நம்புபவர்களும் நம்பாதவர்களும்

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

சார்லஸ் டபிள்யூ வெப். எம் டி (செகுலர் வெப் இணையப்பக்கத்திலிருந்து)


இது அல்லாவை நம்புபவர்களும் நம்பாதவர்களும் இடையே நடக்கும் போர்

– ஒஸாமா பின் லாடன்

மக்கள் எக்காலம் வரை அபத்தமான விஷயங்களை நம்புகிறார்களோ அது வரை அவர்கள் தொடர்ந்து கொடுமைகளைச் செய்து கொண்டே இருப்பார்கள்

— வால்டேர்

மத நம்பிக்கையில் எங்கே உன்னதம் இருக்கிறது ? சொர்க்கத்தில் கன்னிப்பெண்களை பரிசாக அல்லா தயாராக வைத்திருக்கிறார் என்று தாலிபான் தற்கொலைப் படையினர் நம்பினார்கள். ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொல்வதற்கும், அடிமைப்படுத்துவதற்கும் தங்களை கடவுள் நியமித்திருக்கிறார் என்று மோஸசும் முகம்மதுவும் நம்பினார்கள். ஜெருசெலேமுக்குள் நுழைந்து ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களையும் யூதர்களையும் கொல்வதற்கு கடவுள் அனுமதி கொடுத்திருக்கிறார் என்று கிரிஸ்துவ மதப்போராளிகள் நம்பினார்கள். பல லட்சக்கணக்கான அப்பாவி மக்களை ஹிட்லர் கொல்லும்போது அவரது முக்கிய தாரக மந்திரம் ‘கடவுள் நம்மோடு இருக்கிறார் ‘ என்பதுதான்.

‘கடவுள் ‘ எப்போதுமே தன்னை மட்டுமே சரியானவர்களாக நினைத்துக்கொள்பவர்களுக்கு நல்ல ஒரு காரணகர்த்தா. உண்மையான நம்பிக்கையாளர்கள் எப்போதுமே அவர்களிடம் மட்டுமே நித்திய உண்மைக்கு (அதாவது கடவுளுக்கு) நேரடி தொடர்பு இருக்கிறது என்று நம்மை நம்ப வைக்க முயன்றுவருகிறார்கள்.

பெண்ணியவாதிகளாலும், ஓரினபாலுணர்வாளர்களாலும், மத நம்பிக்கையில்லாதவர்களாலும் எரிச்சல் அடைந்து கடவுள் உலக வர்த்தக மையத்தை குண்டுவைத்து தகர்த்தார் என்று கிரிஸ்தவ மத போதகர்களான ஜெர்ரி ஃபால்வெலும், பாட் ராபர்ட்ஸனும் கூறுகிறார்கள். ஒஸமா பின் லாடனுக்கு இவர்களைப் பார்த்தால் பெருமையாகத்தான் இருக்கும்.

உண்மையான நம்பிக்கை, உண்மையான மதம் அல்ல. ஆட்டு மந்தை எப்படி மனித குலம் அல்லவோ அதுபோல. உண்மையான நம்பிக்கை நம்மை நேர்மை, காரண காரியம், சந்தேகம், சுதந்திரம், அன்பு, தைரியம், சுய பொறுப்பு போன்ற எல்லாவற்றையும் விட்டுவிடச் சொல்கிறது. சுருங்கச்சொன்னால், நம்மை நம் மனிதத்துவத்தை இழந்துவிடச் சொல்கிறது.

உண்மையான மதம் என்பது எளிமையாகச் சொன்னால் நாம் வாழும் வாழ்க்கைதான். வார்த்தைகள் எளியன, செய்கையே உண்மை.

கடவுளின் பெயரைச் சொல்லி ஒருவன் கொலை செய்தால், அவனை முஸ்லீம் என்பதாலோ, கிரிஸ்தவன் என்பதாலோ விட்டுவிடுகிறோமா ? இன்னொருவர் தன்னுடைய வாழ்க்கையை அன்பும், உண்மையும் கொண்டுவாழ்ந்தால், அவர் இந்த உலகத்திலோ, கற்பனை செய்யப்பட்ட ஒரு இறந்த பின்னர் வாழும் வாழ்க்கையிலோ அவரது நம்பிக்கைகளுக்காக தண்டிக்கப்படவேண்டுமா ? நிச்சயமாக இல்லை.

ஒவ்வொரு அடிப்படைவாதமும், அதனிடம் மட்டுமே எல்லோருக்குமான உண்மைக்கான முழுப்பட்டாவும் இருக்கிறது என்று நம்புகிறது. வால்டேர் இதில் உள்ள ஆபத்தை பார்த்திருந்தார். ‘ஒரு மனிதன் என்னிடம் ‘நான் நம்புவது போல நம்பு, இல்லையேல் கடவுள் உன்னை தண்டிப்பார் ‘ என்று சொன்னால், அவன் உண்மையிலேயே ‘நான் நம்புவது போல நம்பு, இல்லையேல் உன்னை கொலைசெய்து விடுவேன் ‘ என்றே சொல்கிறான் ‘

நித்திய உண்மையை நாம் கண்டறிய முடியாது என்பதை கணக்கிலெடுத்துக் கொண்டால், நாம் என்னத்தை நம்புவது ? தடயத்தைத் தான்.

‘உண்மை நம்பிக்கை ‘ என்ற கருப்புக்கண்ணாடி போட்டிருப்பவர்களுக்கு எவ்வளவு ஆதாரங்களும் தடயங்களும் கொடுத்தாலும் அவர்களை மாற்ற முடியாது. மதக்கோட்பாடு உண்மைக்குப் புரம்பானதாக இருந்தால், அது சந்தேகப்பட வேண்டிய ஒன்றுதான். அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் அன்பைப் பேசிக்கொண்டு வெறுப்பின் அடிப்படையில் செயல் புரிந்தால், அவர்களைச் சந்தேகப்பட வேண்டியதுதான். நாம் நமக்கு உண்மையானவர்களாக இருந்து கொண்டு, நம்ப முடியாததை நம்ப மறுக்க வேண்டும்.

வாழ்க்கையின் அரசியலில், நம்பிக்கை மனிதக்குலத்தின் கண்களை மூடிவிட்டது. நாம் கேள்வி கேட்கவும், சந்தேகப்படவும் தைரியம் கொள்ளும் போதுதான் நமக்கு நாமே தெளிவாகப் பார்க்க ஆரம்பிக்க முடியும்.

பெரும்பாலான மதங்கள் தடயமும் ஆதாரமும் இல்லாமல் நம்பிக்கையை கோருகின்றன. அடிப்படைவாத மதங்கள் இன்னும் ஒரு படி சென்று, இந்த கருத்துக்களை கேள்வி கேட்காமல் ஒப்புக்கொள்ள மறுக்கிறவர்களை ‘நம்பாதவர்கள்- நாஸ்திகர்கள் ‘ என்று பட்டம் கட்டிவிடுகிறது. ஆனால் நமக்கு நம்மிடமே அதிக மரியாதை இருக்க வேண்டும். நாம் நமக்கு உண்மையானவர்களாக இருந்தால், நாம் அமெரிக்கப் புரட்சியின் தந்தையான தாமஸ் பெயின் அவர்களின் கீழ்க்கண்ட வார்த்தைகளை ஞாபகத்தில் கொள்ளுவோம். ‘ஒரு மதத்தை நம்புவதிலோ நம்பாததிலோ ‘நாஸ்திகத்தனம் ‘ இல்லை. நாம் நம்பாததை நம்புவதாகச் சொல்லிக்கொள்வதில்தான் இந்த ‘நாஸ்திகத்தனம் ‘ இருக்கிறது ‘

***

Believers and Unbelievers

by Charles W. Webb, M.D.

in Secular web

Date published: 11/22/2001

Series Navigation

சார்லஸ் டபிள்யூ வெப். எம் டி (செகுலர் வெப் இணையப்பக்கத்திலிருந்து)

சார்லஸ் டபிள்யூ வெப். எம் டி (செகுலர் வெப் இணையப்பக்கத்திலிருந்து)