச் சார்பற்ற நாட்டார் தெய்வ வழிபாடுகள் இந்த இலக்கண முறைகளிலிருந்து விலகி நிற்பவை. நாட்டார் தெய்வ வழிபாட்டை ஒருவித நம்பிக்கையுடன் கூடிய வழிபாட்டு நெறிகள் என்று அழைக்கலாமே தவிர மதம் என்ற கட்டுக்குள் அடக்க இயலாது. சாதிக்கயிற்றால் கட்டப்பட்டவை நாட்டார் தெய்வங்கள் ஒருபோதும் பண்பாட்டு அதிகார மையமாக விளங்கியதில்லை. சாதிய அடுக்குமுறை காரணமாகவோ அல்லது உள்ளூர் காரணங்களாலோ பிரச்சனைகள் உருவாகும் தருணங்களில் மூல கோயிலில் இருந்து பிடிமண் எடுத்துச் சென்று வேறொரு கோயிலை உருவாக்கிக்கொள்ள ஒரு மாற்றுவழி உண்டு. மதம் என்னும் கட்டுக்குள் நாட்டார் தெய்வங்கள் அடங்குவதில்லை. மதத்திலிருந்து மனிதனை விடுதலை செய்வது என்ற முழக்கம் நாட்டார் தெய்வ வழிபாடுகளுக்குப் பொருந்தாது. தன் மக்களின் பாதுகாப்புக்காக ஆயுதமேந்திப் போராடும் குணமுள்ள நாட்டார் தெய்வங்களை பெரியார் எதிர்கொள்ளவே இல்லை. மாறாக, அதிகார மையமாக விளங்கிய கோவில்களையும் அவற்றை மையப்படுத்திய மனித ஏற்றத் தாழ்வுகளையுமே அவர் இறுதிமூச்சுவரை எதிர்த்தார்.

இறுதியாக எழுதப்பட்டுள்ள “சமய நல்லிணக்கம்- பெரியாரியப் பார்வையில்” என்னும் கட்டுரையில் இந்து என்ற சொல்லுக்குள் புதைந்திருக்கும் ஆதிக்க உணர்வுகளை அடையாளம் காட்ட முயற்சி செய்கிறார் தொ.ப. வேதத்தைமட்டுமே கடவுளாகக் கொண்ட ஸ்மார்த்தர்கள், ஆகமங்களையும் கோயில் வழிபாட்டு முறைகளையும் முன்வைத்து சைவ, வைணவர்கள், இந்த இரண்டு நெறிகளுக்குள்ளும் அடங்காத தொல்பழஞ்சமயக்கூறுகளை உடைய பெருவாரியான மக்கள் திரள்- இவர்கள் அனைவரையும் இந்து என்ற சொல்லின் கீழ் அடக்கும் செயலை தொ.ப. சமய ஆதிக்க உணர்வு என்று குறிப்பிடுகிறார். மதத்தின் பெயரால் ஏற்படும் பதற்றங்கள், இரத்தக்களரிகள், பிறவகை வன்முறைகள் அனைத்திலும் இந்து என்ற கருத்தியலே மையமாகத் திகழ்கிறது. ஆனால் நடைமுறையில் இந்து என்னும் சொல் பல்வேறு சமயங்களையும் நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்கான வரம்புகளை முறைப்படுத்திச் சட்டமாக்க வேண்டும். இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் இந்து என்ற மேலைச் சொல்லாடலுக்கான நேரிடையான வரைவிலக்கணத்தை வகுக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்.

தொ.ப.வின் ஆய்வு நெறிமுறை நடைமுறை வாழ்க்கை சார்ந்ததாக இருப்பதால் நமக்கு மிகவும் உவப்பளிப்பதாக இருக்கிறது. சமூகவியல் பின்னணியில் அவர் கண்டடைந்து நம்முடன் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு செய்தியும் மனத்தில் ஆழமான அதிர்வுகளை உருவாக்குகின்றன. நாட்டார் தெய்வங்களைப்பற்றி நம் மனத்தில் நிரம்பியிருக்கும் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள், மூடநம்பிக்கைகள் என்ற கருத்துகள் எவ்வளவு பிழையானவை என்பதை நுட்பமாக உணரவைக்கிறார். வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் கொண்ட நாட்டார் தெய்வ வழிபாடுகளில் பொதிந்திருக்கும் பன்முகத்தன்மையை சரியாகப் புரிந்துகொள்ளும்படி வாசகர்களைத் தூண்டுகிறார். இப்படிப்பட்ட புரிதல் வழியாகவே மக்கள் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும் என்பது தொ.ப.வின் முடிவு. சமீப காலத்தில் வெளிவந்துள்ள நூல்களில் முக்கியமான ஒன்றாக இந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பை அடையாளப்படுத்தலாம்.

( தெய்வம் என்பதோர்.. -கட்டுரைத் தொகுதி. தொ.பரமசிவன், யாதுமாகி பதிப்பகம், 37/17, இராமசாமி கோயில் சன்னதி தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627 002. விலை. ரூ50)


Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்