நிதி சால சுகமா ? மம்மத பந்தனயுத நர ஸ்துதி சுகமா ?

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

வெங்கட் சாமிநாதன்


‘நிதி சால சுகமா, ராமு நி சந்நிதி சேவ சுகமா ‘ என்று ஒரு சந்தர்ப்பத்தில், தன் மனதையே கேட்டுக் கொள்கிறார் தியாக பிரம்மம். மமதையில் திளைப்பவர்களை நரஸ்துதி செய்வது சுகமா ? என்றும் ஒரு கேள்வி கேட்டுக் கொள்கிறார். அந்த சந்தர்ப்பம், வறுமையால் தான் வாடும்போது தஞ்சை மகாராஜாவின் அழைப்பு வந்ததென்றும், வறுமையில் ராமனின் சன்னதியில் பாடிக்கிடப்பதா அல்லது செல்வச் செழிப்போடு, ராஜ தர்பாாில் மன்னர் புகழ்பாடிக்கிடப்பதா என்று அவர் தன்னைக் கேட்டுக் கொள்கிறார். 200 வருஷங்களாயிற்று. அன்று அவருக்கு அந்த மாதிாியான – இன்றைய நவீன மொழியில் நானும் பேசுகிறேனே – இருத்தலியியல் ஊசலாட்டம் இருந்திருக்குமா என்று தோன்றலாம். உண்மையில் அவருக்கு சாப்பாட்டுப் போராட்டம் தானே ஒழிய சித்தாந்தப் போராட்டம் ஏதும் இருக்கவில்லை. அவருக்கு பதில் தொியும். அவர் தரும் பதில், எழுப்பும் கேள்விகளின் தோரணையிலிருந்தே, அவருக்கு அந்த ஊசலாட்டம் இருக்கவில்லை என்று தொிகிறது.

இன்று நமக்கு அந்த மாதிாியான ஊசலாட்டங்கள் ஒன்றும் கிடையாது. தீர்மானங்கள் நிச்சயிக்கப்பட்டுவிட்டன நமக்கு. இரண்டும் வேண்டும். நம்மில் பலரது நிலை அதுவா, இதுவா என்ற ஊசலாட்டம் இல்லை. இரண்டையும் சமாளிக்கும் கழைக்கூத்தாட்டம். நமது தேர்வுகள் என்னமோ வேறுதான். தேர்வு ஒன்றும், அது போர்த்தி வரும் சொற்கள், சித்தாந்த வெளியீடு மற்றதுமாக இருக்கும். தெளிவாக சொல்லப் போனால், தேர்வுகள் தான் வேறே ஒழிய அத்தேர்வுகள் போர்த்திக்கொள்ளும் சொற்கள் பழக்கமானவை, புனிதமாகக் கருதப்படுபவை. தேர்வுகளின் உண்மை சொரூபத்தை மறைக்கத் தேவையானவை. . நமது தேர்வுகளின் அசிங்கத்திற்கு முலாம் பூசி ஜாகினாக்கள் ஒட்டி பளபளக்க வைப்பவை. நமக்குத் தேவை பணம். அதில் நமக்கு எவ்வித சந்தேகமோ சித்தாந்த போராட்டங்களோ கிஞ்சித்தும் கிடையாது. ஆனால் நாமோ வெளி உலகின் முன் கலைஞர்களாக, சிந்தனையாளர்களாக, மக்கள் சேவைக்காக -(உடல் மண்ணுக்கு, உயிர் மக்களுக்கு, அல்லது தமிழுக்கு, அல்லது இப்படி ஏதோ ஒரு மயக்கம் தரும் வார்த்தைக்கு) -பிறப்பெடுத்த அரசியல் தலைவர்களாக, எழுத்தாளர்களாக, உலவுகிறவர்கள். பணம் தேவை, நிறைய பணம் தேவை, அதிகாரம், புகழ், அந்தஸ்து, சுகமான வாழ்வு என எல்லாம்{ ஒரு package deal-ஆகத்) தரும் அக்ஷய பாத்திரமான பணம் தேவை என்று எப்படி அவ்வளவு வெளிப்படையாக சொல்லிவிட முடியும். ? இது நாள் கட்டிக்காத்த பிம்பம் என்ன ஆவது ? எனவே, ஒரு செளகாியமான மந்த்ரம், ‘பணம் முக்கியமில்ை

ல. ஆனால் பணம் இல்லாமல் என்ன நடக்கிறது ? ‘ என்று சொல்லிக் கொள்ளவேண்டும்.

பணம் அவசியத்தேவை தான். தன் குறைந்த பட்ச வாழ்க்கை வசதிகளுக்கும் கூட பணம் தேவையாகத்தான் இருக்கிறது. வாழ வேண்டியிருக்கிறதே என்று ஒருவர் சொன்னால் அதற்கு யாரும் ஏதும் மறுப்பு சொல்ல முடியாது. ஆனால் இந்த சொற்களே நியாயம் கற்பித்து விடாது. இந்த சொற்களைக் கடந்து, சொன்ன மனிதரைப் பற்றியும் நாம் தொிந்து கொள்ளவேண்டும். மனிதரைப் பொறுத்து இந்த வார்த்தைகளின் பொருள் மாறுபடும். கதர் தொப்பி ஒரு காலத்தில் அணிந்த மனிதரைப் பற்றி ஒன்று சொன்னது. இன்று முற்றிலும் வேறு அர்த்தத்தைத் தருகிறது. தாடி வாழும் வாழ்க்கையின் புனிதத்வத்தை அடையாளம் காட்டியது. இன்று ஒவ்வொரு தாடியும் அடையாளம் அதேயாக, ஆனால் அனுபவத்தின் பின் அது தரும் அர்த்தம் ஆளுக்கு ஆள் வேறு வேறாகிக் காண்கிறதே. மேல் தட்டு வாழ்க்கை வெகு சுகமாகவே வாழ வகை தரும் ஓய்வு ஊதியம் பெறுபவர், அது போக நிறைய எழுதியே பொருளீட்டி வரும் ஸ்டார் எழுத்தாளர், இன்னும் நிறைய பொருள் தரும் ஆனால் அவ்வளவாக கெளரவம் தராத காாியம் வேண்டும் சினிமா வருமானத்திற்கு ஆசைப்பட்டு தரம் தாழ்வானேன் ? என்ற கேள்வி எழுந்தால், ‘என்ன செய்வது நானும் பிழைக்க வேண்டாமா ? ‘ என்ற ஸ்டாக் மறு கேள்வி பதிலாக வருகிறது. ‘பிழைக்க வேண்டாமா ? ‘ என்ற கேள்வி பிரம்மாஸ்திரமாக பயன்படுகிறது. சாதுவான தோற்றத்தில் மாய மானாக ஒர் அசுரனை மறைக்கிறது. ஐம்பது வருட பழைய, கீழ்த்தட்டு வர்க்க வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் நலனுக்காக கொணரப்பட்ட வாடகைக்

கட்டுப் பாட்டுச் சட்டம் தரும் பாதுகாப்பில், மாதம் லக்ஷக்கணக்கில் வாடகை வேண்டும் கடைகளை, சில நூறு ரூபாய் வாடகையுலேயே 1990 களிலும் கைப்பற்றி இருக்கும் கோடாஸ்வர கடை முதலாளிகளின் பிடியிலிருந்து விடுவிக்க கொண்டுவரப்பட்ட சட்டம், நாடாளுமன்றத்தின் பெருவாாியான ஒப்புதலைப் பெற்று, ராஷ்டிரபதியின் கையெழுத்தும் ஆகிய பிறகு, தில்லி கடைகாரர்களின் ஆக்ரோஷ போராட்டத்திற்கு, அன்றைய அரசு அடிபணிய வேண்டியதாயிற்று. இன்றும் அக்கட்டிடங்கள், 1950களின் சில நூறு வாடகை தரும் முதலாளியின் பிடியிலேயே தான் உள்ளன. இத்தகைய ஒரு நியாயமான, தேவையான சட்டம், ராஷ்டிரபதியின் கையெழுத்தாகிய பின்னும், அமலாக்கப் படாதது பற்றிக் கேட்டபோது, கட்சி வேறு பாடு இல்லாது, எல்லாத் தலைவர்களும் அளித்த பதில், ‘அவர்களும் இரண்டு வேளையாவது ரொட்டி சாப்பிட வேண்டாமா ? ‘ இந்த எளிய வார்த்தைகளின் அசுர குணம் எல்லோருக்குமா புாியும் ? அசுர குணம் போர்த்திய வார்த்தைகள் மாத்திரமே புாியும். அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் கால செலவுகள் எங்கேயிருந்து வருகிறது என்று தொியும். லக்ஷக்கணக்கில் பெறுமானம் கொண்டது ஒன்று அவர்களுக்கு சில நூறு ரூபாய்கள் வாடகைக்குக் கொடுக்கப்பட்டால் தான் அவர்கள் இரண்டு வேளை ரொட்டி சாப்பிட முடியும் போலும். இந்த வார்த்தைகளுக்குப் பின் இருப்பது பணம்.

எல்லோரும் தியாக பிரம்மமாக முடியுமா என்ன ? இது அந்த காலமா என்ன என்றும் கேள்விகள் தொடரலாம். பாரதி வாழ்க்கையில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. யதுகிாியின் ‘பாரதி நினைவுகளில் ‘ சொல்லப்படுகிறது. அடுத்துள்ள யார் வீட்டிலிருந்தோ பகல் சாப்பாட்டுக்காக தான் கடன் வாங்கி வைத்திருந்த அாிசியை எடுத்து பாரதி ‘குருவிகள் கொத்தித் தின்ன இரைத்து விட்டாரடி, நான் என்ன பண்ணுவேன் ? ‘, என்று செல்லம்மாள் பாரதி யதுகிாியிடம் முறையிடுவதாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அப்போது தான் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி ‘ என்ற பாடலும் பிறந்ததாக சொல்கிறார். அந்த பாரதியின் ஆளுமையை, ாஏன் அவரும் தானே தன் புத்தகங்களை வெளியிட எல்லோாிடமும் பணம் கேட்டார், ? பத்திாிகைகளில் விளம்பரம் செய்தார் ? என்று யாரும் கேட்கக்கூடும். ஆமாம், அவரும் தான் பணம் கேட்டார். எழுத்து பத்திாிகை நடத்த தன் மனைவியின் நகைகளை அடகு வைத்து பணம் புரட்டிய செல்லப்பா, மீண்டும் மீண்டும் சந்தா சேர்க்க பத்திாிகையில் கோாிக்கை விடுத்துக் கொண்டிருந்தார் தான். தன் புத்தகங்களை, மூட்டை கட்டிக் கொண்டு, பள்ளிகளிலும், கல்லூாிகளிலும் விற்பனைக்கு எடுத்துக் கொண்டு ஊர் ஊராக ஏதொ புடவை வியாபாாி போல அலைந்து கொண்டிருந்தார். ‘அவரும் பணத்துக்குத்தான் எழுத்து நடத்தினார், புத்தகங்கள் விற்றார் ‘ என்று ஒருவர் தன் ஆக்ரொஷமான பத்திாிகை புத்தக வியாபார முனைப்புகளுக்கு சாதக பலம் தேடும் வாதமாக முன் வைத்தாரென்றால், அவருக்கு வியாபாரே

ம குறி, ஆனால் இலக்கியம் ஒரு போர்வையாகத்தான், கைக் கொள்ளப்படுகிறது என்பது தெளிவு. நாம் எதைத் தான் யாரைத்தான், எந்த அர்ப்பண வாழ்வைத் தான் கொச்சைப் படுத்தவில்லை ? கொடும் வறுமையிலும், வந்த எந்த பாிசையும் வேண்டாம் என்று உதறிய மனிதரை கொச்சைப்படுத்த நாம் தயங்குவதில்லை. கொச்சையும் ஆபாசமுமான சினிமா வசனம் எழுதித்தான் ஒருவர் வாழ் வேண்டும் என்ற நிலை, எவருக்கும் இல்லை. ஆனால் ஒருவர் இதற்கு ஆசைப்படுகிறார் .சொல்லிக்கொள்ள வெட்கம் தரும் காாியத்திற்கு அவருக்கு வரும் பெரும் தொகையை வேண்டாம் என்று சொல்ல மனமில்லை, ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்ல வெட்கமாக இருக்கிறது. அவர் இன்னும் தாழத் தயார் தான். வாய்ப்புக் கிட்டாதவர்கள் கொள்ளும் பொறாமை என்றும் அவர்கள் சமயங்களில் சொல்வார்கள்.

இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தில்லியில் சங்கீத நாடக அகாடமி அலுவலகத்திற்கு தமிழ் நாட்டிலிருந்து ஒரு குழு வந்திருந்தது. அகாடமி அழைப்பு கிடைத்தது அவர்களுக்கு ஏதோ எதிர்பாராத அதிர்ஷ்டம் வந்தது போலத்தான். அவ்வளவு வறுமை. ஜீவனம் வெகு சிரமத்திலிருந்தது அவர்களுக்கு. ஆனால் அகாடமி ஒரு அழைப்பில் வரும் பணம், ஏதோ ஒரு நாள் விருந்துக்கு அழைப்பு கிடைத்தது போலத்தான். அப்போது என் சங்கீத அகாடமி நண்பர் அவர்களை. ‘ஏன்யா, நீங்க எம்.ஜா.ஆர் காலத்திலே அவ்வளவு நெருக்கமா இருந்திருக்கீங்க. எம்.ஜி.ஆர் உங்களை அவ்வளவு காிசனத்தோட பார்த்துக் கொண்டதாக சொல்றீங்க. இப்போ மந்திாியாக இருக்கிறது அவர் ஆளுதானே ஐயா, அவருக்கு உங்களை நல்லா தொிஞ்சிருக்கும் தானே ? அவர் கிட்டே போய் உங்க நிலையைச் சொல்லக் கூடாதா ? அந்த பழைய எம்.ஜி.ஆர் காலத்து ஒட்டுறவுக்காக அவர் உங்களுக்கு கட்டாயம் ஏது செய்வாரே ? ‘ என்று கேட்டார். அதற்கு அவர்கள் அளித்த பதில், ‘என்னமோ நீங்க தொியாம பேசறீங்க. எம்.ஜி.ஆர் விசயம் வேறே. இவர் விசயம் வேறேங்க. அவர் எங்கே இவர் எங்கேங்க. எல்லாரும் ஒண்ணாயிருவாங்களா ? இந்த மனுசன் கிட்டே போய் நிக்கறதுக்கு, நாங்க இப்படியே இருந்துடறோம்ங்க. மனுசனுக்கு மனுசன் தராதரம் இல்லீங்களா ? ‘ இது அன்று வறுமையில் வாடிக் கொண்டிருக்கும், அன்றாட சீவனமே சிரமாக இருப்பவர்கள் சொன்ன பதில். அவர்களுக்கு வாழ்க்கையில் சில மதிப்புகள் முக்கியமாகப் படுகின்றன. எப்படியும் வாழ்வத

ல்ல வாழ்க்கை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேல் வாழ்க்கை மதிப்புகள் உள்ளன. பணத்தின் வேட்டையில் நம்மில் பலர் மதிப்புகளை இழந்து வருகிறோம் என்பது ஒரு வேதனை தரும் உண்மை. மதிப்புகளை இழப்பதில் நம்மில் பலருக்கு ஏதும் கஷ்டமிருப்பதில்லை. டி.வி. யில் இரண்டு பேர் கேட்கும் அசட்டுக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வாய்ப்புக்காக ஏங்கிக் கிடப்பதில் நமக்கு ஏதும் பிரச்னை இல்லை. பேரைப் பதிவு செய்து கொண்டு எப்போது அழைப்பு வரும் என்று காத்துக் கிடப்போம். ஒரு சினிமா ஸ்டார், ஒரு அதிகாாி, ஒரு செல்வம் படைத்த வியாபாாி வீட்டு வாசலில் காத்துக் கிடக்கும் எழுத்தாள பெரும் தகைகள் நம்மில் உண்டு. அன்றைய ஸூப்பர் ஸ்டார், அமிதாப் பச்சன் முன் நிற்கும்போது, மெல்ல தலை நிமிர்த்திப் பார்த்து, ‘வாழ்வதற்கு வேண்டியது கிடைக்கிறதில்லையா ? ‘ என்ற ஒரு சாதாரண குசலப் ப்ரசனத்தோடு, அந்த ஸூப்பர் ஸ்டாரை தன் பார்வையிலிருந்து விலக்கிவிட்ட, க. நா.சு, வேறு உலகைச் சேர்ந்தவர். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்ளத்தொியாத மனிதர். விவேகம் உள்ளவராக இருந்தால், அமிதாப் பச்சன் ‘ஸாரைச் ‘ சந்தித்த மகத்வத்தைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதி அதை உலகத்திற்கு எடுத்துச் சென்று தன்னை விளம்பரப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். விளம்பரம், பிராபல்யம் என எடுத்துக் கொள்ளப்படும். பிராபல்யம், புகழ் எனக் கொள்ளப்படும். புகழ் சாதனை எனக் கொள்ளப்படும். எல்லாம் ஒன்றிலிருந்து மற்றதுக்கு இட்டுச் செல்லும் தொடர் சங்கிலி. கொள்ளைப்பணம் இருந்தால் வி

ளம்பரத்தை விலைக்கு வாங்கலாம். விளம்பரம் மற்றதுக்கு இட்டுச் செல்லும். மற்றவை எல்லாம் ஒரு சேர, தனக்கு அதிகாரம் தரும். அதிகாரம் ஆதரவு திரட்ட படை சேர்க்க, தன்னை அலட்சியம் செய்பவனை பயமுறுத்தி ஒடுக்க இப்படி எத்தனையோ பலங்களுக்கு இட்டுச் செல்லும். ஆனால், இவை அவ்வளவும் அந்தந்தப் பெயர்களால் அறியப் படமாட்டாது. இலக்கியம் என்போம். கலை என்போம். தமிழ் இனம் என்போம். சாதி ஒழிப்பு என்போம். முற்போக்கு என்போம். ஆனால் எல்லாவற்றுக்கும் அடி நாதமாக இருப்பது, பண வேட்டை. பணம் யார்தான் சம்பாதிப்பதில்லை. பலசரக்குக் கடைக் காரர், மில் சொந்தக் காரர்கள், ஜவுளிக் கடைக் காரர்கள், சினிமா முதலாளிகள், சாராயக் கடை ஏலம் எடுப்பவர்கள், இவர்களும் தான் பணம் சம்பாதிப்பதில் வாழ்க்கையைச் செலவிடுகிறார்கள். அதில் பெருமை இல்லை.அவர்கள் வெறும் பணக்காரர்கள். ஆனால் நாமோ கலைஞர்கள் எழுத்தாளர்கள். சிந்தனையாளர்கள். உலகுக்கு வழி காட்டுபவர்கள். வெளிப்படையாக பணம் மட்டும் சம்பாதிப்பவர்கள் வெறும் பணக்காரர்கள். அவர்கள் கலை உலகிலா இருக்கிறார்கள் ? எழுத்தாளர்களா ? கவிஞர்களா ? கலைஞர்களா ? இந்த போர்வைகள் தோரணைகள், முக மூடிகள் தோற்றங்கள் மிக முக்கியம். பாரம்பாியங்கள் மதிக்கப் படும் சமூகத்தில் பாரம்பாிய தோற்றங்களும் முக்கியம். ஆனால் அவை வெளியே காட்டிக் கொள்ளத்தான். ஆதார சுருதி பணம். அதற்கான இடையறாத வேட்டை. அது இருந்தால் விளம்பரம், பிராப்ல்யம், புகழ், கடைசியாக அதிகாரம், இப்படி

எல்லாம் தொடரும். பாரம்பாியம் என்று சொன்னதும் ஞாபகம் வருகிறது.

அநாதி காலம் தொட்டு தாடிகளைக்கண்டால் நமக்கு ஒரு பிரமை. மாியாதை. அவர்கள் ஏதோ புனிதர்கள் என்று நினைப்பு நமக்கு உடனே வந்து விடுகிறது. தாடி போலீஸ் சீருடை மாதிாி,போலீஸ் உடையில் கொள்ளைகாரர்களும் வருகிறார்களே. மிலிடர் உடை அணியும் நக்ஸலைட்கள் மாதிாி. இவையெல்லாம் ஒரு அடையாளம். தாடி வைத்தவர்கள் எல்லாம் முற்றும் துறந்த புனிதர்கள் இல்லை. ஞானிகளும் இல்லை. சுந்தர ராமசாமி வெகு அழகாக ஒரு இடத்தில் சொல்கிறார்.. சுந்தர ராமசாமி சொன்னது, ந.பிச்சமூர்த்தியைப் பற்றி பேச வந்த சந்தர்ப்பத்தில். பிச்சமூர்த்தியின் தாடியைத் தூக்கி அடிக்கும் தாடிகள் அவரது நாகர்கோயிலிலேயே நாலைந்து காணலாம் என்றார். அது அழகாக சொல்லப்பட்ட உண்மையான வாக்கானதால் மனதில் பதிந்து விட்டது. எங்கே சொல்லியிருக்கிறார் என்பது இப்போது நினைவில் இல்லை. இதிலிருந்து தாடிக்கு ஏதும் மகத்துவம் இல்லை என்று சொல்ல வருகிறார் அவர். ஆக தாடியை மாத்திரம் பார்க்கக் கூடாது. தாடியை மீறி உள்ளிருக்கும் மனிதனையும் அவன் செயல் பாடுகளையும் சிந்தனையையும் பார்க்கவேண்டும். ஆனால் தாடி போன்ற அடையாளங்களை வைத்து எடை போடுதல் சுலபம். உள்ளிருக்கும் மனிதனை அவ்வளவு சுலபமாக இனம் கண்டு கொள்ள முடியாது. தாடியும் பூசிக்கொள்ளும் ஒரு முலாமாக, பளபளக்கும் ஜாகினாவாக இருக்கக் கூடும். உண்மைகளுக்கு தாடியும் வேண்டாம், ஜாகினாக்களும் வேண்டாம். எத்தகைய வறுமையிலும் தன்னை, தன் எழுத்தைக் கெளரவிக்காத இடத்தோடு, முக்கி

யமாக தான் கெளரவிக்க இயலாத ஒரு ஸ்தாபனத்தோடு, மனிதர்களோடு உறவாட மறுத்தவர் அவர். அவருக்கும் பணம் வேண்டியிருந்தது தான். அவரும் தாடி வைத்தவர் தான். இந்த வெளித்தொியும் தோற்றங்களை, தேவைகளை மீறிய, இவற்றுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதராக அவர் இருந்தார். தியாக பிரம்மம், பாரதி, எம்.ஜி.ஆர் அநாதைகளாக விட்டுச் சென்ற அந்த வறிய சினிமாக் காரர்கள், க.நா.சு. செல்லப்பா, பிச்சமூர்த்தி இவர்கள் எல்லோருக்கும் நமக்கும் பொதுவான சில உண்டு. இச் சிலவை மீறி வாழ்ந்தவர்கள் அவர்கள். அச்சிலவே நமக்கு வேண்டிய தோரணைகளாக, வெளித்தோற்றங்களாக இருக்கின்றன. ‘நிதி சால சுகமா ? ‘ என்ற கேள்விக்கு நமக்கு தொிந்த ஒரே பதிலை வெளியே சொல்லமாட்டோம். வியாபாாிகள் மறைப்பதில்லை. எழுத்தாளர்கள், சிந்தனாவாதிகள், சமூகத்தைச் சீர்திருத்தப் போகிறவர்கள், அப்படியெல்லாம் இருக்கமாட்டார்கள்.

வெங்கட் சாமிநாதன்/21.2.05

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்