எம்.ரிஷான் ஷெரீப்
காலத்தின் பெருந்துயர்களையும், வாழ்வின் நிகழ்வுகளையும், மன உணர்வுகளையும் சொற்களில் வடித்துக் கவிதைகள் எழுதப்படும் போது அவற்றினை வாசிக்கும் ஆவல் மிகுவதோடு, வாசித்துக்கொண்டிருக்கும் போது எழுதிய கவிஞனின் வரிகளோடு புகுந்து சென்று அவனது உணர்வுகளைப் புரிந்துகொள்ள இயலுமாக இருக்கிறது. இவ்வாறாக மன உணர்வுகளை மாற்றிச் செல்லக்கூடிய ‘நிழல் தேடும் கால்களை’ சமீபத்தில் கிடைக்கப்பெற்றேன். இத் தொகுப்பிலுள்ள இளவயதுக் கவிஞன் நிந்தவூர் ஷிப்லியின் கவிதைகள் ஒவ்வொன்றும் அவர் குறித்தான பெரும் மதிப்பொன்றினை சுமந்து வந்திருந்தன.
இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் ஈழத்தின் யுத்த மேகங்கள் சூழ்ந்த இருள் கிராமங்களின் துயருற்ற வாழ்வினைப் பாடுவதோடு, காதல், வறுமை, வாழ்க்கை,அரசியல், பெண்ணுரிமை எனப் பல கருக்களைக் கொண்டெழுகிறது.
‘இன்னும் வெளுக்கவில்லை’ எனும் தலைப்பிலான தொகுப்பின் முதல் கவிதையில்
எங்கள் வாழ்வும் தீவுதான்
துயரக்கடலால்
சூழப்பட்டிருக்கிறது
மிகப்பத்திரமாய்…
எனும் வரிகள் ஆண்டாண்டு காலமாக இச் சிறுதீவினுள் அலையடித்துக் கிடக்கும் பெருஞ்சோகத்தை எளிய வரிகளில் மிக அருமையாகச் சொல்லியிருக்கின்றன.
ஆயினும்
இன்னும் வெளுக்கவில்லை
எங்கள் கிழக்கு…!
எனக் கவிஞர் இக்கவிதையை முடித்திருக்கிறார். மண்ணை நேசிக்கும் எல்லோருடைய ஆதங்கங்களின் வெளிப்பாடான இவ்வரிகள் ஒரு நீண்ட பெருமூச்சுடன் நிறுத்தப்பட்டிருப்பதைப் போலவும், பலருக்கும் இது பற்றி விவரித்துச் சொல்லப்படுவதைப் போலவும் உணர்கிறேன்.
வலிகளின் பிடிமானங்களில்
கவனமாய் செருகப்பட்டிருக்கிறது
உடலும் உயிரும்…
என்ற வரிகளைக் கொண்ட ‘இருட்டு உலகம்’ எல்லோராலும் வாழ்வில் உணரப்படக் கூடிய தனிமையின் விரக்தி நிலையை, சுயமிழந்த பொழுதின் வேதனையை அலசி எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
இதே உணர்வைத் தோற்றுவித்த இன்னொரு கவிதையான ‘வாழ்க்கை’ கவிதையின் இறுதி வரிகள்
ஆயினும்
சூன்யத்தின் மறுபெயர்தான்
வாழ்க்கை என்பதை
எப்போதுமே உணர்வதில்லை நாம்
சாகும் பொழுதைத் தவிர….
வாழ்க்கையின் ரணங்களில் கீறி வெளிப்பட்ட கவிதையாக வலிக்கச் செய்கிறது.
ஊரிலும், நகரத்திலும் தான் வாழ்ந்த பொழுதுகளில் கவிஞர் கண்ணுற்ற காதல்களின் பிரதிபலிப்புக்கள் ‘காலிமுகத்திடல்’ கவிதையில் இவ்வாறு வெளிப்படுகின்றன.
கிராமத்துக் காதல்
புழுதி படாப் பூ
நகரத்துக் காதல்
நசுங்கிய பூ
காதல் பற்றிய இந்தக் கண்ணோட்டம் நகரத்துக்காதலர்களை விசனப்படச் செய்யக் கூடுமெனினும் அழகிய வரிகள்.
தொகுப்பின் மற்றொரு கவிதையான ‘தொலைதூர அழுகுரல்’ கவிதையின் இறுதிவரிகள் இப்படிச் சொல்கின்றன.
அத்தனையும் துறந்து
உலக வரைபடத்தில் மட்டுமே
தாய்நாட்டைக் காணமுடியுமான
ஒரு தேசத்தில் நான்…
பணம் சம்பாதித்துக்கொண்டே
இருக்கிறது
என் உடல்
உயிர் மட்டும்
இன்னும் என் தெருமுனையின்
பனைமரத்தடியில்…!
காற்றில் மிதந்திருக்கும் கிளைகளின் இலைகள் எப்பொழுதுமே வேரைத் தேடியபடியிருக்கும் என்பதனைப் போல மீள வரமுடியாத் தொலைவில் புலம்பெயர்ந்து வாழும் எத்தனையோ மனதுகளின் ஏக்கங்களை வெளிப்படுத்துவதோடு பழங்கால நினைவுகளைத் திரும்பப் பெரும் ஆவலையும் சொல்லி முடிகிறது இக்கவிதை. இதையே உணர்த்தும் இன்னுமொரு கவிதையின் வரிகளிவை.
காலத்தின் சூழ்ச்சிகளால்
அகதிகளாய்ப்போகையில்
விட்டுப் போன உயிர்
சொந்த ஊர் பார்க்கும் போதுதான்
மீண்டும் துளிர்க்கிறது
இதே நிதர்சனத்தை
பெயர் தெரியாத
தெருக்களில்
அகதிகளாய்
மண் வாசனையை
தேடும்போதுதான்
உயிர் கருகுகிறது
என இவரது ‘மண்வாசம்’ கவிதையும் பாடுகிறது.
‘நெற்றிக்கண்ணாவது’ கவிதையும், ‘கருக்கலைப்பு’ கவிதையும் விதவைகள் குறித்தான சமுதாய விழிப்புணர்வையும், கருவறையில் சிசுக்களுக்குக் கல்லறை கட்டப்படுவதைச் சாடி, அது சம்பந்தமான விழிப்புணர்வையும் வெளிப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன.
பிரிந்து போன நேசமொன்றின் வலிகளைக் குறித்தான ‘நீயா? பிரமையா?’ கவிதையின்
இயல்பாக சேமிக்கப்பட்ட
உனக்கான
அன்பின் வார்ப்புகளை
வலுக்கட்டாயமாக துரத்தியடிக்க
நானொன்றும்
இதயமில்லாத நீயில்லை
என்ற அருமையான வரிகள் இழந்த நேசத்தின் நினைவுகளைச் சுமந்தலையும் துயருற்ற வாழ்வினைச் சுட்டி நிற்கிறது. இதையே தான் ‘அறுந்து போன சிறகுகள்’ கவிதையும் சொல்கிறது.
நீ பற்றிய
ஞாபகங்கள்
நொந்துபோன மனசின் பரப்புகளில்
அர்த்தமில்லாத அவஸ்தைகளாய்
கனக்கின்றன
எனும் ‘அர்த்தமில்லா அவஸ்தைகள்’ கவிதையும் இதையே சொல்கிறது.
கிளிக்கூட்டுக்குள் அடைக்கப்பட்ட பட்சிகளின் சிறைப்படுத்தப்படுதலோடு ஒத்த பெண்களின் வாழ்வினை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது ‘கிளிகள் பெண்கள் சுதந்திரம்’ கவிதை. இதே கருப்பொருளோடு ஒத்திருக்கிறது ‘நானும் ஒரு பெண்’ கவிதையும்.
திருமணம் என்பது
இவர்களை
கைதிகளாக்கும்
திறந்த சிறை
எனச் சொல்லும் ‘பெண்மை போற்றி’ கவிதையானது திருமண வாழ்வுக்குப் பின்னர் பாரிய அடக்குதலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களைப் பற்றி எழுதப்பட்டதாகவும் அது சம்பந்தமான விழிப்புணர்வைக் கேட்டு நிற்பதாகவும் உணர்கிறேன்.
அடையாளமிழந்த சடலங்களில்
பரவிக் கிடக்கும்
சதைத் துகள்கள்
வழிந்தோடும்
இரத்த ஆறுகளை
வழி மறித்து நிற்கும்
எலும்புக் கூடுகள்
என்ற வரிகளைக் கொண்ட ‘போர்க்களமும் சில பூக்களும்’ கவிதை யுத்தத்தின் வலிகளை சிந்திய குருதி தொட்டு எழுதப்பட்டிருக்கின்றது.
இவ்வாறாக சமுதாயத்தின் பல்வேறுபட்ட விம்பங்களைப் பற்றி இத் தொகுப்பிலுள்ள தன் கவிதைகளில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஷிப்லி. கவிதைகளும் அவற்றின் பாடுபொருளும் நன்று. இவர் இன்னும் காத்திரமான சொற்களைக் கோர்த்துக் கவிதைகள் வடிப்பாராயின் கவிதைகளின் அழகுணர்ச்சி இன்னும் அதிகரித்து மேலும் இவரது கவிதைகள் மெருகேறும் என்பதில் ஐயமில்லை. கவிஞரின் தொடரும் முயற்சிகளனைத்தும் இது போல வெற்றிகளை ஈட்டித்தர வாழ்த்துகிறேன்.
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -6
- முடிவை நோக்கி !
- மீண்டும் நிலவைத் தேடிச் செல்லும் நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் ! (கட்டுரை : 4)
- கவிஞனின் மனைவி
- மொழியறியா மொழிபெயர்ப்பாளர்களும், விழிபிதுங்கும் தமிழர்களும்…………
- முனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையின் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்!
- நினைவுகளின் தடத்தில் (22)
- பற்றிப் படரும் பாரம்பரிய இசை விருட்சம்
- நிந்தவூர் ஷிப்லியின் ‘நிழல் தேடும் கால்கள்’
- அர்த்தம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினாறு
- இரண்டு கவிதைகள்
- கடவுளின் காலடிச் சத்தம் – 5 கவிதை சந்நிதி
- இரண்டு கவிதைகள்
- மணிவிழா
- வி.பி. சிங் மறைந்தார்
- தமிழியல் ஆராய்ச்சிக்காக பனுவல் ஆய்விதழ்
- சிறந்த தமிழ் மென்பொருளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு
- “பாட்டிகளின் சிநேகிதன்” : நா.விஸ்வநாதனின் சிறுகதைத் தொகுப்பு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் -38 மாக்சிம் கார்க்கி.
- மினராவில் நட்சத்திரங்கள்
- அண்ணாவின் பெருமை
- வேத வனம் விருட்சம் 12 கவிதை
- பாவலர் பாரதியார் நினைவேந்தி…!
- கடைசியாக
- நிலை
- தாகூரின் கீதங்கள் – 57 தொப்புள் கொடி அறுப்பு !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -12 << தீவில் கழித்த இரவுகள் ! >>