நிலத்தடி நீர் உரிமையைக் காக்க கேரளாவின் பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் போராட்டம்

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

கோ. ஜோதி, வி. பிரபாகர் ஞானக்கண்


உலகமயமாதல் (Globalization)…

உலகமயமாதல் என்ற ஒரு மோசடியின் மூலமாக ஏழை நாடுகளின் மீது ஆயுதங்களற்ற போரை, வளர்ந்த நாடுகள் துவக்கியுள்ளன. இவைகளின் நோக்கம் ஏழை நாடுகளின் பொருளாதாரத்தைச் சூரையாடி, இயற்கை வளங்களை நிர்மூலமாக்கி, அனைத்துத் தேவைகளுக்கும் தங்களைச் சார்ந்திருக்கும்படி செய்வதுதான். இதற்கான எடுத்துக்காட்டுகள் உலகின் பல இடங்களிலும் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் தங்கள் கிராமத்தின் நிலத்தடி நீர் உரிமையைக் காக்க கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பிளாச்சிமடா கிராமத்தின் வீரப்போராட்டம்.

இந்தியாவில், 1996ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டப்படி (திருத்தப்பட்ட 73வது விதியின்படி) கிராமப் பஞ்சாயத்து ஆட்சி முறைக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன. இதன்படி நிலஉபயோகம், சுரங்க குத்தகை, நிலத்தடி நீர் எடுத்தல், நீர் சேகரிப்பு முறை போன்ற அதிகாரங்கள் மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு அளிக்கப்பட்டு அதன் மூலம் கிராம இயற்கை வளங்கள் மேலாண்மை, பஞ்சாயத்துக்களின் பொறுப்பாகியது. இதனால் கிராமங்களின் இயற்கை வளங்கள் மேலாண்மையில் கிராம மக்கள் மற்றும் பெண்களின் உரிமை அதிகரித்தது. தங்களது இயற்கை வளங்கள் மேலாண்மையில் உள்ள உரிமைகளை நிலைநாட்ட, சிலநேரங்களில், சில இடங்களில் மக்கள் போராட வேண்டியுள்ளது. அவ்வகையான போராட்டங்களில் ஒன்றுதான் கேரளாவில் கோகோ கோலாவிற்கு எதிராக நடைபெறும் பிளாச்சிமடா மக்கள் போராட்டம்.

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது பிளாச்சிமடா கிராமம். இக்கிராமத்தில் ஜூன் 2000ஆம் ஆண்டு இந்துஸ்தான் கோகோ கோலா குளிர்பான நிறுவனம் ஒரு தொழிற்சாலையைக் கட்டியது. பிளாச்சிமடா கிராமத்தின் பஞ்சாயத்து கிராமமான பெருமாட்டி பஞ்சாயத்தும் அனுமதி வழங்கியது. இத்தொழிற்சாலையில் கோகோ கோலா, தம்ஸ் அப், லிம்கா, ஃபாண்டா, ஸ்பைட், மாஸா போன்ற குளிர் பானங்கள் தயாரிக்கப்பட்டன. இதன் தண்ணீர் தேவைக்காக பல ஆழ் குழாய் கிணறுகள் போடப்பட்டு தினந்தோறும் 1.5 மிலியன் லிட்டர் தண்ணீர் நிலத்தடி நீரில் இருந்து உறிஞ்சப்பட்டது. பிளாச்சிமடா மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் 400 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது. பெருமாட்டி பஞ்சாயத்திற்கு 6,45,000 ரூபாய் வரியாகவும், உரிமத்தொகையாகவும் கிடைத்தது. முதலில் கிராம மக்கள் இதை வரவேற்றனர்.

2002ஆம் ஆண்டில் இக் கிராமத்தின் விவசாய மற்றும் குடிநீர் கிணறுகளில் தண்ணீரின் அளவு குறையத்தொடங்கியது. குடிதண்ணீரின் ருசியும் மாறத்தொடங்கியது. விளைநிலங்களில் உற்பத்தியும் (yield) குறையத் தொடங்கியது. கோகோ கோலா நிறுவனம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் நிலத்தடி நீரை எடுப்பதும், தொழிற்சாலையில் உருவாகும் நஞ்சான திடக்கழிவுகளை (sludge), விவசாய நிலங்களில் வெளியேற்றுவதும் தான் இதற்குக் காரணம் என்பதை கிராம மக்கள் உணர்ந்தனர். இதனால் தங்கள் எதிர்ப்புகளை கோகோ கோலா நிறுவனத்திற்கு தெரிவித்தனர். ஆனால் இவைகள் பலனளிக்கவில்லை.

கோகோ கோலா நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு கேரளத்தின் ஆதிவாசிகளின் உரிமைப் போராட்டத்தை வழி நடத்திச் சென்ற வீராங்கனை சி. கே. ஜானு அவர்களிடம் மக்களால் கொடுக்கப்பட்டது. 2002 ஏப்ரல் 22ந் தேதியன்று ‘பிளாச்சிமடா போராட்டம் ‘ துவக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு பிளாச்சிமடா கிராமத்தின் 50 வயதான மயிலம்மா என்ற ஆதிவாசி விதவை தலைமை ஏற்றார். இவருடைய குறைந்த அளவு விளைநிலமும் பாதிக்கப்பட்டிருந்தது.

மக்கள் போராட்டம் வலுவடையத் தொடங்கியது. கேரள மக்கள் உரிமை கழகம் மற்றும் அய்யன்காளிபடா என்ற புரட்சிகர அமைப்பு போன்றோர் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். போராட்டத்தின் 50வது நாளில், கோகோ கோலா தொழிற்சாலையின் முன்பு அறவழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது கேரள போலீஸ் தனது வெறித்தனமான தாக்குதலைத் தொடர்ந்தது. பலரைக் கைதும் செய்தது. 7 பெண்கள் போலீஸ் தாக்குதலால் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இப்போராட்டச் செய்தியை நாடெங்கும் கொண்டு செல்ல 26 ஜனவரி 2003ல் ஒரு பாதயாத்திரை இயக்கம் தேசீய மக்கள் இயக்கத்தைச் சார்ந்த திருமதி மேதாபட்கர் அவர்களால் துவக்கப்பட்டது. போராட்டத்தின் ஒருபகுதியாக இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமாட்டி பஞ்சாயத்தின் தலித் தலைவரான திரு. ஏ. கிருஷ்ணன் அவர்கள் கோகோ கோலா நிறுவனத்தின் அனுமதிச் சான்றை ரத்து செய்தார். இதை முறியடிப்பதற்காக கோகோ கோலா நிறுவனம் திரு. ஏ. கிருஷ்ணன் அவர்களுக்கு ரூ.3 கோடி கையூட்டு தரவும், கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்த தருவதாகவும் உறுதியளித்தது (திரு. ஏ. கிருஷ்ணன் அவர்களின் தொலைக்காட்சி பேட்டி). ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. லண்டனைச் சேர்ந்த ஒரு ஆய்வகத்தின் மூலம் செய்த ரசாயனச் சோதனையில், பிளாச்சிமடா கிராமத்தின் நிலத்தடி நீர் கடுமையாக மாசுபட்டுள்ளது என்றும், இந்நீரில் நச்சுத் தன்மைவாய்ந்த கேட்மியம் (50மி.கி/கிலோ) மற்றும் ஈயம் போன்ற ரசாயனப் பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தியது. இதையே மத்திய சுற்றுச்சூழல் வாரியமும் தனது சோதனையில் உறுதி செய்து பாராளுமன்ற உயர்நிலைக்குழுவிற்குத் தெரிவித்தது.

‘நிலத்தடி நீர் என்பது அப்பகுதி மக்களுக்கு உரிமையானது. மாநில அரசும், அதன் நிர்வாகமும் இந்த அரிய செல்வத்தை பாதுகாப்பதில் பாதுகாவலர்களாக பணியாற்றுகிறது. அந்த நிலத்தடி நீரை, அதன் மீது உரிமையற்றோர், அதிகமாக உறிஞ்சுவதையும், அசுத்தமாக்குவதையும் அனுமதிக்க அரசு இடங்கொடுக்காது. அது மக்கள் நலனைக் காக்கும் ‘ என்றதொரு வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்ற உத்தரவை கேரளா உயர்நீதிமன்றம் வழங்கியது. இது இப்போராட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.

இந்திய பாராளுமன்ற உயர்நிலைக்குழு, பிளாச்சிமட கிராமத்தின் விவசாயம், விளைநிலங்கள் மற்றும் நிலத்தடிநீர் ஆகியவை பாதிக்கப்பட்டிருப்பதால், கேரள மாநில அரசு தலையிட்டு கிராம மக்கள் நலனைக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு, பாராளுமன்ற உயர்நிலைக்குழுவின் பரிந்துரைகள் ஆகியவைகளை கவனத்தில் கொண்டு கேரள அரசாங்கம் நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என கோகோ கோலா நிறுவனத்திற்கு பிப்ரவரி 17- 2004ல் தடைவிதித்தது.

2004 மார்ச் மாதம் பாலக்காடு மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு கோகோ கோலா நிறுவனம் நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்பதையும் கேரள அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இன்று வரை கோகோ கோலா நிறுவனம் பிளாச்சிமடாவில் இருந்து வெளியேறவில்லை. பிளாச்சிமடாவில் இருந்து கோகோ கோலா நிறுவனம் வெளியேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது. போராட்டத்தின் 1000 நாள் அன்று இயற்கை ஆர்வலர்கள் திருமதி. வந்தனா சிவா, மேதாபட்கர் மற்றும் பிரான்ஸின் திரு. அக்னேஸ் பெர்ட்ரன்ட், கனடாவின் திரு. டோனிகிளார்க், மத்திய பிரதேச கோகோ கோலா நிறுவன எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த அப்லாத்ட்னை¢ ஆகியோர் வந்திருந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். ‘கோகோ கோலா தொழிற்சாலையை மூடுவது ஒன்றுதான் எங்கள் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரும் வழி ‘ என்று போராட்ட இயக்கத்தின் தலைவி திருமதி மயிலம்மா அவர்களும், பேராட்டக்குழு மக்களும் தெரிவிக்கிறார்கள்.

பிளாச்சிமடாவின் போராட்டம் 27.9.2005 (இன்றோடு) 1230வது நாளை எட்டுகிறது. போராட்டக் குழுவிற்கு தங்களது ஆதரவினை தெரிவிக்க விரும்புவோர் neerajam2004@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

பிளாச்சிமடா கிராம மக்களின் வீரப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துவோம்!

—-

Series Navigation

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.