நாகரீகங்களின் மோதல்

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

நடராஜா முரளிதரன்



அண்மையில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “விடுதலை” என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் அந்த நூலில் அமெரிக்க வரலாற்று அறிஞர் “சாமுவேல் ஹண்டிங்ரன்” முன்வைத்த “நாகரீகங்களின் மோதல்” என்ற வரலாற்றுக் கோட்பாடு தொடர்பாக “உலக வரலாறும் மனித விடுதலையும்” என்ற தலைப்பிலான கட்டுரையில் பாலசிங்கம் அவர்கள் சுருக்கமாகவும், சுவைபடவும் சில விடயங்களைக் கூறியுள்ளார். அவற்றில் என் வாசித்தலுக்கூடாகப் பெறப்பட்டவை குறித்து சிறிது அலசலாம்; என்று எண்ணுகின்றேன்.
சமகால, எதிர்கால உலக நெருக்கடிகளின் உச்சப் பரிமாணமாக வேறுபட்ட நாகரீகங்களைச் சேர்ந்த மக்கள் இனங்கள் மோதிக்கொள்வது வாயிலாகவே மனித வரலாறு கட்டவிழ்ந்து செல்லும் என்பதே “சாமுவேல் ஹண்டிங்ரனின்” கோட்பாட்டு மையமாகும்.
அவரது கோட்பாட்டை மேலும் அழுத்தியுரைக்கு முகமாக 1997 ஆம் ஆண்டு “நாகரீகங்களின் மோதலும் உலக ஒழுங்கை மீளமைத்தலும்” என்ற நூல் அவரால் மேலும் வெளியிடப்பட்டது.
பனிப் போர் முடிவு கருத்தியல் முரண்பாடுகளையும், சிந்தாந்தச் சிக்கல்களையும் செயலிழக்க வைத்த நிலையில் சித்தாந்தங்களும், அரசியல் அமைப்பு வடிவங்களும், பொருளாதாரக் கட்டமைப்புக்களும் சமுதாயங்களின் தனித்துவத்தை ஆழ்ந்து அவதானிக்கத் தவறிவிட்டன. ஆனாலும் பண்பாட்டு அடையாளங்களே மனித சமூகங்களின் தனித் தன்மைகளை, அடையாளங்களை வரையறை செய்கின்றன.
ஏந்த மக்கள் கூட்டமும் தங்களை இனம் கண்டு கொள்ளவும், இனம் காட்டிக் கொள்ளவும் பண்பாட்டு அம்சங்களே ஆதாரங்கள் . பண்பாட்டின் அதி உயர் தோற்றமே நாகரீகம் எனலாம். சமூகங்களின் வரலாற்றுத் தொடர்ச்சியானது மனித நாகரீகங்களின் கதை சொல்லல்களாக முடிவுறாத தொடர்ச்சியாக நீள்கிறது. இத் தொடர்ச்சியில் வளர்ச்சி பெற்ற, வளர்ச்சி பெற முயலும் பெரு நாகரீகங்கள் ஆதிக்கப் போட்டியை நிகழ்த்துகின்றன. முரண்பட்டுக்; கொள்கின்றன. புரட்சிகள் எழலாம்.விழலாம்.
சமுக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். விதி விலக்காக கால வெள்ளத்தில் அமிழ்ந்து போன நாகரீகங்கள் இருந்த போதிலும் பெரு நாகரீகங்கள் இந்தக் காலச் சூறாவளிகளையெல்லாம் கடந்து தாக்குப் பிடிக்கின்றன என்றெல்லாம் “சாமுவேல் ஹண்டிங்ரன்” கூறுகின்றார்.
இந்த “நாகரீகங்களுக்கான மோதல்” வரலாற்றில் பெரிது, சிறிது என்ற எல்லைகளைக் கடந்து அனைத்து வகை மக்கள் கூட்டத்துக்குமான பொதுமையாக அமைந்து விடுமா? ஏன்ற கேள்வியே என் ஆழ் மனதில் நெருடிக் கொண்டிருந்தது.
சிறிலங்காவிலே இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இன முரண்பாட்டில் தமிழ், சிங்கள ஆகிய இரு இனங்களும் மொழி, மதம், பண்பாடு என அனைத்திலும் வேறுபாடு கொண்டவை. இந்த முரண்பாட்டினை தேசிய இன முரண்பாடாகவே உலகம் கண்டு கொள்கிறது. இவற்றை நாகரீகங்களுக்கிடையிலான மோதலாகவும் நோக்க முடியுமா? ஏன்பது குறித்தே நான் சிந்திக்க விழைகிறேன்.
இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சியின் வரலாற்றுப் போக்கு மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்தோடு முரண்படுவதை இன்று நாம் காணுகின்றோம். பல கோடி முஸ்லீம் மக்கள் தமது மதத்தை நாகரீகச் சின்னமாக நோக்குவதை
, தமது வாழ்வின் அர்த்த பரிமாணங்களை இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு ஊடாகப் பெற முயல்வதை நாம் அவதானிக்க முடியும்.
இஸ்லாமிய மதமானது சமூக, அரசியல், பண்பாட்டுக் கருத்துருவாக்கங்களைத் தீவிர நிலையில் வழிநிலைப்படுத்த முயல்வதால் ஆயுதம் தாங்கிய இராணுவ வாதமாகவும் அது மாறி விடுகிறது.
சிறிலங்காவை எடுத்துக் கொண்டால் சிங்கள நாகரீகமானது தனது பண்பாட்டின் தனித்துவத்தையும், சிறப்பான அம்சங்களையும் வலுப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அதனைத் தமிழ் நாகரீகத்தின் மீது திணித்து விட முயற்ச்சிப்பதாக கருதிக் கொள்ள முடியுமா? அல்லது தனது
நாகரீகத்தின் இருப்புக் குறித்த அச்சம் காரணமாக தமிழ் நாகரீகத்தின் மீது மேலாதிக்கத்தை ஏற்படுத்தித் தமிழ் நாகரீகத்தைக் கட்டுக்குள் கொணர விழைந்ததன் விளை பொருள்தானா இன்று நிகழும் கோர யுத்தம்?
மறு புறத்தில் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அதிகார சக்திகள் இனங்களுக்கிடையிலான முரண்களைக் கிளறி விடுவதாகக் கூறிடும் வாதங்கள் மேற் குறிப்பிட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் அர்த்தம் இழந்து போவதையும் நோக்க முடியும்.
நாகரீகங்களுக்கிடையில் ஏற்படும் முரண்நிலைப் போக்கே எதிர்கால உலக அரசியலையும், மானுடத்தின் வரலாற்றையும் தீர்மானிக்கும் என்ற
“சாமுவேல் ஹண்டிங்ரன்” நிலைப்பாடு உலகமயமாதலில் மேற்குலக கிறீஸ்தவ நாகரீகம் தனது பண்பாட்டு விழுமியங்களை சர்வதேசியப்படுத்தும் வேளைகளில் ஓரளவு பலம் வாய்ந்த நிலையில் காணப்படும் சீன, இஸ்லாமிய நாகரீகங்களோடு மோதுகின்ற களங்களை உருவாக்கி வந்த போதும் இன்றைய உலகின் போர்க்களங்களை நிர்மாணிப்பது இன நெருக்கடிகளால் விழைந்த இன மோதல்களே என்கிறது.
பிளவுபட்டு நிற்கும் பண்பாட்டு உலகங்கள் மத்தியில் ஒத்திசைவு ஏற்படாதென்றும், இந் நாகரீகங்கள் தங்களை உச்சநிலை வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல மாட்டாதவையென்றும் கூறும் “ஹண்டிங்ரன்” இவற்றினால் பேரழிவுகளே விழையும் என்றும் எதிர்வு கூறுகிறூர்.
இவ்வாறு நாகரீகக் கோட்பாட்டின் அடிப்படையில் உலக உறவுகளை ஆராய முற்படும் ஹண்டிங்ரனை நோக்கிச் சில கேள்விகளையும் பாலசிங்கம் அவர்கள் எழுப்புகிறார்.

ஈராக் மீதான அமெரிக்கப் போரை கிறீஸ்தவ-இஸ்லாமிய நாகரீக மோதலாக மட்டுமே எடை போட முடியுமா?
மேற்குலக கிறீஸதவ நாகரீகத்தைச் சேர்ந்த நாடுகள் மத்தியிலே எழும் முரண்பாடுகளை எவ்வாறு புரிந்து கொள்வது?
இஸ்லாமிய நாகரீகத்தைச் சார்ந்த நாடுகள் ஒரே பண்பாட்டு உலகமாக ஒன்றுபட்டு நிற்காது பிளவுபட்டு முரண்படுவதேன்?
சீன தேசத்தை மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்திற்கு விரோதமான சக்தியாக கருத முடியுமா?

போன்றவை அவர் எழுப்பிய கேள்விகளுள் முக்கியமானவை. அதைத் தொடர்ந்து “மனிதர்களின் சமூக வாழ்வில் பண்பாடு முக்கியமானதே. பண்பாடானது சமூகங்களின் ஆன்மாவாக, சமூக உறவுகளுக்கு ஆதாரமாக , சமூக ஒழுங்குகிற்கு அத்திவாரமாகத் திகழ்கிறது. எனினும் மனித அபிலாசைகளின் பரிமாணம் அகன்றது. அவற்றைப் பண்பாட்டு உலகுக்குள் முடக்கி விட முடியாது” என்ற கருத்தையும் பாலசிங்கம் அவர்கள் முன்வைக்கிறார்.
சுதந்திரமும், வாழ்நிலை முன்னேற்றமுமே மனித சமூகங்கள் யாவற்றினதும் பொதுவான விருப்பாய் , வரலாற்றின் அசைவியக்கமாய் அமைந்து நிற்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அதே வேளை சமுதாயங்கள் பண்பாட்டு உலகங்களினுள் சிறையுண்டிருப்பதையும் நிராகரித்துவிட முடியாது.


nmuralitharan@hotmail.com

Series Navigation

நடராஜா முரளிதரன் (கனடா)

நடராஜா முரளிதரன் (கனடா)