இகாரஸ் பிரகாஷ்
மின்பிம்பங்கள் அலுவலகம். மெலிதாகக் குளிரூட்டப்பட்ட அறையின் மூலையில், புதைந்து கொள்ள வாகான அந்த சொகுசு இருக்கையை, சோஃபா என்றும் சொல்ல முடியாது, நாற்காலி என்றும் சொல்லிவிட முடியாது. பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவர் பெயர் வசந்த். இயக்குனர் கே.பாலசந்தரின் பாசறையில் உருவான முக்கியமான படைப்பாளி. வசந்த் அறிமுகப்படுத்திய பல நடிக நடிகையரும், தொழில்நுட்பக் கலைஞர்களும், தற்போது திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். வர்த்தக சமரசங்களுக்கு உட்படாதவர் என்ற காரணத்தால், அவர் உருவாக்கிய திரைப்படங்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவே.பத்திரிக்கை புகைப்படங்கள் மூலம் பரிச்சயமான முகம். லேசான செட்டி நாட்டு வாடை அடிக்கும் பேச்சு. நீண்ட நாட்களாக மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வியை அவர் முன் வைக்கிறேன்.
‘ரிதம் படத்தில் என்ன தப்பு ? ‘ .
ஒரு தப்பும் இல்லையே… அது நல்ல படம். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இல்லாத பல புறக்காரணிகளால் அந்தப் படம் வணிக ரீதியில் பிரம்மாண்டமான வரவேற்பை பெறவில்லை. ஆனால், அது நிச்சயம் தோல்விப்படமில்லை. படம் வெளியான முதல் வாரத்தில் வந்த வசூலைப் பார்த்தால்…
‘மன்னிக்கணும்… எனக்கு சினிமாவின் trade & economics அவ்வளவாகத் தெரியாது ‘
அது பரவாயில்லை.. என்ன சொல்ல வருகிறேன் என்றால், அது வணிகரீதியில் ஓரளவுக்கு வெற்றி பெற்ற படம் தான். ரிதம், நான் எடுத்த படங்களில் எனக்கு அதிக நிறைவைத் தந்த படம் .. அதிகம் சிரமப்பட்டு திரைக்கதை அமைத்ததும் அந்தப் படத்துக்காகத்தான். நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், அப்படம், எழுத்தாளர் சாவி குடும்பத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரே விபத்தில் கணவனை இழந்த ஒரு பெண்ணும், மனைவியை இழந்த ஒரு ஆணும் இணைவதுதான் கதை. கதையின் போக்குப் படி, இருவருக்கும், ஒருவருக்கொருவர் மீது எந்த விதமான ஈர்ப்பும் இல்லை. தொடக்கத்தில் இருந்தே இருவரும் எதிரும் புதிருமாகத் திரும்பி நிற்கிறார்கள். அங்கேயே கதை முடிந்துவிட்டது. பிறகு எப்படிக் கதையை வளர்த்துவது ? நடுவிலே வில்லனைக் கொண்டுவந்தால் செயற்கையாக இருக்கும். சின்ன சின்னதாக சம்பவங்கள்., துணைப்பாத்திரங்கள், சூழ்நிலைகள் எல்லாம் சேர்த்து, ரொம்ப சிரத்தையுடன் செய்த திரைக்கதை. இன்னும் பார்க்கப் போனால், இது என்னுடைய இரண்டாவது படமாக வந்திருக்க வேண்டியது. தள்ளிக் கொண்டே வந்து, சமீபத்தில் தான் எடுக்க முடிந்தது. படத்தில் நடித்த அர்ஜுனுக்கு, அந்தப் படத்தின் மீது நல்ல மரியாதை இருக்கிறது.
‘நானும் கவனித்திருக்கிறேன். சின்னச் சின்ன விஷயங்கள் கூட மிகவும் நுட்பமாகக் கையாளப்பட்டிருந்தது. உதாரணமாக லட்சுமியின் கதாபாத்திரத்தின் ஐயங்கார் dialect, அர்ஜுனுக்கும் , மீனாவின் மகனுக்குமான உறவு போன்றவை அழகாகக் கையாளப்பட்டிருந்தது. உங்கள் உருவாக்கத்தில் வந்த படங்களில், ரிதம் தான் சிறந்தது என்பது என் தனிப்பட்ட அபிப்ராயமும் கூட. ஆனால், அது ஏன் ‘கேளடி கண்மணி ‘ அல்லது ‘ஆசை ‘ அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதற்கு நான் ஒரு லாஜிக்கை யோசித்து வைத்திருக்கிறேன் ‘
சொல்லுங்கள்
‘எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், அந்தப் படம் எந்த குறைபாடும் இல்லாமல் மிகவும் முழுமையாக இருந்தது. ஒரு படைப்புக்குத் தேவையான முரண்பாடு அதிலே ஏதும் இல்லை. அதனால் தானோ என்னமோ…. ‘
( சிரிக்கிறார் ….)
‘நீங்கள், உங்கள் வாழ்க்கையை பத்திரிக்கையாளராகத் துவக்கினீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மாலனின் திசைகள் மூலமாக. பிறகு திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது ?
யாராவது ஒரு படைப்பாளியோ அல்லது ஏதேனும் ஒரு திரைப்படமோ, சினிமாவுக்குள் வந்தே தீரவேண்டும் என்ற தாக்கத்தை உங்களுக்குள் ஏற்படுத்தி இருக்க வேண்டும். யார் அந்தப் படைப்பாளி அல்லது அது எந்தப் படம் ? ‘
சந்தேகமே இல்லை. பாலசந்தர் தான் நான் திரையுலகில் நுழைவதற்குக் காரணம். நான் ஒரு பத்திரிக்கையாளனாக வேண்டும் என்று விரும்பியது வாஸ்தவம் தான். திசைகள் பிரவேசம், என் கல்லூரி மாணவப் பருவத்தில் நிகழ்ந்தது. பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி போன்ற பத்திரிக்கைகளிலும் என் பணி தொடர்ந்தது. கூடவே என் இயல்பான ஆர்வம் காரணமாக நல்ல சினிமாக்களைத் தேடித் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமாவில் நுழையவேண்டும் என்ற நோக்கம் அப்போது எனக்கு இல்லை. எனக்கு இலக்கியத்தில் தான் அதிக ஈடுபாடு. அசோமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் என்னை மிகவும் ஈர்த்தவர்கள். மாலன், பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்கள் கலந்து கொண்ட இலக்கியக் கூட்டங்களுக்குத் தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் பாலசந்தர் அவர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர் இயக்கி வெளியான திரைப்படங்கள் பற்றி அவருடன் விவாதித்திருக்கிறேன். அந்த நட்பு பலமாக இறுகி, பின் அவரிடமே உதவி இயக்குனராகப் பணி புரிந்தேன். கிட்டதட்ட 18 படங்கள் வரை அவருடன் பணிபுரிந்திருக்கிறேன்.
‘உங்கள் முதல் படமான ‘கேளடி கண்மணி ‘ கலாரீதியாகவும், வர்த்த ரீதியாகவும் மிகவும் வெற்றி பெற்ற படம். அது மிகவும் வித்தியாசமான முயற்சி என்று நினைக்கிறேன். அம்முயற்சி எப்படி நிகழ்ந்தது ? ‘
கேளடி கண்மணி படத்தைத்தான் முதலில் இயக்கவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். தயாரிப்பாளர் விவேக்சித்ரா சுந்தரமும், அதற்கு ஆதரவாக இருந்தார். நான் என்னால் ரசிக்க முடிகிற படங்களை மட்டும் தான் எடுக்க இயலும். தற்போது வணிக நோக்கில் படங்களில் திணிக்கப்படும் ஆபாசம், வன்முறை, அர்த்தமில்லாத கிராஃபிக்ஸ் கிம்மிக்குகள் போன்றவற்றை என்னால் ரசிக்க முடியாது. ஆகவே அது போல என்னால் எடுக்கவும் இயலாது. ஆனால் அந்த வகைப் படங்களை நான் குற்றம் சொல்லவில்லை. அவற்றை ரசிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அவற்றுக்கும் ஸ்பேஸ் இருக்கத்தான் செய்கிறது.
‘உங்களுடைய முதல் படத்தில் இருந்து துவங்கி, எல்லாவற்றிலும், ஏதேனும் ஒரு விசேஷமான விஷயத்தை புகுத்தி விடுகிறீர்கள். அதாவது மூச்சு விடாமல் பாடுவது, நிவேதா பாட்டு, பாட்டு முழுதும் ஓடிக்கொண்டே இருப்பது, பாட்டு முழுதும் விதவிதமான பூக்களைக் காண்பிப்பது என்பது மாதிரி ஏதாவது ஒரு ஐட்டம்…கிட்டதட்ட படத்துக்கு ஒரு usp போல… ‘
பார்த்தீர்களானால், நீங்கள் சொல்கின்ற விஷயங்கள் எல்லாமே பாட்டுகளில் மட்டும் தான் இடம் பெறும். கதையை தொந்தரவு செய்யாது. இந்த ஸ்டைல் துவங்கிய விதம் தற்செயலானது. கேளடி கண்மணியில், ஏ.ஆர்.ஆர். வேடத்தில் எஸ்.பி.பி என்று முடிவு செய்தோம். ஆனால், அது இசை தொடர்பான படமில்லை. ஆனால், எஸ்.பி.பி போன்ற மிகப் பெரிய பாடகரை, பாடகர் என்ற அடையாளமே தெரியாமல் கதையைக் கொண்டு செல்லவும் மனமில்லை. அதனால், மிகவும் யோசித்து, அந்த மூச்சு விடாமல் பாடுகிற பாட்டை, ஒரு உத்தி மாதிரி செய்தோம் . அது ரொம்பவும் பாப்புலராகவே, அடுத்த படத்தில் என்ன என்ற கேள்விகள் வந்தன. ஆகவே, பாடல்களில் ஏதாவது ஒரு புதுமையாகச் செய்வோம் என்று தொடர்ந்து செய்தேன்.
‘உங்கள் இணை சினிமா முயற்சி பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் ‘
திரைப்படங்கள் பார்க்கத் துவங்கிய காலத்தில், வர்த்தக ரீதியில் பிரபலமான திரைப்படங்களை விடவும், மகேந்திரன், பாலசந்தர், படங்களை மிகவும் ரசித்துப் பார்ப்பேன். என் இலக்கியப் பரிச்சயமும், நல்ல திரைப்படங்களை அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இருந்தது. து.ராமமூர்த்தியின் கதையை, ஜெயபாரதி ‘குடிசை ‘ என்ற ஒரு திரைப்படமாக எடுத்தார். என்னுடைய நெருங்கிய நண்பர் எழுத்தாளர் ரமணீயனின் பங்கு அதிலே இருந்தது .அவர் மூலமாக நிறையத் திரைப்படங்கள் எனக்கு அறிமுகமாகியது. ஒரு காலத்தில், ரித்விக் கட்டக், சத்யஜித்ரே படங்களின் மீது பித்து பிடித்து அலைந்திருக்கிறேன். உதிரிப்பூக்கள், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய தாகம், பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் போன்ற திரைப்படங்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். பதேர் பாஞ்சாலி, அபுர் சன்சார் போன்ற படங்களை நிறைய முறை பார்த்திருக்கிறேன். வாழ்க்கையின் எனக்குப் பிடித்த ‘ரே ‘ க்கள் இருவர். ஒருத்தர் என் மனைவி ரேணுகா. இன்னொருத்தர் சத்யஜித் ரே. உங்கள் தகவலுக்காக இன்னும் இரு விஷயங்கள். என் மகன் பெயர் ரித்விக். என் சினிமா தயாரிப்பு நிறுவனம் பெயர் ரே சினிமா.
‘அப்படியானால், பிறகு எப்படி இந்த மெயின்ஸ்ட்ரீம் சினிமாவில்…. ‘
இருங்கள். அதற்கு வருகிறேன். யதேச்சையாக பாலசந்தருடன் நட்பு ஏற்பட்டு, சினிமாவுக்கு வந்ததும், நான் இந்த கமர்ஷியல் திரைப்படங்கள் என்று சொல்லக் கூடிய, எல்லோராலும் அதிகம் பார்க்கப்படுகிற சினிமாக்களில், எனக்குப் பிடித்த கலைப்படங்களின் உன்னதத்தை முயற்சி செய்தேன். அந்த முயற்சியின் முதல் படிதான், கேளடி கண்மணி. நடுத்தர வயது நாயகன் நாயகியை வைத்தும், உணர்வு பூர்வமான கதையை, சுவாரசியமாகச் சொல்லி வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்தேன். என்னுடைய அடுத்தடுத்த திரைப்ப்பட முயற்சிகளும், அந்த ரீதியில் தான் அமைந்தது. என் படங்கள் வணிக ரீதியில், வெவ்வேறு காரணங்களுக்காக வெற்றி/தோல்விகள் அடைந்திருக்கலாம். சாட்டிலைட் தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்படும் ரிதம் படத்தைப் பார்த்துவிட்டு, தொலைபேசியில் அழைத்து சிலாகிப்பவர்களைப் பார்த்தால், படம் திரையரங்குகளில் வெளியான போது இவர்கள் எங்கே போனார்கள் என்று ஆயாசமாக இருக்கும். இப்போது என்ன தெரிந்து கொண்டேன் என்றால், படம் எதுவாக இருந்தாலும், மக்களைச் சென்று சேர்வது முக்கியம். வர்த்தக ரீதியான படங்களுக்கும், இணைச் சினிமாவுக்கும் இடையே, ஒரு பெரிய திரை இருக்கிறது. இரு தரப்பினரையும் திருப்தி படுத்த முன்றால், ரெண்டு பக்கமும் திட்டுகிறார்கள். அவை இரண்டையும், அவற்றுக்கான இலக்கணங்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எடுக்க வேண்டும் என்பது இப்போது புரிகிறது. நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் எடுக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதே சமயத்தில் அசோகமித்திரனின் தண்ணீருக்கும் முழுமையாக ஸ்க்ரிப்ட் எழுதி வைத்திருக்கிறேன். என்.எஃப்.டி.சி மூலமாக படம் எடுக்க முயற்சி செய்து வருகிறோம்.
‘இணை சினிமாக்களின் வீச்சை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? ‘
கர்நாடக இசை பற்றி விமர்சனம் எழுத, கர்நாடக இசை பற்றிய அடிப்படை அறிவு வேண்டும். இசை என்று மட்டுமல்ல. மற்ற எந்தத் துறைக்கும் இது பொருந்தும். ஆனால், சினிமாவில் இந்த இலக்கணம் கடைபிடிக்கப்படாது. கடந்த பத்தாண்டுகளில் தாங்கள் பார்த்த திரைப்படங்கள், தங்களுடைய புரிதல் நிலைகள் ஆகியவற்றை வைத்துத்தானே, திரைப்படங்களை மதிப்பீடு செய்கிறார்கள் ? குறிப்பாக வெகுசன ஊடகங்களில். இவர்கள் போன்றவர்களால் தான் நல்ல திரைப்படங்களுக்கான இரசனை இன்னும் மேம்படாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். ரசிகர்கள், தங்களுடைய புரிதலைத் தாண்டி இன்னும் ஒருசில படிகள் மேலே ஏறி வரவேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். பிற மொழிப்படம் என்றால் அது ஆலிவுட் படங்கள் மட்டுமல்ல. இத்தாலிய , ஈரானிய, ஐரோப்பிய திரைப்படங்கள் எத்தனையோ இருக்கின்றது. சமீபத்தில் நடந்த ஒரு சினிமா புத்தக வெளியீட்டு விழாவில், ஒரு இயக்குனர் மேடையில் பேசுகின்றார், ‘எங்களுக்கு எங்கஊர் குலதெய்வமே போதும், உலக சினிமாவெல்லாம் வேண்டாம் ‘ என்று.
‘அதாவது ரசனை இன்னும் கொஞ்சம்…. ‘
அதேதான். என் முதல் படத்தின் விழாவில் நடந்த சம்பவம் இது. பெருமைக்காகச் சொல்ல வில்லை. ஒரு படைப்பாளி, எப்படி ஒரு தேர்ந்த ரசிகனாகவும் இருக்கிறான் என்பதற்கான உதாரணம். கேளடி கண்மணி படத்தில் ஒரு காட்சி. அனாதை இல்லத்தில் சேர்ந்து விட்ட மகள் அனுவைக் ( அஞ்சு) கூட்டிக் கொண்டு போவதற்காக ஏ.ஆர்.ஆரும் ( எஸ்.பி.பாலசுப்ரமணியம்) சாரதாவும் ( ராதிகா) மழையில் நனைந்த படி ஒரே குடையில் ஜோடியாக வருகிறார்கள். அடுத்த காட்சியில் ஏ.ஆர்.ஆர் தன் மகளை மட்டும் கூட்டிக் கொண்டு போவதை , சாரதா தனியாக மழையில் நனைந்த படி அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்தக் குடைக்குள் கூடுதலாக ஒருத்தர் மட்டும் தான் இருக்க முடியும் என்று அந்தக் காட்சி சொல்கிறது . குடை என்பது நிஜத்தில் குடையா அல்லது சாரதா வேண்டாம், மகள் மட்டுமே போதும் என்று முடிவெடுத்த ஏ.ஆர்.ஆரின் வாழ்க்கையா ? வசனங்கள் இல்லாமல், க்ளோசப் காட்சிகள் இல்லாமல், அதிரடியான பின்னணி இசை இல்லாமல், நான் மனதில் வரித்திருந்த விதத்தில், திருப்தியுடன் அமைந்த அந்தக் காட்சியை, அந்த பூடகத்தன்மையை, அதே விதத்தில் புரிந்துகொண்டு சிலாகித்த பாரதிராஜாவுக்குள் எப்படிப் பட்ட ரசிகன் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த அடிப்படையில், குலதெய்வமே போதும் எனப்படும் சிந்தனைகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
‘இணைச் சினிமாவை மக்களிடம் கொண்ட சேர்க்க, அவற்றை ரசிகர்களிடம் பரவலாக்க என்ன வழி ? ‘
ஒரு எளிய வழி இருக்கிறது. நான் சொல்வது கொஞ்சம் குழந்தைத் தனமாகக் கூட இருக்கலாம். ஆனால் நல்ல பயன் அளிக்கும். ஆர்வலர்கள் சேர்ந்து, ஒரு சங்கம் துவங்கவேண்டும். நல்ல படங்களை ரசிக்கவும், அப்படங்களுக்கான சந்தையை விரிவு படுத்தவும், இந்த சங்கம் வழிவகை செய்யும். நகரங்களில் இருந்து துவங்கி பின்னர் படிப்படியாக சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் அங்கிருக்கும் சினிமா ஆர்வலர்களைக் கொண்டு, இது போன்ற அமைப்பைத் துவங்கலாம். இம்முயற்சியில் இருப்பவர்களுக்கு வெகுசன ஊடகங்களிலும் இடம் அளிக்க வேண்டும். இணை சினிமா எப்படி அணுகவேண்டும் என்பதற்கு , அம்ஷன்குமார் எழுதிய நூல் ஒரு நல்ல உதாரணம்.
‘நல்ல யோசனை … இணையத்திலும் இது போன்ற முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ‘
அப்படி ஏதேனும் அமைப்பு உருவாக்கப்பட்டால், ஒரு படைப்பாளி என்கிற முறையிலும், நல்ல சினிமா ரசிகன் என்கிற முறையிலும் என் பங்களிப்பைத் தரத் தயாராக இருக்கிறேன். நான் இருபது ஆண்டுகளுக்கு மேலாகச் சினிமாவில் இருந்து வருகிறேன். ஒன்பது படங்களை உருவாக்கி இருக்கிறேன். ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒரு நல்ல நாவலை திரைக்கதையாக்கி வைத்து, தயாரிப்பாளர் கிடைக்காமல் இருக்கிறேன். ‘நல்ல கமர்ஷியல் படமா இருந்தா சொல்லுங்க சார் … ‘ என்கிறார்கள். யார் சார் இதை எல்லாம் பார்ப்பார்கள் என்கிறார்கள்…
‘இணை சினிமா முயற்சி என்பது வரவேற்க வேண்டியதுதான். ஆனாலும், கடந்த முப்பது நாற்பது வருடங்களாக, கமர்ஷியல் சினிமாவைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறவர்களை, பேரலல் சினிமா வட்டத்துக்குள் கொண்டு வர ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் மேலே ஏறி வரவேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நீங்களும் கொஞ்சம் கீழே இறங்கி வர வேண்டும் இல்லையா ? ‘
ஒத்துக் கொள்கிறேன். கலைப்படங்கள் என்ற பெயரிலே, மெதுவாக எந்த சுவாரசியம் இல்லாமல் எடுக்கப்படும் திரைப்படங்களும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இணை சினிமாவாக இருந்தாலும், அதை சுவாரசியமாகச் சொல்லமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஓரிடத்தில் கூட போரடிக்காமல், தொய்வு இல்லாமல், கதையைச் சொல்லத் தேவையான அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால், அப்படங்களில் முதலீடு செய்யவும், விளம்பரப்படுத்தவும் ஆட்கள் இல்லை. இணை சினிமா முயற்சியில் ஈடுபட்டிருக்கிறவன் என்கிற அடிப்படையில், குறைந்த பட்சம் முப்பது லட்சம் ரூபாய் மட்டும் இருந்தால், ஒரு நல்ல நாவலைத் திரைப்படமாகக் கொடுக்க முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். தற்போது எடுக்கப்படும் வணிக ரீதியான திரைப்படங்களின் பட்ஜெட்டில், இது போன்ற திரைப்படங்கள் எத்தனை எடுக்க முடியும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
‘நன்றி ‘
திண்ணை வாசகர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்.
(Picture Courtesy : ‘The Hindu ‘ Aug 27, 2004 )
நேர்காணல் தொகுப்பு : இகாரஸ் பிரகாஷ்
http://icarus1972us.blogspot.com
icarus1972us@yahoo.com
- நேர்காணல் : வசந்த்
- பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும்!கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும்!(Ice Age, Sea-Floor Rise & Fall) [3]
- இறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்
- மூன்றாம் பக்கம் ( 3)
- நேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-1
- பாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்
- ஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை
- ஹிப்பாங்… ஜிப்பாங்
- பெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்
- ‘சே ‘
- உலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்
- உலகத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்
- ‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்
- அருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்
- வெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்
- ஸ்த்ரீ கானம்
- குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன ?
- தமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்
- ஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே
- கண்ணாடிக் கண்கள்
- சிறகுகள் முளைத்து..
- து ணை – குறுநாவல் -பகுதி 5
- விலங்கு நடத்தைகள்..
- சிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]
- சிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…
- அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)
- ஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்
- கடலை வசக்குதல்
- சிலுவையில் மலருமா ரோஜா ? மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்
- பருந்துகள்
- வாய்திறந்தான்
- ஒரு மரத்தின் இறப்பு!
- வன்முறை