நம்மவர்களின் தாழ்வு மனப்பான்மை (திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றி)

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

ரா.கோபிநாதன்


திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றிய ஒரு அருமையான கட்டுரையை கடந்த இதழில் வெளியிட்டிருந்தார். அதைப் படித்தபோது, பண்டைக்காலத்தில் இந்நாடு எப்படிப்பட்ட நாகரிக வளர்ச்சியைப் பெற்றிருந்தது என்ற வியப்பே மேலோங்குகிறது. இப்படிப்பட்ட அரிதான தகவல்களைத் தேடிப் பிடித்து உலகறியச்செய்ய முயன்றுகொண்டிருக்கும் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாராட்டு என்று சொல்லாமல், நன்றி என்று எதற்காகச் சொல்கிறேன் ? ‘எப்பேர்பட்ட மண்ணில் நான் பிறந்திருக்கிறேன் ‘ என்றெண்ணி நம் மக்கள் பெருமிதம் கொள்ளும் ஒரு செய்தியை அவர் வெளியிட்டிருக்கிறார் என்பதாலேயே அவ்வாறு சொல்கிறேன். நாம் ஒவ்வொருவரும் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நம் முன்னோர்கள் நாகரிக வளர்ச்சியில் மற்றெவருக்கும் சளைத்தவர்களல்ல. இன்னும் சொல்லப்போனால், உலகில் இன்று விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்திலிருப்பதாகப் பேசிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகள்கூட அத்தகைய வளர்ச்சியை அன்று பெற்றிருந்தனவா என்பது சந்தேகத்துக்குரியதாகத் தோன்றுகிறது. இந்த உண்மையை, திரு ஞானம் அவர்கள் எழுதியிருப்பதுபோன்ற அரிய வரலாற்றுச் செய்திகளை, நமது இளைய சமுதாயத்திடம், குறிப்பாகப் பள்ளிப்பாடங்கள் வழியாக நமது மாணவர்களிடையே கொண்டு சேர்க்கவேண்டும்.

இன்றுவரை நமது பள்ளிகளில் கற்பிக்கப்படும் கல்வி மெக்காலே என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட கல்விமுறையை ஒத்ததாகவேயிருக்கிறது. ‘இந்தியர்கள் நாகரிக வளர்ச்சியடையாதவர்கள். அவர்களது முன்னோர்கள் காட்டுமிராண்டிகள். ‘ என்று வலியுறுத்தும் பித்தலாட்டமே மெக்காலே கல்விமுறை. இந்தநாட்டு மக்களின் மனங்களில் தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி, அவர்களைத் தம்மைவிடக் கீழானவர்களாகச் சித்தரித்து, அவர்களை நாகரிகமடைந்தவர்களாக மாற்றுவதற்காகவே (white man ‘s burden) தாங்கள் இங்கு வந்திருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி, அதன் மூலம், இந்நாட்டின்மீதான பிடியை இறுக்கிக்கொள்ளவும், தங்கள் சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தவும், தங்களை எதிர்த்துப்பேசவும் சக்தியற்றவர்களாய் இந்தநாட்டு மக்களை மாற்றவுமே இக்கல்விமுறை வெள்ளைக்காரர்களால் அமலாக்கப்பட்டது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாடு விடுதலையடைந்த பின்னும், மெக்காலேயின் இந்திய வாரிசுகளான, பிரிட்டிஷ் எஜமானர்களின் புகழைக்காக்கப் போரிடுவதைத் தங்கள் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட சிப்பாய்களான பலரின் அசுரப்பிடியில் நம் கல்விமுறை சிக்கிவிட்டது. அதன் விளைவாகவே ரோமானிய கிரேக்க சாம்ராஜ்யங்களைப் பற்றியும், அவர்கள் பெற்றிருந்த நாகரிக வளர்ச்சிபற்றியும் (கணித, விஞ்ஞானத்துறைகளில் வளர்ச்சி என்பதையும் சேர்த்துக்கொள்க) மாய்ந்து மாய்ந்து பாடப்புத்தகங்கள் வெளியிடும் நமது கல்வித்துறைகள் நமது முன்னோர்கள் செய்த சாதனைகள்பற்றி மெளனமாகவேயிருக்கின்றன.

இதையும் மீறி யாரவது பழைய பெருமைகளைப்பற்றிப் பேசிவிட்டால், அறிவுஜீவிகள் என்று தங்களைத்தாங்களே சொல்லிக்கொள்ளும் சிலர் தங்கள் பிழைப்பு கெட்டுவிடுமே என்று பயந்து அலறி, அவ்வாறு பேசியவர்களை மூடநம்பிக்கையாளர்கள், பிற்போக்குவாதிகள் என்றெல்லாம் முத்திரை குத்த ஆரம்பித்துவிடுவார்கள். இப்படித் தரமுத்திரை வழங்குவதில் ஏகபோக உரிமை தங்களுக்கே உள்ளது போல் செயல்படும் இவர்களின் சர்வாதிகாரப்போக்குக்கு முடிவுகட்ட யாரும் முன்வருவதில்லை. அப்படியே யாராவது முன்வந்தாலும் இவ்விஷயத்தில் ஒத்த கருத்துடைய எவரும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முன்வருவதில்லை. இதனால் அப்படிப்பட்ட முயற்சிகள் பெரிய அளவில் நடைபெறவில்லை.

இவ்விஷயத்தில் நமது தாழ்வு மனப்பான்மையைத் தூக்கியெறிந்துவிட்டு நாம் நிமிர்ந்து நிற்கவேண்டுமானால், நம் முன்னோர்கள் மெக்காலேயின் கல்விமுறை சித்தரிப்பதுபோன்ற முட்டாள்களல்ல என்ற முதுகெலும்பு நமக்கு வேண்டும். அந்த முதுகெலும்பு வளர இப்படிப்பட்ட உண்மைகள் முதலில் பரவலாக மக்களைச் சென்றடையவேண்டும். அதன் விளைவாக நம் மக்கள் தாழ்வுமனப்பான்மையை உதறியெறியமுடியும். ஆனால் இம்முயற்சியைச் செய்யவே முதலில் முதுகெலும்பு தேவைப்படுகிறதே ? இப்படி இதுவொரு vicious circle ஆகிவிட்டபடியால், இந்தப்பணியை யார் எங்கே எப்போது எப்படித் தொடங்குவது என்பதே பெரிய கேள்வியாகப் போய்விட்டது. அப்படியே ஒருவர் இம்முயற்சியைத் தொடங்கினாலும், அத்தகைய முயற்சிகளுக்கு நம் மக்களிடையே எத்தகைய வரவேற்பிருக்கும் என்பதும், இதற்கான பலன் கிடைக்கத்தொடங்க எத்தனைக் காலமாகும் என்பதும், தற்போதைக்கு நம்மைப் பொறுத்தவரையில் விடையில்லாக் கேள்விகளே.

தாங்கள் மட்டுமே பகுத்தறிவின் மொத்தக்குத்தகைதாரர்கள் என்பதுபோலவும், தங்கள் சித்தாந்தத்தோடு ஒத்துப்போகாதவர்கள் எல்லோரும் மூடநம்பிக்கையாளர்கள் என்றும் பேசிவருபவர்களின் குருட்டுத்தனமான சர்வாதிகாரம்தான், நமது முன்னோர்களின் பொக்கிஷங்களை வெளியுலகுக்கு வெளிச்சம்போட்டுக்காட்ட நினைப்பவர்கள் சந்திக்கும் முதல் தடை. இதைச் சமாளிப்பதே பெரும்பாடு என்பது தெள்ளத்தெளிவு.

அடுத்தது ‘வெள்ளைத்தோல் சொல்வதே உண்மை. வெள்ளைத்தோலே அறிவுக்கு அடையாளம். ‘ என்ற விஷத்தால் செயலிழந்து போயிருக்கும் நம் மக்களின் மூளைகளுக்கு சிகிச்சை செய்து, அவர்களது ஏளனப் பேச்சுக்களையும் சமாளித்து, அவர்கள் நினைப்பது தவறு என்று அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும். முன்னர் சொன்ன தடையைப்போன்றே இதுவும் கடினமான காரியம்தான்.

சரி இப்படியெல்லாம் செய்து நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அரிய விஷயங்களை நம் மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுவதால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். ஆயுர்வேதம், சித்தம் போன்ற இந்திய மருத்துவமுறைகளால் கிட்டத்தட்ட ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம் பயன்பட்டுக் கொண்டிருக்கும் மஞ்சள், வேம்பு (இன்னும் எத்தனையோ மூலிகைகள்) முதலானவற்றின் அடிப்படையிலான மருத்துவப் பொருட்களுக்கு அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் patent உரிமை வாங்கிய கதை நாமெல்லாம் பத்திரிகைகளில் படித்ததுதான். மேற்கத்திய நாடுகளின் சூரையாடலுக்கு இலக்காக நம் நாட்டுப் பண்டைய அறிவியல் சொத்துக்கள் ஆகத்தொடங்கி நெடுநாட்களாகிவிட்டன. ஏற்கனவே அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகள் இந்திய (ஆயுர்வேத, சித்த) மருத்துவத்தின் அடிப்படையிலான ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு patent உரிமை வாங்கிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இப்பொழுதாவது நாம் விழித்தால் எஞ்சியிருப்பதையாவது காப்பாற்றலாம். ‘இல்லை, நம் முன்னோர்கள் முட்டாள்கள், மூடநம்பிக்கையாளர்கள் என்ற பழைய பல்லவியைப்பாடுவதே எனக்குச் சொர்க்கத்தைவிடவும் சந்தோஷமான செயல் ‘ என்றே நம் மக்கள் இனியும் நினைப்பார்களானால், நஷ்டம் நம் முன்னோர்களுக்கல்ல.

gopinathan_rs@yahoo.com

Series Navigation

ரா.கோபிநாதன்

ரா.கோபிநாதன்