லக்கிலுக்
சிறுவயதில் இருந்தே குளியல் என்றால் குஷி தான். குளியல் என்றால் சாதாரண குளியல் இல்லை. அசுரக் குளியல். குட்டை, ஏரி, மடு, தேங்கிய மழை நீர், வயல் கிணறு என்று நீரை கண்ட இடமெல்லாம் குளியல் போட்ட காலம் அது.
சனி, ஞாயிறு விடுமுறைகளில் மடிப்பாக்கத்துக்கு தெற்கே இருந்த ஒரு சிற்றாற்றில் குளித்த காலம் என் வாழ்வின் பொற்காலம். பல்லாவரம், மூவரசம்பேட்டை போன்ற குன்றுகளில் இருந்து வரும் மழை நீர் கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம் வழியாக ஒரு சிற்றாராக பாய்ந்து பள்ளிக்கரணை பகுதியை சதுப்பு நிலமாக்கும். அதை மடு என்றும் அழைப்போம். பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அந்த மடுவில் தெளிவான நீர் ஓடும்.
அதுபோலவே மடிப்பாக்கம் ஏரி. அப்போதெல்லாம் வருடத்தில் குறைந்தது எட்டு மாதங்களுக்காவது நீர் நிரம்பி இருக்கும். ஏப்ரல்-மே மாதங்களில் நீர் வறண்டால் கிரிக்கெட்டு டோர்ணமெண்டு நடக்கும். சமயங்களில் Fedlight மேட்சும் நடப்பதுண்டு. நீச்சல் தெரியாத காலங்களில் ஏரியின் ஓரமாக ஆழமில்லாத பகுதிகளில் நண்பர்களோடு நீந்தியதுண்டு. நீந்தி (?) முடித்தபின் ஏரிக்கரையோரம் உயர்ந்துநின்ற பனைமரங்களிலிருந்து நுங்கு பறித்து அருந்தியதும் உண்டு.
இப்போதைய மடிப்பாக்கம் பேருந்து நிலையம் இருக்கும் இடத்துக்கு அருகில் அப்போதெல்லாம் ஒரு குட்டை இருக்கும். வற்றாத ஜீவ குட்டை எனலாம் அதை. ஓய்வு நேரங்களில் வெள்ளைக்காரன் கணக்காக தூண்டில் வைத்து அங்கே மீன் பிடிப்போம். பெரும்பாலும் கொறவை மீன் தான் மாட்டும். எப்போதாவது கெண்டை மீன் மாட்டலாம். சில மீன்கள் எந்த வகையென்றே தெரியாது. கோல்டு கலரில் மாட்டும் எல்லா மீன்களுமே எங்களுக்கு கோல்டு பிஷ் தான்.
மழைக்கால மடிப்பாக்கம் உலகப் பிரசித்தி பெற்றது. சென்னைக்கு அருகில் புயல் நிலைகொள்ளும் நேரங்களில் எல்லாம் மடிப்பாக்கம் தீவாக மாறுவது வாடிக்கை. இன்றைக்கும் நிலைமை மாறிவிட்டதாக தெரியவில்லை. மழை வரும்போதெல்லாம் மடிப்பாக்கம் தீவானது என்று தினமலரில் ஆண்டு தோறும் செய்தி வரும். தொலைக்காட்சி செய்திகளிலும் மழை க்ளிப்புங்களில் மடிப்பாக்கத்தை காட்டுவார்கள்.
சாலையோரம் வெட்டப்பட்ட கால்வாய்களில் மடிப்பாக்கம் ஏரியின் எக்சஸ் வாட்டர் காட்டாறுபோல நுரைபொங்க ஓடும். அந்த கால்வாயில் கப்பல் ரேஸ் விட்டு விளையாடுவது எங்கள் வழக்கம்.
பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பாக மடிப்பாக்கத்தின் தெற்குப் பகுதியில் சவுக்குத் தோப்புகளும், வயல்வெளிகளுமாக பசுமை கொஞ்சிய காலம் அது. வயல் கிணறுகளில் பாம்புகள் தொல்லை இருந்தாலும் நேரம், நேரம், காலம் தெரியாமல் டைவ் அடித்து விளையாடுவோம். கிணற்றில் பிளாஸ்டிக் பந்து வைத்து போலோ விளையாடியதும் உண்டு. நீருக்கு அடியில் மூழ்கி கரையைத் தொட்டு மண் எடுத்து வரும் வீரர்களும் இருந்தார்கள். நீரின் மேற்பரப்பில் ஏதோ ஒரு ஆசனம் செய்து அப்படியே பிணம் மாதிரி மிதக்கும் லாவகம் அப்போதிருந்த வீரர்களுக்கு இருந்தது.
நீரும், நீர்சார்ந்த பகுதியிலும் வளர்ந்திருந்தாலும் கூட பல ஆண்டுகளாக நான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியவில்லை. சுமார் ஐந்து வயதிலிருந்தே நீச்சல் பழக முயற்சித்தும் கூட ஆழ்மன பயம் காரணமாக அக்கலை எனக்கு கைவராமலேயே இருந்தது. தாம்புக் கயிறு கட்டிக் கொண்டு தான் பல ஆண்டுக்காலமாக நீந்திக் கொண்டிருந்தேன். இல்லையேல் கரையோர படிக்கட்டை கட்டி அணைத்துக்கொண்டு காலை தத்தக்கா, பித்தக்கா என அடிப்பேன்.
எனக்கு அக்கலை கைவரப்பெற்றதுக்கு ஒரு சுவாரஸ்யமான காரணமுண்டு. நான் +2 பெயிலான வாரம்.. நண்பர்களோடு கிணற்றில் குளிக்கச் சென்றபோது, இனிமேல் வாழ்ந்து என்ன பயன் என்ற விரக்தியில் பம்ப் ஷெட் மாடியில் இருந்து குதித்தேன். சுமார் பதினைந்து அடி உயரம். குதித்த வேகத்தில் “விர்”ரென்று என் உடல் நீருக்குள் பாய.. என்னை அறியாமலேயே என் கால் சைக்கிள் ஓட்டத் தொடங்கியது. கை நீரை கொலைவெறியுடன் அழுத்த உடல் மீன் நீந்தும் லாவகத்துடன் நீர் மட்டத்துக்கு மேலே வந்தது. அட! நானும் நீச்சலடிக்க ஆரம்பித்து விட்டேன். +2 பெயிலானதும் கூட ஒரு நன்மைக்கு தான்! 😉
இப்படியான ஆட்டோகிராப் நினைவுகளுடன் இன்றைய மடிப்பாக்கத்தை எண்ணிப் பார்க்கிறேன். வயலும், சவுக்குத் தோப்புகளும் இருந்த பகுதிகள் அழிக்கப்பட்டு நரகமயமாக்கப்பட்ட அபார்ட்மெண்டுகளும், குடியிருப்புப் பகுதிகளுமாக மாற்றப்பட்டிருக்கிறது. வயல் கிணறுகள் ஏதோ ஒன்றிரண்டு பாழடைந்த நிலையில் மரங்கள் வளர்ந்து ஆங்காங்கே காட்சியளிக்கிறது.
மழைக்காலத்தில் மட்டும் மடிப்பாக்கத்தின் கிழக்குப் பகுதியில் கருமையான வண்ணத்தில் அழுக்கு நீர் தேங்குகிறது. மடிப்பாக்கத்தின் சிற்றாரான மடு அடையாளம் தெரியாமல் கால்வாய் என்ற சொல்லக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கிறது. வாழ்ந்து கெட்ட வீட்டுக்கு சாட்சியாக இருப்பதைப் போல மடிப்பாக்கம் ஏரியும், குட்டையும் ஆக்கிரமிப்புகளுக்கு இடையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி பரிதாபமாக காட்சியளிக்கிறது. அரசு ஏமாந்தால் ஏரியை மடக்கிப் போட்டு பிளாட் ஆக்கவும், குட்டையை நிரப்பி கும்மி அடிக்கவும் கோரமான நகரமுகம் பசியுடன் காத்திருக்கிறது! 🙁
luckylook32@gmail.com
- ஜெயமோகனும் இயல் விருதும்
- தாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் !
- கடைசி கிலோ பைட்ஸ் – 6 [ Last Kilo bytes -4 ]
- கருணாகரன் கவிதைகள்
- போய்விடு அம்மா
- சம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )
- ஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் ! அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 13)
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.
- பட்டுப்பூவே !
- கவிதைகள்
- இரு நாட்டிய நிகழ்வுகள்
- புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
- திருப்பூரில் பரிசு பெறும் உஷா தீபன்
- கொட்டாவி
- மீராவின் கவிதை
- இரண்டில் ஒன்று
- கடிதம்
- சிங்கப்பூரில் 59வது இந்திய குடியரசுதினம்
- தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்
- ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை
- ஊர் சுற்றிய ஓவர் கோட்
- நீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 4
- மொழி
- மாத்தா- ஹரி அத்தியாயம் -46
- தம்மக்கள்
- மாலதி மாற மாட்டாள்!
- வானபிரஸ்த்தாசிரமம்
- தைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.
- திண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008
- மழை பிடிக்காது! மழை பிடிக்காது!
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்
- எண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன்.
- பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா?
- இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்
- குடியரசுதின சிறப்புக் கட்டுரை
- இரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2
- காற்றினிலே வரும் கீதங்கள் – 3 மூச்சு விடுவதே பெரும்பாடு !