நூறு வருடம் லேட்

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

அ.முத்துலிங்கம்


விமான நிலையத்தின் வரவேற்புக் கூடத்துக்குள் நுழைந்த அந்தக் கணமே அவனைக் கண்டேன். அவன் அணிந்திருந்த ஒரு சைஸ் குறைவான

அரைக்கை சேர்ட்டை பல இடங்களில் மீறிக்கொண்டு அவன் உடம்பு கட்டுக்கட்டாகத் தெரிந்தது. காட்டு மரம் ஒன்றில் உருட்டி உருட்டி செய்ததுபோல

இருந்தான். உடனே ஒரு பழைய பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது. நாளுக்கு எட்டுத் தேர் செய்யும் ஒரு தச்சன் பார்த்து பார்த்து, இழைத்து இழைத்து

ஒரு மாத காலமாக ஒரு தேர் செய்தானாம். அந்தத் தேர்போல அவன் தேகம் அமைதியாகவும், உறுதியாகவும் அவன் தேர்ந்த இடத்தைக் கச்சிதமாக

நிறைத்துக்கொண்டும் நின்றது. அவனும் யாருடைய வரவுக்காகவோ காத்துக்கொண்டிருந்தான்.

பிளேன் வருகை நேரங்களை அறிவிக்கும் திரையைப் பார்த்தேன். அதில் கறுப்பு வெள்ளைக் கோடுகள் பக்கவாட்டில் ஓடிக்கொண்டிருந்தன. இன்னும்

பலரும் திரையைப் பார்த்து ஏமாந்தார்கள். நான் அப்படியே திரையைப் பார்த்துக்கொண்டு நின்றபோது என்னைச்சுற்றி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம்

செய்தூகாண்டு போய்விட்டார்கள்.

‘விசாரணைகள் ‘ என்று கொட்டை எழுத்தில் எழுதிய போர்டு தலைக்கு மேலே தொங்க, மிக அழகாக அலங்கரித்த பெநூணாருத்தி உயர்ந்த

நாற்காலியொன்றில் உட்கார்ந்திருந்தாள். அவள் இடுப்புக்கு மேலே மிக நீண்டுபோய்த் தெரிந்தாள். ஒரு மென்சிவப்பு ஸ்வெட்டரை கழுத்து வழியாகப்

போட்டு கூந்தலை விசிறிவிட்டிருந்தாள். அவளை அணுகி என் விமான இலக்கத்தைக் கூறி அது வரும் நேரத்தை விசாரித்தேன். அவள் கம்புயூட்டர்

திரையில் அந்த தகவலைப் பார்க்கச் சொன்னாள். அவள் அப்படிச் சொன்னபோது அவளுடைய நிறைந்த உதடுகள் மிகவும் கஷ்டப்பட்டு எனக்காகத்

திறந்தன. அதிகாலை நேரத்தில் அளவுக்கு அதிகமாக மேக்கப் செய்து எதற்காக எந்த நேரத்திலும் அறுந்து விழும் பலகைக்கு கீழே காத்திருக்கிறாள்.

இதைச் சொல்வதற்காகவா ?

‘கம்புயூட்டர் திரை வேலை செய்யவில்லை ‘ என்றேன். நிமிர்ந்து கேவலமாக என்னைப் பார்த்துவிட்டு, ‘இல்லையே, வேலை செய்கிறது ‘ என்றாள். அந்த

மூன்று வார்த்தைகளையும் உண்டாக்குவதற்கு முன்பற்களையும், நாக்கையும், அப்போதைக்கு வாயில் சேர்ந்திருந்த துப்பலையும் பயன்படுத்தினாள்.

ஒப்பனைக்கு எடுத்துக்கொண்ட நேரத்தில் ஒரு சில செக்கண்டுகளை ஒதுக்கி இந்த அற்ப தகவலை எனக்கு தந்திருக்கலாம். ‘பரவாயில்லை, அந்த

தகவலை நீங்கள் தரலாமே ‘ என்றேன். துப்பலை மிச்சப்படுத்துவதற்காக அவள் வாயை திறக்கவில்லை. கம்புயூட்டர் திரையில் பாருங்கள் என்று அவள்

சொல்வதைக் கேட்பதற்காக இன்னும் நாலு பேர் எனக்கு பின்னால் நின்றார்கள். இவளிடம் மினக்கெடுவதிலும் பார்க்க செருப்பு தோற்றம் கொண்ட ஒரு

பரமேசியத்திடம் முறையிடலாம் என்று எனக்குப் பட்டது.

பிளேன் ஒரு மணி நேரம் லேட். விமான நிலையத்தில் காத்திருப்பது எனக்கு அலுப்பு தருவதே இல்லை. ஒரு மிருகக் காட்சி சாலையில் நிற்பதுபோல

ஏதாவது புதுமையாக ஒவ்வொரு கணமும் நடந்தூகாண்டே இருக்கும். வாசலில் ஒவ்வொருவராக தோன்றுவார்கள். நாடகமேடையில் வரும்

பாத்திரம்போல ஒரு எதிர்பார்ப்பு உடனே உண்டாகும். நாய்க்குட்டியை இழுத்துப் போவதுபோல ஒரு பெண் தன் சூட்கேஸை வேகமாக இழுத்தபடி

போனாள். அவளுக்கு பின்னால் ஒரு கட்டையான மனிதர் நாலு கனமான சூட்கேசுகளை ஒரு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தார். ஆனால் அவர்

உடம்பு முழுவதும் மறைந்துவிட்டது. ஒரு கணம் தூரத்திலே சூட்கேசுக்கு மேலே ஒரு தலை உட்கார்ந்து சவாரி செய்வதுபோல தோன்றியது. விநோதமான

நீண்ட கருவிகளைக் காவியபடி ஒரு குழு கடந்துபோனது. எதையோ அளப்பதற்கு வந்த விஞ்ஞானிகள் போல தோன்றினார்கள். அந்த அதிகாலையிலும்

மிக உற்சாகமாக விவாதித்தபடி கலைந்துபோனார்கள்.

நானும் ஓர் இளம் விஞ்ஞானிக்காக காத்துக்கொண்டிருந்தேன். என் வயதிலும் அரைவாசிதான் இருக்கும் அவனுக்கு. தாசன் என்று பேர். என்

சைட்டிலும், என் மனைவி சைட்டிலும் அவனுக்கு நாங்கள் உறவு. இப்பொழுது பி. எச்டி முடித்துவிட்டு மனித இயல்பு பற்றிய ஆராய்ச்சியில்

ஈடுபட்டிருந்தான். மூன்று நாட்கள் ரொறொன்ரோவில் ஒரு விஞ்ஞானிகள் கருத்தரங்கில் கலந்தூகாள்ள வருகிறான். இரண்டு வருடங்களுக்கு பிறகு

சந்திப்பதால் அவன் வரவை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். அவன் வந்தாலே கலகலப்புத்தான். எப்பொழுதும் இவனுடன் எனக்கு விவாதம், சண்டை,

பந்தயம் என்று இருக்கும்.

பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு பந்தயத்தில் தோற்றுப்போனதில் இருந்து இவனிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். கணிதத்தில் கல்குலஸ்

என்ற பிரிவைக் கண்டுபிடித்தது லெய்ப்னிஸ் என்ற ஜேர்மன்காரர் என்றேன். அவன் நியூட்டன் என்றான். நியூட்டன் முதலில் கண்டுபிடித்தது மட்டுமல்லாமல்

அதை தனக்குத்தானே ஏறக்குறைய முப்பது வருடங்கள் ரகஸ்யமாக வைத்திருந்திருக்கிறார். உலகத்துக்கு அறிவிக்காமல். அதுக்கு நான் என்ன

செய்வேன். எனவே பந்தயத்தில் எனக்கு தோல்வி.

தாசன் பயின்ற அட்லாண்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்தான் பேர்பெற்ற கபிலநிற கப்புச்சின் குரங்கு பரிசோதனையை நிகழ்த்தியவர்கள். அதைப்

பின்பற்றி இன்னும் பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்கள். இவனும் அப்படியான ஓர் ஆராய்ச்சியில்தான் ஈடுபட்டிருந்தான்.

ஒரு பரிசோதனையில் முன்பின் அறிமுகமில்லாத இரண்டு ஆட்கள் பங்கேற்பார்கள். அதில் ஒருவரிடம் நூறு டொலர் தரப்படும். அவர் மற்றவருடன்

அந்தக் காசை எப்படியும் பங்குபோட்டுக்கொள்ளலாம். அவர் கொடுக்கும் பங்கை இரண்டாமவர் ஏற்றுக்கொண்டால் இரண்டுபேருமே அந்தப் பணத்தை

வைத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த வாய்ப்பு ஒரு முறையே. மற்றவர் அந்தப் பணத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இருவருக்குமே பணம் கிடையாது.

இந்தப் பரிசோதனையில் அநேகம் பேர் சரிபாதியாக 50 டொலர், 50 டொலர் என்று பங்குபோட்டுக் கொள்வார்கள். இன்னும் சிலர் 60, 40 என்று

பிரித்துக் கொள்வதுமுண்டு. ஆனால் 70, 30 என்று பிரிக்கும்போது அநேகமாக இரண்டாவது ஆள் தன் பங்கை ஏற்றுக்கொள்ளமாட்டார். அப்போது

இருவருக்குமே பணம் கிடைக்காமல் போய்விடும்.

இதில் ஒரு கேள்வி இருந்தது. விஞ்ஞானிகள் இரண்டாவது ஆளைக் கேட்டார்கள். ‘உமக்கு கிடைப்பது முப்பது டொலர்; அதுவும் இலவசம். அதை ஏன்

நிராகரித்தீர் ? ‘ அதற்கு அவர் சொல்லும் பதில் ஒரே மாதிரி இருக்கும்.

‘அது எப்படி, அவர் 70 டொலரை தனக்கு வைத்துக் கொள்ளலாம் ? ‘

‘ஆனால் சும்மா வந்த முப்பது டொலரை இழந்துவிட்டாரே! ‘

‘அது பரவாயில்லை. அவருக்கு 70 டொலர் கிடைக்கக்கூடாது. ‘

அந்த விஞ்ஞானிகள் மனித உள்ளத்தின் ஆழமான ஒரு நுட்பத்தை தொட்டுவிட்டார்கள். ஆதி காலத்தில் இருந்தே மனிதனுக்கு சமத்துவத்தில்

நாட்டமிருக்கிறது. தன் பங்கு அவனுக்கு பெரிதில்லை. அடுத்தவனுக்கு அநியாயமாக அதிகம் கிடைக்கக்கூடாது. அதுதான் முக்கியம். ஆதியில்

தொடங்கிய இந்தப் போராட்டம் தொடரும். எல்லாத் துறைகளிலும் சமத்துவம் கிடைக்கும்வரை மனிதன் நிறுத்தப் போவதில்லை என்பான் தாசன்.

நான் கேட்டேன். ‘நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் கல்லாயுதங்களை உபயோகிக்கக் கற்றுக்கொண்டான். இன்றுவரை இந்த மனித

சமத்துவம் ஏற்படவில்லையே ? அது ஏன் ? ‘

அதற்கும் அவனிடம் பதில் இருந்தது. ஆதியிலே மெதுவாக ஆரம்பித்த மாற்றங்கள் இப்போது வேகமெடுத்துவிட்டன. பெண்களுக்கு முதலில் சம

வோட்டு எங்கே கிடைத்தது. ஃபின்லாண்டு நாட்டில் 1906ம் வருடம். ஆப்பிர ?ாம் லிங்கன் அடிமை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தது கேவலம் 140

வருடங்களுக்கு முன்னால்தான். சிறார் தொழில் கொடுமை இங்கிலாந்தில் ஒழிக்கப்பட்டு சரியாக 60 வருடங்களாகின்றன. அநீதியை எதிர்ப்பது ஆதி

மனித இயல்பு. மனித சமுதாயத்தில் வெகுவிரைவில் சமத்துவம் சந்து பொந்தெல்லாம் நிறைந்துவிடும் என்பதில் அவனுக்கு அசையாத நம்பிக்கை.

நான் எதிர்பார்த்த தாசனுடைய பிளேன் தரையிறங்கிவிட்டது. நான் வாசலை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினேன். எனக்கு முன்னால்

காத்திருந்த கட்டழகனும் உசாரானார். ஒரு தாய் தன்னுடைய மூன்று வயது மகனை முன்னே நடக்கவிட்டு அவனுடைய தலையைப் பிடித்து சரியான

திசைக்கு திருப்பியபடி வந்தூகாண்டிருந்தாள். அவர்களுக்கு பின்னால் சிவப்பு கொடி பறக்கும் சக்கர நாற்காலியில் ஒரு மூதாட்டியை யாரோ வழியை

ஏற்படுத்தியபடி தள்ளிக்கொண்டு வந்தார்கள். எனக்கு பக்கத்தில் நின்றவர் கோயில் மணியை எட்டி அடிப்பதுபோல கையை எம்பியெம்பி அசைத்தார்.

எலுமிச்சை நிற ஆடையில் வெள்ளை கொலர் வைத்த žருடையை அணிந்த நாலு விமானப் பணிப்பெண்கள் டக்டக்கென்று எங்களைக் கடந்து

போனார்கள். அவர்களுக்கு பின்னால் காதிலே நாலைந்து வளையம் மாட்டிய மெலிந்த இளைஞன் ஒரு கனமில்லாத சூட்கேஸை தள்ளியபடி

வந்தூகாண்டிருந்தான். அவனைக் கண்டதும் தேர்க்கால் அழகன் பரபரப்பானான். அந்த வாலிபன் வெளியே வந்ததும் ஓடிச் சென்று அவனுக்கு உதட்டிலே

முத்தம் கொடுத்து வரவேற்றான். மிக நீண்ட நேரத்துக்குப்பின் ஓர் இடைவெளி வந்தது. பிறகு மீண்டும் அந்த முத்தத்தை தொடர்ந்தார்கள். மடோனாவும்,

பிரிட்னி ஸ்பியர்ஸ”ம் கொடுத்தது போல அது முடிவில்லாத முத்தமாக இருந்தது.

என் வாழ்நாளில் இப்படியான காட்சியை நான் பார்த்ததில்லை. இந்தப் பரவசம் தந்த அதிர்ச்சியில் நான் ஒரு விஷயத்தை மறந்துவிட்டேன். ஒருபால்

மணத்தை சமீபத்தில் கனடாவின் பாராளுமன்றம் அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து நாட்டின் உச்ச நீதி மன்றமும் சாதகமான தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதுமாத்திரமல்ல, ஓர் ஆண் தன் காதலனுக்கு நிரந்திர வதிவிடம் கோரி விண்ணப்பிப்பதற்கும் குடிவரவு அனுமதியளித்தது. ஒரு பெண்ணுக்கும் தன்

காதலியை வரவழைப்பதற்கு அதே சலுகை. இவர்களைப் பார்த்தால் நீண்ட நாள் பிரிவுத் துன்பத்தை அனுபவித்த காதலர்களாகத் தெரிந்தார்கள்.

அப்பொழுது யாரோ என்னை உற்றுப் பார்ப்பதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தால் தாசன். அப்படியே அவனை அணைத்து வரவேற்றேன். நான் பார்த்த

திசையில் அவனும் பார்த்துவிட்டு மெளனமாகச் சிரித்தான். பிறகு என்னைப் பார்த்து லேட் என்றான்.

‘ஒரு மணிநேரம்தானே, பரவாயில்லை ‘ என்றேன்.

‘நான் அதைச் சொல்லவில்லை. நூறு வருடம் லேட் ‘ என்றான்.

‘இளம்விஞ்ஞானியே, புதிர்போடாமல் பேசு. ‘

‘கனடாவில் தற்போது பாஸ் பண்ணிய சட்டம் லேட் என்று சொல்கிறேன். நூறு வருடங்களுக்கு முன் ஒஸ்கார் வைல்டு என்ற பெரும் எழுத்தாளரை

இங்கிலாந்தில் இரண்டு வருடங்கள் சிறையில் போட்டு கொடுமைப்படுத்தினார்கள். அவர் வெளியே வந்தபின் எழுதவே இல்லை. žக்கிரத்தில்

இறந்துபோனார். அருமையான இலக்கியப் படைப்பாளியை அநியாயமாக கொன்றுவிட்டார்கள். அவர் செய்த ஒரே குற்றம் அவருக்கு ஓர் ஆண் காதலன்

இருந்ததுதான். ‘

நடந்து வந்த தாசன் நின்று அவர்களைப் பார்த்தான். நானும் திரும்பிப் பார்த்தேன்.

ஒரு பிரமாண்டமான விமான வரவேற்புக் கூடத்தின் நடுவில் நின்று அந்தக் காதலர்கள் முத்தம் பரிமாறினார்கள். சன வெள்ளம் அந்த இடத்தில் ஒரு

நதிபோல இரண்டாகப் பிரிந்து மறுபடியும் ஒன்றுகூடி நகர்ந்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டு மெள்ள மெள்ள வளர்ந்த ஒரு தீவு மனித

வெள்ளத்தில் அடிபட்டுப் போகாமல் அப்படியே நிமிர்ந்து நின்ற காட்சி பார்க்க வெகு அழகாகத்தான் இருந்தது.

முற்றும்

amuttu@rogers.com

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்