நியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

காஞ்சனா தாமோதரன்


முன்குறிப்பு: கவிஞர் கே.சச்சிதானந்தனுக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. இவரை மலையாளத்தின் பாப்லோ நெரூடா என்பார் உண்டு. சச்சிதானந்தன் இல்லாத மலையாளக் கவிதையா, நிஸ்ஸிம் இஸக்கில் இல்லாத ஆங்கிலக் கவிதையா என்பாரும் உண்டு. மே 28,1946-இல் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., பி.எச்டி. பட்டங்கள் பெற்றுப் பேராசிரியராய்ப் பணியாற்றியவர். மலையாளத்திலும் ஆங்கிலத்திலுமாய் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதை மற்றும் விமரிசனப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கவிதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும், பிற அயல்தேச மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு விருதுகள் பெற்றவர். பல மலையாள இதழ்களுக்கும், சில ஹிந்தி/ஆங்கில இதழ்களுக்கும் ஆசிரியராய்ப் பணியாற்றியவர். தற்போது இந்தியச் சாகித்திய அகாதமியின் செயலராய்ப் பணியாற்றுகிறார். டெல்லியில் வசிக்கிறார்.

2003-ஆம் வருடம், செப்டெம்பர் 25,26,27-ஆம் நாட்களில், நியூயார்க்கில் நடந்த இந்திய இலக்கிய மாநாட்டு நிகழ்வுகளின் பரபரப்புக்கு நடுவே, இந்த உரையாடலுக்கென்று சிறிது நேரம் ஒதுக்கித் தந்த பேராசிரியர் கே. சச்சிதானந்தனுக்கு என் நன்றி. உடனிருந்த தமிழகச் சாகித்திய அகாதமிச் செயலர் பேராசிரியர் பாலாவுக்கும் நன்றி.

(கணினிக் கிருமி அழித்த இந்த நேர்காணலை மீண்டும் தட்டச்சு செய்து, உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்; தாமதத்திற்கு மன்னிக்கவும்.)

காஞ்சனா தாமோதரன்: நம்மிருவரின் தாய்மொழிகளுக்கும் இடையேயான உறவை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

கே.சச்சிதானந்தன்: தமிழ் என்பது செம்மொழி. மலையாளம் ஓர் இளம் மொழி–அதன் தற்கால வடிவம் ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளாய்ப் பிரயோகத்தில் இருந்துள்ளது. ஒரு கவிஞன் என்ற முறையில் நான் தமிழிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ‘ஆதி கவிகள் ‘ என்று தமிழைப் பற்றி எழுதியிருக்கிறேன். மலையாளம் என்பது பல மொழிகளின் கலவை; தமிழ், கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் பாரம்பரியங்களை அது உள்வாங்கியிருக்கிறது.

கா.தா.: இவ்வளவு இளமையான ஒரு மொழியின் செறிவும் குணாம்சமும் எப்படியிருக்கும் ?

கே.ச.: கவிதை இயற்றுவதைப் பொறுத்தவரை, இது ஒரு சுதந்திரத்தைத் தருகிறது. உங்களுக்குப் பரிச்சயமான திராவிட மொழி அம்சங்களை வேறுபட்ட அழுத்தங்களுடன் ஒரு மலையாளக் கவிஞர் கையாள முடிகிறது. ஆழ்மனதை நெகிழ வைக்கும் இசை அம்சத்தையும் அடிப்படை ஆன்மீகத்தையும் (மதம் அல்ல) சமஸ்கிருதப் பாரம்பரியத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது.

கா.தா.: இதை நீங்கள் குறையாக அல்லாமல் நிறையாகப் பார்க்கிறீர்கள் எனப் புரிந்து கொள்ளுகிறேன்.

கே.ச.: ஆமாம். உங்கள் தாய்மொழியான தமிழின் பாரம்பரியத்தை நீங்கள் பல காலகட்டங்களாகப் பிரிக்கலாம். அத்தனை காலகட்டங்களின் கனமான உள்ளடக்கத்துக்கு அருகில் கொஞ்சமாவது வருவதற்கு நாங்கள் ஐந்தே நூற்றாண்டுகளில் முயற்சி செய்ய வேண்டியிருந்திருக்கிறது. தமிழின் மிகச் செறிவான சிறப்பான சங்க இலக்கியப் பாரம்பரியம் எங்களுக்கு இல்லை. பக்திப் பிரதிகள் சில இருந்தாலும், தமிழின் பக்தி இலக்கியம் போன்ற விரிவும் ஆழமுமான பிரதிகளும் கிடையாது. இப்படியே இன்னும் பல. தமிழின் உயரத்தை நாங்கள் நிமிர்ந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

கா.தா.: மலையாள இலக்கிய வளர்ச்சி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

கே.ச.: இலக்கியம் இயற்றுதல் மற்றும் விவாதித்தல் ஆகியவற்றுக்கான ஒரு பொதுவெளியை உருவாக்கியதற்கான பெருமை சி.வி.ராமன் பிள்ளைக்கே சேரும் (19-ஆம் நூற்றாண்டு). இவர் தமிழிலக்கியப் பாரம்பரியத்திலிருந்து பல அம்சங்களை உள்வாங்கிக் கொண்டார். அவற்றின் மூலம் மலையாளத்தைப் பல அடுக்குள்ள செறிவான (richly textured) மொழியாகப் புதுக்கினார். ஓ.சந்திர மேனன் ‘இந்துலேகா ‘ என்னும் புரட்சிகரமான நாவலை எழுதினார்.

கா.தா.: அந்த நாவலின் புரட்சி மொழியிலா, வடிவத்திலா, உள்ளடக்கத்திலா, பிறிதிலா ?

கே.ச.: முக்கியமாக உள்ளடக்கத்தில். கதாநாயகி சுதந்திரமான சுயசிந்தனையுள்ள பெண். ஒரு நம்பூதிரிப் பிராமணக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட மறுத்து, நாயர் ஜாதியைச் சேர்ந்தவனைத் திருமணம் செய்து கொள்ளுகிறாள். தற்கால மதிப்பீடுகளை வைத்துப் பார்த்தால், இதிலென்ன புரட்சி எனத் தோன்றும். ஜாதீய அடுக்குகள் இறுகிக் கிடந்த அக்காலக் கேரளச் சமுதாயத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நாவல் அக்காலத்தின் மரபான பிராமணீய ஆதிக்கத்தை மறுதலித்து ஒதுக்குகிறது. கூடவே, ஒரு பெண்ணால் சமூக நியதிகளை எதிர்த்து, தன் வாழ்க்கைமுறையைத் தானே தேர்வு செய்ய இயலுமென்று சொல்லுகிறது.

கா.தா.: மலையாள உரைநடை தோன்றியது எப்போது ? நாவலும் சிறுகதையும் வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றினவா ?

கே.ச.: இரண்டுமே 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றின.

கா.தா.: மலையாளக் கவிதை பற்றிச் சொல்லுங்கள்.

கே.ச.: மலையாளக் கவிதை என்பது ஒரு சமூக இயக்கமாகவே நடந்துள்ளது. சமூக மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறது; எதிர்வினை ஆற்றியிருக்கிறது. மறுமலர்ச்சிக் காலகட்டம் என்று இப்போது அழைக்கப்படும் 1920-களிலும் 1930-களிலும், எல்லாச் சமூகங்களிலும் விழிப்புணர்வு தோன்றிற்று. உரிமைக்குரல்கள் ஓங்கி ஒலித்தன. கல்வியுரிமை, ஏழ்மை நீக்கம், பாலினச் சமத்துவம் மற்றும் சாதீயச் சமத்துவம் உள்ளிட்ட சமூகச் சமத்துவம் ஆகியன சமுதாயத்தின் முன்னணிப் பிரச்சினைகளாய்ப் பார்க்கப்பட்டன. எழுத்தாளர்களும் இதழ்களும் இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர். பெண் எழுத்தும் பெண்களுக்கான இதழ்களும் தோன்றின. ஒவ்வொரு ஜாதிக்குள்ளிருக்கும் உபஜாதிப் பிரிவினைகள் அகற்றப்பட்டன.

கா.தா.: இக்காலகட்டத்தின் முக்கிய இலக்கிய ஆளுமைகள், அவர்கள் பங்களிப்புகள் பற்றிச் சொல்ல முடியுமா ?

கே.ச.: எழுத்தச்சனுக்கு அடுத்து மலையாளத்தின் பெருங்கவிஞராக நான் கருதும் குமார ஆசான் இத்தகைய ஓர் ஆளுமை. இவர் பிற்படுத்தப்பட்ட ஈழவர் ஜாதியைச் சேர்ந்தவர். ஸ்ரீ நாராயண குருவின் சிந்தனைகளே இவருக்கு உந்துசக்தி. பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களுக்கு ஆலயப்பிரவேச உரிமை கோரி இவர் போராடினார். தமிழகத்துச் சித்தர் மரபின் வலுவான சிந்தனைகளை மலையாளத்துக்குக் கொணர்ந்தவர் இவரே. உபநிடதத்திலிருந்தும் தற்கால வாழ்க்கைக்கு ஏற்ற எண்ணங்களை இவர் பெற்றுக் கொண்டார்; ஏற்புடையது அல்ல எனக் கருதியவற்றை நிராகரிக்கவும் தயங்கவில்லை. கல்வி மூலம் தாழ்ந்த ஜாதியினரும் மையநீரோட்டத்தில் கலப்பதற்கு வழி செய்ததில் இவருக்குப் பங்குண்டு.

கா.தா.: அது நம் நாட்டுச் சுதந்திரப் போராட்டக் காலமும் கூட….

கே.ச.: ஆமாம். சுதந்திரப் போராட்ட காலத்தைப் பின்னணியாக வைத்துப் பார்த்தால், உங்கள் சுப்பிரமணிய பாரதிக்கு ஈடான மலையாளக் கவிஞராய் நான் கருதுவது வள்ளதோல் மேனனையே. இவர் திராவிட மொழி அம்சங்களை மட்டுமே தன் கவிதைகளில் பயன்படுத்தினார். இந்தியச் சமுதாயத்தின் உள்ளிருந்த அழுகல்களை விமரிசித்துச் சாடினார். அதே நேரத்தில், வெளியிலிருந்து வந்த காலனீய ஆதிக்கச் சக்திகளையும் முழுமூச்சுடன் எதிர்த்தார். (பாரதி கட்டுரைகள் பற்றி நீங்கள் எழுதியுள்ள விமரிசனத்தை வாசிக்க ஆவல்.)

கா.தா.: மலையாளக் கவிதையின் நவீனத்துவக் காலகட்டம் எப்போது துவங்கியது ?

கே.ச.: சங்கம்புழா கிருஷ்ண பிள்ளையுடன் கற்பனாவாதக் காலகட்டம் அதன் உச்சத்தை அடைந்தது. நவீனத்துவத்தின் துவக்கங்களை நான் இவரது எழுத்தில் காண்கிறேன். மனித இனத்தின் நிலை பற்றிய அதீதமான கவலையும், ஆழ்மதின் இருண்மையும் இருளும் இவர் எழுத்தில் தொனிக்கும். பி. குஞ்சு நாயர், வை. ஸ்ரீதர மேனன் மற்றும் இடச்சேரி கோவிந்தன் நாயர் ஆகியோரைக் கற்பனாவாதக் காலகட்டத்தையும் நவீனத்துவக் காலகட்டத்தையும் பிணைக்கும் இடைக்காலக் கவிஞர்களாக நான் பார்க்கிறேன்.

கா.தா.: மேற்கத்திய இலக்கியத்தில் நவீனத்துவக் காலகட்டம் என்று நாம் சொல்லுவது, அந்தந்தச் சமுதாயத்தின் அக்காலத்திய அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார மாற்றங்களுடன் பொருந்திப் போவது. மலையாள நவீனத்துவக் கவிதைகளுக்கு உந்துசக்தி முழுதும் உள்ளிருந்து வந்ததா ? அல்லது, மேற்கின் தாக்கம் ஏதும் உண்டா ?

கே.ச.: 1960-களின் ஐயப்பப் பணிக்கர் போன்றோர் கவிதை சொன்ன விதத்தில் டி.எஸ்.எலியட்டின் அமெரிக்கப் பாதிப்பு உண்டு. ஆனால், அவர் கையாண்ட கருப்பொருள்களும் கவலைகளும் அயலிலிருந்து இறக்குமதியானவை அல்ல. அவை மண்ணுக்குச் சொந்தமானவை. உதாரணமாக, அக்காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு பெரும் சமூக மாற்றம், கிராமத்திலிருந்து நகர்ப்புறத்துக்கு இடம்பெயர்தல். இது உருவாக்கும் தனிமையும் அந்நியமும் பற்றிக் கவிதைகள் பேசுகின்றன.

கா.தா.: உங்கள் கவிதை ஆர்வம் பற்றிச் சொல்லுங்கள்.

கே.ச.: நான் பதின்மூன்று வயதில் எழுத ஆரம்பித்தேன்….

கா.தா.: உங்கள் முதல் கவிதை நினைவிருக்கிறதா ?

கே.ச.: (புன்சிரிப்புடன்) மனிதரின் நிலையாமை பற்றியது.

கா.தா.: பதின்மூன்று வயதிலா ? அப்போது உங்கள் சூழல் எப்படிப்பட்டதாய் இருந்தது ?

கே.ச.: ஏன், நம்ப முடியவில்லையா ? குமார ஆசான் மற்றும் ரஷ்ய இலக்கியவாதிகளின் தாக்கம் அப்போதே என் மேல் படிய ஆரம்பித்திருந்தது. எங்கள் கிராமத்து நூலகத்தில் கிடைக்கும் இவர்களது புத்தகங்கள் அனைத்தையும் நான் விடாமல் வாசிப்பேன். என் எழுத்தை இந்த வாசிப்பு பாதித்திருக்கக் கூடும். எனக்கு இருபது வயதாவதற்குள் கவிஞனாய் அங்கீகரிக்கப்பட்டேன்.

கா.தா.: மலையாளக் கவிதையும் நீங்களும் சேர்ந்து வளர்ந்தது பற்றிச் சொல்லுங்கள்.

கே.ச.: 1970-களில் மலையாளக் கவிதையில் இன்னுமொரு மாற்றம் ஏற்பட்டது. நவீனத்துவ அம்சங்களைக் கொண்டிருந்தாலும், பரந்த சமூகப் பார்வையுடைதாய் விரிந்தது. இதற்கான உந்துசக்தி சூழலிலிருந்து வந்தது. பழைய காம்யூனிஸ்ட் இயக்கம் தனது வீரியத்தை இழந்து கொண்டிருந்ததாய் என் போன்ற இளைஞர்கள் உணர்ந்தோம். ‘அநீதிக்கு எதிரே கலகம் செய் ‘ என்னும் கொள்கையுடன், நாங்கள் அந்த இயக்கத்தை இந்தியப் பிரச்சினைகளை நோக்கித் திருப்பி, தூய்மையான புரட்சி மனப்பான்மையை மீட்க முயன்றோம்.

கா.தா.: உங்கள் இளைஞர் இயக்கத்தைச் சமூகமும் பிற இயக்கங்களும் எப்படி எதிர்கொண்டன ?

கே.ச.: மரபான இடதுசாரிகள் எங்களைக் கண்டனம் செய்தார்கள். வலதுசாரிகள் பற்றிக் கேட்கவே வேண்டாமே! 1980-களின் கவிதை இன்னும் உரத்த சமூக இயக்கக் குரல் கொண்டதானது. அதே சமயத்தில், பிரதேசம் சார்ந்த வேர்மதிப்பீடுகளை நோக்கித் திரும்புவதும் நிகழ்ந்தது. சடங்குக்கும் சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்காது, மதமென்று சொல்லப்படுவதன் சரியான அர்த்தத்தை உணர்ந்து கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு பிரபஞ்ச சக்தியுடன் இணையும் முயற்சி இது. இன்றிருக்கும் அதீதமான மதரீதியான உணர்வுகளுக்கு நேர் எதிரானது இது.

கா.தா.: சற்று விரிவாகச் சொல்ல முடியுமா ?

கே.ச.: இன்று, தீவிர ஹிந்துத்துவ சக்திகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கேரளச் சமூகத்தில் தத்தம் நசிவுத் தடங்களைப் பதித்திருக்கிறார்கள். விளைவாக, வன்முறை தலைதூக்குகிறது. இது ஆன்மீகவாத மதம் பற்றியது அல்ல. இது அரசியல். அதிகாரத்தைப் பங்கு போடப் பேரம் பேசும் அரசியல். இன்றைய மலையாளக் கவிதை தன் எதிர்வினையைப் பதிவு செய்வது இயல்புதானே! இன்றைய கவிதை எந்தக் கொள்கைச் சாய்மானமும் இல்லாதது. தனிமனிதரையே தன் அடிப்படை அலகாகக் கொண்டது.

கா.தா.: வழமையான ஒரு கேள்வி–இன்றைய முக்கியக் கவிஞர்களாக நீங்கள் கருதுபவர்கள் ?

கே.ச.: ஆண்களும் பெண்களுமாய், குறைந்தது இருபது பேராவது நல்ல கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டுக்குப் பின், தனித்துவத்துடன் மேலெழும் குரல் என்று ஒரு பெயரை மட்டும் என்னால் சுட்டிக்காட்ட இயலவில்லை. பெண்ணியவாதக் கவிஞர்கள் இருக்கிறார்கள். போரை எதிர்க்கும் கவிஞர்கள் இருக்கிறார்கள். உலகமயமாயதலை எதிர்க்கும் கவிஞர்கள் இருக்கிறார்கள். பன்மையான குரல்கள்.

கா.தா.: பின் நவீனத்துவம் பற்றித் தமிழக இலக்கியவாதிகளிடையே வேறுபட்ட பார்வைகள் இருக்கின்றன; பல்வேறு பரிசோதனை முயற்சிகளும் நடந்து வருகின்றன. மலையாள இலக்கியத்தில் பின் நவீனத்துவக் காலகட்டம் என்று தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒன்று உண்டா ?

கே.ச.: பல சமயங்களில், பின் நவீனத்துவத்துக்கான வாதங்களை முன்வைப்பவர்கள் விமரிசகர்கள்தாம். அது மேற்கத்தியப் பின் நவீனத்துவமாக இருக்க முடியாது. பால் சக்கரியா, என்.எஸ்.மாதவன் போன்ற மிகச் சிறந்த எழுத்தாளர்கள் எங்கள் மொழியில் இருக்கிறார்கள். இன்னும் இருபது பெயர்களை என்னால் சொல்ல முடியும். பல்வேறு புதிய திசைகளும் பார்வைகளும் திறந்து கலந்து மாறும் காலம் இது. உயிர்த்துடிப்பு நிறைந்த காலம்.

கா.தா.: பேச்சுச் சுவாரசியத்தில் நான் தவற விட்ட இழையை மீண்டும் பிடிக்க முயலுகிறேன். மலையாளச் சமூகம்/கவிதை வளர்ச்சிக்கு இணையாக, கவிஞரென்ற முறையில் உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். 1970-களில் உங்களது இளைஞர் இயக்கம் பற்றிச் சொன்னீர்கள். பிறகு ?

கே.ச.: 1970-களில், மாவோயிஸ இயக்கம் பிளவுபட்ட போது என்னுள்ளும் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது. தனிப்பட்ட கொள்கைச் சாய்மானம் என்பதிலிருந்து விலகல் ஏற்பட்டது. சுற்றுச்சூழல் முதலியன பற்றி இன்னும் எழுதி வருகிறேன். ஆனால், பல கவிதைகளும் உள்நோக்கியவையாய் அமைவதை உணருகிறேன். கேரளத்திலிருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்தது கூட இம்மாற்றத்துக்குப் பங்களிப்புச் செய்திருக்கலாம். இப்போது, என் பிறந்த மண்ணின் நிகழ்வுகளை ஒரு தொலைவுடன் காணும் பக்குவம் வந்திருக்கிறது. தற்போது பக்தி இயக்கத்தையும் இலக்கியத்தையும் என்னுடைய தளத்தில் அர்த்தப்படுத்த முயன்று கொண்டிருக்கிறேன். ஆனால், நிறுவனமயப்பட்ட மதத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.

கா.தா.: இன்னும் கொஞ்சம் விரிவாக….

கே.ச.: எனக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவை நான் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நம் மூதாதையர் தேடிய, நம் விஞ்ஞானிகள் தேடும் அந்த ‘அசலான கண ‘த்துக்கான தேடல் இது. இது எந்த நிறுவனமயப்பட்ட மதத்திலும், எந்த விஞ்ஞானக் கோட்பாட்டிலும் தொலைந்து விடக்கூடாது என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன். ஒவ்வோர் உயிரும் ஒரு பூரணத்தின் பகுதியாக, பிறவற்றுடன் ஒத்திசைந்து வாழும் சாரத்துக்கான தேடலையும் அதற்கான விவாதக் களத்தையும் நாம் உருவாக்க வேண்டும். இத்தேடலில் ஒரு சுதந்திரம் இருக்கிறது.

கா.தா.: உங்கள் இளவயது இடதுசாரிக் கொள்கையின் இயல்பான பரிணாம வளர்ச்சியாக இதை நீங்கள் பார்க்கிறீர்களா ? அல்லது முற்றிலும் புதிதான மாற்றமாகவா ?

கே.ச.: மார்க்ஸீயத்தில் ஓர் ஆன்மீக வெளி பற்றி மார்க்ஸ் சிந்தித்திருக்கிறார் என்பதும் உண்மைதான். அடிப்படையில் வன்முறையில்லாத வழியை நான் நாடுகிறேன்; மனிதருக்கு மட்டுமல்ல, வாழும் எந்த உயிருக்கும் சுற்றுச்சூழலுக்குமான வன்முறையை நான் அடியோடு ஒதுக்குகிறேன். காந்தியை நிகழ்காலத்துக்கு மீட்க வேண்டியிருக்கிறது.

கா.தா.: காந்தியைப் பற்றிப் பல்வகை விமரிசனங்கள், பல்வேறு கோணங்களிலிருந்தும் முன்வைக்கப்படும் காலம் இது. உங்கள் பார்வை ?

கே.ச.: காந்தியின் இறுதி நாட்களை நாம் ஆழமாய் நினைத்துப் பார்க்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட காந்தி, தூர எறியப்பட்ட காந்தி என்று எத்தனை காந்திகள்! நிபந்தனையற்ற ஏற்பாக இல்லாமல், ஒரு கறாரான விமரிசனப் பார்வையுடன் நாம் காந்தியை மீள்கண்டுபிடிப்புச் செய்யத் தேவை இன்று உள்ளது.

****

‘இவ்வருடம் வசந்தம் எப்படி வந்தது ‘

கவிதை: கே.சச்சிதானந்தன்

அது இடியல்ல.

நமது போர்க்குதிரைகள் திரும்புகின்றன

கழுகுகள் நூற்கும் வானவில்களின் கீழே

ஒவ்வொரு குதிரை மேலும் பிணைக்கப்பட்டிருப்பது

ஒரு போர்வீரன்: தலையற்ற முண்டமாய்.

சில குதிரைகள் சுமக்கும்

குருதி தோய்ந்த பொதிகளில்

கட்டைவிரல்களும் குறிகளும்.

இதுதான் இறுதிப் போர்.

இனி நமது எண்ணங்களுக்கும் வரியுண்டு

நம் மூச்சுகளில் ஒவ்வொன்றும்

நம் ஆதிக்கவானுக்குத் துதிப் பாடல்

நமது படுக்கையறைகளில் அயல்மொழிகள்

எதிரொலிக்கக் கேட்போம் நாம்.

நம் குழந்தைகள் அனைவரும்

வெற்றி கொண்ட அவன் போலிருப்பார்கள்

ஆண்மையற்ற தம் தந்தைமார் பற்றிய

அவமானத்துடன் வளருவார்கள்.

அவமானம் யாரையும் கொல்வதில்லை

எனவே

நாமும் தொடர்ந்து வாழ்ந்திருப்போம்

நாவற்ற குயிலுடன்

மனிதக்குரங்கு நகரத்தில்

நிறமற்ற வசந்தத்தில்

நுகத்தடிக் காளைகளாய்–

நாளை இல்லாத இடத்தில்.

(மூலம்: அமெரிக்காவின் ‘பல மலைகள் நகருகின்றன ‘ சமூகக் கலாச்சார இலக்கிய இதழ்,

தொகுப்பு 1, இதழ் 3

மலையாளத்திலிருந்து ஆங்கில மொழியாக்கம்: கே. சச்சிதானந்தன்

ஆங்கிலவழித் தமிழாக்கம்: காஞ்சனா தாமோதரன்)

—-

KanchanaThamo@aol.com

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்