நலங்கெடப் புழுதியில்…

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

இளந்திரையன்


கோடையின் கடும் வெய்யில் காந்தலாக இறங்கிக் கொண்டிருந்தது. உச்சியில் இருந்து சரிந்து கொண்டிருந்த சூரியனின் ஆக்ரோஷம் மண்ணைப் பொசுக்கிக் கொண்டிருந்தது. காற்றின் சலனமே இல்லாது இறுகிப் போயிருந்த நிசப்தம் வெப்பத்தின் வீச்சை இன்னும் கூட்டிக் கொண்டிருந்தது. அந்த நிசப்தத்தைக் கலைப்பது போன்று முற்றத்து முருங்கை மரத்திலிருந்த ஒற்றைக் காகமொன்று கா..கா.. என்று கர்ண கடூரமாகக் கத்திக் கொண்டிருந்தது. பசியோ அல்லது அதற்கும் என்ன பிரச்சினையோ ? விடாது தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தது.

காகத்தின் கத்தலில் சிந்தனை இழைகள் அறுபட திரும்பிப் பார்த்தவள், மீண்டும் சலிப்புடன் தலையை திருப்பி தன்னை சுற்றியிருந்த பிள்ளைகளை ஒரு நோட்டம் விட்டாள். அழுத… கேவல்கள் அடங்க சின்னவள் அப்படியே அவள் மடியில் உறங்கிவிட்டிருந்தாள். நடுவிலான் கண்ணீர்க்கறைகள் காய்ந்திருக்க ஏதோ நினைவுகளுடன் வெறுந்தரையில் சுருண்டிருந்தான். மூத்தவன் நிலை குத்திய பார்வையுடன் எங்கோ வெறித்தபடி சுவரில் சாய்ந்திருந்தான்.

‘ என்ரை குஞ்சுகளே….. ‘ அடி மனதில் இருந்து எழுந்த கேவல் வெளியேறாது தொண்டைக் குழிக்குள் அடங்கிப் போக – அடக்கி வைக்க பெரும் பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தாள். அவள் அழுவதைப் பார்த்து அழுது கொண்டிருந்த பிள்ளைகள் இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறார்கள். மீண்டும் அவளைப் பார்த்து அவர்களும் அழுவதைத் தாங்க மாட்டாத தாய்மை உணர்வுடன் தன் துயரங்களை எல்லாம் நெஞ்சுக்குள் வைத்துப் பூட்டிவிட முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.

பசியால் சுருண்டு போயிருந்த அந்தச் சவலைகளைப் பார்க்குந் தோறும் அவள் மனம் அடங்காது கொதித்து வெப்பப் பெருமூச்சை வெளியேற்றிக் கொண்டிருந்தது. இன்னும் எத்தனை காலம் தான் இந்தத் துயரங்களுடன் முட்டி மோதி வாழ்வது. அவள் கணவனின் கயமைகளையும் கொடுமைகளையும் … அதனால் இந்தச் சின்னஞ் சிறு குழந்தைகள் படும் நரக வேதனையையும்… இன்னும் எத்தனை நாள்தான் பொறுத்துக் கொள்வது.

காலையிலேயே கணவனிடம் சொல்லிவிட்டிருந்தாள். சமைப்பதற்கு எதுவுமில்லை .. ஏதாவது வாங்கி வரும்படிக்கு. ஏற இறங்கப் பார்த்தவன் எதுவுமே சொல்லாது சென்று விட்டான். பசியில் சோர்ந்து போயிருந்த பிள்ளைகளின் முகத்தைப் பார்த்தாவது ஏதாவது வாங்கி வருவான் என்ற நம்பிக்கையில் அவள் காத்திருந்தாள். இன்று அவன் சம்பள தினம் என்ற நினைவும் அவள் நம்பிக்கைக்கு வலுவேற்றிக் கொண்டிருந்தது.

முதல் நாள் இரவும் எதுவுமே சாப்பிடாது தூங்கிவிட்ட பிள்ளைகள் காலையில் எழுந்ததில் இருந்தே ‘பசி..பசி.. ‘ என்று அவளை நச்சரிக்கத் தொடங்கி விட்டனர். ‘ என்ரை செல்லங்கள் எல்லோ… அப்பா இண்டைக்கு அரிசி சாமான் வாங்கி வருவார் …. வந்த உடனை பிள்ளைகளுக்கு அம்மா சமச்சுத் தருவன்…குஞ்சுகள் போய் விளையாடுங்கோ ….இன்னும் கொஞ்ச நேரம் தான்… ‘ என்று அவர்களைச் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். பாவம் பிள்ளைகள்… எனக்குப் பிள்ளையளாய்ப் பிறந்ததுக்கு…… அவளையுமறியாது பெருமூச்சொன்று விடை பெற்றுச் சென்றது.

விளையாட்டு மும்முரத்தில் கவனம் சிதறிப் போயிருந்தாலும் பசியின் வேதனையில் அவர்கள் இடையிடையே வந்து நச்சரித்த வண்ணம் இருந்தனர். அவர்களும் என்ன செய்வார்கள்… அவர்களின் பசி அவர்களுக்கு…

எத்தனை நேரம் தான் அவர்களைச் சமாதானப் படுத்துவது. நேரம் செல்லச் செல்ல அவள் புருஷன் ஏதாவது வாங்கி வருவான் என்ற நம்பிக்கை அவளுக்கே சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. ‘என்ன வேலையோ என்னமோ…… ‘ தனக்குத் தானே சமாதானம் கூறியவள், பிள்ளைகளின் பசிக்கு என்ன செய்வது… என்று யோசித்த வேளையில் அவள் மனதில் திடார்ப் புள்ளியாக அந்த யோசனை தட்டுப் பட்டது.

பக்கத்து வீட்டு சின்னம்மாக்காவிடம் ‘அரிசி கடன் கேட்டுப் பாப்பம் … இண்டைக்குச் சம்பள நாள் தான… அவர் அரிசி சாமான் வாங்கி வந்தவுடன திருப்பிக் குடுப்பம்… ‘ யோசனை தோன்றியவுடன் சிறிதும் தாமதிக்காமல் சின்னம்மாக்காவிடம் சென்றாள். அவர்களுக்கும் கஸ்ட ஜீவனம் என்றாலும் இடைக்கிடை உதவி செய்து ஆறுதல் அளிக்கும் ஒரே ஜீவன் சின்னம்மாக்காதான்.

சின்னம்மாக்கா தந்த அரிசியைக் களைந்து உலையிலிட்ட பின் முற்றத்து முருங்கையின் இலையைப் பறித்து இலைச் சுண்டல் ஒன்றையும் செய்து பிள்ளைகளின் பசியடக்கும் மும்முரத்தில் இருந்த வேளையில் தான் அவன் குரல் கேட்டது. … அவனுடைய குரலைத் தொலைவில் கேட்டவுடன் விதிர் விதிர்த்தெழுந்து வெளியில் வந்து பார்த்தாள்.

அந்தத் தெருவின் முனையில் அவன் வரும் போது போட்ட சத்தமே அவளை வாசல் வரை கொண்டுவந்து விட்டிருந்தது.

‘ம்….. இண்டைக்கும் குடிச்சுப் போட்டு வருகுது மனுஷன்….. ‘ அக்கம் பக்கத்தில் இருந்தவர்களையெல்லாம் சத்தம் போட்டு வம்பிற்கிழுத்துக் கொண்டு வரும் அவனைப் பார்க்கப் பார்க்க அவள் கோபமெல்லாம் திரண்டு அவளை கோபத்தின் உச்சத்திற்கு ஏத்திக் கொண்டிருந்தது.

‘சீ… என்ன மனுஷன் இவன் …. பிள்ளைகள் எல்லாம் பசியில் துடித்துக் கொண்டிருக்க… ‘ அவள் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள். வீட்டிற்குள் நுழைந்தவன் எதையும் விளங்கிக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. குடியின் உச்சத்தில் தன்னிலையுணராது தள்ளாடிக் கொண்டிருந்தான்.

சம்பள நாளும் அதுவுமாய்…. வாங்கிய கடன்களெல்லாம் கொடுத்தது போக மிஞ்சியதெல்லாவற்றையும் குடித்து முடித்து தள்ளாட்டமாக வந்திருந்தான். துக்கம் துயரமெதுவுமில்லாத தனி நிலை அவனது. பிள்ளைகள்… குடும்பம்… எல்லாம் அவன் நினைவிலிருந்து துடைத்தெறியப் பட்டவையாக…..தான்… தனது தேவை…சுயநலம் மேலோங்கிய ஒரு மிருக நிலையில் அவன் இருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது.

அப்போதைய நிலமையில் அவனுக்கு வேண்டியது ..இன்னும் கொஞ்சம் குடி… அவனிடம் இருந்த பணம் முடிந்து போன நிலமையில் அவன் அவளிடம் கேட்டது பணம்……

எதையுமே புரிந்து கொள்ளும் நிலமையிலில்லாத அவனுக்கு எப்படிச் சொல்வது .. எதைச் சொல்வது… அவளுள் இருந்து கிளர்ந்தெழுந்த ஆற்றாமை… சீற்றமாக ….. பெருஞ் சத்தமாக வெளிப்பட்டபோது அவளைப் போட்டு பின்னி எடுத்து விட்டிருந்தான். தாயின் பாதுகாப்பில் அடைக்கலம் தேடிய பிள்ளைகளையும் கண் மண் தெரியாது அடித்து நொருக்கியிருந்தான்.

அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த உலை… அவன் கவனத்தைக் கவர்ந்தபோது… தான் கேட்கும் போது மட்டும் இல்லாத பணம் ….அரிசி வாங்க மட்டும் எப்படி வந்தது…. குடியினால் மதி மயங்கிப் போயிருந்த மூளையில் குதர்க்கமான எண்ணம் தோன்ற … ஓங்கி அடித்த அடியில் …. சிதைந்து போன பானையும்… சிந்திப் போன அரிசியும்… அடுப்பின் தீயை அணைக்க, அவர்கள் வயிற்றிலும் மனதிலும் அணைக்க முடியாத தீயை வளர்த்து விட்டிருந்தது.

அத்தனையும் கண நேரத்தில் நடந்து முடிந்து விட அப்படியே மனதினுள் இடிந்து போய் விட்ட அவள் முழங்கால்கள் குத்தியபடி நிலத்தில் சரிந்து விழுந்தாள்.

மனச்சாட்சி உறுத்தியதாலோ… இல்லை வந்த வேலை முடிந்து விட்டதாக எண்ணியதாலோ …அவன் மீண்டும் வெளியில் சென்று விட அங்கு நிலை குத்திய மெளனம் கோடை வெயிலை விட உக்கிரமாய்…. வியாபித்திருந்தது.

ஒற்றைக் காகத்தின் கடூரம் மட்டும் இடையிடையே அவள் கவனத்தை குழப்பும் பகீரதப் பிரயத்தனத்தில்…..

நிலை குத்திய பார்வையுடன் இருந்த மூத்தவனைப் பார்த்தபோது எதேச்சையாகத் திரும்பியவன் தவழ்ந்து வந்து தாயின் மடியில் தலை வைத்து படுத்தான். அந்தப் பிஞ்சு மனத்திலிருந்து எழுந்த கேவல் மட்டும்…அவளுக்கு எதையோ சொல்லியபடி…..

ஏன் இது…. இப்படி இன்னும் … எத்தனை காலம்…. விடையில்லாத கேள்விகள்.. விளக்கொளியின் முன்னால் ஆடும் நிழல்களாக மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்தபோது , அவள் பார்வை சுவரில் தொங்கிக் கொண்டிருந்த பாரதி படத்தில் பட்டுத் தெறித்தது.

படிக்கும் காலத்தில் சராசரிக்கும் மேலான மாணவி அவள். பேச்சு, கவிதை என்று திறமை வெளிப்படும் அவள் ஆர்வங்கள் பாரதியை அவள் நெஞ்சத்தின் நெருக்கத்தில் கொண்டு வந்திருந்தன. எத்தனை பாடல்கள்… அத்தனையிலும் உணர்வுகள் ஊடுருவி வார்த்தைகள் அவள் நாவில் பிரவகிக்கும் போது பாரதி பெண்ணுருக் கொண்டது போன்ற அவள் பாவனைகள்…. அதனால் தோன்றிய உந்துதல்கள்…. பயமறியாத பெண்ணாகத் தன்னை உருவகித்துக் கொண்ட கடந்த காலங்கள்………

இந்த நேரத்திலும் அவள் மனதில் எண்ண ஓட்டங்களாக …. பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் … இன்று இந்தக் கணம் ….. அழுது ஆற்றாமையுடன் …. செய்வதறியாது… தத்தளிக்கும் அவளும்……

என்ன செய்வது… மீண்டும் மீண்டும் கொக்கியாய் சுழன்று சுழன்று மேலெழும் கேள்விக்கான விடைத் தேடுதலில்….. அவள் மூழ்கியிருந்தபோது……

மீண்டும் அவனின் குரல்… தெருவின் திருப்பத்தில் ….அக்கம் பக்கத்தவர்களையெல்லாம் வம்புக்கிழுத்தபடி…. தன்னுடன் ஒட்டி ஒடுங்கிப் போகும் தன் குழந்தைகளை… இன்னும் இறுக்கி அணைத்தபடி…. அவள்….

————————————

Ssathya06@aol.com

Series Navigation

இளந்திரையன்

இளந்திரையன்