படிக்கப்படுபவை நடிக்கப்படுகையில்…

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

மலர்மன்னன்



ஒரு சிறுகதைக்கு நாடகமாக மாற்றுரு அளித்து அரங்கேற்றாமல் அந்தச் சிறுகதையை அது எழுதப்பட்ட
விதமாகவே நடித்துக் காட்டும் முயற்சி இப்போது தமிழிலும் தொடங்கியுள்ளது. சிறுகதைகள் பாவத்துடன் படிக்கப்படும்
நிகழ்ச்சி ரேடியோவில் வழக்கம்தான். நடிக்கப்படுவதன் மூலம் சிறுகதையை வாசகனுக்கு மேலும் அருகாமையில் கொண்டுவர முடியும் என்பது அண்மையில் கூத்துப்பட்டறை சென்னையில் தனது அரங்கில் ஆறு சிறுகதைகளை நடித்துக் காட்டிய நிகழ்ச்சியைப்
பார்த்தபோது உணர முடிந்தது.

தில்லி தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவரான வி. பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் கூத்துப் பட்டறையின்
உறுப்பினர்கள் கதாசிரியர்கள் புதுமைப்பித்தன், பூ.சொல்விளங்கும் பெருமாள், பாமா, செழியன், ம.ராஜேந்திரன்
ஆகியோர் எழுதிய சிறுகதைகளை நடித்துக் காட்டினார்கள். இயல்பான நடிப்பும் களத்திற்குக் கொண்டுவர இயலாத பொருட்களைச் சைகைகளின் மூலமாகவே அவை இருப்பதான உணர்வைத் தோற்றுவித்து விடுவதும் கூத்துப் பட்டறையில் பயின்றவர்களுக்கு எளிதாகக் சாத்தியமாகி விடுவதால் படிக்கப்பட்ட சிறுகதைகள் நடிக்கப்படுதல் கூடுதலான ரசானுபவத்தை அளித்தது.

நன்றாக எழுதப்பட்ட ஒரு சிறுகதையை வாசகன் படிக்கையில் அது அவனது மன அரங்கில் நடிக்கப்டுவதாகத்தான்
உள்ளது. எழுத்தாளனால் மிகவும் திறமையாக வார்க்கப்படும் கதாபாத்திரங்கள் வாசகனின் உள்ளத்தில் இன்னின்ன
பாத்திரங்கள் இன்ன மாதிரியாகத்தான் இருக்கும் என்று அவற்றின் நடை, உடை, பாவனைகளுடன் சித்திரங்களாகப் பதிந்து
விடுகின்றன.

அவன் கண் எதிரே அதே சிறுகதை அது எழுதப்பட்ட விதமாகவே நடிக்கப்படுகையில், கதைசொல்லியின்
பாவத்துடனான விவரணைகளும் பாத்திரங்களின் உரையாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டு வாசக அனுபத்தை மேம்படுத்துகின்றன.

இமையம் எழுதிய பொன்னம்மாவின் குடும்பக் கதையைக் குறி கேட்க வந்த கதை சொல்லியாக்வும், குதிரைகள்
மலிந்த அய்யனார் கோவிலையே குடியிருக்குமிடமாகச் சரணடைந்த முதியவள் பொன்னம்மாவாகவும் நடித்துக் காட்டிய
எஸ்.சோமசுந்தரம் பெண்ணானவள் எத்தனை துன்புறுத்தல்களுக்கு ஆளானாலும் ஏமற்றப்பட்டாலும் அதற்குக் காரணமானவர்கள் மீது கோபப்படுவதற்குப் பதிலாகத் தன்னையே நொந்துகொண்டும் சமாதானம் சொல்லிக் கொண்டும் வாழ்கிற அளவுக்கு ஆணாதிக்க சமூகம் பெண்ணின் அறிவை மழுங்கடித்து வைத்திருப்பதை வெகு எளிதாக உணரச் செய்தார். குறி கேட்ட வந்த கதை சொல்லி, பொன்னன்மாவிடம் கதை கேட்டதற்குப் பிரதியாக வெற்றிலைச் சுருக்கை எடுத்து நீட்டுகையில், ‘நீங்க என்ன சாதியோ சனமோ, எப்படி உங்க கையால வெத்திலய வாங்கறது, காசு ஏதாச்சும் இருந்தாக் குடுத்துட்டுப் போங்க’ என்கிறாள் குயவர் சாதியைச் சேர்ந்த பொன்னம்மா! தீண்டாமை என்கிற சம்பிரதாயம் மேல் சாதி கீழ் சாதி என்னும் வேறுபாடின்றி அனைத்து சாதியாரும் தமக்குக்
கீழானவர் எனக் கருதப்படும் சாதியாரிடம் கடைப் படிக்கப் படுவதாகத்தான் இருந்து வந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வைக்கிற வசனம் இது.

இதேபோல் வி.தம்பிச்சோழனின் நடிப்பாற்றல் பாமாவின் தாத்தாவும் எருமை மாடும் என்ற சிறுகதையின் கதை சொல்லியான இளைய தலைமுறை தலித்தை வாசகன் மனதில் உருவாக்கி வைத்திருக்கும்ம் தோற்றத்தைச் சரியாகப் பிரதிபலிக்கிறது. பாத்திரத்தைச் சரியாக உள்வாங்கிக் கொண்டு வாசகன் கணித்தவாறே உருவகித்துக் காட்டும் இவரது திறமை,
ம.ராஜேந்திரன் எழுதிய சிறுகதையான ‘பட்டா’ வில் வரும் நிலமற்ற விவசாயக் தொழிலாளி சேப்பான் என்கிற கதாபாத்திரத்திலும் நிரூபணமாகிறது. சுயமாக வேளாண்மையில் ஈடுபட எவ்வித வசதியும் செய்து கொடுக்கப்படாதவரையில் நிலமற்ற விவசாயிகளுக்கு இலவசப் பட்டா வழங்கும் திட்டம் வெறும் சம்பிரதாயமே என்னும் செய்தியைச் சொல்வது. பட்டா கொள்கைப்
பிரச்சாரம் போல் அல்லாது ஒரு கசப்பான முரண் நகையாக வெளிப்படும் இந்த உண்மை. இறுதியில் சேப்பான் அதிர்ந்து நிற்கையில் முகத்தில் அறைந்து, வாசகனுக்குக் கூடுதலான வாசிப்பு அனுபவம் கிட்டச் செய்கிறது.

அரசியல் கட்சிகளில் சேர்ந்து, அதையே தமது செல்வாக்கின் வளர்ச்சிக்கும் அடாவடியான வருமானத்திற்கும் வழி செய்து கொள்பவர்களின் கதை பூ. சொல்விளங்கும் பெருமாளின் ‘கொடிமரம்’. தலைவர் வந்து கொடியேற்றும் வரை ஒரு நாள் கூட அல்ல, சில மணி நேரக் கூத்துக்காகத் தமது வீட்டு வாசலில் கொடிமரம் ஒன்றை நிறுவ அனுமதிக்கு வீட்டுக்காரர், இறுதியில் அதை அப்புறப்படுத்தத் தண்டம் அழுது தொலைக்க வேண்டியதாகிறது. வீட்டுச் சொந்தக்காரர் பாத்திரத்தை ஏற்ற என். நாராயணசாமியின் நடிப்பு இதில் குறிப்பிடும்படியாக இருந்தது.

கனவுத் தொழிற்சாலையான திரைப்படத் துறையில் தங்களுக்கும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான துணை இயக்குனர்கள் என்னும் விட்டில் பூச்சிகளுள் இரண்டை முன்வைக்கிறது செழியனின் ‘கதை’. நடிப்பிற்கு சாத்தியக்கூறு இல்லாத இச்சிறுகதையின் பாத்திரங்களை நடித்துக் காட்டிய எஸ். வெங்கடசுப்பிரமணியன், ஜி.அனந்தகுமார்
ஆகியோருக்குத் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிட்டவில்லை.

இது புதுமைப்பித்தன் நூற்றாண்டு என்பதால் அவர் எழுதிய சிறுகதை ஒன்றும் நடித்துக் காட்டப்பட்டது. ஆனால் நடிப்பதற்குத் தேர்ந்தெடுத்த சிறுகதை அவர் எழுதியதிலேயே மிக மிகச் சாதாரணமானதாகையால் எடுபடாமல் போயிற்று.

புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் பலவும் மிக அருமையாக நடித்துக் காட்டுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளவைதாம். மனித இயந்திரம், ஒரு நாள் கழிந்தது, என அடுக்கிக் கொண்டே போகலாம். திருநெல்வேலித் தமிழைச் சுவையாகப் பேசிக்காட்ட வாய்ப்பளிக்கும் சிறுகதைகள் பல புதுமைப்பித்தனில் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் விட்டு விட்டு
டாக்டர் சம்பத் என்கிற சிறுகதையை இயக்குநர் தேர்ந்தெடுத்தது ஏனேன்று புரியவில்லை.

நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில், படிக்கப்பட்ட சிறுகதைகள் பலவற்றையும் நடித்துக் காட்டுதலைக் கூத்துப்பட்டறை தனது நிரந்தர அம்சங்களுள் ஒன்றாக வைத்துக் கொள்வதும், புத்தக்ச் சந்தைகளிலும், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளின் போதும் இவ்வாறான நடித்துக் காட்டுதல் நிகழ்த்தப் பெறுவதும் வாசிப்புப் பழக்கத்தைப் பெரிதும் ஊக்குவிக்கும் என்ற
எண்ணம் தோன்றியது.
—————————–

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்