நடை – “கோவிந்தா, கோவிந்தா” – பாகம் 1

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்


நடப்பது என்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனது நண்பனுக்கும் தான். சாதாரண நடை அல்ல. 130/140 கி.மீ நடப்பது மிகவும் பிடிக்கும். அரசியல்வாதிகள் காந்தி உள்பட மக்கள் கவனம் கவர நடப்பார்களாமே, அப்படி அல்ல நாங்கள் நடப்பது. வருடம் தோறும் நண்பர்கள் படை சூழ சென்னையிலிருந்து மேல் திருப்பதி வரை நடப்போம். பக்திமான்களாய் விரைவாக நடப்போம். எங்களைப் பார்த்து கோவிந்தோ ! என்று அன்புடன் வட சென்னை மக்களும், அருகே இருக்கும் தென் ஆந்திரா மக்களும் விளிப்பார்கள். எங்களைப் பெருமாளாக நினைத்துக் கொள்வோம்.

நடக்கும் போது சென்னையில் திருவல்லிக்கேணியில் பெரிய தெருவில் எனது பள்ளிக் கூடத்திற்கும், அருகே இருக்கும் மெரினா பீச் வரைக்கும் நடந்திருக்கிறேன். அதுவே அப்போது அதிகம் போலிருக்கும். இப்போது அமெரிக்காவில் காரில் பால், தயிர் வாங்க “கடுமையாக உழைக்கும்” போது பல வருடங்கள் முன்னால் நடந்தவை ஞாபகம் வந்து என்னை வெக்கப் பட வைக்கின்றன. என் மனைவி கூட என்னையும், என் தொப்பையும் பார்த்து நம்ப மாட்டேன் என்கின்றாள்.

எனது முதல் பெரிய நடைப் பயணம், திருப்பதிக்கு என் நண்பர்கள் குழாம் மூலம் நடைப் பெற்றது. ‘கிறுக்குப் பயலே ‘ என்று எனது அம்மா நடைபயணத்திட்டத்தைக் கேள்விப்பட்டவுடன் சொன்னாள். கேக்கும் வயதா அது ?. அம்மா, ‘வர 4 நாட்களாகும். ‘ என்றேன். ‘பார்த்துப் போ ‘ என்றாள். செல்போன் இல்லாத காலமது. ஆனால் இன்றைக்கு இருக்கும் கவலைகள் அப்போது இல்லை. நுங்கம்பாக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைப்பயணத்தை ஆரம்பித்தோம். ‘எங்கடா போறோம் ? ‘ என்று என் நண்பனிடம் கேட்டேன். ‘சும்மா, வடக்கால ரெட் ?ில்ஸ் ‘ போறோம், என்றான்.

ரெட் ?ில்ஸ் இருக்குமிடம் சுமார் 40 கிமீ தள்ளி இருக்கும். நடக்க ஆரம்பிக்கும் போது உற்சாகமாய்தான் இருந்தது. மெதுவாகக் கால்கள் சென்னை வெயிலின் தாக்குதலைத் உணர ஆரம்பித்தன. “காலில் ஷூ போட்டு நடப்பது நம்ம ஊருக்குத் தாங்காதுப்பா ! ‘ என்று நண்பன் கூறினான். காலில் ‘பேட்டா ‘ சாண்டலைப் போட்டுக் கொண்டு ‘சர்க் சரக் ‘ என்று நடக்க வேண்டும். அப்படித்தான் மற்றவர்கள் நடந்தனர். ஆனால் வழியே சாணியோ, சகதியோ இருந்தால் நமது பின் கால்கள் ‘அம்பேல் ‘. ‘அதெல்லாம் அலும்பினா (சென்னையில் தண்ணீர் கிடைத்தால்) சரியாகிடும் ‘ என்று எனது நண்பன் கூறினான். நுங்கம்பாக்கத்தில் இருக்கும் காலேஜ் ரோடு தாண்டி, அண்ணா நகரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ‘மச்சி, ஒரு பீர் போட்டா சூப்பரா நடக்கலாம் ‘ என்று என் நண்பன் கூறினான். சரி! பெருமாளை அவமதித்த மாதிரி ஆகிவிடுமென்று பீரை ஒரு 4 நாட்களுக்குத் தள்ளி வைத்தோம். நடந்து ஒரு சாதனை பண்ண வேண்டும். அதே சமயத்தில் சமூகத்திற்கும் பயன்பட ஏதாவது செய்ய வேண்டுமென்ற இளம் மனம் துள்ளியது. ‘மரங்களைக் காப்போம் ‘ என்ற பனியனை அனிந்தவாறு பீடு நடை நடக்கலானோம். எவ்வளவு மக்கள் எங்களைப் பார்த்து திருந்தி மரங்களைக் காப்பாற்றினார்கள் என்று சொல்ல முடியாது. என்னவோ, அப்போது ஒரு சிறு அணிலைப் போன்று உதவ வேண்டுமென்று தோன்றியது. ஆனால் பச்சை இங்க் மூலம் எழுதிய எழுத்துக்கள் அழிந்து “உங்களைக் காப்பாம்” போன்று தெரிந்தது. அனேகம் பேர் எங்களை உற்றுப் பார்த்துவிட்டுப் போனார்கள். ஏன் என்று பிறகு தான் தெரிந்தது.

அண்ணாநகரில் ஒரு நண்பன் இருந்தான். எங்ளைப் பார்ததவுடன் ‘பைத்தியமாடா ? ‘ என்றது அவன் முதல் கேள்வி. ‘இல்லை! நிசமா இப்படியே வடக்கால திருப்பதி புத்தூர் வழியே போறோம். வர்றியா ? ‘ என்று கேக்க, அவனும் வழக்கம் போல் யோசிக்காமல் ‘நான் ரெடி ‘ என்றான். அந்தப் பருவம் போன்று எதுவும் இல்லை. எதையும் தின்று, எதையும் சுலபமாக ஆக்கக் கூடிய மன வலிமை. குழுவாகப் புறப்பட்டோம். காலேஜ், படிப்பைத் தவிர எதற்கும் “நான் ரெடி!”. குடிப்பதற்கு “நான் ரெடி”. எந்தத் தப்பிற்கும் “நான் ரெடி!”.

ரெடியானோம். நண்பனின் அசோக் லேலண்ட் நண்பர்கள் படை சூழ ‘ஜே ஜே ‘ என்று குழு குழுவாக மேலும் கூட்டமாக நடந்தோம். சென்னையின் மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி மாதிரி இல்லாது மிகப் பசுமையான நகரமாக அண்ணாநகர் தென்பட்டது. விதவிதமான ஆட்டோ, லாரி, சைக்கிள், கட்டை வண்டி, அரிசி மூட்டையை ஓட்டிச் செல்லும் டிவிஎஸ் 50 மொபெட் போன்றவற்றைப் பார்த்தவாறு நடந்தோம். இதில் எல்லாவற்றிலும் அரிசி மூட்டையோ, பருப்பு மூட்டையோ, காய்கறி மூட்டையோப் போக, கோயம்பேட்டிலிருந்து வரும் வண்டிகள் என்பது அப்பதான் புரியுது. இந்தியாவில் அனைத்து வாகனங்களிலும் ஒரு பெரும் மூட்டையையும் எங்காவது தாங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்.

மூட்டைகளைக் கடந்து, ‘அது பண்ணனுமாடா, இதைச் செய்யணுமடா ! ‘ என்ற மார் தட்டிப் பேச்சுக்களுடன், புழல் என்ற கிராமத்தை அடைந்தோம். அட ! இந்த மாதிரி அழகு கிராமமும் சென்னையில் இருக்காடா ? என்று வியந்தோம். இங்க தானா, புழல் ஏரி இருக்கு ? என்று அப்பாவியாய் கேட்டோம். புழுதி கலந்த மண் வாசனையுடன், மாலை வெய்யில் மறைய உற்சாகமாய் நடந்தோம். இப்போது கால்கள் தாமாகவே அடுத்தடுத்த அடிகளை வைக்கலாயின. அம்மாவிற்கு கொத்தமல்லி வாங்க தெருக் கடைசியில் இருக்கும் நாடார் கடைக்குப் போக சோம்பித் திரிந்தவன் இப்போது 25 கிமீ ஐந்து மணி நேரத்தில் நடந்திருந்தேன்.

“அங்கு பாருடா! தென்னை மரம் மாதிரி, இல்லை, அதைப் பார்த்தா “டி.எம். செளந்திரராஜனின்” ஒத்தையடிப் பாதையிலே அத்தை மகப் போகையிலே ” பாட்டு ஞாபகம் வருதிலே !” என்ற என் பேச்சைக் குறைத்த நண்பன் “மச்சி, அதைப் பாரு. முதலில் அது தென்னையில்லை. பனை மரம். திருவல்லிக்கேணியில் ஒண்டிக்குடித்தனத்தில் முற்றம் வழியே சின்ன சதுரத்தில் நீல வானம் பார்க்கும் உனக்கு அது தெரிய வாய்ப்பில்லை !. அப்றம், அங்கப் போறப் பொண்ணப் பாரு ரவிக்கையில்லாம, காதில் பம்படத்துடன் ! உன் அத்தைப் பெண்ணைக் காட்டிலுமிவள் சூப்பர் தானே !” என்று என் உற்சாகத்தைக் குறைத்தான்.

சாயாங்கால வெயிலில், நடை அதிகம் வேகத்துடல் இருந்தது. கிமீ கள் பறந்தன. கால்கள் கெஞ்ச, ஒரு ரோட்டோரக் கடையில் டா சாப்பிட்டோம். அந்த கண்ணாடி டம்ளரையேப் பார்க்க, கடைக்காரர் நல்ல வெந்நீரில் கழுவினேன் சார் ! என்றான். இந்த “சார்” போட்டுக் கூப்பிடும் பழக்கம் போகாது நம்ம ஊரில். என் பெயர் குமார் என்றேன். அப்படியும் “ஆகட்டும், சார்” என்றான். நண்பரின் அலுவுலகத்தைச் சேர்ந்தவர்கள் இரவுச் சாப்பாட்டை ரெட் ?ில்ஸில் ஒரு பண்ணையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இருள் கவியும் நேரத்தில், இதோ இருக்குது, இத்தோ இருக்குது என்று நண்பன் பாவ்லா காட்டியே என்னை ரெட் ?ில்ஸ் பண்ணை அருகே கொண்டு வந்து விட்டான். இருளில் மோட்டார் பைக்கில் போனால் சுள்ளென்று கண்களில் மோதுமே அப்பூச்சிகளும், கொசுக்களும் கண்களில் மோத “சர்ரென்று” ஓரத்தில் மாட்டுச்சாணிமீது காலை வைக்க,ப் புது வெள்ளை ஷூவில் பச்சை நிற பெயிண்ட் அடித்த மாதிரி ஆனது. சென்னையில் குடிக்கவே தண்ணீர் கிடையாது. இதில் ஷூவைக் கழுவ நீர் கிடைக்க அல்லாடினேன். காற்றில்லாத குழாயைத் தேட நேரமானது. நல்லவேளை எருமை மாட்டை ஓட்டிக் கொண்டிருந்த ஒருவனிடம் குழாய் இருக்குமிடம் கேக்க, சுற்றிலும் சகதியாயிருந்த ஒரு குழாயயைக் கண்டுபிடித்தோம். அதில் ஒரு விஷயம். சகதியைத் தாண்டிப் போனால் எப்படியும் இரு இடத்திலாவது காலை வைத்தாகவேண்டும். ஷூவைக் கழுவி வெளியே வரும்போது மறுபடியும், சாணிக்குப் பதில் சகதி.. பச்சைக்குப் பதில் கறுப்பு. என்ன செய்யலாமென்றிருக்க என் இஞ்ஜினியரான நண்பன், அருகேக் கிடந்த செங்கல்லைப் பாலமாகப் போட தீர்ந்தது என் பிரச்சினை. என்னே ஒரு சிவில் இன்ஜினியர் அவன் ?. ராமருக்குப் பாலம் போட்ட உதவிய அந்த அணிலே வாழ்க என்றேன்.

அவசரமாகப் பண்ணைவீட்டை நெருங்கினோம். டாக்கடையில் உட்கார்ந்து பின் மீண்டும் நடந்ததால் கால்கள் ஓய்வெடுக்கக் கெஞ்ச ஆரம்பித்தன. கால்களைப் பிடிக்க ஒரு பெண்ணைத் தேடியது என் ஆண் மனம். இப்போது இருக்கும் என் மனைவி அப்போது இல்லை. என்னே ஒரு ஆணாதிக்க எண்ணம்! ஆனால் அதன் சுகமறிந்தவர்களில் பல மனைவியரும் கூட உண்டு. நானும் அதிகம் என் மனைவிக்குப் கால்களைப் பிடித்திருக்கின்றேன். அதன் பிறகு வரும் நல்பயனையும் அனுபவித்திருக்கின்றேன். இப்போது தேவை ஒரு மனைவி அல்லது சேவை செய்ய மிருதுவான கைகள் படைத்த ஒரு பெண். இதையே என் நண்பனிடம் சொல்ல, என் பின் கால்களில் விழுந்தது ஒரு கல்.

நொண்டிக்கொண்டே “அம்மாடி இனிமேல் ஒரு எட்டு கூட நடக்கமாட்டேன்” என்றேன். “எட்டு இல்ல மாமு! இன்னும் திருப்பதிக்கு 120 கி.மீ இருக்கு. இன்னிக்கி இந்த ஐந்து எட்டு போதும். நாளைக்கு மீதம் நடக்கலாம். காலை 3 மணிக்குப் புறப்படவேண்டும். இப்பேயே நீ பாண்டேஜ் பார்ட்டி” என்றான் நண்பன். இவ்வாறு முன் யோசிக்காமல் திருப்பதிக்கு நடந்து வரப் புறப்பட்டோமே என்று விதியை நொந்தபடி பண்ணைக்கு நுழைந்தோம்.

இருளில் கோழிக்குஞ்சுகளின் கீச் குரல்களுடன் கோழிப் பண்ணை வாசனை வந்தது. மரங்களுடன் கூடிய பண்ணை என்று நினைக்க கோழிப்பண்ணைக்கு அருகே ஆடு, மாடு, கோழிகளுடன் படுக்கவா போகிறோம் என்று புலம்ப ஆரம்பித்தேன். கோழிகள் இரவு தின்பதற்கு இலையில் கிடைத்தால் தேவலை.

ஆனால் அங்கே நான் பார்த்த காட்சியில் சுமார் அறுபது பேர் கோழிகள் உண்டு சுகமாகக் கிடைத்த இடத்தில் துண்டு போட்டு படுத்திருந்தனர். அநேகமாகத் தலையணை இல்லாமலே படுத்திருந்தினர். அனைவவரும் மகாத்மா காந்தி போன்று இடுப்பிலே சிறு துண்டுடன் இருந்தனர். அவர்களது எளிமை எனது மனதினைத் தொட்டது. அவர்களது உப்பிய வயிறுகள், உடை எளிமைக்கும், உணவு எளிமைக்கும் சம்பந்தமில்லை என்று நிரூபித்தன. அடுத்து அந்த வீட்டுப் பெண்கள் எங்களை உபசரித்த பண்பு எங்களைக் குளிர்வித்தது. புடைவைத் தழையக் கட்டி, அதையும் தூக்கிக் குனிந்து நமக்குச் சாப்பாடு பறிமாறும்போது, கோழி வேகவில்லையென்றாலும் சாதத்தை உள்ளே விழுங்கமுடிகிறது. அரைகுறையாய் பார்த்தும், பார்க்காமலும் (உணவைத் தான்) சாப்பிட்டு முடித்தோம்.

நன்கு வயிறாரச் சாப்பிட்டு வந்தவர்களிடம் பாக்கு வெத்திலை நீட்டினர் மற்றொரு குழுவினர். உடம்பிற்கும், மனதிற்கும் நல்லத் தீனி கிடைத்த திருப்தியில் மொட்டை மாடிக்குப் போனோம். “சிலு சிலு” வென்ற தென்னை மரக்காற்றினிலும், குளிர்ந்த நிலா வெளிச்சத்திலும் “ஊர் வம்பு” போட ஆரம்பித்தோம். கடவுளைப் பற்றி அதிகம் பேசவில்லை. அந்த வம்பு நமக்கேன். இன்னும் மூன்று நாட்கள் நடக்க வேண்டும். கடவுள் உதவி தேவை.

அவனவனின் “வீரப் பிரதாபங்கள்”, வலிகள், உற்சாகமுள்ள எண்ணங்கள் பறிமாறிக்கொண்டோம். “டேய் நடந்தால் நம்ம தலைவர் மாதிரி நடக்கணுமடா !” என்பான் ஒருவன். “டேய்! நீ இப்படி பாண்டேஜ் பாண்டியனாய் ஆயிட்டியே ! நாளைக்கு உனக்கு ஸ்ட்ரெட்சர் தான் !” என்பான் இன்னொருவன். ஒருவனுக்கு காலில் கொப்புளம் கிளம்பி “பபிள் கம்” ஊதிய மாதிரி இருந்தது. இது “பெருமாளிடம் நீதி கேட்டு நெடு நீண்டப் பயணம்” என்றேன். “எதுக்குடா நீதி ?”. என்னை மாதிரி ஒரு நல்ல, வாட்ட சாட்டமான ஆணை ஒரு பெண்ணும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இது நியாயமா ? என்று பெருமாளைக் கேக்கப் போகிறேன். நிறையத் தடவை நடந்துப் பழகிய நண்பன் சொன்னான் “ பாரு உனக்குப் பெருமாள் புத்தூரில் காலுக்கு மாவு கட்டும் ஒரு பெண்ணைக் கால் கட்டு போடப் போறார்!” என்று காலை வாரினான். புத்தூர் போவதற்கு இரண்டு நாட்களாகும். ஆந்திரா “டொக்க்கு” பஸ்ஸாயிருந்தால், 3 மணி நேரத்தில் போகலாம்.

உண்மையிலேயே ஒருவனுக்கு கால் முட்டி வீங்கியிருந்தது. புத்தூர் கட்டுப் போடவேண்டியது போலும். ஆண்களிடையே எனக்கு மிகவும் பிடித்தது பைத்தியக்காரத்தனமாய் எது பண்ணினாலும் அதைச் சட்டை செய்யாமல் வரும் வம்புகள்/வலிகள் எதுவிருந்தாலும் “நான் ஆண்மகன்” என்று அலட்சியமாய் இருப்பது தான். அன்று சாப்பாடு பணிவு செய்த ஒரு அழகியத் திருமகள் முகம் மனதில் வந்து போக “மச்சி ! ஒரு சூப்பர் பிகர்டா !” என்று அவளைப் பற்றிச் சொல்லப் போக என் நண்பன் “டே! அது இவன் தங்கச்சிடா” என்று சொல்லக் களேபரமாய் போய்விட்டது. நானும் “அதானே ! உன் தங்கை எப்படி இவ்வளவு அழகாயிருக்கா ?. உங்க அப்பாகிட்டே இதன் மூலம் கேக்கணும் ” என்று கலாய்த்தேன். நேரம் போவது தெரியாமல் வம்பு வளர, “உச்” சென்று சில “பெரிசுகள்” முகம் சுளித்தனர்.

“சரிடா ! காலையில் சீக்கிரம் கிளம்பணும். பக்கத்தில் சுருளிப்பேட்டை (சூலூர்பேட்டையோ ?) வரைப் பெரியபாளையம் வழியே காலையில் செல்ல வேண்டும். அது குறுகிய ரோடு ! நாளைக்கு “டார்கெட்” 40 கிமீ “ என்று நண்பன் பயமுறுத்தினான். “அதைத் தாண்டினால், நீ என்ன பாவம் பண்ணினாலும் பெருமாள் கண்டுக்க மாட்டார்” என்று அவன் மேலும் சொல்ல, பண்ணவேண்டியப் பாவங்கள் ஜாலியாகக் கண்முன்னே வந்தன. சரி! அதையெல்லாம் பண்ணவேண்டுமென்றால் 40 கிமீ நடக்க வேண்டும். பெருமாள் எப்படியும் மன்னித்துவிடுவார் என்ற அமைதியில் தூங்கலானேன்.

Krishnakumar_Venkatrama@CSX.com

Series Navigation

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்