நிலா அழகாயிருக்கில்லே

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அருகிலிருந்த சர்ச்சின் மணி இரவின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டிருந்தது. விழித்துக் கொண்டேன். ஓசையை எண்ணிய மனது இரவு பன்னிரண்டு என்றது. இந்த எண்ணிக்கையில் தவறு இருக்கலாம். அது இங்கே முக்கியமல்ல. நான் விழித்துக் கொண்டதும், வியர்வையில் நனைந்திருந்ததும் முக்கியம். நிஜம்.

இந்த அவஸ்த்தை எனக்குக் கடந்த இரண்டு மாதங்களாகவே இருக்கின்றது. சொல்லி வைத்தாற்போல, நள்ளிரவில் சர்ச்சின் மணியோசையோடு ஒளிந்து பூச்சாண்டி காட்டுகின்ற அவஸ்த்தை. சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியாய்ப் போராடிக் களைத்து, இறுதியில் சிலந்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற மரண அவஸ்த்தை.

எலிஸா- என்னோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பிரெஞ்சு நண்பி. ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறாள். அவளுக்கு, நான் படும் அவஸ்த்தையின் பரிமாணம் தெரயாது. இரண்டு கைகளையும் பிணைந்து, மடக்கியிருக்கும் கால்களுக்கிடையில் துருத்திக் கொண்டு கம்பளிப் போர்வைக்குள் அடங்கிக் கிடந்தாள்.

போர்வையை ஒதுக்கிவிட்டு, இரவு உடையில் உடலை மறைத்து, பாதங்களில் ஸ்லிப்பரைச் சூடி, சப்தமின்றி, எலிஸாவின் தூக்கம் கலைந்துவிடக்கூடாது என்ற அதீத கவனத்துடன், கதவினைப் பின்புறம் தள்ளிச் சாத்திவிட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தேன். காத்திருக்கும் என் கம்ப்யூட்டரைக் கண்டதும் பெருமூச்சு. எதிரிலிருந்த நாற்காலியில் என்னை இருத்திக்கொண்டு, மின்சாரத்தை ஊட்டி உயிர்ப்பித்தேன். மானிட்டர் விழித்துக் கண்களைக் கசக்கிக் கொண்டது. நீலத்திரை வெள்ளித் திரைக்குத் தாவி மின்னலடித்து ஓய்ந்தது. சிகரட் ஒன்றைப் பற்றவைத்துப் பதற்றத்தைத் தணித்துக் கொண்டேன். தமிழ் சாஃப்ட்வேரை உயிர்ப்பிக்கும்வரை பொறுமையில்லை. விரல்கள் கீ போர்டைச் சீண்ட ஆரம்பித்துத் ‘தட தட ‘ வென்றன.

கற்பனையும் நிஜமும் வார்த்தைகளாக உயிர்பெற, விரல்கள் அவற்றுக்கு வடிவம் கொடுக்கப் பரபரத்தது. எழுத்தாளன் மனத்துடன், கண்டதும் காணாததும் மட்டுமின்றி, அனுபவத்தையும் இறக்கிவைக்க ஆரம்பித்தேன். இல்லையெனில் எந்த நேரமும் தலை வெடித்துவிடக்கூடிய அபாயம் இருக்கின்றது.

என்னுடைய அவஸ்தையில் பங்கின்றி எலிஸா அடுத்த அறையில் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறாள். இல்லை..இல்லை, விழித்துக்கொண்டிருக்க வேண்டும். அவள் இருமுவது கேட்கின்றது.

பெரும்பாலான ஐரோப்பியப் பெண்களைப்போலவே எலிஸாவும் புகை பிடிப்பவள். குறிப்பாக அவள் மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் புகை வருவதைக் கண்டு அருவருப்படைவதுண்டு. ஆனால் அதனை அவளிடம் சொல்ல எனக்கு வழக்கம்போலத் தயக்கம். தவிர நானும் புகை பிடிப்பவன் என்பது மட்டுமல்ல அவள் ‘பெண்கள் விடுதலை ‘க் கட்சி. எலிஸாவிற்கு எல்லாவற்றிலும் சுதந்திரம் வேண்டும், செக்ஸ் உட்பட. விமலாவிற்கு நேர் எதிர். விமலாவிற்குப் பிடிக்காததெல்லாம் எலிஸாவிற்குப் பிடிக்கும். எனக்கு எலிஸாவைப் பிடித்து விமலாவை பிடிக்காமற் போனது இப்படித்தான்.

விமலா…

அம்மி மிதித்து, அருந்ததிக் காட்டி, ஐயர் ‘மாங்கல்யம் தந்து நானே ‘ வை முடிப்பதற்குள் இரண்டு முடிச்சு போட்டு (சத்தியமா நான் போட்டது இரண்டுதான் -மூன்றாவதை யார்போட்டிருப்பாங்கன்னு இன்றையவரைக்கும் தெரியாது) என்னோடு பிரான்சிற்கு வந்த பந்தம். ‘பின் தூங்கி முன் எழுந்து ‘ கேட்டிருந்தால் எலிஸா வீடுவரைக் கூடையில் என்னை சுமக்கவிருந்த இருபத்து நான்கு காரட் இந்திய பாரம்பரியம்.

வழக்கம்போலத் தலையைக் காட்டிவிட்டு வந்துவிடுவது என்றுதான் இந்தியாவுக்கு வந்திருந்தேன். அப்பாவிற்கு ஏற்பட்ட நெஞ்சு வலி, அம்மாவை மூக்கைச் சிந்த வைக்க ‘எலிஸா ‘ வை தற்காலிமாக மறக்க நேரிட்டது. விமலாவிடம் அம்மாவின் எதிர்பார்ப்பும், அவள் தகப்பனிடம் அப்பாவின் எதிர்பார்ப்புமிருக்க, என் எதிர்பார்ப்புப்பற்றிக் கவலைப் படாமல் அவசரத்திற் போட்ட முடிச்சு. கோழையாய் ஒரு புழுவைப் போல பெற்றோருக்கு வளைந்து, அவளைக் கைப்பற்றிப் பிரான்சுக்கு வந்தபிறகுதான் எனக்கும் விமலாவிற்கும் உள்ள இடைவெளி இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் உள்ள தூரமென்று புரிந்தது.

எலிஸா எங்கள் இருவரையும் ஒட்டவைக்க முயற்சி எடுத்தது என்னவோ உண்மை. மஞ்சள் குங்குமத்தை விட, லிப்ஸ்டிக் பர்ஃப்யூம்களில் எனக்கிருந்த கூடுதல் மயக்கத்தில், விமலா என்ற உயிர் வேண்டாமல் போய்விட்டது. பிறகு ?.. பிறகென்ன ஒரு நாள் போயே போய்விட்டாள். மண்ணெண்ணெய் இன்றி, ஸ்டவ் விபத்தின்றி பச்.. அவளை முடித்துவிட்டேன். அந்நியர் விவகாரம் என்றால் அலட்சியத்தோடு கையாளும் பிரெஞ்சு பொலிஸாரால் விசாரணை, நீதிமன்றம், தீர்ப்பு எல்லாமே நான் நினைத்தபடி. எலிஸாகூட ஆரம்பத்தில் சந்தேகப்பட்டு, இப்போது நான் ‘அப்பாவி ‘ என சத்தியம் செய்ய தயாராயிருக்கிறாள்.

இரண்டு மாதத்திற்கு முன்புவரை நிம்மதியாகத்தானிருந்தேன். எப்போது ? எங்கே ? என்பதில் குழப்பமிருக்கிறது. ஆனால் விமலாவால் துரத்தப்படுகிறேன். ஓட முடியாமல் களைத்திருக்கிறேன். இந்தப் பயம் அங்கே இங்கே என்று கடைசியில் படுக்கை வரை வந்துவிட்டது.

அவள்தான். எழுந்து விட்டிருந்தாள். இரண்டு நாட்களாக அவளுக்கு நல்ல காய்ச்சல்வேறு. தொடர்ந்து இறுமிக் கொண்டிருந்தாள். சில விநாடிகளின் மெளன ஓட்டத்திற்குப் பிறகு அந்தக் காலடியோசை. எப்போதும் பதிய மறுக்கும் பாதங்கள். காற்றுக்குக் கூட துன்பம் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அக்கறைகொண்ட நடை. அது ஓசையல்ல. முணுமுணுப்பு. விமலாவைப்போலவே, என் வெறுப்புக்கு ஆளாகும் காலடிகள். கதவினைத் திறந்து ‘காட்டன் பாத் ரோபில் ‘ நின்றவளை, காலடியோசைக்குச் சொந்தமானவளைப் பார்த்தேன்.

‘விமலா.! ‘ அதிர்ச்சியில் நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அவள் மெள்ள நெருங்கினாள்.

‘என்ன பரத்! மறுபடியும் பிரமையா ? நான் விமலா இல்லை, எலிஸா. நாைளைக்கு முதல் வேலையா சைக்கியாற்றிஸ்ட்டைப் போய் பாக்கறீங்க ‘

என் தோளில் சாய்ந்து, தனது மெல்லிய கரங்களை என் கழுத்தில் கொண்டுபோய் வருடி, மெள்ளக் குனிந்து தன் அதரங்களை என் கழுத்தில் ஒற்றியெடுத்தாள். நான் கற்பனையில் விமலாவை நிறுத்திக் கலவரத்திலிருந்தேன்.

‘என்ன இப்படி வேர்க்குது ? ‘ என்றவள் என் தலையை அவளது மார்பில் இறக்கிக் கொண்டாள். நான் இதுவரை எழுதி இருந்ததை படிக்க ஆரம்பித்தாள்..

எங்களிடையே நிசப்தம் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. மேசையிலிருந்த அலாரம் தேவை இல்லாமல் அலற, அவள் என்னிடமிருந்து விடுவித்துக் கொண்டாள்.

‘எனக்குத் தண்ணீணிர்வேணும், தாகமாயிருக்கு ‘ ண்ணு சொன்னவள் கிச்சனுக்கு சென்றாள். அடுத்த சில விநாடிகளில், மினரல்

வாட்டர் பாட்டிலைத் திறப்பதும், பின்னர் குடிக்கின்ற ஓசையும் தெளிவாகவே கேட்டது.

‘பரத் சிகரட் தீர்ந்து போச்சு வாங்கி வாயேன் ‘

‘இந்த நேரத்திலா ? ‘ என்ற கேள்வி மனசுக்குள் எழுந்தாலும், எனக்கும்கூட சிகரட் தேவைப்பட்டது. லெதர் ஜாக்கெட்டை அணிந்து, தலை முடியைக் கையால் ஒதுக்கிக்கொண்டு, வெளியே வந்தேன். பிற அப்பார்ட்மெண்ட்காரர்களை எழுப்புவிடக்கூடாது என்ற உணர்வெழ, வெளிக் கதவை மெள்ள சாத்திக் கொண்டு இரண்டு இரண்டு படிகளாக இறங்கி வீதியில் கால் வைத்தேன்.

வீதி மனித நடமாட்டமின்றி சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது. சாலையோர மரங்களின் பயமுறுத்தலை தணிக்கும் வகையில், மேகத்திலிருந்து வெளிப்பட்டு, நிலா முழுசாக, புத்தம் புதுசாக. ஒரு வேளை பெளர்ணமியாக இருக்குமோ ? நடை பாதையில் சாம்பல் நிறத்தில் ஒரு பூனை. யாரையோ அல்லது எதனையோ எதிர்பார்த்து கண்கள் மின்ன, காத்திருக்கிறது.

எனக்குப் பின்புறம் மீண்டும் அந்த ஓசை, காலடியோசை. எனக்குப் பழக்கப்பட்ட, என்னைத் துரத்தும், நான் அறிந்த விமலாவின் காலடிகள். சில்லென்ற காற்று, நான் போட்டிருந்த லெதர் ஜாக்கெட்டையும் மீறி முதுகுத் தண்டில் இறங்கியது.

‘நிலா அழகாயிருக்கில்லே ? ‘ என் தோளருகே வார்த்தையின் ஈரம். திரும்பிப் பார்க்கிறேன்.

பனியில் நனைந்த ஒரு பெண்ணுருவம். முகம் மட்டும் ‘விமலா ‘ என்றது

‘விமலா.. நீயா ? ‘

‘நானேதான் பரத். இங்கப் பாருங்க நீங்க கட்டின தாலியோட மஞ்சளின் ஈரங் கூட இன்னும் காயல. என்னோட உதட்டைப் பாருங்க, சிவப்பா.. உங்களுக்குப் பிடிக்குமேண்ணு, பச்சை ரத்தத்திலே தோய்ச்சி.. வா பரத் வா ‘! கிட்டவா..! ‘

‘இல்லை விமலா. விட்டுடு..! உன்னோட உலகம் வேற .. ப்ளீஸ்! ‘

‘எப்படி பரத் ? எப்படி ? சொல்லுங்க. இந்த மண்ணுல நான் மட்டும் தனியான்னா எப்படி ? வாழ்வுதான் உங்களோட இல்லைன்னு ஆச்சு. சாவாவது உங்களோட வேண்டும். மாட்டேன்னு சொல்லிடாதீங்க. ‘

அவள் என்னை நெருங்கியிருந்தாள். அப்போதுதான் அதனைக் கவனித்தேன். அதிர்ச்சியில் நான் உறைந்து நிற்க, . நிலவொளியில் பளபளவென்று மின்னிய அந்தக் கத்தியை என் வயிற்றில் மெள்ள இறக்கினாள். நான் துவண்டு சரிய ஆரம்பித்தேன்.

‘என்ன இன்னுமா எழுதற ? நான் சிகரேட் கேட்டனே என்ன ஆச்சு ? ‘

எலிசாவின் குரல் கேட்டு, எழுதிய கதையை அப்படியே வைத்துவிட்டு திரும்பினேன்.

‘மன்னிச்சுக்க டியர். கதையிலிருந்த கவனத்துல உன்னை மறந்துட்டேன். இந்த நேரத்துல ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துலதான் கடைகள் இருக்கும். குறைஞ்சது அரைமணி நேரமாவது ஆகும் பரவாயில்லையா ? ‘

‘ஓ.கே. பரத். கொஞ்சம் சீக்கிரமா வரப் பாருங்க ‘

அவளுக்கு சிகரேட் இல்லாம எதுவும் நடக்காது. லெதர் ஜாக்கெட்டை அணிந்து, தலை முடியைக் கையால் ஒதுக்கிக்கொண்டு, வெளியே வந்தேன். பிற அப்பார்ட்மெண்ட்காரர்களை எழுப்புவிடக்கூடாது என்ற உணர்வு எழ, வெளிக் கதவை மெள்ள சாற்றிக் கொண்டு, இரண்டு இரண்டு படிகளாக இறங்கி வீதியில் கால் வைத்தேன்.

வீதி, மனித நடமாட்டமின்றி சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது. சாலையோர மரங்களின் பயமுறுத்தலை தணிக்கும் வகையில், மேகத்திலிருந்து வெளிப்பட்டு, நலா முழுசாக, புத்தம் புதுசாக. ஒரு வேளை பெளர்ணமியாக இருக்குமோ ? நடை பாதையில் சாம்பல் நிறத்தில் ஒரு பூனை. யாரையோ அல்லது எதனையோ எதிர்பார்த்து கண்கள் மின்ன, காத்திருக்கிறது.

எனக்குப் பின்புறம் மீண்டும் அந்த ஓசை, காலடியோசை…

***

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா