அப்துல் கையூம்
“வேடிக்கை” என்ற வார்த்தைக்கு நாகூர் அகராதியில் விதவிதமான அர்த்தங்கள் உண்டு. ஒரே வார்த்தையை ஓராயிரம் அர்த்தத்தில் உபயோகிப்பதே ஒரு வேடிக்கைதானே? ஓராயிரம் என்றால் துல்லியமாக ஓராயிரம் என்று கணக்கில் கொள்ளலாகாது. ஓராயிரம் மைனஸ் ஒன்றிரண்டாகவும் இருக்கக்கூடும்.
வீதியிலே கூட்டத்தைக் கூட்டி, மகுடி ஊதி, “பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுகிறேன் பார்” என்று வித்தை காட்டும் காட்சி மட்டுமே வேடிக்கை என்று நாம் நினைத்தால் அது தப்புக் கணக்கு.
‘வேடிக்கை’ என்றால் வினோதம், விசித்திரம், ஆச்சரியம் என்ற அர்த்தமும் உண்டே என்று நீங்கள் வினவலாம். அதையும் தாண்டி எத்தனையோ அர்த்தங்களை எங்களூர் இயல்பாய் கற்பித்திருக்கிறது.
வேடிக்கைச் செய்திகள், வேடிக்கை நிகழ்வுகள், வேடிக்கைப் பழக்கங்கள், வேடிக்கை மனிதர்கள் நிறைந்த வேடிக்கை உலகம் அது. நகைச்சுவை உணர்வு நாகூர் மக்களின் நரம்பினில் ஓடுவது. புன்முறுவலை உதடுகளில் அழியாத லிப்ஸ்டிக்காய் பூசிக் கொண்டவர்கள் இவர்கள். புன்னகையை பொன்நகையாய் கவசகுண்டலமாக்கிக் கொண்டவர்கள்.
“வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?”
என்று மகாகவி சொல்லும் வேடிக்கை மனிதர்கள் வேறு, இந்த வேடிக்கை மனிதர்கள் வேறு. பாரதி சாடிய வேடிக்கை மனிதர்கள் வீணர்கள். இவர்களோ கவிவாணர்கள், இசைவாணர்கள்.
நாகூரில் தடுக்கி விழுந்தால் பாடகன் அல்லது கவிஞன் காலில்தான் விழவேண்டும் என்று சமுதாயக் கவிஞர் தா.காசீம் கூறுவார். “புலவர்கோட்டை” என்ற பழம் பெயர் பொருத்தமே என்பார்.
வடமொழி “தேவபாஷை” தமிழ் மொழி “நீசபாஷை” என்று கருத்து பரவி மணிபிரளாத்தமிழ் ஓங்கியிருந்த காலத்திலும் தன்னிலை இழக்காது சோறு/ ஆணம்/ தேத்தண்ணி (தேயிலைத்தண்ணீர்)/ மிளகுத்தண்ணி/ திறப்பு/ சூலி/ விளக்குமாறு/ சோத்துக்களறி/ உண்ணுங்க/ பசியாறுங்க என்று தூயதமிழ் பேசிய இவர்களை ‘வேடிக்கை மனிதர்கள்’ என்றுதானே உலகம் அன்று விமர்சித்திருக்கும்?
‘ஏற்பது இகழ்ச்சி’ என்ற உண்மை அறிந்திருந்தும் “ஈவது விலக்கேல்” என்ற சொல்லை மறவாது கையேந்தி நிற்கும் யாசகனிடத்தில், ஈவதற்கு ஏதும் இல்லாத சூழ்நிலையில்; “மாப்பு செய்யுங்க பாவா” என்று பிச்சைக்காரர்களிடத்திலேயே மன்னிப்புக் கேட்கும் பண்பு வேடிக்கையான ஒன்றுதானே?
மண்பாண்டம் மணம் வீசும் சுவைமிகுந்த ‘குண்டாச்சோறினை’ மிஸ்கீனிடத்திலேயே காசு கொடுத்து வாங்கும் கனவான்களின் வாடிக்கையை ‘வேடிக்கை’ என்றுதானே வர்ணிக்க வேண்டும்?
ஒருவேளைச் சோற்றுக்கு கையேந்தப்போய் இரண்டு. மூன்று சோத்துச்சீட்டை கைவசம் வைத்துக்கொண்டு எதைக் கொடுத்து சாப்பிடுவது? எதை விடுவது? என்று திணறும் வேடிக்கை மனிதர்களை இந்த ஊரில் காணலாம்.
“எனக்குப் பெரிதாக ஊர்ப்பாசம் கீர்ப்பாசமெல்லாம் கிடையாது. இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்து பொறுக்கிய இடங்களைப் பற்றிப் படிக்கும் போது தவிர்க்க முடியாமல் ஒரு ‘நாஸ்டால்ஜிக்‘ உணர்வு வந்து குந்திக் கொள்கிறது” என்று ஏனோ தானோவென்று வேண்டா வெறுப்பாக தன் ஊர்ப்பாசத்தை உலகறிய பிரகடனப்படுத்தும் என் சகஊர்த்தோழர் சாரு நிவேதிதாவை என்னவென்று விமர்சிப்பது? எதிர்மறையாக பேசிப்பேசியே விளம்பரம் தேடிக்கொள்வது அவர் பாணி என்று விட்டுத்தள்ள வேண்டியதுதான்.
ஊர்ப்பாசம் மிகுதியால் தங்கள் சொந்தப் பெயரே மறைந்து குன்னக்குடி, வளையப்பட்டி, மகாராஜபுரம், பட்டுக்கோட்டை, சீர்காழி என்று அறியப்படும் கலைஞர்களை இவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
ஆனைக்கு தும்பிக்கை எப்படி முக்கியமோ, மனிதனுக்கு நம்பிக்கை எப்படி முக்கியமோ, அதுபோன்று ‘வேடிக்கை’ இந்த ஊருக்கு முக்கியம்.
“நல்ல வேடிக்கை போங்க” என்று மூக்கின் மேல் விரலை வைத்து கொள்வார்கள் எங்களூர் தாய்க்குலங்கள். அந்த ‘வேடிக்கை’யில் எதிர்பார்ப்பு, பெருவியப்பு பொதிந்துள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும்.
“இந்த வேடிக்கையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க” என்று நண்பர் கோபப்பட்டால் ‘பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் நம்ம கிட்ட வேண்டாம்’ என்று அர்த்தம்.
“மச்சான், இன்னிக்கு கடைதெருவிலே செம வேடிக்கை” என்று நண்பன் தகவலோடு வந்தால் அதில் கேலி, கிண்டல், கூத்து, கும்மாளம், கேளிக்கை, பொழுதுபோக்கு அடங்கியுள்ளது என்று அர்த்தம்.
செட்டியார் பள்ளியில் படிக்கையில் “அங்கே என்ன வேடிக்கை?” என்று ஒரு அதட்டலை உதிர்ப்பார் சரவணா சார். சொம்பும் கையுமாய் ஒதுக்குப்புறத்துக்கு யாராவது போய்க் கொண்டிருப்பார். அதில் என்ன வேடிக்கை வேண்டிக் கிடக்கு? அப்படியென்றால் வெளியில் நடக்கும் யாவும் வேடிக்கை என்றுதானே அர்த்தம்?
நகர்புறத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமெனில் ஜன்னல், பால்கனி அல்லது வாயிற்படியில் வந்து எட்டிப்பார்க்க வேண்டும். நாகூர்வாழ் மக்களுக்கு அதற்கு அவசியமே இல்லை. முற்றத்தில் படுத்துக் கொண்டே காற்றுப்பந்தல் வழியே அண்ணாந்து வெளியுலகை ஆசைதீர கண்டு இரசிக்கலாம். இந்த “Wind Tower Technology” விலாசத்தினால் இவர்களின் சுவாசப்பை போலவே இதயமும் விசாலமாகி விடுகிறது.
பக்கத்து வீட்டு முத்தாச்சி மாமி “இந்த வேடிக்கையை கேட்டிஹலா புள்ளே” என்று ஆரம்பித்தால் அதில் வில்லங்கம் இருக்கிறது என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். “கலியாணம் ஆயி இன்னும் ஒரு மாசம் கூட ஆவலே அதுக்குள்ளே புது மாப்பிள்ளைக்கி அஹ வூட்லே கடை சமுசா வாங்கி வச்சிருக்காஹா” என்று நாட்டு நடப்பை போட்டு உடைப்பார். இதில் என்ன வேடிக்கை? என வினவலாம். இந்த ஊரை பொறுத்தவரை இது ஒரு வேடிக்கையான கெளரவப் பிரச்சினை.
வியாழக்கிழமை வந்தாலே வேடிக்கைமயம்தான். சுற்றுப்புற ஊர்களிலிருந்து கூட்டம் வரத் தொடங்கிவிடும். பக்தி முற்றி பரவசம் பொங்க வரும் பக்தகோடிகளை விட வேடிக்கை நாடி ஓடி வரும் ஆடியன்ஸ்தான் அதிகம்.
கடைத்தெருவில் கமகமக்கும் கடலை வறுக்கும் வாசம் முதற்கொண்டு, அனாடமி படிக்கும் மாணவர்களுக்கு உபயோகப்படும் கை, கால், கண், காது, மூக்கு, தொடை என்று விற்கும் வெள்ளித்(?) தகடுகள் உட்பட எல்லாமே வேடிக்கைமயம்தான்.
அலங்கார வாசலில் தர்கா யானையை சீவி சிங்காரித்து ஆடை அணிகலன்கள் அணிவித்து பரிவட்டம் கட்டி நிற்க வைப்பார்கள். எதற்கு? தர்காவிற்கு செக்யூரிட்டி அதிகரிக்கவா? எல்லாம் ஒரு வேடிக்கைக்காகத்தானே?
வெளியூரிலிருந்து உள்ளூருக்கு வேடிக்கை பார்க்க வருகின்ற கூட்டம் ஒருபுறம் என்றால் வெளியூர்க்காரர்களை வேடிக்கை பார்க்கின்ற உள்ளூர்க்காரர்கள் மற்றொருபுறம். இவர்களுக்கு அவர்கள் வேடிக்கை. அவர்களுக்கு இவர்கள் வேடிக்கை. என்ன ஒரு வேடிக்கை பார்த்தீர்களா?
நேர்த்திகடனுக்காகாக மொட்டை போட்டு தலைமுழுக்க சந்தனம் பூசி பளபளவென்று பவனிவரும் ஆந்திரா ஆசாமியைக் கண்டால் இவர்களுக்கு வேடிக்கை. கொஞ்சம் ‘தபுரூக்’ எடுத்துக் கொள்ளலாமா என்று அந்த ஆசாமியின் தலையில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை பிய்த்து அவர் ‘ஆ’வென்று கத்துவதை வேடிக்கையாகக் கருதும் விஷமத்தனமான இளவட்ட பசங்களின் குறும்பினை என்னவென்று சொல்வது?
பொழுது சாயும் வேளையில் “குண்டு போட்டாச்சா?” என்று ஒருவர் வினவ “இல்லை இன்னும் போடலே” என்று மற்றவர் பதிலுரைக்க இந்த உரையாடலைக் கேட்கும் வெளியூர்க்காரர் “நாம் ஏதோ ஈராக் போன்ற ஒரு War Zone-க்குள் வந்துவிட்டோமோ என்று துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்ற ரேஞ்சுக்கு ஓடக்கூடும்.
அந்த பொன்மாலைப் பொழுதில் தர்காவிலிருந்து குண்டுச் சத்தம் (வெடிச்சத்தம்) கேட்க, சிறகடித்து வானுயர்ந்த கோபுரங்களை வட்டமிடும் புறாக்களின் கூட்டம் கண்கொள்ளாத வேடிக்கையாக இருக்கும்.
காற்று வாங்க கடற்கரைக்கு காலாரச் செல்லும் வெளியூர்க்காரரின் காதில் விழுமாறு குறும்புக்கார என் நண்பன் “அதோ சிங்கம் வருது பாரு” என்று கமெண்ட் அடிக்க அசந்துப் போய் நடந்து வந்த அவரோ கம்பீரமாக ராஜநடை நடக்க, “என் நண்பன் சொன்ன சிங்கத்திற்கு அர்த்தம் வேறு சார்” என்று அவரிடத்தில் நான் சென்று போட்டுக் கொடுக்கவா முடியும்?
வேடிக்கை காட்டுவதில் நாங்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. சின்ன ஹந்திரி, பெரிய ஹந்திரி, வாஞ்சூர் ஹந்திரி, சில்லடி ஹந்திரி, மவுலூது, ஆஸுரா, ஒடுக்கத்து புதன், மீலாது நபி, என்று வேடிக்கையே வாடிக்கையாகி விட்ட ஊர் எங்களூர். மினாராவுக்கு சாந்து (சாயம்) பூசுவதும், பாம்பரம் ஏற்றுவதும் கூட எங்களுக்கு வேடிக்கைதான்.
இன்னபிற ஊர்களில் தேரோட்டம் வேடிக்கையெனில் எங்களூரில் பீரோட்டம் வேடிக்கை. சமுத்திரத்தில் செல்லுகின்ற கப்பல்கள் சாலையில் சென்றால் அது வேடிக்கை அல்லவா? தண்டவாளத்தில் செல்லும் புகைவண்டி தார்ரோட்டில் சென்றால் அது வேடிக்கைதானே?
“குவா குவா மொம்மது காக்கா கொத்துப் பரட்டா” என்று துருக்கி உடை அணிந்த கோரஸ் குழு, அவர்களுக்கு மட்டுமே புரிந்த பாஷையில் ரைம்ஸ் பாடுவது என்னவொரு வேடிக்கை தெரியுமா?
ஊரு உலகத்தில் உள்ளங்கை சைஸில் விற்கும் ஜிலேபி இங்கே ஓரடி விட்டத்தில் தயாராவது வேடிக்கைதானே?
புரோட்டாவின் சைசுக்கு ஏற்றார்போல் Single, Double, Triple என்று கூட்டிக் கொண்டுபோகும் நாகூர் மக்கள், விலைவாசி ஏற ஏற, Tetra, Penta, இன்று நாளடைவில் புதுப்பெயர் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வாணவேடிக்கை என்று ஒரு நாளையும் வைத்து அக்கம் பக்கத்தாரை திரட்டுவதும் இந்த வேடிக்கை மனிதர்களின் சிறப்பு.
“The Great Show man” என்று இந்தி தயாரிப்பாளர் ராஜ்கபூருக்கு பட்டத்தை அளித்ததைப்போன்று நாகூரார்களுக்கும் யாராவது பட்டம் கொடுத்திருக்கலாம்.
பாரதி இருந்திருந்தால்
“வேடிக்கை மனிதரைப்போல் – நான்
வாழ்வேனோ சர்வேசா”
என்று பாடி மகிழ்ந்திருப்பான்.
அப்துல் கையூம்
vapuchi@hotmail.com
அருஞ்சொற்பொருள் :
தபுரூக் = பிரசாதம்
மிஸ்கீன் = வறியோர்
ஹந்திரி = கந்தூரி உற்சவம்
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நாசா செவ்வாய்க் கோள் காலநிலை அறியும் விண்ணுளவித் தேர்ந்தெடுப்பு !(கட்டுரை 56 பாகம் -3)
- படைப்பாளுமைகள் சி. மணி, அப்பாஸ் நினைவு
- அசோகமித்திரன் 77: தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -32 << காதல் ஊடல்கள் ! >>
- தழும்பு வலிக்கிறது
- தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன்
- நாகூர் – ஒரு வேடிக்கை உலகம்
- சங்கச் சுரங்கம் – 10 : பெரும்பாணாற்றுப் படை
- அழகியநெருடல்
- ஒத்திவைக்கப்பட்ட சப்தங்கள்….
- எதைச் சொல்வீர்கள்?…
- தொலைந்த செடிகளின் புன்னகை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5 பாகம் -2
- நிழற்படங்கள்
- பாடுக மனமே
- நரகம்
- தேடும் என் தோழா
- நினைவுகளின் தடத்தில் – (29)
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்
- காதலைத் தேடும் பெண்
- சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 2
- சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1
- காட்சி
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று
- எதிர்வீட்டு தேவதை
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -6 (இறுதிக் காட்சி)