நேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்!

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

சலாஹுத்தீன்


பர்தாவைப்பற்றிய திருக்குர்ஆன் வசனங்களுக்கும் அன்னை ஜைனப் அவர்களை

நபிகளார் திருமணம் முடித்ததற்கும் சரித்திரத்தொடர்பு இருப்பதால், பர்தா

என்பதே நபிகளாரின் மனைவிமார்களுக்கும் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த

முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே கடைமையாக்கப்பட்டது என்று வாதிடுகிறார்

நேசகுமார். [1] தனது வாதத்திற்கு ஆதாரமாக அவர் காட்டும் அன்னை ஜைனப்

அவர்களின் திருமணம் நடந்த சூழ்நிலையை அவர் புரிந்து கொண்ட விதம்

முற்றிலும் தவறு என்பது சகோதரர் அபூமுஹையின் வலைப்பதிவில் [2]

தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளது. நேசகுமார் இந்த சம்பவத்தை

குறிப்பிடும்போது, முரண்பாடான தகவல்களையும், யூகங்கள், கற்பனைகளையும்

கலந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது.

மேலும், பர்தா சம்பந்தமான திருக்குர்ஆன் வசனங்கள் (24:31 – 33:59

ஆகியவை) முஃமினான, ஈமான் கொண்ட (நம்பிக்கை கொண்ட) பெண்களை

குறிப்பிட்டு சொல்வதால், இக்கட்டளைகள் நபிகளாரின் மனைவிமார்களுக்கும்

அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற

நேசகுமாரின் வாதம் அடிபட்டுப்போகிறது. முஃமின் என்ற வார்த்தையின்

பொருள் குறித்து நேசகுமார் தனி கட்டுரை எழுதப்போவதாக [3]

சொல்லியிருப்பதால் அந்தக் கட்டுரை வந்ததும் அதற்குறிய விளக்கங்களை இன்ஷா

அல்லாஹ் பார்ப்போம்.

பர்தா உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பையும் கண்ணியத்தையும் தருகிறதா

என்ற நேசகுமாரின் கேள்விக்கு [3] பதிலளிக்குமுன், நான் பர்தா

தொடர்பாக முன்பு எழுதிய கடிதத்திலிருந்து [4] சில கருத்துக்களை இங்கு

நினைவு கூற விரும்புகிறேன்.

“இஸ்லாத்தின் பார்வையில் பர்தா எனப்படும் ஆடைக்கு சில குறைந்தபட்ச

தகுதிகள் உண்டு. அவை 1. பெண்களின் ஆடை அவர்களின் முகம், கை

ஆகியவற்றைத்தவிர பிற பாகங்களை மூடியதாக இருக்க வேண்டும். 2. உடல்

அமைப்புகள் தெரியும் வண்ணம் இறுக்கமாக இருக்கக் கூடாது 3. மிக

மெல்லியதாக (see-through) இருக்கக்கூடாது ஆகியவையே. சாதாரணமாக

பெண்கள் அணியும் ஆடைக்கு இந்த தகுதிகள் இருந்தால் அந்த சாதாரண ஆடையே

பர்தாதான். இதற்கென தனியாக ஒரு ஆடை அணிய வேண்டும் என்ற அவசியம்

இல்லை.. .. .. அதே சமயம், நாட்டிற்கு நாடு, ஊருக்கு ஊர் அங்குள்ள

சூழ்நிலை, பழக்க வழக்கங்களை கருத்தில் கொண்டு மேலே குறிப்பிட்ட

குறைந்தபட்ச தகுதிகளுக்கு அதிக அளவிலான பர்தாவை அணிவதில் எந்த தவறும்

இல்லை”

ஆக, இஸ்லாம் பெண்களுக்கு கட்டளையிடுவதெல்லாம், (மேலே குறிப்பிட்டபடி)

கண்ணியமான முறையில் ஆடை அணியுங்கள் என்பதைத்தான். இதை சரியாக

புரிந்து கொள்ளாதவர்களால் (சில முஸ்லிம்களும் கூட..) இந்த ஆடை ஒரு மத

அடையாளமாக உருவகப்படுத்தப்படும்போதுதான் பிரச்னையே ஆரம்பமாகிறது.

முஸ்லிம் பெண்களின் ஆடை நாட்டிற்கு நாடு, (இந்தியாவில் ஊருக்கு ஊர் கூட..)

வேறுபடுகிறது. உதாரணமாக மலேஷியா, சிங்கப்பூரில் மலாய் இன பெண்கள்

அணியும் ஆடை மேலே சொன்ன தகுதிகளை உள்ளடக்கியதாக இருப்பதால் அவர்கள்

தங்கள் சாதாரண ஆடைக்குமேல் பர்தா என்ற பெயரில் ஒரு மேலங்கியை

அணிவதில்லை. கறுப்பிலோ, வெள்ளையிலோ ஒரு குறிப்பிட்ட மாதிரியில்

மேலங்கி ஒன்றை அணிந்தே ஆக வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடாததே

இதற்கு காரணம்.

உலகெங்கிலும் முஸ்லிம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை நேசகுமார்

பட்டியலிட்டுள்ளார். அதன் மூலம் பர்தா முஸ்லிம் பெண்களுக்கு போதிய

பாதுகாப்பை அளிக்கவில்லை என்று நிரூபிப்பது அவரது நோக்கம் என்று

நினைக்கிறேன். இதற்கு பதிலாக நான் சொல்ல விரும்புவது இதுதான்: பர்தா

என்று அழைக்கப்படும் இஸ்லாம் கூறும் கண்ணிய ஆடை, பெண்களுக்கு கண்ணியத்தையும்

பாதுகாப்பையும் தரக்கூடியது. ஆனால் இந்த ஆடை மட்டுமே 100 சதவிகித

பாதுகாப்பை தரும் என்று யாரும் உறுதி அளிக்க இயலாது. உதாரணத்திற்கு,

குடித்து விட்டு கார் ஓட்டினால் விபத்து நிகழும் என்று யாராவது என்னிடம்

கூறினால், ‘குடிக்காமல் கார் ஒட்டும்போது கூடத்தான் விபத்து நிகழ்கிறது,

அதற்கு என்னால் ஆயிரக்கணக்கில் ஆதாரங்களை தர முடியும்’ என்று நான்

வாதிட்டால் என்றால் அதற்கு பெயர் விதண்டாவாதம்.

இஸ்லாம் கூறும் முறையில் ஆடை அணிவது முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்திற்கு

தடையாக இருக்கவில்லை என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா போன்ற இஸ்லாமிய நாடுகளில்

பெண்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். மலேஷியாவில் பல

பெண்மணிகள் அமைச்சர்களாகவும், வணிக நிறுவன தலைவர்களாகவும்

இருக்கிறார்கள். நம் தமிழக ளுநராக இருந்த பாத்திமா பீவி நமக்கு ஒரு

அண்மைய உதாரணம். கமலாதாஸ் என்ற முற்போக்கு கேரள எழுத்தாளர், சுரையா

என்ற பெயருடன் இஸ்லாத்தை தழுவியதற்கு, பர்தாவையும், இஸ்லாம் பெண்களுக்கு

அளிக்கும் பாதுகாப்பு உணர்வையுமே முக்கியமான காரணங்களாக

தெரிவிக்கிறார்.

கண்ணியத்தையும் மரியாதையையும் பெற விரும்பும் பெண்கள் (எந்த மதத்தினராக

இருந்தாலும்) ஆடை அணியும் விதம் இஸ்லாம் குறிப்பிடும் கண்ணிய ஆடையை

பெரும்பாலும் ஒத்திருக்கிறது என்பதற்கும் என்னால் உதாரணங்கள் தரமுடியும்.

முதல்வர் ஜெயலலிதா அணியும் ஆடை, கிருஸ்துவ கன்னிகாஸ்திரீகள் உடுத்தும்

ஆடை ஆகியவை அவர்களுக்கு கண்ணியமான, மரியாதையான தோற்றத்தை

தருகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. இஸ்லாம் கூறும் ஆடைக்கும்

இவர்களின் ஆடைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், முதல்வர் தலையை

மறைப்பதில்லை, கிருஸ்துவ சகோதரிகள் காலை முழுதுமாக மறைப்பதில்லை

என்பது மட்டுமே.

மேலும் பெண்கள் சிறுவயதிலிருந்தே ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க

வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்ற கருத்தை

வலியுறுத்துவதற்காகவே எஸ்.கே அவர்களின் ‘மெய் தீண்டல்’ கட்டுரையிலிருந்து

மேற்கோள் காட்டியிருந்தேன். பர்தாவைப்பற்றிய கடிதத்தில் இந்த மேற்கோள்

காட்டப்பட்டிருப்பதால் அந்தக் கட்டுரை பர்தாவை ஆதரிக்கிறது என்ற என்ற

எண்ணம் ஏற்பட வழிஇருக்கிறது என்று எஸ்.கே எழுதி இருந்தார். அவ்வாறு

காட்டுவது எனது நோக்கமல்ல என்பதை மிகப்பணிவுடன்

தெரிவித்துக்கொள்கிறேன். எஸ்.கே அவர்கள் எழுதும் நல்ல பல கருத்துக்களை

தாங்கி வரும் கட்டுரைகளை தமிழோவியம், திண்ணை போன்ற வலைத்தளங்களில்

படித்து வருகிறேன். பெரும்பாலான சமயங்களில் அவரது கருத்துக்களுடன் நான்

ஒத்துப்போகிறேன் என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

எல்லாவற்றையும் போல பர்தாவையும் தவறாக புரிந்து கொண்ட சிலர், முஸ்லிம்

பெண்களை ஒரு குறிப்பிட்ட முறையில்தான் ஆடை அணிய வேண்டும் என்று

வற்புறுத்துவதும் அதற்காக வன்முறையில் ஈடுபடுவதும் நடந்து கொண்டுதான்

இருக்கிறது. அதற்காக ஒட்டுமொத்தமாக பர்தா முறையையே குறை சொல்வது

நியாயமில்லை. நண்பர் நேசகுமாரும் எனது இந்த கருத்தையே

பிரதிபலிக்கிறார். ராயர் காப்பி கிளப், மரத்தடி ஆகிய யாஹூ

குழுமங்களில் டிசம்பர் 2 அன்று, ஜெயேந்திரர் மீதான குற்றச்சாட்டுகளை பற்றி

நேசகுமார் எழுதிய மடல் ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

// இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு தனிப்பட்ட முறையில் கவலை தருவது

ஒட்டு மொத்த சந்நியாச தர்மத்தின் மீது நிகழும் தாக்குதல்கள்தாம்.

சந்நியாச முறையையே குற்றம் சாட்டும் நண்பர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள

விழைகிறேன். … … … துறவறம் என்ற பெயரில் தவறிழைப்பவர்களுக்கு

தண்டனை தாருங்கள், துறவறம் என்ற கான்சப்டையே குற்றம் சொல்லாதீர்கள்//

எனவே குற்றங்கள் நிகழ்கிறது என்பதற்காக ஒட்டு மொத்தமாக பர்தா முறையே

கூடாது என்று சொல்வது நேசகுமாரின் நோக்கமாக இருக்காது என்று

நம்புகிறேன்.

நான் நேசகுமார் போன்ற நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது இதுதான்:

இஸ்லாமிய கொள்கை என்றால் கண்ணை மூடிக்கொண்டு எதிர்த்தே தீர வேண்டும்

என்ற நிர்ப்பந்தத்திற்கு உங்களை நீங்களே ஆளாக்கிக் கொள்ளாதீர்கள்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

என்ற குறளை நன்கு அறிந்திருப்பீர்கள். கற்றது கையளவு என்ற அடக்கத்துடனும்,

கல்லாதது உலகளவு என்ற பரந்த நோக்குடனும் எந்த ஒரு விஷயத்தையும்

அணுகினால், நாம் அதுவரை அறியாத ஒரு விளக்கத்தை பிறர் தரும்போது அதை

ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வாய்க்கும். எல்லாம் வல்ல இறைவன் நம்

அனைவருக்கும் இத்தகைய பரந்த கண்ணோட்டத்தையும் புரிந்துணர்வையும்

அளிப்பனாக!

-சலாஹுத்தீன்

[1] http://www.thinnai.com/pl11110410.html

[2]

http://abumuhai.blogspot.com/2004/12/blog-post_08.html

[3] http://www.thinnai.com/pl1209048.html

[4] http://www.thinnai.com/le1118045.html

Series Navigation

சலாஹுத்தீன்

சலாஹுத்தீன்