நட்சத்திரத் திருவிழா – 2007

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

குரு அரவிந்தன்


கனடிய தமிழ் வானொலி நடத்திய (ஊவுசு ) நட்சத்திரத் திருவிழாவிற்கு யூலை மாதம் 8ம்திகதி 2007ல் போவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தர்ப்பம் கிடைத்தது என்பதைவிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். 7ம் திகதியும் 8ம் திகதியும் இந்தத் திருவிழா, மக்கோவான் வீதியில் உள்ள மார்க்கம் பெயகாடின்ஸ் என்ற மைதானத்தில் நடைபெற்றது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் 7ம் திகதி சனிக்கிழமை என்னால் போகமுடியவில்லை. 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சென்றபோது அங்கே நிறைந்திருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்ததும் வியந்துபோனேன். சனிக்கிழமை இதைவிட அதிகவெள்ளம் கரைபுரண்டதாக அங்கே நின்ற பார்வையாளர்கள் குறிப்பிட்டனர். மழைக்கோலம் காரணமாக மக்கள் சற்றுத் தாமதித்துத்தான் வருவார்கள் என்றும் ஆருடம் சொன்னார்கள். அவர்கள் குறிப்பிட்டது போலவே சற்று நேரத்தில் வாகனத்தரிப்பிடங்கள் நிரம்பி வழியத்தொடங்கின.
அன்று அங்கே நடந்த திருவிழாவின்போது பல விடையங்களை என்னால் அவதானிக்கமுடிந்தது. கனடிய தமிழ் வானொலி நிகழ்சித் தயாரிப்பாளர்களும், அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், அவர்களுக்கு உதவுவதற்காக அங்கே நின்ற தொண்டர்களும் சிரித்த முகத்தோடு எல்லோரையும் வரவேற்றது, அங்கே வந்திருந்த ஆர்வலர்களின் மனதைக் கவரக்கூடியதாக இருந்தது. மண்ணையும், மனங்களையும் நேசிக்கிறோம் என்ற அவர்களது வாக்கியத்தின் தத்துவம் அங்கே நடைமுறைப்படுத்தப் படுவதை என்னால் அவதானிக்கவும் முடிந்தது. அந்த மைதானத்தில் கரைபுரண்ட மக்கள்கூட்டமே அதற்குக் கட்டியம்கூறி நிற்பதுபோல இருந்தது. யாருடைய மனமும் நோகாமல், வாகனப்போக்குவரத்தைக்கூட மிகவும் கவனமாகக் கட்டுப்பாட்டோடு நடத்தினார்கள். மக்கள் வெள்ளத்தைவிட வர்ணபவான் அடிக்கடி வந்து எட்டிப்பார்த்துச் சென்றபோது, கூடாரத்தை நோக்கி ஓடுவதும் பின்பு வெளியே திரும்பி வருவதுமாய் சிறுவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.
திருவிழா என்றதும் எங்களுக்கு ஊரிலே உள்ள கோயிற் திருவிழாக்கள்தான் ஞாபகம் வரும். இங்கேயும் அப்படித்தான் இருந்தது. ஒரே ஒரு வித்தியாசத்தைக் கவனித்தேன், ஊரிலே திருவிழாவின்போது, ஆண்கள் வேட்டியோடும், அனேகமாக மேற்சட்டை அணியாமலும் நிற்பார்கள், இங்கே வேட்டியைக் காணமுடியவில்லை. வேட்டியைக் காணவில்லை என்றதும் அவசரப்படாதீர்கள். எல்லோரும் மேற்சட்டை, காற்சட்டை அணிந்திருந்தார்கள் என்பதைத்தான் சொல்லவந்தேன். அனேகமானவர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சி போல, குடும்பத்தோடு வந்திருந்தார்கள். நாள்முழுவதும் வீட்டிலே அடைந்து கிடக்காமல் இங்கே குடும்பத்தோடு வந்து சந்தோஷமாகப் பொழுதைப் போக்கினார்கள் என்றே சொல்லவேண்டும். முக்கியமாக நான்கு தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தினர்கூட, மகள், பேரன், பூட்டன் என்று அங்கே மகிழ்ச்சியாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. மற்றும்படி சனக்கூட்டம் ஒரேயடியாப் புரண்டு கொண்டுதானிருந்தது. ஒருபக்கத்தில் வழுக்குமரம் ஏறிக் கொண்டிருந்தார்கள். மறுபக்கத்தில் தாச்சிக்கோடு என்று சொல்லப்படும் கிளித்தட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் பட்டம் விட்டு ஆரவாரப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பாகும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நான்கும் கலந்து கொடுத்ததுபோல, கரும்புச்சாறும், இளநீரும் வேகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. உடனுக்குடன் வறுத்த கச்சான்கடலை, மிளகாய்த்தூள் தூவிய காரச்சுண்டல், குளிர்களி, உணவுப்பொருட்கள் என்று பரபரப்பாய் விற்பனையாகிக் கொண்டிருந்தன. இப்படியாக கொஞ்சநேரம் கோயில் வீதியில் நின்றது போன்றதொரு பிரேமையை அந்தச்சூழ்நிலை ஏற்படுத்திவிட்டது. ஒவ்வொரு பக்கம் திரும்பும்போதும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்க்கும்போதும் ஊரிலே நடக்கும் கோயிற் திருவிழாவைவிட, கொழும்பிலே நடக்கும் ஆடிவேல் திருவிழாதான் எனக்கு அடிக்கடி ஞாபகம் வந்தது.
எல்லாவற்றையும் இழந்து வந்த எங்களுக்கு, தாய்மண்ணைப்பற்றிய, தமிழ் மொழியைப்பற்றிய நிகழ்ச்சிகள் மேடையில் நிறைய நடந்து கொண்டிருந்தது மனதிற்குச் சற்று ஆறுதலைக் கொடுத்தது. இசைநாடனம், நாட்டுக்கூத்து, நாட்டியநாடகம், நகைச்சுவை, வானம்பாடிகள், அக்னி, கிளித்தட்டு, கயிறு இழுத்தல், பொய்க்கால்குதிரை, தலையணைச்சண்டை, வழுக்குமரம் ஏறுதல், மெல்லிசைப் போட்டிகள், தமிழியல் போட்டிகள், ஆங்கில எழுத்துக் கூட்டல் போட்டிகள், இயந்திர மனிதக் காட்சிகள் என்று ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் வர்த்தகக் கண்காட்சி நடந்தது. ஆடைகள், புத்தகங்கள், உணவு வகைகள் என்று மலிவு விலையில் பல பொருட்களும் வாங்கக்கூடியதாகவும் இருந்தன. இதைவிட சர்வதேசரீதியாக சிறுகதைப் போட்டியும் இம்முறை நடத்தியிருந்தார்கள். போட்டியில் பங்குபற்றிய பலர், போட்டியின் முடிவு தெரிவதற்காக ஆவலோடு அங்கே காத்திருந்தார்கள். திடீரென அனலைஇராஜேந்திரன், இரவீந்திரநாதன் ஆகியோர் எதிர்கொண்டு என்னை வாழ்த்தி, சிறுகதைப்போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்திருப்பதாகச் சென்னார்கள். தொடர்ந்து எதிர்கொண்ட நண்பர்களும், உறவினர்களும் என்னை மனதார வாழ்த்தினார்கள். எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் மனித உறுப்புக்களை எப்படித் தேவையானவர்களுக்குத் தானம் செய்யலாம் என்பதைப் பற்றி, கனடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் அங்கே நின்று எல்லோருக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தது மனிதநேயத்தைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
எல்லா நிகழ்ச்சிகளும் நன்றாகவே நடந்து கொண்டிருந்தன. அழுது கொண்டிருந்த ஒரு குழந்தையைப் பார்த்ததும் எனக்குமட்டும் ஏதோ ஒரு குறை இருப்பதாகத் தெரிந்தது. தற்செயலாக அவ்விடத்தால் சென்ற கறுப்பு மஞ்சள் நிறத்தில் சட்டை அணிந்திருந்த தொண்டர் ஒருவரிடம் அதைக் குறிப்பிட்டேன். அவர் உடனே அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றார். திடீரென ஒலிபரப்பியில், கேயில் திருவிழாக்களில் அறிவிப்பதுபோல குழந்தை ஒன்று அழுது கொண்டிருப்பதாகவும் பெற்றோரை உடனடியாக ஒலிபரப்பு நிலையத்திற்கு வரும்படியும் அறிவித்தார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக, குறை நீங்கியதுபோல நானும் அங்கு சென்றேன். தொண்டர் ஒருவர் குழந்தையைத் தூக்கி வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார். அழுதகுழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. சிரித்துக் கொண்டிருந்த குழந்தையின் கையிலே குளிர்களி இருந்தது. குழந்தையின் கையிலே இருந்த அந்தக் குளிர்களி, அங்கே நின்ற அத்தனை பேரின் உள்ளத்தையும் கட்டாயம் குளிரவைத்திருக்கும். கனடியத் தமிழ் வானொலிக் கலைஞர்களின்; அந்த மென்மையான அரவணைப்பு, அடுத்த வருடமும் அவர்களைத்தேடி அந்தக் குழந்தையை வரவழைக்கலாம் என்ற எண்ணத்தையும் எனக்குள் ஏற்படுத்திவிட்டது. நீண்டநாட்களின்பின் தமிழ் மக்கள் மனம்விட்டு, சிரித்து மகிழ்வதை அந்த நிகழ்வில் காணமுடிந்தது. நட்சத்திரத் திருவிழா – 2008 வரும்வரை இந்த இனிய நினைவுகள் அடிக்கடி எல்லோர் மனதிலும் எட்டிப்பார்த்துக் கொண்டுதானிருக்கும். நாட்டுப்பிரச்சனையால், வேலைப்பழுவால், சோர்ந்து போயிருந்த மனங்களுக்கு கனடிய தமிழ் வானொலியின் நட்சத்திரத் திருவிழா நல்லதொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற திருப்தியோடு வீடு திரும்பினேன்.


kuruaravinthan@hotmail.com

Series Navigation

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன்