நட்சத்திரங்களுக்கு பயணம்: அமெரிக்க நாசா அமைப்பின் கனவு

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

லியனோர்ட் டேவிட்


எல்லா வானியல் அறிவியலாளர்களுக்கும் தொழில்நுட்பவியலாளருக்கும் ஒரு வானூர்தியை நட்சத்திருக்கு அனுப்புவது தீராத கனவு.

கடந்த 30 வருடங்களாக இப்படி ஒரு வானூர்தியை ஒரு நட்சத்திரத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பலரும் கோரி வருகிறார்கள். எப்படி இப்படிப்பட்ட ஒரு வானூர்தியை கட்டுவது என்பதற்கான அறிவு இன்று நமக்கு இருப்பது போலவே தோன்றுகிறது. சவாலான ஒரு வேலையாக இருந்தாலும் செய்யக்கூடியதுதான். Innovative Interstellar Explorer (IIE) என்ற பெயர்க்கொண்ட ஒரு வானூர்தி அமைக்க வரைபடமும் தயாரித்தது. அது சுமார் 200 வானியல் அலகுகள் செல்லக்கூடியது. (பூமியின் மத்திக்கும் சூரியனின் மத்திக்கும் இடையேயான தூரம் ஒரு வானியல் அலகு Astronomical Unit. அதாவது 150 மில்லியன் கிலோமீட்டர்கள். )

எப்படிப் பார்த்தாலும் இது மிக நீ..ண்ட தூரம் தான்.

‘இது நிச்சயம் செய்யக்கூடியதுதான் ‘ என்று ரால்ப் மக்நட் கூறுகிறார். இவர் Innovative Interstellar Explorer (IIE)இன் தலைமை ஆய்வாளர். புதன் கிரகத்துக்கு மெஸென்ஞ்சர் என்ற வானூர்தியை அனுப்பிய திட்டத்தின் தலைமை ஆய்வாளரும் இவரே.

இந்த Innovative Interstellar Explorer (IIE) வானூர்தியை சுமார் 2014இல் அனுப்பினால், 200 வானியல் அலகுகளைக் கடக்க இந்த வானூர்திக்கு 2044 ஆகியிருக்கும். இங்கு காத்திருக்கும் அறிவியலாளர்களுக்கு நிறைய பொறுமை இருக்க வேண்டுமென்பதில் சந்தேகமில்லை.

பல வருடங்களாக நாசா அமைப்பில் இந்த திட்டம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ‘பல்வேறு ஆராய்ச்சிகளில் இந்த திட்டத்தை ஆராய வேண்டும். பிரச்னை நமக்கு உந்துதலில் (propulsion) தான் வருகிறது. எவ்வளவு சீக்கிரம் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேற வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேற வேண்டும். அதுதான் இந்த வானூர்தியின் மிகப்பெரிய சவால் ‘ என்று இவர் கூறுகிறார்.

மிகச்சிறிய மின் உந்திகள் மூலம் ரேடியோ ஐஸோடோப்புகளை சக்தி மூலங்களாகக் கொண்டு இந்த வானூர்தி வரைபடம் அமைக்கப்பட்டது. ‘நாளைக்கே இந்த வானூர்தியை கட்ட ஆரம்பிக்கலாம். நம்மிடம் பணம் இருந்தால் ‘ என்று மக்நட் கூறுகிறார். துல்லியமான, எடைகுறைந்த மின் உந்திகளும் சக்தி மூலங்களுமே இதற்கான சாவி. டெல்டா ஹெவி லாஞ்சரால் இந்த வானூர்தி பூமிக்கு வெளியே அனுப்பப்படும் இதன் எடை மொத்தமே 30 கிலோக்கள்தான் இருக்கும்.

2014இல் அனுப்பப்பட வாய்ப்புள்ள இந்த வானூர்தி வியாழன் கிரகத்தை இரண்டே வருடங்களில் அடைந்து அதன் புவியீர்ப்பு விசையை ஒரு கவண் போல உபயோகித்துக்கொண்டு வேகம் எடுத்து செல்லும்.

ஒரு வருடத்துக்கு 7.8 வானியல் அலகுகள் வேகத்தில் இந்த வானூர்தி செல்லும். (அதாவது பூமிக்கும் , சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் போல 7.8 மடங்கு தூரம் ஒரு வருடத்தில் கடக்கப் படும்.) 2029இல் 103 வானியல் அலகுகளை தாண்டும்போது இதன் அதிகபட்ச வேகமான 9.5 வானியல் அலகுகள் ஒரு வருடத்துக்கு என்ற வேகத்தை எட்டும்.

இதனை ஒப்பிடும்போது வாயேஜர் 1இன் வேகம் 3.6 வானியல் அலகுகள் ஒரு வருடத்திற்கு.

‘IIE 2044இல் 200 வானியல் அலகுகளை தாண்டியிருக்கும். இது வெகுகாலத்துக்குப் பின் நடக்கக்கூடிய விஷயம் போல இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இதனை பரந்த நோக்கில் பார்க்கவேண்டும். வாயேஜர்களை நாம் ஆரம்பிக்கும்போது, யாருமே இவ்வளவுக்காலம் அது ஓடிக்கொண்டிருக்கும் என்று நம்பவில்லை ‘ என்று மக்நட் கூறுகிறார்.

1977இல் செலுத்தப்பட்ட வாயேஜர் இன்று சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளை இன்று தொட்டுக்கொண்டிருக்கிறது. வாயேஜர் வானூர்திகள் 2025இல் தங்களது புளூட்டோனியம் சக்திகொண்ட உந்திகள் முழுவதும் தீரும்போது இறக்கும் என்று கருதப்படுகிறது.

30 வருட IIE முயற்சி எவ்வாறு சூரியமண்டலம் அதனை சுற்றியுள்ள வெற்றுவானுடன் தொடர்புகொள்கிறது என்பதை ஆராயும். அதைவிட பெரிய விஷயம், ஒரு வானூர்தி எப்படி 30 வருடம் எந்த பிரச்னையும் இல்லாமல் பயணம் செய்யுமாறு அமைப்பது என்பதுதான். ஆனால் இதுவும் தீர்க்கப்பட்டுவிடும் என்று கூறுகிறார் மக்னட்.

இவ்வளவு தூரத்திலிருந்து விஞ்ஞான தகவல்களை அனுப்புவதும் பிரசினைக்குரியதே. அனுப்பும் தகவல்களை பூமியில் பெறுவதும் பிரசினைக்குரியதே.

நாசாவின் ஆழ்வெளிப் பாதையில் ஆண்டெனா தட்டுகள் ஒருசேரப் பொருத்தப்பட்டு, ‘தகவல் பெறும் பண்ணைகளாய் ‘ மாற்றப்பட்டுள்ளன. ஒரு செகண்டிற்கு 200 வானியல் அலகு தூரத்திலிருந்து, 5 கிலோபைட் தகவல்களைப் பெற வல்லவையாய் இவை அமையும். இதையும் மக்னட் தெரிவித்தார்.

IIE தூரமாய்ச் செல்லச் செல்ல, பூமியிலிருக்கும் கட்டுப்பாட்டுக் கேந்திரம் வானூர்தியின் தகவல் மையங்களை மீளமைப்புச் செய்வதில் பிரசினை எழும். இதனால், வானூர்தியே பூமிக்குத் தகவல் அனுப்ப நினைவிற் கொள்ளுமாறு வானூர்தின் அமைப்பு உருவாக்கப் படவேண்டும்.

வாயேஜர் வானூர்தியை செயலிழக்கச் செய்யும் எண்ணம் எழுந்தபோது, அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சில மில்லியன் டாலர் சேமிப்புக்காக ஆழ்வெளி விஞ்ஞான ஆய்வு நிறுத்தப்படலாகாது என்று பொதுமக்களும், அரசாங்க பிரதிநிதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது IIE போன்ற ஒரு முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

மே மாதம் வாயேஜர் அனுப்பிய செய்திகளில், பிரபஞ்சத்தின் வாயுமண்டலமும், சூரியக்காற்றும் இணைகிற பகுதிக்கு வாயேஜர் சென்றிருப்பதாய்த் தெரிந்தது. இந்தப் பகுதிக்கு ‘heliosheath ‘ சூரியவெப்பத்தின் உறை என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தால், IIE-ஐ இரண்டு பில்லியன் டாலர்களில் செய்யக் கூடும் என்று மக்னட் தெரிவித்தார். நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள இந்த விலையை நாம் கொடுக்கலாம் என்றார் மக்னட்.

—-

Series Navigation

லியனோர்ட் டேவிட்

லியனோர்ட் டேவிட்