பங்கு சந்தை:: ( அகில உலக LOSS வேகாஸ் …? )

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

கோவிந்த்



பங்குசந்தை அனுபவம் நன்றாக (அதாவது இழப்பு, செழிப்பு இரண்டும் ) இருப்பதால் என் எண்ணங்களை திண்ணைக்கு தருகிறேன்..

இந்த வாரம் வாங்க வேண்டிய பங்குகளுக்கும், இந்த வார ராசி பலனக்கும் மிகப் பெரிய வித்தியாசமில்லை….

எனக்கு ஆண்டவன் புண்ணியத்தில் உச்சத்திற்கும் , ரோட்டிற்கும் போன அனுவம் உண்டு.
தவறான தொழில் முறைகளிலும், நட்பையும் – தொழிலையும் போட்டு குழப்பியதால், தற்கொலைக்குத் தூண்டப்பட்டு மீண்டு வந்த நிகழ்வும் உண்டு.
எனது தோற்ற, பேச்சு முறை குறைப்பாட்டால், தற்போது அமெரிக்காவில் உண்மை விளம்பியாய் தோற்றம் தரும் ஒரு நண்பனால் ரணகளப்பட்ட நிலையும் உண்டு….
ஹர்ஷத் மேதாவும் பார்த்தாச்சு.. இந்தியா ஒளிர்கிறது எனும் மேல்தட்டு MBAக்களின் அழகிய அடாவடியும் பார்த்தாச்சு….

இந்த அனுபவம் தற்போது பங்குச் சந்தையில் சிக்கி சின்னா பின்னமாகிய, ஆகிக் கொண்டிருக்கும் ,ஆகப்போகும் சிலருக்காகவாவது உபயோகப்படும் என எழுதுகிறேன்…..

1. அமெரிக்காவிற்கு H1-ல் போகும் பல தொழிற்விற்பன்னர்களின் “Bio-Data / CV -ற்கும் பங்குசந்தையில் எந்த பங்கை வாங்கலாம் என நிர்மாணிக்க நீங்கள் அலசும், அந்த கம்பெனிகளின் அரையாண்டு, முந்தைய ஆண்டு லாப நஷ்ட கணக்குகள்/ தற்காலத் திட்டங்கள் போன்றவற்றிற்கும் வித்தியாசம் கிடையாது.
இரண்டுமே, பெரும்பாலும் புளுகுமூட்டைகள்.

2. உங்கள் ஊரில் விற்கும் வெங்காய விலையின் ஏற்றத் தாழ்விற்கும் பங்கு சந்தையின் ஏற்ற தாழ்விற்கும் வித்தியாசம் கிடையாது.

3. விஜய் – ரஜினி பட வியாபார பில்டப் புரிந்தால் நீங்கள் பங்கு சந்தையில் குறுகிய காலகாசு பண்ணும் யோகம் உள்ளவர்கள்.

இனிபார்ப்போம் ஒவ்வொன்றாக:

பேப்பர் / ஊடக பங்களிப்பு:
: நல்ல கோட் சூட், நுனி நாக்கு ஆங்கிலம், சும்மா சுத்தி சுத்தி பில்டப் பண்ண கூடிய திறமை:
எப்படி…? இதோ ஒரு உதாரணம்:
தொலைகாட்சி நிலையத்தில் இருப்பவர் முகம் எதிர்பார்ப்பு பாவமுடன்:
-அவருக்கு கீழே வரிசையாக பங்குளின் விலை…. ஏற்றத் தாழ்வு பச்சையிலும்/ சிவப்பிலும் ஓடிக் கொண்டிருக்கும்.
– அந்த தொடர் வரிசைக்கு மேலே, FLASH NEWS வந்து வந்து போகும்…
– ஒரு பக்கம் ஒரு கிராப் இருக்கும்.
இந்த ஸ்கிரீன் பில்டப்பில் சங்கர் படம் கூடத் தோற்றுப் போகும்.
உங்களின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, பேங்க் பேலன்ஸ், பொண்டாட்டி கழுத்து நகை, நிலம்… எல்லாம் கண்களில் நீங்கள் வாங்க விரும்பும் பங்குகளின் விலை நம்பர்களாக மாறும்.

தற்போது அவர் பேசுகிறார்:
நமது அனுபமா இப்போது மும்பை ஸ்டாக் எக்சேச்சில் இருக்கிறார்… அமெரிக்கா ஜனாதிபதி புஷ் காலையில் தனது மருத்துவரை பார்க்க வேண்டிய அப்பாயிண்ட்மெண்ட் தள்ளிப் போய் விட்டது….
மேலும், அவரது நிகழ்ச்சிகள் ரத்தாகி விட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நமது தொடர்ப்புகளில் விசாரித்தவரை… காலையில் எழுந்த புஷ், பாத்ரூமிற்குள் போய் இன்னும் வரவில்லை…. அவருக்கு கடந்த பல மாதங்களாக மலச்சிக்கல் இருந்ததும் அதற்கும் “MALSIK” மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகமல் இன்று மிகவும் திணறுகிறார்.
இதானல் இன்று காலையில் இருந்து பங்கு சந்தை இறங்குமுகமாகவே இருக்கிறது…. சரி… அனுபமாவிடம் செல்வோம்… அவர் என்ன சொல்கிறார் என்று…?
அனுபமா.. அனுபமா….
அனுபமா: yeah சதீஷ்…
சதீஷ்: அனுபமா….. இந்திய பொருளாதாரம் உலகத்திற்கே சவாலாக இருப்பதும், அமெரிக்க வால் ஸ்ரீட் பொருளாதார பங்கு சந்தை மேதை, இந்தியாவின் SENSEX 2020-ம் ஆண்டில் 75000 புள்ளிகளைக் தொடும் என்று கணித்துள்ள போதும் இன்று ஒரே நாளில், சந்தை திறந்த – 32 விநாடிகளில் , குறீயீடு 1324 எண்கள் குறைந்ததிற்கு என்ன காரணம்…..?

அனுபமா: சதீஷ், புஷ் தனது மலச்சிக்கலுக்கு எடுத்த மாத்திரைகள், அவர் மருத்துவர் அப்பாயிண்மெண்ட் ரத்து செய்தது,,, மார்க்கெட்டில் மிகப் பெரிய பிரச்சனை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் MALSIK மாத்திரை தயாரிக்கும், TOBELLY கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்துள்ள, DUBAKUR India பங்குகள் தனது 75 ரூபாயில் இருந்து, 54 ரூபாயிற்கு சர்ரென்று இறங்கியுள்ளது.

Dugakur india கம்பெனியிடம் வியாபாரத் தொடர்புள்ள DBT, METRALL, LESSPRO, PNMAN, கம்பெனிகளும் விழுந்துள்ளன…
அது தவிர, மக்களிடம் பீதி ஏற்பட்டதன் காரணமாக, ஒட்டுமத்தமாக எல்லா பங்குகளூம் சரியத் தொடங்கியதால், பங்கு மார்க்கெட் வியாபாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது….

இதோ சில முதலீட்டாளர்கள்:
( எல்லோரும் தெருவில் அன்னாந்து மும்பை பங்கு விலை தொடர் நகரும் போர்டையே பார்த்தவாறு இருக்கிறார்கள் )
நபர் 1: நம்ப முடியவில்லை…. நான் என் கிரெட்டில் கார்டில் தேய்த்து போட்ட 20000, நேற்று வரை 120000 ஆக விலை நிலையில் இருந்தது.. இன்று அது 14,000 ஆகிவிட்டது.
எனக்கு ஏற்பட்ட 1,00,000 நஷ்டத்திற்கு இந்த Finance Minister தான் காரணம்…

நபர் 2: இது ரொம்ப மோசங்க… அது எப்படி புஷ்ஷிற்கு வந்த பிரச்சனை தெரியாமல் நம்ம ரா, சிபிஐ செயல்படுட்கிறது…. என் சொத்தை நேற்று தான அடமானம் வைத்தேன்…. புஷ் ஏன் இப்படி செய்தார்…..

நன்றி அனுபமா… தற்போது, AAM-F ல் MBA படித்து “NO Bank”- சந்தை முதலீட்டு ஆலோசகராக இருக்கும், “Stok Liar சொல்வதைக் கேட்போம்…
Stok Liar: தற்போதைய நிலை இப்படியே நீடிக்காது… எங்களைப் பொறுத்தவரை மக்கள் இந்த நிலையில் பங்குகளை வாங்கிப்போட வேண்டும்.
Averge theory படி , அதாவது நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்கிய பங்கு இப்போது 10 ரூபாயில் இருந்தால், பயப்படுவதை விட அதை இந்த நிலையிலும் வாங்கினால், உங்களின் கையிருப்பு பங்கு கூடுவதுடன், வாங்கிய விலையும் (100+10)/2 = 55 ஆகிவிடுகிறது. இது எதிர்நிலையாக உங்களுக்கு லாபத்தையே தரும். மீண்டும் அந்த பங்கு 100 ரூபாயிற்கு வரும் போது உங்கள் லாபம் இரட்டிப்பாகிறது.
இது பங்கு மார்க்கெட்டில் காசு பண்ணுவதற்கான அடிப்படை தியரி.

நன்றி Liar அவர்களே…

தற்போது… BSE முன்னாள் ஒரே உற்சாகச் சத்தம்…

அனுபமா… அனுபமா… மீண்டும் உற்சாகச் சத்தமாக இருக்கிறதே…. என்ன காரணம்….?

அனுபமா: சதீஷ்… புஷ்ஷிற்கு பிரீ மோஷன் வந்த விட்டதாம். அதானால், மீண்டும் பங்குகள் மேல் நோக்கி போவதற்கான சாத்தியங்கள் தொடங்கி விட்டன.
இன்று, சில விநாடிகளிம் 90% இறங்கிய பங்குகள் இன்று மாலைக்குள் குறைந்த பட்சம் 2% ஆவது ஏறும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு,.
இந்த குறைந்த விலையில் பங்குகளை வாங்கிப் போட அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்…

நன்றி அனுபமா…….

——
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால், இந்த உதாரணம் தான் நடக்கிறது.
20,000 ரூபாய்க்கு வாங்கியவருக்கு 120000 பார்த்த போது விற்க மனமில்லை..

சரி ஏதோ வேறு ஒரு சமாச்சாரம் என்று வெளியில் வர மனமும் இல்லை..
சூதாட்டத்தில் விட்டதை சூதாட்டத்தில் பிடிக்கனும் என்றே தோனுகிறது.


நான் காசும் பார்த்தேன், கவிழ்ந்தும் விழுந்தேன்:
எனக்கு லாபம் தந்த பங்குகளை நான் வாங்கிய விதம்:
reliance natural: முதலில் எல்லா Reliance பங்குகளையும் லிஸ்ட் போட்டேன், இந்த பங்கின் விலை குறைவாக இருந்தது. கண்ணை மூடி வாங்கினேன்,
காரணம்: ராசா, உனக்கே ஷேர் மார்கெட்டில் லட்ச ரூபா பண்ணும் ஆசை இருக்கும் போது அம்பானிக்கு கோடி பண்ண ஆசை இருக்காதா…?
அம்பானி தனக்கு உதவும் மனிதர்களுக்கு உதவ ஒரே வழி இந்த பங்கை வாங்கி போடுங்க.. ஏத்துவோம் .. வித்திருங்க….. என்ற மனம் இருக்காதா…
SPICE JET , வாங்கினேன்….
காரணம்: ஏற்போட்டில் ஜெட் ஏர்வேஸ்ஸி ல் ஏறும் போது ஜன்னல் வழியாக 4 Spice jet தெரிந்தது… விலையைப் போய் பார்த்தேன்…. வாங்கிப் போடுவாம். இந்தப் பக்கமாக பில்டப் வரும் போது வித்திடுவோம்… என
அது போல பல ஷேர்கள்.. லாபம் ஈட்டின….

சரி நஷ்டமானது:
உட்கார்ந்து நிறைய NAV/ PE / PAT என லிஸ்ட் எடுத்து கம்பெனி பற்றி படித்தறிந்து வாங்கிய அத்துனை ஷேர்களும் அடி தான்….

—–
மார்க்கெட் விழும் என எப்படி அறிந்தேன்:
எனது லிஸ்டில் எப்போதும் , Penta Soft , Wireless wireless… இருக்கும். அவை ஏறுமுகமாக ஸ்பீட் எடுக்கும் போது மார்கெட் விழப் போகிறது என அறிவேன், எனக்கு அவை மார்கெட் விழும் குறீயீடுகள்.

இன்னொன்று: எனது நண்பன் என்னிடம் பெருமையாகச் சொன்னான், தனது 10வயது மகன் எந்த ஷேர் வாங்கலாம் என்று சொல்வதாக…”
ஆகாக என விழப்போவுதடா என எல்லோருக்கு சொன்னே.
விற்றதால் சிலருக்கு லாபம்.
ஆசை அறிவை வென்று, விற்காமல் இருந்ததால் எனக்கும் நஷ்டம். ஆனால், இறங்கு முகத்தில் விற்று கீழ் மட்டத்தில் பிடித்ததால் சற்றே தாக்கு பிடித்தேன்.

பின் நண்பர் ஒரு சம்பவம் சொன்னார்.
JF Kennedy யின் அப்பா ஒரு பெரிய ஸ்டாக் மார்கெட் ஜித்தராம்.
ஒரு நாள், NYE வெளியே , நீயூயார்க்கில், அவரது ஷீ விற்கு பாலிஸ் போட்ட சிறுவன், சார் அந்த பங்கை வாங்குனீங்களா என்றுவாறு பேசியிருக்கிறான்.
நேரே உள்ளே போனவர் தனது அத்துனை பங்குகளையும் விற்றாரம்.
பிறர் முட்டாள் என்றனர்.
ஆனா நடந்தது, சில வாரங்களில், அமெரிக்கா மிகப் பெரிய பங்கு சந்தை சரிவைச் சந்தித்ததாம்.

பாருங்கள், அதே அனுபவம் எனக்கும். பிறருக்கு விழும் என்று சொல்லி என்னால் பலர் மீண்டனர். ஆனா, ஆசையின் பாதையில் ஓடிய எனக்கு நஷ்டம்.


எனது பரிந்துரை… லாபம் பண்ண:
– யார் அறிவுரையையும் மட்டுமே மூலதனமாக கொள்ளாதீர்கள்.
– பல பாணியுள்ளது.
> நீண்ட கால முதலீடு, உங்களை உங்கள் தொழில் நேரத்தைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும்.
> பங்கு மார்கெட்டில் முதலீடு செய்வதற்கும் , தினதினம் விற்று வாங்கும் முறைக்கும் வித்தியாசம் உள்ளது.
– உங்களுக்கு ஜித்து பிடிபடவில்லை என்றால், Mutual Fundல் போடுங்கள்.
உங்களுக்காக பிறர் சூதாடுவார்கள், பங்கு தருவார்கள்,. அங்கும் பல் உடைய சான்ஸ்ஸ¤ம் உண்டு,

அதனால், உங்கள் இழப்பு சக்தி புரிந்து இதில் விளையாடுங்கள்.
இல்லையேல், Mutual Fund or Long term investment முறை கொள்ளுங்கள்.

மேற்சொன்ன உதாரணத்தில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
எனக்கு தற்போது நேரமில்லை.. பங்குகளை வாங்க வேண்டும் ,..

வரட்டா… வரும் முன்:
தற்போது பங்குகள் ஏறும்.
பட்ஜட்டால், பங்கு மார்கெட் ஏறும் .
பட்ஜட் தேதிக்கு ஒன்று அல்லது இரண்டு வாரம் பிறகு மரண அடி போல் கீழ் விழும் ..
காரணம் – சிம்பிள்.
FII கூட்டம், Forward Trading ல் இந்த முறை அதிக பங்குகளை வாங்கி குவித்துள்ளன…
அவற்றை அவை விற்றே ஆக வேண்டும்.
அவற்றை விற்கும் போது, மீண்டும் பெரிய சரிவு உண்டு.
Forward Trading இருக்கும் வரை குதிரை பந்தயம், ஒன்னு வைத்தா ரெண்டு, ரெண்டு வைத்தா நாலும் என்ற சூதாட்டம் போல் தான் பங்கு மார்கெட்டும்…

ஏற்றம்,,,, பின் சரிவு…
பின் பிக்கப் – அதற்கு டிவி, பேப்பர், ஊர் ஊராக பங்கு மார்கெட் பற்றிய கூட்டங்கள் உதவும்…
இது ஒரு தொடர்கதை…

நெஞ்லே தில்லு தேவையில்லை… கையில காசும் போனா வராது.. பொழுது போன நிற்காது என்பது புரிந்த நிலையும் வேண்டும்…


இன்னொன்று:
A என்ற பங்கை , ஒரு ஆலோசனை நிறுவனம், தற்போதைய நிலை: 30 ரூபாய், இலக்கு நிலை 75 ரூபாய் என்று உங்களுக்கு சொன்னால், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்,.
அந்த நிறுவனம், A பங்குகளை ஏற்கனவே எக்கச்சக்கமாக வாங்கி வைத்துள்ளது, அவற்றே… 30முதல், 55 ரூபாய் வரை விற்கும்.. என்பது.. புரிந்து விளையாடுங்கள்.
—-

Gold Rush Concept தான் இதுவும்….
கல்·போர்னியா வில் தங்கம் தேடி அலைந்து வெட்டி , சலித்தவர்களை விட , வெட்டுவதற்கும், சலிப்பதற்கும் உபகரணங்கள் விற்றவர்களே அதிகம் சம்பாதித்தனர்,
அந்த கதைதான் இங்கும்.
உஷார இருங்கள்….
வித்தை தெரியாமல், அடுத்தவனை குறை சொல்ல வேண்டாம்.
—-
உள்ளங்கையைக் குவித்து பாருங்கள்: அது தான் பங்கு சந்தை தத்துவம்:
சுண்டு விரல்: பங்கு விலை அப்படி கீழே இருக்கும் போது வாங்க நினைப்பீர்கள்
மோதிர விரல்: ஏறத்தொடங்கிய பங்கு இந்த உயரம் வரும் போது, வாங்க நினைத்து,
நடுவிரல்: இந்த நடு விரல் உயரத்தில் வாங்கிவீர்கள்.
உயரத்தில் வாங்கிய பங்கு சரியத் தொடங்கும்:
ஆள்காட்டி விரல்: சரிகின்ற விலைகளின் நிலை…… விலை குறைகிறது… விற்க நினைக்கிறீர்கள்….
கட்டைவிரல்: இந்தக் குறைவான நிலையில் விற்பீர்கள்….
ஆக, வாங்கும் போது உச்சத்தில் வாங்கி, விற்கும் போது பாதாளத்தில் விற்பீர்கள்…..

இதில்,
இந்தக் கூத்தில் எங்கு வந்தது, காப்பிடலிஸ்டாவது கம்யூனிஸ்டாவது….
போய் பாருங்கள் சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் வீடுகளை….
பணக்காரர்கள் இவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்…

சரி சரி இழக்கத் துட்டு இருந்தா சூதாடு…
வந்தா மலை போனா மசிரு….

இல்லை ஒழுங்கா முதலீடு செய்…. அது உங்களூக்கும் நல்லது வூட்டுக்கும் நல்லது….

ஆசை எவன விட்டது..
மணி 230 சூதாட நல்ல டைம்…
( ஸ்டாக் மார்கெட்டில் மதியம் 2.30 தத்துவம் உண்டு.
அது தெரியாமல் ஸ்டாக் மார்க்கெட் பக்கமே வராதீர்கள் –

தெரியாதவன் தெரிஞ்சவன் கிட்டே கேட்டுக்கோ…
தெஞ்சவன் தெரியாதவனுக்கு சொல்லிக் கொடுக்காதே……

கொஞ்சப் பேருக்காவது அறியாமை இருந்தா தான்… கொஞ்சம் காசு பண்ண முடியும்….


govind.karup@gmail.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்