பகுதி 3 – கானல் நதிக்கரை நாகரிகம்

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

இதைவிட முக்கியமான விஷயம் இடையில் நடந்தது.

மணி மீடியம் மூலம் இறந்தவர்களின் ஆவியோடு பேசுவான். நமக்குச் சொல்வதை விட மணிக்கு ஆவிகள் பதில் சொல்லின ஒழுங்காக. போன பரிட்சைக்கு நானும் மணியும் கொஸ்சின் பேப்பர் கேட்டோம். போர்டில் விரல் சுற்றிச் சுற்றி வந்ததே யொழிய பதில் இல்லை வெகு நேரம். ‘ரெண்டே ரெண்டு கேள்வி ‘ என்றான் மணி. விரல் நிதானப் பட்டு பிறகு மெதுவாக எழுத்துகளை அடையாளங் காட்டியது. கொஞ்சம் எழுத்துப் பிழைகள்… (மணியின் தாத்தா படிக்காதவர் அல்லவா ?! – மணியின் நிலைமையும் ரொம்பப் படிச்சாப்ல நினைச்சிக்க வேண்டியதில்லை. நல்லாப் படிக்கிற மகான் ஏன் கொஸ்சின் பேப்பர் கேட்கிறான்!) … SNELL ‘S Law பிசிக்சிலும், extraction of sulphur கெமிஸ்ட்ரியிலும்…

ரெண்டுமே, அட – வந்திருந்தன!

சிவாவுக்கு அந்தப் பெண்ணின் பெயரை – தபால் ஆபிஸ் தாரகை! – உடனே தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. மணி ஆவியுடன் பேச மறுத்தான்.

‘அத மறந்துரு பிரதர். அடிக்கடி வெச்சா குடும்பத்துக்கு ஆகாது… ‘ என்றான் மணி.

அவனுக்குத் தெரியாமல் ஒருநாள் இரவில் சிவா வீட்டு மாடியில் நாங்கள் மீடியத்தோடு பேச முயற்சித்துப் பார்த்தோம். மணைப்பலகையில் சாக்பீஸால் ஏ பி சி டி … எழுதி நடுவில் கோலம் போட்டு அதில் கை நகர்த்திச் செல்ல ஒரு ரூபாய்-நாணயம் அல்லது காரம் போர்டு ஸ்ட்ரைக்கர். மனமுருக பிரார்த்தனை.

‘சிவா, உன் தாத்தா பாட்டி யாரையாவது கூப்பிடுடா ? ‘

‘டேய் நாயே வேலைக்குத் துப்பில்ல… இந்த வயசுல உனக்கு லவ்வா-ன்னு திட்டிட்டா ?… ‘ என்றான் சிவா. நியாயம்தான்.

நான் தன்னலம் கருதாமல் எங்க பரம்பரையில் செத்துப் போன ஒண்ணு விட்ட தங்கை ஒருத்தி – அவள் முகம் கூட தெரியாது – பேர் தெரியும் செண்பகம்…

அதென்ன ஒண்ணு விட்ட தங்கை… தப்புத் தப்பா ஒண்ணு ரெண்டு சொல்வாளா ? ஒண்ணு ரெண்டு அப்பறம் நாலு!

செண்பகம் ஒழுங்கா பதில் சொல்லுடி… சிவாவோட வருங்காலக் காதலி பேர் என்ன ? என்ன ?

விரல் அசையவில்லை. எஸ் அல்லது எல் நோக்கி விரல்… விரல்… என் கண்கள் துடித்தன. விரல் நகரவில்லை.

‘ச்சீ ‘ என்றான் சிவா. ‘மணிக்கு மட்டும் எப்டிடா நகருது ? ‘

‘யாரு கண்டா, போன ஜென்மத்ல ஆவியா அலைஞ்சானோ என்னமோ ? ‘

பிறகு . ஆமாம். மணியை தாஜா செய்வதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. ஒரு புரூஸ்லீ படத்துக்குப் பிறகு மணி ஒத்துக் கொண்டான். உச்சி மதியம் என் வீட்டு மொட்டை மாடியில் ஆவியுடன் மணி பேசினான். ஒரு மெழுகுவர்த்தி எற்றி வைத்துக் கொண்டு, மரத்தில் பறித்த பூ ஒன்று வைத்து, மணி சிறு பிரார்த்தனை செய்தான்… அதெல்லாம் செய்யணும் போல. நாங்க என்னத்தைக் கண்டோம். யாருடைய ஆவி தெரியவில்லை. ஆவி விதவை என்றால் பூ வைக்கலாமா ?…

அது பதில் சொல்ல மறுத்தது. பிடிவாதம் பிடித்தது. கோபப் பட்டது… எல்லாம் மணி சொல்லி நாங்கள் அறிந்து கொண்டோம். ஏ பி சி டி எழுத்துகளில் நிற்காத வட்டமடிப்பு – விரல் நகர்ச்சி. மணி விடுகிறாப்போல இல்லை. போஸ்ட் ஆபிஸ் பெண் பெயர் என்ன ? – மணி அழுத்தமாய்க் கேட்டான்.

R – I – V – E – T – T – Y என்று வந்தது.

ஆர் வரும்போதே எங்களுக்கு ஆச்சரியம்.

ரிவடியா ?

டேய் ரேவதிடா! – என்றான் மணி.

சிவாவுக்கு சந்தோஷம் தாளவில்லை. ‘அவளுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகுமா-ன்னு கேளுடா ‘ என்றான் சிவா, கவலையாய். மணி மறுத்து விட்டான்.

‘ரொம்ப ஆவிகளோட விளையாடக் கூடாது இவனே… அப்றம் அதுங்களுக்குக் கோபம் வந்துரும்… ‘

‘ஒரு கேள்விதானே மாப்ள… ‘

‘S-ன்னா உடனே எத்தனை குழந்தைகள்னு கேப்பே… ‘

‘மாட்டேன் ‘

‘வேணாம் போதும் ‘

‘மணி… ‘

‘வாங்கடா. ஸ்ஸப்பா என்ன வெயில்டா… ‘ என்றபடி மணி கீழே இறங்கிப் போய்விட்டான்.

ஆவி போய்விட்டதா தெரியவில்லை.

சிவா வெட்டியாய்ச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான். திடாரென்று அந்த மெழுகுவர்த்தி சடசடவென்று பொரிந்தது. எனக்கு பயமாய் இருந்தது. ‘வாடா கீழ போலாம்… ‘ என்றேன் நடுக்கத்துடன்.

UPSC தேர்வுக்கு விளம்பரம் வந்திருந்தது. போஸ்டல் ஆர்டர் மாதிரியே புதுவகை ஸ்டாம்புகளை அப்போது அரசாங்கம் வெளியிட்டிருந்தது. போஸ்டல் ஆர்டருக்கு பதில் – Central Recruitment Fees Stamp – அவற்றை வாங்கியும் ஒட்டி விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றார்கள்.

சிவா வரிசையில் நின்றபடி உள்ளே பார்த்தான். ரோஜாப்பூக்காரி ‘நெக்ஸ்ட் ‘ என்றாள். நெக்ஸ்ட் இல்லடியாத்தா, இவன் உன் கெஸ்ட்… சிவா ஸ்டாம்புகள் கேட்டபடியே ‘டேய் ரேவதி பாத்தியா – ஒரு கைதியின் டைரில … நல்லாப் பண்ணீர்க்கால்ல ? ‘

‘யாரு ? ‘

‘ரேவதிடா! ‘

தங்கப்பல் கட்டிக்கிட்டவ எதிர் வீட்டுக்குப் போய் இஞ்சி இருக்கா இஞ்சி – என்றாளாம். அப்பதானே பல்லைக் காட்ட முடியும் பேசும்போது ? … அந்தக் கதை!

அவள் திகைப்பாள். வெட்கிப்பாள். தலையைத் துாக்கி அயர்ந்து போய்ப் பார்ப்பாள்… என்றெல்லாம் சிவா நினைத்தது நடக்கவில்லை. அவள் ஸ்டாம்புகளை அவன் கை படாமல் வைத்துவிட்டு ‘நெக்ஸ்ட் ‘ என்றாள்.

சிவா வரிசையை விட்டு வெளியே வந்தான்.

‘என்னா மணி அவகிட்ட ரியாக்ஷனையே காணலியே ‘

‘பார்த்தேன்… ‘

‘ரிவட்டா-ன்னு ஒரு தரம் கூப்ட்டுப் பாப்பமா ? ‘

‘இவன் ஒருத்தன்… ‘

‘ஆ வேணுன்னே தெரியாத மாதிரி நடிக்கிறாளா ? ‘

‘காது கீது கோளாறா இருக்… ‘

‘ஐயரே நீ கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருக்கியா… நாங்க எவ்ள சீரியஸாப் பேசிட்டிருக்கம்… ‘

‘ஆமாம், நாடே அபாயத்துல இருக்கு. நீங்க கூடிப் பேசி முடிவெடுக்கணுமே… ‘

அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள். சிவா ஒன்றும் பேசவில்லை. பெருமூச்சு விட்டான்.

சிவா ‘போடா ஆவி கீவில்லாம் பொய்யி… ‘ எனக் கொட்டாவி விட்டான்.

‘நம்பிக்கையோட கேக்கணுண்டா… ‘ என்றேன் நான்.

‘மானாமதுரைல… ‘

‘ம்… ‘

‘கேக்கறியா இல்லியா ? ‘

‘சொல்லு சொல்லு ‘

‘எங்க தாத்தா வீட்டுக்கு ஒரு மந்திரவாதி வந்திருந்தாப்ல… ‘

‘மந்திரவாதியா ? ‘

‘ம்… குட்டிச்சாத்தான் அதை இதை வெச்சித் தீட்டு கழிக்றது… பில்லி சூன்யம் வைக்கறது. எங்காவது பில்லி சூன்யம் வெச்சிருந்தா அதை எடுக்கறது… இதெல்லாம் பண்ணிட்டிருந்தான். ‘

‘அதெல்லாம் உண்மையாடா ? ‘

‘எங்க தாத்தாகிட்ட கேட்டா கதை கதையாச் சொல்லுவாரு கிராமத்துல. கதையக் கேளு… மந்திரவாதி இல்ல. எங்க தாத்தாகிட்ட, சாமி உங்களுக்கு என்ன வேணும்… சொல்ிலுங்க-ன்னான். தாத்தா சட்னு திருப்பதி லட்டு கொண்டான்னாராம். மக்கா நீ நம்ப மாட்டே… ஒரு துணியை எடுத்து விரிக்கச் சொன்னான் மேஜை மேல. என்னமோ தனக்குள்ள முணுமுணுத்துக் கிட்டான். ஒரு நிமிஷம். மேஜைத் துணியைத் தெறந்தானா ?… ‘

‘லட்டு ‘

‘ஆமாம் ‘

‘திருப்பதி லட்டு! ‘

‘ஆமான்றேன்… ‘

‘போடா லாலாக்கடை லட்டாய் இருக்கும் ‘

‘திருப்பதி லட்டுவுக்கும் லாலாக்கடை லட்டுவுக்கும் டேஸ்ட் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதா இவனே… அது திருப்பதி லட்டுதான். ‘

‘கெளசல்யா… ‘ என்று சத்தங் கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள். அந்த ஒற்றை ரோஜாப் பெண் போஸ்ட் மாஸ்டரை நோக்கிப் போனாள்.

அப்போதும், இரண்டு மாதம் கழித்து அவளுக்குத் திருமணம் என்று அறிந்தபோதும் சிவா சற்று வாடினான்.

திடுமென்று தனக்கு வேலை எதுவும் கிடைக்காது என அவனுக்குத் தோன்றி விட்டது. தாடி வளர்க்க ஆரம்பித்தான். சட்டுச் சட்டென்று பொறுமை யிழக்க ஆரம்பித்தான். குடிக்க ஆரம்பித்தான்.

எங்களாலேயே கூட அவனை மீட்க முடியவில்லை. துரிதமான நிலையில் எப்படியோ எல்லாமே கைமீறி நடந்தேறுகின்றன.

சிவா கெட்டுப் போய் விட்டான். அப்பா ஏதோ சொன்னாரென்று அவரை அடிக்கப் போய்… ‘ஐல் கில் யூ! ஐல் கில் யூ! ‘ என்று கத்திக் கொண்டு அவன் ஓடியது இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது.

ரகளைக்காரன்.

திடாரென்று ஒருநாள் ஆளையே காணவில்லை. ஊரிலேயே இல்லை. நாங்கள் தேடிப் போனபோது சிவாவின் அப்பா எங்களைப் பார்த்துத் திட்டினார். எங்களால்தான் அவன் கெட்டு குட்டிச் சுவராய்ப் போனான் என்று கத்தினார்.

நான் எதோ சொல்ல வாய் திறக்குமுன் மணி ‘ஷ் ‘ என என்னை அடக்கினான்.

பிறகு எங்கள் செட் பிரிந்து விட்டது. சில நாட்கள் நான் எங்கும் வெளியே போகவில்லை. வீட்டுக்குள் பொறியில் சிக்கிய எலி போல மாட்டிக் கொள்ள நேர்ந்தது.

ஆ சிவா ஓடிப் போனது எங்கள் வீட்டுக்கும் தெரிந்து விட்டது. இதையே வைத்துக் கொண்டு அப்பாவும் அம்மாவும் அடக்கு முறையைப் பிரயோகம் செய்தார்கள்.

‘ஒங்களால உபகாரம்தான் இல்லை. உபத்திரவம் பண்ணாமலாவது இருக்க முடியாதா ? ‘ என்றார் அப்பா. அவருக்குப் பின் பாட்டு அம்மா. ‘இந்தக் காலப் பசங்களுக்குப் பொறுப்பு எங்க தெரியறது… ‘ உடனே அப்பா – ‘டேய் ஆத்ல ஹிண்டு வாங்கறோம். அழகா படிக்கலாம்ல. பேப்பர்னா இவனுக்கு தினத்தந்திதான். அப்றம் எங்க உருப்படப் போறன்… ‘

பேப்பர்னா இவருக்கு ஹிண்டுதான்!

அட போப்பா ஹிண்டுல பரங்கிமலை ஜோதியில் என்ன படம்னு விளம்பரம் வருதா ? நடிகைன்னா ஷகீலாதான்…

அப்பா வாத்தியார் அல்லவா ? அவர் கொணரும் வீட்டுப்பாட நோட்டுக்களை நான் பரிசீலிக்க வேண்டியிருந்தது. அம்மா திரும்ப என்னை கடை வேலைகளுக்கு அனுப்பத் தலைப்பட்டாள். முன்பு நான் போய்க் கொண்டிருந்தவன்தான். ஆனால் எனது சிகெரெட் பழக்கத்தில் ஒரு ஆற ரூபாய் அளவு கடைக்காரனுக்கு பாக்கி வைத்திருந்தேன். இப்போது அவனை நேரில் பார்க்க வேண்டியதாய்ப் போயிற்று. நான் மாட்டிக் கொண்டேன். நான் புகை பிடித்த விவரம் வீட்டுக்குத் தெரிந்து விட்டது.

அதாவது நான் புகை பிடிப்பதை நிறுத்தியான பிறகு நான் புகை பிடிப்பதாக மாட்டிக் கொண்டேன். வீட்டில் ஏக ரகளை. ச்சீசீச்சீ வீடா இது. நரகம். எவன் இங்கே இருக்க முடியும் ?

சிவா செய்தது சரிதான்!

அடுத்த வாரம் மணி மகாத்மியம்… தொடர்கிறது

—-

எழுதியது 1999

நன்றி – எஸ் ஷ குறுநாவல்கள்/2 தொகுதி

வெளியீடு அலர்மேல்மங்கை சென்னை 83

டிசம்பர் 2004

storysankar@rediffmail.com

:

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்