நினைவுகளின் தடத்தில் – (3)

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

வெங்கட் சாமிநாதன்



எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே, நான் பாட்டியை விதவைக் கோலத்தில் தான் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் பாட்டி இருப்பாள், அது தான் பாட்டி என்று எனக்குள் நினைத்திருப்பேன். ஏதும் வேறு விதமாக, ஏன் பாட்டி இத்தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போது அது பற்றி என் சிந்தனைகள் சென்றதில்லை. பின்னாட்களில், கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு, பாட்டியின் வைதவ்ய கோலம் மிகப் பெரிய சோகமாக நினைப்புகளில் கவிழும். அவ்வப்போது பாட்டி தன் மனம் நொந்து போன வேளைகளில் தனக்குள் சொல்லிக்கொள்வாள். தனக்கு விதிக்கப்பட்ட விதியை எண்ணி, இப்போது வாழும் வறுமையை எண்ணி. ‘ஒண்ணா ரெண்டா, ஒண்ணொணா குழிலேண்ணாடா போட்டேன்” என்று சொல்லிச் சொல்லி புலம்புவாள், மாய்ந்து போவாள். மாமாவுக்கு அடுத்து என் அம்மா, பின் ஒரு பெரிய இடைவெளி. கடைசிகுழந்தை என் சின்ன மாமா. என் அம்மாவுக்கும் சின்ன மாமாவுக்கு இடையே பிறந்த குழந்தைகள் குழந்தைகளாகவே இறந்து விட்டன. அதைத் தான் நினைத்து நினைத்து பாட்டி புலம்பிக் கொண்டிருப்பாள்.

மாமா கும்பகோணம் காலேஜில் FA பரிட்சை எழுதப் போயிருக்கிறார். தாத்தா இங்கு சுவாமி மலையில் இறந்து விட்டார்,. உடனே கூட்டிக்கொண்டு வா என்று காலேஜுக்கு ஆள் அனுப்பி, மாமா வந்தவர் தான். பின் படிப்பைத் தொடரும் வசதி இல்லை. இதெல்லாம் பாட்டி அவ்வப்போது தன் விதியை நொந்து புலம்பும் போது சொன்ன விவரங்கள். படிப்பை நிறுத்திய பிறகு, குடும்பம் எப்படி நடந்தது, ஆசிரியப் பயிற்சி மாமா பெற்றது எங்கே, எப்படி, என்பதெல்லாம் தெரியாது. தாத்தாவின் மறைவிற்குப் பிறகு குடும்பம் எப்படி நடந்தது என்பதும் தெரியவில்லை. மறைந்த தாத்தாவுக்கு உடன் பிறந்தவர்கள் ஆணோ, பெண்ணோ யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. விவரம் தெரிந்த பிறகு, உமையாள்புரம், பாபுராஜபுரம், சுவாமி மலை என்று அடுத்தடுத்து இருக்கும் ஊர்களில், தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒன்று விட்ட சகோதரர்கள், சகோதரிகள் என்று தான் இருந்தார்கள். அவரவர் குடும்பம், வாழ்க்கை அவரவர்க்கு என்றாகியிருக்க வேண்டும். மாமா பிறந்த வருடம் 1910. அவர் FA பரிட்சை எழுதிக் கொண்டிருந்த போது தாத்தா இறந்தார் என்றால், அனேகமாக அது 1927-28 வருட வாக்கில் இருக்க வேண்டும்.

ஆசிரியப் பயிற்சி பெற்று மாமா பெற்ற முதல் உத்தியோகம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக. 60-வது வயதில் ஓய்வு பெற்றதும் அப்பள்ளியிலிருந்து தான். மாமாவின் ஆசிரிய சேவைக்குக் கிடைத்த ஒரே அங்கீகாரம், அரசு தரப்பிலிருந்து, ராஷ்டிரபதி வழங்கும் சிறந்த ஆசிரியர் விருது. அந்த விருது வாங்க மாமா தில்லி வந்திருந்தார், 1969-ம் வருடம். என்று என் நினைப்பு. மாமா பள்ளிக்கூட வாத்தியார். நான் நிலக்கொட்டை சௌராஷ்டிரா உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் போது மாமா ஏழாம் வகுப்பு ஆசிரியர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் வாங்கிய சம்பளம் ரூ 25 அணா 4. அனேகம் மற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் ரு 19 ஆக இருந்தது. இடைநிலையில் பலர் இருந்தனர். வீட்டு வாடகை நான் அங்கிருந்த கடைசி வருடங்களில் (1945-46) ரூ 6. மிகுந்த பணத்தில் தான், மாமா எங்கள் எல்லோரையும் சம்ரக்ஷ¢த்தார். நாங்கள் மாமா. மாமி, இரண்டு குழந்தைகள், நான், சின்ன மாமா பின் பாட்டி, ஆக மொத்தம் ஏழு பேர் மிகுந்த 19 ருபாயில் தான் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. பாட்டி எப்போதும் மாமாவிடம் புகார் செய்து கொண்டிருப்பாள். மாமாவுக்கு பதில் சொல்ல ஏதும் இராது. ‘நான் என்னதான் செய்யறது சொல்லேம்மா’ என்று தன் இயலாமையில் கதறுவார். நான் மாமாவை அறிந்த நாட்களில், அவர் முகம் மலர்ந்து பார்த்ததில்லை. பள்ளிக்கூடத்திற்கு நான் மேல்சட்டையில்லாமல் போன நாட்களும் உண்டு. மாமா ஆசிரியர் ஆதலால், எனக்கு சம்பளம் கிடையாது. புத்தகங்களும் விலைக்கு வாங்க வேண்டாம். ஆனால் சிலேட் நோட்புக் எல்லாம் வாங்கித் தான் ஆகவேண்டும்.

நான் மாமா பற்றியும், அம்மா பாட்டி பற்றியும் தான் எழுதிவருகிறேன். ஏனெனில், அந்த வயதில் அந்நாட்களில் நான் அறிந்தவர்கள் மாமாவும் பாட்டியும் தான். முதலில் தெரிந்த ஊர், மதுரை ஜில்லாவின் ஒரு சின்ன ஊரான நிலக்கோட்டை தான். இப்போது அது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும். நான் படித்த காலத்தில் மதராஸ் மாகாணத்தில் மொத்தம் எட்டு ஜில்லாக்கள் தாம். இப்போது நாம் வாழ்வது தமிழ் நாடு சரித்திரத்தின் பொற்காலம் என்று சொல்லப்படுவதால், அத்தகைய வளத்தில் 27-ஓ 28-ஓ மாவட்டங்களாக தமிழ் நாடு வளம் பெற்றுள்ளது. நிலக்கோட்டையில் இருந்த காலத்தில் என் பெற்றோர்கள், நிலக்கொட்டையில் இருக்கும் மாமாவும் பாட்டியும் இல்லை, அவர்கள் தஞ்சை ஜில்லாவின் ஒரு குக்கிராமத்தில், உடையாளுரில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிய வந்தது, எனக்கு ஏழோ எட்டோ வயதிருக்கும் போது, எனக்கு பூணூல் போடவேண்டுமென்று மாமா எல்லோரையும் உடையாளுருக்கு அழைத்துச் சென்றார். அப்போது தான் உடையாளூரிலிருக்கும் என் அப்பா அம்மா, ஒரு தங்கை எல்லோரையும் தெரிந்து கொண்டேன்.

நான் குழந்தையாக இருந்த போதே பாட்டி என்னைத் தன்னோடு அழைத்துக்கொண்டு நிலக்கோட்டைக்கு வந்து விட்டாள். மாமாவும் பாட்டியும் தான் என்னை வளர்த்தார்கள். படிக்க வைத்தார்கள். பாட்டியை நான் அம்மா என்று தான் கூப்பிடுவேன். ஏனெனெல், வீட்டில் எல்லோரும், மாமா, மாமி, சின்ன மாமா எல்லோரும் பாட்டியை அம்மா என்று தானே கூப்பிடுவார்கள். பூணூல் போட உடையாளூருக்கு அழைத்துச் சென்றபோது, அம்மாவை அம்மா என்று அழைக்க எனக்கு வரவில்லை. இயல்பாக இல்லை. பாட்டிதானே எனக்கு அம்மா.

பாட்டிக்கு நான் மிகவும் செல்லம். தன் பிள்ளைகள் இருவரில், சின்ன மாமாவிடம் பாட்டிக்கு மிருந்த கரிசனம். சின்ன மாமா என்ன செய்தாலும் பரிந்து பேசுவாள். இடி படுவது மாமா தான். அவர் எதற்குத் தான் பதில் சொல்வார், எதைத்தான், எப்படித்தான் சமாளிப்பார், என்பதெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனம் மிகவும் நொந்து போகிறது. அவருக்கு எல்லாப் பக்கங்களிலும் இடி. அவர் சாது. அதே சமயம் முன் கோபியும் கூட. இப்போது நினத்துப் பார்க்கும் போது, அவருக்கு இருக்கும் வேதனைகள் போதாதென, நானும் அவரை மிகவும் வருத்தியிருக்கிறேன்.

பாட்டிக்குத் தெரிந்த, கிடைத்த மன நிம்மதி தரும் பொழுது போக்கு சினிமா தான். அதுவும் டூரிங் டாக்கீஸ் முகாமிடும் மூன்று மாத காலம். அதிலும் வருவது புராணப்படமாக இருந்தால். நிலக்கோட்டையில் ஒரு பிராமண விதவைக்கு வேறு ஏது போக்கிடம்? கதா காலட்சேபமா, பஜனையா, ஏதும் இல்லை. எந்த சுப காரியங்களிலும் பாட்டிக்கு இடம் இல்லை. பெண்கள் கூடிப் பேசும் வழக்கம் இன்னும் வரவில்லை. வந்தாலும், பாட்டி அந்த வயதைத் தாண்டியவள். புராணக் கதைகள் சொல்லும் தமிழ் படங்கள் தான் பாட்டியின் பக்தி சிந்தனை அறிந்த ஒரே மார்க்கம். நான் பாட்டிக்குச் செல்லமாதலால் என்னையும் சினிமாவுக்கு பழக்கி விட்டு விட்டாள். நாடகங்களும் அப்படித்தான். எத்தனையோ பாய்ஸ் கம்பெனிகள், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்று ஒரு பெயர் நினைவில் தங்கியிருக்கிறது. அது தவிர சில சமயம் ஸ்பெஷல் நாடகங்கள் என்று வேறு போடுவார்கள். அக்கால சூப்பர் ஸ்டார்கள் சிறப்பு வருகை தருவார்கள். V.A. செல்லப்பா என்று தான் நினைக்கிறேன்.அல்ல்து V.S செல்லப்பாவா, தெரியவில்லை. பின் எஸ். பி. தனலெக்ஷமி என்று ஞாபகம். இவர்கள் ஸ்பெஷல் நாடகங்கள் நடக்கும். எல்லாம் வீட்டுக்கு எதிரிலேயே, நிலக்கோட்டை- பெரியகுளம் ரோடுக்கு ஒரு புறம் சினிமா கொட்டகை. மறுபுறம் எங்கள் வீடு. அந்த நாடகங்களிலும் வள்ளியும், முருகனும், தெய்வயானையும் வருவார்களாதலால், பாட்டி அவற்றையும் பார்த்து விடுவாள். செல்லப்பா- தனலக்ஷ¢மி ஜோடி மிகப் பிராபல்யம் பெற்ற ஜோடி. நன்றாக பாடுவார்கள். என்ன நாடகம் என்று சொல்லி விட்டாள் போதும். கதை தெரியும். பாத்திரங்கள் தெரியும். வசனங்கள் அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் கற்பனை செய்து பேசிவிடுவார்கள். பாட்டுக்களும் தெரிந்தது தான். அவர்களுக்கு எந்த ஒத்திகையும் தேவையில்லை. எந்த நாடகத்தில், எந்த சந்தர்ப்பத்தில் எந்த பாட்டு என்பதெல்லாம் ஏதும் கட்டுப்பாடுகள் கிடையாது. ஜனங்கள் கேட்டு ரசித்த எந்தப் பாட்டானாலும், எந்த நாடகமானாலும், பாடிவிடுவார்கள். கைதட்டலும் பெற்று விடுவார்கள்.

ஒரு சமயம் சிவராத்திரி அன்று இரவு முழுதும் விழித்திருக்க ஏதுவாக ஒரு படம் போட்டார்கள். படத்தின் பெயர் ஞாபகமில்லை. ஒரே பாட்டாக இருந்ததால், வேடிக்கையாக இருந்தது. வேடிக்கையாக இருந்ததால், பாட்டுக்களை எண்ண ஆரம்பித்தேன். 45-46 பாட்டுக்களை எண்ணியதாக ஞாபகம். இதற்கிடையில். ஒரு சீன் முடிந்து இன்னொரு சீன் ஆரம்பிக்கும் முன் திரை விழும் அந்நாட்களில். அப்போதெல்லாம். அந்த சிவராத்திரி தினத்திற்கென்று ஒரு டான்ஸ் ஷோவும் ஏற்பாடாகியிருந்தது. ஒரு பெண் பாவாடையும், குட்டையான சட்டையும் அணிந்து, லம்பாடிப் பெண் போன்ற தோற்றத்தில் ஒரு டோலக்கோ தம்பொரீனோ என்னவோ ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதை மற்றொரு கையால் தட்டியோ, அல்லது ஆடிக்கொண்டே தொடையில் அல்லது தூக்கிய முட்டியில் அடித்தோ சல் சல் என்ற தாள சப்தமெழுப்பிக்கொண்டு ஆடினாள். சிவராத்திரிக்கு சிவனின் நாமத்தை இரவு முழுதும் ஜபிக்க இதுதான் சரியான வழியென்று நினைத்தார்களோ என்னவோ. இம்மாதிரியான மசாலாக்கள் சேர்த்து மக்களுக்குக் கலைத்தொண்டும் ஆற்றி அத்தோடு பக்தி பாவத்தையும் இணைத்துவிடும் சாமர்த்தியம் அன்று ஒருவருக்கு அந்த சினிமாக் கொட்டகை முதலாளிக்கு இருந்தது.

ஒரு சமயம் ஒரு ஸ்பெஷல் ஷோவுக்கு வரவிருந்த ஒரு நல்ல அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற பாடகர்/நடிகர் வரவில்லை. ‘நான் இல்லாமல் நீ எப்படி நாடகம் போடப்போகிறாய், பார்த்துவிடுகிறேன்” என்று கருவிக்கொண்டு கழுத்தறுத்தாரோ என்னவோ. இன்னொருவரை உடன் எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வந்துவிட்டார் நாடக சபா முதலாளி. புதிதாக வந்தவர் எமகாதகர். கறுப்பும் ஒல்லியுமான சரீரம். ஆனால் சாரீரமல்லவா நாடகத்திற்குத் தேவை. தினம் ஒரு பாத்திரம், சில சமயம் ஒன்றுக்கு மேல். எந்தப் பாட்டு, எந்த நாடகத்திற்கான பாட்டு என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை. கருவிக்கொண்டு போன ஸ்டார் கருவிக்கொண்டு போனது நல்லதாயிற்று. இந்த புதிய கறுப்பு ஒல்லி வித்வான் தன் பாட்டால், சாரீரத்தால் எல்லோரையும் மயக்கி விட்டான்,. எத்தகைய திறன்களெல்லாம் அந்நாட்களில் எந்த பட்டி தொட்டிகளில் எல்லாம் காணக் கிடைத்தன என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அதோடு கொஞ்சம் துக்கமாகவும் இருக்கிறது. அவர்கள் பிறந்த, காலம் அவர்களை அப்படி ஆக்கிவிட்டிருந்தது. இப்போதோ அவர்கள் எவ்வளவு லக்ஷக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டு, தமிழ் நாடு முழுதும் எவ்வளவு பிரபலமாகியிருப்பார்கள் என்று எண்ணித் திகைக்கத் தோன்றுகிறது. சம்பாத்தியமும் பிராபல்யமும் கிடைத்திருக்கலாம். ஆனால் இதைப் பெற அவர்கள் அன்று பெற்றிருந்த சங்கீதத் திறனைக் கொண்டவர்களாக இன்றிருந்திருப்பார்களா என்று நினைத்தால், பதில் அவ்வளவு சுலபமும் இல்லை. கிடைக்கும் பதில் மகிழ்ச்சி தருவதாகவும் இராது என்று தான் எண்ணுகிறேன்.

வெங்கட் சாமிநாதன்/6.7.07


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்