வெங்கட் சாமிநாதன்
ஆனால் என் கும்பகோண ஸ்தல சஞ்சாரங்கள் எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டே இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அரசலாற்றைத் தாண்டி கும்பகோணம் எல்லையில் கால் வைத்ததும் நேராகப் போகும் சாலை யின் வலது பக்கம் கிளைவிடும் சந்து பொந்துகளுக்குள் தான் நான் தினம் வழிமாற்றி கும்பகோண நகர் பயண ஆராய்ச்சிகளைத் தொடரமுடியும். ஏனெனில் நான் காலை 9.30 மணிக்குள் போய்ச்சேர வேண்டிய பாணாதுரைப் பள்ளி சுமார் ஒரு மைல் தூரம் வடகிழக்கே இருந்தது. ஆகவே நான் அந்த சாலைக்கு இடது பக்க கிளைகளில் நடை போட முடியாது. நான் சொன்ன பிள்ளையார் கோயில் தெரு, சௌராஷ்டிரா தெருக்கள், விஜய லக்ஷ்மி டாக்கீஸ், காவேரி பத்திரிகை அலுவலகம் எல்லாம் பள்ளி செல்லும் வழியில் நேர் சாலைக்கு வலது பக்கமாகக் கிளை பிரியும் தெருக்களில் இருந்தன. காலையில் நேராக பள்ளிக்கும் மாலையில் நேராக உடையாளூருக்கும் நடை போட வேண்டும். காலையில் இடது பக்கமாகவும், மாலையில் வலது பக்கமாகவும் நான் ஊர் சுற்ற முடியாது.
அப்பா சிலசமயம் அவருக்கு வேண்டியது சிலதை கும்பகோணத்திலிருந்து வாங்கி வரச் சொல்லுவார். இப்போது எனக்கு ஞாபகம் இருப்பது அவர் உபயோகிக்கும் லை·ப் பாய் சோப். அதைத்தான் காலம் காலமாக உபயோகித்து வந்தார். நான் தினம் கும்பகோணம் போவது அவருக்கு ஒரு விதத்தில் சௌகரியமாகிப் போயிருந்தது.. அவர் சொல்லும் கடையில் தான் வாங்கவேண்டும். “டௌன் ஹைஸ்கூல் இருக்கா இல்லியா? அதோட ஒட்டி கொஞ்சம் தள்ளி காந்தி பார்க்கப் பாத்துண்டு வந்தேன்னு வச்சுக்கோ, அதே சாரிலே முனையிலே ஒரு கடை இருக்கு. அங்க தான் லை·ப் பாய் சோப் அஞ்சே காலணாவுக்கு தருவான். எங்கே வாங்கினா என்னன்னு நீ உன் புத்திசாலித்தனத்தைக் காட்டாதே. மத்த கடையிலே எல்லாம் அஞ்சரை அணா கேப்பான். என்ன புரிஞ்சதா?” என்று கடுமையாக எச்சரித்து அஞ்சே கால் அணா காசு கொடுப்பார். அவருக்குத் தேவையானது இன்னொன்று 501 பார் சோப். அப்பா சோப் என்று அதைச் சொல்லமாட்டார். சவுக்காரம்னு தான் சொல்வார். இப்போ சவுக்காரம் என்ற சொல்லே வழக்கொழிந்துவிட்டது போலிருக்கு. அது துணி துவைக்க. வெள்ளை வெளேர்னு தும்பைப் பூவாக இருக்கும் அவர் உடைகள். அவர் போல அந்த தும்பைப் பூ வெள்ளையில் யாரும் உடையணிந்து நான் உடையாளூரில் பார்த்ததில்லை. துணி துவைக்க அவர் அளவுக்கு அதிகமாக நேரமும் சிரமமும் எடுத்துக்கொள்வார். பஞ்ச கச்சமாக பத்து முழ வேட்டியும் ஒரு துண்டும் தான் அவருக்குத் தேவை. கும்பகோணம் தஞ்சாவூர் போனாலும் அது போதும். பின்னாட்களில் அவர் சென்னைக்கு வர நேரிட்டால் தான் சட்டை போட்டுக்கொளவதைப் பார்த்திருக்கிறேன். எதற்காக இவ்வளவும் சொல்கிறேன் என்றால், ஒரு பொருள் வாங்குவதில் காலணா மிச்சம் பிடிக்க முடியும் என்றால் அதைச் செய்வார். காலணா என்றால், அந்நாட்களில் அறுபத்து காலணாக்கள் கொண்டது ஒரு ரூபாய். அப்படித் தான் ஒவ்வொரு பைசாவையும் கவனத்தோடு செலவழிக்கும் நிலையில் தான் அப்பா இருந்தார். அந்த நிலையிலும் சிறப்பாக, நேர்த்தியாக வாழவேண்டும் என்று நினைப்பவர். அவர் வார்த்தையில், “எதானாலும் நறுவிசா இருக்க வேண்டாமாடா?” ‘நறுவிசு’ என்பது அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை. ‘to perfection’ என்று அதற்கு அர்த்தம். அதன் மூல உருவம் என்ன, அது எப்படி தேய்ந்தோ, மறுவியோ, உருமாறி, இந்த உருவத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என்பது எனக்குத் தெரியாது.
அந்த நிலையிலும் ஒரு நாள் அம்மா, “உனக்கு தினம் ரண்டணா கொடுக்கச் சொல்லி அப்பா சொல்லியிருக்கார்டா” என்று சொன்னாள். மத்தியானம் ஒரு மணிக்கு பள்ளி இடைவேளியில் கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தைச் சாப்பிட்டு விட்டு சாயந்திரம் 5 மணிக்கு மேல் ஐந்தரை மைல் தூரம் நடந்து வீடு வந்தால் அகோரப் பசி எடுக்கும். இதை ஒன்றிரண்டு நாள் பார்த்து விட்டு அப்பா, “அவனுக்கு ரண்டணா காசு கொடுத்துடு. பள்ளிக்கூடம் விட்டதும் சாயந்திரம் ஏதாவது சாப்டுப் பான்.” என்று சொல்லி யிருக்கிறார். எனக்கு ரொம்ப குஷி. அம்மாவும் சந்தோஷம் தான். ஆனால் அந்த இரண்டணா என்பது அப்பாவை, குடும்பத்தை வருத்தும் ஒரு தொகை. அது அப்போதெல்லாம் எனக்கு புரிந்ததில்லை. இரண்டணாவில் என்னென்னவோ வாங்கலாம். ஒரு பெரிய மாம்பழம் கிடைக்கும். கிளிமூக்கு மாம்பழம் என்று சொல்வார்கள். அது இரண்டணாவில் கிடைத்துவிடும். அது போதும். சாப்பிட்டுக் கொண்டே வரப்புகளில் நடப்பது ஒரு ஆனந்தம் தான். காந்தி பார்க்குக்கு எதிரே ஒரு பெரிய ஹோட்டல். பெயர் நினைவில் இல்லை. தோசை கிடைக்கும். ஹோட்டலில் சாப்பிடுவது என்றாலே அந்நாட்களில் அது ஒரு சுகம் தான். அப்போது எங்கும், எந்த ஹோட்டலிலும் எது சாப்பிட்டாலும் ருசியாகத் தான் இருக்கும். அது எப்போதாவது தான் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. ஒரு சமயம் நான் தனியாக இருந்த போது, நிலக்கோட்டையில் நாடார் ஸ்கூலுக்கு எதிரே இருந்த வெங்கிடாசலபதி அய்யர் ஹோட்டலில் சாப்பிட்டது ஞாபக மிருக்கிறது. அந்த ஆனந்தத்தை நினைத்து நினைத்து வெகுநாட்கள் ஆனந்தப் பட்டிருக்கிறேன். ஒரு சமயம் மாமாவும் நானும் மாத்திரம் பத்து நாட்களோ என்னவோ தனியாக் இருந்தோம். மாமா தான் சமைப்பார். ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம், ” வாடா, இன்னிக்கு ஹோட்டல்லே போய் ஏதாவது சாப்பிடலாம்” என்று அழைத்துச் சென்றார் மாமா. என்னென்னமோ ஸ்வீட் மிக்ஸர் கா·பி என்று சாப்பிட்டோம். கடைசியில், “எவ்வளவு ஆச்சா! ஜாஸ்தி ஒண்ணும் இல்லே, பன்னிரண்டணாத்தான் ஆயிருக்கு சார்” என்றார் வெங்கிடாசலமய்யர். “ரொம்ப ஆயிடுத்தே. குழந்தை ரொம்ப வாடிப்போயிட்டானேன்னு வந்தேன். ஆனால் ரொம்ப ஆயிடுத்து,” என்று மாமா சொன்னார்.
ஒரு நாள் நான் ஸ்கூல் விட்டு ஊருக்குத் திரும்பி வர ரொம்ப நேரமாய் விட்டது. என்ன காரணம் என்று எனக்கு இப்போது நினைவில் இல்லை. இருட்டி விட்டது. நான் வீட்டுக்கு வந்ததும் அம்மா கேட்டாள், “ஏண்டா இத்தனை நாழி, என்ன ஆச்சோ என்னவோன்னு ரொம்ப கவலையாப் போயிடுத்து, அப்பா உன்னைத் தேடிப் போனாளே, வழிலே பாக்கலே?” என்று கேட்டாள். “பாக்கலை” என்று சொன்னேனே ஒழிய, எப்படிப்பார்க்காமல் இருந்திருக்கமுடியும் என்று யோசித்தேன். கும்பகோணத்துக்குள்ளே தான் எப்படியெல்லாமோ சுத்தலாமே தவிர, அரசலாற்றில் தோணி ஏறி, இக்கரைக்கு வந்துவிட்டால், ஒரே வரப்பு தான். ஒரே வழிதான். எப்படி நேர்ந்தது? அப்பா கொஞ்ச நேரம் கழித்து வந்தார். வீட்டில் என்னைப் பார்த்ததும், கவலையும், கோபமும், ஏமாற்றமும் கொப்பளித்தது அவர் முகத்தில். ” எப்ப வந்தான் இவன்? ஏன் லேட்டாம்? இனிமே உன் பிள்ளையாச்சு, நீயாச்சு, என்னாலே இனிமே இவனை வச்சுண்டு மன்னாட முடியாது?” என்று கத்தினார். யாரும் ஏதும் பேசவில்லை. “நேரத்தோட வந்தா என்ன? ரெண்டு ஆத்திலேயும் தண்ணி போயிண்டு இருக்கு. இருட்டி வேறே போயிடுத்து. நம்ம என்னத்தைன்னு கண்டோம்? இப்படி தினம் தினம் அவஸ்தைப் படமுடியுமா?” என்று சீறிக்கொண்டே இருந்தார்.
கடைசியில் கும்பகோணத்திலேயே எங்காவது தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் உடனே ஏதாவது ஏற்பாடு செய்வது என்பது நிச்சயமாயிற்று. அது முன்னாலேயே, என்னை கும்பகோணத்தில் படிக்கச் சேர்ப்பது என்று முடிவெடுத்த போதே கொண்டிருந்த எண்ணம் தான். ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் தினம் இரண்டு ஆறு கடந்து, ஐந்து ஆறு மைல் நடந்து போவதும் வருவதும் ஒன்றும் ‘சரிப்பட்டு வராது’ என்பதும் முன்னாலேயே தீர்மானமானது தான். அது இப்போது உடனடியாக செய்ய வேண்டிய காரியமாகிவிட்டது. இதையெல்லாம் மறுநாள் அம்மா சொல்லித் தான் எனக்குத் தெரியும். ‘அங்கேயே இருந்து படிக்கலாம்டா, தினம் பத்து பதினோரு மைல் நடந்தால் பின்னால் படிக்கிறதுக்கு முடியவேண்டாமாடா. அப்பா சௌகரியமா ஏதாவது ஏற்பாடு செய்வா. அது வரைக்கும் நீ எங்கேயும் அலையாம சீக்கரம் ஊருக்கு வந்து சேர்” என்றாள்
கொஞ்ச நாளில் ஒரு வழியாக ஒரு இடம் கிடைத்தது அப்பாவுக்கு. மகாமகக் குளம் மேற்குக் கரைத் தெருவில் ஒரு விதவைப் பாட்டி தன் ஒரு பிள்ளையோடு இருக்கிறாள். அது அவர்கள் சொந்த வீடு. வீட்டில் ஒரு பகுதி வாடகைக்கு விட்டிருக்கிறாள். அதில் கொஞ்சம் வருமானம் வரும். பாட்டி கூடத்தை ஒட்டிய சமையலறையைத் தனக்கு வைத்துக்கொண்டிருந்தாள். பின்னால் கிணற்றடியில் ஒரு அறை. அனேகமாக அதில் வெண்ணீர்த் தவலை, வாளி, விறகு போன்றவை வைக்கப் பயன் படும் இடமாக இருந்திருக்கவேண்டும். அதில் அந்தப் பாட்டியின் பிள்ளை தன் படிப்பறையாக வைத்துக்கொண்டிருந்தான். அதில் நானும் என் பெட்டி படுக்கை, புத்தகங்களை வைத்துக்கொள்ள உபயோகப்படுத்திக்கொள்ளலாம். படிப்பதற்கு இடமா இல்லை. கூடம், வாசல் திண்ணை எல்லாம் பொது இடங்கள் தான். அப்பாவுடன் ஒரு நாள், என் புத்தகங்கள், வேட்டி சட்டை அடைக்கப்பட்ட ஒரு தகரப் பெட்டி, ஜமுக்காளம், தலையணையோடு போய்ச் சேர்ந்தேன். பாட்டிக்கு ஒரே சந்தோஷம். பாட்டிக்கு ஐம்பதிலிருந்து அறுபதுக்குள் இருக்கும் வயது. முதுகு கொஞ்சம் கூன் விழ ஆரம்பித்திருந்தது. “என் பிள்ளை மாதிரி பாத்துக்கறேன். கவலைப் படாதேங்கோ. என் பிள்ளையை விட சின்னவன் இல்லியோ இவன்? இவனுக்குன்னு ஒண்ணும் தனியா சமைக்கப் போறதில்லே. நானும் என் பிள்ளையும் சாப்பிடறத இவனும் கூட உக்காந்து சாப்பிட்டுப் போறான். படிக்கிற குழந்தை. கவனிச்சுக்கறேன். நிம்மதியா இருங்கோ.” என்று அப்பாவை ஆசுவாசப் படுத்தினாள் பாட்டி. காலையில் கா·பி கொடுப்பாள். காலம்பற ஒம்போது மணிக்கு சாப்பாடு போட்டுடறேன். அப்பறமா ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் சாப்புடட்டும். பசிக்காதோ. படிக்க வேண்டாமோ? வளர்ற புள்ளை..” பாட்டி பேசிக்கொண்டே போனாள். “சனி ஞாயிறு ஊருக்கு வந்துடுவான். பாக்கி அஞ்சு நாளைக்குத் தான்.” “அதுக் கென்ன அதுக்கு நாலு ரூபா கொறச்சுக்கங்கோ” என்றாள் பாட்டி. மாசம் பதினைந்து ரூபாய். வாரத்துக்கு இரண்டு நாட்கள் ஊருக்கு வந்துவிடுவதால் எட்டு நாளைக்கு நாலு ரூபாய் குறைத்துக்கொண்டு மாதம் பதினோரு ரூபாய் செலவாகும். என்று அப்பா கணக்குப் போட்டார். அது போக ஸ்கூல் சம்பளம் ஆறு ரூபாய். ஆக மாதம் பதினேழு ரூபாய். அது அவரால் சமாளிக்க முடியாத அளவு பெரிய தொகை. அப்பாவுக்கு கிராமத்தில் வைதீகத்தில் கொஞ்சம் கூடக் குறைய வரும் வருமாணம் இருபது ரூபாய் தான். குத்தகைக்கு விடப்பட்டிருந்த ஐந்து மா நிலத்திலிருந்து சாப்பாட்டுத் தேவைக்கு அரிசி வந்து விடும். மற்ற செலவுகளை இருபது ரூபாய் வருமானத்திலிருந்து தான் எடுக்க வேண்டும். என் படிப்புக்கு பதினேழு ரூபாய் போக மிஞ்சுவது என்ன? ஆனால் வேறு வழி?
வெங்கட் சாமிநாதன்/24.10.08
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நாசா செவ்வாய்க் கோள் காலநிலை அறியும் விண்ணுளவித் தேர்ந்தெடுப்பு !(கட்டுரை 56 பாகம் -3)
- படைப்பாளுமைகள் சி. மணி, அப்பாஸ் நினைவு
- அசோகமித்திரன் 77: தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -32 << காதல் ஊடல்கள் ! >>
- தழும்பு வலிக்கிறது
- தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன்
- நாகூர் – ஒரு வேடிக்கை உலகம்
- சங்கச் சுரங்கம் – 10 : பெரும்பாணாற்றுப் படை
- அழகியநெருடல்
- ஒத்திவைக்கப்பட்ட சப்தங்கள்….
- எதைச் சொல்வீர்கள்?…
- தொலைந்த செடிகளின் புன்னகை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5 பாகம் -2
- நிழற்படங்கள்
- பாடுக மனமே
- நரகம்
- தேடும் என் தோழா
- நினைவுகளின் தடத்தில் – (29)
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்
- காதலைத் தேடும் பெண்
- சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 2
- சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1
- காட்சி
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று
- எதிர்வீட்டு தேவதை
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -6 (இறுதிக் காட்சி)