பக்கவாத்தியம்

This entry is part [part not set] of 9 in the series 20001210_Issue

– அஸ்வகோஷ்


பாழாய்ப் போன செருப்பு ‘ நேரங்காலம் தெரியாமல் அறுந்துத் தொலைத்தது. சந்தர்ப்பம் தெரியாமல். கடைத்தெருவில். நாலுபேருக்கு மத்தியில்; விட்டுவிடவும் மனமில்லை. ஒரு நாலணா செலவு செய்தால் இன்னும் ரெண்டு மாசம் உழைக்கும். கழற்றிக் கையில்தான் எடுத்துக் கொண்டேன். யாராவது பார்த்தால் அசிங்கமாக….அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. செருப்பு என்னுடையதுதானே ‘ அதன் அருமை எனக்கல்லவோ தெரியும் ‘

நகரத்தின் மையப் பகுதி. நான்கு தெருக்களும் கூடும் நெருக்கமான சந்திப்பு. மார்க்கெட், கடைத்தெரு, பஜார், எல்லாம் அதுதான். சந்திப்பின் ஓரம் தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ‘கலைஞனிடம் ‘— (தொழில் வினைஞர்)—கையில் எடுத்துப் போனதைக் கொடுத்தேன்.

அவன் அதை வாங்கி ஒரு மாதிரியாகப் பார்த்தான். இளக்காரமாக இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தான். நிமிர்ந்து என்னைப் பார்த்தான். என் பரதேசிக் கோலம் அவனுக்கு எப்படியிருந்ததோ ‘ ரொம்ப அனுதாபத்துடன் ‘சும்மா தச்சா சொகப்படாது சார் ‘ ரெண்டு நாளுல பிச்சிக்கும். கீழே ட்யர்போட்டு, பட்டய மாத்தி ஸ்ட்ராங்கா தச்சிட்டா அது பாட்டுங் கெடக்கும் சார் ஒரு வருஷத்துக்கு ஒண்ணும் கை வைக்க வேண்டில்ல….ஒண்ணோ முக்கா ரூவா குடுத்துடுங்க….. ‘

நான் கொஞ்சம் யோசித்தேன். எனக்கு அதில் திருப்திதான். ‘ஒரு வருஷத்துக்கு ஒண்ணும் கை வைக்க வேண்டியதில்லை; அது பாட்டுங் கெடக்கும்; ஸ்ட்ராங்கான தையல் ‘ என்பதெல்லாம் ரொம்ப நல்ல விஷயங்கள்தான். ஆனால் ஒண்ணே முக்கால் ரூபாய் என்பதும் அதிகம்தான்.

கேட்டதை கொடுத்து விடுவதா ? பேரம் பேச வேண்டாமா ?

பேசினேன். அவன் ஒண்ணரை ரூபாய்க்கு ஒப்புக் கொண்டான். ‘பாவம் அவனுக்கு தொழில் கிடைத்தா மாதிரி…. எனக்கும் ஒரு வருஷ பிரச்சினை தீர்ந்த மாதிரி ‘ என்று எண்ணமிட்டவனாக, சோமனை சுருக்கிக் கொண்டு தொட்டி விளிம்பில் குத்துக் காலிட்டுக் குந்தினேன்.

அவன் கைவேலையை எடுத்து அப்புறம் ஒதுக்கிவிட்டு, என் செருப்பை ஆபரேஷன் செய்கிற வேலையிலே இறங்கினான்.

எவ்வளவு நேரந்தான் டேக்கா போடுவதையும், ஊசி குத்துவதையும், நூல் மாட்டி இழுப்பதையுமே பார்த்துக் கொண்டிருப்பது ?

மாலை நேர வியாபாரத்தால் சந்திப்பு களை கட்டியிருந்தது. மஞ்சள் வெயில்கூட எங்கும் அஸ்தமித்துவிட்டது. கடைகளில் இங்குமங்குமாக ஒவ்வொன்றாக மின் விளக்குகள் தோன்றின. எதிர்தாற் போலிருந்த சொக்கநாதன் செட்டியார் ஜவுளிக் கடையண்டை டவுன் சப் இன்ஸ்பெக்டர் யாரோ நாலு பேருடன் பேசிக்கொண்டிருந்தார். பக்கத்தில் அரிசிக் கடை, மளிகைக் கடை, வெற்றிலை பாக்குக் கடை, பீடி வத்திப்பெட்டி, சிகரெட், சுருட்டு, பெட்டிக்கடை……

தெருவில் நெரிசல் நிறைந்திருந்தது. வியாபாரம் மும்முரமாகியிருந்தது.

‘எடு நாலேணா…. நாலேணா எடு…. நாலேணா….. ‘

பக்கத்துச் சாரியில் மாங்காய் கூறு கட்டியிருந்தவன் கத்திக் கொண்டிருந்தான். நடைபாதை யோரம் நலிந்துபோன ‘மலிவு விலைச் ‘ சரக்குகள்; அழுகிய தக்காளி; வண்டரித்த மாம்பழங்கள்; ஈ மொய்க்கும் பலாச் சுளைகள்; உதிர்ந்து நொந்த திராட்சைப்பழங்கள். எல்லாம் கூறுகூறாக, மொத்தை மொத்தையாக.

‘நேத்து ஒண்ணேகால் ரூவா வித்தது. அதுக்குள்ளாற வெலையேறிப் போச்சா ? ‘

‘எதுதான் சார் நித்ய வெல விக்யுது. அது பெங்களூர் சரக்கு, இது நாடு சரக்கு சார். வெலையப் பத்தி பாக்காதீங்க; வாங்கிப் போங்க அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க ‘

‘ஒண்ணும் பூச்சி கீச்சி இருக்காதே ? ‘

‘பேசலாமா ? எண்ணை ஊத்தி வதக்கி மாத்தரம் கொழம்பு வச்சிட்டுப் பாருங்க…. அப்படியே தேன் மாதிரி கரையும் வாயில ‘

‘சரி சரி கால் கிலோபோடு ‘

தெரு விளக்குகள் மாற்றி மாற்றி கண் சிமிட்டுகின்றன. கொஞ்சம் நிதானமடைந்து பிரகாசிக்கின்றன. ஏனோ ஒன்றிரண்டு விளக்குகள் எரிய மறுத்து விட்டன. இருந்தாலும் ஒளி தெருவில் வெள்ளம் பாய்ச்சியது. அரிசிக் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவேயிருந்தது. ஜனங்கள் நெருக்கத்தில் அசைந்து கொண்டிருந்தார்கள்.

‘படி எப்படிப்பா….. ‘ ‘

‘படி ஏதுய்யா இப்ப…… எல்லாம் லிட்டர் தான் ‘ ‘

‘இது என்னா அரிசி இது ‘ ‘

‘கிச்சிலி சம்பா; ஆக்கிப் போட்டா சும்மா வாழைப் பழமாட்டம்; உள்ள எறங்கறதே தெரியாது…. ‘

‘எப்பிடி…. ‘ ‘

‘ரூவா அறுவது காசு….. ‘

‘இதுவா…. ‘ ‘

‘ஆருய்யா கஷ்டந் தெரியாத ஆளு நீ ‘ அங்கங்க மானங்காஞ்சி போய் அரிசியே வெளிய வரமாட்டென்னுது, கண்ணால பாக்கறதே அரிதா கீது. என்னமோ இதுவான்னு அலர்றியே ‘ ‘

‘இது எப்படி.. ‘

‘இது கார் அரிசி; தோசைக்கி. ரூவா முப்பது காசு ‘

‘சரி ரெண்டு லிட்டர் போடு…. ‘

வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது பேரம் பேசுவோரின் குரல்களும், விற்பனையாளர்கள் அறைகூவல்களும் சாகசங்களும் சளசளவென்று ஒலித்துக் கொண்டிருந்தன.

‘எடு நாலேணா சார் ‘ நாலேணா நாலேணா சார் நாலேணா ‘

‘என்னா மீனும்மா இது…. ‘

‘தெனம் வாங்கற ‘….. கானாங்கழுததான் ‘ ‘

‘எப்பவும் இதே தானா…. ‘ ‘

‘மழத்தண்ணியில்லாமெ புதுசா எங்கமா படுது…. ‘

‘நொந்து கிந்து போயிட்டிருக்காதே…. ‘

‘ம்…..நீ வேற…. திப்ப பொழுதாக பட்ட மீனும்மா இதெல்லாம்…. ‘

‘அதோ அந்தக் கூற எடு….. ‘

கூட்டம் உழன்று கொண்டிருந்தது. சுற்றிச் சுற்றி… ஏதோ ஒரு வட்டத்துக்குள்ளேயே வலம் வருகிற மாதிரி பார்த்த முகங்களே மீண்டும் மீண்டும் தோன்றின. புதுப்புது முகங்கள் நெரிசலில் கலங்கின.

மீன்கடைப் பக்கம் தான் என்ன கோலாகலமான காட்சிகள். கலர் கலராக…. விதம் விதமாக…. பாஷன் பாஷனாக… ஹேர் ஸ்டைல்தான் எத்தனை விதம்…. ‘ அழகழகான கண்கள், அழகழகான முகங்கள் மறக்க முடியாத கோணங்கள்…..

‘ஏமா சென்னாகுன்னி யிருக்குதா…. ‘ ‘

‘ஆமா இப்பல்லாம் எங்க பெரிய எறாவையே காணம்….. ‘

‘நண்டு எப்படிமா…த…த… ஓடுது பார். புடி; புடி… கால சரியா கட்டலியா…. ‘

மீன் மார்க்கட்டுக்கு அப்பால் உலர்ந்த சரக்குகள், இந்தப் பக்கம் தகரக்கடை, மருந்துக்கடை, பெயிண்டுக்கடை, பாக்கு புகையிலை மண்டிகள் வரிசையான பூக்கடைகள்.

‘எடு நாலேணா எடு…. நாலேணா சார் நாலேணா….. ‘

சந்திப்பு சந்துஷ்டியால் நிரம்பி வழிந்தது. ‘ணிங்….ணிங் ‘ என்று மணியடித்தவாறு வரும் சைக்கிள்கள் சந்து பொந்துகளில் புகுந்து சர்க்கஸ் வித்தை போல ஓடின. இன்ஸ்பெக்டர் இன்னும் அங்கேதான் நின்று பேசிக் கொண்டிருந்தார். நியூ சினிமாவில் முதலாட்டம் ஆரம்பித்து விட்டதன் அறிகுறியாக ஹ்உஸேன் பாய் டெய்லர் கடை வரைக்கும் நின்றிருந்த கியூ மறைந்து ஒழிந்தது. வீலில் சிக்குகிற அளவுக்கு நீளமாக ரெட்டைக் கரைத் துண்டு போட்ட நகரக் கவுன்சிலர் ஒருவர் இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும், சைக்கிளில் போனவாறே ‘நமஸ்காரங்க ‘ என்று கையை உயர்த்திக் காட்டியபடி மிதப்போடு சென்றார்—- விளக்கில்லாமல் தான்….

பதிலுக்கு இன்ஸ்பெக்டர் லேசான புன்முறுவல் பூத்து ஸ்டைலாக தலையை அசைத்துக் காட்டி வணக்கம் தெரிவித்தார்.

‘எடு நாலேணா சார் ‘ நாலேணா… ‘

வாய் வலிக்கக் கத்திக் கொண்டிருந்தவன் சோர்ந்துபோய் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். குரல் கரகரத்து ஒலிக்க, மீண்டும் கத்த விரும்பாதவன் போல வெறித்த நோக்கில் ஜனங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாம்பழ மண்டிகளில் வாழைப் பழ தார்கள் அடுக்கியிருந்தார்கள். தெரு முடக்கிலிருந்த தமிழ் மருந்துக் கடையில் பன்னீர், சந்தனம், ஊதுவத்தி, ஜவ்வாது குங்குமப்பூ, வாசனைகள் கணபதி விலாஸ் மசால் தோசை மணத்துடன் சங்கமித்து என்னவோ மாதிரி மூக்கை வருடியது.

வலப்பக்கம் தெருவில் நட்டிருந்த கழிக்கொம்பில் தீவட்டியாட்டம் எரியும் காடாவிளக்கை மாட்டி விட்டு, மூட்டை அவிழ்த்து கடை விரித்த ஏலக்காரன், முதல் போணியை உற்சாகமாகத் தொடங்க ஆரம்பித்தான்.

‘அருமையான நைலக்ஸ்; அழகான பூப்போட்டது. ஏக்கிளாஸ் டிசைன்சார். முக்கா மீட்டர். ஓல்டு மாடல்னா ஒரே ரவிக்கதான். லேட்டஸ்ட் மாடல் லோ கட்டுன்னா ரெண்டு….கடையில எடுத்தா ஒம்பது ரூபா, இப்ப இதும் வெல ஒரே ருபா சார்…. ஒரு ரூபா….. ‘

‘ஒண்ணே கால்….. ‘

‘ரூபா ஒண்ணே கால்…. ஒண்ணே கால் ரூபா ‘

‘ஒண்ணரை…. ‘ ‘

‘ரூபா ஒண்ணரை ‘

‘ஒண்ணே முக்கால் ‘

‘ஒண்ணே முக்கால் ‘

கூட்டம் லேசாகக் கரைந்த மாதிரி தெரிகிறது. சாலை கொஞ்சம் அமைதியில் விசாலமிட்டது. பரவலாக தெருவில் நடந்த ஜனங்கள் சிறுசிறு கும்பலாக கடைகளுள் குழுமியிருந்தார்கள். விற்று முடித்த தட்டுக் கூடைகள் வியாபாரத்தை ஏறக்கட்டின. மீன் மார்க்கெட்டில் கலகலப்பு ஓய்ந்தது. ‘எடு நாலேணா ‘ நாலேணா ‘ சார்; நாலேணா ‘ ‘ ஒன்றும் திருப்தியில்லாத வியாபாரமாக இனிமேலும் எதுவும் விற்காது என்று சோர்வோடு சாக்கைச் சுருட்டினான்.

‘அப்போ நான் வரட்டுங்களா ? ‘

சைக்கிளில் ஏறி உட்கார்ந்து இடது காலைத் தரையில் ஊன்றி வலது காலை பெடலில் வைத்துப் புறப்பட யத்தனித்தவராகக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

‘செய்யுங்கோ ‘ பவ்யமாக தலையை தாழ்த்தி கைகளை நெஞ்சு பக்கம் கொண்டு வந்து, வழியனுப்பும் வார்த்தையை உதிர்த்தார் செட்டியார். இன்ஸ்பெக்டர் புறப்படாமல் தெருவில் எதையோ உறுத்து நோக்கினார்.

அங்கே ஒரு சின்னப் பையன் அவசர அவசரமாக சைக்கிளிலிருந்து இறங்கி நிதானத்தோடு தள்ளிக் கொண்டு வந்தான்.

‘டாய்…..இங்க் வா….. ‘ ‘

குரலைக் கேட்டு பையன் நடுங்கி விட்டிருக்க வேண்டும். பயந்து போனவனாக, அடக்கமாக இன்ஸ்பெக்டரிடம் தள்ளிக் கொண்டு வந்தான். சோர்வடைந்த கண்களில் மிரட்சி; நாள் முழுக்க சைக்கிளில் அலைந்து திரிந்த களைப்பின் அறிகுறிகள். கேரியரில் ஒரு பெயிண்ட் டின். குறுக்கே ஒரு பிரஷ். பையன் எங்காவது பெயிண்டர் கிட்டே வேலை செய்கிறானோ என்னவோ பார்க்கப் பரிதாபகரமாயிருந்தான்.

‘ஏண்டா வெளக்கில்லாம வந்த….. ? ‘

‘……….. ‘

‘என்னாடா முழிக்கற சரி சரி வால்ட்யூபப் புடுங்கு ‘ ‘ வார்த்தைகள் அதிகாரத் தோரணையில் ஒலித்தன.

‘சார் ‘ குரல் கெஞ்சியது. ‘பசாத்து வரைக்கும் போவணம் சார்…. கையில் காசி கூடம் இல்ல சார் காத்தடிக்க…. ‘

இன்ஸ்பெக்டரின் முகத்தில் கொஞ்சம் இரக்கத்தின் சாயல். அதே சமயம் அவர் ஒரு மிடுக்கோடு சுற்றிலும் பார்வையை ஓட்டினார். அவர் முகம் மாறியது. தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் அங்கங்கே நின்ற வாக்கில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். ‘என்னாடா தபாய்க்கற—- சொன்னத செய்….. ‘ ‘

‘இல்லசார்… இனிமே…. ‘

இன்ஸ்பெக்டருக்கு ஸ்வரம் ஏறிவிட்டது. ‘ப்ளாக்கார்ட்ஸ்…. மரியாதையா சொன்னா கேக்கமாட்டானுங்க…. கீழ எறங்கி கழுத்துல நாலு வக்கணும்… அப்பத்தான் புரியும்…. ‘

பையன் அதிர்ந்து போனான். கண்களில் கலவரம் கசிவு நீர்; நிராதரவு. அவன் ஒன்றும் பேசவில்லை.

சுற்றியிருந்தவர்கள் சும்மாயில்லை.

‘ஏண்டா…ஐயா தான் சொல்றாரே புடுங்கிட்டுப் போயேன் ‘.

‘சே ‘ பசங்களுக்கு வர வர மரியாதையே தெரியமாட்டன்னுது. யார் யார் கிட்ட எப்பிடி நடந்துக்கிறதுன்னு ‘ செட்டியார் பக்க வாத்தியம்.

‘தம்மத் தோண்டு இருந்தாலும் ஆணவத்தப் பாத்தியா ? எங்கன்னா வணங்கறானாப் பாரேன் ‘

‘ப்ச்சங் அடிச்சிடப் போராரு புடுங்கிட்றா ‘

பையன் அழுது கொண்டே குனிந்து வால் டியூபைப் பிடுங்கினான்.

‘புஸ் ‘ஸென்று வெளியேறிய காற்றில் இன்ஸ்பெக்டரின் ஸ்வரம் இறங்கியது. முகத்தில் சாந்தம்.

‘கொண்டா இப்பிடி ‘ இன்ஸ்பெக்டர் வால்வை வாங்கிக் கொண்டார்.

‘சார் ‘ சிறுவன் தேம்பினான்.

‘இனிமே வெளக்கில்லாம வரமாட்டியே ‘

சிறுவன் இல்லையென்று தலையாட்டினான். இன்ஸ்பெக்டர் வெற்றிப் பெருமிதத்தில் எழுந்த லேசான புன்முறுவலுடன் வால்வை பையன் கையில் கொடுத்து விட்டார்.

அவர் சைக்கிள் ‘விர் ‘ரென்று பறந்தது விளக்கில்லாமல் தான்.

காற்றுப் போன டியூபால் இளைத்துப்போன டயர் தடக்…தடக்கென்று ஒவ்வொரு சுற்றுக்கும் ஒலியெழுப்பி சிணுங்க, கண்களில் வழியும் நீரைத் துடைத்தபடியே சைக்கிளைத் தள்ளிப் போய்க் கொண்டிருந்தான் சிறுவன்.

‘தடக்…தடக்… ‘ சத்தம் நெஞ்சைப் பிளப்பது போலிருந்தது. துயரம் தோய்ந்த கண்களால் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘சார். போட்டுப்பாருங்க ‘ குரல் என்னை என் செறுப்பு உலகத்துக்கு அழைத்தது.

Series Navigation

- அஸ்வகோஷ்

- அஸ்வகோஷ்