வெங்கட் சாமிநாதன்
சிறுவயதில் நடந்த விஷயங்கள், சந்தித்த நண்பர்கள் இப்படி பலவற்றில் ஒரு சில மிக பசுமையாக, ஏதோ கண்முன் நேற்று நடந்து போல் நினைவில் இருக்கின்றன. பல மறந்து விடுகின்றன. நேற்று நடந்த விஷயங்கள் எவ்வளவு தான் நினைவைக் கிளறிப் பார்த்தாலும் ஞாபகத்திற்கு வருவதில்லை. பின் எப்போதாவது வேறு சிந்தனையில் இருக்கும் போது, தேடாத இந்த நினவுகள் மனதில் பளிச்சிடும். மனித மனது எப்படித்தான் செயல்படுகிறது, அல்லது செயல்பட மறுக்கிறது என்பது ஒரு புரியாத புதிர். ரஸ்ஸல் வேடிக்கையகச் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்; மனவியல் அறிஞர்கள் (psychologists) மனது என்ற ஒன்று கிடையாது என்று வெகு தீர்மானமாகச் சொல்கிறார்கள். அதேசமயம் பௌதீகவியல் (physicists) அறிஞர்களும் தம் தரப்புக்கு பொருள் (matter) என்று ஏதும் கிடையாது என்று. இந்த விஞ்ஞானிகள் எதைப் பற்றி வாழ்நாள் முழுதும் ஆராயகிறார்களோ, அதுவே இல்லை என்றால்….. எதை ஆராய தம் வாழ்நாளைச் செலவிட்டார்கள் என்று கேட்க நமக்குத் தோன்றும். இப்படி மனோவியல் அறிஞர்களும் பௌதீக விஞ்ஞானிகளும் சொல்வது தையல்காரர்கள் இந்த ஊரில் யாருமே உடை அணிவதில்லை, நிர்வாணமாகத்தால் செல்கிறார்கள் என்றும், செறுப்புத் தைக்கிறவர்கள், எல்லோரும் வெறுங்காலோடு தான் நடந்து செல்கிறார்கள் என்று சொல்வது போல இருக்கிறது என்று வேடிக்கையாகக் கூறுவார். வேடிக்கை தான் ஆனால் அது உண்மையும் கூட. அது பற்றிப் பின்னர். இப்போதைக்கு மனது என்ற புதிர் பற்றி.
எதற்காகச் சொல்லவந்தேன் என்றால், எது இக்காலத்தில் நம் அரசியலின், சமூகத்தின் குரல் வளையைப் பிடித்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறதோ, எது எல்லோர் பிரக்ஞையையும் முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதோ, அது என் சிறுவயதுப் பிராயத்தில் இருந்ததில்லை. அது ஒரு பெரிய விஷயமாகவே இருந்ததில்லை. எங்கள் நண்பர் குழு ஒன்றில் ஒருவர் எல்லோரையும் நோக்கி ஒரு கேள்வி கேட்டார். “உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கூடத்தில், வகுப்பில் ஒரு தாசியின் குழந்தையும் சேர்க்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? ” அப்போது நான் சொன்னேன், “குழந்தைகள் எல்லாமே குழந்தைகள் தானே?” என்று. அப்போது உடனே எனக்கு மனதில் பட்ட பதிலைச் சொன்னேன். யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏதும் ஆராய்ச்சிக்கான விஷயமும் இல்லை. பிறகு ஒரு நாள் கழித்துத்தான் எனக்கு அது என் சிறுபிராய அனுபவத்தில் நடந்ததைச் சொல்லியிருக்கலாம் என்று.
எங்கள் வகுப்பில், என் ஞாபகத்தில் அது ஏழாவது படிக்கும் போது என்று சொல்லவேண்டும். இரண்டே இரண்டு பெண்கள் தான் இருந்தார்கள். அவர்கள் தனியாக ஒரு பெஞ்சில் உட்கார்வார்கள். வகுப்பில் சுமார் 30 பையன்கள் இருக்கலாம். நான் ஒரு பெஞ்சில், கடைசி என்று சொல்லும் படிக்கு பின் வரிசையில் ஒன்றில். எங்கள் பெஞ்சில் நாலு பேர். அவர்களில் ஒருவன் அங்கண்ணன் என்று பெயர் என்று ஞாபகம். நல்ல உயரம். கறுப்பு. அவன் ஒரு தலித், இன்றைய சொல்லாடலில். என் வகுப்பிற்கு வாத்தியார் என் மாமா தான். அவர் தான் ஹெட்மாஸ்டரும். நாங்களை அவன் தலித் என்று அறிந்து கொண்டது, பெயரை ஊரை அல்ல்து இது போல பல விவரங்களை அறிந்து கொண்டது போலத் தான். அதற்கும் மேல் உள்ள அர்த்தங்கள் எங்களுக்குச் சொல்லப்படவுமில்லை. நாங்கள் அறிந்து கொண்டதுமில்லை. யாரும் அவனை தலித் என்று சொல்லி வித்தியாசமாக நடத்தியது கிடையாது. நல்ல உயரம் என்பதும், அடிக்கடி ஒவ்வொரு வகுப்பிலும் அவன் இரண்டு வருடங்களாவது தங்கி விடுவான் என்பதும் தான் முக்கிய தகவல்கள். அப்படி ஒரு வருடத்திற்கு மேல் அதே வகுப்பில் தொடர்வது என்பது பல மாணவர்களுக்கு சகஜமான விஷயம். அங்கண்ணன் கொஞ்சம் அதிகம் ஒரே வகுப்பில் தங்கி விடுவான்,. அவ்வளவே.
ஒரு முஸ்லீம் மாணவனும் எங்களுடன் படித்தான். அப்துல் வஹாப் என்று பெயர். அவனுடைய வீடு பள்ளிக்குப் போகும் வழியில் நீண்ட தெருவின் மத்தியில் இருக்கும். அப்துல் வஹாபின் அப்பா வீட்டின் முன் ஒரு கட்டிலில் உட்கார்ந்திருப்பார். நல்ல பாரியான உடம்பு. துருக்கிக்காரர் மாதிரி பின்னால் ஒரு குஞ்சம் தொங்கும் தொப்பி ஒன்றை எப்போதுன் அணிந்திருப்பார். அவர் லேவா தேவி செய்து வந்தார். முஸ்லீம்கள்கடனுக்கு பணம் கொடுத்து வட்டி வாங்கிப் பிழைப்பது ஹராம் என்று இஸ்லாத்தில் நம்பப்படுகிறது. ஆனால் நான் சிறு வயதில் பார்த்த முதல் முஸ்லீமின் தொழிலே அதாகத்தான் இருந்தது. நிலக்கோட்டையில் நான் அதிகம் முஸ்லீம்களைப்பார்த்ததில்லை. ஆனால் மெயின் ரோடை விட்டு உள்ளே தள்ளிச் செல்லும் ஒரு சந்தின் நடுவில் பள்ளி வாசல் இருந்தது. ஏதோ ஒரு முஸ்லீம் பண்டிகையின் போது தெருவில் புலிவேஷம் ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன். வேறு எந்தத் திருவிழாவிலும் புலிவேஷம் ஆடி நான் பார்த்ததில்லை. ஒரு சமயம் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்த போது அப்துல் வஹாப் என்னைத் துரத்த நான் ஓட, ஒரு மண்மேட்டின் அருகே அவன் என்னைப் பிடித்து விடுவான் போலிருக்க நான் சட்டென அந்த மேட்டைச் சுற்றி வளைந்து ஓடினேன். அவன் கால் சருக்கி குப்புற விழுந்து அவன் முன் பற்கள் உடைந்து ரத்தம் கொட்ட விழுந்து கிடந்தான். நான் பயந்து விட்டேன். நான் தான் தள்ளி விட்டேன் என்று சொல்வார்கள், மாமா அன்று என்னைத் துவைத்து எடுத்துவிடுவார் என்று பயந்து கிடந்தேன். ஆனால் ஆச்சரியம், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாமாவும் பயந்து தான் இருந்தார். அப்துல் வஹாபின் அப்பா வந்து என்ன ரகளை நடக்கப் போகிறதோ என்று. பின்னால் எனக்குச் சொன்னார்கள். வாத்தியார் வீட்டுப் பிள்ளைதானே. ஏதோ விளையாட்டிலே இப்படி ஆகிப் போயிருச்சி. சரி விடுங்க” என்று சொன்னாராம். இன்னொரு பையன் பழனிச்சாமி. ‘சாமிநாதா, நான் எட்டாம்புக்கு மேலே படிக்கப் போறதில்லே. எங்க ஐயா சொல்லிட்டாரு” என்று மிக சந்தோஷமாகச் சொல்வான். ஏன் என்று கேட்டதற்கு, “அதுக்கு மேலே படிக்கிறதுக்கு ரொம்ப மூளை வேணுமாம். பத்தாம்புக்கு போனாலே ஒவ்வொத்தருக்கு படிச்சுப் படிச்சு மூளையே கெட்டுப் போயிருமாம்” என்று சொல்வான்.
நான் முக்கியமாகச் சொல்ல வந்தது எங்கள் வகுப்புப் பெண்களைப் பற்றி. ஒருத்தி பெயர் சௌந்திரம் என்று நினைக்கிறேன். எங்கள் பள்ளிக்கூட மானேஜர், அல்லது கரஸ்பாண்டண்ட்டின் பெண். சௌராஷ்டிரர். மதுரை ஆர்.வி.மில்லின் நூல் ஏஜென்சி. அவர்கள் எங்கள் பள்ளியை நடத்தும் ஒரு குடும்பத்தின் மூன்று சகோதரர்களில் ஒருவர். மாறி மாறி அவர்கள் பள்ளிக்கு மானேஜராக இருப்பார்கள். நான் இருந்த காலத்தில் அந்த குடும்பம் தான் நிலக்கோட்டையிலேயே பணக்கார குடும்பம். அவர்கள் வசித்த தனித்தனி வீடு ஒவ்வொன்றும் பெரிய மாளிகை என்று சொல்லவேண்டும். அந்தப் பணக்கார சௌந்திரத்தோடு ஒட்டி உட்கார்ந்திருந்த இன்னொரு பெண் பெயர் ராம திலகம். மிக அழகானவள். கருப்பு நிறம் தான். என்றாலும் கருப்பு என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கறுப்பு இல்லை. ஆனால் அழகி. அவள் ஒரு தாசி குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்படியென்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. வகுப்பில் அவர்கள் இருவரே இருந்ததால், இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் இருவரும் வகுப்புத் தோழிகள். அவ்வளவே. மேலும், தாசி என்றால், ஏதோ ஒரு குலம், அல்லது உத்யோகம், என்பதற்கு மேல் அந்த பெயர் எங்களுக்கு எந்த அர்த்தத்தையும் கொடுத்ததில்லை. இந்த விவரமும் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. எனக்குத் தெரியும். ஏனெனில் அவள் ‘ட’ வடிவத்தில் இருக்கும் எங்கள் தெரு என்று சொன்னேனே, எங்கள் வீடு அந்த ‘ட’ வின் இருகோடுகளின் சந்திப்பில் இருந்தது. ராமதிலகம் வத்தலக்குண்டு போகும் ரோடைத் தொடும் கோட்டின் நடுவே குளத்தை நோக்கி இருக்கும் வீட்டில் இருந்தாள். அவள் அம்மாவோ, பாட்டியோ ஒரு கிழவியோடு. அதற்கு அடுத்த வீட்டில் ஒரு இளம் பெண். அவ்வப்போது டூரிங் சினிமா நான் சொன்ன பேட்டையில் முகாமிட்டால், அதன் முதலாளி, அங்கு தான் தங்குவார். கழுத்தில் கையில் தங்க செயின். மல் வேஷ்டி. கறுப்பு தான், ஆனால் ஆணழகன் என்று சொல்லவேண்டும். என் மாமா கூட வீட்டில் யாருடனோ பேசும் போது அவரைப் பற்றி, “நல்ல மனிதர் தான். மரியாதை தெரிந்தவர். ஆனால், என்னவோ இப்படி ஒரு பலஹீனம்..” என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்
ராம திலகம் இருந்த எங்கள் தெருவின் நீட்சியில் அவள் வீடு நடுவில் இருந்தது என்றேன். அதன் இரு பக்கங்களிலும் முதலில் இரண்டு வீடுகளில் இரண்டு முஸ்லீம் குடும்பங்கள் இருந்தன. அவற்றில் முதல் வீட்டின் முன் ஆடு ஒன்று கட்டியிருக்கும். பின் ராமதிலகம் வீடு. பின் ஒரு இளம் பெண் இருந்த வீடும். அதற்கு அடுத்த வீட்டில் ரெவென்யூ இன்ஸ்பெக்டர். அதற்கு அடுத்த வீட்டில் அடிக்கடி யார் யாரோ வாடகைக்கு வந்து போவார்கள்.
எங்கள் தெருவின் பெயர், வெங்கடேஸ்வர அல்லது வெங்கடேச புர அக்கிரஹாரம். எது என்று நிச்சயமாக ஞாபகமில்லை. அந்த பெயர் வீண் தான். ஒரு சமயம் ஒரு தகரத் துண்டில் தெருப் பெயர் எழுதி சுவற்றில் ஆணி அடித்துச் சென்றார்கள். ஆனால் அந்தத் தெருப் பெயரை யாரும் எங்கும் உபயோகித்தது கிடையாது. பெயரை எழுதி, ஹெட்மாஸ்டர், நிலக்கோட்டை என்று எழுதினால் தபால் வந்து சேர்ந்து விடும். நிலக்கோட்டையில் வீட்டு எண், தெருப் பெயர் என்பதெற்கெல்லாம் ஏதும் அர்த்தம் கிடையாது. எங்கள் வீட்டின் எதிரே ஒரு சாரியில் ஒரு பெரிய வீடு காம்பௌண்டு சுவர் அடைக்க இருக்கும். அது எப்போதும் எங்கள் ஊருக்கு மாற்றலாகி வரும் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு என்று தீர்மானமாகிய வீடு. ஸ்ரீ ராமவிலாஸ் சர்வீஸோ அல்லது கொடைக்கானல் மோட்டார் யூனியன் (ஜெயராஜ் நாடார் என்பவர் நடத்தி வந்தது) பஸ்ஸோ, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் டூர் போகிறார் என்றால் அவர் வீட்டுக்கு முன்னால் வந்து பஸ் நின்று காத்திருக்கும். டிவிஎஸ் வண்டி வராது. அவர் வீட்டு வேலைக்கு என்று ஒரு ஏட்டையாவோ, கான்ஸ்டபிளோ இருப்பார். அவர் தினம் காலையில் ஷ¥வை பாலிஷ் செய்து கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். தினம் ஒரு பஸ் காலையில் அவர் வீட்டின் முன் வந்து நிற்கும். பஸ்ஸின் மேலேயிருந்து இரண்டு குடங்கள் வந்திறங்கும். அவை நிலக்கோட்டையிலிருந்து 22 மைல் தூரத்திலிருக்கும் பெரியகுளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொடுக்கும். அந்த வீட்டு காம்பவுண்டை அடுத்து ஒரு வெட்ட வெளி. அதன் ஒரு ஓரத்தில் ஒரு குடிசை. அதில் நாகு என்று அழைக்கப்பட்ட வற்றிய உடம்பும் ஏழ்மையின் வடிவே ஆன ஒரு ஸ்திரி. அவள் புருஷன் நல்ல தாட்டியான மனிதன். அவன் குடிசைக்கு வரும்போதெல்லாம் சண்டை தான், கூச்சல் தான். ஆனால் அவன் எப்போதாவது தான் காட்சியளிப்பான். நாகு தான் எந்நேரமும் ஏதோ செய்து கொண்டே இருப்பாள். அத்தோடு யாரையாவது வைது கொண்டும் இருப்பாள். அவள் ஆடு வளர்த்தாள். ஊரெல்லாம் சுற்றி சாணி பொறுக்கி வரட்டி தட்டி பிழைத்து வந்தாள். அவள் குடிசையைச் சுற்றி இருக்கும் சிதைந்து கிடக்கும் நீளக் குட்டிச் சுவரில் எப்போது வரட்டிகள் காய்ந்து கிடக்கும். அவள் குடிசைக்கு எதிரே, எங்கள் தெருவின் மறு சாரியில் நடுவே ஒரு பாழடைந்த வீடு இருக்கும். அதில்தான் அவள் வரட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.
இதற்கு எதிர்த்த சாரியில் ஒரு பெரிய வீடு. அது நான் முன் சொன்ன எஸ்.ஆர். ராமய்யர் என்னும் எங்கள் பள்ளிக்கூடத்தை ஸ்தாபித்து நிர்வகித்து வந்த சௌராஷ்டிர குடும்பத்தின் மூத்த சகோதரர் வாங்கிப் போட்டிருந்த வீடு. அந்த வீட்டில் எப்போதாவது தான் ஒரு பெரிய அதிகாரி வாடகைக்கு வந்து தங்குவார். ஒரு சமயம் ஒரு சப் கலெக்டர் வாடகைக்கு இருந்தார். அவர் ஒரு வில் வண்டியில் தான் பயணம் செய்வார். பசு மாடு, வில்வண்டிக்கான மாடு எல்லாம் அந்த வீட்டின் ஒரு பக்கத்தில் இருந்த கொட்டகையில் கட்டியிருக்கும். அதற்கு அடுத்த ஒரு சின்ன வீட்டில் தான் நடராஜன் என்னும் அம்பி வாத்தியார் இருந்தார், ஒரு வயோதிக அப்பா அம்மாவோடு, இரண்டு தம்பிகளோடும். அவர் வாங்கிய 19 ரூபாய் சம்பளத்தில் எப்படி காலம் தள்ளினாரோ என்று இப்போது நான் திகைக்கிறேன். அடுத்து ஒரு பெரிய வீடு. இன்ஸ்பெக்டர் ஆ·ப் ஸ்கூல்ஸ் இருந்த வீடு. அடுத்து ஒரு வாத்தியார் வீடு. ஒரு சமயம் நாராயண அய்யர் என்று ஒரு வாத்தியார் இருந்தார். பின் வெட்ட வெளி. பின் நாகு பயன் படுத்திய பாழடைந்த வீடு. அந்த வீட்டில் சில சமயங்களில் பகல் வேஷக்காரர்கள் வந்து தங்குவதுண்டு. தினம் ஒரு வேஷம் போட்டுக்கொண்டு வருவார்கள். அவ்வப்போது ஏதாவது கேட்பார்கள். அல்லது கடைசியில் ஊர் விட்டுப் போகும் போது அவர்களுக்கு ஏதோ கொடுப்பார்கள். அந்த நாற்பதுக்களுக்குப் பிறகு நான் வேறு எங்கும் இப்படியான பகல்வேஷக்காரர்கள் என்று கேட்டதுமில்லை. பார்த்ததுமில்லை. அதை அடுத்து மறுபடியும் ஒரு வாத்தியார் வீடு. ரங்கநாதன் என்றோ அல்லது ரங்கசாமி என்றோ பெயர். எனக்கு ஆறாம் வகுப்பு வாத்தியாராக இருந்தார். அது தவிர அவர் பாட்டும் சொல்லிக்கொடுப்பார். ஊரின் மற்றொரு கோடியில் வெகுதூரத்திலிருந்த பெருமாள் கோவில் பாட்டராச்சாரியார் குடும்பமோ என்னவோ இரண்டு சிறுமிகள் வந்து பாட்டுச் சொல்லிக்கொண்டார்கள். அத்தெருவின் நடுவே ரோட்டைப் பார்த்தவாறு பிள்ளையார் கோவில். தெருவின் மறுகோடியிலிருந்த நாங்களும் பிள்ளையாரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டிருப்போம்.
வெங்கட் சாமிநாதன்/24.8.07
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 15 – ஜெயமோகன்
- உயிர்த்தெழும் ஔரங்கசீப்
- அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி
- SR நினைவுகள்
- அமரர் சுஜாதா
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ? (கட்டுரை: 20)
- தேம்ஸ் நதியின் புன்னகை
- இடமாற்றம்: சுஜாதாவின் பெங்களூர் நினைவஞ்சலிக் கூட்டம்
- வஹ்ஹாபி வெளிப்படுத்தும் அடிப்படை முகமதிய மனோபாவம், இஸ்லாமிய தர்க்கம்
- உடம்பு இளைப்பது எப்படி?
- நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து
- தாகூரின் கீதங்கள் – 21 எல்லாமே வழங்கி உள்ளாய் !
- ஜெய்பூர் கால்— டொக்டர் பிரமோத் கரன் சேத்தி மறைவு
- பதங்களும் ஜாவளியும் – பக்தியும் சிருங்காரமும்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- பேராசிரியர் சுந்தரசண்முகனார் வாழ்வும் பணியும்(13.07.1922 -30.10.1997)
- கிராமங்களின் பாடல்
- மகளிர்தினக் கவியரங்கம், திருச்சி
- அதிகாலை.காம்
- ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாக அமைந்துவிட்டது
- “வார்த்தை” மாத இதழ் சந்தா – சிறப்புச் சலுகைகள்
- குதிரை ஓட்டி
- காற்றினிலே வரும் கீதங்கள் – 10 நிலையற்ற வாழ்வு !
- ஆடுகளம்
- சுயமோகிகளுக்கு…..
- சம்மந்தமில்லை என்றாலும் – விவாதங்கள் விமர்சனங்கள்- சுஜாதா
- உலகை குலுக்கும் உண்டியல் புரட்சியாளர்கள்
- மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம்
- நினைவுகளின் தடத்தில் (6)
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 2
- முலையகம் நனைப்ப விம்மி அழுதனள்
- போட்டோ
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 2