நம்மை உறுதியற்றவர்களாக, விட்டுக்கொடுப்பவர்களாக, எல்லாவற்றையும் சகித்துக்கொள்பவர்களாகப் பார்க்கிறார்கள்

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

ஆரி·ப் முகம்மது கான்



இந்தியாவில் நடக்கும் பயங்கரவாதத்தின் நோக்கம் “காஷ்மீர் பிரசினையில் உதவுவது” இல்லை. பாகிஸ்தான் 1971இல் உடைக்கப்பட்டதன் அவமானத்துக்கு பழிவாங்குவதே காரணம். நேரடியான ராணுவ வெற்றிக்கு வழியில்லாதபோது, வன்முறை மூலம் பயத்தை உருவாக்கி அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே பயங்கரவாதம் ஒரு கருவியாக இருக்கிறது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கொடுத்த அறிக்கையில் காஷ்மீர் பிரச்னைக்கு வெகுவிரைவில் தீர்வு கொண்டுவருவதே வன்முறை நிற்க வழி என்று கூறியுள்ளது, இந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தைத் தேவையில்லாமல் செய்துவிட்டது..

நமது தேசிய பாதுகாப்பு என்பது நம்முடைய வேலை மட்டுமே என்பதையும், நமது பாதுகாப்புக்கான போராட்டத்தின் பொறுப்பு நம்மிடம் மட்டுமே இருக்கிறது என்பதையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லா அச்சுறுத்தல்களுக்கும் எதிராக நாம் நிற்கும் மனவலிமையும் புறவலிமையும் இல்லையென்றால், நாம் நம் மக்களிடையே பாதுகாப்புணர்வையும் பாதுகாப்பையும் உருவாக்கும் அடிப்படைக் கடமையில் தவறுகிறோம்.

இந்தியா கடந்த 25 வருடங்களாக விலைமதிக்க முடியாத மனித உயிர்களையும், செல்வங்களையும் பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் இழந்து வந்திருக்கிறது. உண்மையில், இப்படிப்பட்ட அறிவிக்கப்படாத போர் நம் மக்கள் மீது நடப்பதை கையாலாகாதவர்களாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களைச் செய்பவர்கள் முகமற்றவர்களாக இருக்கலாம், ஆனால், இந்த தாக்குதல்களை திட்டமிடுபவர்களும், அமைப்பவர்களும், செயல்படுத்துபவர்களும் தெளிவாகவே எல்லோருக்கும் தெரிந்தவர்கள்தான். அவர்கள் எந்த முகாம்களிலிருந்து திட்டமிடுகிறார்கள் என்பது நமது உளவுத்துறைக்கும் உலக நாடுகளின் உளவுத்துறைகளுக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான்.

2006, ஜூலை 29இல், நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்தியாவில் நடக்கும் வன்முறை பாகிஸ்தானிலிருந்து இயக்கப்படுகிறது என்பதையும், அரசாங்கத்திடம் ஏராளமான தடயங்கள் இதனை நிரூபிக்க இருக்கின்றன என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்தியா கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை சந்தித்துக்கொண்டிருந்தாலும், செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகே, பயங்கரவாதத்துக்கு எதிராக உலகளாவிய கூட்டணியை ஏற்படுத்த வேண்டிய தேவை உணரப்பட்டது. இந்தியாவில் பயங்கரவாதம் நடப்பதற்கு உதவி செய்து, இயக்கியவர்களே, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய கூட்டணியில் முக்கிய நபர்களாக ஆனது ஒரு முரண்நகை.

சமீபத்தில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் காஷ்மீர் பிரச்னைக்கு விரைவுத்தீர்வையும் பயங்கரவாத தாக்குதல்களுக்கான முடிவையும் முடிச்சுப்போட்டது இந்த பயங்கரவாதங்களுக்குபின்னர் யார் இருக்கிறார்கள் என்ற எல்லா சந்தேகங்களையும், முன்பு ஏதேனும் இருந்திருந்தால் கூட, நீக்கிவிட்டது. ஆனால், அமெரிக்க உள்துறை துணை அமைச்சர், மும்பையில் 200பேருக்கும் மேல் கொல்லப்பட்டு, 700 பேருக்கும் மேல் படுகாயமடைந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை குற்றம் சாட்ட இந்தியாவிட எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறியது ஆச்சரியமானது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாட்டின் மீதும் ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்கா கூறிக்கொண்டிருக்கும் அதே பின்னணியில் இதனை வைத்துப் பார்ப்பது வினோதமானது.

மேற்கண்ட எதிர்வினைகளை பார்க்கும்போது, பயங்கரவாதத்தின் பலியாடுகளாக இருக்கும் நாம் துணுக்குறுகிறோம். பதிலாக, நாம் நமது தேசிய பாதுகாப்பு என்பது நம் பிரச்னை என்பதையும், நாமே நமது பாதுகாப்புக்காக போராட வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். மக்கள் பாதுகாப்பாக உணரச் செய்வது நம் கடமை. இதில் சுணக்கம் காட்டுவது சரியல்ல.

பயங்கரவாதத்தை எதிர்த்த நமது போரில், பயங்கரவாத அமைப்புகளின் மூலவேர், தூண்டுதல், திட்டமிடுதல் , அவர்களின் குறிக்கோள்கள் ஆகியவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நமது நாட்டினுள் நடந்து வரும் திட்டமிட்ட வன்முறை உருவாக்கி வரும் மக்களிடையேயான பய உணர்வுக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கம் இருக்கிறது. நாம் அந்த அரசியல் நோக்கம் என்ன என்று கேட்டேயாக வேண்டும். அதே வெளிநாட்டு சக்தி, 80களில் பஞ்சாபில் தீவிரவாதத்தை வளர்த்தது. பஞ்சாபில் அதன் பயம் வெறுப்பு முறைகள் தோல்வியடைந்த போது, அதன் குறி காஷ்மீர் பக்கம் திரும்பியது. இன்று பயங்கரவாதிகள் இந்தியாவில் வெடிக்கும் வன்முறைகளுக்கு காஷ்மீர் ஒரு காரணம் என்ற உணர்வைப் பரப்பியிருக்கிறார்கள்.

இது காஷ்மீர் பிரச்னை பற்றி பேச இடமல்ல. ஆனால், எந்த ஒரு கோரிக்கையும் இல்லாமல் இருந்தால், இப்படிப்பட்ட
கண்மூடித்தனமான வன்முறையை நாம் சந்திக்காமல் இருப்போமா?

வரலாற்றை தெளிவாகப் பார்த்தால், “இல்லை” என்பதை உரத்த குரலில் கூறவேண்டிவரும். காஷ்மீரிலோ பஞ்சாபிலோ பிரச்னை இல்லை. பிரச்னை பாகிஸ்தானின் உள்நாட்டு மனநிலைமையில் இருக்கிறது. 1971இல் பாகிஸ்தான் உடைந்ததும், பங்களாதேஷ் உருவானதும் பாகிஸ்தான் நாட்டின் அதிகார வர்க்கத்தை, முக்கியமாக அதன் ராணுவத்தின் கூட்டு மனத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. நடந்தவற்றுக்கு இந்தியாவையே குற்றம் சாட்டுகிறார்கள். 90 ஆயிரம் போர்வீரர்கள் சரணடைய நேரிட்டதும், சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் அவர்கள் விடுவிக்கப்பட்டதும், காஷ்மீர் என்பது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னை மட்டுமே என்றும், அது பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்மானிக்கப் படவேண்டும் என்று எழுதப்பட்டதும் அவர்களது மனத்தை வெகுவாக பாதித்து, அதிலிருந்து மீளமுடியாமல் இருக்கிறார்கள்.

இந்தியாவில் நடக்கும் வன்முறைகளுக்கு காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண உதவுவது காரணமல்ல. 1971இல் நடந்த அவமானத்துக்கு பழிவாங்கும் முயற்சியே இது. நேரடியான ராணுவ வெற்றிக்கு வழியில்லாதபோது, வன்முறை மூலம் பயத்தை உருவாக்கி அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே பயங்கரவாதம் ஒரு கருவியாக இருக்கிறது. இதனால், கெரில்லா போர்முறையை “வலிமையற்றவனின் ஆயுதம்” என்றும், பயங்கரவாதத்தை “மிகவும் வலிமையற்றவனின் ஆயுதம்” என்றும் சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். 1971இல் நடந்த அவமானத்துக்கு பழிவாங்கும் முயற்சியாக தொடங்கப்பட்ட பயங்கரவாதம் தனக்கு இந்தியாவை எதிர்கொள்ள எந்த ஒரு வலிமையும் இல்லை என்பதாலேயே இந்த பயங்கரவாத முறையை பின்பற்றுகிறது. இது நமக்கு புரியும்போது, பயங்கரவாதத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதும், ஒரு பக்கம் கொல்லப்பட்ட நம் மக்களை வைத்துக்கொண்டே மறுபக்கம் இப்படிப்பட்ட மனிதத்துக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்து விடுபவர்களுடன் சமாதான பேச்சு நடத்தும் தர்மசங்கடத்திலிருந்து காக்கவும் உதவும்.

நாம் வாழும் பிராந்தியத்தில், சமாதானத்தையும் அமைதியையும் பாதுகாப்புணர்வையும் வளர்த்து அமைக்கவேண்டும் என்பது நமது பொறுப்பு. உறவுக்கான பாலங்களை கட்டுவதும், நம்பிக்கை ஊட்டும் முயற்சிகளை செய்வதும் வரவேற்கத்தக்கதே. ஆனால், இதில் நாம்தவறிழைக்கக்கூடாது. போரை எந்த தீவிர உணர்வுடன் அணுகுகிறோமோ, அது போலவே சமாதானத்தையும் தீவிர அக்கறையுடன் அணுகவேண்டும். போரைப்போல சமாதானமும் முழு தயார் நிலையை எதிர்பார்க்கிறது. போர் வெற்றி பெற ஒரு சில புறவய நிலைகள் முழுமையடைய வேண்டும் எனப்து போலவே சமாதானம் வெற்றியடையவும் சில புறவய நிலைகள் முழுமையடைய வேண்டும். சிம்லா ஒப்பந்தம் 1971இல் வரையப்பட்ட பின்னர் வெகு காலமாக நாம் சமாதானச் சூழ்நிலையில் இருந்தோம் என்பதையும் நாம் உணரவேண்டும். சிம்லா ஒப்பந்ததின் பின்னணியில் என்ன இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியதில்லை. அதுவே அந்த அமைதி வேலை செய்ததன் காரணம்.

இந்தியாவை உடைக்கவேண்டும், நசுக்க வேண்டும் என்பதைத்தவிர பயங்கரவாதிகளுக்கும் அந்த பயங்கரவாதிகளின் பின்னால் நிற்பவர்களுக்கும் வேறு குறிக்கோள் இல்லை. நமது அழிவை அவர்களுக்கு தருவதைத்தவிர வேறெதுவும் கொடுத்து அவர்களை திருப்தி செய்யமுடியாது. நாம் பயங்கரவாதத்தை லகுவாக, தீவிரத்தனம் இன்றி சந்திக்கிறோம் என்ற மெத்தன உணர்வே நமக்கு ஒரு பெரும் அழிவைத் தரவல்லது. இதில் ஒரே ஒரு ஆறுதல், இந்திய மக்கள் தங்களின் வலிமையை, மன உறுதியை அடிக்கடி காட்டி வந்திருக்கிறார்கள். பயங்கரவாதத்தை அவர்கள் நிச்சயம் எதிர்கொள்வார்கள். ஆனால் தேவையானது அரசாங்கம் எடுக்கவேண்டிய உறுதியான செயல்பாடு. மும்பை மற்றும் நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இந்திய மக்கள் தரும் செய்தி இதுதான். “நீ என்னவேண்டுமானாலும் செய்துகொள். ஆனால், இந்தியாவை உடைக்கவோ, எங்களது மன உறுதியை உடைக்கவோ உன்னால் முடியவே முடியாது.”
(கட்டுரையாசிரியர் முன்னாள் மத்திய கேபினட் அமைச்சர், பாரதிய ஜனதா கட்சி தலைவர்)

Series Navigation