சின்னக்கருப்பன்
தமிழ்நாட்டில் மூப்பனார் ஆதரவு கொடுத்தும் ஜெயலலிதாவின் கட்சி தோற்றிருக்கிறது. இது மூப்பனார் தமிழ்நாட்டில் முழுவதுமாக காலாவதியானதையும், ஜெயலலிதாவின் கட்சி வெறியாட்டம் ஆடிய பின்னரும், தமிழ் மக்கள் ஜெயலலிதாவின் பின்னால் நிற்பதையும்தான் குறிப்பிடுகிறது. திமுக கூட்டணி மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றாலும், இரண்டாவதாக வந்திருக்கும் ஜெயலலிதாவின் கட்சி சுமார் 1 லட்சம் வாக்குகளை மூன்று இடங்களிலும் சேர்த்து பெற்றிருக்கிறது. (லல்லு பிரசாத் யாதவ்வின் கட்சியும் இதேபோல் 120க்கு பக்கமாக இடங்களை பீகாரில் வென்றிருக்கிறது.)
இடைத்தேர்தல்தானே, நாம் நின்று பார்க்கலாம் என்று மூப்பனார் கட்சி நின்றிருந்தால் ஒரு வேளை ஜெயலலிதா இப்போது இருக்கும் இடத்தை பிடித்திருக்கலாம். மூப்பனார் சோனியாவின் காலால் இட்ட வேலையை தலையால் செய்பவர் என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார். எனக்கு அதில் ஒன்றும் வருத்தமில்லை. ஆனால் அந்தக் கட்சியில் சில திறமையானவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் அரசு நிர்வாகத்திலும் பொருளாதாரத்திலும் அறிவு உள்ளவர்கள். அவர்கள் இன்னும் மூப்பனார் கட்சியில் இருப்பது அவர்களுக்கு தேவையற்றது.
இவர்கள் சேர்வதற்கு வேறு கட்சியும் இல்லை. இவர்களால் பாஜகவிலோ, கம்யூனிஸ்ட் கட்சிகளிலோ சேர முடியாது. சோனியா குடும்பம் நடத்தும் காங்கிரஸில் சேரலாம். அல்லது சரத் பவார் நடத்தும் தேசீய காங்கிரஸில் சேரலாம். இரண்டுக்கும் தமிழ் நாட்டை பொறுத்த வரை வித்தியாசமும் கிடையாது முகவரியும் கிடையாது. ஜெயலலிதா போட்ட பிச்சையில் காலம் ஓட்டுவது என்பது வேண்டுமானால் தமிழ்நாட்டு சோனியா கட்சியால் முடியலாம். தனி ஆவர்த்தனம் என்பது டெப்பாஸிட் காலியில் தான் முடியும்.
ஆனால் ஒரு மாற்று இருக்கிறது.
அதற்கு முன் வடக்கில் நடந்த விஷயங்கள் பற்றி பேச வேண்டும். சோனியாவால் கட்சிக்கு லாபம் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் நடந்த இடைத் தேர்தலில் ஏழு இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், ஒரு லட்சத்துக்கு மேல் ஓட்டுகள் உள்ள இடங்களில்கூட, 2000 ஓட்டுகளைக் கூட வாங்க முடியவில்லை. டெப்பாஸிட் காலிக்கும் கீழ் ஒரு அவமானம் உண்டு என்றால் இதுதான். பீகாரில் 360 இடங்களில் போட்டி இட்ட காங்கிரஸ் ஜெயித்தது 23 இடங்களில். லல்லுவை எதிர்த்து பிரச்சாரம் பண்ணிவிட்டு இப்போது லல்லுவுக்கே கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டது காங்கிரஸ். அடுத்த தேர்தல் நஷ்டத்துக்கு இன்றே விதை. நஷ்டத்தின் மேல் நஷ்டம் என்று வெளிப்படையாக பேசும் காலம் வந்து விட்டது. சோனியா குடும்ப அடிவருடிகளும் அந்த குடும்பத்தால் காலம் தள்ளும் குமாஸ்தாக்களும் இந்த விஷயத்தை அமுக்கி ஏதோ பிராந்திய தலைவர்களால் தான் ஓட்டு வாங்க முடியவில்லை என்று பேசி வருகிறார்கள். மக்கள் ஓட்டு போட்டால் சோனியாவால், ஓட்டு போடவில்லை என்றால் பிராந்திய தலைவர்களால் என்று சோப்படித்துக் கொண்டு காலம் தள்ளுகிறது காங்கிரஸ் கூட்டம். இதே ரீதியில் செய்திகளும் தலையங்கங்களும் எழுதுகின்றன, இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகள். இது நீடிக்கும் வரை பாஜகவுக்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் கொண்டாட்டம்.
நடக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. சோனியாவை காங்கிரஸ் தலைமையிலிருந்து தள்ளிவிட்டு, ப. சிதம்பரம், மன்மோகன் சிங், ராஜேஷ் பைலட் , திக்விஜய் சிங் போன்றவர்கள் தலைமைப் பதவிக்கு நேரடியாக போட்டியிட்டு காங்கிரஸ் தலைவர்கள் ஆனார்கள் என்றால், காங்கிரசுக்கு எதிர்காலம் இருக்கிறது. அடிவருடிக் கும்பல் தொடர்ந்தால் இன்னும் கேவலம் தான் சோனியா கட்சிக்கு.
காங்கிரஸில் ஏராளமான காரியக்கமிட்டி உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள். எனவே இவர்கள் மட்டுமே ஓட்டுப் போட்டால், அவர்கள் இந்தியா முழுவதும் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் விரும்புவது என்ன என்பதை பிரதிபலிக்க மாட்டார்கள். எனவே இந்த தலைவர் பதவிக்கான போட்டி, அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒருவருக்கு ஒரு ஓட்டு மாதிரியில், ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதுவே காங்கிரஸ் தலைவர் மக்கள் தலைவராக உயர வழி. இது ஏறத்தாழ அமெரிக்க முறை போல இருந்தாலும், அது உதவும் என்றால் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. செலவாகும், இருந்தாலும் அது காங்கிரஸில் உள்ள பணத்துக்கு மேல் ஆகிவிடப்போவதில்லை. தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர்கள் காங்கிரஸை விட்டு விலகிவிடப் போவதில்லை. ஏனெனில் மக்கள் எண்ணத்தில் அவர்கள் அவ்வளவுதான். வெளியே போனாலும் ஏதும் சாதித்து விடப் போவதில்லை.
அத்தகைய சூழ்நிலையில் ப.சிதம்பரம் காங்கிரஸில் சேர்வதுதான் வழி. இந்த எண்ணம் புரட்சிகரமானதுதான். ஆனால் இந்தியாவில் எந்த மாற்றமும், ஒரு தீவிர பிரச்னைக்குப் பின்னேதான் வந்திருக்கிறது.
***
அமெரிக்க நூற்றாண்டின் காரணம்
*** எக்கலான் என்ற உளவுஸ்தாபனம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய ஆங்கிலம் பேசும், ஆங்கிலோ ஸாக்ஸன் நாடுகள் இணைந்து உருவாக்கிய உளவு ஸ்தாபனம். இது உலகெங்கும் நடக்கும் அனைத்து மக்கள் தொடர்பு சாதனங்களிலும் ஊடுருவி எல்லோரும் என்ன பேசுகிறார்கள் என்பதிலிருந்து அனைவரின் சொந்த வாழ்க்கையிலும் ஊடுருவி இருக்கிறது. தொலைபேசி, ஃபாக்ஸ், மின்னஞ்சல் ஆகிய அனைத்தும் தடுக்கப்பட்டு ஆராயப்படுகிறது. இதற்க்காக ஏராளமான துணைக்கோள்கள், ராடர்கள், ஆண்டெனாக்கள், பல கோடிக்கும் மேலான பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது.இது ஆங்கிலரல்லாத அனைத்து ஐரோப்பியர்களையும் கோபப்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா அந்த கோபத்தை கண்டு கொள்ளவே இல்லை.
1940களில் தொடங்கப்பட்ட இந்த ஸ்தாபனம், பெரும் ரகஸியமாக வைக்கப்பட்டு, நியூஸிலாந்து மக்கள் தெர்ந்தெடுத்த அரசுக்கே கூட தெரியாமல் நடந்து வந்திருக்கிறது. பனிப்போரின் போது வெகுவாக பயன் பட்ட இந்த ஸ்தாபனம், அரசியல் மட்டுமின்றி, அமெரிக்க மட்டும் இங்கிலாந்து வர்த்தக ஸ்தாபனங்கள் மற்ற நாட்டு வர்த்தக ஸ்தாபங்களின் ரகஸியங்களை அறியவும், அவர்களது தொழில் நுட்பத்தை திருடவும் பயன் பட்டிருக்கிறது என்று ஐரோப்பியர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அது உண்மையெனில், சென்ற நூற்றாண்டு ஏன் அமெரிக்க நூற்றாண்டு என்று வழங்கப்பட்டது என்பதன் காரணம் இதுவாகத்தான் இருக்கும்.
இந்த விஷயத்தை உள்வாங்கிக் கொள்ளவும், இதற்கு எதிர்வினையாக சிந்திக்கவும் இந்திய அரசியல்வாதிகளுக்கு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.
**
சின்னக்கருப்பன், 27 ஃபெப்ரவரி, 2000
திண்ணை
|