நாவல்: அமெரிக்கா II! அத்தியாயம் ஒன்பது: 42ஆம் வீதி மகாத்மியம்!

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

வ.ந.கிரிதரன்



அன்றையப் பொழுதினை நியூயார்க் மாநகரத்தின் மான்ஹட்டன் பகுதியில் சுற்றித் திரிந்து கழிப்பதாக இளங்கோவும் அருள்ராசாவும் தீர்மானித்திருந்தனர். இளங்கோவைப் பொறுத்தவரையில் எந்த வேலையானாலும் உடனே செய்வதற்குத் தயாராகவிருந்தான். அருள்ராசா அதற்குத் தயாரில்லை. அதற்கு அன்று காலை அவர்களிருவருக்குமிடையில் நிகழ்ந்த பினவரும் உரையாடலே விளக்கம்தரப் போதுமானது.

இளங்கோ: கோஷ் கூறியபடி ‘எம்பளாய்மெண்ட் ஏஜென்சிக்காரன்’ பீற்றரிடம்தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

அருள்ராசா: பீற்றரிடம் எடுக்கக் கூடிய ஒரேயொரு வேலை ‘கிட்டார்’ அடிப்பதுதான்.

இளங்கோ: என்ன கிட்டார் அடிப்பதா? எனக்குத்தான் தெரியாதே.

இதற்கு இன்னுமொரு கேலிச் சிரிப்பினை உதிர்த்து விட்டு அருள்ராசா இவ்விதம் கூறினான்: அதுதான் கோப்பை கழுவுவதுதான். அதற்குரிய பரிபாசைதானிது.

இளங்கோ: அதிலென்ன வெட்கம். எந்த வேலையானாலும் கிடைத்தால் செய்வதுதானே.

அருள்ராசா: எனக்கு அதில் விருப்பமில்லை. நான் பீற்றரிடம் வேலை தேட மாட்டன். விரிந்து கிடக்கும் ‘மான்ஹட்டனி’ல் அலைந்து திரிந்து வேறு ஏதாவது வேலை கிடைக்குமாவென்று பார்க்கப் போகிறன்.

இளங்கோ: எனக்கும் அதற்கு ஆசைதான். ஆனால் கையிலை கடிக்கேக்கை என்ன செய்யிறது. என்ற கையிலை இன்னும் நூற்றியம்பது டொலர்கள் வரையில் தானிருக்கு, அது முடியிறதுக்குள்ளை கொஞ்சக் காசைச் சேர்க்கப் பார்க்க வேணும். அப்ப நீ பீற்றரிடம் வரப் போவதில்லையென்று சொல்.

அருள்ராசா: அதுதான் எனது திட்டம். இன்றைக்கு மான்ஹட்டனைச் சுற்றிப் பார்ப்பம். நாளைக்கு முதல் வேலை தேடும் படலத்தை ஆரம்பிக்கலாம்.

இளங்கோ: பீற்றரிடம் போவதென்றால் நேரத்துடன் போக வேண்டுமென்று கோஷ் சொன்னவன். ஆறுமணிக்கே போய்க் காத்து நிற்க வேண்டுமென்று சொன்னவன். இன்றைக்கு அதற்குச் சரி வராது. இப்பொழுதே மணி ஒன்பதைத் தாண்டி விட்டது.

இதைக் கேட்டதும் அருள்ராசா இலேசாகச் சிரித்தான்.

இளங்கோ: என்ன சிரிக்கிறாய்?

அருள்ராசா: வேலையோ கோப்பை கழுவுவது. அதற்கு இவ்வளவு தூரம் கஷ்ட்டப்பட வேண்டியிருக்கு.

இளங்கோ: அது மட்டுமில்லை. ஒரு நாளிலை வேலை கிடைக்குமென்றுமில்லையாம். கோஷ் சொன்னதைப் பார்த்தால் சில சமயம் ஒரு கிழமை கூட ஒவ்வொரு நாளும் ஆறுமணிக்குப் போய் பின்னேரம் நாலு அல்லது ஐநு மணிவரை அவனது அலுவலகத்தில் காத்து நிற்க வேண்டுமாம். எப்ப வேலைக்குக் கூப்பிடுவாங்களென்று தெரியாதாம். கையிலையோ காசில்லை. வேலை பார்ப்பதற்குரிய ‘லீகல் டாக்குமென்ற்ஸ்’ இல்லை. இந்த நிலையிலை ஆட வெளிக்கிட்டாச்சு. எல்லாத்துக்கும் ஆடிப்பார்க்கத்தானே வேண்டும்.

அருள்ராசா: ஏதாவது கிடப்பதை வயிறுக்குள் தள்ளி விட்டு இறங்குவோம்.

கீழ் தளத்தில் பத்மா அஜித் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். ‘பில்லி ஜோயெல்’ ‘Up Town Girl’ பாடிக் கொண்டிருந்தான். அண்மையில்தான் வெளிவந்திருந்த அவனது ‘அப்பாவி மனிதன்’ (An Innocent Man) தொகுப்பிலுள்ள ஒரு பாடல். வெளிவந்ததிலிருந்து இசை உலகினைக் கலக்கிக் கொண்டிருந்தது. நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்குமொரு பாடல்.

இளங்கோ: திருமதி அஜித் கொடுத்து வைத்த பிறவி. அவளைப் பார் எவ்வளவு ஆனந்தமாக ‘நகரத்துப் பெண்ணை’ இரசித்துக் கொண்டிருக்கின்றாள்.

அருள்ராசா: ‘அளவற்ற சந்தர்ப்பங்களின் மண்’னென்று கூறும் மண்ணிலிருந்து கொண்டு முயற்சி செய்து பார்ப்பதை விட்டு விட்டு இப்படி அழுது வடியாதே.

இளங்கோ: அளவற்ற சந்தர்ப்பங்களை அள்ளி வழங்கும் மண்ணில் எமக்கென்ன சந்தர்ப்பங்களை அள்ளி வழங்கப் போகிறதோ. பார்க்கலாம்.

நண்பர்களிருவரும் எதோ இருந்ததை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு புறப்பட்ட பொழுது மணி காலை பத்தைத் தாண்டி விட்டிருந்தது. பாதாள இரயில் நிலையம் சென்று பயணத்துக்கான டோக்கன்களை வாங்கிக் கொண்டு உலகப் புகழ்பெற்ற 42வது வீதியின் ‘டைம்ஸ்’ சதுக்கத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

42ஆம் வீதி மகாத்மியம்:

இந்த நாற்பத்தியிரண்டாவது வீதியைப் போல் அமெரிக்காவில் இன்னுமொரு உலகப் புகழ் மிக்க வீதியைக் காண்பதரிது. நோக்குமிடமெங்கும் விளம்பரப் பலகைகளால் நிறைந்து கிடந்தது புகழ் பெற்ற 42வது வீதி. வருடா வரும் புதுவருடக் கொண்டாட்டம் நிகழும் மையமிதுதான். 1907இல் ஆரம்பிக்கப்பட்ட வழக்கமிது. உலகப் புகழ்மிக்க நாடக அரங்குகள் மிக்க ‘பிராட்வே’ வீதியும் வீதி 42உம், ஏழாவது ‘அவெனயூ’விற்குமிடைப்பட்ட பகுதிதான் மேற்படி ‘டைம்ஸ்’ சதுக்கப் பகுதி. இந்த 42ஆம் வீதிக்கு ‘டைம்ஸ் ஸ்குயர்’ பெயர் வருவதற்குக் காரணமாக விருந்தது நியூயார்க்கிலிருந்து வெளிவரும் பழமை வாய்ந்த பிரபல நாளிதழனான ‘நியூ யார்க் டைம்ஸ்’ தான். 1904இல் ‘நியூயார்க் டைம்ஸ்’ 43வது வீதியில் தனக்கென்றொரு கட்டடத்தை கட்டியதன் காரணமாகவே அதனை அண்மித்திருந்த மேற்படி 42வது தெருவை உள்ளடக்கிய பகுதி ‘டைம்ஸ் ஸ்குயர்’ என்று அழைக்கப்பட ஆரம்பித்ததாக வரலாறு பகரும். அதற்கு முன்னர் இப்பகுதி மிகுந்த ஆபத்து நிறைந்த பகுதிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. ‘லோங் ஸ்குயர்’ (Longacre Square) என்றழைக்கப்பட்ட அப்பகுதியின் பெயரை ‘டைம்ஸ் ஸ்குயர்’ என்று மாற்றியமைத்தது ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை நிறுவனம்தான். அதனைத் தொடர்ந்து இதனை அண்மித்த பகுதிகள் தியேட்டர்கள், பலவகைக் களியாட்ட விடுதிகள், அரங்குகள், ‘காபரே’ நடன விடுதிகளென இப்பகுதி வளர்ச்சியடைந்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கபுரியாக உருமாற்றமடைந்தது. 1929இல் ஏற்பட்ட பங்குச் சந்தைகளின் மாபெரும் வீழ்ச்சியினைத் தொடர்ந்து உருவான மிகப்பெரிய பொருளாதார மந்தச் சூழலைத் தொடர்ந்து மேற்படி பகுதியில் இயங்கிய பல்வேறு கேளிக்கைக் களியாட்ட விடுதிகள், நாடக அரங்குகள் எனப் பல வர்த்தக ஸ்தாபனங்களின் வருமானம் பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. அதனை நிவர்த்தி செய்ய அறுபது எழுபதுகளில் பெருமளவில் நிர்வாணக் காட்சிகளை உள்ளடக்கிய அரங்குகள், பாலியல் புனைவுகளை / பாலியற் செயல்களுக்கான காம சூத்திரங்களை / பெண்ணைப் பாலியல் ரீதியில் வெளிப்படுத்தும் / புணர்ச்சியை விளக்கும் வழிகாட்டுப் பிரதிகளை உள்ளடக்கிய காம இலக்கிய நூல்களைப் பெருமளவில் விறபனை செய்யும் புத்தகக் கடைகள், பாலியல் சாகசங்களைப் புரிவதற்குரிய சாதனங்களை, விற்பனை செய்யும் அங்காடிகள், வயது வந்தோருக்கான சினிமாக்களைத் திரையிடும் திரையரங்குகள், நிர்வாண அழகிகளை ‘எட்டிப் பார்க்க உதவும் துளைகளை’ கொண்ட காட்சியறைகள் (Peep-Hole Shows), நேரடியாகவே உடலுறவுக் காட்சிகளைப் பார்ப்பதற்குரிய அரங்குகள் (Live Shows) எனக் காமக்களியாட்டு மையமொன்று 42ஆம் வீதும் எட்டாவது அவென்யூவும் சந்திக்கும் பகுதியினை அண்மித்திருந்த பகுதிகளை ஆக்கிரமித்தன. எழுபதுகளின் நடுப்பகுதியில் குற்றச்செயல்கள் மலிந்ததொரு பகுதியாக உருவெடுத்த மேற்படி பகுதியினை நகரத்துப் பத்திரிகைகள் ‘மூழ்கடிக்கும் துளை’ (Sink Hole) என்றழைத்தன. இதன் காரணமாக வீழ்ச்சியைடையத் தொடங்கிய உல்லாசத் துறையினை மீளக் கட்டியெழுப்புவதற்காக இப்பகுதியிலுள்ள வர்த்த நிறுவனங்கள் மேற்கொண்ட கடும் முயற்சிகளின் விளைவாக எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து 42வது வீதி மீண்டும் தன் பழைய பெருமைக்கு மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருந்தது.

இந்த 42ஆம் வீதியும் , எட்டாவது அவென்யூவும் சந்திக்கும் பகுதியில்தான் நியூயார்க் மாநகரத்தின் பிரதான் பஸ் நிலையம் அமைந்திருந்தது. இவ்வீதியும் ஐந்தாவது அவென்யூவும் சந்திக்கும் பகுதியில்தான் நாட்டின் புகழ்பெற்ற நூலகங்களிலொன்றான ‘நியூயார்க் நகரத்துப் பொதுசன நூலகம்’ அமைந்திருந்தது.

ஒருபுறம் கல்வியின் உறைவிடம்; மறு புறமோ கலவியின் இருப்பிடம். அதிசயமான வீதி அமெரிக்காவின் இன்னுமொரு உலக அதிசயம். வருடா வருடம் 26 மில்லியன்களுக்கும் அதிகமானவர்களைக் கவர்ந்திழுக்கும் சொர்க்கபுரியல்லவா! அகிலத்தினைக் கவர்ந்ததில்தானென்ன வியப்பு!

நண்பர்களிருவரும் பாதாள இரயிலில் ‘டைம்ஸ்’ சதுக்கம் வரையில் வந்து , அங்கிருந்து சுரங்கப் பாதை வழியாக எட்டாவது அவென்யு பாதாள இரயில் நிலையத்துக்கு நடந்து வந்தார்கள். அங்கிருந்து 42வது தெருவும் எட்டாவது அவென்யூவும் சந்திக்குமிடத்திலமைந்திருந்த பிரதான பஸ் நிலையம் வழியாக வெளிவந்தவர்களை அமெரிக்காவின் சொர்க்கபுரி வரவேற்றது. மூலைக்கு மூலை காமக் களியாட்ட மாளிகைகளால், அங்காடிகளால், அரங்குகளால் நிறைந்திருந்த பகுதியில் அமைந்திருந்த வேலை வாய்ப்பு முகவன் பீற்றரின் அலுவலகம் நோக்கிச் சென்றார்கள். அன்றையதினம் அவனது இருப்பிடத்தை அறிந்து வைப்பதொன்றே அவர்களது நோக்கமாகவிருந்தது. அடுத்த நாளிலிருந்துதான் முறையான வேலை தேடும் படலத்தினை ஆரம்பிப்பதாக ஏற்கனவே தீர்மானித்திருந்தார்கள். அதற்கு முதற்படியாக அன்றைய தினத்தை நகர்வலம் வந்து இடத்தைப் பரிச்சயப்படுத்திக் கொள்வதற்குப் பாவிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்.


ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்