நூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

புதுவை ஞானம்


இன்று மாலையில் பார்த்தது போல
என்றும் பார்த்தது இல்லை வானத்தை !
அந்தி மாலையின் இருள் சூழும் நேரத்தில்
நகரத்தில் இருந்து வந்து கொண்டிருந்தேன்.
நெடுஞ்சாலையின் இரைச்சலையும்
அமளியையும் விடுத்து………………
இறுதியாய் இருந்த சில வீடுகளையும்
கடந்தேன்.
நிழற்சாலைகளின் வெளிச்சம்
காலடியில் தென் பட்டது
அமைதி அரும்பியது.
வானத்துக்கும் பூமிக்கும் இடையில்
எதுவுமே இருக்கவில்லை.

கைவிடப்பட்ட கப்பலைப் போல
காலியாய்க் கிடக்கும் வீட்டுக்குத்
திரும்ப மனமில்லை,மேட்டு
நிலத்தை எட்டிய பின்னரும்.
தொடுவானத்தின் கிழிந்த சீலையாய்
நின்ற மரங்களை நோக்கி நடந்தேன்
வயல்களினூடே. வாட்டும் அன்றைய
வெப்பத்திற்குப் பிறகு ஒரு இளம் குளிர்
நிலவியது அங்கே ! பூமி பரப்பியது
உலர்ந்த செடிகளின் மணத்தை.
அமைதியினூடே நடந்து கொண்டிருந்தேன்
மாதங்களின் இடைவெளிக்குப் பிறகு.

சந்தேகத்துக்கு இடமே இல்லை !
அன்று மாலை என்னை அனுகிய
மூதாட்டிதான் இவ்வமைதியின் ஊற்று.

“நான் நேசித்தவர்களுக்காக!” என்ற எனது நூலில்
கையெழுத்திட்டு வழங்கிக் கொண்டிருந்தேன்.

ஆண்களும் பெண்களுமாக நீண்ட அலை வரிசை
நான் அமர்ந்திருந்த சிறு மேசைக்கு எதிரே.
அவர்கள் என்னுடன் கைகுலுக்க சில
வார்த்தைகள் பரிமாறி கையெழுத்திட்டேன்.

ஆனால், என் மனது எங்கோ இருந்தது.
ஒசைகளுடனும் பிம்பங்களுடனும் நான்
ஒவ்வொரு வாசகரைச் சந்திக்கும் போதும்.
நான் யார் ? அவர்களைப் பொறுத்தவரை.
தப்பிப் பிழைத்தவன்,அவர்களுக்கு ஒரு
நூலைத் தந்து கொண்டு இருப்பவன். நான்
அவர்களை வியக்க வைத்தேன் ! அடிக்கடி
அவர்கள் சொன்னார்கள்,”நீங்கள் முதியவராக
இருப்பீர்கள் என்று நினைத்தோமே! ” சில சமயம்
தங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லவும்
தொடங்கினார்கள்.நான் அவர்கள் சொல்வதைக்
கவனித்தேன் எனினும் எனக்குள் வேறு குரல்கள்
கேட்டுக்கொண்டிருந்தன.

அவை என்னுடையவை.
கொலையுண்ட ஐரோப்பாவின் ஆழத்தில்
இருந்தெழுந்த நடுக்கங்களைக் கேட்டேன்.

அங்கே வாழ்ந்திருந்தேன் நான் சாவுடன் துணைவனாக.
என்னை நோக்கி ஓடிவரும் என் குழந்தைகளின் சிரிப்பொலியைக்
கேட்டேன்.நி¢னைவு கூர்ந்தேன் எரியூட்டப்பட்ட நகரங்களின் சிதைவையும்
கல்லாய் மாறிவிட்டஉடல்களையும் கொழுந்து விட்டெரியும் காட்டையும்
வீணே நான் தேடிக்கொண்டிருக்கும்என் குடும்பத்தையும் .

கையெழுத்திட்டுக் கொண்டிருந்தேன் நான்.ஆனாலும்
எதையோ கேட்டுக் கொண்டிருந்தேன்-
என்னை விட்டு அகலாத என்னுள் வாழும் நினைவுகளை.
சில நேரங்களில் என் முன்னே ந்¢ன்று இருப்பவரின்
இருப்பையும் மறந்து போனேன்.எனது கை தயங்கியது.
மலை உச்சியில் மண்டை சுழல்வது போல.

“எங்கிருக்கிறேன் நான் ?
என் முன்னால் புத்தகத்தைத் திறந்து காத்திருக்கும்
இம் மனிதன் யார் ?”

“நீங்கள் நேசிக்கும் இப்புகைப்படங்கள்- குழந்தையாய் நீங்கள்
இருந்தபோது எடுக்கப்பட்டது – உங்கள் குழந்தைகள்,மனைவியுடையது
அவை ஏன் இப்பக்கத்தினுள் சிறைப்படுத்தப் பட்டிருக்கின்றன ? இது
என்ன புத்தகம் ? உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் இம் மக்கள் யாவர் ?
என்ன வேண்டுமாம் அவர்களுக்கு ?”

மீண்டும் தன்னிலை அடைகிறேன்……….!
கையெழுத்திடத் தொடங்குகிறேன்.

இந்தப் புகைப் படங்களும், இந்த வார்தைகளும் எனது வாழ்வைப் பற்றியவை.
எனது இன்பங்களும் எனது துன்பங்களும் – எனது போராட்டமும் எனது
நம்பிக்கையும் பற்றியவை.உயிர் பிழைத்தவன் நான்.எனது செய்தியைப் பரிமாற
நான் இங்கிருப்பது சரிதான் என்பது புலப்படுகிறது.

எனது வார்த்தைகள் உண்மையைப் பறை சாற்றுவதாகவும்
எல்லா நாடுகளிலும் சாட்சியமாய் நிற்பதாகவும்
ஆயிரக்கணக்கான வாசகர்கள் எனக்கு எழுதியிருக்கின்றனர்.

இத்தாலியில் இருந்தும் ஜப்பானில் இருந்தும்
அமெரிக்காவில் இருந்தும் ஆப்பிரிக்காவில் இருந்தும்
ஜெர்மெனியில் இருந்தும் போலந்தில் இருந்தும்
பிரான்ஸில் இருந்தும் இங்கிலாந்தில் இருந்தும்
கடிதங்கள் வந்திருக்கின்றன.

ஆண்களும் பெண்களும்,குழந்தைகளும் முதியோரும்
பேராசிரியர்களும்,உழவர்களும் எழுதியிருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும்
நன்றி தெரிவிக்கவும் விரும்பியிருக்கிறார்கள்.அவர்களது
கடிதங்கள் நான் நேசித்தவர்களுக்காக.நான் தப்பிப் பிழைத்தவன்
ஒரு அவசியமான சாட்சியம்.இதற்காகத்தான் நான் பிழைத்திருக்கிறேன்.

ஆனால், அமைதியில்லை எனக்கு.
ஒவ்வொரு சமயத்தில் வாழ்க்கை
என்னை இறுகப் பற்றி இருப்பதாகவும்
சுமையாகவும் தோன்றியிருக்கிறது.
அந்தப் புத்தகங்கள் என் கைக்கு வரும் போது
ஓடிப்போகவும் ஒளிந்து கொள்ளவும் தோன்றியிருக்கிறது
.என்னுடைய கதைக்குள் முடங்கிப்போகவும் எனக்குள்ளே
எனக்காக மட்டும் வைத்துக் கொள்ளவும் தோன்றியிருக்கிறது.

இருந்த போதிலும் நான் கையெழுத்து இட்டுக் கொண்டிருந்தேன்.
நான் அவர்களுக்குக் கடமைப்பட்டு இருந்தேன்,அவர் தம் நினைவில்.
ஏனெனில்,ஒவ்வொரு வாசகரும் நான் தொடருவதற்கான பிரிதொரு
காரணமாக ஆகி விட்டிருந்தனர்.அவர்கள் எனக்கு நம்பிக்கை ஊட்டினர்.
மேலும் முன் தொடர உறுதி பூண்டேன் நான்.என்னைப் பற்றி அவர்கள்
கொண்டிருக்கும் பிம்பத்தை சிதைக்காமல் உண்மையாக இருக்க விரும்பினேன்.
அவர்களோடு தான் முழுமை பெறுகிறது எனது வாழ்க்கை.

அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
இன்று மாலை வரை மேலுக்கு எப்படித் தோன்றினாலும்
புற்றாய் அரித்துக் கொண்டிருந்தது கவலை.மற்றவர்களை
நோக்குகையில் சிரித்தேன், ஆயினும் உள்ளுக்குள்
அழுது கொண்டிருந்தேன்.அப்போது தான் அந்த
மூதாட்டி வந்தாள்.

எனது புத்தகத்தை மார்போடணைத்துக் கொண்டு, என்னெதிரே நின்றாள்.அவள்
சிரித்துக் கொண்டுதான் இருந்தாள்.நான் அவளது முகத்துக்குப் பின்னால் மற்றும்
பல முகங்களைக் காணத் தொடங்கினேன்.சிரமப்பட்டு அமெரிக்கா சென்றடைந்த
போது என்னை வரவேற்ற என் தாயின் முகம்,வார்சாவின் சிதைவுகளுக்கு நடுவே
ஒரு கணம் மின்னி மறைந்து போன எத்தனையோ தாய்மார்களின் முகங்கள்.

அந்த மூதாட்டி மெல்லப் பேசத்தொடங்கினாள்.” உங்கள் புத்தகம்
ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கிறது தெரியுமா?”

ஒன்றன் பின் ஒன்றாய், எல்லாக் கனவுகளும் சிதைய ஏமாற்றத்தில் தவித்த தன்
மகளைப்பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.

” அவளது வாழ்க்கை கடினமாக இருந்தது – உண்மைதான்.”

தற்செயலாக ‘நான் நேசித்தவர்களுக்காக’ புத்தகத்தை படிக்க நேர்ந்திருக்கிறது,
அதனால் ஏதோ நிகழ்ந்திருக்கிறது.

“அதை என்னால் விளக்க முடியாது.அவள் பழைய படி இல்லை.
.இனி அவள் வாழ முடியும்.ஒரு வேலையும் தேடிக் கொண்டு
விட்டாள்.அவள் மீண்டு விடுவாள் எனத்தான் தோன்றுகிறது.”
புத்தகத்தை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

நானும் ஏதாவது சொல்ல வேண்டுமே……..
“நான் அதில் கையெழுத்துப் போட வேண்டுமா? ”
அவள் தலையாட்டி மறுத்தாள்.

“நான் அதற்காக வரவில்லை.உங்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன்.”
என்று என் தோள் மீது கை வைத்தாள்.
“உங்கள் பணிகள் தொடர வேண்டும்- தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச்
சொல்ல வேண்டும்.அவர்களுக்குத் தெரியாது. சில நேரங்களில் சில
வார்த்தைகள் போதும்- எப்படி என்று யாருக்கும் தெரியாது.ஆனால்
எல்லாமும் மாறி விடுகின்றன அவர்களுக்கு- திடீரென்று இது வரை
தாங்கள் காணாததைக் கண்டது போல.”

அவள் போய் விட்டாள்.நான் தொடர்ந்து கையெழுத்திட்டேன்.ஆனாலும்..
அவளது வாக்கியங்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருந்தன. மற்றவர்கள்
நினைவுக்கு வந்தனர்- எனக்கு வந்த எல்லாக் கடிதங்களிலும் நான்
படித்த வாக்கியங்கள்-வாழ்வதற்கு எனக்கு வலிமை தந்தவை,அதே
சமயம் எனக்கு விசனமளித்தவை.இப்போது இந்த மூதாட்டியின் முகம்
பலரது முகங்களை நினைவு படுத்திய போது எல்லா வாக்கியங்களும்
உயிர் பெறத் தொடங்கின.எனக்குப் புரியலாயிற்று.

ஐயத்திற்கு இடமில்லை
வல்லமை வாய்ந்தவை வார்த்தைகள்!
காயப் படுத்தமுடியும் கூரிய அம்பாய்
குணப்படுத்த முடியும் குளிர் மருந்தாய்
அழிக்கமுடியும் பெரு மழையாய்ச் சாடி
அமுதமாய்ப் பொழியவும் முடியும்
பயிர் செழிக்க
ஐயத்திற்கிடமில்லை
வல்லமை வாய்ந்தவை வார்த்தைகள்!

எப்படிப் போகின்றன இந்த வார்த்தைகள் -வரிகள் !
இத்தகையதொரு சொற்செட்டும் லாவகமும் உணர்ச்சிப் பிரவாகமும்
எல்லோருக்கும் வாய்த்து விடுகிறதா என்ன ?

இதனை எழுதியவர் மார்ட்டின் கிரே ( MARTIN GRAY ).சும்மா சொல்லக்கூடாது !. வாழ்க்கை
புரட்டிப் புரட்டி, கொல்லன் உலைக்களத்தில் கத்தி வடிப்பது போல், வாட்டி எடுத்திருக்கிறது இவரை.
தனது பதினான்காவது வயதில் வார்ஸாவின் யூத எதிர்ப்பு இயக்கத்தின் செயல் வீரர்.படு கேவலமான
TREBLINKA COCENTRATION CAMP- காவல் கைதி முகாமிலிருந்து உயிர் பிழைத்து வந்தவர்.போலந்து
தலை மறைவு இயக்கத்தின் உறுப்பினர். செம்படை சிப்பாய்.NKVD என்ற ரஷ்யாவின் ரகசிய போலீஸ்
படையின் அதிகாரி.35 வயதில் வெற்றிகரமான அமெரிக்க வியாபாரி.இறுதியாக 1970-ல் ஒரு காட்டுத் தீயில்
தனது அழகிய மனைவியையும் நான்கு குழந்தைகளையும் வீட்டோடு பறிகொடுத்தவர்.அவ்வளவும் தாண்டி
இன்னமும் கூட தீரமும், நம்பிக்கையும், எதிர் பார்ப்பும் இருக்க முடியுமா வாழ்வில் ? ஆம்-என்று
எதிரொலிக்கிறது அவர் குரல்.

வாழ்வின் மிக முக்கியமான கேள்விகள் பற்றிய விடைகளை வெளிப்படுத்த விழையும் ஒரு மனிதனுக்கு
ஒரு புத்தகத்தினைப் பதிப்பிக்கும் உரிமையை வழங்குவது எது ?ஒருகால், அவன் கண்டு பிடித்த விடைகளை
அவனே வாழ்ந்து பார்த்ததும், அவனது வாழ்வு அவற்றின் மெய்மைக்கு சாட்சியம் ஆனதும் என்பதாக
இருக்கக்கூடும்.வெகு சில மானிட உயிர்களே மார்ட்டின் கிரே எதிர் கொண்ட விதத்தில் வாழ்வின் கேள்விகளையும்
அவற்றுக்கான விடைகளையும் தமது சொந்த வாழ்வில் உரசிப் பார்த்து இருக்க முடியும்.

தனது சக மனிதர்களுக்காக – வாழ்வு-சாவு, தலை எழுத்து ,மனித மகிழ்ச்சி, நாகரீக உலகில்
மனிதனின் இடம் என்ற பெரும் சவால்களை எதிர்த்துப் போராடுகையில்- உதவும் விதத்தில்
‘வாழ்வெனும் புத்தகம்’ என்ற நூலினை எழுதி அளித்திருக்கிறார்.இந்த ‘வாழ்வெனும் புத்தகம்’
மிகத்துணிச்சலான மிகவும் பெரிய லட்சியங்களை உள்ளடக்கிய நூல்.நெருப்பாற்றை நீந்திக்
கடந்த சில மனிதர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், இன்னமும் கூட தனது
வாசகர்களை வாழ்க்கையைப் பற்றிக் கொள்ளவும் வாழ்க்கையின் போக்கிற்கு விட்டுக்
கொடுக்கவும் அதன் போக்கில் அதனை ஏற்றுக்கொள்ளவும் அறைகூவல் விடுக்கிறார்.

எப்போதும் நாம் போதுமான நம்பிக்கை
கொள்வதில்லை நம்மீது -விழிப்புணர்வு
இருப்பதில்லை வாழ்வின் ஆற்றல் மிகு
வளங்கள் பற்றி. ஆனால்……
நமக்கு எதிராக நாமே எழுப்பிய தடைகளைக்
கடந்து செல்வதே வாழ்க்கை ஆகும்.
நாமே நமக்கு விதித்துக் கொண்ட எல்லைகளைக்
கடந்து செல்வதே துணிவு ஆகும்.
வாழ்வு என்பதே அப்பால் கடப்பது ஆகும் !.

BOOK OF LIFE MARTIN GRAY
A COTINUAM BOOK
THE SEABURY PRESS
815,SECOND AVENUE
NEW YORK NY 1007
நூல் அறிமுகம்- மொழியாக்கம்
புதுவை அஞ்ஞானம்.
————————————————
puthuvai_gnanam@rediffmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்