நாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும்.

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

குரு அரவிந்தன்


ரொறன்ரோ தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறன்ரோ பல்கலைக்கழக தெற்காசிய ஆய்வுமையமும் இணைந்து, 2006ம் ஆண்டுக்கான வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனைக்கான இயல் விருதை இவ்வருடம் ஈழத்து நவீன நாடக முன்னோடியும், தற்சமயம் லண்டனில் வசித்து வருபவருமான அ.சி.தாசீசியஸ_க்கு, நாடகத்துறையில் அவர் இதுவரை ஆற்றிய அளப்பரிய சேவைக்காக வழங்கிக் கௌரவிக்க இருக்கிறார்கள். இவ்விழா யூன் மாதம், ஞாயிற்றுக்கிழமை 3ம் திகதி 2007ம் ஆண்டு, மாலை ஏழுமணியளவில் ரொறன்ரோ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கின்றது.
இன்றைய தமிழ்சினிமா உலகத்திற்கு அடித்தளமாக இருந்த நாடகத்துறை, அரசியற்களத்திலும், சமூககளத்திலும் பெரும் பங்காற்றி, மாற்றங்களை ஏற்படுத்தியதை யாராலும் மறக்கமுடியாது. ஒரு நாடகத்தை மேடையேற்றும்போது அந்த நாடகத்தின் வெற்றிக்கு, அதன்கருப்பொருளும் கதையும் எவ்வளவு முக்கியமோ அதேபோல அதன் நெறியாள்கையும், அரங்க ஒழுங்கும் மிகவும் முக்கியமாகும். நடிப்பு, நெறியாள்கையில் மட்டுமல்ல, அரங்க மேற்பார்வையிலும் மிகவும் அவதானமாக தன்னை ஈடுபடுத்திச் சாதனை புரிந்தவர்களில் அ.சி. தாசீசியசும் ஒருவராவார்.
தமிழீழம், தாளையடியை பிறப்பிடமாகக் கொண்ட அல்பொன்ஸ்சஸ் – எட்வீசம்மா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த இவர், அந்த நாட்களில் புகழ்பெற்ற அண்ணாவியாராக விளங்கிய யோவாம்பிள்ளையின் பேரனாவார். கனடாவில் புகழ்பெற்ற நாடக இயக்குணர் ஞானம் லம்பேட்டின் மைத்துணரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான இவர், ஆரம்பகல்வியை தாளையடி தமிழ்ப் பாடசாலையில் கற்றார். அதன் பின் இளவாலை சென்கென்றீஸ், யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் போன்ற பாடசாலைகளில் தனது உயர்கல்வியைக்கற்று, பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கும்போதே ஆங்கில நாடக அரங்கில் சேர்ந்து பயிற்ச்சி பெற்றார். இதைவிட கொழும்பு பல்கலைக்கழகத்தின் நாடகம் கற்பித்தல் பற்றிய பட்டப்பின் பயிற்சியும் அங்கே பெற்றுக் கொண்டார். இலங்கைத் தமிழரின் நாடகமரபு, கூத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று கிராமிய கூத்துக்களையும், கண்டிய நடனத்தையும் கற்;றுக்கொண்டார். தான் கற்றவற்றை, தனது அனுபவத்தைக் கொண்டு மேற்கத்திய நாடக நுட்பங்களோடு கலந்து, புதிய உத்திகளைக் கையாண்டு மேடையேற்றியதால், நாடக உலகில் சிறந்த வரவேற்பையும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.
‘விழிப்பு’ என்னும் நாடகத்தில் மிகவும் சிறப்பாக நடித்ததற்காக 1975ம் ஆண்டு சிறந்த நடிகருக்குரிய பரிசு இவருக்குக் கிடைத்தது. 1980ம் ஆண்டு நடைபெற்ற தேசிய நாடக விழாவில் இவரால் எழுதப்பட்டு. நெறிப்படுத்தப்பட்ட ‘பொறுத்ததுபோதும்’ என்னும் நாடகம் நான்கு பரிசுகளைத் தட்டிச் சென்றது. இந்த நாடகத்தில் நடித்த பிரான்ஸிஸ் ஜெனம் என்பர் சிறந்த நடிகருக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். மேலும் சிறந்த நாடகத்திற்கான ஜனாதிபதி விருதினையும், சிறந்த பிரதிக்கான விருதினையும், சிறந்த நெறியாள்கைக்கான விருதினையும் இவரது இந்த நாடகம் பெற்றுக் கொடுத்தது. மகாஜனக்கல்லூரியின் மும்மணிகள் என்று சொல்லப்படுபவர்களில் ஒருவரான மகாகவியின் கோடை, புதியதொருவீடு போன்ற நாடகங்களை சிறந்தமுறையில் நெறியாள்கை செய்த பெருமை இவருக்குரியதே! இதைவிட பிச்சைவேண்டாம், எந்தையும் தாயும், கந்தன்கருணை போன்ற நாடகங்களும் பலரின் பாராட்டை இவருக்குப் பெற்றுக் கொடுத்தன. ஸ்ரீசலாமி என்ற இவரது நாடகம் சுவிஸ் நாட்டில் முப்பத்தியாறு தடவைகள் மேடையேற்றப்பட்டதையும் இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.
தொழில் நிமிர்த்தம் 1980ல் நைஜீரியாவிற்குச் சென்ற காலத்தில் இவரது நாடக முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டாலும், அத்துறையில் இருந்த தனது ஆர்வத்தை இவர் கைவிடவில்லை. அங்கிருந்து லண்டனுக்கச் சென்ற இவர் பிபிசி நிறுவனத்தில் பணியாற்றினார். சமீபத்தில் தடைசெய்யப்பட்ட ரீரீஎன் தொலைக்காட்சி சேவையில் பணியாற்றி இவர், லண்டன் ஐபிசி வானொலி நிறுவினர்களில் ஒருவராவார். கொழும்பில் இருந்த வெளிவரும், டெமினிக்ஜீPவாவை பிரதம ஆசிரியராகக் கொண்ட ‘மல்லிகை’ என்னும் பத்திரிகை இவரது படத்தை அட்டைப்படமாகப் பிரசுரித்தது மட்டுமல்ல, இவரைப்பற்றி இவரது இலக்கிய நண்பரான குழந்தை சண்முகலிங்கம் எழுதிய கட்டுரையையும் பிரசுரித்து இவரைக் கௌரவப் படுத்தியிருந்தது.
ரொறன்ரோ தமிழ் இலக்கியத் தோட்டத்தால், 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயல்விருது திட்டத்தில், 2001ம் ஆண்டுக்கான விருதை சுந்தர ராமசாமியும், 2002ம் ஆண்டுக்கான விருதை கே. கணேசனும், 2003ம் ஆண்டுக்கான விருதை வெங்கட் சுவாமிநாதனும், 2004ம் ஆண்டுக்கான விருதை பத்மநாபஐயரும், 2005ம் ஆண்டுக்கான விருதை ஜோர்ஜ் ஹார்ட்டும் பெற்றுக் கொண்டனர்.
கடந்த பன்னிரண்டு வருடங்களாக, அவ்வப்போது எழுத்தாளர்களையும், இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்களையும் இனம்கண்டு கௌரவித்துவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்போல, வருடாவருடம் இத்தகைய இயல் விருதைக் கொடுத்துக் கௌரவிக்கும் ரொறன்ரோ தமிழ் இலக்கியத்தோட்டத்தைச் சேர்ந்த அங்கத்தினர் எல்லோருமே இந்த அரியமுயற்ச்சிக்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். குறிப்பாக ஏற்பாட்டாளர்களான பிரபல ஈழத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம், கலாநிதி செல்வாகனகரட்ணம் என்.கே.மகாலிங்கம், காலம்செல்வன் போன்றவர்களும், அவர்களின் குழுவைச் சேர்ந்தவர்களும் பாராட்டுக்குரியவர்கள். புகலிட மண்ணில் இவர்களது அளப்பரிய இலக்கியப்பணி மேலும் தொடர, மனதார வாழ்த்துகின்றோம்.

Series Navigation

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன்