நெரித்தல்

This entry is part [part not set] of 1 in the series 20051201_Issue

இளைய அப்துல்லாஹ்


கட்டங்களைக்கூட்டி வைத்துக்கொண்டு
அவள் குந்தியிருக்கிறாள்
கடல் தூரத்தில் உறுமியபடிக்கு இருக்கிறது
எச்சம் என்பதற்கு அவள் மட்டும்தான்
ஒரு சிறிய குடிசையின் கற்களவை
ஒற்றைக்கையில் கூட்டி அள்ளி விடலாம்
கொஞ்சம் சீனியும் கொஞ்சம் பருப்பும்
அவளை புனர்நிர்மாணப்படுத்தா

புதிய வாக்குறுதிகளை ஏற்றிக்கொண்டு
கென்ரயினர்கள் போகின்றன
ஆனால் அவளுக்கானவை அதில் ஒன்றுமில்லை
ஒரு சுற்று பொய்மைகளோடு திரியும்
அரசியல்வாதிகளை கழுத்தை நெரித்தே
கொன்றுவிடலாம் போலிருக்கிறது
வன்மம் நிறைந்த உலகமிது
அவளுக்கான திட்டத்தை சொல்வதற்கு
ஒருவருக்கேனும் துணிவு இல்லை

விடியும் ஒவ்வொரு காலையும்
ஏதாவது வருமென்றிருக்கிறாள் ஒன்றுமேயில்லை
உயிர் பிழியும் ஏமாற்றம் மட்டுமே

புனர் நிர்மாணக்காதகர்களால்
அவள் செத்துப்போவாள்
அவளையும் ஒரு போத்தல் பெற்றோல் ஊற்றி
எரித்து விடுவார்கள்

செய்தி வருடம் விரக்தியில் செத்துப்போனாள்

இன்று சுனாமி வந்து பதினொரு மாதங்கள்

இளைய அப்துல்லாஹ்

லண்டன்
—-
anasnawas@yahoo.com


  • நெரித்தல்

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்