எஸ். ஷங்கரநாராயணன்
பிறகு சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். மொத்தம் அவர்கள் நாலு பேர். சீனிவாசன், குமாரசாமி, ரத்தினம், அப்புறம் சரவணன். அவர்கள் எல்லாரையும் விட சரவணன் சின்னவன். இருபத்தியாறு. நாலைந்து மாதக் கைக்குழந்தை. து¡ளியில் இரவுகளில் சிறுநீர் பெய்யும். காலையில் எழுந்து பார்க்க அவன்வேட்டி ஈரமாய்க் கிடக்கும்.
இது ரகசியக் கூட்டம். இருட்டு முற்ற சரவணன் கிளம்பினான். பூரணி குழந்தையை அணைத்துக் கொண்டே படிவாசல் வரை வந்தாள். எங்கே போகிறான், என்று அவள் கேட்கவில்லை. அவனாகச் சொல்வான், என அவள் எதிர்பார்த்தாள். அவன் ஒரு அலாதியான மோனத்துடன் சட்டையை மாட்டிக் கொண்டான். தயக்கமான பிடிவாதத்துடன் கிளம்பி விட்டான். அவள் வாசல்வரை கூட வந்தாள். குழந்தைக்குப் பால் பெளடர் தீர்ந்து விட்டது. உடனடியாக வாங்கியாக வேண்டியிருந்தது. உடனடியாய் உடனடியாய் என்று நிறையச் செலவுகள் இருக்கின்றன. ஐந்து மாசமாய்க் காத்திருக்கின்றன.
அதிலும் இப்போது கம்பெனி மூடிக் கிடந்தது. பெரிய கேட்டை எப்போதும் பூட்டவே மாட்டார்கள். போகும்போது அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். திரும்பி வெளியே வருகையில் உடைகளுக்குள் அளைந்து சோதித்து அனுப்புவார்கள். ஷி·ப்ட் ஒன்றுக்கு நு¡ற்றியிருபது தொழிலாளிகள். மூன்று ஷி·ப்டுகள்.
சம்பள உயர்வு இன்றைய நேற்றைய பிரச்னை அல்ல. இரண்டு வருடமாகவே யூனியன் கூட்டங்களில் பேசப் படுகிற விஷயம். தொழிலாளிகள் அசாத்தியப் பொறுமை காட்டினார்கள். பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுவிடும் என அவர்கள் நம்பினார்கள். முதலாளி கிறித்தவர். ஆகவே கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டுப் பரிசாக ஒருவேளை திடீரென்று சம்பள உயர்வை அறிவிப்பார் என எல்லாரும் எதிர்பார்த்தார்கள். கேட்டது ஐம்பது ரூபாய் என்றாலும், அட இருபது ரூபாய் தர மாட்டாரா என நினைத்தார்கள். போதுமே, கிடைத்தவரை ஆயிற்று என நினைத்தார்கள்.
தரவில்லை. தலைவன் காசியால் வெற்றிபெற முடியவில்லை. சாம, தான, பேதங்கள் படியவில்லை. ”அவனையும் நம்மையும் எப்பிடி ஒரே தட்டில் வைக்க முடியும்? அவன் எவ்வளவு டேர்ன்ஓவர் காட்டறான். எவ்வளவு லாபம் வருது… ஸோ சம்பளம் ஒசத்தறான்” என்றார் பிலிப். குடித்திருந்தார் போலிருந்தது. காசியும் அவன் சகாக்களும் அந்நேரம் போயிருக்கக் கூடாது. எதிரே ஷிவாஸ் ரீகல். அதைப் பார்த்ததும் காசிக்கு தாகமெடுத்தது.
எப்படியும் நாலுமுறை முயன்றும் அவரைப் பார்க்க முடியாதிருந்தது. இம்முறை அவனும் நாலுபேரும் வாசலில் அனுமதிக்காகக் காத்திருந்தார்கள். புள்ளிமான் போல ஒரு பெண், கையில் ஒரு புசு புசு பையுடன், வந்த சுருக்கில் உள்ளே போனாள். அவர்கள் காத்திருந்தார்கள். காசி திரும்பி அவர்களைப் பார்த்தான். ஒரு புன்னகையுடன் ”விஜயகுமார் கல்யாணத்துக்கு யார் வசூல் பண்றாங்க?” என்று கேட்டான்.
பியூன் வந்தபோது எல்லாரும் எழுந்து கொண்டார்கள். ”ஒராள் மட்டும்…” என்றான் அவன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். காசி மாத்திரம் பிறகு உள்ளே போனான்.
”உங்களுக்கு நான் முன்னாலேயே பதில் சொல்லி விட்டேனே?” என்றார் பிலிப். ”உனக்குத் தெரியாது, நிர்வாகம் என்பது சுலபமான விஷயம் அல்ல…” என சரளமான ஆங்கிலத்தில் இறங்கினார். பாதிதான் அவனுக்குப் புரிந்தது. புரிந்ததும் சரிதானா என்று சந்தேகமாய் இருந்தது. தலையை ஆட்டியபடியே குனிந்து மேஜையைப் பார்த்தான். குழல் விளக்கு வெளிச்சத்தில் தங்க திரவ தகதக…
”நீ என்ன நினைக்கிறாய்?”
”-ம்” என நிமிர்ந்தான். ”நீங்க சொல்றது சரிதான். ஆனால்…” என்றான் தமிழில்.
”-ஸீ…” என அவர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். ”இதை கவனித்தாயா? கம்பெனி வாசலில் வேலை கேட்டு எத்தனை இளைஞர்கள் காத்துக் கிடக்கிறார்கள். இதைவிடக் குறைந்த கூலிக்கு அவர்கள் வேலை செய்யத் தயாராய் இருக்கிறார்கள். நான் நினைத்தால்…”
”சொல்லுங்கள்!” என்றான் விரைப்புடன். டேய் மொதலாளி… எனத் தொடங்கி சரமாரியான வசவுகள் அவன் மனதில் பொங்கின.
”நல்லது – நாம் பேசி முடித்து விட்டோம் எனவே நினைக்கிறேன்” என்றார் பிலிப்.
”இல்லை.”
”இல்லையா?”
”தொழிலாளர்களின் நிலைமை…”
அவர் ஓர் அலுப்புடன் ”இதோ பார், நீ அந்தக் கம்பெனி இந்தக் கம்பெனி என்று ஒப்பிட்டுப் பேசுவது தவறு. அந்த அளவு கைவீச்சோ ஆள்பலமோ லாபமோ நமக்கில்லை. நாமும் வளருவோம் ஒருநாள். அதற்கு நீங்களெல்லாம் ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைத்தால் அது முடியாததல்ல. கவனிக்கிறாயா?…”
நாம தொழிலாளிகள் மேல் விட்டெறிகிற பொற்காலம் பற்றிய கனவு, வார்த்தை ஜாலம். மாமா ஸேம் சைடுல கோல் போடறியா?
”சொல்லுங்கள்…” என்றான்.
”ம்… ஸோ நம் தொழிற்சாலை வளரட்டும். பிறகு பார்க்கலாம். அது நியாயம்தானே?”
அவர் கோப்பையை எடுத்தார். ”தொழிலாளர் நலனுக்காக!” என்று சொல்லி ஒரே மடக்கில் குடித்தார். தொண்டைக்குள் குளிரான எரிச்சல். அவன் அவரைப் பார்த்தான். எமாற்றத்துடன் திரும்பி நடந்தான்.
”என்னாச்சி?” என்று தோழர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.
”அட அவங் கெடக்கான் குடிகார ராஸ்கல்!”
”ஏன்?”
”நைனா ஒண்ணும் பிடிகுடுக்க மாற்ட்றான்.”
தொழிலாளர்கள் பிலிப்புக்கு ‘¨ ந ன ¡’ என்று பட்டப்பேர் வைத்திருந்தார்கள். ”மாப்ள நைனா பாத்தியா, இந்த வயசுல எத்தனை குட்டிக அவரைப் பார்க்க வருது…” என்று சிலாகிப்பார்கள்.
ஷி·ப்ட் மாறும் நேரங்களில் காசி, சரவணன் மற்றும் தோழர்கள் சிவப்பு நோட்டிஸ்களை விநியோகித்தார்கள். ‘எரிமலை எப்படி பொறுக்கும், விழி நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?’ என அலங்கார ஆக்ரோஷங்களைப் படிக்கையில் தொழிலாளிகளுக்கு நரம்புகளில் மின்சாரம் விர்ரியது.
பிறகு பணி முடிந்தபின் வாசலில் ஜிந்தாபாத் கோஷங்களை அவர்கள் முழங்கினார்கள். கம்பெனி எதிரில் பந்தல் போட்டு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் முடிந்தது.
சரவணனை ஒரு தொழிலாளி அவன்வீட்டில் வந்து சந்தித்தான்.
”என்ன தோழர் நைனா எதும் சொல்லிச்சா?”
”பேச்சு வார்த்தைக்கே கூப்பிடலியே?” என்றான் சரவணன்.
”என்?”
சரவணன் அவனைப் பார்த்தான்.
”நம்ம யூனியன் சரியில்லை தோழர்.”
”அடுத்து ஸ்ட்ரைக்தான்…” என்றான் சரவணன்.
”ஸ்ட்ரைக்கா?”
”ஏன்?”
”என் மிஸசுக்குப் பிரசவ சமயம்.”
”எனக்குக் கைக்குழந்தை… தெரியுமா?”
”அப்ப நீங்களும் போராட்டத்துல கலந்துக்கப் போறதில்லையா?”
சரவணன் அவனைப் பார்த்தான் –
”வேணாம், நம்ம யூனியனை நம்பி எதுலயும் எறங்க முடியாது.”
”அப்பிடியா?”
”லீடர் சரியில்லங்க. காசி அப்பப்ப காசு வாங்கிக்னு கம்னிருந்துருவாரு… அவருக்கென்ன, வேலைக்கு வந்தாலும் வராட்டாலும் சம்பளம் வந்துரும். கேப்பாரில்ல.”
”மிஸ்டர்!” என்று சரவணன் அதட்டினான்.
”ஓ நீங்க காசி ஆளு, இல்லியா?”
”நான் யார் ஆளுமில்ல…”
”பின்ன ஏன் அவரைப் பத்திச் சொன்னா உங்களுக்குக் கோவம் வருது?”
”அவரைப் பத்தி என்ன? யூனியன்னா வேற எதுவோ மாறி நீங்க பேசறீங்க. நாம எல்லாரும் சேர்ந்து ஒத்துமையா இருக்கறதுதான் யூனியன்.”
”ஓ நீங்க யூனியன் ஆளா.”
அவனுக்குக் கோவம் வந்தது. ”இங்க காசின்ற தனி மனிதன் முக்கியமில்லை” என்றான் பொறுமையுடன்.
”அடுத்த தேர்தல்ல காசியை எதிர்த்து நிக்கப் போறீங்க போலுக்கு” என்று சிரித்தபடி அந்தத் தொழிலாளி எழுந்து போனான்.
இரண்டுநாள் யாருமே வேலைக்குப் போகவில்லை. தொழிற்சாலை வாசலில் ஒலி பெருக்கி வைத்துக்கொண்டு நிர்வாகம் கேட்கட்டும் என்கிறாப் போல காசி பேசினான். ”ஊதிய உயர்வு நமக்கு அளிக்கப் படுகிற பிச்சை அல்ல. அது நமது உரிமை! நாம் அடிமைகள் அல்ல. தொழிலாளி வர்க்கம் முஷ்டி உயர்த்தினால்…” என்று நிறுத்தி எதிர்காலம் பற்றிய ஒரு ஜிகினாக் கனவை கூடியிருந்த தொழிலாளிகள் மேல் கொட்டினான். தொழிலாளிகள் கொக்கரித்துக் கைதட்டினார்கள்.
”ஒன்றுபடுவோம்.”
”போராடுவோம்!”
”போராடுவோம்.”
”வெற்றி பெறுவோம்!”
மறுநாள் பிலிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது தொழிலாளிகள் யூனியனைப் பற்றி கர்வப்பட்டார்கள்.
”வா காசி. உட்கார்” என்றபடி அவர் கோப்பையை அவன்பக்கம் நகர்த்தினார்.
”வேணாம் சார்.”
”இட்ஸால்ரைட். வீயார் ஆல் ஈக்வல்.”
எடுத்துக் கொண்டான் உள்ளூற மகிழ்ச்சியுடன். இந்தச் சரக்குல்லாம் எங்கருந்துதான் வரவழைக்கிறானோ.
”ரெண்டுநாள்ல… எவ்ள நஷ்டம் தெரியுமா?”
”அதற்குக் காரணம் நாங்கள் மட்டுமல்ல.”
”ம்” என்றார் பிலிப். ”பரவாயில்லை. ஆனால் ஏ அப்பா எவ்ளோ நஷ்டம். சரி அதுபோகட்டும். தோழர் நாம் நடந்ததை மறந்துவிடலாம்…” என்றார் பெருந்தன்மையுடன். ”நான் நட்புபாராட்டவே விரும்புகிறேன்” என்றார்.
”நல்லது” என்றான் காசி புன்னகையுடன்.
”வேலைக்குத் திரும்புங்கள்.”
”எங்கள் கோரிக்கைகள்?”
”கவனிக்கிறேன்.”
”எப்போது?”
”இதோபார். ஏற்கனவே எனக்கு ஏகப்பட்ட நஷ்டம்… இந்நிலையில்…”
”சம்பள உயர்வு புதுப் பிரச்னை இல்லை…”
”இரு. நான் கம்பெனி பற்றியும் அதன் நஷ்டம் பற்றியும் பேசுகிறேன். நீ சம்பள உயர்வு பற்றியே பேசுகிறாய்.”
”அ நீங்களும் கம்பெனி பற்றியே உங்கள் சுயநலத்துக்காகவே பேசுகிறீர்கள்.”
”அதெப்படி? கம்பெனி உங்கள் கம்பெனி. அதன் வளர்ச்சி உங்கள் வளர்ச்சி” என்றார் பிலிப்.
”எவ்விதத்தில்?”
அவர் குனிந்து அவரே அவன் கோப்பையை நிரப்பினார்.
”போதும் சார்.”
”பரவாயில்லை. நாம் நல்ல நண்பர்கள் அல்லவா?”
”-ம்…” என அவன் தடுமாறினான்.
”எவ்விதத்தில் என்றால்… ஆரம்பத்தில் ஐம்பது பேருடன் ஆரம்பித்த தொழிற்காலை… இப்போது…”
”சரி. சம்பள உயர்வு எதிர்பார்ப்பது அநியாயமானது அல்லதானே?”
”அதெப்படி?… சிகெரெட்?”
”வேணாம். நன்றி. விலைவாசி அதிகரித்து விட்டது. மூலப்பொருட்களை நீங்களே இப்போது அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள்.”
”ரொம்ப சரி. செலவுகள் அதிகரித்து விட்டன. உண்மை. வெளி ஆலைகளுடன் நாம் கடும் போட்டியில் இருக்கிறோம். இந்நிலையில் ஊதிய உயர்வு, எனக்குக் கட்டாது. நான் சொன்னேனே, நாம வளர்கிற பருவத்தில் இருக்கிறோம். போட்டிகளைச் சமாளித்தாக வேண்டும். அதற்கு முதல்கட்டமாக, நமது ஆர்டர்களைத் தாமதமின்றி நாம் சப்ளை பண்ண வேண்டாமா?…” என்றபடி மற்றொரு கிகெரெட் பற்ற வைத்துக் கொண்டார்.
அவன் அவரைப் பார்த்தான். ”என்ன சிகெரெட்?”
”டன்ஹில். வெளிநாடு. வேணுமா?” என நீட்டினார். இரண்டு எடுத்துப் பையில் வைத்துக் கொண்டான்.
”தோழர். இதோ ஜெர்மெனியிலிருந்து ஆர்டர். சுத்தமாய் ஒரு வருஷத்தில் பத்துப் பதினொரு லட்சம் தங்கும். அதாவது ‘நாமெல்லாரும்’ சேர்ந்து உழைத்தால்… இதுவரை கிடைத்த ஆர்டர்களில் இது ரொம்பப் பெரியது, தானே?”
”சரிதான்.”
”இந்நேரம் நீங்கள் பிடிவாதம் பிடிப்பது முறையல்ல.”
”இது பிடிவாதமல்ல.”
”ரெண்டுநாள் நுஷ்டம். சரி, நான் மன்னிக்கிறேன். விஷயத்தை அத்தோடு சுமுகமாய் முடித்துக் கொள்ளலாம்.”
”ஊதிய உயர்வு?”
”தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே நீங்கள்தான் இடைஞ்சல்” என்றார் பிலிப். ”தோழர் யார் யார் வேலைக்குப் போக விருப்பமோ போகலாம், என்று நீங்கள் சொன்னால், வாசலில் ஒரு ஆள் இருக்க மாட்டான். வேலைக்கு வர விரும்புகிறவர்களைத் தடுப்பது சட்ட விரோதமானது. நான் கடுமையாக நடந்து கொள்ள முடியும். ஆனால் அதனால் பாதிக்கப் படுவது, என் தொழிலாளிகள்! நான் நன்றி மறக்காதவன்…”
”முதலாளிக் கண்ணீர்! முதலைக் கண்ணீர்!” என அவன் எழுந்து கொண்டான்.
”அப்பறம்?” என அவரும் எழுந்து கொண்டார்.
”சொல்லுங்கள்.”
”நான் வேறு ஆட்களை வேலைக்கு அமர்த்துவேன்.”
”நாங்கள் உள்ளே அனுமதிக்க மாட்டோம்.”
”போலிஸ் வரும், வேறு வழியில்லாவிட்டால்.”
”வரட்டும்” என அவன் வெளியேறினான் –
”என்ன தலைவா, என்ன ஆச்சு கிறிஸ்துமஸ் பரிசு?”
”வயித்துல மண்ணுதான்.”
மறுநாள் பிலிப் தொழிற்சாலைக்கு வந்தபோது தொழிலாளிகள் அவரது காரை மறித்து ‘கெரோ’ செய்தார்கள்.
”முதலாளி!”
”ஒழிக!”
யாரோ ஒருவன் ”நைனா!” என்று கத்தியபோது எல்லாரும் சிரித்தார்கள்.
ஆனால் விநாடியில் நிலைமை மாறிவிட்டது. பீப் பீப் பீப் என்று போலிஸ் வேனும் ஜீப்பும் பார்த்ததும பரபரவென்று கூட்டம் சிதறிற்று. கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசி, எங்கும் ஒரே புகை மண்டலம். யார் யார் எங்கே இருக்கிறார்கள், எங்கே ஓடுகிறார்கள் தெரியவில்லை. பலபேர் முட்டிமோதிக் கீழே விழுந்தார்கள். பலர் போலிசில் அடி வாங்கியபடி வலி தாளாமல் அலறியபடியே வேனில் ஏறினார்கள். கீழே விழுந்தவர்களை மிதித்தபடி ஓடியவர்கள் அநேகம். என்ன நடக்கிறதென்றே யாருக்கும் புரியவில்லை.
நாலைந்து பேர் காயம்பட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தார்கள்.
காசி தலைமறைவாகி விட்டான். சரவணன் மற்றும் நண்பர்கள் ஆஸ்பத்திரியில் காயம் பட்டவர்களைப் போய்ப் பார்த்து ஆறுதல் சொன்னார்கள்.
அடுத்த வாரம் கல்யாணம் வைத்துக்கொண்டிருந்த விஜயகுமார் ஆஸ்பத்திரியில் செத்துப் போனான்.
—
storysankar@gmail.com
தொ ட ரும்
- கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கண்டதும் காதல்
- உடன்பிறப்புக்கு என் நன்றி.
- காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2
- செயற்கை கருப்பை – ஒரு வரம் தாய்மார்களுக்கு
- சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் 20 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்கம் -2
- நாயின் வயிற்றில் மணிக்கயிறு
- கடித இலக்கியம் – 3
- யாத்ரா பிறந்த கதை
- எழுத்தாளர் சோமகாந்தனின் இழப்புத் தமிழ்கூறும் உலகிற்குப் பேரிழப்பு!
- செந்தமிழ் நாடெனும் போதினிலே
- ‘இருதய சூத்திரம்’
- வளர்ந்த குதிரை – 2
- மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை
- இவர்கள் அழிக்கப்படவேண்டும்
- கடிதம்
- கற்புக் கனல் அன்னை மர்யம்
- கவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்
- தொடரும் வெளிச்சம் – பளீரென்று
- ஒற்றைப் பனைமரம்
- அப்பாவின் அறுவடை
- விருந்தோம்பின் பாடல்
- தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்
- குறுநாவல்:சேர்ந்து வாழலாம், வா! – 1
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-19)
- த னி ம ர ம் நாளை தோப்பாகும் – தொடர்கதை -1
- எடின்பரோ குறிப்புகள் – 14
- புலம் பெயர் வாழ்வு 8 – எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்
- தலித்தலைவர்களின் தலித் துரோகங்கள்!
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-1
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-2
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 19
- உண்மையைத் தேடியலைந்தபோது
- பிரமோத் மகாஜனின் மறைவு
- பெரியபுராணம் — 87 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம்
- இயற்கையின் மர்ம முடிச்சு
- கால மாற்றம்
- தோணி
- கற்பதை விட்டொழி