நேர்மை

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

கோ.சிவசுப்ரமணியன்


தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு அட்டையை திரும்பப்பெறுவதற்காக நின்றபோது அருகிலிருந்த அந்த அனாதையான கைப்பேசியைப் பார்த்தார் செல்வராகவன்.

பட்டென்று திரும்பி வாசலைப் பார்த்தார். யாராவது இருக்கிறார்களா….யாருமே இல்லை. விலையுயர்ந்த கைப்பேசி. அவரிடம் இதைவிட விலையுயர்ந்த கைப்பேசி இருந்தும், யாரோ தவறவிட்டுப்போன அந்தக் கைப்பேசியை எடுத்து உடனடியாக அதை அணைத்துவிட்டு பையில் போட்டுக்கொண்டு விருட்டென்று அங்கிருந்து கிளம்பினார்.

ஒரு பதட்டத்தோடு சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே தன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கிளம்பினார். வீடு அருகில்தான். சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்துவிட்டார். வந்ததும் முதல் வேலையாக அந்தக் கைப்பேசியை எடுத்து பத்திரமாக வைத்தார். இருக்கையில் அமர்ந்துகொண்டே மனைவி கேட்டிருந்த பணத்தைக் கொடுப்பதற்காக பர்ஸைத் திறந்தவருக்கு பகீரென்றது. ஏ.டி.எம் அட்டையைக் காணவில்லை.

சட்டென்று நினைவுக்கு வந்தது. கைப்பேசியை எடுத்துக்கொண்டு வரும் அவசரத்தில் அட்டையை அந்த இயந்திரத்திலேயே விட்டு விட்டு வந்துவிட்டார். கோட் நம்பர் மறந்துவிடாதிருக்க அட்டைக்குப் பின் பக்கமே ஒரு பேப்பரில் எழுதி ஒட்ட வைத்திருந்ததால்…பதட்டம் அதிகமாகிவிட்டது. இந்த அட்டை வழங்கும்போதே அதிலேயே அச்சிட்டிருந்தார்கள் கோட் நம்பரை அட்டையின் பின்னால் எழுதி வைக்காதீர்களென்று. அதை அலட்சியம் செய்தது தவறாகிவிட்டது. யார் கண்ணிலாவது பட்டிருந்தால்….40 ஆயிரம் நிச்சயம் எடுத்திருப்பார்கள்.

பதறிக்கொண்டு மீண்டும் அந்த ஏ.டி.எம் அறைக்கு ஓடினார். வண்டியை நிறுத்திவிட்டு அவசரமாய் ஓடி வந்து இயந்திரத்தைப் பார்த்தார். அட்டை இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தார். இல்லை. அப்போது கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த இளைஞன்,

“சார் என்ன தேடுறீங்க..”

“என்னோட ஏ.டி.எம் கார்டுப்பா…இங்கேயே மறந்துட்டுப் போயிட்டேன்…இப்பதான் போனேன் அதுக்குள்ள எவனோ அடிச்சிட்டான்…”

“இதானா பாருங்க சார்”

இளைஞன் காட்டிய அட்டை அவருடையதுதான். சடாரென்று ஒரு பாரம் குறைந்ததைப் போல உணர்ந்தார். அதே சமயம் அவனிடமே எடுத்தவனைத் தவறாகப் பேசியதைக் குறித்து சங்கடத்தோடு,

“இதேதாம்ப்பா. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். சாரிப்பா…பதட்டத்துல தப்பா சொல்லிட்டேன்”

“பரவால்ல சார்..இது சகஜம்தானே. இனிமே ஜாக்கிரதையா இருங்க சார். அதுவும் பின்னாலேயே கோட் நம்பரும் எழுதி வெச்சிருக்கீங்க…அதை எடுத்துடுங்க முதல்ல.”

“சரிப்பா. ரொம்ப தேங்க்ஸ்”

“பரவாயில்ல சார். என் மொபைலக் காணோம். இங்க வந்துட்டுப் போனேன். ஒருவேளை இங்கேயே மறந்து வெச்சுட்டுப் போயிட்டனான்னு பாக்கலான்னு வந்தேன். அது இங்க இல்ல. வேற எங்கேயோ வெச்சுட்டேன் போலருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்ச மாடல்ன்னு கஷ்டப்பட்டு காசு சேத்தி வாங்குனது சார். என் வசதிக்கு இதை வாங்கினதே பெரிய விஷயம் சார். என்னோட அஜாக்கிரதையால தொலைச்சிட்டேன். சரி பரவாயில்ல…நீங்க இனிமே கவனமா இருங்க சார். நான் வேற எங்கேயாவது வெச்சிட்டனானு போய் பாக்கறேன்”

அவன் சொன்ன ஒவ்வொரு சொல்லும், மண்டையில் விழும் சம்மட்டி அடியாய் உணர்ந்தார். இவனுடைய மொபைலையா நான் எடுத்துக் கொண்டு போனேன். கடவுளே….அந்த நிமிஷம் அவர் குப்பையைவிடக் கீழாய்த் தன்னை நினைத்தார். என் வயதில் பாதிதான் இருக்கும் எவ்வளவு நேர்மை…எவ்வளவு பக்குவம்….எனக்கு ஏன் அது இல்லாமல் போனது…என மனதுக்குள் நினைத்து மறுகினார்.

சட்டென்று தன்னுடையக் கைப்பேசியை எடுத்து அவனிடம் நீட்டினார்.

“சார்…….”

“இதை வெச்சுக்கப்பா…இந்த அட்டை வேற யாருக்காவது கிடைச்சிருந்தா இந்நேரம் பெரிய தொகையை எடுத்துட்டிருபாங்க. இதை உன்னோட நேர்மைக்கு என்னோட பரிசா வெச்சுக்க..ப்ளீஸ் வாங்கிக்கப்பா…”

அவன் மிக மிக தயங்கினான்.

“இதை வாங்கிக்கலன்னா என்னையே என்னால மன்னிக்க முடியாது தயவுசெஞ்சி வாங்கிக்கப்பா…”

கிட்டத்தட்ட அழுதுவிடுவதைப்போல அவர் கெஞ்சியதைப் பார்த்து, எவ்வளவு நல்ல மனிதராக இருக்கிறார் என அவரைப் பெருமையாய்ப் பார்த்துக்கொண்டே அதை வாங்கிக்கொண்டான். சிம் கார்ட்டை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு,

“ரொம்ப நன்றிங்க சார். ஒரு நல்ல செயலுக்கு உடனடியா பலன் கிடைச்சதை நினைச்சு ஆச்சர்யமாவும், அதே சமயம் உங்களை மாதிரி நல்லவங்களும் இருக்காங்கங்கற பெருமையும் உண்டாகுது சார். நீங்க உண்மையிலேயே ரொம்ப பெரிய மனுஷன் சார்…”

உள்ளுக்குள் உடைந்துபோன செல்வராகவன்….’நானா….’ என நினைத்துக்கொண்டார்.

Series Navigation

கோ. சிவசுப்ரமணியன்

கோ. சிவசுப்ரமணியன்