நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

பாவண்ணன்


சங்ககால அகத்துறைப் பாடல்களைப் படிக்கும் வாசகர்கள் அவற்றில் ஓர் ஆண் அல்லது பெண் அரற்றும் குரலைக் கேட்காமல் செல்வது சிரமம். எதைஎதையோ முன்வைத்தும் நடந்துபோன பழைய சம்பவங்கள் எதைஎதையோ முன்வைத்து உள்ளத்தில் ஊறும் தன் காதலைப் பலவாறாக வெளிப்படுத்தும் வரிகளிடையே திடாரென ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி எல்லா வரிகளையும் கவித்துவம் மிகுந்ததாக மாற்றிவிடும் மாயம் நிகழ்வதையும் காணமுடியும். அதுவே அக்கவிதையின் தனித்தன்மை. இன்றளவும் அக்கவிதைக்கு நிரந்தரத்தன்மையை வழங்கிக்கொண்டிருப்பவை அத்தகு பாய்ச்சல் வரிகளும் படிமங்களும் ஆகும். அவை தனிப்பட்ட ஓர் ஆண் அல்லது பெண்ணின் காதலைத் தாண்டி ஒட்டுமொத்தமான உலகக்காதலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வரிகளாக விளங்குகின்றன. உயர்திணை ஊமன்போல, முற்றா இளம்புல், தேம்பூங்கட்டி என்பவற்றைப் பாய்ச்சலை நிகழ்த்திய வரிகளாகச் சொல்ல முடியும். விக்ரமாதித்யனுடைய கவிதைகளில் நிரம்பியிருப்பவற்றை நவீன வாழ்வின் அரற்றல் அல்லது தன்னிரக்கம் மிகுந்த புலம்பல்கள் என்று வகைப்படுத்தலாம். அவற்றில் பல அரற்றல்களாக மட்டுமே எஞ்சிவிட, சில மட்டுமே தம் பாய்ச்சல் வரிகளின் இருப்பால் உயர்ந்த கவிதைகளாக மாறியிருக்கின்றன. பாய்ச்சல் வரி மிதந்துவந்து பொருந்தும்வரை காத்திருக்க முடியாமல் போவது விக்ரமாதித்யனுடைய பலவீனம்.

தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று ‘நிறமற்றவன் ‘. அரற்றும் குரல் இக்கவிதையிலும் அடியோட்டமாக ஒலிப்பதை வாசகர்கள் உணரமுடியும். அரற்றலின் இறுதியில் உருவாகும் நிறமற்றவன் என்னும் படிமம் கவிதையை நல்ல அனுபவ தளத்துக்கு நகர்த்திவிடுகிறது. வானம், வயல், பூ, மரம், ரத்தம் அனைத்துக்கும் ஒரு நிறமிருக்கிறது. இது ஒரு பக்கம். ‘ஏழு வர்ணங்களிலும் கொஞ்சம் திருடி எடுத்துக்கொண்ட இந்திர தனுசு ‘ இன்னொரு பக்கம். மூன்றாவது பக்கத்தில் இவன். கவிதையை வாசித்தபின் நம் மனத்தில் இயல்பாக எழும் காட்சி இப்படித்தான் இருக்கிறது. வெண்மையைத்தான் நிறமற்ற ஒன்றாக விஞ்ஞானம் அடையாளப்படுத்துகிறது. வெண்மையென்பது தனித்த நிறமல்ல. ஆனால் செம்புலப் பெயல்நீர்போல எந்த நிறத்துடனும் கலந்து இரண்டறச் சேர்ந்துவிடும் தன்மையை உடையது. எல்லா வண்ணங்களும் வெண்மையை விரும்பி ஏற்றுக்கொள்கிறது. வெண்மையின் வழியாக மட்டுமே எல்லா ஒளிக்கதிர்களும் புகுந்து செல்லமுடியும். சுதந்தரத்தை வழங்கிச் சுதந்தரத்தைப் பெறுகிறது வெண்மை. உலகியலில் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிறவன் அப்பாவி. உலகம் அவனை ஏமாற்றக்கூடும். ஆனால் உலகை அவன் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. இப்படி அடுக்கடுக்கான எண்ணங்கள் உருவானபடி உள்ளன. எல்லா நிறங்களிலும் கொஞ்சம் திருடி உருவான தனுசுவைத் தொட்டு நாண்பூட்டி இலக்கை வீழ்த்தியவனுக்கு வெற்றி காத்திருக்கிறது. தனுசு என்பதே வெற்றியின் அடையாளமாகப் பொலிகிறது. நிறமற்றவனுக்கு வெற்றி என்பதே இல்லை என்பதும் உணர்த்தப்படுகிறது. வெற்றிகள் இல்லையென்றாலும் அவன் சுதந்தரமானவன். நிறங்களை இணைத்துக்கொண்டவனுடைய வெற்றியும் நிறமற்றவனுடைய சுதந்தரமும் எதிர்வுகளாக மாறி நிற்கின்றன. சுதந்தரமா வெற்றியா என்கிற கேள்விக்கு நிறமற்றவன் சுதந்தரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அரற்றுவதைப்போன்ற தோற்றமுடன் கவிதை தொடங்கினாலும் உண்மையில் கவிதையில் பதிந்திருப்பது ஒருவித கம்பீரமான அறிவிப்புக்குரல். இதன் தொடர்ச்சியான இன்னொரு அறிவிப்பாக அமைந்துள்ள ‘இப்போது இந்த இடம் ‘ கவிதையும் நன்றாக எழுதப்பட்ட ஒன்று. இத்தகு சுதந்தரத்தில் திளைத்து மலரும் மனம் இருப்பதால்தான் சுடலைமாடன், முனீஸ்வரன், காத்தவராயன், கருப்பசாமி, சங்கிலிபூதத்தான் என எல்லாக் காவல் தெய்வங்களும் நேரில் தோன்றிப் பேசுகிறபோதும்கூட விகல்பமின்றி வரவேற்று, நலம்விசாரித்து, உற்சாகமாக உபசரித்து அனுப்பிவைக்க முடிகிறது. சுதந்தரவெளியில் தெய்வங்கள்கூட தோழர்களாக மாறிவிடுகிறார்கள் (சுடலைமாடன் வரை).

தொகுப்பின் மற்றொரு நல்ல கவிதை ‘வழியனுப்புதல் ‘. விக்ரமாதித்யன் தன் கவிதைப் பயணத்தின் தொடக்கத்தில் ‘பொருள்வயின் பிரிவு ‘ என்றொரு கவிதையை எழுதியவர். அதுவும் வழியனுப்பும் / விடைபெறும் ஒரு காட்சிச் சித்திரமே. இச்சித்திரத்தின் வெவ்வேறு கோணங்களை இத்தனை ஆண்டுகளில் அலுக்காமல் பலமுறை தீட்டித்தீட்டிப் பார்க்கிறார் விக்ரமாதித்யன். மீண்டும்மீண்டும் எழுதிப் பார்ப்பதன் அவசியமென்ன என்ற கேள்விக்கான விடை எளிதானது. ஒருவரை வழியனுப்புவதன் நோக்கமென்ன ? சாதித்து வா என்பதும் வெற்றிகண்டு திரும்பு என்பதன்றி வேறென்ன இருக்க முடியும் ? அபிமன்யுவை வழியனுப்பிய சுபத்ராவைப்பற்றியும் இராவணனை வழியனுப்பிய மண்டோதரியைப்பற்றியுமான குறிப்புகள் இக்கவிதையில் கூடுதலாக உள்ளன. இருவருமே வெற்றியைநோக்கி அனுப்பப்பட்டவர்கள். வெற்றிக்காக சிரத்தையுடன் இறுதேமுச்சுவரை போராடி களத்திலேயே பலியானவர்கள். கவிதையில் வழியனுப்பப்படுகிறவன் வெல்வதுமில்லை. வெற்றிக்காக சிரத்தையுடன் உழைத்தவனுமில்லை. நிறமற்றவனாகச் சுதந்தரவெளியில் திளைத்திருந்துவிட்டு வெற்றுக்கைகளுடன் மீண்டும் திரும்பி வந்தவன். திரும்பி வருவதுகூட மீண்டும் வழியனுப்பப்படுவதற்காகவோ என்ற எண்ணத் தோன்றுகிறது. ஒரு நாடகத்தின் காட்சியைப்போல இது மீண்டும் மீண்டும் நிகழவே செய்கிறது. ஒதுக்க முடியாத நம்பிக்கையின் ஊற்றை அடையாளப்படுத்துவதே இக்கவிதையின் சிறப்பம்சம். அது இந்தியப் பெண்களின் மனத்தில் இயல்பாக குடியேறியிருக்கிற நம்பிக்கையின் ஊற்று. அவள் ஏன் எந்தச் சாதனையுமின்றி வாசலில் வந்து இறங்கியவனை ஏற்றுக்கொண்டு போஷித்து மறுபடியும் ஏன் வழியனுப்புகிறாள் என்கிற கேள்விக்கான விடையில் எழுத முடியாத ஆயிரம் கவிதைகள் மறைந்துள்ளன. விக்ரமாதித்யனுடைய கவிதைகளை இப்படி ஒன்றுடன் ஒன்றை இணைத்துஇணைத்துப் படிக்கும்போதுதான் சில வெளிச்சங்களைக் கண்டறிய முடிகிறது.

‘வெறுமையில் ‘, ‘சுடலைமாடன் வரை ‘ ஆகியவற்றையும் நன்கு வந்துள்ள கவிதைகளாகச் சொல்லலாம். ஏனையவை அரற்றலாக மட்டுமே எஞ்சிப்போனவை.

(சுடலை மாடன் வரை..கவிதைகள். விக்ரமாதித்யன். சந்தியா பதிப்பகம், பிளாட் ஏ- நியூடெக் வைபவ் பிளாட்ஸ், 77 (பழைய எண் 57), 53 ஆம் தெரு, அசோக் நகர், சென்னை – 600 083. விலை ரூ.50. பக்கங்கள் 126)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்