நல்ல அறிகுறி

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

புதுவை சரவணன்


வாரிசு அரசியல் என்பது எப்போதுமே இந்திய அரசியலின் சாபக்கேடாக இருந்து வருகிறது. நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான் எழுதிய ‘இந்தியா 2020 ‘ என்ற புத்தகத்தில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அம்சங்களில் ஒன்றாக ‘வாரிசு அரசியலை ஏற்கும் மக்களின் மனோபாவத்தை ‘ குறிப்பிட்டுள்ளார். வாரிசு அரசியலின் பிடியில் இருந்து எப்போது இந்தியா விடுபடும் என்று காத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது.

இந்தியா டுடேஏ.சி.நீல்சன் ஒ.ஆர்.ஜி மார்க் நடத்திய சர்வேயில் 61 சதவீத இந்திய இளைஞர்கள் ‘ ‘வாரிசு அரசியலால் கொள்கைகளுக்கும் நடைமுறைக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. நிஜமான மேம்பாட்டுக்கு அது முட்டுக்கட்டையாக இருக்கிறது ‘ ‘ என்று கருதுவது தெரிய வந்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் வலம் வரும் இளம் எம்.பிக்களான ராகுல் காந்தி, தயாநிதி மாறன், அன்புமணி ராமதாஸ், உமர் அப்துல்லா, தீபேந்தர் சிங் ?ூடா,சச்சின் பைலட் போன்றவர்கள் அரசியல் வாரிசுகளே.இவர்கள் தங்கள் குடும்ப சொத்தான அரசியல் செல்வாக்கு மூலம் பதவியை அடைந்தவர்கள். சொந்தமாக இவர்களால் வார்டு தேர்தலில்கூட வெற்றி பெற முடியாது. இவர்களை இந்திய இளைஞர்கள் ஏற்க தயாராக இல்லை என்பதிலிருந்து இந்தியா முன்னேற்றத்திற்கு தயாராக இருப்பது தெரிகிறது.

36 வயது வரை ஒருவர் எந்த வேலைக்கும் செல்லாமல், திருமணமும் செய்து கொள்ளாமல் இருந்தால் அவருக்கு நமது சமுதாயத்தில் தறுதலை பட்டம் கிடைக்கும். ஆனால் இதுவரை வேலைக்கும் செல்லாமல், திருமணமும் செய்து கொள்ளாமல் இருக்கும் 36 வயதான ராகுல் காந்தி தமது குடும்ப பாரம்பரியத்தினால் பிரதமர் கனவில் மிதக்கிறார். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராகுலுக்கு நடந்த துதிபாடலை கண்டு நாடே வெட்கி தலை குணிந்தது. இந்த கூத்துகளையெல்லாம் இந்திய இளம் தலைமுறை ஏற்க வில்லை என்பதுவிட நல்ல செய்தி இப்போதைக்கு இருக்க முடியாது.

இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் பல உண்மைகள் வெளி வந்துள்ளன. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும், எல்லா மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்திற்கு 84 சதவீத இளைஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல மனித உரிமை என்ற பெயரில் மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலித்துவரும் வேளையில் 80 சதவீத இளைஞர்கள் கடும் குற்றங்களுக்கு மரணதம்டனை அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம்தான் வெற்றிபெறும் என்று 73 சதவீத இளைஞர்களும், காதலித்தவரை மணப்பதற்காக மதம்மாற மாட்டேன் என்று 73சதவீத இளைஞர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். செக்ஸியான ஆப்பங்களை தடை செய்ய வேண்டும் என்று 73 சதவீத இளைஞர்களும், திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது தவறு என 91 கதவீத இளைஞர்களும் கூறியுள்ளனர். இந்திய இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த நல்ல மாற்றங்கள் வல்லரசு நாடு என்ற இலக்கை நோக்கி பாரதம் வேகமாக நகர்வதையே காட்டுகிறது. வாரிசு அரசியலின் மீது இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் இந்தியாவை நிச்சயம் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.

—-

musaravanan@gmail.com

Series Navigation

புதுவை சரவணன்

புதுவை சரவணன்