நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து..

This entry is part [part not set] of 23 in the series 20021007_Issue

ஜீவன்.கந்தையா –


ஹிந்து மனிதாபிமானம் தொடர்பாகவும், அதனடியாகப் பிறக்கும் திரு. நீலகண்டன். அரவிந்தனின் கருத்தியல் பற்றியும் சில விசயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இவற்றை விவாதத்தளத்தில் பதிவுசெய்ய எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் விவாதத்தில் எந்தளவுக்கு நாம் நேர்மையைக் கடைப்பிடிக்கிறோம் என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. எமது கருத்தை எதிர்க்கருத்தோன் மறுக்கும்போது எமது ஈகோ துள்ளி எழுந்து கருமமாற்ற வெளிக்கிட்டுவிடுவதால் கருத்தாடப்படும் எந்த விசயங்களையும் ஆற அமர உள்வாங்கமுடியாத துரதிர்ஸ்டம் ஏற்பட்டுவிடுகிறது.

அண்மைக்காலமாக, வீரசவார்க்கர் தொடர்பாக திண்ணை வாசகர்தளத்தில் நடைபெற்ற கருத்துப்பரிமாறல்களில் உணரப்பட்ட விடயமென்னவெனில், கடந்தபல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்படுவரும் சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, மதக்கலவரம் என்ற கொடியநோய் எல்லாவற்றிற்கும் சர்வநிவாரணமாக ஹிந்துத்துவம் உட்செரிக்கப்பட்டு, பாரத தேச மக்கள் ஹிந்துத்துவ அணிக்குள் திரட்டப்படவேண்டும் என்று அரவிந்தன் தன் மாறாக் கருத்தாக முன்வைக்கிறார் என்பதே.

ஆங்கிலேய காலனியாதிக்க எதிர்ப்பை, இந்துத்துவ தேசியமாக மாற்றியமைத்த தலைவர்களான திலகர், லஜபத் ராய், சவார்க்கர், போன்றவர்களின் சாதி, மத நெகிழ்வாக்கச் சிந்தனைகள் இன்று அரவிந்தன் போன்றோருக்கு ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகவும், அத்தலைவர்களின் இலச்சினையை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் போலித் தேசிய, அரசியல், மதம் சமூக சிந்தனையாளர்களைப் புறந்தள்ளுவதற்கு நெம்புகோலாகப் பயன்படும் என்றும் நினைப்பதாக நான் கொள்கிறேன்.

போலித்தேசியவாதிகள், இடதுசாரிகள், மெக்காலேயிஸ்டுகள்(இப்பதத்தை உபயோகிக்கும் அரவிந்தனே, பேபிங்டன் மெக்காலேயின் கல்வி வாரிசுதானே ?) போன்றோரின் ஒளிவட்டங்களை அகற்றுவது நவீனசமூகத்திற்கான ஊற்றுக்கு தூர்வை வாருவது போல அத்தியாவசியமான முயற்சி என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இவர்களை அகற்றிவிட்டு நாம் புனருத்தாரணம் செய்யவிருக்கும் பழைய தலைவர்களின் படிமங்களில் ஒட்டியிருக்கும் அழுக்குகள் இன்றுள்ள சமூகத்திற்கு வந்துசேர்ந்துவிடும் அபாயம் குறித்தும் அறிவிப்பது அவசியமாகிறது.

இந்துச்சமூக சீர்திருத்தவாதிகளான திலகர், சிப்ளங்கர், சவார்க்கர் போன்றோர் தீண்டாமை ஒழிப்பையிட்டுக் குரல் எழுப்பியதோடல்லாமல் நடைமுறையிலும் முயன்றிருப்பினும், தீண்டாமை என்பது சாதிமுறையிலிருந்து தனியானது என்ற கருத்துக் கொண்டிருந்தார்கள் (இக்கருத்தையொட்டி அம்பேத்கர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். பார்க்க: அம்பேத்கர் தொகுப்பு : இல:9) சமூகம் படிநிலைப்படுத்தப்பட்டிருக்கும் சாதிகளைபற்றிய அக்கறை எதுவுமற்று வெறுமே தீண்டாமையை ஒழித்துவிடலாமென்று நினைப்பது, மனுஸ்மிருதிக்கும், சனாதன இந்துக்களுக்கும் ஊறுவிளைவிக்காமல் மேற்சரடை சுரண்டிப்பார்க்கும் கனவொன்றேயாம். இதைத்தான் காந்தியாரும் தன் கொள்கையாக தொடர்ந்தார். சாதி ஏற்றத்தாழ்வுகளை முக்கியமானதொரு வழிமுறையாக கடைப்பிடிக்கும் ஒரு இந்து, சகமனிதனான தாழ்த்தப்பட்டவனை அவனது குலப்பிறப்புக் காரணமாக பகிஸ்காரம் செய்யும்போது இந்து மனிதாபிமானமும், மானிட விழுமியமும் எங்கே இருக்கிறது ? அத்தகைய ஒரு இந்துவால் தீண்டாமையை கடைப்பிடிக்கமுடியுமா ? ஆக, சவார்க்கரோ, காந்தியோ, அவர்களை இன்று வழிமொழியும் அரவிந்தன், மற்றும் சங்க பரிவாரிச நேயர்களோ சாதியத்தை ஒழிப்பதையும், மனிதாபிமானத்தை வளர்ப்பதிலும் குறிவைத்தியங்க வில்லை. அவர்களது இலட்சியம் ஹிந்துத்துவ அணிசேர்ப்புக்கு தடையாக இருக்கும் தீண்டாமையை சற்று நெகிழ்வாக்கி, சீர்திருத்த மாயையை மக்களுக்கு விதைத்து தமது எண்ணத்தை ஈடேற்றிக்கொள்வதல்லாமல் சமூக அக்கறை சார்ந்ததல்ல.

இன்றும் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வேறாகவும், அக்கிரகார, உயர்குல இந்துக்கள் வேறாகவுமே வாழ்கிறார்கள். சேரிகளின் துன்ப துயரங்கள் எப்போதும் உயர்சாதி இந்துக்களுக்கு தெரிந்திருந்ததில்லை. இன்று சங்க பரிவார் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரிடம் சேவை செய்ய நுழைந்ததற்கு, கிறிஸ்தவ, முஸ்லிம் மதமாற்றப் பயம் ஒன்றேதான் காரணம். இவர்களால் ஒதுக்கப்பட்ட இந்தச் சமூகங்களிடம் சேவைக்கும், மதமாற்றத்திற்கெனவும் முதன் முதலில் கிறிஸ்தவப் பிரசாரகர்களும், சேவையாளர்களுந்தான் சென்றனர்.

மற்றும், காலனியாதிக்க எதிர்ப்பு வரலாற்றில் பல அணிகள் இந்தியசமூகத்துள் இயங்கி வந்திருக்கின்றன. சவார்க்கர், காந்தி, திலகர், போன்ற மிதவாதிகள், இடதுசாரிகள், ஜோதிராவ் புலே, அயோத்திதாசர், போன்ற சிந்தனையாளர்கள் என பல வழிகளும், சிந்தனைகளும் சேர்ந்ததுதான் இந்திய விடுதலைப்போர். ஆனால் இன்று பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொண்டுள்ள/சேர்த்துக்கொள்ள விரும்பும் வீரசவார்க்கரைப்போல ஒரு அயோத்திதாசர் ஏற்றுக்கொள்ளப்படுவாரா ? அயோத்திதாசர் இந்தியாவின் விடுதலை என்பதை தான் ஏற்றுக்கொள்ளமுடியாத சமூகச்சிக்கலை இப்படி வெளிப்படுத்துகிறார்:

“வடகலை ஐயருடன் தென்கலை ஐயர் பொருந்தமாட்டார். பட்டவையருடன் ஸ்மார்த்தவையர் பொருந்தமாட்டார். துளுவவேளாளர், காரைக்காட்டு வேளாளரை பொருந்தமாட்டார். தமிழ்ச் செட்டியார் வடுக செட்டியாரைப் பொருந்தமாட்டார். காஜுலு நாயுடு தெலுகு பாடை, இடைய நாயுடைப் பொருந்த மாட்டார். இவ்வகை பொருந்தாதிருப்பினும் சமயம் நேர்ந்தபோது சகலரும் ஒன்றாய்க் கூடிக்கொண்டு இவர்களால் தாழ்ந்தவர்கள் என்று ஏற்படுத்திக்கொண்ட பறையர்களைப் பொருந்தமாட்டார்கள்.

இத்தியாதி சாதிபேதங்களையும், குணபேதங்களையும் நூற்றாண்டுகளாய் அறிந்துவந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் சகல ஜாதியோரும் பொருந்தியாளும் இராஜரீகத்தைத் தடுத்து சுயராஜரீகத்தை எந்த சுயஜாதிக்கு அளிப்பார்கள். இத்தியாதி பேதங்களையும் நன்கறிந்த நமது சோதரர்கள் சுயராட்சியம் சுயராட்சியம் என்று வீணே கூறுவது சுகமின்மெயேயாம்.” (அயோத்திதாசர் சிந்தனைகள். பக்:100)

இதேவகையான எதிர்ப்புணர்வை ஜோதிராவ் புலே அவர்களும் தனது ‘அடிமைத்தனம்’ என்ற நூலில், “இன்று ஆங்கிலேயர் ஆட்சி நடந்துவருகிறது. நாளை இது இல்லாமல்போகலாம். இது நீடித்திருக்காது. இது நிலைத்திருக்கும் என யாரும் உறுதி கூறவும் முடியாது. ஆனால் இந்த ஆட்சி நீடித்திருக்கும் காலம்வரையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெற்றுக்கொள்ள முடியும். அதன்மூலம், தங்களது சமூக, தனிநபர் கெளரவங்களை பறித்துகொண்ட பார்ப்பனர்களின் அடிமை நுகத்தடியிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ளலாம்.” (ஜோதிராவ் புலே) என்று குறிப்பிட்டுள்ளதாக தனஞ்செய் கீர் எழுதியுள்ளார்.

யோசித்துப்பாருங்கள், அண்மைய இந்திய வரலாறு என்பது ஆங்கிலேய ஆட்சிக்கான எதிர்ப்பியக்க வரலாறாகவே பதிவுபெற்றிருப்பதை உணர்வீர்கள். ஆனால் இதற்கெதிராக இயங்காவிட்டாலும், காங்கிரஸ், மற்றும் இந்து சனாதனிகள் தலைமையில் பெறப்போகும் இந்திய சுதந்திரத்தின் அபத்தத்தை சுட்டிக்காட்டிய சிந்தனையாளர்கள் இந்திய வரலாற்றிலும், இந்தியப் பாடத்திட்டத்திலுமிருந்தும் மறைக்கப்பட்டுள்ளனர். இவர்களது சிந்தனைகளும், இவர்கள் முன்னெடுத்த அறவுணர்வின் குரலுமே இன்று எமக்குத் தேவையாக இருக்கிறதேயல்லாமல் வீர சவார்க்கரோ, ஹிந்த்துத்துவ பரிவார்களோ அல்ல.

***

நந்தனுக்கும், சம்பூகனுக்கும் மறுக்கப்பட்ட இந்து தத்துவ ஞான வெளிச்சம் அரவிந்தனுக்கு அனுமதிக்கப் பட்ட காரணமொன்றால் மட்டும், நெடிய வரலாற்றினடியாக தொடர்ந்து வரும் வர்ண, மத ஏற்றத்தாழ்வுகள் இந்துபரிஷத்திடம் இல்லை என்று அடம்பிடிக்கிறார். சங்கத்தின் தினசரி பிரார்த்தனையில் ஜோதிராவ் பூலே, சில சூபி ஞானிகள் போன்றோரது நாமங்கள் துதிக்கப்படுகின்றன என்பது உண்மையில் எனக்குத் தெர்ியாது. அவர் எழுதித்தான் அதை அறிந்துகொண்டேன். ஆனால் வியப்பேதுமில்லை. இது ஒரு வகைத் தந்திரம். எங்கள் அரசியல்கட்சிகள் ஆண்டாண்டுகாலமாக, தீக்குளித்த தொண்டனின் பிரேதத்திற்கு தத்தமது கட்சிக்கொடியைத்தான் போர்த்தவேண்டும் என்று இழவுவீட்டில் ரகளை பண்ணுவது ஒன்றும் புதிய சமாச்சாரமல்லவே.

நந்தனை நாயன்மாரில் ஒருவராக உயர்த்திவிடுவதால் அவனது, தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆலயப்பிரவேச கலகக்குரல் அழிந்துபடுகிறது. பார்ப்பனிய, இந்துத்துவ எதிர்ப்பில் அம்பேத்கரிற்கே முன்னோடியாக இருந்த ஜோதிராவை தங்கள் அணியில் பிரதிஷ்டை செய்துவிடுவது என்பது ஜோதிபாவின் அத்தனை, சீர்திருத்தக்கருத்துகளையும் சலவை செய்துவிடுகிறது.

முத்தாய்ப்பாக, இஸ்லாமியப் பயங்கரவாதம், கிறிஸ்தவ மதமாற்றம் என்பவற்றை நாம் கண்டிப்பாக எதிர்த்தே ஆகவேண்டும். ஆனால் இவற்றிற்கு மாற்றீடாக ஹிந்துத்துவாவை நாம் தூக்கிப்பிடிக்க முடியுமா ?

நீ. அரவிந்தன் என்ற இளம் சிந்தனையாளன், இந்து மனிதாபிமானத்தை இந்திய மக்களிடம் விதைக்கவேண்டும் என்ற நியாயமான இலட்சியத்தைக்கொண்டு நீராகப் பாய்கிறார். ஆனால் வீர சவார்க்கர் போன்ற சனாதனிகளின் சிந்தனையை வழிமொழியும்போது மடை மாறிவிடுகிறார். மடை மாறிய நீர் நெல்லுக்குப் பாய்ந்தால் ஒரு பாதகமுமில்லை. நெல்லுக்குப் பதில் பார்ப்பனியம் என்ற பார்த்தீனியச்செடிக்கு பாய்கிறதே என்றுதான் நான் கவலைப்படுகிறேன்.

***

mcmeera@hotmail.com

jeyaruban@sympatico.ca

Series Navigation

ஜீவன்.கந்தையா -

ஜீவன்.கந்தையா -